நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, செப்டம்பர் 09, 2022

தற்கொலையும், இஸ்லாமும்,

வாழ்ந்து காட்டுவோம்!

 

قال الله تعالي : وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا

 

قال رسول الله صلي الله عليه وسلم : مَنَ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

 

2003 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதியை (World Suicide Prevention Day) உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization) கடைபிடித்து வருகிறது. தற்கொலை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும், தற்கொலையைத் தடுக்க உதவுவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் தேசிய தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

 

உலகளாவிய ரீதியில் 40 விநாடிகளுக்கு ஒரு முறை என்ற ரீதியில் 3000 பேர்கள் தினமும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. பெண்களைவிட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

 

உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 8 லட்சம் மக்கள் தற்கொலை செய்து மடிகின்றனர். (40 விநாடிகளுக்கு ஒரு மரணம்).

 

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேரும், தமிழ்நாட்டில் சுமார் 10,000 பேரும், சென்னையில் 1300 பேரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். ஆண்டு தோறும் சுமார் 2 கோடி பேர் தற்கொலை முயற்சியிலிருந்து தப்புகிறார்கள்.

 

எனவே, உலக அளவில் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, கடன் தொல்லை, தீராத நோய், வியாபாரத்தில் நஷ்டம், மாமியார் மருமகள் சண்டை, பெற்றோர்களுடன் மனஸ்தாபங்கள் என்று தற்கொலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து எதிர்நீச்சல் போட்டு முன்னேற தெரியாத கோழைகளுக்கு தற்கொலை மிகச் சிறந்த ஆயுதமாக சித்தரித்து காட்டப்படுகிறது.

 

தற்கொலை என்பது தாங்க முடியாத துன்பத்திலிருந்து தப்பிக்க எடுக்கின்ற ஒரு தீவிர முயற்சியாகும்.

 

கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு தான் தற்கொலை. சாவதற்கு எடுக்கும் முயற்சியை, துணிச்சலாய் வாழ்வதில் காட்ட வேண்டும்.

 

தற்கொலை விஷயத்தில் படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் கிடையாது. எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தான் தீர்வு என்றால் உலகம் இந்நேரம் பூண்டற்று போயிருக்கும்.

 

கடுமையான குற்றம்

 

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا

நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (மறுமை நாளில்) நரகில் நுழையச் செய்வோம். அல்லாஹ்வுக்கு இது சுலபமானதே ஆகும். திருக்குர்ஆன்:- 4:29,30

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَنَ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ شَرِبَ سَمًّا فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَرَدَّى فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا )

எவர் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூரான ஆயுதத்தை வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார். எவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக்கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டேயிருப்பார். எவர் மலையின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் தள்ளப்பட்டு மேலிருந்து கீழே என்றென்றும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1365, முஸ்லிம்-175, திர்மிதீ-2044

 

தற்கொலை செய்தவர் என்றென்றும் நிரந்தரமாக வேதனை செய்யப்படுவார் என்ற மேற்கண்ட நபிமொழி கூறுவதின் விளக்கம்: "நீண்ட காலம் நரகத்தில் வேதனை செய்யப்படுவார் என்பதேயாகும். அல்லது இந்த குற்றத்திற்கு நிரந்தரமாக நரகமே தண்டனையாகும். இருப்பினும் இறை நம்பிக்கை (ஈமான்) இருப்பதால் இறுதியில் சொர்க்கம் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என்று விளக்கம் அளித்திட வேண்டும். தற்கொலை செய்தவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர் அல்லர். நிரந்தர நரகம் இறைமறுப்பாளர்களுக்கு மட்டுமே ஆகும். நூல்:- அல்மின்ஹாஜ்

 

விபச்சாரம் செய்தல், திருடுதல், கொலை செய்தல், கொள்ளையடித்தல் போன்ற பெரும் பாவப்பட்டியலில் தற்கொலை செய்தலையும் சேர்க்கப்படும் என்கிறது இஸ்லாம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களில் எவர் இறந்தாலும் இறுதிக் கடமை எனும் ஜனாஸா தொழுகையை தானே இமாமாக நின்று நடத்த விரும்புவார்கள். ஆனால், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த முன் வராமல் வெறுத்து ஒதுங்கி கொள்வார்கள். காரணம், அது பெரும் பாவச்செயல் என்பதை உணர்த்துவதற்காக.

 

அல்லாஹ் தடை செய்த ஒன்றை அது தடுக்கப்பட்டது என்று அறிந்து கொண்டே தடையை மதிக்காமல் துணிவோடு எவர் அதனை செய்கிறாரோ அவரை இறைவன் நரகத்தில் நுழைக்கிறான். இஸ்லாத்தின் தற்கொலை என்ன? மரணம் வரவேண்டும் என ஆவல் கொள்வதும் ஆகுமானதல்ல. ஏனெனில், அல்லாஹ்வின் எண்ணற்ற அருட்கொடைகளில் வாழ்க்கையும் மிகப் பெரியதோர் அருட்கொடையாகும். எனவே, இந்த அருட்கொடை முடிந்து விட வேண்டும் என்றோ அல்லது பறிக்கப்பட வேண்டும் என்றோ நாடுவது உண்மையில் இறைவனின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தாமல் அதனை அவமதிப்பது போன்றதாகும். எனவே, இதுவும் ஒரு பாவச் செயல் என்பது வெளிப்படை.

 

நபியவர்களின் முன்னறிவிப்பு

 

சஹல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களோடு போரிட்டு முடிந்த பின்பு தம் படையினரிடம் திரும்பியபோது நபியவர்களின் தோழர்களிடையே (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் எதிரிகளில் அதிகமானோரை கடுமையாக வெட்டி வீழ்த்தினார். ( مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلاَنٌ ) "இன்று இவரைப் போன்று நம்மில் வேறு எவரும் தேவையான அளவுக்கு நிறைவாக போரிடவில்லை" என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

 

அப்போது நபியவர்கள், ( أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ ) "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று அந்த வீரரைப் பற்றி கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் அவ்வீரர் (போரில்) கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால், (வேதனை தாங்க இயலாமல்) அவசரமாக இறந்து போக விரும்பி தனது வாளின் முனையை தன் மார்புகளுக்கிடையே சொருகிக் கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டார். இதனை கண்காணித்த ஒருவர் (அக்ஸம் பின் அபில் ஜவ்ன்) நபியவர்களிடம் வந்து, ( أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ ) "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன்" என்றார். பிறகு அவ்வீரரைப் பற்றி தாங்கள் கூறியதின்படி ஆகிவிட்டது என்று கூறிவிட்டு அந்த வீரர் நடந்து கொண்ட விதத்தை விவரித்தார். நூல்:- புகாரீ4203, முஸ்லிம்-179

 

போரில் கடுமையான காயம் ஏற்பட்டு வேதனை தாங்காமல் அவர் துடித்தபோது இஸ்லாமிய நம்பிக்கையின் மீது அவருக்கு விரக்தி ஏற்பட்டுவிட்டது. இவரது முடிவு இவ்வாறு அமையும் என்பதே அல்லாஹ்வின் மூலம் அறிந்ததனாலேயே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "அவர் நரகவாசி" என முன்னறிவிப்பு செய்தார்கள்.

 

தற்கொலை செய்பவர் நற்செயல்களை செய்திருந்தாலும் நரகம் செல்வது உறுதியென இந்நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். மனிதனின் உயிர் அமானிதம்; அது மனிதனுக்குச் சொந்தம் அல்ல. அது இறைவனுக்கே சொந்தம் என்பதை அவர் மறந்துவிட்டார். அல்லது மறுத்து விட்டார் என்றே பொருளாகும். இந்த குற்றத்திற்கு தண்டனை நரகம் தான் என்பதில் ஐயமில்லை. அவசர புத்தியால்தான் அதிகமான தற்கொலைகள் நிகழ்கின்றன.

 

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். திருக்குர்ஆன்:- 21:37

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ ‏ ) நிதானம் அல்லாஹ்வின் அருட்பண்புகளில் ஒன்றாகும். அவசரம் ஷைத்தானின் குணங்களில் ஒன்றாகும். நூல்:- திர்மிதீ-2012

 

மனிதன் பற்றி பிடிக்க வேண்டியது அல்லாஹ்வின் பண்பையா? அல்லது சபிக்கப்பட்ட ஷைத்தானின் குணத்தையா? என்று சற்று யோசிக்க வேண்டும்.

 

இறை தீர்ப்பு வரட்டும்

 

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தபூக் போருக்கு சென்றனர். நானும் செல்ல தான் எண்ணினேன். ஆனால், (என்னுடைய பொடுபோக்குத் தனத்தால்) தாமதமாகியது. அதனால் நான் செல்ல முடியவில்லை. சில நாள்களுக்குப் பிறகு போர் முடிந்து நபியவர்கள் மதீனா மாநகர் வந்து சேர்ந்தார்கள். பிறகு நான் நபியவர்களை சந்தித்து சலாம் கூறினேன். நபியவர்கள், "என்ன விஷயம் போருக்கு வராமல் உம்மை பிற்படுத்திவிட்டது?" என்று வினவினார்கள். "எனக்கு எந்த தங்கடமும் இல்லை" என்று என்னுடைய உண்மை நிலையை கூறினேன்.

 

நபியவர்கள், ( أَمَّا هَذَا فَقَدْ صَدَقَ فَقُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيكَ ) "இவர் உண்மை உரைத்துவிட்டார்" (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) “சரி, எழுவீராக! அல்லாஹ் உமது விஷயத்தில் தீர்ப்பளிப்பான்" என்று கூறினார்கள். என்னுடன் எவரும் பேசக்கூடாது என்றும் நபியவர்கள் தடை விதித்தார்கள். அதனால் என்னுடன் எவரும் பேசாமல் என்னை விட்டு ஒதுங்கி செல்ல ஆரம்பித்தனர். இந்த உலகம் மாறிவிட்டது போன்ற நிலை எனக்கு ஏற்பட்டது. பூமி எவ்வளவு விசாலமாய் இருந்தும் என்னை பொருத்தவரையில் அது குறுகியது போன்று (வீடு வாசல்களெல்லாம் எனக்கு வெறுப்பாகி) நான் உயிர் வாழ்வதே மிக்க கஷ்டமாயிருந்தது.

 

நான் கடைவீதியில் சுற்றி வருவேன். ஆனால், என்னிடம் எவரும் பேச மாட்டார்கள். நான் பள்ளிவாசலுக்குச் சென்று நபியவர்கள் அருகிலேயே தொழுவேன். அவர்களை நான் கடைக் கண்ணால் பார்ப்பேன். நான் தொழும்போது என்னை அவர்கள் கவனிப்பார்கள். நான் அவர்களின் பக்கம் திரும்பினால் அவர்கள் (என்னை புறக்கணித்து) வேறு பக்கம் திரும்பி கொள்வார்கள். இவ்வாறே தொடர்ந்தது. இதனிடையே நாற்பது நாள்கள் ஓடி விட்டன. அப்போது என் மனைவியை விட்டு (நிரந்தரமாக அல்லாமல்) தற்போது நான் விலகி இருக்க வேண்டுமென நபியவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்படி நான் என் மனைவியை விட்டு பிரிந்து விட்டேன்.

 

இதே நிலையில் ஐம்பது நாள்கள் கழிந்தன. பிறகு அல்லாஹுத்தஆலா எங்களை மன்னித்து திருவசனங்களை (9:118,119) எங்கள் விஷயத்தில் இறக்கியருளினான். பிறகு நபியவர்களை சந்தித்தேன் அவர்கள் முகம் மலர்ந்தது. எனக்கு வாழ்த்து கூறினார்கள். நூல்:- புகாரீ4418, முஸ்லிம்-5346

 

நபித்தோழர்கள், அருமை நாயகம் (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெற மனைவி, மக்கள், செல்வம் இன்னும் உயிரைக்கூட இழக்க தயாரானார்கள். மாறாக, உலகச் செல்வங்களுக்காக நபியவர்களின் நேசத்தை இழக்க தயாராக இல்லை. அதனால் தான் நபியவர்களுடன் பேச முடியாமல் ஐம்பது நாள்கள் கழிந்ததை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஒரு பேரிழப்பாக கருதி உலகத்தை வெறுத்தார்கள்.

 

ஆனாலும், போருக்கு செல்லாமல் தங்கிவிட்ட தன்னுடைய தவறை எண்ணி மனம் வருந்தி பிரார்த்தித்தால் இறைவன் மன்னிப்பான் என்று உறுதியாக நம்பினார்கள். தாம் அதிகம் நேசித்த நபியவர்களும், தன் இனத்தவர்களும் தன்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்றெண்ணி வாழ்க்கையே வெறுத்து விட்டது என்பதற்காக வாழ்வியலில் விரக்தி அடைந்து தற்கொலையை சரியான தீர்வு என்ற மோசமான முடிவுக்கு வரவில்லை.

 

நீங்கள் தைரியத்தை இழந்து விட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே மேலானவர்கள். திருக்குர்ஆன்:- 3:139

 

இவ்வுலக வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டும் கிடைக்கும் அரிதான வாய்ப்பாகும். அதில் கொலை, விபச்சாரம், திருட்டு போன்ற பாவங்கள் செய்துவிட்டால் பின்னர் மனம் வருந்தி பாவமன்னிப்பு தேடிக்கொள்ள நேரம், காலம் இருக்கிறது. ஆனால், தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட பின்னர் அதற்குண்டான பாவமன்னிப்பை கேட்பதற்கு நேரம், காலம் இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டு விடும்.

 

திருமறை கூறும் உத்தமி

 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நயவஞ்சகர்கள் என் கற்பு நெறி மீதான அவதூறை கட்டவிழ்த்து விட்டனர். இச்செய்தியை நான் செவியேற்றதும் அன்றிலிருந்து பகல் முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். ஒரு நாள் (எனது கணவர்) நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து அமர்ந்தார்கள். இந்த வதந்தி கிளம்பியதில் இருந்து அவர்கள் என்னிடம் வந்து இவ்வாறு அமர்ந்ததில்லை.

 

அவர்கள் சற்று நேரம் இறைவனின் நினைவு கூர்ந்தார்கள். அதன்பின் ( يَا عَائِشَةُ فَإِنَّهُ بَلَغَنِي عَنْكِ كَذَا وَكَذَا، فَإِنْ كُنْتِ بَرِيئَةً فَسَيُبَرِّئُكِ اللَّهُ، وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ، فَإِنَّ الْعَبْدَ إِذَا اعْتَرَفَ بِذَنْبِهِ ثُمَّ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ ) “ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்கு செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் பாவமீட்பு பெற்றுக்கொள். ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக்கொண்டு மனம் திருந்தி பாவமன்னிப்பு கூறினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்" என்று கூறினார்கள்.

 

இது நாள் வரை அழுது கொண்டிருந்த நான் நபியவர்களின் இவ்வறிவுரைக்குப் பிறகு அழுவதை நிறுத்திவிட்டேன். அந்நேரம் நபியவர்களிடம் துணிந்து பேச ஆரம்பித்தேன். இந்த செய்தியை உண்மையான நீங்கள் நம்புகிறீர்கள். இந்நிலையில் நான் உத்தமி என்று கூறினாலும் நீங்கள் என்னை நம்பப்போவதில்லை. ஆனால், எனது இறைவனுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். என்று கூறிவிட்டு திருமறை (12:18) வசனத்தை ஓதினேன். பிறகு நான் எழுந்து சென்று விட்டேன். தவறேதும் செய்யாத என்னை என் இறைவன் நிச்சயம் குற்றமற்றவள் என்று நிரூபிப்பான் என நம்பினேன். சற்று நேரத்தில் இறை வசனம் இறக்கப்படுவதற்கான அறிகுறி நபியவர்களின் திருமுகத்தில் தென்பட்டது.

 

"ஆதாரமற்ற செய்திகளை பரப்பியவர்கள் உங்களில் ஒரு பிரிவினரே" என்று துவங்கும் (24:11) பத்து திரு வசனங்கள் அருளப்பெற்றது. நூல்:- புகாரீ-2661, முஸ்லிம்-5349

 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கும் தீர்வு காண்பதற்கு எவ்வித பதட்டமும் அவசரமும் கொள்ளாமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவன் மீதே பொறுப்பு சாட்டிவிட்டு பொறுமையோடு இருந்தார்கள். அதன் பரிசாகத்தான் இறைவன் திருவசனங்களில் மூலம் அவர்களை உத்தமி என்று சான்று பகிர்ந்தான்.

 

"வாழ்க்கையின் சோதனைகளைத் தாண்டும் மனமில்லாத கோழைகள் தான் கௌரவமான மரணத்தை சந்திக்காது தற்கொலை செய்து கொள்கிறார்கள்" என்கிறார் அரிஸ்டாட்டில்.



தொழவைக்க வேண்டும்

 

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதரை கொண்டுவரப்பட்ட போது அவருக்காக நபியவர்கள் தொழ வைக்கவில்லை. நூல்:- முஸ்லிம்-1779, திர்மிதீ-988

 

இந்த நபி மொழியை ஆதாரம் காட்டி தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக்கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர் அது தவறாகும். தற்கொலை என்பது இறைவன் இரவலாக கொடுத்த உடலை தன் இஷ்டத்திற்கு அழித்துக் கொண்டதுடன் துன்பத்தில் சிக்கி இருக்கும் மற்றவர்களையும் இவ்வாறு செய்ய தூண்டுகிறது என்பதால் இது கொடிய பாவமென்று பிறருக்கு உணர்த்துவதற்காகவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழ வைக்கவில்லை.

 

மற்றபடி தற்கொலை செய்தவருக்கு தொழ வைக்கலாமா? என்றால் அவசியம் தொழ வைக்க வேண்டும். நபித்தோழர்கள் தொழுதுள்ளார்கள். மற்றவர்களும் தொழக்கூடாது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை. ஏனென்றால், மார்க்கத்தில் இதற்கு தடையில்லை என்பதாகும்.

 


கிப்லாவை நோக்கி தொழும் அனைவர் மீதும், தற்கொலை செய்தவர் மீதும் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று மாமேதைகளான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) போன்றவர்கள் கூறுகிறார்கள். தற்கொலை செய்தவருக்கு இமாம் தொழ வைக்கக்கூடாது இமாம் அல்லாத மற்றவர்கள் தொழ வைப்பார்கள் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் நூல்:- திர்மிதீ-988

 

பிரார்த்திக்கலாம் 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்றபோது நபியவர்களுடன் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் மற்றும் அவருடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதனும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றனர். (அவர்கள் மதீனாவுக்கு சென்றபோது) மதீனாவின் தட்பவெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துவரவில்லை. அதனால் அந்த மனிதருக்கு நோய் ஏற்பட்டது. நோயின் வேதனை பொறுக்க முடியாமல் பதறிப் போனவர் தம்முடைய ஒரு பெரிய அம்பை எடுத்து தமது கைநாடியை அறுத்துக் கொண்டார். கையிலிருந்து இரத்தம் கொட்டியது இறுதியில் அவர் இறந்து விட்டார்.

 

அவரை துஃபைல் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள். அவர் நல்ல நிலையில் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதை கண்டார்கள். அவரிடம், ( مَا صَنَعَ بِكَ رَبُّكَ ) "உம்முடைய இறைவன் எவ்வாறு உம்மிடம் நடந்து கொண்டான்?" என்று வினவினார்கள். அதற்கு அவர், ( غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صلى الله عليه وسلم ) "நான் நபியவர்களுடன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு வழங்கினான்" என்று பதிலளித்தார்.

 

துஃபைல் (ரலி) அவர்கள், ( مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ ) "ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருக்கின்றன?" என்ற வினவினார்கள். ( قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ ) "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்க மாட்டோம்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவைப் பற்றி நபியவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது நபியவர்கள், ( اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ ) "இறைவா! அவருடைய இரு கைகளுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-184

 

தற்கொலை செய்து கொண்டவருக்காக அவரின் நலன் கருதி இறைவனிடம் பாவமன்னிப்புக்கோரி பிரார்த்திக்கலாம். அந்தப் பிரார்த்தனை சம்பந்தப்பட்டவருக்கு பலன் தரக்கூடும். அதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.



வாழ்க்கையில் ஏற்படும் நோய் நொடி, வறுமை, எதிரியால் விளையும் தொல்லை ஆகிய சோதனைகளைக் கண்டு கலங்கி, உயிரோடு இருப்பதை விட செத்துப் போவதே மேல் என்று மரணத்தை எவரும் வழிய வேண்டுவது கூடாது. அதை இறைவன் விரும்பாத செயலாகும். மாறாக, சோதனைகளில் பொறுமை காக்க வேண்டும்.

 

நமது வீட்டாருக்கும், பிற மக்களுக்கும் தொழுகை, நோன்பு போன்ற நற்காரியங்களைப் பற்றி நாம் ஆர்வமூட்டுவது போல், தற்கொலை பற்றியும் அவர்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நமது கடமை என்று ஒவ்வொருவரும் எண்ணி செயல்பட வேண்டும். வாழத் தெரிந்தவர்கள் தான் தற்கொலை என்ற கோர முடிவுக்கு செல்வார்கள்.

 

எந்த கஷ்டம் வந்தாலும், எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும் இறைவன் விரும்பாத தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவை எடுக்காமல் தோல்விகளையே வெற்றியின் படிக்கட்டுக்களாக எண்ணி இறைநம்பிக்கையை ஆழமாக வைத்து முயற்சித்தால் வெற்றி உண்டு. இறைவன் நம் அனைவரையும் இறைநம்பிக்கையாளர்களாகவே மரணம் அடைய செய்வானாக! ஆமீன்

பிரபல்யமான பதிவுகள்