நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஜனவரி 15, 2021

இஸ்லாமும் உடலுறவும், உடலுறவு சட்டங்களும்,


https://youtu.be/CuQi6wXI9uo

 நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும். இருவரில் ஒருவர் திருப்தியடையாவிட்டாலும்கூட, அவர் தன் பாலுணர்வுகளை வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ள அதிகமாகத் தூண்டப்படலாம்.

பலநேரங்களில் தம்பதியருள் ஒருவர் ஓர் உடலுறவுச் செயல் வடிவை விலக்கப்பட்டது என்று தவறுதலாக எண்ணி அதில் ஈடுபட மறுக்கக்கூடும். இதனால் அவர்களுக்கிடையில் உறவுப்பிரச்சனை ஏற்படலாம். ஆகவே, தம்பதிகள் உடலுறவு நடத்தை குறித்த இஸ்லாமிய போதனைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். ஏனெனில், ஆரோக்கியமான பாலியல் வாழ்வு மேற்கொள்வதுடன் தாம்பத்ய மோதலையும் தவிர்த்துவிடலாம்.

பொதுவாக பாலியல் குறித்த எந்தவொறு கலந்துரையாடலும், மார்க்க நன்னடத்தைக்கும் (அதப்), நாண உணர்வுக்கும் (ஹயா) பங்கம் ஏற்படுத்தும் செயல் என்று சிலர் கருதக்கூடும். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பாலியலைக்குறித்து விரிவாக விளக்கியுள்ளார்கள் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.

இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலியல் செய்திகளை எப்படியெப்படியெல்லாம் கற்பித்தார்கள் என்பதுபற்றி ஏராளமான நபிமொழிகள் (ஹதீஸ்கள்) உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உடலுறவு தொடர்பான கேள்விகளைக் கேட்பதிலிருந்து நபித்தோழர்கள் வெட்கி ஒதுங்கவில்லை. பிரபலமான ஒரு சம்பவத்தில், உமர் இப்னு அல்-ஃகத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ஒருவர் தம் மனைவியைப் பின்புறமிருந்து, அதாவது ஆசனவாயில் அல்லாமல், பெண்குறியில் புணர்வது அனுமதிக்கப்பட்டதா? என்பது பற்றி வினவினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் இதை அவமரியாதையான கேள்வி என்று கண்டிக்கவில்லை. மாறாக, இந்தக் கேள்வியின் பதிலை குர்ஆனிய வசனங்களாக அல்லாஹ்வே இறக்கி வைக்கும்வரை காத்திருந்தார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2980)

இன்னும் சொல்ல வேண்டுமானால், பெண்களும் கூட பாலியல் தொடர்பான கேள்விகளைத் தயக்கமோ வெட்கமோ இன்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்கத் துணிந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவற்றுக்கெல்லாம் பதில் உரைப்பதிலிருந்து வெட்கி ஒதுங்கவில்லை. இத்தனைக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையிலேயே நாணம் மிக்கவர்கள்.

ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்; உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதரிடம் வந்து கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண் ஈரக்கனவு கண்டபின் குளிப்பு அவள் மீது கடமையா?" அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! திரவம் வெளிப்பட்டிருந்தால்" என பதிலளித்தார்கள்.
ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா தம் முகத்தை மறைத்துக்கொண்டு கேட்டார்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுக்கு(கும் கூட) திரவம் வெளிப்படுமா?" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! உம் வலக்கை மண்ணைப்பற்றிக் கொள்ளட்டுமாக (இது ஒருவரின் கூற்றோடு முரண்படும்போது அவரிடம் நளினமாகக் கூறப்படும் அரபுச் சொற்றொடராகும்) பிறகு எப்படி மகன் தாயின் சாயலில் பிறக்கின்றான்?" என்றார்கள். (நூல்: புகாரி 130)

இங்கு நாம் கவனிக்கவேண்டியது அந்த ஹதீஸை மட்டுமல்ல, ஈரக்கனவு போன்ற பாலுறவுச் செய்திகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்பதிலிருந்துகூட ஒரு பெண்ணுக்குத் தயக்கவுணர்வு இல்லை, அக்காலத்தில்!

"அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை" எனும் ஹளரத் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாசகத்திலிருந்து, தீன் - மார்க்க விஷயங்களைக் கற்பதில் வெட்க உணர்வு என்பது கிடையாது எனும் தெளிவான செய்தி நமக்கு கிடைக்கிறது.

உண்மையில், இறைவனின் போதனைகளிலிருந்தும், அவனுடைய தூதரின் போதனைகளிலிருந்தும் வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொள்வது தவறானது - அது பாலியல் விஷயங்கள் குறித்தவையாக இருப்பினும் சரியே.

முஜாஹிதிடமிருந்து இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்: "வெட்கப்பட்ட ஒரு மனிதராலும், ஆணவமுடைய ஒரு மனிதராலும் தூய அறிவை (இல்ம்) பெற்றுக்கொள்ள இயலாது" (நூல்: ஸஹீஹுல் புகாரி 1:60)

நாணம் இஸ்லாத்தின் ஓர் அடிப்படைக்கூறு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும், மார்க்க விஷயங்களைக் கற்பது என்று வரும்பொழுது அது தடைக்கல்லாக இருக்கக்கூடாது. நவீன உலகில் பாலியல் குறித்த கேள்விகள் வெளிப்படையாகக் கலந்துரையாடப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் அநாகரிகமான விதத்தில்! எனவே, பாலியல் குறித்த விஷயங்களை ஒழுக்க நாகரிகம் கொண்ட இஸ்லாமிய போதனைகளை சரியான முறையில் கற்பதில் நாம் ஏன் வெட்கப்படவேண்டும்?

இக் கட்டுரையில் ஆண்-பெண் பாலியல் மிக வெளிப்படையாக இருப்பதாக உணர்வோர், இறைவனின் சொற்களை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

"நிச்சயமாக அல்லாஹ் உண்மை(யை விளக்கும்) விஷயத்தில் வெட்கப்படுவதில்லை" (அல்குர்ஆன் 33:35)

இதையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அண்ணலாரின் தோழர்களும் எதிரொலித்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி 130, ஸுனன் இப்னு மாஜா 1924).

எனவே, தம்பதியருக்கு இடையிலுள்ள பாலியல் பிரச்சனையே மணவாழ்வின் விரிசலுக்கு காரணமாக அமைதல், நவீன காலத்தில் பாலியல் மீதான தீராத மோகத்தினால் முஸ்லிம்கள் மீது அது ஏற்படுத்தும் கடுமையான தாக்கம் ஆகியவற்றால் பாலியல் குறித்த இஸ்லாமிய வழிகாட்டுதல் முஸ்லிம்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றன.

மேலும், முஸ்லிம்களில் பலர் உடலுறவு குறித்த இஸ்லாமியச் சட்டங்களையும் ஒழுங்குகளையும் பற்றி அறவே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் புணர்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதுகூட சிலருக்குத் தெரியாது. மேலும் பலர், தங்கள் வாழ்வை இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர்; கற்பதற்கோ ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். ஆனால், அறிஞர்களிடம் நேரடியாகக் கேட்பதற்கு சங்கடப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்காகவும் இப்பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


''உடலுறவும் ஓர் அறச் செயலே'' -நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

நமது எண்ணங்கள் (நிய்யத்) தான் சாதாரண செயல்களைப் பெரும் நன்மையான காரியமாக உயர்த்தி, அளப்பறிய நற்கூலியை இறைவனிடம் நமக்குப் பெற்றுத்தருகிறது.

"செயல்கள் எண்ணத்தின் (நிய்யத்தின்) அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஒருவர் எதை நாடுகிறாரோ அதுவே அவருக்குக் கிடைக்கும்...'' அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (இந்த நபிமொழியைத்தான் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நபிமொழி திரட்டிலேயேயே மிகச்சிறந்த நூலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஸஹீஹுல் புகாரியின் முதல் நபிமொழியாக இடம் பெறச்செய்துள்ளார்கள்.)

இதன் மூலம், ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான எண்ணம் அமைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஒருவரின் செயல் அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைவதற்கு, அதை அல்லாஹ்வின் அன்புத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிக்கேற்ப செய்வதாய் எண்ணம் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது வெறும் பழக்கச் செயலாகவே இருக்கும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: "திருமணம் என் வழியை (ஸுன்னா) சார்ந்தது. எவர் என் வழியை (நிராகரிக்கும் முகமாக) பின்பற்றுவதில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர். மேலும், திருமணம் செய்யுங்கள் (மற்றும் இனவிருத்தி செய்யுங்கள்) நிச்சயமாக நான் உங்களைக் கொண்டு, பிற சமூகத்தாரை எண்ணிக்கையில் விஞ்சிவிடுவேன்..." (நூல்: ஸுனன் இப்னு மாஜா 1846)

இந்த நபிமொழியிலிருந்து, மக்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதும், சந்ததியினரைத் தேடிக்கொள்வதும் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் அனுமதிக்கப்பட்ட குறிக்கோள்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.

திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம் இயங்குவதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆக, உலகம் இயங்குவதற்கு ஒரு உன்னதமான அர்த்தத்தை வழங்குவது உடலுறவு என்று சொல்வதில் தவறேதுமில்லை.

உடலுறவு மனித வாழ்வுக்கு எந்த அளவு முக்கியமோ அது போன்று இந்த உலகம் இயங்குவதை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உரிய ஒரு செயலாகவும் இருக்கிறது. எனவே அது எந்த அளவுக்கு ஒரு புண்ணியமான செயல் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த புண்ணியமான செயலை இறைவன் அனுமதித்த விதத்தில் நாம் நிறைவேற்றும்போது அது ஓர் மகத்தான இறைவணக்கமாகவே ஆகிவிடுகிறது என்பது நிச்சயம். ஆம்! அனுமதிக்கப்பட்ட உடலுறவை இஸ்லாம் ஓர் இறை வழிபாடாகவே எடுத்தோதுகிறது.

ஒருவர் தம் துணைவரோடு உடலுறவில் ஈடுபடும்போது, அனுபவித்து மகிழும், இச்சையைத் தணிக்கும் நோக்கம் கொள்வதில் தவறில்லை. அது இயற்கையானதே. உடலுறவு ஓர் அசிங்கமான செயலல்ல. மாறாக, அது எண்ணற்ற நபிமார்களும், அல்லாஹ்வின் நல்லடியார்களும் செய்துள்ள ஓர் உயர்வான செயல். எனவே, இச்செயலை சட்டத்துக்கு உட்பட்டு மகிழ்ந்து அனுபவிப்பது எவ்விதத்திலும் வெட்க உணர்வுக்கு எதிரானதல்ல, நற்பண்புக்கு முரணானதுமல்ல.

உடலுறவு அசுத்தமானது, இச்சையை பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் - மல ஜலம் கழிக்கும் தேவையைப் போலத்தான் அதை செய்ய வேண்டியுள்ளது. - என்று சிலர் காண்கின்றனர். இப்படி ஒரு தவறான எண்ணம் கொண்டிருக்கும் மனிதர்கள் தயக்கத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். அதிலிருந்து கிடைக்கும் சுக அனுபவங்கள் அனைத்தும் அவமரியாதையானது, ஒழுக்கக்கேடானது என்று கருதுகின்றனர். உண்மையில் இவர்கள் உடலுறவின் அசல் தன்மையை தவறவிட்டு விட்டவர்கள்.

அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும். எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும் போதுதான் அவருக்கு இயற்கையாகவே; தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கினானே அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும். அந்த நிலைக்கு நம் மனதை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சரியான எண்ணங்கள்; உடலுறவை ஓர் உடல் அளவிலான சுகம் என்பதிலிருந்து மாற்றி, ஓர் அளப்பரிய நற்கூலி கிடைக்கும் செயலாகவும், ஒருவகையான அறச்செயலாகவும் உயர்த்துகின்றன.

அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியதாக அறிவிக்கிறார்கள்:
"...நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹும் (ஸுப்ஹானல்லாஹ் - இறைவன் தூய்மையானவன் எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் எனக்கூறுதல்) ஓர் அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனுக்கே எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்லீலும் (லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை எனக் கூறுதல்) அறச் செயலே,
நன்மையை ஏவுவதும் அறம், தீயதைத் தடுப்பதும் அறம், மற்றும் உங்கள் எல்லோரின் உடலுறவுச் செயலிலும் அறம் இருக்கிறது" என்றார்கள்.
(அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்), அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் உடலுறவு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவா அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்?"
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; "அவர் அதை (உடலுறவை) விலக்கப்பட்ட விதத்தில் செய்தால் அவர் பாவம் செய்பவராகக் கருதப்படுவதை நீங்கள் அறியவில்லையா? அதுபோலத்தான், அவர் அதை அனுமதிக்கப்பட்ட விதத்தில் செய்தால், அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்" (ஸஹீஹ் முஸ்லிம் 1006)

அல்லாஹ் தனது திருமறையாம் அல்குர்ஆனில் கூறுகின்றான்; "....மேலும், இப்போது அவர்களுடன் (உங்கள் துணைவியருடன்) உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள். (2:187)

"அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள்" எனும் வசனத்திலிருந்து அல்லாஹ் விதித்துள்ளதை தேடிக்கொள்வதற்காக வேண்டியாவது ஒவ்வொருவரும் உடலுறவு கொள்வது ஓர் இறைக்கட்டளை என்பதை விளங்கலாம். இறை கட்டளை எனும்போது அதை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையென்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. "பெண்களுடன் உடலுறவு கொள்வதன்மூலம், உங்களுக்காக விண்ணுலக ஏட்டில் (லவ்ஹூல் மஹ்ஃபூள்) விதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். வெறுமனே இச்சையைத் தணித்துக் கொள்ளும் உடலுறவு மட்டும் நோக்கமாக இருப்பது உவப்பானதல்ல'' என்று தஃஸீரே உஸ்மானி (1:123) யில் எழுதுகிறார்கள்.

அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும். எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும்போது அவருக்கு இயற்கையாகவே தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கிய அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும்படி நாம் நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவர் பரவசத்தின் உச்சநிலையிலும்கூட தன் தம் துணைவரோடு கொள்ளும் உயலுறவு மூலம், ஆசை நிறைவேற்றத்துக்கு அப்பால் உள்ள பல உயர் நன்னோக்கங்களை நினைவில் நிறுத்த வேண்டும். அதே சமயம் உடலுறவின்போது இறைசிந்தனை இருந்தால்தான் அது வணக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும் எண்று அர்த்தமல்ல. அனுமதிக்கப்பட்ட வழியில் - திருமணம் முடித்து தன் மனைவியுடன் உடலுறவு கொண்டாலே அது வணக்கமாகத்தான் ஆகிவிடுகிறது.

அனைவருமே தொழுதாலும் ஒவ்வொருவருடைய எண்ணத்திற்கும் இக்லாஸிற்கும் தகுந்தாற்போல் நன்மைகளில் வித்தியாசம் உண்டல்லவா அது போலத்தான் இதிலும் என்று கொள்ளலாம். உடலுறவின்போது இறைவனின் நினைவு இருந்தால் அதற்கு அதிக நன்மை உண்டு என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியதே.


 உடலுறவு - தம்பதியர் இருவருக்குமான உரிமை 

பாலியல் திருப்தி என்பது கணவன், மனைவி இருவருக்கும் உள்ள உரிமை. இது கணவனுக்கு மட்டுமே உள்ளது என நினைத்துக்கொள்வது தவறாகும். கணவனின் அளவுக்கு மனைவிக்கும் தன் பாலியல் தேவைகளின் நிறைவை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. துல்லியமாக சொல்ல வெண்டுமானால், உடலுறவு என்பது தம்பதியர் இருவருக்குமான உரிமையாகும். ஒருவர் தம் துணைவியரின் பாலியல் பசியைத் தணிப்பது உடலுறவின், இன்னும் சொல்லப்போனால் மணவாழ்விற்கும்கூட சட்ட ஏற்புக்குரிய வழிமுறையாகும்.

இனி, உடலுறவில் கணவனின் உரிமை என்ன? மனைவியின் உரிமை என்ன? என்பதைப் பார்ப்போம்.

கணவனின் உரிமை : 

ஓர் ஆண் உடலுறவுக்கு விரும்பும்போதெல்லாம் அவர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள உரிமை பெற்றுள்ளார். அவருக்காக தன்னை தயாராக வைத்துக்கொள்வது மனைவியின் மார்க்கக்கடமையில் ஒன்றாகும். நியாயமான காரணமின்றி இதில் தவறவிடுவது பாவச்செயலாகும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;
"ஓர் ஆண் தன் மனைவியைத் தன் படுக்கைக்கு அழைத்து அவள் வர மறுத்துவிட்டால், அவர் கோபமான நிலையில் தூங்குவார் எனில், காலைப்பொழுது வரை வானவார்கள் அவளை சபிக்கின்றனர். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி, 3065 முஸ்லிம் 1436) இங்கு முஸ்லிமில் உள்ள சொற்களே இடம்பெற்றுள்ளன.

திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றோர் ஹதீஸ்; "எவன் கைகளில் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒருவர் தன் மனைவியைத் தன் படுக்கையின்பால் அழைத்து அவள் மறுத்துவிட்டால், அவளுடைய கணவன் அவள் மீது திருப்தியுறும்வரை அல்லாஹ் அவள் மீது கோபம் கொண்டிருக்கிறான். (நூல்: முஸ்லிம் 1436)

இதுகுறித்து இன்னுமோர் நபிமொழி; "ஓர் ஆண் தன் மனைவியைப் பாலியல் தேவை நிறைவேற்றத்துக்காக அழைத்தால், அவள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் (அதை விட்டுவிட்டு) வரவேண்டும். (நூல்: திர்மிதீ 1160)

இவையும் இவை போன்ற பிற நபிமொழிகளில் இருந்தும் உடலுறவுக்கான கணவனின் கோருதலுக்கு மனைவி பணிவதன் முக்கியத்துவம் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இயல்புநிலையில், மனைவி கணவனின் அழைப்பை மறுப்பது கொடிய பாவமாகும். அதைவிட, அவளின் மறுப்பால் கணவன் விலக்கப்பட்ட செயலை (அதாவது வேறொரு பெண்ணை நாடி விபச்சாரம்) செய்துவிட்டால் அது மாபெரும் பாவமாகிவிடும்.

எனவே தகுந்த காரணமின்றி மனைவி தன் கணவனுக்கு உடலுறவை மறுப்பது விலக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும் என்பதை மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த கருத்தின் அடிப்படையில்தான், பெண்கள் நஃபிலான நோன்பு வைப்பதற்குமுன் தங்கள் கணவன்மார்களிடம் அனுமதி கேட்குமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தார்கள். ஏனெனில், அவள் நோன்பு நோற்றிருக்கும்போது கணவன் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படலாம் அல்லவா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "ஒரு பெண், தன்னுடைய கணவன் அவளுடன் இருக்கும்போது அவருடைய அனுமதியின்றி (நஃபிலான) நோன்பு நோர்க்கக்கூடாது. (நூல்: புகாரி 4896)

ஆண்கள் கவனத்தில் கொள்ளவேன்டிய இரு விஷயங்கள் :

முதலாவதாக, உடலுறவு கோரும் கணவனின் உரிமை என்பதற்குப் பொருள், அவர் தம் இச்சையைத் தணித்துக்கொள்ளத் தம் மனைவியை வன்செயலால் கட்டாயப்படுத்தலாம் என்பதல்ல. கணவன் "கோப நிலையில் உறங்குவது", "அதிருப்தி கொள்வது" பற்றி ஹதீஸ்களில் (நபிமொழியில்) கூறப்படுவதிலிருந்து, கணவன் அவளுடன் பலவந்தமாக இணைவதிலிருந்தும், அவளைப் புண்படுத்துவதிலிருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விஷயம் தெளிவுபடுகிறது.

அதுபோன்ற செயல் நியாயமாக இருப்பின், நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை கணவனுக்கு அனுமதித்திருப்பார்கள். இஸ்லாத்தின் கொள்கைகளில் பொதுவான சட்டம்; மார்க்க விஷயத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. இதுதான் சட்டம் என்று எடுத்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறது. அதை பின்பற்றுதல் அல்லது பின்பற்றாமல் இருத்தல் என்பதை அவரவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறது. அதே வேளையில் சட்டத்தைப் பின்பற்றும்போது நற்கூலியும், சட்டத்தை மறுக்கும்போது தண்டனையும் நிச்சயம் உண்டு என்பதையும் இஸ்லாம் தெளிவாக எடுத்துச்சொல்கிறது.

இரண்டாவதாக, மனைவி தன்னை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சாதாரண இயல்புநிலைகளில் பொருந்தும். இஸ்லாமியச் சட்டங்கள் (ஷரீஆ) விதித்த இடர்களோ, தகுந்த காரணமோ இருக்கும் நிலையில் அது பொருந்தாது. மனைவி தன் சுயவுரிமைகளை விட்டுத்தர வேண்டியநிலை இல்லாதவரை, அவள் தன் கணவனுக்குப் பணிய கடமைப்பட்டிருக்கிறாள். எனவே, இதுபற்றிய பல்வேறு ஹதீஸ்கள், தங்கள் கணவன்மார்களுக்கு எதிராக உடலுறவை ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண்களுக்கே ஓர் எச்சரிக்கையாகும். எனினும் மாதவிடாயில் இருந்தால் அல்லது பேறுகால ரத்தப்போக்கு கொண்டிருந்தால் அல்லது நோயுற்றிருந்தால் அல்லது உடல்ரீதியாக உடலுறவு கொள்ள இயலாமல் இருந்தால். அல்லது களைப்புற்று, உணர்வெழுச்சி குன்றியிருந்தால்
அல்லது உடலுறவுச் செயல்பாடு அவளின் நலனைப் பாதிக்கக்கூடியதாய் இருந்தால், தன் கணவனின் உடலுறவுக்கோருதலுக்கு அவள் இணங்கவேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, அவள் உடலுறவுக்கொள்ள இயலாமல் இருப்பதை கணவன் புரிந்துகொண்டு அவள்மீது அனுதாபம் காட்ட வேண்டும். எனினும், வெறுமனே "அதற்கான மனநிலையும் விருப்பமும் இல்லை" என்பது பெண்களின் நியாயப்பாடாக அமையாது.

அல்லாஹ் கூறுகின்றான்;
"எந்தவொரு ஆன்மாவின் மீதும் அது தாங்கவியலாத் சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை." (அல்குர்ஆன் 2:286)

மனைவி கடும் நோயுற்று, உடலுறவுகொள்ள சக்திபெறாத நிலையில் இருப்பதைப் பொருட்படுத்தாது, தன் பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்யுமாறு கணவன் மனைவியிடம் கோரும் பல உதாரணங்களை நாம் காண்கிறோம். சிலர், மணவிலக்கு செய்துவிடுவதாகக்கூட மனைவிமார்களை மிரட்டுகின்றனர். தங்களின் இந்த நடத்தைக்கு மேற்கூறிய ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர்! மனைவி உடலுறவில் ஈடுபடும் நிலையில் இல்லாது, அதற்காக ஓர் உண்மையான மற்றும் இஸ்லாமிய ரீதியாகத் தகுந்த காரணம் இருக்கும்பட்சத்தில், கணவன் மனைவியை நிர்பந்தித்தால், அவர் பாவம் செய்தவராகிறார். பெண்களும் மனிதப் பிறவிகளே; விரும்பும்போதெல்லாம் "ஆன்", ஆஃப்" செய்துகொள்ள அவள் இயந்ந்திரம் அல்ல என்பதையும் முஸ்லிம் கணவன்மார்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அறுதியாக, இந்த விவகாரங்களை மிகச் சிறந்தமுறையில் தீர்ப்பதற்கான வழிகளும் உண்டு. அவை; ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல், மதிப்பு மரியாதை, அன்பு, பண்பு, பரிவு, துணைவருக்குத் தன்னைவிட முன்னிடம் அளிப்பது ஆகியவையே.

"நீங்கள் உங்களுக்கு விரும்புவதையே மற்றவர்களுக்கும் விரும்பாதவரை (உன்மையான) இறை நம்பிக்கையாளராக முடியாது" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை (நூல்: முஸ்லிம் 45) நினைவில் கொள்ள வேண்டும். இந்த கருத்தாக்கம் தாம்பத்யத்தில் மென்மேலும் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

மனைவியின் உரிமைகள் : 

ஆணைப்போல், பெண்ணுக்கும் பாலியல் தேவைகள் உண்டு. எனினும், ஆணைப்போலல்லாமல், பெண் தன் பாலியல் வேட்கையின்மீது கூடுதல் கட்டுப்பாடு கொண்டவள். இந்த வித்தியாசம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவும் உடல், உணர்வெழுச்சி மற்றும் உள்ளூர இயல்புணர்ச்சி ரீதியான வேறுபாடுகளினால் தோன்றுகிறது.

பொதுவாக, பெண் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றும்படி கேட்கமாட்டாள். மாறாக, அவளுக்கு இச்சை ஏற்படும்போது, தன் கணவனை வசீகரிப்பதற்காகு பல்வேறு உத்திகளைக் கையாளுவாள். தன்னை அலங்கரித்துக்கொள்ளுதல், ஆசையைத்தூண்டும் வகையில் கணவனிடம் பேசுதல், ஏக்கத்துடன் கணவரைப்பார்த்தல் முதலியன. மாதவிடாய் சுழற்சி முடிந்ததும் பெண்ணின் பாலுறவு விருப்பம் மிகுந்திருக்கும். என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்து. புரிந்துகொள்ளும் கணவன் இதை உணர்ந்து, தன் மனைவியின் சமிக்ஞைகளை உணர்ந்து செயல்படுவான்.

கணவன், தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது மார்க்கக்கடமையாகும். ஒரு தகுந்த காரணமோ அனுமதியோ இன்றி, மனைவியின் இந்த உரிமையை கணவன் நிறைவேற்றத் தவறினால் அவர் பாவம் செய்தவராவார். எனவேதான் கணவன் தன் மனைவியுடன் சிறிது காலத்திற்கு ஒருமுறை (அடிக்கடி) உடலுறவு கொள்ள வேண்டும் எனப் பல சட்டவியலார்கள் கருதுகின்றனர்.

கணவன் தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவளுடன் எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு கொள்வது என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்துவேற்பாடு உள்ளது.

இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்கள் கருத்தில், ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு இரவுகளுக்கு ஒருமுறையாவது உடலுறவு கொள்ளவது மார்க்கக்கடமை என்று கூறப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்திற்கு பின்வரும் சம்பவம் ஆதாரமாக அமைகிறது.

கதாவும் ஷஅபியும் அறிவிப்பதாக அப்துர் ரஸ்ஸாக் தம்முடைய அல்-முஸாஃபில் கூறுகிறார்;

"ஒரு பெண்மணி ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "என் கணவர் இரவில் நின்று வணங்குகிறார், பகலில் நோன்பு நோற்கிறார்" என்றாள். ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "நீர் உம் கணவரை மிகச் சிறப்பாகப் போற்றியிருக்கிறாய்" என்றார்கள். அதற்கு கஅப் இப்னு சவ்வார் அவர்கள், ''அவள் (அசலில்) புகார் செய்கிறாள்'' என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார். "எப்படி?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.

"அவள் தன் கணவரிடமிருந்து திருமணப் பங்கை பெறுவதில்லை எனக் கோருகிறாள் (அதாவது தன்னுடைய உரிமைகளை அவளது கணவன் நிறைவேற்றுவதில்லை)" என்றார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "இந்த அளவுக்கு நீர் புரிந்திருந்தால் நீரே அவளுக்கு தீர்ப்பு கூறவும்" என்றார்கள். அப்போது அவர் (கஅப் இப்னு சவ்வார் கூறினார்; "அமீருல் முஃமினீன் அவர்களே! நான்கு மனைவிகளைத் திருமணம் செய்ய அல்லாஹ் அனுமதித்துள்ளான். எனவே நான்கு பகல்களில் ஒரு பகலும், நான்கு இரவுகளில் ஓர் இரவும் அவளுக்கு உரிமையுண்டு.." (நூல்: ஸுயூத்தி, தாரிக் அல்-குல்ஃபா - பக்கம் 161)

இதன் அடிப்படையில், நான்கு இரவுகளில் ஒருமுறை ஒரு கணவன் தன் மனைவியின் பாலுணர்வுத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்களின் கருத்து. ஏனெனில், அவருக்கு நான்கு மனைவிகள் இருப்பின், அவர் மற்ற மூன்று இரவுகளை தன்னுடைய மற்ற மனைவிகளுடன் கழிப்பதற்கு அனுமதி உண்டு.

இமாம் இப்னு ஹஸமின் கருத்தில், ஒரு மனிதர் மாதத்தில் ஒருமுறையேனும் தன் மனைவியுடன் படுக்கையில் கூடுவது மார்க்கக்கடமை. அண்ணாரின் கூற்றுப்படி; மாதவிடாய்களுக்கு இடையே ஒருமுறையாவது மனைவியுடன் உடலுறவு கொள்வது கடமை. இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இதற்கு அவர்கள் எடுக்கும் ஆதாரம்; திருமறையின் வாசகம். "எனினும், அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அவர்களை அல்லாஹ் கட்டளையிட்டுள்ள இடத்திலிருந்து அணுகுங்கள்: என்பதாகும். (நூல்: அல்-முஹல்லா, பக்கம் 1672)

"அவர்களை அணுகுங்கள்" என்ற அல்லாஹ்வின் சொற்களிலிருந்து இப்னு ஹஸம் தமது கருத்தைப் பெற்று, இது கடமையைக் குறிக்கும் ஒரு கட்டளை என்கிறார்கள். ஆனால் அறிஞர்கள் பலர் இதை, மாதவிடாய்க்குப்பின் உடலுறவை அனுமதிக்கும் வாசகமாகாவே கருதுகின்றனர்.
அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி, ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு மாதங்களில் ஒருமுறையேனும் கட்டாயம் உடலுறவு கொள்ளவேண்டும், இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இவர்கள் தங்களின் நிலைப்பாட்டிற்குப் பின்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பு :

இப்னு ஜரீர் அறிவிக்கிறார்; "நான் நம்பும் ஒருவர் இந்தத் தகவலை என்னிடம் கூறினார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோந்து வரும்பொழுது, ஒரு பெண் இவ்வாறு கூறுவதை (கவிதை பாடுவதை) செவியுற்றார்கள்.

"இரவு நீண்டு செல்கிறதே! இருள் சூழ்ந்துள்ளதே!
(ஆனால்) என்னுடன் நெருங்கியிருக்க தோழன் இல்லையே.
என் உறக்கம் தொலைந்ததே! தனக்கு இணையில்லாத அல்லாஹ்வின் அச்சம் மட்டும் இல்லையெனில் இந்தப் படுக்கையின் இருபக்கங்கள் அங்குமிங்கும் நகர்ந்திருக்குமே!" (அதாவது இறையச்சம் மட்டும் அப்பெண்மணியை தடுத்திருக்காவிட்டால் அவள் வழிதவறிப்போயிருப்பாள் என்பதைக் கூறுகின்றது கவிதையின் இறுதி வாசகம்).

உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள், "உமக்கு என்ன நேர்ந்தது?"

அதற்கு அவள்: "நீங்கள் தான் என் கணவரை சில மாதங்களுக்குமுன் போருக்கு அனுப்பிவிட்டீர்களே! இங்கே நான் அவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்" என்றாள்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்; "உமக்கு தவறிழைக்கும் எண்ணம் இருக்கிறதா?"

அதற்கு அவள்; "அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்" என்றாள். உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; "அப்படியென்றால் நீர் உம்மைக் கட்டுப்படுத்திக்கொள். அவருக்கு (கணவருக்கு) வெறும் ஒரு செய்தியை அனுப்பினாலே போதும். விஷயம் தீர்ந்துவிடும்" என்றார்கள்.

பின்னர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை - அப்பெண்ணின் கணவரை (திரும்ப வருமாறு) கட்டளையிட்டு செய்தி அனுப்பினார்கள். அதன்பின் தன் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹாவிடம் சென்று கேட்டார்கள்; "என் விஷயம் சம்பந்தப்பட்ட ஒன்றை நான் உன்னிடம் கேட்க விரும்புகின்றேன். அதற்கு தீர்வு கூறவும். ஒரு பெண் தன் கணவன் இன்றி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்?"

அவர் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) வெட்கத்தில் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ் உண்மையானா விஷயத்தில் வெட்கம் கொள்வதில்லை" என்றார்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆகையால், அவர்கள் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) தன் கையால் சைகை காட்டினார்கள் - மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் என. எனவே, நான்கு மாதங்களுக்கு மேலாக (எவரும்) ராணுவப் பணியில் அமர்த்தப்படக் கூடாது என உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள்.'' (நூல்: தாரீஃக் அல்-குல்ஃபா. பக்கம் 161,162)

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இக்கேள்வியை தம் மனைவியிடம் கேட்காமல், தம் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டுள்ளார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இதற்கான காரணத்தை மவ்லானா அஷ்ரஃப் அலீ தானவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்; "உமர் ரளியல்லாஹு அன்ஹு தம் மகளிடமிருந்து நேரடியான விடையை எதிர்பார்த்தார்கள். தம் மனைவியைப் பொறுத்தவரை, கேட்பது அவருடைய கணவன் என்பதால் மனைவியின் விடை பாரபட்சமாக அமையக்கூடிய வாய்ப்புண்டு என கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு எண்ணினார்கள். (நூல்: அல்-இஃபாதாத் அல்-கவ்மிய்யா 2:300)

எனினும், கணவனுக்காகான உடலுறவு உரிமை போலவே, தன் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நிபந்தனை உண்டு,.

அவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் அளவிற்கு உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும்.
கணவன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தால்,

அல்லது உடலுறவில் ஈடுபட இயலாத அளவு பலவீனமாக இருந்தால், அல்லது தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் விளைவாக தாங்கவியலாத பலவீனம் ஏற்படுமானால், அவர் தம் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை. அதனால் பாவியாகவுமாட்டார்.`

எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு? ஒரு தம்பதியர் எத்தனை நாளுக்கு ஒருமுறை அல்லது பலமுறை உடலுறவில் ஈடுபடலாம் என்பதைப்பற்றி ஒரு குறிப்பிட்ட அளவையோ வரைமுறையையோ ஷரீஅத் நிர்ணயம் செய்ய்யவில்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் இயல்புணர்ச்சி, உடல்வாகு, பாலுணர்வு ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, தங்களுக்கு மிகப் பொருத்தமான அளவை தம்பதிகளே ஒருவருக்கொருவர் முடிவுசெய்துகொள்ள வேண்டியதுதான்.

எனினும், இஸ்லாம் எல்லாவற்றிர்க்கும் வழிகாட்டும் மார்க்கமல்லவா? வாழ்வின் அனைத்துக்கூறுகளிலும் சமநிலைப்பேண ஊக்குவிக்கிறது. ஏனெனில் நடுநிலைப் பாதையே மிகச்சிறந்த பாதை. இஸ்லாத்தின் அணைத்துப் போதனைகளிலும் சமநிலைப்போக்கு கலந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். அளவுக்கதிகமான உடலுறவும் சரி, உடலுறவை முற்றிலும் துறப்பதும் சரி இரண்டுமே அறிவான செயலல்ல.

அறிஞர்களில் சிலர் வாரம் ஒருமுறை உடலுறவு கொள்வதற்கு பரிந்துரை செய்கின்றனர். இது சமநிலைப்போக்கின் வட்டத்துக்குள் அமைந்திருப்பதாகக் கருதுகின்றனர். இந்த நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் மேற்கொள்ளும் ஆதாரம்:

அவ்ஸ் இப்னு அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஒரு நபிமொழி:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;"எவர் வெள்ளிக்கிழமையன்று (தன் மனைவியை) குளிக்கச் செய்துவிட்டு, தானும் குளித்துவிட்டு, (வெள்ளிக்கிழமை தொழுகை) நேரத்திலேயே புறப்பட்டு, வாகனத்தில் செல்லாமல் நடந்துசென்று, இமாமுக்கு அருகில் உள்ளதொரு இடத்தில் அமர்ந்து, கவனமாக அவரை செவியேற்று, வீண் செயலில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறாரோ, அவருக்கு, அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஓராண்டு காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்" (ஆதாரம்: அபூதாவூத் 349, நஸாஈ 1381). அபூதாவூதின் சொற்களே இங்கு இடம்பெற்றுள்ளன.

இந்த நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "மன் கஸ்ஸல" எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். இதன் நேரடி மொழி பெயர்ப்பு, "இன்னொருவரைக் குளிப்பாட்டும் ஒருவர்" அல்லது "இன்னொருவரைக் குளிக்கச் செய்விக்கும் ஒருவர்". இந்த வாசகத்தை இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸுனன் அல்-நஸாஈயிற்கான தம்முடைய விரிவுரையில் இவ்வாறு விளக்குகிறார்கள்; "கஸ்ஸல (மாற்றொருவரைக் குளிப்பாட்டுதல் அல்லது குளிக்கச்செய்வித்தல்) என்பதன் (உட்)பொருள், ஒருவர் (வெள்ளிக்கிழமை) தொழுகைக்குச் செல்லுமுன் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் இது, வழியில் அவருடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்ள உதவும்..." (ஸுனன் அல்-நஸாஈ பி ஷரஹ் அல்-ஸுயூத்தி 3:95)

இதன்படி, இந்த நபிமொழியின் பொருள்களுள் ஒன்று, எவர் வெள்ளிக்கிழமையன்று தம் மனைவியுடன் உடலுறவுக் கொண்டு பின் தானும் குளித்து, தன் மனைவியையும் குளிக்கச்செய்வித்து, கூறப்பெற்றுள்ள பிற செயல்களை நடைமுறைப்படுத்துகின்றாரோ, அவருக்கு, அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஒரு வருட காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்.

அதற்காக வாரம் ஒருநாள் தான் உடலுறவுகொள்ள வேண்டும் என்று இந்த நபிமொழி கூறுவதாக தப்பர்த்தம் கொண்டுவிட வேண்டாம். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குமுன் மனைவியுடன் உடலுறவு கொள்வது சிறந்ததது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. அதற்கான காரணத்தையும் இமாம் ஸுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி மேலே சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

 உடலுறவுக்கான சிறந்த நேரம் எது?

பொதுவாக, உடலுறவுச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதான் என்று ஷரீஅத் எதையும் வரையறுக்கவில்லை. தம்பதிகள் உடலுறவு கொள்வதற்கு பகலோ, இரவோ; எந்த நேரத்தை வேண்டுமானாலௌம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரவு, பகல் எனப் பல்வேறு நேரங்களில் தம் மனைவிகளுடன் உடலுறவு கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பகமான செய்தியாகும். மேலும், உடலுறவுக்கான தூண்டுதலும், தம்பதியருக்கு போதிய வீரியமும், ஓய்வும் இருந்தாலே உடலுறவுச் செயல்பாடுகள் நடக்கும் என்பதால், உடலுறவுக்கு குறிப்பிட்ட நேரத்தை விதியாகத் திணிப்பது நடைமுறைக்கு ஏற்றதாகாது.

அதே சமயம் அனுபவத்தின் அடிப்படையில் அறிஞர்கள் விரும்பத்தக்க நேரங்கள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். இவை இங்கு ஒரு புரிதலுக்காக மட்டுமே தரப்பட்டுள்ளது. கட்டாயமானது என்றோ அல்லது நம்பத்தக்கது என்றோ கருதத்தேவையில்லை.

 விரும்பத்தக்க நேரங்கள் : 
உடலுறவுக்கு ஏதுவான நேரம் - ஓய்வாக இருக்கும் வேளை, தம்பதியர் இருவரிடத்திலும் சமமான இயல்புணர்ச்சி நிலவும் வேளை ஓ.கே.! பதற்றம், கவலை அல்லது பசி, தாகம், சோகம், நோய்நொடி போன்றவை இச்சையை குன்றச்செய்துவிடலாம். இதுபோன்ற சமயத்தில் உடலுறவை தவிர்ப்பது நலம்.

சிலருக்கு ஏதுவான நேரம் இரவுதான். அறிஞர்கள் சிலர், இரவின் பிற்பகுதியே உடலுறவுக்கு மிகப் பொருத்தமான நேரம் எனக் கருதுகின்றனர். ஏனெனில், இரவின் முதற்பகுதியில் வயிறு நிறைந்திருக்கும். முழுமையாக உணவு செரிமானம் ஆனபின்பே உடலுறவு கொள்வது மிகப்பொருத்தமாக இடுக்கும். இதுவே அல்லாஹ்வின் தூதருடைய வழக்கமும் கூட! இருப்பினும் மற்ற நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய மனைவிமார்களுடன் உடலுறவு கொண்டுள்ளார்கள்.

அபூ இஸ்ஹாக் அறிவிக்கிறார்கள்; "அல்லாஹ்வின் தூதருடைய (இரவு நேரத்) தொழுகை குறித்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் என்ன கூறினார்கள் என அல்-அஸ்வத் இப்னு யஸீதிடம் கேட்டேன். அதற்கவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறியிருக்கிறார்கள்;
"அவர்கள் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவின் முதல் பகுதியில் உறங்கி, பிற்பகுதியில் (தொழுகைக்காக) எழுந்திரிப்பார்கள். அப்போது அவர்கள் தம் மனைவியுடன் தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நாடினால், விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு உறங்கிவிடுவார்கள். தொழுகைக்கான முதல் அழைப்பு கொடுக்கப்பட்டதும் அவர்கள் குதித்தெழுவார்கள். (அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்கள் குளித்தார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறவில்லை. எனினும் அவர்கள் கூறியதை நான் விளங்கிக்கொண்டேன்.) (எனினும்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் இருக்கவில்லை எனில், (வெறுமனே) தொழுகைக்கான உளூ- கைகால் கழுவி தூய்மை செய்துகொண்டு, இரு ரக் அத்துகள் (ஃபஜ்ர் தொழுகையின் ஸுன்னா) தொழுதார்கள் (நூல்: முஸ்லிம் 739)

விஞ்ஞான ரீதியிலும் ''விடியற்காலை உடலுறவு'' ஆரோக்கியமானாதே என்பதை மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். காலை நேர செக்ஸ் நல்ல 'ஐடியா'தான் என்கிறார்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் ஃபிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பாலியல் உணர்ச்சி எழுவது சகஜம்.

எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, பகலாக இருந்தாலும் சரி, மாலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே தம்பதிகளுக்கு சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.

இங்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது. வெள்ளிக்கிழமை உடலுறவைப்பற்றி சிறப்பித்துக்கூறப்பட்டுள்ளதால் வாரம் ஒருமுறை உடலுறவு போதுமானது என்று முடிவு செய்துகொள்ளாதீர்கள். அவ்வாறு எண்ணுவது தவறு. பொதுவாக உடலுறவுக்கான காலமும் சரி, நேரமும் சரி, எத்தனை முறை என்பது பற்றிய குறிப்புகளும் சரி எதையும் ஷரீ அத் பொருட்படுத்தாத நிலையில் அதை வலியுறுத்தி சொல்வது சரியானதாகாது. தெளிவாகச் சொல்லவேண்டுமானால் நேரம், காலம், இடம் இவற்றை உத்தேசித்து தம்பதிகள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள இஸ்லாம் முழுமையாக அனுமதிக்கிறது.

பரிபூரண தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயம் உண்டு!

 உடலுறவு கொண்ட பின் குளிப்பதற்கும்கூட நன்மை உடலுறவு கொண்டு "ஜனாபத் குளியல்" குளிப்பதில் கூட நன்மைகளை அள்ளித்தருகிறது இஸ்லாம்.

"ஜனாபத் குளியல் குளிக்கும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் தலைமுடியை நன்றாக கோதிக் கழுவிக் குளிக்கும்போது உடலில் இருந்து தெறித்துவிழும் ஒவ்வொரு துளித் தண்ணீருக்கும் ஒவ்வொரு நூறு நன்மைகள் எழுதப்படாமல் இல்லை. பேலும் அவர்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)

மற்றோர் நபிமொழியில்,

"எவரொருவர் உளூச்செய்து பின்பு (ஜனாபத்) முழுக்கு நீங்கக் குளித்தால் குழைத்த மாவிலிருக்கும் உரோமத்தை எடுப்பது போன்று அவர் பாவங்கள் களையப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)

இந்த இரு நபிமொழிகளைக் காணூம் எவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வதில் வினோதமில்லை. உடலுறவு கொள்வதும் ஒரு வணக்கமே என்பதை முதலிலேயே பார்த்தோம். இப்பொழுதோ உடலுறவுக்குப்பின் தூய்மைப்படுத்திக்கொள்ள குளிக்கும் குளியலுக்குக்கூட இவ்வளவு நன்மை என்று இஸ்லாம் சொல்கிறதே! நினைத்தாலே இனிக்கிறதல்லவா? ஆம்! அதுதான் இஸ்லாத்தின் வசீகரம்.

மனிதா! நீ, தீய வழியில் சென்று உன் இச்சையை தீர்த்துக்கொள்ளாதே! அது உன்னை நரகக்குழியில் தள்ளிவிடும் என்று எச்சரிக்கும் இஸ்லாம், ஆகுமான வழியில் இறைவன் அனுமதித்த வழியில் திருமணம் முடித்துக்கொண்டு மனைவியுடன் உடலுறவு கொண்டு இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது - அதை இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்ட, இறைக்கட்டளைக்கு கண்ணியமளித்த ஒரு செயலாக இறைவன் கருதுவதால் தனது அடியார்களுக்கு கரும்புத் தின்னக்கூட கூலி கொடுக்கின்றான் என்றே அறியமுடிகிறது. இப்பொழுது எண்ணிப்பாருங்கள் அந்த ஏக இறைவன்; தனது படைப்புகளில் உயர்வான மனித இனத்தின்மீது மீது கொண்டிருக்கும் அன்பும் கருணையும்.

அடுத்து இஸ்லாம் அனுமதிக்கும் எந்த செயலை செய்தாலும் நன்மை நிச்சயம் உண்டு எனும் அதே வேளையில் அந்த செயலை முறையாக செய்தால் நன்மைகள் இன்னும் அதிகமுண்டு என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆம்! மனைவியுடன் உடலுறவு கொள்வதும் நன்மையான காரியம் எனும்போது அந்த உடலுறவு இருவருக்குமே நிம்மதியளிக்கும் விதத்தில் அமையும்போது இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம்?! இப்போது ஓரளவுக்காவது உங்களுக்குப் புரிந்திருக்கும். தம்பதிகள் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ளும்போது தன்னுடைய சுகத்தை மட்டும் பாராமல் தனது இணைக்கும் உடலுறவின்மூலம் முழு திருப்தியை கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போதுதான் அது இருவருக்கும் முழு நிம்மதியளிக்கக்கூடிய செயலாக அமையும்.

மனங்கள் அமைதிபெறும் பொருட்டே உங்களிலிருந்து உங்கள் மனைவிகளை படைத்திருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறானே அந்த மன நிம்மதி உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமானால் உடலுறவின்மூலம் நீங்கள் சுகத்தை அனுபவிக்கும் அதே சமயம் உங்கள் துணைவிக்கும் முழு சுகத்தைக் கொடுத்து அவளது மனமும் அமைதியடைந்தாலே அது பரிபூரணமான தாம்பத்யம். அப்படிப்பட்ட தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயமாக உண்டு.

உடலுறவில் முழு திருப்தியை பெற்றுக்கொண்ட தம்பதிகளின் நிலை :
உடலுறவில் முழு இன்பத்தையும் திருப்தியையும் பெற்றுக்கொண்ட தம்பதிகளுக்கிடையே சண்டைச் சச்சரவுகள் அதிகமிருக்காது. அவர்களுக்குள் பாசம் பொங்கிவழியும். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தாலும் அவைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமாளித்துக்கொள்வார்கள். காரணம் உடலுறவின்போது அவர்களுக்குள் இருந்த ஈடுபாடு அதாவது தன்னைப்போல் தன் துணையும் முழுமையான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் எனும் எண்ணம்... அந்த நல்லெண்ணம் எல்லா நேரத்திலும் அவர்களிடம் தழைத்தோங்கவே செய்யும். இது திருப்தியான, நிம்மதியான உடலுறவினால் விளைந்த நன்மையல்லவா? இது இவ்வுலகில் நம் கண்முன்னே இறைவன் அவர்களுக்களித்த நற்கூலிதானே! வெறுமனே சொன்னால் எப்படி? அந்த உண்மையான தம்பதிகள் தங்களுடைய இணையின் திருப்திக்கும் முக்கியத்துவம் அளித்து நடந்து கொண்டதால் இறைவன் அவர்களுக்கு அளித்த பரிசுதானே வாழ்க்கையின் மற்ற காரியங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதி.

திருப்தி கிட்டாத தம்பதிகளின் நிலை :
அவ்வாறு இல்லாமல் உடலுறவில் சரியான முறையில் பரிபூரண திருப்தியை கிடைக்கப்பெறாத தம்பதிகளைப் பாருங்கள்... என்ன நடக்கிறது? உடலுறவில் திருப்தி இல்லாத முழுமையான உச்சம் அடையாத எத்தனையோ பெண்கள் நிம்மதியிழந்து.... எல்லா வசதியும் இருந்து மனநோயாளியைப் போல இருப்பார்கள். எதையோ பறிகொடுத்ததுபோல் காட்சியளிப்பார்கள். இல்லற சுகத்தை கணவன் மூலம் முழுமையாக கிடைக்கப்பெறாதவள் தன்னை கணவனுக்காக அலங்கரித்துக்கொள்ள மாட்டாள். எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று சீறிப்பாயும் குணம் கொண்டவளாக இருப்பாள். இதன் பாதிப்பு எதுவரை செல்லும் என்றால், குழந்தைகளை திட்டுவதும், சின்ன சின்ன குற்றத்துக்காக அவர்களை அடிப்பவர்களாகக் காணமுடியும். ''சனியன்களா... இதுகளைப்பெற்றுக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்...? என்று கண்ணீர் வடிப்பாள்.

இப்படி உலகெங்கும் பாலியல் திருப்தி இல்லாமல் பலப்பல அநியாயங்கள், கொடுமைகள், தவறுகள் தினந்தோறும் நடப்பதை கண்முன்னால் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

 ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசையா? :

"ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசை அதிகப்படுத்தப்பட்டுள்ளது, என்றாலும் அவர்களுக்கு அதில் அல்லாஹ் (ஆசையை அடக்கிக்கொள்ள) அவர்கள்மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: கன்ஜுல் உம்மால்)

வெட்கம் எனும் போர்வையை பெண்ணின் மீது போர்த்தி அவளின் 99 மடங்கு இச்சையை மறைத்து வைத்துள்ளான் அல்லாஹ்! இது பெண்ணினத்திற்கே இறைவன் வழங்கிய தனிப்பட்ட பாக்கியமாகும். அந்த தனிப்பட்ட பாக்கியத்தை ஒவ்வொரு கணவனும் புரிந்து நடந்துகொண்டால் அவர்களின் இல்லங்கள் ஒவ்வொன்றுமே பூலோக சொர்க்கம்தான் என்பதை அவர்கள் உணரமுடியும், புரிந்துகொள்ள வேண்டும்.

 மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால்....

இஸ்லாம் பெண்ணினத்தின் இந்த ஆசைக்கு எந்த அளவு உயர்வான மதிப்பளிக்கிறது என்பதற்கு... ''மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால் அவளுக்கு ஆசை அடங்கும்வரை ஊரில் தங்கியிருந்து அவளை முழுமையாக திருப்திபடுத்திவிட்டு அதற்கப்புறமே போருக்குச் செல்ல வேண்டும்'' என்று இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. எனவே மனைவிக்கு செலுத்த வேண்டிய கடமைகளில் ஒன்றான உடலுறவு விஷயத்தில் கணவன்மார்கள் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக, தனது மனைவியிடம் உடலுறவு விஷயத்தில் அலட்சியமும், பொடுபோக்கும், வஞ்சகமும் செய்வது மாபெரும் துரோகமாகும்.

எங்களுக்கு வேலைபளு, டென்ஷன், வெளிநாடு சம்பாத்தியம், அது... இது என்று சாக்கு போக்கு சொல்லி எந்த கணவனும் மனைவிக்கு செய்ய வேண்டிய இந்த மாபெரும் பொறுப்பிலிருந்து அல்லாஹ்விடம் தப்பிக்கவே முடியாது.

 நடைமுறையில் காணப்படும் தவறான தாம்பத்யம் :
ஒரு முஸ்லிம் சகோதரர். கைநிறைய சம்பளம். வசதிக்கு குறைவில்லை. சொந்தவீடு, அழகான மனைவி எல்லாம் அவருக்கு உண்டு. ஆனால், வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் நேராக குளியலறைக்குச் சென்று நன்றாக குளித்துவிட்டு, அத்தர் போட்டுக் கொண்டு ரெடியாக இருப்பார். அந்த நேரத்தில் மனைவி சூடாக சுவையாக உணவுகளைத்தயாரித்து கொண்டு வருவாள். எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு (வயிற்றுக்குள் தான்!) அவர் எழுந்து கை கழுவிவிட்டு வரும்போது மனைவி ரெடியாக படுக்கையறைக்குள் அவருக்காக காத்திருக்க வேண்டும். உண்டுவிட்டு சிறிது நேரம் கூடத்தில் உலாத்திவிட்டு ரூமுக்குள் நுழைந்த வேகத்துக்கு அவசர அவசரமாக உடலுறவு கொண்டு முடித்துவிட்டு, திரும்பப் படுத்து தூங்கிவிடுவார்.

உடலுறவுக்கு சக்தி வேண்டும் என்பதற்காக உணர்ச்சியைத்தூண்டும் உணவுகளை வகை வகையாக சமைக்கச் சொல்லி சாப்பிடுவார். தினந்தோறும் உடலுறவு கொள்வார். ஐந்து நிமிடத்தில் அவரது முழு உடலுறவும் முடிந்துவிடும். இப்படியே பல வருடங்கள் அவர் செய்து கொண்டிருந்தார். தினமும் உடலுறவு வைத்துக் கொள்வது மனைவியை திருப்திப்படுத்தும் என்று தவறாக எண்ணிக்கொண்டு ஒரு இயந்திரத்தனமாய், மனைவியின் மனதைப் புரிந்து கொள்ளாமலேயே இருந்து வந்திருக்கிறார். அவர் தூங்கிய பின் மனைவி குளித்துவிட்டு, சமையல் அறை வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, சீரியல் பார்த்து விட்டு கணவன் அறையை எட்டிப் பார்ப்பாள், அங்கு கணவன் குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார்.

இதுவா வாழ்க்கை? ஆனால், இன்று பெரும்பாலான குடும்பங்களில் இந்த நிலை அதிகமாக பரவி வருகிறது. இப்படிப்பட்ட இயந்திரத்தனமான உடலுறவை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதை உடலுறவு என்றுகூட சொல்வதில்லை.

உடலுறவு விஷயத்தில் முன்னோர்களின் பெரும் அக்கறை:
நமது முன்னோர்கள் உடலுறவு விஷயத்தில் பெரும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். தொழுகையில் அக்கறை எடுத்துக்கொள்வது போல அக்கறை எடுத்துக்கொள்வார்கள். (மனைவிக்கு உச்சநிலையை உண்டாக்கி அவளை திருப்திபடுத்தாத உடல் உறவு, உடலுறவே அல்ல என்றும் சொன்னார்கள்.) அவ்வாறு இருந்த காரணத்தால் தான் அதிக குழந்தைகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

பெண் உடலுறவில் திருப்தி அடைய அவள் மனம், உடல், குடும்ப சூழல், இடம் பொருள் போன்ற பல விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். கணவன் தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்று பெண்களை தூக்க மாத்திரைகள் போல பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆண்களே அதிகம். தங்களின் தூக்கத்திற்கு தாம்பத்யம் தேவை என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் மனைவியை அணுகுவதால் அவளது மனம், உடல், சூழ்நிலை சார்ந்த அனைத்து விஷயங்களையும் அவளே கருத்தில்கொள்ள வேண்டியவளாகிவிடுகிறாள். இது அவளது உடல் நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் மிகவும் பாதிக்கச்செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு பெண் தன் கணவனிடம் அதிக அன்பையும், பாதுகாப்பையும், நம்பிக்கையையும் எதிர்பார்க்கிறாள். இவை அவளுக்கு கிடைக்கும்போது அவள் ஐஸ் கட்டியாக கணவனின் பார்வையில் உருகுகிறாள். அப்படிப்பட்ட நிலையில் அவள் தன்னை முழுமையாக, எல்லாவற்றையும் கணவனிடம் ஒப்படைக்கும்போதுதான் அங்கு அர்த்தமுள்ள உடலுறவுக்கு சாத்தியம். ஆம்! உடல் மட்டுமின்றி மனமும் ஒன்றோடொன்று சேரும்போது இரட்டை இன்பம் கிடைக்கும்போது அதன் முடிவு பன்மடங்கு சிறப்பானதாக உயர்வானதாக அமையும்.

இன்று மனிதர்கள் பணத்தின் பின்னாலேயே ஓடுவதால் தாம்பத்யமே பாழாகிப் போய், பெரும்பாலும் தம்பதிகளிடம் தாம்பத்யமே குறைந்து போய்விட்டது என்றுகூட சொல்லலாம். அந்த இடத்தை டி வி யும் சீரியலும் பிடித்துக்கொண்டுவிட்டது தான் காரணம்.


உடலுறவுக்கு முன்பு:

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி

( பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான, வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா) 

என்று கூறுவாரானால் அவ்விரவில் அவ்விருவருக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட்டால் அந்தக் குழந்தையை ஷைத்தான் எப்போதும் தீண்ட மாட்டான்' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி

உடலுறவுக்கு முன்பு பிஸ்மில்லாஹ் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த இந்த துவாவை கண்டிப்பாக கூற வேண்டும்.

துவாவின் பொருள்: அல்லாஹ்வின் பெயர் கூறி (இதில் ஈடுபடுகிறேன்) இறைவா ! ஷைத்தானை விட்டும் எங்களை அகற்றிவிடு ! நீ எங்களுக்கு வழங்கக்கூடிய குழந்தையையும் ஷைத்தானை விட்டும் அகற்றிவிடு!


முன்விளையாட்டும் ஓர் சுன்னத்தே! அலட்சியப்படுத்த வேண்டாம்:

முன் குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் பற்றி சிலருக்கு "இதெல்லாம் எழுத்தில் தேவையா?" எனும் எண்ணம் எழலாம். ஆனால் இவற்றிலுள்ள சில ஆகுமான காரியங்களை உணர்ச்சிமேலீட்டில் செய்துவிட்டு; பாவம் செய்துவிட்டோம், தவறுசெய்துவிட்டோம் என்று தவறுதலாக பலர் கருதக்கூடும். அவ்வாறு கருதுவது ஹலாலை ஹராமென்று எண்ணுவதற்குச் சமமாகும். எனவே சரியான கருத்து எதுவென்பதை எடுத்துச்சொல்ல விழையும்போது அனைத்தையும் சொல்லவேண்டிய அவசியம் கருதியே இங்கு இடம்பெறச்செய்துள்ளோம். அல்லாஹ் போதுமானவன்.

''ஒரு முஸ்லிம் விளையாடும் எல்லா விளையாட்டுக்களும் வீணானவையே - அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன் மனைவியுடன் விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள்.'' (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத் 17433).

தம்பதியர்களுக்கிடையே தாம்பத்ய உறவுக்குமுன் முன் விளையாட்டு மிகவும் அவசியம். இதில் உடற்சேற்கைக்கு முன் நிகழும் அனைத்துப் பாலுறவுச் செயல்பாடுகளும் அடங்கும். இதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் அன்பு, இச்சையான ஆசை வார்த்தைகள் எல்லாம் அடங்கும்.

முன் விளையாட்டில் ஈடுபடுவது மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மிகத் தேவையானதாகும். முன்விளையாட்டு இல்வாழ்வின் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாகவும் விளங்குகிறது. எனவே எத் தம்பதியரும் முன்விளையாட்டை அலட்சியப்படுத்த வேண்டாம்.

தம்பதியர் இருவருக்கும் முன்விளையாட்டு முக்கியமானது என்றபோதிலும், கணவன் உடலுறவுக்குமுன் தன் மனைவிக்கு கிளர்ச்சியூட்டுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் பொதுவாக பாலியல் கிளர்ச்சியடைவதற்கு ஆண்களைவிட கூடுதல் நேரம் பிடிக்கும் என்பதால், அவள் தயாராக இல்லாதபோது கணவன் உடலுறவு கொள்வானெனில், அவனுடைய தேவை பெயருக்கு நிறைவடையலாமே தவிர, அவள் நிறைவடைய மாட்டாள். இதன் விளைவாக, மனைவிக்கு அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டு மணவாழ்விற்கே குந்தகம் ஏற்படலாம்.

முன்விளையாட்டுக்கள் மூலம் மனைவியை கிளர்ச்சியுறச்செய்து அவளும் ஆயத்தமாகவும், தயார்நிலைக்கு வந்த பிறகுதான் உடலுறவில் ஈடுபட வேண்டும். கணவன் தன் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு, மனைவியை அதிருப்தியிலும் நிறைவின்மையிலும் விட்டுவிடுவது, அவனுடைய தன்னலத்தையும் ஆணவத்தையும் தான் காட்டும். இதுபோன்ற கணவன்மார்கள் உண்மையில் தங்கள் மனைவிமார்களை உண்மையாக நேசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். தங்கள் இச்சையை தீர்த்துக்கொள்வதிலேயே அக்கறையுள்ளவர்களாய் இருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முன்விளையாட்டை ஊக்குவித்துள்ளார்கள் என்பதை நபிமொழிகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. ஹளரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்; "நான் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வினவினார்கள், 'உமக்குத் திருமணமாகிவிட்டதா?' அதற்கு நான் 'ஆம்' என்றேன். '(அவள்) கன்னிப்பெண்ணா ஏற்கனவே மணமானவளா?' எனக் கேட்டார்கள். 'ஏற்கனவே மணமானவள்' என்றேன். "ஏன் கன்னிப்பெண்ணை மண முடித்திருக்கக்கூடாதா? அப்போது நீ அவளுடன் விளையாடலாம், அவள் உன்னுடன் விளையாடலாம், அல்லவா?" எனக் கூறினார்கள். (ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1991)

இமாம் திர்மிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை செல்லும் ஒரு சுய அறிவிப்புத் தொடர் மூலம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறார்கள்;

"ஒரு முஸ்லிம் விளையாடும் எல்ல விளையாட்டுக்களும் வீணானவையே - அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன் மனைவியுடன் விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத் 17433) இங்கு திர்மிதீயின் சொற்களே இடம்பெற்றுள்ளன.

பல விளையாட்டுக்களை வீணானவை என்று சொல்லும் மார்க்கம் மனைவியுடன் விளையாடுவதை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் அதை ஊக்குவிக்கவும் செய்கிறது என்பதை அறியும்போது தாம்பத்ய வாழ்க்கையை செழித்தோங்கச்செய்யும் அத்தனை வாசல்களையும் இஸ்லாம் திறந்து விட்டிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ!.

புகழ்பெற்ற சட்டமேதை இமாம் இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடும் ஒரு வாசகத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "நீர் அனுபவிக்கும் ஆசையை அவளும் அனுபவிக்கும் வரை புணர்ச்சியைத் தொடங்காதீர். ஏனெனில், அவளுடைய ஆசை நிறைவேறுமுன் உம்முடைய ஆசை நிறைவேறிவிடக்கூடும்." (ஆதாரம்: அல்-முக்னீ :136)

மேற்கூறிய சில அறிவிப்புகள் தம்பதியருக்கு இடையில் நிகழும் முன்விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: "புணர்ச்சிக்குமுன் முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)". (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)

முன்விளையாட்டு தொடர்பான பழக்கங்களை, சரியானவையல்ல, மார்க்க ஒழுங்குக்கு முரணானவை என்று சிலர் கருதுவது தவறாகும். அவர்கள், இச்செயலை துறப்பது இறைபக்தி என எண்ணுகின்றனர். ஆனால், இது முழுக்க முழுக்கத் தவறாகும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட இறைபக்தியும், தூய்மையும், இறையச்சமும் கொண்டவர் உண்டோ!. ஆயினும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்விளையாட்டை ஊக்குவித்தது மட்டுமின்றி, தம் மனைவியருடன் அதில் ஈடுபடவும் செய்தார்கள். எனவே இதுபோன்ற செயல்களைத் துறப்பது இறைபக்தியின் அடையாளமல்ல. ஆம், இஸ்லாத்தில் துறவறத்திற்கு வேலையில்லை. இஸ்லாம் ஓர் நடைமுறை மார்க்கம். அது தன்னைப் பின்பற்றுவோர் தங்களின் பாலியல் தேவைகளை நியாயமான முறையில் நிறைவுசெய்துகொள்ள அனுமதிக்கிறது.

முன்விளையாட்டு பல வடிவங்கள் எடுக்கலாம். ஒவ்வொரு தம்பதியரும் வேறுபட்டவர்கள் என்பதால், தங்களுக்கு எவை கிளர்ச்சியூட்டும் விதமாக உள்ளன என்பதை தம்பதியரே கண்டறிந்துகொள்ள விட்டுவிடுவதே சிறந்ததாகும்.

முத்தத்தைக் கொண்டு முன்விளையாட்டை துவங்குங்கள் : 

முன்விளையாட்டின் துவக்கம் முத்தமாக இருக்கட்டும். ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது முன்விளையாட்டின் மிகவும் அவசியமானதும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியுமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "உங்களில் எவரும் மிருகத்தைப் போன்று தன் மனைவியை அணுகக்கூடாது. அவர்களுக்கு இடையில் தூது அனுப்புதல் வேண்டும். "அல்லாஹ்வின் தூதரே! (இங்கே) தூது என்பது யாது?" என வினவப்பட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முத்தமும், இன்சொற்களும் (கொண்ட முன்விளையாட்டு) என பதிலளித்தார்கள்." (ஆதாரம்: இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இத் ஹாஃப் அல்-ஸாதாத் அல்-முத்த்கீன் பிஷரஹ் இஹ்யா உலூம் அல்-தீன் 6:175)

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிரார்கள்: "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், "நான் ஆயிஷாவிடம் 'அது நீங்களாகத்தான் இருக்கும்?' என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்:." (ஆதாரம் ஸுனன் திர்மிதீ 86, ஸுனன் அபூதாவூத் 181, சுன்பன் அந் நஸாஈ 170)

இந்த ஹதீஸிலிருந்து, ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது விரும்பத்தக்கது என விளங்குகிறது. மேலும் அது, ஒருவர் தம் வீட்டிற்கு வரும்போதும், வெளியே போகும்போதும் தம் மனைவியை முத்தமிடுவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இது அல்லாஹ்வின் அன்புத் தூதரின் வழிமுறையாகும்.

இங்கே, இல்லறத்தம்பதிகளிடம் நாம் ஒரு வினா எழுப்ப வேண்டிய அவசியமிருக்கிறது. உங்களில் எத்தனைப் பேர் வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது தனது துணைக்கு முத்தமிட்டுச் செல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள்? புதிதாக திருமணமான சில காலங்களுக்கு கணவன் வீட்டைவிட்டு வெளியில் புறப்படும்போது கதவருகில் எவரும் பக்கத்தில் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவசர அவசரமாக முத்தமிட்டு விடைபெறும் இந்த வழக்கம் மிகவும் சுவையானதுதான், இல்லறத்தின் சுவையை இன்னும் கூட்டக்கூடியதுதான். ஆனால் வெளியில் செல்வதற்கு முன்னும், வீட்டிற்கு வந்த பின்னும் தனது துணைக்கு முத்தமிடுவது சுன்னத்தான ஒரு செயல் என்பது நம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்?! இதுவும்கூட நபிவழிதான் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டுவிட்டீர்களா? அல்ஹம்துலில்லாஹ்.

இந்த IN - OUT முத்தமிடும் சுன்னத்தை தம்பதிகள் ஃபாலோ பண்ணிக்கொண்டு வருவார்களானால் "தலாக்" தலைதெறிக்க ஓடாதா...! நபிவழி எனும்போது நன்மையைப்பற்றிக் கேட்பானேன். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? கரும்பு தின்னக்கூட கூலி கொடுக்கின்ற மார்க்கம் தான் இஸ்லாம். இல்வாழ்க்கையை இன்பமயமாக்கும் அத்தனை விஷயங்களுக்கும் இஸ்லாம் இனிதாக வழி காட்டுவதைக் கண்டு பூரித்துப்போகிறீர்களா? ஆம்! இவையனைத்தும் இறைவன் வழங்கியிருக்கும் அனுமதியெனும்போது; தம்பதியர்கள் தங்களுக்குள் இன்பத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிய அல்லாஹ்வுக்கு அதிகமதிகமாக நன்றி செலுத்தக் கடமைபட்டுள்ளார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கரும்பு தின்பதற்கும் கூலி அந்த வாய்ப்பை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது அதற்கும் அதிகமதிகமான கூலி... ஸுப்ஹானல்லாஹ். எவ்வளவு அற்புதமான மார்க்கத்தை அந்த ஏக இறைவன் மனித வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறான்! நன்றி செலுத்துவோம் நன்றி செலுத்துவோம், அந்த அருளாளனுக்கு நன்றி செலுத்துவோம்! கரும்பாக இனிக்கும் விஷயங்களைத் தொடர்வோம்....

முழு நிர்வாணமாக இருப்பதற்கும் அனுமதியுண்டா? 

துணையின் உடலுறுப்புக்களை தடவி விடுவதும், வருடிவிடுவதும் முன்விளையாட்டின் ஒரு பகுதியே. அதுபோன்று மனைவியின் மார்பை கரங்களாலும் உதடுகளாலும், வாயாலும் விளையாடுவதும் அனுமதிக்கப்பட்டதே. மனைவியை ஒருவரையொருவர் நிர்வாணமாகப் பார்த்துக்கொள்வதுகூட தவறான செயலல்ல. இதுவும்கூட தம்பதிகளின் உணர்ச்சிகளைத்தூண்டும் முன்விளையாட்டின் ஒரு அங்கமாகக்கொள்ளலாம்.

மறைவான பகுதிகளைப்பாத்தல் :

தம்பதியர் ஒருவர் மற்றவரின் பாலுறுப்பைப் பார்க்கும் விஷயத்திலும், பெரும்பாலும் எல்லா சிந்தனாவழிகளும் அனுமதி அளிக்கின்றன.

திருமண இணைவு மூலம் கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் உடலின் பாலுறுப்புக்கள் உட்பட எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பார்ப்பதற்கு ஷரீஆ அனுமதிக்கிறது.

பஹ்ல் இப்னு ஹகீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் பாட்டனாரிடமிருந்து (முஆவியா இப்னு ஹய்தா) தம் தந்தை தம்மிடம் அறிவித்ததாகக் கூறுகிறார். நான் (முஆவியா) கேட்டேன், "அல்லாஹ்வின் தூதரே! எங்களின் மறைவு பாகங்களில் எவற்றை வெளிக்காட்டலாம், எவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?" இதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்கள் மறைவு பாகங்களை (அவ்ரா) காத்துக்கொள்ளுங்கள். உங்களின் மனைவி அல்லது அடிமைப் பெண்களைத் தவிர... " என்று கூறினார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2769, ஸுனன் இப்னு மாஜா 1920)

இமாம் அப்துர் ரஸ்ஸாக் அல்ஸன ஆனி ரஹ்மதுல்லாஹி அலைஹி தம் அல்-முஃஜம் அல்-கபீரிலும், ஸஅத் இப்னு மஸ் ஊத் அல்-கிந்தி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீஸைப்பதிவு செய்துள்ளார்கள்.

உஸ்மான் இப்னு மஃஸூன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி என் மறைவு பாகங்களைப் பார்ப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஏன் அப்படியிருக்க(வெட்கப்பட) வேண்டும்? அல்லாஹ்தான் உங்களை அவர்களுக்கு ஆடையாகவும், அவர்களை உங்களுக்கு ஆடையாகவும் ஆக்கியுள்ளானே!..." (நூல்: அல்-முஸன்னஃப் 6:85, அல்-ம்ஃஜம் அல்-கபீர் 9:37)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: "உங்கள் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளுங்கள், உங்கள் அடிமைப்பெண் அல்லது மனைவியைத் தவிர". மேலும் மனைவியின் மறைவுப்பாகங்களைத் தொடுதல், உடலுறவு கொள்ளுதல் இரண்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, வெறுமனே அதைப் பார்ப்பதற்கு இன்னும் கூடுதல் அனுமதியுண்டு எனும் அடிப்படையையும் அவர் முன்வைக்கிறார்கள். (நூல்: அல்-ஹிதாயா 4:461)

அல்-ஃபதாவா அல் ஹிந்திய்யாவில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. "உடலுறவின் போது கணவன் தன் மனைவியின் பாலுறுப்பை பார்ப்பது சிறந்தது. ஏனெனில், அதனால் முழு இன்பமும் நிறைவும் கிடைக்கும்.". (நூல்: அல்-ஃபதாவா அல் ஹிந்திய்யா 5:328)

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ‘அதா’வு என்பவர் இதுபற்றி நேரடியாக கேட்டபோது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை மேற்கொள் காட்டி ஹாபிழ் இப்னு ஹஜர் இஸ்கலானி இமாம் அவர்கள் "ஆண் தன் மனைவியின் மர்மஸ்தலங்களையும் பெண் தன் கணவனின் மர்மஸ்தலங்களையும் பார்க்கலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும் என்று குறிப்பிடுகிறார்கள். (பத்ஹுல் பாரி, பாகம்-1, பக்கம்-290)

"மறைவுப் பாகங்களைப் பார்ப்பதால் கண்கள் குருடாகிவிடும்" எனும் ஹதீஸ் பலவீனமானது அல்லது புனையப்பட்டது ஆகும் என இமாம் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் இப்னு அல்-ஜவ்ஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற ஹதீஸ் அறிஞர்கள் கருதியுள்ளனர். (ஆதாரம்: முக்னி அல்-முஹ்தாஜ் 3181)

முன்விளையாட்டின் ஒருபகுதியாக, முழுமையான உடலுடன் உடல் சேர்தலுக்கும் அனுமதியுண்டு. அதாவது, ஒருவர் தம் துணைவரின் உடலைத் தம் உடலோடு முழுமையாக இணைக்கலாம். இதில் கட்டியணைத்தல், மோகமாகப்பிடித்து நீவுதல், கொஞ்சுதல், ஒருவர் மீது ஒருவர் புரளுதல், துணைவரின் உடலோடு தன் உடலைத் தேய்த்தல், முற்றிலும் துணைவர் மீது ஏறிப்படுப்பது ஆகிய எல்லாம் அடங்கும். இவற்றை ஆடையுடனோ, ஆடையின்றியோ செய்வதற்கு அனுமதியுண்டு.

திருமணம் மூலம் ஒன்றுசேர்வதன் வாயிலாக தம்பதியர் ஒருவருக்கொருவர் இன்பம் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு எனும் கோட்பாட்டின்படி தம்பதியர் இருவரும் தங்கள் பாலுறுப்புகளை ஒருவர் மற்றவரின் உடல் மீது தேய்த்து பரவசநிலை அடைந்துகொள்ளவும் அனுமதியுண்டு. எனினும் அதற்கான தேவை இல்லாதிருப்பின், அதைத் தவிர்ப்பது மேன்மையானது.

அடுத்து கணவனும் மனைவியும் நெருக்கம் பெறுவதற்காகவும் முன்விளையாட்டுக்காகவும் ஒன்றுசேர்ந்து குளிப்பதும், நீராடுவதும் அனுமதிக்கப்பட்டதே. ஒன்றுசேர்ந்து நீராடுவதை அனுமதிக்கிறது எனும்பொழுது இதுபற்றிய மற்ற விஷயங்களை இன்னும் விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கொள்ளலாம்.


மனைவியின் மார்பகங்களை சுவைகலாமா? அவற்றிலிருந்து பால் அருந்தலாமா?

மார்பகங்களைச் சுவைத்தல் போன்ற காரியங்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. பால் இருப்பின் அது குழந்தைக்குரிய உணவு என்பதால் அதை தவிர்த்துக் கொள்ளலாம் என்று தான் கூறமுடியுமே தவிர. ஹராம் என்று கூறிவிட முடியாது. பால் குடித்து விட்டால் உறவு மாறி விடும். குழந்தை தாய் உறவு என்றாகி விடும் என்று சிலர் கூறுவர். இது தவறு என்பதை இந்த ஹதிஸ் முலம் நாம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

பால்குடி பருவத்தில் இரைப்பையைச் சென்றடையும் விதமான பாலுட்டுதல் தவிர மற்றவை (திருமண உறவை) ஹராமாக்காது. இது பால்குடி மறக்கடிக்கப் படுவதற்கு முன்பு நிகழ வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மூஸாமா (ரலி) நூல்: திர்மிதி.

மேலும் அல்குரானின் இந்த வசனமும் இதற்க்கு சான்று

(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குரான் 2-233)

மற்றும்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல்குரான் 31-14)

இந்த இரண்டு வசனங்கள் படி பால்குடி வயது என்பது அதிகபட்சம் இரண்டு வருடங்கள் என்பது விளங்குகிறது. எனவே அந்த வயதுக்கு மேல் உள்ள ஒருவன் தன் மனைவியிடம் பால் குடித்துவிட்டால் மகனாகி விடுவான் என்று சொல்வது தவறு.

எனவே கணவன் தனது மனைவியின் மார்பகங்களை சுவைக்கலாம் இதற்க்கு இஸ்லாத்தில் தடை இல்லை.


மலப்பாதையில் உடலுறவு செய்யலாமா ? 

மலத் துவாரத்தில் உடலுறவு கொள்வதை பின்வரும் ஹதீஸ்கள் கடுமையாகக் கண்டிக்கின்றன. எனவே இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட(ஹராமான) செயல் ஆகும்

யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூதாவூத் 2162

யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ மலத் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 1165


நோன்பின் இரவில் உடலுறவு கொள்ளலாமா ? 

நோன்பின் பகலில் தான் உடலுறவு கொள்ளக் கூடாதே தவிர இரவில் தாராளமாக, உடலுறவில் ஈடுபடலாம். சிலர் ரமலான் இரவிலும் கூட உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று கருதி ஒதுங்கியே வாழ்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். இரவில் உடலுறவில் ஈடுபடலாம் என்பதற்கு பின்வரும் இறைவசனம் சான்றாகும்.

அல்லாஹ் கூறுகிறான்.

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குரான் 2:187 )


உடலுறவின் போது பேசலாமா?

உடலுறவில் ஈடுபடும் போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதிகமாக பேச கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்க்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

உடலுறவு கொள்ளும் போது அதிகம் பேசாதிர்கள். பேசினால் ஊமைத் தன்மை (அல்லது) திக்கு வாய் ஏற்படும்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸை இப்னு அசாகிர் அவர்கள் பதிவு செய்து உள்ளார்கள். ஆனால்.!

இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும். இதில் ஸுகைர் இப்னு முஹமது அல்குராசனி என்ற ஹதீஸ்களை இட்டுக்கட்டி சொல்லக்கூடியவர் இடம் பெறுகிறார். எனவே இது நபி(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்டதாகும்.

உடலுறவின் போது பேசுபவர்களே அதிகம். பேசுபவர்கள் ஊமையாகிவிடுவர். திக்குவாய்களாகி விடுவர் என்பது உண்மையானால் ; உலகில் இன்று பலர் அந்த நிலைக்கு வந்து இருக்க வேண்டும். இப்படி ஆகவில்லை என்பதிலிருந்தே இது ஒரு இட்டுகட்டப் பட்ட செய்தியே என்பது தெளிவாகிறது..

மேலும் இமாம் இப்னு ஸீரின்(ரஹ்) (மரணம் ஹிஜ்ரி 110) அவர்களிடம் “உடலுறவின் போது காம இச்சையை வெளிப்படுத்தும் விதமாக பேசலாமா” எனக் கேட்கப்பட்டபோது “காமமாக பேசிக்கொண்டு ஈடுபடக்கூடிய உடலுறவுதான் அதி சுகம் தரக்கூடியது” எனப் பதிலளித்தார்கள் (நவாதிர் அல்அய்க் அஸ்ஸுயூத்தி பக்கம் 48)

எனவே உடலுறவின் போது பேசலாம்.. அதிலும் காதல் மொழியிலேயே பேசலாம், தவறேதும் இல்லை.


மர்மஸ்தானத்தை சுவைக்கலாமா?

இது சம்மந்தமாக பல தம்பதிகளிடையே பலத்த சந்தேகம் உள்ளது. மர்மஸ்தான உறுப்புகள் அசிங்கமான உறுப்புக்கள் என்பது பலரது எண்ணம். ஆனால் அவை அசிங்கமான உறுப்புகள் அல்ல. உடலின் இதர உறுப்புக்கள் போன்று தான் மர்ம உறுப்பும்.

தல்க் இப்னு அலி(ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் உளுச் செய்வது அவசியமா ? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவும் உனது உறுப்புகளில் ஒன்று தானே என நபி(ஸல்) பதில் அளித்தார்கள். (நூல் : திர்மிதி )

எனவே மர்ம உறுப்பை அசிங்கமாக கருத வேண்டியது இல்லை. கணவனும், மனைவியும் இச்சை உணர்வை அதிகப்படுத்த இதர உறுப்புகளில் சரச விளையாட்டுகளில் ஈடுபடுவது போல மர்ம உறுப்பையும் பயன்படுத்துவதில் தவறில்லை.

அதே வேளையில் உடலுறவில் ஈடுபடும் முன் இச்சையின் அறிகுறிக்கு காமநீர் வெளிப்படும் இந்த காமநீர் அசுத்தமானது என்பதை ஹதிஸ் முலம் புரிய முடிகிறது.


அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா) என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இது குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 508., அத்தியாயம்: 3. மாதவிடாய்)


காமத்தின் சூழல் காரணமாக தம்பதியர் மர்மஸ்தானத்தை சுவைக்கும் செயலில் ஈடுபட்டாலும் காமநீர் அசுத்தமானது என்பதை புரிந்து அசுத்தத்தை உட்கொள்ளுவது சரி அல்ல என்பதையும் புரிந்து கொள்ளல் அவசியமாகும். 

எனினும் ஆணின் மர்மஸ்தானத்திலிருந்து வெளிப்படும் விந்து அசுத்தமானது அல்ல என்பதை பின்வரும் ஹதீஸ்களில் இருந்து விளங்கி கொள்ளலாம்:

அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 485., அத்தியாயம்: 2. தூய்மை)

அஸ்வத் (ரஹ்) மற்றும் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
இந்திரியம் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகையில், அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டிவிடுவேன் என்று குறிப்பிட்டார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 486., அத்தியாயம்: 2. தூய்மை)


மாதவிடாய்ப் பெண்ணுடன் உடலுறவு கூடுமா? 

பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவளின் கணவன் அவளிடம் உடலுறவு கொள்ளக் கூடாது. இந்த மாதவிடாய் என்பது குறைந்தது முன்று நாட்கள் முதல் அதிகபட்சமாக பத்து நாட்கள் காரை கூட ஏற்படும் இந்த நாட்களில் உடலுறவு வைத்து கொள்ளக் கூடாது. 

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: 

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்குரான் : 2:222)

அனஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் விட்டில் சேர்த்து அமர மாட்டார்கள்: பருக மாட்டார்கள். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்பாது "மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் திட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்" அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் பொழுது "உடலுறவை தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்" என்றார்கள்.
நூல்: முஸ்லிம்

திருமறை வசனமும் ஹதிஸும் மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உடலுறவு கொள்வதை வன்மையாகக் கண்டிக்கின்றன. மாதவிடாய் நீங்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். 

எனினும் மாதவிலக்குக் காலத்தில் மனைவியை அணைத்துக் கொள்ள, முத்தமிட அனுமதி உள்ளது; உடலுறவு மட்டும்தான் விலக்கப்பட்டுள்ளது என்பதை மேலே குறிப்பிடப்பட்ட யூதர்கள் ஹதீஸ் மற்றும் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து உறுதியாக அறியலாம்:



''எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்'' அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அன்னை மைமூனா (ரலி)

 நூல்கள்: புகாரி, முஸ்லிம்.



நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது, கணவன் அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்குஆயிஷா (ரலி) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்றவை அனைத்தும் (அனுமதிக்கப்பட்டுள்ளன)'' என்றுபதிலளித்தார்கள். (தாரிமீ)





உடலுறவு செய்து முடித்த பின்பு மறுமுறை உடலுறவு செய்வதற்கு முன்பு உளு செய்ய வேண்டுமா?



ஒரு தடவை உடலுறவு கொண்ட பிறகு மறுமுறை உடலுறவு கொள்ள ஒருவர் உளுச் செய்து கொள்ள வேண்டும்.



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:



"தம் மனைவியுடன் ஒருவர் உறவு கொண்டு விட்டு மீண்டும் உறவு கொள்ள விரும்பினால் அவர் உளுச் செய்து கொள்ளட்டும்"



அறிவிப்பாளர் : அபூஸயித் அல்குத்ரீ(ரலி) நூல் : முஸ்லிம்.



எனவே ஒரு தடவைக்குப் பிறகு மீண்டும் உறவு கொள்ள விரும்புவோர் உளு செய்தல் நபிவழியாகும். 





இறுதியாக.. 



கணவன் மனைவி தாம்பத்தியம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் உறவாகும். இருவரும் ஒருவருக்கொருவர்அந்தரங்கங்களை அறிந்து கொண்டு பின்னர் அதை வெளியில் பரப்பித் திரிவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.



கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய அந்தரங்க) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானாவன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)


https://youtu.be/CuQi6wXI9uo

கணவன் மனைவி,

கணவன் மனைவி காதல்,

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً


நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். திருக்குர்ஆன்:- 30:21


வாழ்க்கைக்கு கணவன்–மனைவி உறவு முக்கியமானது. குடும்பத்திற்கு அடித்தளமாக இருந்து தாங்குபவர்கள் கணவன்–மனைவி தான் என்று கூறலாம். ‘கணவன் மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் இருக்கின்றனர்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. 

ஆடைகள் மனிதனின் வெட்கத்தலங்களை மறைத்து அவர்களை பாதுகாக்கின்றது. அதுபோல ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

ஒருவருக்கொருவர் 


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கணவனுடன் அன்பால் கட்டிப்புரண்டு அவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றிக் கிடப்பவளை அல்லாஹ் நேசிக்கின்றான். நூல்:  தைலமீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்புடன் பார்த்துக் கொண்டால் இறைவன் இவர்கள் மீது தன் அருளான பார்வையை செலுத்துகிறான். கணவன் மனைவியின் கையை அன்புடன் பிடித்தால் இருவரின் விரல்களுக்களிடையே அவர்களின் பாவங்கள் கொட்டிவிடுகிறது. அறிவிப்பாளர்:- அபூசயீது அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனைவிக்கு சிறந்தவனே, மனிதனில் சிறந்தவன். நான் என் மனைவிக்கு சிறந்தவனாக இருக்கிறேன். கண்ணியத்திற்குரியவனே, பெண்களை கண்ணியமாக நடத்துவான். இழிவானவன் பெண்களை இழிவாக நடத்துவான். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அசாகிர்

மனைவியை கண்ணியப்படுத்துபவன். கண்ணியத்திற்குரியவன். அவளை  இழிவுப்படுத்துபவன். இழிவுக்குரியவன் என்பதே இதன் பொருள்.                                                                                                                                      

அண்ணல் நபி (ஸல்)அவர்கள் அவர்கள் கூறினார்கள்.                                ( لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ ) இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறைநம்பிக்கையுள்ள பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்பிகொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2915                                   


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்புடன் பார்த்துக் கொண்டால் இறைவன் இவர்கள் மீது தன் அருளான பார்வையைச் செலுத்துகிறான். கணவன், அவள் கையை அன்புடன் பற்றினால் இருவரின் விரல்களிடையே அவர்களின் பாவங்கள் உதிர்ந்துவிடுகிறது. அறிவிப்பாளர்:-  அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ                                   


மனைவியின் சில குணங்கள் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவளின் சில குணங்கள் நமது இதயத்தைக் கவரக் கூடியதாக இருந்து விடலாம். எனவே நமக்கு பிடிக்காத அவளின் சில குணங்களைக் கண்டு நமது உள்ளத்தில் அவளைப் பற்றி நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.                                               


அவளிடம் உள்ள மற்றொரு நல்ல அம்சத்தைக் கொண்டு கணவன் திருப்தி அடைய வேண்டும். எடுத்துக் காட்டாக, மனைவியிடம் முன் கோபம் இருக்கலாம். அதே நேரத்தில், அவள் பத்தினியாக இருப்பதில் தீவிரமாக இருப்பாள்; அல்லது கணவனின் நலனில் அக்கறை உள்ள நல்ல தோழியாக இருப்பாள்; அல்லது நல்ல அழகியாக இருப்பாள். 


வழங்கப்பெற்ற வரம்  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنِّي قَدْ رُزِقْتُ حُبَّهَا ) (தமது ஆருயிர் மனைவி) "கதீஜா (ரலி) அவர்களின் அன்பு எனக்கு  வழங்கப்பெற்ற வரம் ஆகும்" என்று கூறினார்கள். நூல் முஸ்லிம்-4821


இதுதான் இந்த நபிமொழியின் கருத்து என நபிமொழி விரிவுரையாளர் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 


இருபத்தைந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை  நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்திவந்தார்கள்.


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் தோழிகளுக்கு  அதிலிருந்து ஒரு பங்கை அன்பளிப்பாக அனுப்பத் தவறியதில்லை. நூல்:- புகாரீ-3816, முஸ்லிம்-4820, திர்மிதீ-3800



அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا) உங்களில் தம் துணைவியரிடம் நற்பண்புகளுடன் நடந்துகொள்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1082, முஸ்னது அஹ்மது


அண்மையில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனைவியுடன் அதிகமாகப் பேசுவது மனிதனின் இயத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனைவியுடன் பேசுவதால் 80% பேருக்கு மன உளைச்சல் குறைவதாகவும், 90% பேருக்கு மாரடைப்பு குறைவதாகவும், அதனால் ஆயுள் கூடுவதாகவும் அந்த ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவியின் அன்பு                                                                                


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நாட்களில் நோயுற்று மரண  வேதனையை அனுபவித்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்து சகித்து கொள்ள முடியாத அண்ணலாரின் அன்பு மனைவி அன்னை சஃபியா (ரலி) அவர்கள் "யா அல்லாஹ்! நீ அண்ணலாரை என்ன வேதனையளிக்க நினைக்கிறாயோ அதனை நீ எனக்கு கொடுத்து விடு! அண்ணலாரின் புனித ஆன்மாவை நீ இலேசாக கைப்பற்றிக் கொள்!" என்று பிரார்த்தித்தார்கள். 


இதனை அல்லாஹ் அண்ணலாருக்கு அறிவித்தவுடன், அண்ணலார் சஃபியா (ரலி) அவர்களை அழைத்து, "ஓ சஃபியா! எனக்கு சொர்க்கத்தின் நாற்பது ஆண்களின் சக்தி வழங்கப்படிருக்கிறது. வேதனையும் கூட நாற்பது ஆண்கள் தாங்கும் அளவுக்குத்தான் வழங்கப்படும் என்பதை விளங்கிக் கொள்! எனவே நீ எனக்காக பிரார்த்திப்பதாக இருந்தால் இறைவா! இவர்களுடைய வேதனையைக் குறைப்பாயாக! என்று பிரார்த்திருக்கலாமே" என்று கேட்டுக் கொண்டார்கள்.


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெண்களில் சொர்க்கத்திற்குரியவள் யாரென்றால், கணவனிடம் அன்பாக இருப்பாள். அவனுக்காக அதிகமான குழந்தைகளை பெற்றெடுப்பாள். அவனை நன்றாக கவனித்து கொள்வாள். அவன் கோபமடைகின்றபோது அவள் அவனிடம் வந்து தன் கையை அவனுடைய கையொடு வைத்து நீங்கள் மகிழ்ச்சியாகும் வரை என் கண்கள் தூங்காது என்று கூறி அவனை சாந்தப்படுத்துவாள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அசாகிர் 


ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது. எனது அத்தைகளுள் (குப்பி) ஒருவர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தார். அண்ணலார் அவரிடம் "பெண்ணே! உனக்குக் கணவன் இருக்கின்றாரா? என்று வினவினார்கள். அவர் "ஆம்!" என்று பதிலளித்தார். அண்ணலார் நீ எவ்வாறு அவரை நடத்துகிறாய்? என்று வினவினார்கள். "என்னால் இயன்ற வரை நன்றாக நடத்துகிறேன். (ஹலாலான) அவருடைய எந்த வேண்டுதலையும் நான் மறுக்கமாட்டேன்" என்று பதிலளித்தார். 


பிறகு அண்ணலார் "அவருடன் உன் நிலை எந்தளவு இருக்கிறது என்று நீ சோதித்துக் கொள்! ஏனென்றால் அவரே உன்னுடைய சொர்க்கத்திற்கு(ச் செல்லும்)  வழியாகலாம். அல்லது  நரகத்திற்கு(ச் செல்லும்) வழியாகலாம்". நூல்:- முஸ்னது அஹ்மது, ஹாகிம்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الْجَنَّةَ ) எந்தப் பெண் தன் கணவர் தன்மீது மனநிறைவு கொண்டிருக்கும் நிலையில் இறக்கிறாளோ அந்த பெண் சொர்க்கம் செல்வாள். அறிவிப்பாளர்:- உம்மு சல்மா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1081


விட்டுக் கொடுக்கமுடியாது 


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியர்களில் சிலர் (நான் உட்பட) குடும்பம் நடத்துவதற்கு தரப்படும் தொகை போதவில்லை. அதைவிட கொஞ்சம் கூடுதலான தொகை வேண்டும் என்று கூறி அண்ணலாரை தொந்தரவு செய்தனர். அதனால் அண்ணலார் தம் துணைவியர்களை விட்டும் ஒரு மாத காலம் பிரிந்திருந்து விட்டு அம்மாத இறுதியில் என்னிடம் வந்தார்கள். 


பிறகு என்னிடம் ( يَا عَائِشَةُ إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلاَ عَلَيْكِ أَنْ لاَ تَسْتَعْجِلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ ) "ஆயிஷா! உன்னிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைப்பற்றி நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து) விடாதே!" என்று கூறிவிட்டு, 


"நபியே! உங்களுடைய மனைவிகளிடம் நீங்கள் கூறுங்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தை மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன். 


அன்றி நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நன்மையைக் கருதுபவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார் செய்து வைத்திருக்கிறான். (திருக்குர்ஆன்:- 33:28,29) ஆகிய வசனங்களை எனக்கு ஓதிக் காட்டினார்கள். 


( فَقُلْتُ فِي أَيِّ هَذَا أَسْتَأْمِرُ أَبَوَيَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ ) “நான் (அண்ணலாரிடம் "உங்கள் உறவை முறித்துக்கொள்ளும்) இந்த விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்கப்போகிறேன்? நான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறு உலகத்தையுமே விரும்புகிறேன்" என்று கூறினேன்.  நூல்:- முஸ்லிம்-2952, திர்மிதீ-3118 


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை பாத்திமா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! ஆயிஷா விஷயத்தில் (தாங்கள் அன்பு காட்டுவதைப் போன்று உங்களின் பிற மனைவியரிடமும் அன்பு காட்டி) நீதத்தோடு நடந்துகொள்ளும் வேண்டும் என உங்களின் பிற மனைவியர்கள் விரும்புகிறார்கள்" என்று கூறினார்.
 

அப்போது அண்ணலார், ( أَيْ بُنَيَّةُ أَلَسْتِ تُحِبِّينَ مَنْ أُحِبُّ ) "என் அன்பு மகளே! நான் நேசிப்போரை நீயும் நேசிப்பாய் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம் (தாங்கள் நேசிப்போரை நானும் நேசிக்கிறேன்)" என்று கூறினார். அண்ணலார், (என்னைக் காட்டி) ( فَأَحِبِّي هَذِهِ ) "அப்படியானால், இவரை நேசிப்பாயாக!" என்று கூறினார்கள். அண்ணலார் இவ்வாறு கூறியதைக் கேட்டு  பாத்திமா (ரலி) அவர்கள் (அமைதியாக) அங்கிருந்து சென்று விட்டார்கள்.   நூல்:- நஸாயீ-3883

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களைப் பற்றி பிறர் குறை கூறுவதையும், தன்னுடைய மனைவியர்களில் ஒருவருக்கொருவர் குறை கூறி கொள்வதையும் விரும்ப மாட்டார்கள். காரணம் அண்ணலார் தனது மனைவியர்களில் அனைவரையும் மிகவும் நேசித்தார்கள்.


மறக்க முடியவில்லை 


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (இல்லத்துக்குள்) வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே அண்ணலார் (கதீஜா -ரலி அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, "இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்" என்று கூறினார்கள். 


உடனே நான் ரோஷமடைந்து, "எப்போதோ மரணமடைந்துவிட்ட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷி மூதாட்டியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக அவரைவிட சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்") என்று கேட்டேன்.                    
                                                                                            

இதைக் கேட்டதும், அண்ணலாரின் முகத்தில் தெரிந்த கடும் கோபத்தைக் கண்டு நான் வருந்தி, அல்லாஹ்வே உன் தூதரின் கோபத்தை நீ நீக்கிவிட்டால் நான் இனி கதீஜா குறித்து நல்லதை மட்டுமே கூறுவேன் என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன். அண்ணலார் என் வருத்தத்தைக் கண்ட போது சொன்னார்கள். எப்படி அதை சொன்னாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களெல்லாம் என்னைப் பொய்ப்படுத்தி மறுத்துவிட்டபோது, அவர் என்னை நம்பினார். மக்களெல்லாம் என்னைத் துரத்திவிட்டபோது, அவர் எனக்கு புகலிடம் தந்தார். அவர் மூலமாக மட்டுமே நான் சந்ததி கொடுக்கப்பட்டேன்.


மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மாதமாக காலையும், மாலையும் என்னிடம் இதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ- 3821, முஸ்னது அஹ்மது, உம்தத்துல் காரீ, அத்துலாபீ- அத்துர்ரியத்துத் தாஹிரா
 

கதீஜா (ரலி) அவர்கள் இறந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைகிறார்கள். அங்கு குழுமியிருக்கிற அனைவரும் அண்ணலாரை தங்கள் வீட்டில் விருந்தினராக தங்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தனர். அண்ணலாரோ தனது அன்பு மனைவி கதீஜா (ரலி) அவர்களின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மண்ணறைக்கு அருகே எனக்குக் கூடாரம் அடியுங்கள்’ என்று கூறினார்கள். 


பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தனது அன்பு மனைவி கதீஜா (ரலி) அவர்களின் மீது அண்ணலார் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது இந்நிகழ்வு. 

அலீ (ரலி) அவர்களிடம்  ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரின் மகளுடன் உங்கள் தொடர்பு எப்படி இருந்தது? விவரியுங்கள்" என்று கேட்டார். அலீ (ரலி) அவர்கள், "எனது மணப்பெண்ணும் மன அமைதியும் முஹம்மத் (ஸல்) அவர்களின் மகளே. அவளே எனது வாழ்வு. அவளே எனது மனைவி. அவளின் சதைத் துண்டு என் சதையுடனும் இரத்தத்துடனும் கலந்து விட்டது" என்று கூறினார்கள்.

ஒருமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து மருதாணி வைப்பதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன? என்று வினவினார். அன்னையவர்கள் "நான் நேசித்த ஆன்மாவிற்கு (நபிகள் நாயகம் - ஸல் அவர்களுக்கு) அதன் நிறம் மிகவும் பிடிக்கும். ஆனால் அதன் வாடை ஒத்துக்கொள்ளாது. இருப்பினும் அது தடுக்கப்பட்டதல்ல. (ஹராமல்ல) நீங்கள் பயன்படுத்தலாம்" என்று பதிலளித்தார்கள்.

அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம் குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கணவன்–மனைவி இடையே நெருக்கத்தையும், மன பிணைப்பையும் ஏற்படுத்தும்.

கால மாற்றத்தினூடே இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகள், கருத்து மாறுபாடுகள் காலப்போக்கில் பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. 

இதில் கோபம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எதற்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்று வரையறை இல்லாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட கோபத்தில் வார்த்தைகளை விட்டு மீண்டும் அதை அள்ள முடியாமல் பிரிந்து வாழ்கிறார்கள் பலர். 

நமக்கு தூரமானவர்களிடமிருந்து எளிதில் நாம் நல்ல பெயர் வாங்கி விடுகிறோம். அவர்கள் நமது திறமை, ஆற்றல், செல்வம், பதவி ஆகியவற்றை வைத்து நம்மை எடை போடுகிறார்கள். எனவே அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. 

ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் தான் நம்மைப் பற்றி நன்கு அறிவார்கள். நமது நிறைகளையும், குறைகளையும் தெளிவாக அறிவார்கள். நமது கணவன், மனைவி, பிள்ளை, பெற்றோர், உறவினர், அண்டை வீட்டினர், நண்பர்கள் தரும் சான்றிதழ்களே உண்மையானது. ஊர் மக்கள் மெச்சும்படியாக வாழ்வது இருக்கட்டும்; உன் மனைவி மெச்சும்படியாக வாழ்ந்து காட்டுவதே சிறப்பு மிக்கதாகும் என்கிறது இஸ்லாம்.

ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தாம். ஆணும் பெண்ணும் இதில் விதிவிலக்கல்ல. மனைவி தன் கணவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் எத்தனையோ நன்மைகளை, தியாகங்களை செய்திருந்தாலும், அவள் அறிந்தோ, அறியாமலோ செய்த சிறு தவறுகளால் கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து இறுதியில் பிரிவை நோக்குகிறார்கள். கணவன் அல்லது மனைவி இத்தனை நாள் தனக்கு செய்த உபகாரங்களை கொஞ்சம்கூட நினைத்து பார்ப்பதில்லை.

அன்பும், கருணையும் இருக்கும் இடத்தில் பகைமைக்கும், பிரிவினைக்கும் வேலையில்லை. மனைவி என்பவள் குடும்பத்தை தாங்கும் அஸ்திவாரம். அவள் மீது காட்டப்படும் அன்பும், பரிவும், கண்ணியமும் மனைவி எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். அது கட்டிடம் எனும் குடும்பத்தை மகிழ்ச்சியிலும், அமைதியிலும் நிலைத்திருக்கச் செய்யும்.                        

விருப்பத்திற்கேற்ப 

சிகப்பு ஆடை அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் தன் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களுக்கு பிடித்துவிட்டது என்ற ஒரே காரணத்தால் அதை அடிக்கடி அணிவார்கள். 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தனது இறுதிகாலத்தில் ஒன்றை விரும்பினார்கள். அதாவது தனது நேசத்திற்குரியவர்களான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த இடத்திலேயே தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை ஆயிஷா (ரலி)  அவர்களிடம் தெரிவித்தார்கள். காரணம் அந்த இரண்டு புனிதமான நபர்களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடம், ஆயிஷா (ரலி) அவர்களின் வீடாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் “அந்த இடத்தை நான் எனக்காக ஒதுக்கியிருந்தேன். தற்போது உமர் (ரலி) அவர்கள் கேட்கிறார் எனும்போது மனமகிழ்வோடு விட்டுக் கொடுக்கிறேன்” என்றார்கள்

ஏனெனில், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "நானும், அபூபக்ரும், உமரும் இங்கே போனோம்; இங்கே இருந்தோம்; இப்படி இப்படியெல்லாம் நம்பிக்கை கொண்டோம்" என்று அடிக்கடி சொல்வதை நான் கேட்டுள்ளேன் அதனால் நபியவர்களின் அருகில் நான் அடக்கம் செய்யப்படுவதை விட அண்ணலார் மிகவும் விரும்பிய உமர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்படுவது தான் முறையானது. அண்ணலாரும் இதைத்தான் விரும்புவார்கள் என்று விவரித்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பிறகும் அவர்களின் விருப்பமே தனது விருப்பம் என்று எண்ணி வாழ்ந்தவர்கள்தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

அன்புள்ள மனைவி என்பவள் கணவர் உயிரோடு இருக்கும்போதும் அவருக்கு கட்டுப்பட்டு வாழ்வாள். அவர் இறந்த பிறகும் அவரது சொற்களுக்கு மதிப்புக் கொடுத்து அதையே பின்பற்றி வாழ்வாள். 

இந்த நற்குணம் தான் கணவன் மீது அதிகம் பிரியம் உள்ளவள் என்பதற்கு அடையாளமாகும். 

இந்த நற்குணம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்கள் அனைவரிடமும் நிரப்பமாக காணப்பட்டது. 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவியர்கள் ஒட்டகத்தில் ஏறுவதற்காக தனது பாதத்தை கொடுத்து உதவி செய்து அவர்களை ஒட்டகத்தில் ஏற்றி விட்டிருக்கிறார்கள். 

எனவே மனைவியின் விருப்பத்திற்கேற்ப மார்க்கத்தின் வரம்பை மீறாமல், கணவன் இசைந்து போவதின் மூலம் இல்லறத்தில் இன்பம் காணலாம்.  

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "நான் மனைவியிடம் தோற்பதை  விரும்புகிறேன்" என்று கூறினார்கள். 
எனவே மனைவியை அன்பால் ஆள வேண்டுமே தவிர, அதிகாரத்தால் அல்ல என்று விளங்க வேண்டும்.

மரணம் 


அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஹம்னா பின்து ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் "உம்முடைய சகோதரர் இப்போரில் கொல்லப்பட்டு விட்டார்" என்று சொல்லப்பட்டது. அதற்கு அப்பெண் அல்லாஹ் அவருக்கு கருணை புரியட்டும்! "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்" என்று கூறினார். 


பிறகு "உம்முடைய கணவர் இப்போரில் கொல்லப்பட்டு விட்டார்" என்று அப்பெண்ணிடம் சொல்லப்பட்டதும், அதற்கு அப்பெண் "அல்லாஹ்...." என்று மட்டும் சொல்லி விட்டு அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் வாடிய முகத்தோடு அமர்ந்து விட்டார். இக்காட்சியைக் கண்ட கருணை நாயகம் (ஸல்) அவர்கள் "கணவன் மனைவிக்கிடையே ஒருவகையான பாசப்பிணைப்பு உண்டு. அது எதையும் எதிர்பார்த்து வருவதில்லை" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா, பைஹகீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவனொருவன் தன் மனைவியின் அன்பான அரவணைப்பில் வாழ்ந்து இறந்தானோ, அவன் அவள் கையால் குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட்டால் அவனுக்கு அல்லாஹ் அருள்புரிந்து விட்டான் என்று பொருளாகும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ


மனைவியின் மரணத்தின் போது உமர் முக்தார் (ரஹ்) அவர்கள் அழுதார்கள். எதை நினைத்து அழுகிறீர்கள்? என்று மக்கள் வினவினார்கள். என் மனைவி, நான் நுழைவதற்காக கூடாரத்தின் வாயிலை உயர்த்திப் பிடிப்பாள். “ஏன் இப்படி செய்கிறாய்? ” என்று நான் கேட்பேன். அதற்கு “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் நீங்கள் தலை குனியாதிருக்கத்தான்”  என்று பதிலளிப்பாள் என்றார்கள்.   

அபூபக்ர் (ரலி) அவர்கள் தன் மரணப் படுக்கையில் கூறினார்கள். “என் மரணத்திற்கு பிறகு என் (ஜனாஸாவை) உடலை என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் குளிப்பாட்ட வேண்டும்” அப்போது  தோழர்கள்,  “ஏன்?” என்று வினவினர். அபூபக்ர் (ரலி) அவர்கள், ”என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்”  என்று பதிலளித்தார்கள். 

அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஜனாஸாவை) உடலை அவர்களின் மனைவியார் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் தான் குளிப்பாட்டினார்கள். நூல்:- மாலிக் முவத்தா-782

தனது மனைவியை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது. தனது இறுதி சடங்கைக் கூட தனது மனைவி செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தனது மனைவியை நேசித்தார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

பாத்திமா (ரலி) அவர்கள் தனது இறுதி நேரத்தில் “அஸ்மா பின் உமைஸ் (ரலி) அவர்கள் தனது அன்பு கணவர் அலீ (ரலி) அவர்களின் உதவியுடன் தன்னை குளிப்பாட்ட வேண்டும்” என்று (வஸிய்யத் எனும்) இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவ்விருவரும் தான் குளிப்பாட்டினர். நூல்:- தாரகுத்னீ-1851, பைஹகீ

இறந்த பின்பும் தன் வாழ்க்கைத் துணையின் மீது இத்தனை நேசம் செலுத்தும் ஒருவர், அவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு நேசித்திருப்பார்?
கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின்மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை....

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான் எனும் உண்மையை அல்-குர்ஆன் எடுத்தியம்புவதை.....இக்கட்டுரைக்குள் தேடுங்கள்.

அல்லாஹ் தன்னந்தனியாக இருந்தான். தன்னுடைய சக்திகளை வெளிப்படுத்த வேண்டுமென நாடினான். தன்னைத்தான் அறிவதற்காக ஓர் அற்புதமான சிருஷ்டியை படைக்க நாடினான். தன் கற்பனையில் உருவானபடி மனிதனைப் படைத்தான். படைத்துத் தன் பிரதிநிதியாக, கலீஃபாவாக பூமியில் ஆக்கினான். ஆணைப் படைத்த இறைவன் ஆணுக்குத் துணையாகப் பெண்ணையும் படைத்தான். அதுவும் ஆணின் விலா எலும்பிலிருந்தே பெண்ணைப் படைத்தான். படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்ப வேண்டுமென நாடினான். எனவே, பெண்ணிடத்தில் ஒரு கவர்ச்சியை வைத்தான். ஆணிடத்தில் கம்பீரத்தை வைத்தான்.ஆகையால் ஆண் பெண்ணை விரும்புகிறான். பெண்ணும் ஆண்மையை விரும்புகிறாள்.

விரும்பி ஆண்-பெண் இருவரும் இணைய வேண்டும் என்ற காரணத்தினால், ‘அல்லாஹ் உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவிகளைப் படைத்திருக்கிறான். அன்றி உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும் பேரன். பேத்திகளையும் உற்பத்தி செய்து, உங்களுக்கு நல்ல ஆகாரங்களையும் புகட்டுகிறான்’ (ஸூரத்துன் நஹ்ல்: 72) என்று கூறுகிறான்.

உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைத்துள்ளான். நீங்கள் அவர்களிடம் மன அமைதியுறுவதற்காக உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டு பண்ணியுள்ளான்.’ (ஸூரத்துர் ரூம்: 21)

‘எவர் இறைவனுக்காக (அவனின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு) திருமணம் முடித்தாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் அரசாங்கத்தின் கிரீடத்தை சூட்டுகிறான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவிக்கின்றார்கள். கிரீடம் சூட்டப்படும் இடம் எதுவாக இருக்கும் சுவனத்தைத்தவிர!

ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ

''நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).'' (அல்குர்ஆன்: ஸூரா அல்-ஜுக்ருஃப் 43:70)

திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவதில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .

அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும், சுகத்தையும், சுவையையும், துக்கத்தையும், கனவையும், நனவையும மகிழ்வையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் முக்கிய மந்திரி.

உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!

هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن

‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (ஸூரா அல்-பகரா 2:187).

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது

وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا

மேலும், அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (ஸூரா அல்-நஹ்ல் 16:72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (ஸூரா: அல்-ரூம் 30:21).

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.

நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.

திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.

மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.

நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.

ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?

அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.

எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விஷயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.

''உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்''.

இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.

விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.

நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.

ஸூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ

நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).

இந்த வசனத்தை உண்மையாக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:

இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.

தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலாவாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் நிச்சயம் அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு. இந்த அறிய படிப்பினைகளை கடைப்பிடித்து வாழ்வோமானால் ஒவ்வொருவரும் தத்தம் பிரிய மனைவியோடு; கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத இன்பங்கள் கொட்டிக்கிடக்கும் சுவர்க்கத்திற்குள் நுழைய இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான். மறவாதீர்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.

ஆகவே இவ்வுலகில் உங்கள் மனைவியுடன் இஸ்லாம் வகுத்துத்தந்த முறைப்படி இல்லறத்தை நல்லறமாக்கி வாழுங்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ''மனிதர்களில் சிறந்தவர் தன் மனைவியிடம் சிறந்தவரே'' எனும் அருள் மொழியை நினைவு கூறுங்கள். மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா? கஷ்டப்படாமல் சுவர்க்கம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறீர்களா? சிறந்தவர்களாகத்தானே சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்! ஆகவே, கஷ்டப்பட்டேனும் நல்ல பெயர் எடுத்துவிடுங்கள், உங்கள் மனைவியிடம்! ஜோடியாக சுவர்க்கம் செல்ல அதுதான் சிறந்த வழி. அல்லாஹ் நல்லருள் புரிவானாக

பிரபல்யமான பதிவுகள்