நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, ஜூலை 28, 2024

இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்களின் சில வாழ்க்கை,

இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்களின் சில வாழ்க்கை குறிப்பு:*

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 849 ஆம் ஆண்டு கெய்ரோவில் பிறந்தார்கள். அவர்களின் குடும்பம் கல்விமான்களால் நிரம்பி இருந்தது. இமாம் அவர்களின் தந்தை இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் மாணவர். ஸுயூதி அவர்கள் குழந்தையாக இருந்தபோதே இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் மஜ்லிஸுக்கு அழைத்து வந்து அவர்களின் துவாவை பெற்றுள்ளார்கள். 

இமாம் அவர்கள் பிறந்த தருணம் ஒர் ஆச்சரியம் தான். அவர்களின் தந்தை அவர்களது மனைவியிடம் நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் எடுத்து வர கூறினார்கள். அந்த நேரம் அவர்கள் பிரசவ முற்றிருந்தார்கள். புத்தகம் எடுக்க சென்ற இடத்திலேயே அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு புத்தகக் கடல்களுக்கு மத்தியில் குழந்தையும் பெற்றெடுத்தார்கள் அவர்கள் தான் இமாம் ஸுயூதி ரஹிமஹுல்லாஹ். அதனால் தான் என்னவோ "இபுனுல் கிதாப்" எனப் போற்றப்படும் வகையில் பல்வேறு துறைகளில் பல நூல்களை இச்சமுகத்திற்கு தந்துள்ளார்கள்.

சிறிய வயதிலேயே தன்னுடைய ஆசிரியர்களின் மதிப்பைப் பெற்று ஷரீஆ துறையில் பெரும் பொறுப்பை வகித்தார்கள். ஆன்மீகத்திலும் அளவில்லா  ஈடுபாடு கொண்டிருந்தார்கள். பொதுவாக ஒரு நபரின் வளர்ச்சி அவரின் சமகால மனிதர்களுக்கு ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். "அல்முஆஸரா அஸ்லுல் முனாஃபரா" என்று அரபு பழமொழியும் உண்டு. அதுபோன்று இமாம் அவர்களின் வளர்ச்சியை பிடிக்காத அறிஞர்கள் அவர்கள் மீது இட்டுக்கட்டினார்கள். பல்வேறு விமர்சனங்களை அள்ளி வீசினார்கள். அதை அனைத்தையும் அல்லாஹ்வின் உதவியோடு, துணிவோடு எதிர்கொண்டார்கள். 

ஒரு கட்டத்தில் எல்லா பொறுப்புகளை விட்டு விலகி, மக்களை விட்டும் தனித்து தனிமையை தேர்ந்தெடுத்தார்கள். அப்போது பல நூல்களை எழுதினார்கள். இப்னு இயாஸ் அறிஞர் தாரீகு மிஸ்ர் என்ற நூலில் இமாம் அவர்கள் கிட்டத்தட்ட 600க்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் அவர்கள் ஹிஜ்ரி 911 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். 

*✅ என்னை ஈர்த்த சில நிகழ்வுகள்:*

*இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்கள் தன்னை விமர்சித்தவர்களுக்கு தனது வார்த்தையால் பதில் அளித்ததை விட தனது எழுத்தால் பதில் அளித்த விதம் அளப்பரியது.* 

1) தாஜுத்தீன் சுபுக்கி (ரஹ்) அவர்கள் அல்-அஷ்பாஹு வன்னளாயிர் الأشباه والنظائر எனும் நூல் எழுதினார்கள். அதே பெயரில் இமாம் ஸுயூதி அவர்களும் ஒரு நூல் எழுதிய போது தாஜுத்தீன் சுபுக்கி அவர்களின் நூலில் இருந்து திருடியுள்ளார் என விமர்சித்தார்கள். அப்போது இமாம் அவர்கள் அல்ஃபாரிக் பய்னல் முஅல்லிஃபி வஸ்ஸாரிக் الفارق بين المؤلف والسارق என தனியொரு நூல் எழுதி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். இரண்டு நூலையும் ஒப்பிட்டு பார்த்தபோது இரண்டும் வெவ்வேறு கோணத்தில் இருந்ததாக பின்னால் வந்த அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

2) அனைத்து நபர்களின் தொடர்பையும் துண்டித்து தனிமையை தேர்ந்தெடுத்த போது அது குறித்தும் இமாம் ஸுயூதி அவர்களின் மீதுவிமர்சனங்கள் எழுந்தன. அப்போது "அத்தன்ஃபீஸ் ஃபில் இஃதிதாரி அன் தர்கில் இஃப்தா வத்தத்ரீஸ்" التنفيس في الاعتذار عن ترك الإفتاء والتدريس எனும் நூல் எழுதி பதில் அளித்தார்கள்.

*அதன் பிறகு இமாம் அவர்கள் மீது மாற்றுக் கருத்துக் கொண்ட பல அறிஞர்கள் இமாம் அவர்களை தவறாக எண்ணி விட்டோம் என மனவேதனை அடைந்தார்கள். அதிலும் குறிப்பாக இமாம் கஸ்தல்லானி இமாம் ஸுயூதி அவர்களிடம் நேரடியாக வந்து மன்னிப்பு வேண்டினார்கள். இருப்பினும் இமாம் அவர்கள் தனிமையை விட்டு வெளியே வரவில்லை. முழுக்க முழுக்க எழுத்துப் பணியிலே தனது ஆயுளை செலவழித்தார்கள்.*

3) அரசர்கள் வழங்கும் அன்பளிப்புகளை அறவே ஏற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்கள். அது குறித்து விமர்சனம் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் "மா வராஅல் அஸாதீன் ஃபீ அதமித் தரத்துதி அலஸ்ஸலாதீன்"  ما وراء الأساطين في عدم التردد على السلاطين எனும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார்கள். 

*இப்படி ஏராளமான சுவாரசியமான தகவல்கள் இமாம் அவர்களின் வாழ்க்கை முழுக்க பின்னிப் பிணைந்திருக்கிறது. அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக! அவர்கள் தொகுத்து தந்த புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பினை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! அவர்களின் கல்வி ஞானத்திலிருந்து நாமும் பயன் பெற்று, பிற மக்களும் பயன் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்......

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்