роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЮாропிро▒ு, роПрок்ро░ро▓் 02, 2017

роЗроЬ்родிро╣ாродுроо் роЕродு рокро▒்ро▒ிроп роиро╡ீрой роЪிрои்родройைроХро│ுроо்,

இஜ்திஹாதும் அது பற்றிய நவீன சிந்தனைகளும

எல்லாக் காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் மனித நலன்களைப் பாதுகாத்து அவனது பிரச்சினைகள் சகலதுக்குமான தீர்வை வழங்குவதற்கு இஸ்லாமிய ஷரீஆ உத்தரவாதம் வழங்கியிருக்கிறது.

“இன்றைய தினம் உங்களுக்காக நான் உங்களுடைய மார்க்கத்தைப் பரிபூரணமானதாக ஆக்கிவைத்துவிட்டேன்; என்னுடைய அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்தியும் விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக்கொண்டுவிட்டேன்.” (அல்மாஇதா: 3)

அவ்வகையில் உலகில் இறுதியாக இறக்கியருளப்பட்ட தெய்வீக வெளிப்பாடான முஹம்மதிய ஷரீஆ மறுமை வாழ்வுக்கான வழிகாட்டல்களை வழங்குவது போலவே இவ்வுலகுக்கான வாழ்வியல் வழிகாட்டல்கள் அனைத்தையும் பொதிந்ததாக இருக்கிறது. அதேநேரம் இஸ்லாமிய ஷரீஆ சமூக வாழ்வின் தேவைகளிலும்தான் தனி மனித சார் பிரச்சினைகளிலும்தான் சமநிலையான வழிகாட்டல்களைத் திருப்திகரமாக முன்வைக்கிறது.

இதனால் இஸ்லாமிய சட்டவியல் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் புதிதாய்த் தோன்றும் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் இயலுமை கொண்ட உயிரோட்டம் கொண்டதாகவும் இருந்து வருகிறது.

இப்பின்னணியில் இஸ்லாமிய சட்டவியலின் உயிரோட்டத் தன்மையையும் வளர்ச்சியையும் நிலைத் தன்மையையும் பேணி இயங்கு நிலையில் வைத்திருக்கும் சாதனமாக இஜ்திஹாத் காணப்படுகிறது.

இஜ்திஹாத் என்பது…

இஜ்திஹாத் என்ற பதத்தை இமாம் அபூஹாமித் அல்கஸ்ஸாலி அவர்கள் தனது ‘முஸ்தஸ்ஃபா’ எனும் நூலிலே மொழி ரீதியாகப் பின்வரும் அமைப்பில் விளக்குகிறார்கள். (அல்ஜீம் வல்ஹாஉ வத்தால்) ஆகிய எழுத்துக்களின் அடியாகத் தோன்றுகிறது. இதன் கருத்து முயற்சியை செலவளித்தல் என்பதாகும். அச்சொல் (அல்இஃப்திஆல்) வஸ்னைப் பெறுகையில் இன்னும் கருத்தூன்றிய சொல்லாக உருவாகிறது. அப்போது இஜ்தஹத எனும் சொல் ஜஹத வை விடவும் மேலான கருத்துக் கொண்டதாகிறது.

அடுத்து இஸ்லாமிய பரிபாஷை ரீதியில் இச்சொல்லைத் தெளிவுபடுத்தும் போது இமாம் ஆமிதி அவர்களது ‘அல்இஹ்காம் ஃபி உஸூலில் அஹ்காம்’  நூல் தரும் விளக்கம் அலாதியானது; போதுமானது. அவர் ‘ஷரீஆ சட்டமொன்றின் முடிவைப் பெறும் நோக்கில் இனி முடியாது எனக் உணரும் அளவுக்கு முயற்சியைப் பிரயோகித்தல்’ என்கிறார். இமாம் ஷவ்கானியின் ‘இர்ஷாதுல் ஃபுஹூல்’ நூலின் வரைவிலக்கணமும் குறிப்பிடக் கூடிய ஒன்றே. ‘இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களின் முடிவொன்றை நெருங்குவதற்காக முயற்சியை இயலுமான அளவின் உச்சகட்டத்திற்குப் பிரயோகித்தல்’ என வரையறுக்கிறார் இமாம் ஷவ்கானி.

ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் இஜ்திஹாத் என்பது குறிப்பிட்ட விவகாரங்களில் இஸ்லாமிய ஷரீஆ எடுக்கும் நிலைப்பாட்டைக் கண்டறிவதற்காக நிலையான அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா ஆகிய ஷரீஆ மூலாதாரங்களையும் சட்டவாக்க வழிமுறைகளையும் பிரயோகித்து சரியான முடிவைக் கண்டடைவதற்கான முயற்சியை மேற்கொள்ளுதல் எனலாம்.

இஸ்லாமிய அறிவுச் செயற்பாடான இஜ்திஹாதிற்கு நன்மைகள் உண்டு என இஸ்லாம் கூறுகின்றது. புகாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நபிமொழியொன்றிலே “தீர்ப்புச் சொல்பவர் இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக இருந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. இஜ்திஹாத் செய்து அவரது முடிவு பிழையாக இருந்தால் அவருக்கு ஒரு கூலி உண்டு.” என இஜ்திஹாதுக்குத் தூண்டுதல் வழங்கப்படுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இஜ்திஹாத்…

நபித்துவ ஆட்சிக் காலத்திலேயே நபித்தோழர்களுள் முக்கிய ஒருவரான முஆத் இப்னு ஜபல்(ரழி) அவர்கள் யெமன் பிராந்தியத்திற்கான ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார்கள். அப்போது மக்களுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்துத் தூதர்(ஸல்) அவர்கள் தோழரிடம் “உம்மிடம் பிரச்சினைகள் ஏதும் வந்தால் எவ்வாறு தீர்த்து வைப்பீர்?” என வினவிய போது, முஆத் இப்னு ஜபல்(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளவற்றைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என பதில் கூறினார்கள். அப்போது தூதரவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் தீர்வு இல்லாவிடின் என்ன செய்வீர்?” எனத் வினவிய போது, “அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவிலிருந்து தீர்ப்பளிப்பேன்” என்கிறார்கள். அதன் பின்பு “அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவிலும் தீர்வு இல்லாவிடின் என்ன செய்வீர்?” என மீளவும் கேட்ட பொழுதில் “எனது அறிவிற்குட்பட்ட வரைக்கும் பூரணமாக இஜ்திஹாத் செய்து தீர்வு சொல்வேன்” எனக் கூற தூதரவர்களும் ஆமோதித்து, அல்லாஹ்வையும் புகழ்ந்தார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க இடைக்காலத்தில் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டதாக ஃபத்வா வழங்கப்பட்டு இஸ்லாமிய அறிவுத்துறைகளின் தேக்கநிலை திறந்துவிடப்படுகிறது. இக்காலவெளிகளில் இஜ்திஹாத் பற்றிய மாற்றுச் சிந்தனையாளராக வரலாற்றுள் புரட்சிகரமாக ஊடுறுவுபவராக இமாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்கள் காணப்படுகிறார்கள். இவ்வகையில் தேக்கம் மிகுந்து காணப்பட்ட வேளையொன்றில் இமாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்களது பணி பிரமாண்டமானது. இதற்கு அன்னாரது 30 க்கும் மேற்பட்ட பாகங்கள்கொண்ட மஜ்மூஉல் ஃபதாவா மாத்திரமே போதிய சான்றாகும்.

இக்காலத்தில் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டமை குறித்து இமாம் யூசுப் அல்கர்ளாவி அவர்கள் “இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டதே ஒரு இஜ்திஹாதின் முடிவுதான்; எனவே நாம் இன்னொரு இஜ்திஹாத் மூலம் பழைய இஜ்திஹாதை முறித்துவிடுகிறோம்” என அலாதியாக விமர்சனம் செய்கிறார்கள்.

இப்பின்னணியில் தாரிக் ரமழான் முன்வைக்கும் கருத்துக்களும் முக்கியமானவை. அவர் “இஜ்திஹாதின் வாயில்கள் ஒருபோதும் மூடப்பட மாட்டாது. இஸ்லாமின் பெயரால் அவ்வாறான முடிவொன்றைப் பிரகடனம் செய்ய எந்தப் புலமையாளருக்கும் உரிமை கிடையாது. ஏனெனில் இவ்வகையான பிரகடனங்கள் இயல்பாகவே இஸ்லாமுக்கு எதிரானது. உண்மையில் இஜ்திஹாத் இஸ்லாமிய சட்டவியலின் மூன்றாவது மூலாதாரமாக இருப்பதோடு அதுவே நீதித்துறையின் முழுப் பொறுப்பையும் சுமக்கிறது” என்கிறார்.

ஏன் தற்காலத்தில் இஜ்திஹாத் அவசியம்?

உண்மையில் இன்று ஒரு சாரார் வளம் கொழிக்கும் எம் முதுசங்களான ஃபிக்ஹுத் துறையின் மீதும் எம் முன்னோர்களான மகத்தான அறிஞர்கள் மீதும் கொண்ட அளவு கடந்த நம்பிக்கையின் விளைவால் இஜ்திஹாத் இக்காலத்திற்குத் தேவையற்றது; அவர்களது இஜ்திஹாத்களே எமக்கும் போதுமானது; என்ற நிலைபாட்டிலே இருந்து வருகின்றனர். என்ற போதிலும் அவர்கள் காலத்தை விட்டும் வித்தியாசப்பட்ட சூழலொன்றை எதிர்கொள்ளும் நாம் புதிய இஜ்திஹாதின் பால் தேவையுடையவர்களாக மாறுவோம் என்பது நிதர்சனமானது.

காலத்துக்குக் காலம் தோன்றும் பிரச்சினைகள் புதிதானவை; முன்னைய காலங்களை விட்டும் வேறுபட்டவை; புதிய தீர்வுகளை வேண்டி நிற்பவை என்பது இஜ்திஹாதின் தேவையை இன்னும் ஊன்றிச் சொல்கிறது. ஷெய்க் கர்ளாவி அவர்களுடைய வார்த்தைகளில் சொல்வதானால் கைத்தொழில் புரட்சியாலும் நவீன தொழிநுட்பத்தின் அபரிமித வளர்ச்சியாலும் தொடர்பு சாதனங்களின் தலைகீழ் மாற்றத்தாலும் அக்காலத்தோடு கற்பனைபண்ணிக் கூடப் பார்க்க முடியாத இக்காலத்தில் இஜ்திஹாத் என்பது முன்னைய இமாம்களின் காலத்தை விடவும் மிக அவசியமானது எனலாம். இதற்கு மிகச் சிறியதொரு உதாரணமாகக் குறுகிய கால மற்றும் இட பரிமாணங்களுக்கே தன் ஃபத்வாக்களை இமாம் ஷாபிஈ அவர்கள் மாற்றியமையைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

நாம் இன்று வேண்டி நிற்கும் இஜ்திஹாத்…

இக்காலம் நம்மிடம் வேண்டிநிற்கும் இஜ்திஹாத் நம்மை இஸ்லாம் எனும் மார்க்கத்தைக் கொண்டு இவ்வுலகில் வாழ்வதனை நோக்கிய இஜ்திஹாதாகும். இது நம் முஸ்லிம் சமூகத்தின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

அவ்வகையில் நாம் வேண்டும் இஜ்திஹாத் இரு வகை என்கிறார் இமாம் யூஸுப் அல்கர்ளாவி அவர்கள்:

முதலாவது வகை: ஏற்கனவே இமாம்களால் மத்ஹப்களுக்குட்பட்டும் வெளியாலும் செய்யப்பட்ட இஜ்திஹாத்களுக்கிடையில் ராஜிஹான கருத்தைப் பெறுவதற்கான இஜ்திஹாதாகும்.

இரண்டாவது வகை: புதிதாகத் தோற்றம் பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் இதற்கு முன்னர் தோன்றிய இமாம்கள் பேசாத பிரச்சினைகள் பற்றி ஆரம்பத்திலிருந்து இஜ்திஹாத் செய்வதனைக் குறிக்கும். அவ்வகையில் இப்பகுதியினுள் தீர்வு காணப்படாத அல்லது புதிய கோணத்தில் தீர்வு சொல்லப்பட வேண்டிய பழைய பிரச்சினைகளும் கூட உள்ளடங்கியிருக்கும்.

இக்காலத்தில் இஜ்திஹாதை வேண்டி நிற்கும் இரு புதிய துறைகள்:

இமாம் கர்ளாவி அவர்கள் இன்றைய கால இஜ்திஹாதைப் புதிதாக வேண்டி நிற்கும் இரு துறைகளாக பொருளாதாரம் மற்றும் வைத்தியத் துறையை அடையாளப்படுத்துகிறார். இவ்விரண்டு துறைகளும் இன்று கணத்துக்குக் கணம் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே இருக்கும் துறைகளாகும். எனவே இத்துறைகளுக்கான இஸ்லாமியத் தீர்வுகளையும் இஸ்லாமிய மாற்றீடுகளையும் வழங்குவதற்கு இஜ்திஹாதின் தேவை துரிதமாக இருக்கிறது.

குலுக்கல் சீட்டு வியாபார முறைகள், உண்டியல் வியாபார முறைகள், கழிவு விற்பனை முறைகள் என சந்தேகங்களும் மறைமுகமாக ஹராம்கள் மலிந்தும் காணப்படும் புதிய பொருளாதார முறைமைகள் இஜ்திஹாதுக்கான பலமான அறைகூவலை முன்வைக்கிறது. இவற்றுள் ஹராம்-ஹலால் வேறுபாட்டைத் தெளிவாக முன்வைப்பதோடு உரிய மாற்றீடுகளையும் முன்வைக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது. இல்லாத பட்சத்தில் இஸ்லாமிய ஃபிக்ஹுத் துறையும் வலுவிழந்து போய்விடும்.

இவ்வாறுதான் அறிவியலின் துரித வளர்ச்சியால் வெகு முன்னேற்றம் கண்டிருக்கும் வைத்தியத் துறையும் இஜ்திஹாதின் பலமான தேவையை உணர்த்தும் பகுதியாகும். குடும்பக் கட்டுப்பாடு, உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் எனத் தினம் தினம் பிறக்கும் கேள்விகள் இன்று எம் அறிஞர்களைத் திணறடித்து புதிய அளவுகோல்களில் இஜ்திஹாத் நோக்கி நிர்ப்பந்திக்கிறது.

இக்கால இஜ்திஹாதின் வடிவங்கள்:

மூன்று வகைகளில் இஜ்திஹாத் இக்காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

முதலாவது: மத்ஹப்களுக்குள்ளால் கருத்துக்களை ராஜிஹ் செய்வதில் தொடங்கி பின்னர் மத்ஹப்களுக்கிடையிலும் அதற்கு வெளியாலும் ஒப்பீடு செய்வது வரை சென்ற இஜ்திஹாத் ஆகும். இதன் ஆரம்பத் வடிவமாக இந்திய உபகண்டத்தில் தோன்றிய ‘மஜல்லத்துல் அஹ்காம் அல்அத்லிய்யா’ காணப்படுகின்றது.

இரண்டாவது: ஃபத்வாக்கள் வடிவில் இஜ்திஹாத் தோற்றம் பெற்றுள்ளமையை இரண்டாவது வகையாகக் குறிப்பிடலாம். அது இன்று பல்வேறு வடிவங்கள் பெற்றிருக்கின்றது. உத்தியோகபூர்வமாக அரசுகள், அறிஞர் குலாம்களின் ஃபத்வாக்கள் முதற்கொண்டு குறித்த துறைசார் நிறுவனங்கள், அமைப்புக்கள் தம்மோடு தொடர்பான ஃபத்வாக்களைத் தொகுத்து வெளியிடுவது வரைக்கும் விசாலித்திருக்கின்றது. இவற்றுக்கு உதாரணமாக சவூதியின் லஜ்னதுத் தாயிமா லில் ஃபதாவா, அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் லஜ்னதுல் ஃபத்வா முதற்கொண்டு சஞ்சிகைகளின் ஃபத்வாத் தொகுப்புக்கள் வரைக்கும் ஏராளம் கூறலாம்.

மூன்றாவது: ஆய்வுகள் மற்றும் கற்கைகளின் போதான இஜ்திஹாத் ஆகும். குறித்த துறைகளில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் கொண்டுதரும் புதிதான சிறப்பான முடிவுகள் இப்பகுதிக்குள் உள்ளடங்கும். இவற்றின் மூலமே மிக உறுதியான, மிக மேலான, உண்மைக்கு மிக நெருக்கமான முடிவுகள் கிடைக்கப்பெறுகின்றன.

இஜ்திஹாத் தொடர்பான நவீன கருத்துக்கள் சில…

இஜ்திஹாத் சிந்தனைப் பின்னணியில் மார்க்கம் சிந்தனா ரீதியாகப் புத்துயிர்ப்புச் செய்யபடவேண்டும் என்ற கருத்தை விளக்குகையில் இமாம் அல்கர்ளாவியின் கருத்துக்கள் முக்கியம் பெறுகின்றது:

“இஜ்திஹாத் உயிர்ப்பிக்கப்படல் வேண்டும். இஜ்திஹாத் இல்லாது ஷரீஆ உயிர்வாழ முடியாது. இஜ்திஹாத் ஆரம்ப கால அறிஞர்களின் கூற்றுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்க முடியும் அல்லது ஆரம்ப காலம் அறிந்திராத நவீன கால இஜ்திஹாதாக இருக்கவும் முடியும். அதற்கும் அப்பால் சிறு கிளைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இஜ்திஹாதாக இருக்கவும் முடியும் அல்லது பிரதான அடிப்படைப் பகுதியொன்றில் மேற்கொள்ளப்படும் இஜ்திஹாதாக இருக்கவும் முடியும். தனிநபர் அல்லது குழு அடிப்படையிலான இஜ்திஹாதாக அது இருக்கவும் முடியும். இஜ்திஹாதுக்கான அறிவு மற்றும் பண்பாடு ரீதியான நிபந்தனைகளைப் பெற்றவர்கள் மாத்திரமே இப்பகுதியில் தலையிடவேண்டும். பொருத்தமான இடங்களில் இஜ்திஹாத் மேற்கொள்ளப்படல் என்பதன் மூலம் கருதப்படுவது முழு உம்மத்தையும் ஒன்றிணைக்கும் நம்பிக்கை, சிந்தனை, உணர்வு, செயற்பட்டுப் பகுதிகளில் அல்லாமல் பல கருத்துக்களுக்கு இடம்பாடான ஏனைய பகுதிகளில் இஜ்திஹாத் செய்வதாகும். இஜ்திஹாத் செய்ய முடியாத திட்டவட்டமான பரப்புக்கள் (கத்இய்யத்) மிகச் சொற்பமானவை. எனினும் முக்கியமானவை. ஏனெனில் எச்சந்தர்ப்பத்திலும் மாற்றமுறா நிலையான பகுதிகள் அவை. நடுநிலைச் சிந்தனை ஒழுங்குபடுத்தப்பட்ட புனர்நிர்மாணத்தை நோக்கி அழைக்கிறது. நவீன காலத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சமநேரத்தில் தெளிவான‌ இலக்குகளையும் வழிமுறைகளையும் கொண்ட இஜ்திஹாதை நோக்கி அது அழைக்கின்றது. இஜ்திஹாதின் வாயிலை மூடி அனைத்து அறிஞர்களையும் கண்மூடி பின்பற்றும் நிலைக்கு தூண்டும் முறைமையை நடுநிலை சிந்தனை மறுக்கிறது. மறுபுறம் எவ்வித நிபந்தனையோ வரையறையோ இன்றி வருகின்றவர் போகின்றவர்களுக்கெல்லாம் இஜ்திஹாதின் வாயிலை திறந்து கொடுக்கும் நிலைப்பாட்டையும் அது மறுக்கிறது.”

நவீன உலக ஒழுங்கு எதிர்நோக்கும் பொருளாதாரம், அரசியல், சமூக பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமாயின் பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை முறைமையில் இஜ்திஹாத் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறும் தாரிக் ரமழானின் கருத்துக்களும் இவ்விடம் மனங்கொள்ளத் தக்கவை. அவர் இரண்டு முக்கிய சிந்தனைகளை நவீன இஜ்திஹாத் உள்வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்:

இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை மூலாதாரங்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்படல். அவ்வகையில் குர்ஆன் , சுன்னா , இஜ்மா என தொடரும் மூலாதாரங்களில் ‘வாழும் சூழல்’ (Context) அல்லது உலகியற் கலைகள் முக்கிய இடத்தை பெற வேண்டும். உலகியற் கலைகள் என்பது இயற்கை விஞ்ஞானம் (Experimental Science)  மற்றும் சமூக விஞ்ஞானம் (Social Science)  ஆகிய இரு பகுதிகளை உள்ளடக்குகிறது. இயற்கை விஞ்ஞானத்தில் Chemistry, Physics, Biology, Neuroscience, Medicine  போன்ற பகுதிகள் உள்ளடங்கும். சமூக விஞ்ஞானத்தில் Sociology, Political science, Economy போன்ற பகுதிகள் அடங்குகின்றன.

சமூக விஞ்ஞானக் கலைகளில் துறைபோனவர்கள் (Scholars of Context)  மார்க்க அறிஞர்களின் (Scholars of Text)  தரத்திற்கு சமமானவர்களாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தையும் தாரிக் ரமழான் விரிவாகப் பேசுகிறார். சட்ட அதிகாரம் இரு சாராருக்கும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவ்விரு வகையினரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போதேநவீன காலம் எதிர்நோக்கும் பொருளாதாரம், அரசியல், சமூகவியல் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுமுன்வைக்கப்பட முடியும். குறிப்பாக ஷரீஆவின் இறுதி இலக்குகள் நோக்கி வாழ்வமைப்பை நகர்த்திச் செல்வதற்கு இவ்வகையான கருத்துப் பறிமாற்றம் அவசியம்.

இஜ்திஹாதின் இன்மையானது சிந்தனைத் தேக்கம் மற்றும் மனித இயல்பினைச் சிதைத்துவிடும் இயல்புடையது. அது மானிட  சிறப்பம்சமாகக் கருதப்படும் அறிவாற்றலைக் கொள்ளையிடுகிறது. அல்லாஹ்வுடைய ஆதாரங்களை விட்டும் மனிதனைத் தடுத்துவிடக் கூடியது. இன்னும் நவீன காலத்தில் இஸ்லாமிய உலகை நோக்கி இஜ்திஹாத் புத்துயிர்ப்பு சிந்தனையை  உரத்துப் பேசியோர்/பேசுவோர் ஏராளம் இருக்கின்றனர். அனைவரும் இஸ்லாமிய சிந்தனையை இக்கால மயப்படுத்தி இஸ்லாமை உயிரோட்டத்துடன் வழங்க உழைத்துக் கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களாவர்.

உசாத்துணைகள்:

அல்இஜ்திஹாத் ஃபி அஷ்ஷரீஆ அல்இஸ்லாமிய்யா
கலாநிதி அல்லாமா யூஸுப் அல்கர்ளாவி
அல்இஜ்திஹாத் அல்மஸ்லஹி
கலாநிதி அஹ்மத் அர்ரய்ஸூனி

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்