நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஜூலை 25, 2024

ஸியாரத் போவோமா,

ஸியாரத் போவோமா...

يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

 

"எங்கள் இறைவனே! எங்களையும் (மன்னிப்பாயாக!) இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்தியவர்களான எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! மேலும்இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் எந்த குரோதங்களையும் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகவும் கிருபையுடையவனாகவும் இரக்கமுடையவனாகவும் இருக்கின்றாய்" என்று பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். திருக்குர்ஆன்:- 59:10

 

"ஸியாரத்" என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். "ஸியாரதுல் குபூர்" என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்று வரலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.

 

மண்ணறைகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன.

1) முஸ்லிம்களின் மண்ணறைகளை ஸியாரத் செய்தல்.

2) இறைநேசர்களின் மண்ணறைகளை ஸியாரத் செய்தல்.

 

நினைவூட்டல் இருக்கிறது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ ) மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனெனில்அவை மரணத்தை நினைவூட்டும்  நூல்:- முஸ்லிம்-1777

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّ فِي زِيَارَتِهَا تَذْكِرَةً ) நான் உங்களுக்கு மண்ணறைகளைச் சந்திக்க வேண்டாம் என்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றை சந்தியுங்கள். ஏனெனில்அவற்றை சந்திப்பதில் (மரணத்தின் அல்லது மறுமைநாளின்) நினைவூட்டல் இருக்கிறது. அறிவிப்பாளர்:- புரைதா  (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1778அபூதாவூத்-2816நஸாயீ-2005

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الآخِرَةَ ) மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனெனில்அவை மறுமையை நினைவூட்டும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-974இப்னுமாஜா-1558முஸ்னது அஹ்மத்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وَتُذَكِّرُ الآخِرَةَ ) மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனெனில்அது உலகில் பற்றற்ற தன்மையை ஏற்படுத்தும்மறுமையை நினைவூட்டும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-2006இப்னுமாஜா-1560முஸ்னது அஹ்மத்ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீஹாகிம்முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 

 

இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களில் மண்ணறைகளுக்கு ஸியாரத் செய்வதை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் முழுமையாகத் தடுத்திருந்தார்கள். பின்னர் நபித்தோழர்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்கிக்கொண்டதும் (அதாவதுமண்ணறைகளை சந்திப்பதின் யதார்த்தத்தை விளங்கிக் கொண்டதும்)  மண்ணறைகளை ஸியாரத் செய்யுமாறு கூறினார்கள்.

 

உயிரோடு இருப்பவர் இறந்துபோனவர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தைச் சென்று பார்த்து வரலாம்அதில் தவறில்லை. நேரில் இவ்வாறு மண்ணறைகளை சந்திப்பதால் (ஸியாரத் செய்வதால்) உள்ளம் உருகும்கண்ணீர் கசியும்மறுமைநாள் நினைவு வரும். நாமும் ஒரு நாள் இறந்து இவ்வாறு மண்ணுக்குள் புதைந்துபோவோம் என்ற எண்ணம் புதுப்பிக்கப்படும்போதுபாவங்கள் செய்வதை மனிதன் தவிர்ப்பான். மறுமைநாளைப் பற்றி அச்சம் அவனுக்கு ஏற்படும். இதனால்தான் மண்ணறைகளை சந்திப்பது விரும்பத்தக்கது என்கிறது இஸ்லாம்.

 

மனிதன் மரணமடைந்தவர்களை சந்திக்க மண்ணறைகளுக்கு செல்லும்போதுஅவர்கள் நேற்று இந்த உலகத்தில் இவன் உண்பதை போல் உண்டுகொண்டும்இவன் பருகுவதை போல் பருகியும்இவன் உலகை அனுபவிப்பதைப் போன்று அனுபவித்தும் இருந்தார்கள் என்பதை உணர்கிறான். ஆனால், “இப்பொழுது அவர்களின் செயல்களை நம்பியே இருக்கிறார்கள். நன்மைகளை செய்திருந்தால் நன்மைகளை அடைகிறார்கள். தீமைகளை செய்திருந்தால் தீமைகளை அடைகிறார்கள்” என்ற சிந்தனையால் அவனின் உள்ளம் படிப்பினை பெறுகிறது. மென்மையடைகிறது. மேலும்இறைவனுக்கு மாறுசெய்வதை விட்டும் மீண்டுகட்டுபடுவதின் மூலம் இறைவனிடம் திரும்புகிறான்.

 

மையவாடிக்குச் செல்வது

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாள்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) 'பகீஉல் ஃகர்கத்மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு சென்று, ( اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ ) “இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள் நூல்:- முஸ்லிம்-1773

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

فَمَنْ أَرَادَ أَنْ يَزُورَ فَلْيَزُرْ وَلاَ تَقُولُوا هُجْرًا ) யார் மண்ணறைகளுக்கு சென்று தரிசனம் (ஸியாரத்) செய்து வருவதை விரும்புகிறாரோ அவர் செய்து வரட்டும். ஆனால் (அங்கு) தேவையற்ற பேச்சைப் பேச வேண்டாம். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் புரைதா (ரலி)  அவர்கள் நூல்:- நசாயீ-2006

 

மண்ணறைக்கு ஸியாரத்திற்காக செல்லும்போது அங்கே தேவையற்ற உலகப் பேச்சுக்களை முற்றிலுமாக தவிர்ந்துகொள்ள வேண்டும். மண்ணறை என்பது நமது உலகப் பயணம் துண்டிக்கப்பட்டு மறுமை பயணத்தைத் துவக்கும் இடமாகும். விவரமறியாத சிறுவ சிறுமியர்கள்பைத்தியக்காரன் அல்லது உலக மோகம் உள்ளவனைத் தவிர மற்றவர்கள் மண்ணறைக்கு அருகில் உலகப் பேச்சுக்களை பேச மாட்டார்கள்.

 

மண்ணறைக்கு சென்றால் அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் பயன்பெறும் விதமாக குர்ஆனின் சில அத்தியாயங்கள்ஸலவாத்துக்கள்திக்ரு தஸ்பீஹ்கள் என ஏதேனும் ஓதி அதன் நன்மைகளை அந்த மண்ணறைவாசிகளுக்கு அன்பளிப்பு (ஈசால் ஸவாப்) செய்யலாம்.

 

நாம்மையவாடிக்கு சென்றால் அங்கு அடங்கப்பட்டுள்ள அனைத்து மண்ணறைவாசிகளுக்காகவும் பிரார்த்திக்க வேண்டும். அங்கு நமது பிரார்த்தனையை பொதுவாக்குவது சிறந்தது.

 

பெற்றோரைச் சந்தித்தல்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், ( اسْتَأْذَنْتُ رَبِّي في أَنْ أَسْتَغْفِرَ لَهَا، فَلَمْ يُؤْذَنْ لِي، وَاسْتَأْذَنْتُهُ في أَنْ أَزُورَ قَبْرَهَا، فَأُذِنَ لِي، فَزُورُوا القُبُورَ؛ فإنَّهَا تُذَكِّرُ المَوْتَ ) "நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது மண்ணறையைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவேமண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனெனில்அவை மரணத்தை நினைவூட்டும்!" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-1777அபூதாவூத்-2815நஸாயீ-2007இப்னுமாஜா-1561முஸ்னது அஹ்மத்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ زَارَ قَبْرَ وَالِدَيْهِ أَوْ أَحَدِهِمَا يَوْمَ الْجُمُعَةِ، فَقَرَأَ عِنْدَهُ (يَسٌ)، غُفِرَ لَهُ ) யார் வெள்ளிக்கிழமையன்று தனது பெற்றோர்கள் அல்லது அவர்களில் ஒருவரின் மண்ணறைக்குச் சென்று யாசீன் அத்தியாயத்தை ஓதுகிறாரோ அவர் மன்னிக்கப்படுவார். அறிவிப்பாளர்:- அபூபக்ர் (ரலி) அவர்கள் நூல்:- ஜாமிஉ ஸஙீர் - இமாம் சுயூத்தீஅல்காமில் இமாம் அப்துல்லாஹ் பின் அதீளயீஃபு ஜாமிஉ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ زَارَ قَبْرَ أَبَوَيْهِ أَوْ أَحَدِهِمَا فِي كُلِّ جُمُعَةٍ غُفِرَ لَهُ، وَكُتِبَ بَرًّا ) யார் தமது பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருடைய மண்ணறையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஸியாரத் செய்வாரோ அவருடைய பிழைகள் பொறுக்கப்படுவதுடன்அவர் நன்றியுள்ள நல்லடியாராகவும் எழுதப்படுகிறார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- முஃஜமுல் அஸ்வத் இமாம் தப்ரானீஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீஜாமிஉஸ் ஸஙீர்அல்ஃபிர்தவ்ஸ் இமாம் தைலமீநவாதிருல் உஸூல்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( منَ زارَ قبرَ أبيهِ أو أمِّهِ أو عمَّتِهِ أو خالتِهِ أو أحدُ قراباتِهِ كتب لَهُ حُجَّةٌ مبرورةٌ ) யார் தமது பெற்றோர் அல்லது தந்தையுடன் பிறந்தவர் அல்லது தாயுடன் பிறந்தவர் அல்லது உறவினர் ஒருவரின் (மண்ணறையை) ஸியாரத் செய்வாரோ அவருக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் நற்கூலி வழங்கப்படும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அல்ஃபவாயிதுல் மஜ்மூஅ ( الفوائد المجموعة ) இமாம் ஷவ்கானீதஹீரத்துல் ஹுஃபால் ( ذخيرة الحفاظ ) இமாம் இப்னு கைசரானீ 

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( وَكَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ يَزُورُ قَبْرَ أَبِيهِ فَيَقِفُ عَلَيْهِ وَيَدْعُو لَهُ ) உமர் (ரலி) அவர்கள் தமது தந்தையின் மண்ணறைக்கு ஸியாரத் சென்றுஅந்த மண்ணறைக்கு அருகில் இருந்து தமது தந்தை(யின் நல்வாழ்வு)க்காக பிரார்த்தித்தார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

 

குறிப்பிட்ட நாள்களில் 

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் இரவு அருமை நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் நான் தேடினேன். அவர்களைத் தேடிக்கொண்டு வந்தபோது அவர்கள் 'அல்பகீஉஎனும் பொதுமையவாடியில் விண்ணை நோக்கி தலையை உயர்த்தியவாறு இருந்தார்கள்.

 

(என்னைக் கண்டதும்) அவர்கள், ( يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ) "ஆயிஷா! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உனக்கு அநீதி இழைத்துவிடுவார்கள் என நீ அஞ்சிக் கொண்டிருந்தாயா?" என்று கேட்டார்கள். நான், "இதுவெல்லாம் எனக்கில்லை. எனினும் தங்கள் மனைவியருள் ஒருரிடம் தாங்கள் சென்றுவிட்டீர்களோ என நான் எண்ணினேன்" என்று கூறினேன்.

 

அப்போது அண்ணலார், ( إِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ ) “உயர்ந்தோன் அல்லாஹ் ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் முதல் வானத்திற்கு இறங்கி, 'கல்புகுலத்தாரின் ஆடுகளின் ரோமங்களைவிட அதிகமான (மக்களுக்குப்) பாவமன்னிப்பு வழங்குகிறான்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-670இப்னுமாஜா-1379முஸ்னது அஹ்மத்-24825முஸன்னப் இப்னு அபீஷைபாஅல்பஸ்ஸார்பைஹகீ-3545முஸ்னது அப்து பின் ஹுமைத்-1509

 

பராஅத் இரவைப்போன்று இறைவனின் விஷேச கருணை இறங்கும் இரவுகளில் (கப்ரு ஸியாரத் எனும்) மண்ணறைவாசிகளைச் சந்தித்து அவர்களுக்காகப் பிரார்த்திப்பது விரும்பத்தக்க செயல் எனத் தெளிவாகிறது.

 

ஓத வேண்டியவை

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், "நாயகமே! மண்ணறைகளில் இருப்பவர்களுக்காக நான் என்ன ஓத வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلاَحِقُونَ ) “(பொருள்:) மண்ணறைகளில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும்முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம்அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்" என்று சொல்! என்றார்கள். நூல்:- முஸ்லிம்-1774

 

புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் மக்களுக்குஅவர்கள் மண்ணறைகளுக்கு செல்லும்போது கூற வேண்டியதைக் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அ(வ்வாறு கற்றுக் கொண்ட)வர்களில் ஒருவர் ( السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ ) “(பொருள்:) மண்ணறைகளில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும்முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நாம் அல்லாஹ் நாடினால் உங்களிடம் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். நான் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் விமோசனத்தை வேண்டுகிறேன்" என்று (நபியவர்கள் கற்றுக்கொடுத்ததாகக்) கூறினார்.  நூல்:- முஸ்லிம்-1775

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவின் மண்ணறைகளைக் கடந்து சென்றபோது அவற்றை முன்னோக்கி நின்று, "இந்த மண்ணறையில் உள்ளவர்களே! ( السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ ) (பொருள்:) “உங்கள் மீது சாந்தி பொழியட்டும். அல்லாஹ் உங்களையும் எங்களையும் மன்னிப்பானாக. நீங்கள் எங்களை முந்திச் சென்றுவிட்டீர்கள். நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். அறிவிப்பாளர்:- புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-973

 

பலன் உண்டு

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن دخلَ المقابرَ فقرأَ سورةَ  يس  خفَّفَ عنهُم يومَئذٍ ، وكان لهُ بِعَددِ مَن فيها حَسناتٌ ) ஒருவர் மையவாடியில் நுழைந்து யாசீன் அத்தியாயத்தை ஓதி அதன் நன்மைகளை அங்குள்ள மண்ணறைவாசிகளுக்கு அன்பளிப்பு செய்தால்அதன்மூலம் அந்த மண்ணறைவாசிகளுக்கு வேதனைகள் இலேசாக்கப்படுகிறது. மேலும்இதை ஓதியவருக்கு அந்த மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டிருபவர்களின் எண்ணிக்கை அளவு நன்மைகள் வழங்கப்படுகிறது. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் குர்துபீமிர்காத்பிஹிஷ்திஜேவர்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَرَّ عَلَى الْمَقَابِرِ وَقَرَأَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) إِحْدَى عَشْرَةَ مَرَّةً، ثُمَّ وَهْبَ أَجْرَهُ لِلْأَمْوَاتِ ، أُعْطِيَ مِنَ الْأَجْرِ بِعَدَدِ الْأَمْوَاتِ ) மண்ணறைகளை கடந்து செல்பவர் அங்கு பதினோரு தடவை ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ (112வது) அத்தியாயத்தை ஓதி இறந்தவர்களுக்காக அதன் நன்மையை அன்பளிப்புச் செய்வாரானால், (அன்பளிப்பு செய்த) அவருக்கு அந்த மண்ணறையில் அடக்கம்  செய்யப்பட்டிருபவர்களின் எண்ணிக்கை அளவு நன்மைகள் வழங்கப்படும். நூல்:- கன்ஸுல் உம்மால்

 

இமாம் ஷஅபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மதீனத்து அன்சாரிகளில் யாராவது இறந்துவிட்டால் அவர்கள் இறந்தவரின் மண்ணறைக்கு வரப் போக இருப்பார்கள். இறந்தவருக்கு நன்மைகள் கிடைக்கவேண்டும் என்றெண்ணி குர்ஆன் ஓதுவார்கள். நூல்:- கிதாபுர் ரூஹ் பக்கம்-14ஷரஹுஸ் ஸுதூர் பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனிலில் மய்யித்தி

 

பெண்கள் செல்லலாம்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ زَوَّارَاتِ الْقُبُورِ ) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் பெண்களை சபித்தார்கள். நூல்:- திர்மிதீ-976

 

இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنَّ هَذَا كَانَ قَبْلَ أَنْ يُرَخِّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي زِيَارَةِ الْقُبُورِ فَلَمَّا رَخَّصَ دَخَلَ فِي رُخْصَتِهِ الرِّجَالُ وَالنِّسَاءُ ) "அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மண்ணறைகளை சந்திக்கலாம் என அனுமதி வழங்குவதற்கு முன்னர்தான் இவ்வாறு (சபித்துக்) கூறினார்கள். எப்போது அனுமதி வழங்கிவிட்டார்களோ அந்த (பொது) அனுமதிக்குள் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து கொள்கின்றனர். (எனவே பெண்களும் மண்ணறைகளை சந்திக்கலாம்)" என அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். நூல்:- திர்மிதீ-976

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِيِّ فَوْقَ ثَلاَثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ وَنَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلاَّ فِي سِقَاءٍ فَاشْرَبُوا فِي الأَسْقِيَةِ كُلِّهَا وَلاَ تَشْرَبُوا مُسْكِرًا ) நான் உங்களை மண்ணறைகளைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால்போதையூட்டுகின்றவற்றை அருந்தாதீர்கள்.  அறிவிப்பாளர்:-  புரைதா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்1778அபூதாவூத்-3212திர்மிதீ-1792முஸ்னது அஹ்மத்

 

நபிமொழித்துறை அறிஞர்கள் கூறுகின்றனர். குர்ஆன் வசனங்களில் “நாசிக் – மன்சூக்” (மாற்றக்கூடியது -  மாற்றப்பட்டது) இருப்பதைப் போன்று நபிமொழிகளிலும் “நாசிக் – மன்சூக்” உண்டு (என்பதை மேற்காணும் நபிமொழி தெளிவுப்படுத்துகிறது.) திர்மிதீயில் (976) வரும் நபிமொழி மன்சூக் (மாற்றப்பட்டது) ஆகும்.

 

ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كَانَتْ فَاطِمَةُ بِنْتُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُورُ قَبْرَ عَمِّهَا حَمْزَةَ كُلَّ  جُمُعَةٍ فَتُصَلِّي وَتَبْكِي عِنْدَهُ ) அருமை நாயகம் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தமது சிறிய) தாத்தா ஹம்ஸா (ரலி) அவர்களின் மண்ணறைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் (ஸியாரத்) சென்றுஅழுது பிரார்த்திப்பார்கள். நூல்:- முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 3/572ஹாகிம்-1/377பைஹகீ-4/78நைலுல் அவ்தார்-4/95சுப்லுஸ் ஸலாம்-2/151மஃகாஸீஅல்பிதாயா வந்நிஹாயா

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( وَكَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا تَزُورُ قَبْرَ أَخِيهَا عَبْدِ الرَّحْمَنِ وَقَبْرَهُ بِمَكَّةَ ) ஆயிஷா (ரலி) அவர்கள் மக்காவில் அடங்கப்பெற்றிருந்த தமது சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை மக்காவுக்கு சென்று ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். நூல்:- முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்மிஷ்காத் பக்கம்-149

 

அப்துல்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் ஆயிஷா (ரலி) அவர்கள் அடக்கத்தலத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது நான், ( يَا أُمَّ الْمُؤْمِنِينَ مِنْ أَيْنَ أَقْبَلْتِ ؟ ) "இறைநம்பிக்கையாளர்களின் தாயே! எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று வினவினேன். அன்னார், ( مِنْ قَبْرِ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ) "(இறந்துவிட்ட) என்னுடைய சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களின் அடக்கத்தலத்திலிருந்து (ஸியாரத் செய்துவிட்டு) வருகிறேன்" என்று பதிலளித்தார்கள்.

 

நான், ( أَلَيْسَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ زِيَارَةِ الْقُبُورِ؟ ) "கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (பெண்கள்) அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதைவிட்டும் தடுக்கவில்லையா?" என்று வினவினேன். அன்னார்,  ( نَعَمْ، كَانَ نَهَى ثُمَّ أَمَرَنَا بِزِيَارَتِهَا ) "ஆம்! (நபியவர்கள் ஆரம்பத்தில்) தடுத்திருந்தார்கள்பிறகு எங்களுக்கு அடக்கத்தலங்களை ஸியாரத் செய்துவருமாறு கட்டளையிட்டார்கள்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அஸ்ஸுனனுல் குப்ரா இமாம் பைஹகீஹாகிம்தப்ரானீமுஸ்னது அபீயஅலா

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كُنْتُ أَدْخُلُ بَيْتِي الَّذِي دُفِنَ فِيهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي، فَأَضَعُ ثَوْبِي، وَأَقُولُ: إِنَّمَا هُوَ زَوْجِي وَأَبِي، فَلَمَّا دُفِنَ عُمَرُ مَعَهُمْ، فَوَاللهِ مَا دَخَلْتُهُ إِلَّا وَأَنَا مَشْدُودَةٌ عَلَيَّ ثِيَابِي، حَيَاءً مِنْ عُمَرَ ) அருமை நாயகம் (ஸல்) அவர்களையும்என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களையும் நல்லடக்கம் செய்யப்பட்ட (எனது) வீட்டுக்குள்ளே நான் நுழையும்போது உடலைப் போர்த்திக்கொள்ளும் ஹிஜாப் இல்லாமல் நுழையும் பழக்கமுள்ளவளாக இருந்தேன். இவர்கள் என்னுடைய கணவர் மற்றும் தந்தை தானே! (பரவாயில்லை) என்று சொல்லிக்கொள்வேன். அதே இடத்தில் பின்னர் உமர் (ரலி) அவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுக்கு வெட்கப்பட்டவளாக நான் ஹிஜாப் அணியாமல் அங்கு நுழைந்ததில்லை. நூல்:- முஸ்னது அஹ்மத்மிஷ்காத் பக்கம்-154

 

உயிருடன் இருப்பவர்களைக் கண்டால் தானே வெட்கம் ஏற்படும். அதாவதுஅருமை நாயகம் (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி)உமர் (ரலி) ஆகிய மூன்று பேரும் மண்ணுக்குக் கீழ் உயிருடன் இருக்கிறார்கள் என்பது ஆயிஷா (ரலி) அவர்களின் கருத்து.

 

உயிருடன் இருப்பவர்களுக்கு முன்னாள் நடந்து கொள்வது போன்றே மரணமடைந்துவிட்டவர்களுக்கு முன்னாள் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் நடைமுறை பெண்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரியாகும்.

 

பேரறிஞர் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.‌ பெண்கள் ஸியாரத் செய்தல் அனுமதிக்கப்பட்ட ஆகுமான நன்மையான காரியமாகும். ஆனால்ஸியாரத்தின்போது அந்நிய ஆண்களுடன் எவ்வித திரைகளுமில்லாமல் கலந்துவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி கலக்கும் நிலை இருந்தால் பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது.

 

ஸியாரத்திற்குச் செல்லும் ஆண்பெண் இருபாலரும் மார்க்கம் கூறுகின்ற ஒழுக்கங்களைப் பேணி நடந்துகொள்ள வேண்டும். இது குறித்து ஆண்களைவிட பெண்கள் அதிக கவனமாய் இருக்க வேண்டும்.

 

மார்க்கமறிந்த நல்லடியார் ஒருவர் தாம் பார்க்கக்கூடாத பெண்ணின் முகத்தைக் கண்டு நாணமுறுவது போல்முகம் திறந்து ஸியாரத் செய்யும் பெண்களைக் கண்டு இறைநேசர்கள் வெட்கமடைகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

மேலும்அந்நியர்களின் மண்ணறைகளை பெண்கள் ஸியாரத் செய்யலாம். ஆனால்பர்தா முறையை கடைபிடிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

 

இறைநேசர்களிடம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் உஹுதுப் போரில் கொல்லப்பட்ட உயிர்த்தியாகிகளின் மண்ணறைகளை சுட்டிக்காட்டி, ( يَا أَيُّهَا النَّاسُ ائْتُوهُمْ وَزُورُوهُمْ وَسَلِّمُوا عَلَيْهِمْ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا يُسَلِّمُ عَلَيْهِمْ أَحَدٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلَّا رَدُّوا عَلَيْهِ السَّلَامَ ) “மக்களே!  அல்லாஹ்விற்காக வாழ்ந்துஉயிர் நீத்த இவர்களை அடிக்கடி சந்தியுங்கள். இவர்களிடம் வாருங்கள். இவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர்களுக்கு மறுமைநாள் வரை சலாம் சொல்லுகிற எவருக்கும் அவர்கள் பதில் சலாம் சொல்லாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள். நூல்:- கிதாபுல் ஜிஹாத் இப்னு முபாரக்தபக்காத்துல் குப்ரா இப்னு சஅத்ஹாகிம்அல்பிதாயா வந்நிஹாயா

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உஹுதில் கொல்லப்பட்டோரின் (உயிர்த்தியாகிகளின்) மண்ணறைகளுக்குச் சென்று வருபவர்களாக இருந்தார்கள். அவர்கள் (உஹுத் மலையின்) கணுவாய் அருகில் வந்ததும் ( السَّلَامُ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ، فَنِعْمَ عُقْبَى الدَّارِ ) "நீங்கள் பொறுமை காத்ததனால் உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும். மறுமையின் முடிவு நல்லதாக அமைந்துவிட்டது" என்று கூறுவார்கள்.

 

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அச்செயலை ஒவ்வொரு ஆண்டும் (தமது ஆட்சியின்போது) மேற்கொண்டு வந்தார்கள். பிறகு உமர் (ரலி)பிறகு உஸ்மான் (ரலி) ஆகியோரும் இவ்வாறு மேற்கொண்டு வந்தனர்.

 

வரலாற்றாசிரியர் இமாம் வாகிதீ (ரஹ்) அவர்கள், "மேற்கண்ட நிகழ்வுகள் குறித்து உம்மு சல்மா (ரலி)அபூசயீத் (ரலி)அபூஹுரைரா (ரலி)இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறார்கள். நூல்:- மஃகாஸீஅல்பிதாயா வந்நிஹாயா

 

நல்லடியார்கள் தமது மண்ணறைகளில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதும்தம்மை யார் யார் ஸியாரத் செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. இத்தகைய ஆற்றலை அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு வழங்கியுள்ளான்.

 

இமாம் கஸ்ஸாலீ (ரஹ்)  அவர்கள் கூறுகிறார்கள். இறைநேசர்களின் மண்ணறைகளை நாடி பயணம் செய்வது (முஸ்த்தஹப் எனும்) விரும்பத்தக்கதாகும். நூல்:- இஹ்யா

 

இறைநேசர்களிடம் ஸியாரத் செய்கின்றவர்கள் மண்ணறைகளை நோக்கி ஒழுங்குமரியாதையுடன் நின்றுசலாம் கூறிகுர்ஆனிலிருந்து யாசீன் போன்ற அத்தியாயங்களை ஓதி, பிரார்த்திக்க வேண்டும்.  இவ்வாறே 'ரத்துல் முக்தார்ஃபத்ஹுல் கதீர்ஷரஹ் மனாகில் ஃபலாஹ்போன்ற மார்க்கச் சட்ட நூல்கள் கூறுகின்றன.

 

இறைநேசர்களின் ஸியாரத்திற்கு செல்லும்போதுஊதுபத்திபழம்தேங்காய்சர்க்கரைபூ என இது போன்ற பொருள்களை வாங்கிக்கொண்டு தான்  செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. தர்காவுக்கு சென்று தலைமுடிகளை இறக்குவதாகவும்பெண்பிள்ளைகளுக்கு காது குத்துவதாகவும் நேர்ச்சை செய்வதுஅதற்காக அங்கு சென்று தலைமுடிகளை மழிப்பதும்காது குத்துவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத செயல் என்று விளங்க வேண்டும்.

 

சிதைந்து போகாது

 

பைத்துல் முகத்தஸ் எனும் புனித பள்ளியின் கட்டுமான பணியை ஜின்கள் மூலம் செய்து கொண்டிருந்தபோது இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் அதே நிலையில் மரணத்தைத் தழுவி ஓராண்டுக்கு பின் அவர்களின் உடம்பில் எவ்வித மாற்றமும் நாற்றமோ ஏற்படாமல் இருந்தது. இது குறித்து திருக்குர்ஆன் (34:14) இயம்புகிறது.

 

இறைத்தூதர் உஸைர் (அலை) அவர்கள் மரணித்து நூறு ஆண்டுகள் வரை அப்படியே இருந்தார்கள். இது குறித்து திருக்குர்ஆன் (2:259) இயம்புகிறது.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَرَرْتُ  عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ ) நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4736

 

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْأَنْبِيَاءَ أَحْيَاءٌ فِي قُبُورِهِمْ يُصَلُّونَ ) நிச்சயமாக இறைத்தூதர்கள் தமது மண்ணறையில் உயிருடன் இருந்தவாறு தொழுதுக்கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூயஅலாபஸ்ஸார்

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் துஸ்தர் கோட்டை கைப்பற்றப்பட்டது. அங்கு ஹுர்முஜானுடைய  இல்லத்தில் இறைத்தூதர் தானியால் (அலை) அவர்களின் புனித உடல் அழியாமல் வைக்கப் பெற்றிருந்த பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் புனித உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் இரத்த ஓட்டம் உள்ளதாகவும் அந்த சங்கையான உடல் பல நூற்றாண்டுகளாக எவ்வித பேதமுமின்றி அப்படியே இருந்தது. நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 241 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். அன்னாரின் புனித உடலை யூப்ரடீஸ் நதிக்கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 1937 ஆம் ஆண்டு யூப்ரடீஸ் நதிக்கரையோரத்தில் ஏற்பட்ட வெள்ள அரிப்பின் காரணத்தால் அன்றைய அரசாங்கம் இமாம் அவர்களின் புனித உடலை இடம் மாற்றியது. அப்போது அவர்களுடைய உடல் சிறிது நேரத்துக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டதை போன்று மிகவும் பொலிவுடன் காட்சியளித்தது. புனித உடலை எடுத்து "ஹைதர் கானா" எனுமிடத்திற்கு தெற்குப் பகுதியில் "ஆரிஃப் அகா" எனுமிடத்தில் மறுஅடக்கம் செய்யப்பட்டது. அவ்விடத்தில் "இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் துயில்கொள்ளும் இடம்" என்று எழுதப்பட்டுள்ளது. நூல்:- மராகிதே பக்தாத்

 

“அவர்கள் மரணித்த பிறகு உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களை மண்ணறையில் அடக்கம் செய்தவர்கள் அனைவரும்உயிருடன் இருந்த ஒருவரை பூமிக்குள் புதைத்து கொலை செய்து விட்டார்கள் என்ற குற்றத்தை ஏற்கவேண்டிய நிலை ஏற்படும். மேலும்அப்படி இவர்கள் மரணிக்கவில்லையென்றால் இவர்களின் சொத்துகளுக்கு யாரும் பங்குதாரராக முடியாது. இவர்களின் மனைவிகள் இத்தா (எனும் காத்திருப்பு காலம்) இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று இஸ்லாம் தெளிவுபடுத்தியிருக்கும்" என்று குதர்க்கம் பேசுவோர் சற்று யோசிக்க வேண்டும்.

 

அதாவதுஒரு மனிதரின் உடலிலிருந்து உயிர் வெளியேற்றிவிட்டது என்று உறுதியான பிறகு தான் அவர் நல்லடக்கம் செய்யப்படுகிறார். அதன் பிறகு அல்லாஹுத்தஆலா அவனது ஆற்றலால் அவருக்கு மீண்டும் உயிரூட்டுகிறான். எனவேஅதைத்தான் நாம், "அவர் மண்ணறையில் உயிருடன் இருக்கிறார்" என்று கூறுகிறோம்.

 

மாறாகஉயிர்பெற்ற அவர் மண்ணறையிலிருந்து வெளியேறி உலகத்திற்கு வந்துவிட்டால்இவர்களின் வாதப்படி அவரின் சொத்துக்கள் பங்கு வைக்கப்படாதுஇவரின் மனைவி இத்தா கடைப்பிடிக்க தேவையில்லை என்று சொல்லலாம். ஆனால்அப்படி எதுவும் நிகழ்வதில்லையே! எனவேதான்இவர்களின் வாதம் தவறானது என்று கூறுகிறோம். "இறைநேசர்கள் மண்ணறையில் உயிருடன் இருக்கிறார்கள்" என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரங்களை ஏராளம் உண்டு.

 

பதிலைப் பெறலாம்

 

முஹம்மத் பின் அபீசயீத் சூஃபி அல்கர்கீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( حَجَجْتُ وَزَرْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَبَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَ الْحُجْرَةِ إِذْ دَخَلَ الشَّيْخُ أَبُو بَكْرٍ الدِّيَارِبَكْرِيُّ وَوَقَفَ بِإِزَاءِ وَجْهِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  وَقَالَ : السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ ، فَسَمِعْتُ صَوْتًا مِنْ دَاخِلِ الْحُجْرَةِ : وَعَلَيْكَ السَّلَامُ يَا أَبَا بَكْرٍ ، وَسَمِعَهُ مَنْ حَضَرٍ  ) நான் ஹஜ் செய்த பின்னர் ஸியாரத்திற்காக மதீனா நகர் சென்றேன். கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்துவிட்டு அதற்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷேக் அபூபக்ர் தியார் பக்ரீ (ரஹ்) அவர்கள் அங்கு வந்து மண்ணறைக்கு முன்பு நின்றவராக, "அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்" என்று கூறினார்கள். நான் புனிதமிகு மண்ணறையிலிருந்து, “வ அலைக்க சலாம் யா அபாபக்ர்" என்று பதில் வந்ததை செவியுற்றேன். அப்போது அங்கு கூடியிருந்தோர் அனைவரும் அதனை கேட்டனர். நூல்:- அல்ஹாவி இமாம் சுயூத்தீ (ரஹ்)

 

ஓர் இளைஞர் பள்ளிவாசலை (தங்கி) வழிபாடு செய்துகொண்டிருந்தார். அவரை ஒரு பெண் விரும்பிதன் ஆசைக்கு இணங்குமாறு அழைத்தாள். அவர்அவளுடன் வீட்டிற்குள் நுழையும்வரை அழைத்துக்கொண்டே இருந்தாள்.

 

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர், “(இறையச்சம் கொண்டவர்களுக்கு ஷைத்தானின் பலமான தூண்டல் ஏற்பட்டால் (உடனே) அவர்கள் (அல்லாஹ் தரும் தண்டனையை) நினைத்துப்பார்ப்பார்கள். அப்போது அவர்கள் விழித்துக்கொள்வார்கள். திருக்குர்ஆன்:- 7:201)” இந்த வசனத்தை நினைத்துப்பார்த்தார். உடனே மூர்ச்சியாகி கீழே விழுந்தார்.

 

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த அவர்மறுபடியும் அந்த வசனத்தையே நினைத்து உருகினார். இறுதியில் அவர் இறந்துவிட்டார்.

 

உமர் (ரலி) அவர்கள் வந்து அவருடைய தந்தைக்கு ஆறுதல் கூறினார்கள். அவரை இரவில் அடக்கம் செய்திருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் சென்றுதம்முடன் இருந்தவர்களோடு அவரது மண்ணறைக்கு அருகில் தொழுகை நடத்தினார்கள்.

 

பிறகு உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்து, ( يَا فَتَى وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ ) "இளைஞரே! தன் இறைவனின் சன்னிதானத்தை அஞ்சியவருக்கு இரு சொர்க்கச் சோலைகள் உண்டு" (திருக்குர்ஆன்:- 55:46) என்று கூறினார்கள்.

 

உடனே அந்த இளைஞர், ( يَا عُمَرُ، قَدْ أَعْطَانِيهِمَا رَبِّي، عَزَّ وَجَلَّ، فِي الْجَنَّةِ مَرَّتَيْنِ ) "உமரே! என் இறைவன் எனக்கு அவ்விரண்டு சோலைகளையும் வழங்கிவிட்டான்" என்று மண்ணறையின் உள்ளேயிருந்து பதிலளித்தார். நூல்:- தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர்தஃப்சீர் இப்னு கைய்யிம்தஃப்சீர் இப்னு கஸீர் அல்அஃராஃப் வசனம்-201

 

சஅத் (ரலி) அவர்கள் (இறந்த தியாகிகளுக்கு) சலாம் சொல்பவர்களாக இருந்தார்கள். பிறகு தம் தோழர்களை நோக்கி, ( أَلَّا تُسَلِّمُونَ عَلَى قَوْمٍ يَرُدُّونَ عَلَيْكُمْ ) "உங்களுக்கு பதில் சலாம் சொல்லுகின்ற கூட்டத்தினருக்கு நீங்கள் சலாம் சொல்லமாட்டீர்களா?" என்று கேட்பார்கள். நூல்:- மஃகாஸீஅல்பிதாயா வந்நிஹாயா

 

அத்தாஃப் பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

رَكِبْتُ يَوْمًا إِلَى قُبُورِ الشُّهَدَاءِ  وَكَانَتْ لَا تَزَالُ تَأْتِيهِمْ  فَنَزَلْتُ عِنْدَ حَمْزَةَ فَصَلَّيْتُ مَا شَاءَ اللَّهُ أَنْ أُصَلِّيَ، وَمَا فِي الْوَادِي دَاعٍ وَلَا مُجِيبٍ، إِلَّا غُلَامًا قَائِمًا آخِذًا بِرَأْسِ دَابَّتِي، فَلَمَّا فَرَغْتُ مِنْ صَلَاتِي قُلْتُ هَكَذَا بِيَدِي: السَّلَامُ عَلَيْكُمْ. قَالَتْ: فَسُمِعْتُ رَدَّ السَّلَامِ عَلَيَّ يَخْرُجُ مِنْ تَحْتِ الْأَرْضِ، أَعْرِفُهُ كَمَا أَعْرِفُ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَنِي )

ஒரு நாள் நான் தியாகிகளின் அடக்கத்தலத்திற்குப் பயணம் செய்தேன். நான் தொடர்ந்து அடக்கத்தலத்திற்கு சென்று வருபவராக இருந்தேன். (ஒருநாள்) ஹம்ஸா (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இறங்கினேன். நான் தொழ வேண்டுமென்று அல்லாஹ் நாடிய தொழுகைகளைத் தொழுதேன். அந்த ஓடையில் எனது வாகனப் பிராணியின் தலையைப் பிடித்துக்கொண்டு நிற்கும் அடிமை ஒருவரைத் தவிர வேறு (பிரார்த்தித்து) அழைப்பவரோ அதற்கு பதிலளிப்பவரோ எவரும் இல்லை. நான் எனது தொழுகையை நிறைவு செய்து எனது கையால் (இலேசாக உயர்த்தி) இவ்வாறு (சைகை செய்து) 'அஸ்ஸலாமு அலைக்கும்என்று கூறியபோதுஎனக்குத் தரைக்குக் கீழிருந்து வெளியான பதில் சலாமை செவியுற்றேன்.

 

அதனை மாண்பும் வல்லமையும் கொண்ட அல்லாஹ் என்னை படைத்ததை நான் அறிவதைப் போன்று இரவு பகலை நான் அறிவதைப் போன்று தெளிவாக அறிகிறேன். உடனே எனக்கு (வியப்பால்) ஒவ்வொரு முடியும் சிலிர்த்துவிட்டது. நூல்:- இப்னு அபீதுன்யாஅல்பிதாயா வந்நிஹாயா

 

பிரார்த்திக்கலாம் 

 

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ( إنّي لأتبرَّكُ بأبي حنيفةَ وأجيءُ إلى قبرِهِ في كلّ يومٍ يعني زائرًا فإذا عَرَضَت لي حاجةٌ صلَّيتُ ركعتينِ وجئتُ إلى قبرِهِ وسألتُ الله تعالى الحاجةَ عندَهُ فما تَبعُدُ عني حتى تُقضَى  ) நான் ஒவ்வொரு நாளும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் மண்ணறையை தரிசிக்கச் செல்வேன். எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் அந்த இடத்திலேயே தொழுதுவிட்டு (இமாம் அபூஹனீபா - ரஹ் அவர்களை வசீலாவாக வைத்து அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பேன். சிறிது நேரத்திற்குள் எனது தேவை பூர்த்தியாக்கப்படும். அறிவிப்பாளர்:- அலீ பின் மைமூன் (ரஹ்) அவர்கள் நூல்:-  தாரிக்கு பக்தாத் இமாம் அபூபக்ர் அல்கத்தீப் 1/122ஹைராத்துல் ஹிசான் இமாம் இப்னுஹஜர் பக்கம்-69

 

நபிமொழித்துறை வல்லுனர் அல்ஹாபிழ் இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

وَمَا حَلَّتْ بِي شِدَّةٌ فِي وَقْتٍ مُقَامَى بِطُوسٍ فَزِرْتُ قَبْرُ عَلَى بْنِ مُوسَى الرِّضَا صَلَوَاتُ اللَّهِ عَلَى جَدِّهِ وَعَلَيْهِ وَدَعَوْتُ اللَّهَ إِزَالَتَهَا عَنِّى إِلَّا أَسْتَجِيبُ لِي وَزَالَتْ عَنِّى تِلْكَ الشِّدَّةُ وَهَذَا شَيْءٌ جَرَّبْتُهُ مِرَارًا فَوَجَدْتُهُ كَذَلِكَ )

நான் "தூஸ்” எனும் ஊரில் இருக்கும்போது எனக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால்உடனே (அஹ்லு பைத்தினரில் ஒருவரான) அலீ பின்  மூசா அர்ரிழா (ரஹ்) அவர்களுடைய மண்ணறையை ஸியாரத்து செய்வேன். அல்லாஹ் அன்னாருக்கும்அன்னாரின் பாட்டனாருக்கும் அருள்புரிவானாக! பிறகுஅல்லாஹ்விடம் பிரார்த்தித்தால்அது உடனே ஏற்றுக் கொள்ளப்படுவதோடு எனது கஷ்டமும் நீங்கிவிடும். இதை நான் பலமுறை பரீட்சித்துப் பார்த்தும் அவ்வாறே நடந்துள்ளது. நூல்:-  அஸ்ஸுகாத் 8/456 ( الثقات ) இமாம் இப்னு ஹிப்பான்

 

தண்டிக்கப்படும்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன் (ரலி) அவர்களின் மண்ணறையின் மீது ஒரு மனிதன் அசிங்கப்படுத்திவிட்டான். அதன் பிறகு அவன் பைத்தியம் பிடித்தவாறு நாய் ஊளையிடுவதைப் போன்று ஊளையிட்டுக் கொண்டிருந்தான். சில தினங்கள் கழித்து அவன் இறந்துபோய் விட்டான். அதன் பிறகு அவனுடைய மண்ணறையிலிருந்து ஊளைச் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நூல்:- நூருல் அப்ஸார்

 

யார் இறைநேசர்களை இழிவுப்படுத்தும் விதமாக நடந்து கொள்வானாவோஅவன் அதற்குரிய இறைதண்டனையை அனுபவிக்க நேரிடும்.

 

இஸ்லாம் கூறும் நல்லுபதேசங்களைப் பேணி வாழும் நல்லடியார்களாய்அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும்,







படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்...
திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு பல வீடுகளில் கணவன் மனைவி சேர்ந்து உறங்குவது கிடையாது ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே குழந்தைகளுடன் உறங்குவார்கள் இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்...

1. நெருக்கம் குறைகிறது...

கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் மனசு விட்டு பேச அல்லது காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கையறை நேரம்தான். இந்த நேரத்தை உறவை மேலும் வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் நண்பர்களே, இங்கு இருவேறு துருவங்கள் போல் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து இருப்பது கணவன் மனைவி உறவுக்கு அவ்வளவாக நல்லதல்ல என பாலியல் மற்றும் மனத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்...

2. எளிதில் சலித்துப் போய்விடும்...

படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் சலித்துவிடும், உங்கள் மனைவியோ, அல்லது கணவனோ ஆசையாக உங்களை தொடும்போது கூட உங்களுக்கு பெரிதாக எந்தவொரு உணர்ச்சியும் ஏற்படாது,

3. உடலுறவில் நாட்டமின்மை...

நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாகவே கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட அவ்வளவு பெரிதாக நாட்டமில்லாமல் போய்விடும்,

4. வேறு ஒருவர் மீது காதல்/ஆசை...

உங்களின் நெருக்கம் குறைவதால், நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறொருவர் மீது காதல்வயப்பட அதிக வாய்ப்புள்ளது, மேலும் உங்கள் மனைவியுடன் அல்லது கணவனுடன் தனிமையில் சேர்ந்து அமர்ந்து கரம் பிடித்து பேசுவதை கூட நீங்கள் விரும்பமாட்டீர்கள்...

5. சண்டைகள் & சந்தேகங்கள்...

ஒரு குடும்பத்தில் சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால் சந்தோஷம் பின் வாசல் வழியாக ஓடிவிடுமாம், எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் என்பது புருசன் பொண்டாட்டி வாழ்க்கையில் கூடவே கூடாது... ஒருவருக்கொருவர் விளையாடுவது, மற்றும் சிறுசிறு காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும்போதுதான் அடிக்கடி சண்டைகள் / ஏச்சுப் பேச்சுகள் கணவன் மனைவிக்குள் வரும். 

6. இந்நிலை இப்படியே நீடித்தால் இறுதியாக வெறுப்புதான் கிட்டும்...

அதாவது உங்களது கவனம் வேறொரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், வேறொருவரை நேசிக்க நீங்கள் ஆரம்பித்துவிட்டால் உங்களது துணையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள் ஆகவே நண்பர்களே...

உங்களை நம்பி கரம் பிடித்தவரை காதலியுங்கள், துணையை அணைத்து துயரம் தவிர்த்திடுங்கள்...

பிரபல்யமான பதிவுகள்