இறைமறை கூறும் இரண்டு பெண்கள்
இருவருமே எகிப்தைச் சார்ந்தவர்கள். இருவருமே தங்கள் அரண்மனைகளில் இரண்டு நபிமார்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர்த்தவர்கள்.
ஒருவர்: சுலைகா. எகிப்து அமைச்சரின் மனைவி. யூசுஃப் (அலை) அவர்களை மகனாக வளர்த்தார்.
இன்னொருவர்: ஆசியா அம்மையார். எகிப்து அரசன் ஃபிர்அவ்னுடைய மனைவி. மூஸா (அலை) அவர்களை மகனாக வளர்த்தார்.
இருவருமே பெரும் கண்ணியம், அதிகாரம், பெருமைக்கு உரியவர்கள். ஆனால் இறைநம்பிக்கை, இறையச்சம், நற்சிந்தனை இவற்றில் இருவருமே வேறுபட்டிருந்தனர். வேறுபட்ட காலச் சூழலில் வாழ்ந்தவர்கள்.
சுலைகாவுக்கோ இச்சை கண்ணை மறைத்தது. தானொரு வளர்ப்புத் தாய் என்பதை மறந்து.. வளர்ப்பு மகனையே இச்சைக்கு இணங்கச் சொன்னார். யூஸுஃப் (அலை) மறுத்தார்.
ஆசியா அம்மையாருக்கோ தாய்மைதான் கண்முன் தெரிந்தது. எல்லாத் தாய்மார்களையும் போன்றே மூஸா (அலை) அவர்களை அவர் பார்த்தார்.
இச்சைக்கு இணங்க மறுத்த யூஸுஃப் (அலை) அவர்களை சுலைகா சிறையில் அடைத்தார்.
ஆசியா அம்மையாரோ ஃபிர்அவ்னிடமிருந்து மூஸா (அலை) அவர்களைக் காப்பாற்றினார்.
சுலைகா உலகை நாடினார்.
ஆசியா அம்மையாரோ மறுமையை நாடினார்.
சுலைகா.. கணவன், கண்ணியம், அதிகாரம், பெருமை அனைத்தையும் இழந்து இழிவடைந்து வயதான காலத்தில் யூஸுஃப் (அலை) அவர்களை ஈமான் கொண்டார்.
ஆனால் ஆசியா அம்மையாரோ அழைப்பு விடுத்த முதல் நாளிலேயே மூஸா (அலை) அவர்களை ஈமான் கொண்டார்.
காம இச்சை சுலைகாவை கணவனிடமிருந்து பிரித்தது.
ஆசியா அம்மையாரையோ அவரது ஈமான் கணவனிடமிருந்து அவரைப் பிரித்தது.
மனைவி மீது கோபமுற்ற நிலையிலேயே சுலைகாவின் கணவன் இறந்தார்.
அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற நிலையில் ஆசியா அம்மையார் மரணித்தார்.
"நான்தான் உங்களின் மாபெரும் இறைவன்'' (79:24) என்று சொன்ன ஃபிர்அவ்னுடைய அரண்மனையில் இருந்தவாறே, உண்மையான இறைவனை வணங்கி,
"என் அதிபதியே! எனக்காக சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக!'' (66:11) என்று ஆசியா அம்மையார் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.
இரண்டு பெண்களுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு! ஒருவர் இச்சையால் இழிவடைகிறார். இன்னொருவர் இறையச்சத்தால் உயர்வடைகிறார்.
எங்கே வாழ்கிறோம்? யாருடன் வாழ்கிறோம்? என்பது முக்கியமல்ல! எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்!
ஒழுக்கமே உயர்வு! ஒழுக்கமே சுதந்திரம்!!