சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருக்கிறது ஒரு கட்சி. அதற்குப் பெயர் "மாநில அரசு"
இந்த அநீதியைத் தெரிந்தே அனுமதித்துக்கொண்டு, வழக்கைத் தள்ளிப்போட்டபடியே, இந்த அரசைக் காக்கும் இடத்திற்குப் பெயர் "நீதிமன்றம்"
பெரிய மனிதர்களுக்குப் பாலியல் விருந்தளிக்க, அதற்கு மாணவிகளைப் பயன்படுத்த 'ஆள் பிடிக்கிறார்' ஒரு பெண். அவருக்குப் பெயர் "பேராசிரியர்"
அப்படி 'ஆள் பிடித்த வழக்கில்' தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே தானே ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, அதன் அறிக்கையைத் தானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர்.. அவருக்குப் பெயர் "மாநில ஆளுனர்"
மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் இந்த மாநிலத்தின் குழந்தைகளுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் கொடுக்கப்படுகிறது. அலைச்சலில் சாகிறார் தந்தை ஒருவர். குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு அவர்களது கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர் "தகுதித் தேர்வு"
பெண் பத்திரிக்கையாளர்கள் படுக்கையில் சமரசம் செய்துதான் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் "கட்சிப் பிரமுகர்"
அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்திலிருக்கும் முக்கியமான ஒருவரோடு ஒரு நிகழ்வில் கலந்துகொள்கிறார் அந்த நபர். "அவரைப் பிடித்துத் தருவது என் வேலை அல்ல" என்கிறார் அந்த முக்கியமானவர். அவருக்குப் பெயர் "மத்திய அமைச்சர்"
கைது செய்யப்பட வேண்டியவரின் வீட்டுக்கே காவல்துறை பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் செல்வாக்கு மிக்க அவரது உறவினர். அவருக்குப் பெயர் "தலைமைச் செயலாளர்"
மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் போதைப்பொருளான குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் இருவர். ஒருவருக்குப் பெயர் "சுகாதாரத்துறை அமைச்சர்". இன்னொருவருக்குப் பெயர் "காவல்துறை உயரதிகாரி"
தீவிரவாதிகளுக்கு எதிரான 'துல்லியத் தாக்குதல்' போல குறிவைத்துச் சுட்டபிறகு, காயம்பட்டவர்களை மருத்துவமனைகளிலும் சென்று அடித்து நொறுக்குகிறது சீருடை அணியாத ஒரு கூட்டம். அதற்குப் பெயர் "காவல்துறை"
விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, மக்களுக்குப் போக்குக் காட்டியபடியே, பின் வேறு வழியில்லாமல் செய்தியின் தீவிரத்தைக் குறைத்து வெளியே பரப்புகின்றன சில நிறுவனங்கள். விவாதங்களின் மூலம் அரசுத் தரப்பை நியாயப் படுத்தும் வேலையைத் தெளிவாகச் செய்யவும் தெரியும் அவர்களுக்குப் பெயர் "ஊடகங்கள்"
தனது மாநிலத்தின் மக்கள் சுடப்பட்டுச் சாகும்போது "துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது" என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் "மாநில அமைச்சர்"
"இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டுச் செத்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் பிச்சையிடுகிறார் ஒருவர். அவருக்குப் பெயர் "முதலமைச்சர்"
இவையெல்லாவற்றுக்கும், விட்டுக்கொடுக்காமல் முட்டுக் கொடுக்கும் அற்பப் பதர்களுக்குப் பெயர் " தேச பக்தர்கள்"
இதையெல்லாம் மனசாட்சியில்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பிற்குப் பெயர் "தேசம்"
ஆனால், தங்களது வாழ்வாதாரத்திற்கும், தங்களது ஊரின் சுற்றுப்புறச் சூழலுக்கும், தங்கள் குடும்பத்தினரின் உடல்நிலைக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களுக்கும், இவ்வளவு ஏன், வாய்வழியே சுடப்பட்டுச் செத்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்குமான பெயர் மட்டும் "Fringe Elements"
இதுதான்டா எங்கள் இந்தியா இதுதாண்டா எங்கள் தமிழ்நாடு
இவனுங்களுக்கு பதிலாக வெள்ளைக்கார இருந்தாலே இந்தியா நன்றாக இருக்கும்