நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9:36).
நிச்சயமாக வானங்கள் பூமிக்கு படைக்கப்பட்ட நாள் முதலே காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வரக்கூயவை. அவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ் ஸானி)வுக்கும் ஷஃபானுக்கும் மத்தியிலுள்ளதாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபீ பக்ரா (ரலி). ஆதாரம்: புஹாரி).
நபியவர்கள் மதீனாவுக்கு வந்து போது யூதர்கள் ஆஷ{ரா நாளில் நோன்பிருப்பதைப் பார்த்தார்கள். இது என்ன? என நபியவர்கள் யூதர்களிடம் கேட்டார்கள் அதற்கு அவர்கள் இது ஒரு மகத்தான நாளாகும், இது போன்ற ஒரு நாளில் தான் அல்லாஹ் மூஸாவை பாதுகாத்தான், பிஃர்அவ்னின் கூட்டத்தாரை மூல்கடித்தான். மூஸா நன்றி செலுத்தும் விதமாக நோன்பு நோற்றார் என்றனர். அப்போது நபியவர்கள் நிச்சயமாக நான் மூஸாவுக்கும், அந்த நோன்பிருப்பதற்கும் மிகத் தகுதியுடையவன் நபியவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் ஏவினார்கள்” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி). அஹ்மத்).
முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு: -
ரமழானுக்குப் பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்).
யூதர்களுக்கு மாற்றம்: -
ஆஷூரா தினத்தில் நபியவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் புனிதப்படுத்துகின்ற ஒரு நாளாயிற்றே என்று கூறப்பட்ட போது நாம் வரக்கூடிய வருடம் பிறை ஒன்பதிலும் நோன்பிருப்போம் எனக்கூறினார்கள். ஆனால் நபியவர்கள் அதற்கு முன்னரே மரணித்துவிட்டார்கள்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி). அஹ்மத்).
‘நீஙகள் ஆஷூரா தினத்தில் நோன்பிருங்கள். நீங்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக அதற்கு முன்னாலோ பின்னாலோ ஒரு நாள் நோன்பிருங்கள்.” என் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), அஹ்மத்).