وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا
(நபியே!) உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாக இருக்கிறது. திருக்குர்ஆன்:- 4:113
நாம் யாரை உளமாற நேசிக்கின்றோமோ அவர் விருப்பமே நமது விருப்பமாகிவிடுகிறது. அது போன்றுதான் அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உளமாற நேசித்ததால் நபியவர்கள் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றித் தந்தான்.https://whatsapp.com/channel/0029VaEGpj71NCrSak2rwR0J
குறிப்பாக, அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனை அவன் விருப்பத்துடன் இறக்கியருளினாலும், நபியவர்களின் விருப்பத்திற்கிணங்க ஒரு சில மாற்றங்களுடன் இறக்கியருளினான். நபியவர்களுக்கு கண்ணியக்குறைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்று திருக்குர்ஆனின் வசனங்கள் மூலம் அல்லாஹ் எச்சரித்தான். நபியவர்களுக்கு கவலை ஏற்பட்டபோதெல்லாம் திருக்குர்ஆனின் வசனங்கள் மூலம் அல்லாஹ் தேற்றினான். நபியவர்களை திட்டித்தீர்த்தவர்களை, திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அல்லாஹ்வும் திட்டித்தீர்த்தான்.
பெருமைக்காக சொல்லவில்லை
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர்களில் சிலர் இவ்வாறு பேசிக்கொண்டனர்: அவர்களில் ஒருவர், "மாண்பும் மகத்துவமும் நிறைந்த அல்லாஹ், இப்ராஹீமை உற்ற நண்பரை தேர்ந்தெடுத்துக்கொண்டான் என்பது வியப்பாக இருக்கிறது" என்று கூறினார். வேறொருவர், "அல்லாஹ் மூசாவுடன் உண்மையாகவே பேசிய பேச்சைவிட இது மிக வியப்பான செய்தியாக இல்லையே" என்று கூறினார். இன்னொருவர், "ஈசா அல்லாஹ்வின் கட்டளையா(ல் உருவானவரா)வார்; மேலும், அவனது உயிருமாவார்" என்று கூறினார். மற்றொருவர், "அல்லாஹ், ஆதமைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான்" என்று கூறினார்.
அப்போது அங்கு வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களின் பேச்சை கேட்டு விட்டு, ஆம்! அவர்கள் உண்மையில் அவ்விதமே இருந்தார்கள் என்று கூறிவிட்டு, ( أَلاَ وَأَنَا حَبِيبُ اللَّهِ وَلاَ فَخْرَ ) "தெரிந்து கொள்ளுங்கள். நான் அல்லாஹ்வின் நேசர் ஆவேன். (இது) தற்பெருமை அல்ல" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-3539, தாரிமீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மேற்காணும் நபிமொழியில் தம்மை "அல்லாஹ்வின் நேசர்" என்று கூறியுள்ளார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு "கலீலுல்லாஹ்" என்றும், மூசா (அலை) அவர்களுக்கு "கலீமுல்லாஹ்" என்றும், ஈசா (அலை) அவர்களுக்கு "ரூஹுல்லாஹ்" என்றும் செல்லப்பெயர் இருப்பதைப் போன்று, நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் "ஹபீபுல்லாஹ்" என்று செல்லப்பெயர் உள்ளது.
“ஹபீபுல்லாஹ்” (அல்லாஹ்வின் நேசர்) என்று செல்லப்பெயர் கொண்ட அகில உலகத்தின் தலைவர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் நண்பர் என்று ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை எப்படி நேசித்தான் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
வஹீ வரும்போது
(நபியே! ஜிப்ரீல் வஹீ மூலம் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறிவிடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீங்கள் அவசரப்பட்டு அதனை ஓத உங்களுடைய நாவை அசைக்காதீர்கள். ஏனெனில், அதை (உமது நெஞ்சில்) ஒன்றுசேர்ப்பதும் நீர் ஓதும்படி செய்வதும் நம்முடைய பொறுப்பாகும். ஆகவே, (ஜிப்ரீல் மூலம்) அதனை நாம் (உங்களுக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதனை நீங்கள் பின்தொடர்ந்து ஓதுவீராக. பிறகு அதனை விளக்கித் தருவது நமது பொறுப்பே ஆகும். திருக்குர்ஆன்:- 75:16,17,18,19
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வேதஅறிவிப்பு (வஹீ) கொண்டுவரும் போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் நாவையும் இதழ்களையும் (எங்கே இறைவசனங்கள் மறந்துவிடப் போகின்றனவோ என்ற அச்சத்தால் மனனமிடுவதற்காக) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. இது அவர்களது வதனத்திலேயே காணப்படலாயிற்று. அப்போதுதான் மேற்காணும் (75:16-19) வசனங்களை அல்லாஹ் அருளினான். நூல்:- புகாரீ-4929, முஸ்லிம்-764, திர்மிதீ-3242
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் வஹீயைப் பெறுவதில் அவசரம் காட்டுபவர்களாகவும் ஜிப்ரீல் (அலை) அவர்களை முந்திக்கொண்டு அதனை ஓதக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். எனவேதான், வஹீயைக் கவனமாகச் செவியுறுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அவர்களின் நெஞ்சில் அதை ஒன்று சேர்ப்பதற்கும், அதை அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கும் அல்லாஹ் பொறுப்பு ஏற்றுக்கொண்டதாக கூறுகின்றான்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் மறந்துவிடுமோ என்ற எண்ணத்தில் வேக வேகமாக ஓதியபோது அல்லாஹ், “உங்கள் மனதில் நாம் பதிய வைப்போம் நீங்கள் சிரமப்படாதீர்கள்” என்று கூறி நபியவர்களின் சிரமத்தை குறைக்கிறான்
ஓர் ஆசிரியர் மாணவருக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அந்த மாணவர் அங்கும் இங்கும் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் பாடம் நடத்துவதைச் சற்று நிறுத்திவிட்டு அந்த மாணவரை நோக்கி! "இங்கும் அங்கும் பாடம் பார்த்துக் கொண்டிராமல் பாடத்தை கவனமாகக் கேள்!" என்று ஆசிரியர் அறிவுரை கூறிவிட்டு, பிறகு பாடம் நடத்துவதைப் போன்றதாகும். இதுவும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதுவதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, அவருடன் சேர்ந்து அவசர அவசரமாக ஓத வேண்டாம். வஹீயை அருளி முடித்துவிட்டு சென்ற பிறகு மனனம் செய்து கொள்ளலாம் என்று அல்லாஹ் கூறும் அறிவுரை இடைமறிப்பு வாசகமாக அமைந்துள்ளது.
கிப்லா மாற்றம்
(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) விண்ணை நோக்கித் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீர் விரும்புகிற கிப்லாவிற்கு (இதோ) உம்மைத் திருப்புகிறோம். எனவே, உமது முகத்தை (கஅபா இருக்கும்) புனிதப் பள்ளிவாசலின் திசையில் திருப்பிக்கொள்ளுங்கள். (முஸ்லிம்களே!) நீங்களும் (இனி) எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்புங்கள். திருக்குர்ஆன்:- 2:144
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு நாடு துறந்து சென்றபோது, மதீனாவில் யூதர்கள் அதிகமாக வாழ்வதைக் கண்டார்கள்.
எனவே, பைத்துல் மக்திசை முன்னோக்குமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதனால் யூதர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நபியவர்கள் பத்துக்கும் மேற்பட்ட மாதங்கள் வரை பைத்துல் மக்திசை முன்னோக்கி(த் தொழுது) வந்தார்கள்.
எனினும் இப்ராஹீம் (அலை) அவர்களின் கிப்லா(வாகிய கஅபா)வையே நபியவர்கள் விரும்பினார்கள். எனவே, (இது தொடர்பாக) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டும், (அடிக்கடி) வானத்தை நோக்கிப் பார்வையைச் செலுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போதுதான் மேற்காணும் (2:144) வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திசை நோக்கி தொழுத நேரத்தில் கஅபாவை கிப்லாவாக ஆக்கினால் நன்றாக இருக்குமே என எண்ணியபோது அல்லாஹ், கஅபாவை நோக்கி தொழ உத்தரவு பிறப்பிக்கிறான். இதன்மூலம் அல்லாஹ், நபியவர்களின் ஏக்கம் போக்கினான்.
பெயர் சொல்லி அழைக்காதே!
(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதனை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப் போல் அழைக்க வேண்டாம். (முஹம்மத் என பெயர் கூறி அழைக்க வேண்டாம்) திருக்குர்ஆன்:- 24:63
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களை மக்கள், முஹம்மதே! அபுல் காசிமே! என பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தனர். அல்லாஹுத்தஆலா தன் தூதரை கௌரவிக்கும் விதமாக அவ்வாறு மக்களை அழைப்பதற்கு தடை விதித்து, "அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் தூதரே!" என அழைக்குமாறு கட்டளையிட்டான். நூல்:- தஃப்சீர் அல்பஙவீ, தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
அல்லாஹ், ஒருவரை ஒருவர் சாதாரணமாக அழைத்துக்கொள்வதைப் போன்று இறைதூதரையும் பெயர் சொல்லி அழைக்காமல், கண்ணியத்தோடு அழைக்க வேண்டும் என ஆணையிடுகின்றான்.
ஒரு மனிதனை குறிப்பிட்டு அழைப்பதற்காக தான் அவருக்கு பெயர் சூட்டப்பட்டுகிறது. ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெயர் அப்படியல்ல. நபியவர்களின் பெயரைச் சொல்லி யாரும் அழைக்கக்கூடாது என்பது இறைகட்டளையாகும். இது இந்த சமுதாயத்தினர் மூலம் நபியவர்களுக்கு இறைவன் அளிக்கும் கண்ணியமாகும்.
இறைவன், நமது தூதரை பெயர் சொல்லி அழைக்காதீர்கள் என்று மட்டும் சொல்லாமல், "யாரசூலல்லாஹ்! யா நபியல்லாஹ்! என்று அழையுங்கள்" என்று மாற்று ஏற்பாட்டையும் சொல்லித்தருக்கிறான்.
ஆனால், முன் சென்ற இறைத்தூதர்கள் காலத்தில் அவர்களின் சமுதாயத்தினர் தம்முடைய இறைத்தூதரை பெயர் சொல்லியே அழைத்துள்ளனர். அதை அல்லாஹ் கண்டிக்கவில்லை.
நூஹ்! நிச்சயமாக நீங்கள் எங்களுடன் தர்க்கித்தீர்கள். அதுவும் அதிகமாகவே தர்க்கித்துவிட்டீர்கள். திருக்குர்ஆன்:- 11:32
லூத்! (இவ்வாறு கூறுவதை விட்டும்) நீங்கள் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக, நீங்கள் (நம் ஊரை விட்டு) துரத்தப்படுவீர்கள். திருக்குர்ஆன்:- 26:167
மூசா! உங்களுடைய இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இக்கஷ்டத்தை நீக்கும்படி) நமக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 7:134
அல்லாஹ் தனது திருமறையில் மற்ற இறைத்தூதர்களின் பெயரை நேரடியாக குறிப்பிட்டான். ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்களை அழைக்கும்போது அன்னாரின் பெயரை நேரடியாக குறிப்பிட்டாமல் “நபியே! அல்லாஹ்வின் தூதரே! போர்வைப் போர்த்திக்கொண்டிருப்பவரே!” என்று தான் அழைக்கிறான். “முஹம்மத்” என்ற பெயரை நேரடியாக கூறினாலும் அதோடு இறைத்தூதரே! என்ற சொல்லையும் இணைத்தே அழைத்து, அழகுபார்க்கிறான்
ஒருவர் தனக்கு கீழ் உள்ளவரை அழைக்கும்போது அவர்களின் பெயரைச்சொல்லி அழைப்பதும் உண்டு. பெரும்பாலும் அவரிடம் இருக்கும் மிக உயர்ந்த தன்மைகளைச் சொல்லி அழைப்பதும் உண்டு. இப்படித்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களிடம் இருந்த மிக உயர்ந்த பண்பான நபித்துவத்தையும், தூதுத்துவத்தையும் சொல்லி அழைக்கிறான். அத்தோடு மனிதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கும்போது சாதரண மக்களை அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பது போன்று அழைக்கக்கூடாது என்றும் தடுத்திருக்கிறான்.
குரலை உயர்த்தாதீர்கள்
இறைநம்பிக்கையாளர்களே! (நபியவர்கள் பேசும்பொழுது) நபியின் குரலுக்கு மேல் உங்கள் குரலை உயர்த்தாதீர்கள். மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் குரலுயர்த்திப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்களுடைய நற்செயல்களெல்லாம் அழிந்துவிடக்கூடும். (இதனை) நீங்கள் உணர்ந்துகொள்ள முடியாது. திருக்குர்ஆன்:- 49:2
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபியவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள்.
அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ( مَا أَرَدْتَ إِلاَّ خِلاَفِي ) ‘‘எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ( مَا أَرَدْتُ خِلاَفَكَ ) ‘‘தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று” என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது தான் மேற்காணும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள். நூல்:- புகாரீ-4845, திர்மிதீ-3179
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாள் குரலை உயர்த்திப் பேசுதல் கண்ணியக்குறைவு என்று அல்லாஹ் கருதுகின்றான்.
மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பூமிக்குள் உயிருடன் இருக்கின்றார்கள். எனவே, நபியவர்களை ஸியாரத்துச் செய்ய செல்கின்றவர்கள் அங்கு குரலை உயர்த்தி சப்தமிட்டு கொண்டிருக்கக்கூடாது. அங்கு போய் அவ்வாறு சப்தமிடுவதும் கண்ணியக்குறைவே ஆகும்.
சமுதாயக் கவலை
(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களின் போக்குக்காகக் கடும் துக்கப்பட்டு உம்மை நீரே மாய்த்துக்கொள்வீர் போலும்? (நீர் இவ்வாறெல்லாம் கவலைப்படாதீர்.) திருக்குர்ஆன்:- 18:6
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு தடவை மக்காவில் குறைஷி தலைவர்களான உத்பா பின் ரபீஆ, அபூஜஹ்ல் ஆகியோர் குறைஷியர் சிலருடன் குழுமியிருந்தனர். அப்போது பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுக்குத் தம் சமூகத்தாரின் எதிர்ப்பும் தாம் கொண்டு வந்த மேன்மைக்குரிய கொள்கையை அவர்கள் நிராகரிப்பதும் பெரும் சுமையாக தோன்றியது. சமுதாயத்தின் இந்தப் போக்கு நபியவர்களுக்கு கடுமையான துக்கத்தைக் கொடுத்தது. அப்போதுதான் மேற்காணும் (18:6) வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு மர்தவைஹீ
இந்த மக்கள் உண்மையான மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களின் கவலையை பார்த்த அல்லாஹ், “இந்த மக்களின் மீது கவலை கொண்டு உங்களை நீங்களே அழித்துக்கொள்வீர்கள் போலிருக்கிறதே இவ்வாறெல்லாம் கவலைப்பட வேண்டாம்” என தேற்றுகிறான்.
தம் சமூகத்தார் அசத்தியத்தின் மீது பிடிவாதமாக இருப்பது கண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட துக்கம் சாதாரணமானது அல்ல. அன்புக்குரியோரும் நெருக்கமானவர்களும் ஒருவரை விட்டு பிரிந்து செல்லும்போது அவர்களின் புறக்கணிப்பால் அவருக்கு ஏற்படும் கடுமையான வலியை இது ஒத்திருக்கிறது. பிரிவின் துயரத்தை தாங்க முடியாமல் அவர் தம்மையே மாய்த்துக்கொள்ள நினைப்பதுண்டு. இது இயற்கையான வலி. இத்தகைய வலி தான் நபியவர்களுக்கு அப்போது ஏற்பட்டது.
ஓர் உண்மையான தலைவர், சமுதாய வழிகாட்டி, சமுதாயச் சீரழிவை கண்டு எந்த அளவுக்கு துடிப்பார்; துடிக்க வேண்டும் என்பதற்கு நபியவர்களின் இந்த நிலை சிறந்த முன்மாதிரியாகும். சமுதாயத்தின் மீது அவர்களுக்கு இருந்த அக்கறை தான் என்ன? உலக வரலாற்றில் இப்படி ஒரு தலைவரா என்று வியக்கத் தோன்றுகிறது.
உலக அலங்காரத்தை விரும்பினால்
நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை விடுவித்து விடுகிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நல்லவர்களுக்காக மகத்தான (நற்)கூலியை தயார்செய்து வைத்துள்ளான். திருக்குர்ஆன்:- 33:28,29
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றபின், நண்பர்கள் அன்போடு வழங்கிய அன்பளிப்புக்கள், அண்டைவீட்டார் கொடுத்த இரவல் கறவை ஒட்டகங்கள் மூலம் கிடைக்கும் பாலைக்கொண்டு தம் குடும்பத்தாரின் பசியை ஓரளவுக்குத் தணித்தார்கள். பல நாள்கள் நபியவர்களின் துணைவியர் இல்லங்களில் (அறைகளில்) அடுப்பு எரிந்ததில்லை. சில பேரிச்சம் பழத்துண்டுகளும் தண்ணீரும் தான் அவர்களின் உணவாக இருந்தன. பல சமயங்களில் அந்தப் போதாக்குறையான உணவுகூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
இந்த சூழ்நிலையில்தான் ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு துணைவியர் நபியவர்களைச் சூழ்ந்துகொண்டு குடும்பச் செலவுக்கு கூடுதலான தொகை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பேச முடியாத அளவிற்கு துக்கம் மேலிட்டவர்களாக அண்ணலார் அமைதி காத்தார்கள். பின்னர் ஒருமாத காலம் அண்ணலார் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். அப்போது தான் மேற்காணும் (33:28,29) வசனங்களை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் குடும்பச் செலவுக்கு கூடுதலான தொகை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி நபியவர்களை சங்கடத்திற்கு ஆளாக்கியபோது அல்லாஹ், நபியவர்களுக்காக பரிந்து பேசி, நபியவர்களை ஆறுதல்படுத்தினான்.
அதன் பிறகு நபியவர்களின் துணைவியர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மறு உலகையுமே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். பொறுமை காக்க சம்மதித்தனர்.
உமக்கு அழிவுண்டாகட்டும்!
அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்! அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது. வெகுவிரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அடைவான். விறகு சுமக்கும் அவனுடைய மனைவியும் (நரகத்திற்கு செல்வாள்.) அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்துவிடுவாள்.) திருக்குர்ஆன்:- 111:1,2,3,4,5
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!” (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ (மலை) மீதேறி உரத்த குரலில், “யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)” என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், ‘‘யார் இவர்?” என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்றுகூடினர்.
அப்போது நபியவர்கள், ( أَرَأَيْتُمْ إِنْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً تَخْرُجُ مِنْ سَفْحِ هَذَا الْجَبَلِ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ ) ‘‘இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)” என்று சொன்னார்கள்.
நபியவர்கள், ( فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ ) ‘‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூலஹப், ‘‘உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?” என்று கேட்டான். பின்னர் நபியவர்கள் எழுந்தார்கள். அப்போதுதான் மேற்காணும் (111ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- புகாரீ-4971, திர்மிதீ-3276
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொடியோன் அபூலஹப் திட்டியபோது அதற்குப் பதிலடியாக அல்லாஹ்வும் அபூலஹபை சபிக்கிறான்.
சந்ததியற்றவன்
நிச்சயமாக உங்களின் எதிரிதான் சந்ததியற்றவன் ஆவான். திருக்குர்ஆன்:- 108:3
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மூத்த மகன் காசிம் (ரலி) அவர்கள் மரணமடைந்தார். அதன் பிறகு நபியவர்களின் இளைய மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் மரணமடைந்தார். அப்போது அல்ஆஸ் பின் வாயில் என்பவன், ( قَدِ انْقَطَعَ نَسْلُهُ فَهو أبْتَرُ ) "முஹம்மதின் பரம்பரை வேரறுந்துவிட்டது. எனவே, அவர் சந்ததியற்றவராக ஆகிவிட்டார்" என்று கூறினான். அப்போது தான் மேற்காணும் (108:3) திருவசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
யஜீத் பின் ரூமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அல்ஆஸ் பின் வாயில் என்பவனிடத்தில் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி கூறப்பட்டால் அவன் இவ்வாறு கூறுபவனாக இருந்தான்: ( دَعُوهُ فَإِنَّهُ رَجُلٌ أَبْتَرُ لَا عَقِبَ لَهُ، فَإِذَا هَلَكَ انْقَطَعَ ذِكْرُهُ ) “அவரை விடுங்கள், ஏனெனில் அவர் சந்ததியற்றவர். அவருக்கு வழித்தோன்றல் யாரும் கிடையாது. அவர் மரணமடைந்தார் எனில் அவரைப் பற்றி பேசுவதற்கே யாரும் இருக்க மாட்டார்” என்று இவ்வாறு அவன் கூறியது தொடர்பாகவே (108 வது) அல்கவ்ஸர் அத்தியாயத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
அத்தா பின் அபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மகனார் காசிம் (ரலி) அவர்கள் மரணமடைந்த பொழுது கொடியோன் அபூலஹப் இணைவைப்பாளர்களிடம் சென்று, ( بُتِرَ مُحَمَّدٌ اللَّيْلَةَ ) "இன்றைய இரவில் முஹம்மத் வேரறுந்தவராக ஆகிவிட்டார்" என்று கூறினான். அப்போது தான் மேற்காணும் (108:3) திருவசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
பேரறிஞர் இஸ்மாயீல் சுத்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதனின் ஆண்மகன் மரணமடைந்துவிட்டால், அவன் சந்ததி இழந்துவிட்டான் என்று அரபிகள் கூறுவது வழக்கம். அருமை நாயகம் (ஸல்) அவர்களின் புதல்வர்கள் மரணமடைந்தபோது "முஹம்மத் சந்ததி இழந்துவிட்டார்" என்று எதிரிகள் கூறினார்கள். அப்போதுதான் மேற்காணும் (108:3) திருவசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
ஆக, ஒரு மனிதனின் ஆண்மக்கள் மரணமடைந்துவிட்டால் அவனைப் பற்றி பேசுவதற்கே நாதியில்லாமல் ஆகிவிட்டது என்று அரபிகள் தங்களின் அறியாமையினால் கூறினார்கள். அவர்கள் கூறியவாறு அல்ல. மாறாக, நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றிய நினைவுகளும் புகழும் மக்களிடையே ஆண்டாண்டு காலமாக அல்லாஹ் நிலைக்கச் செய்துள்ளான். மேலும், அன்னாரின் சந்ததியும் மறுமைநாள் நெருக்கம் வரை நிலைத்திருப்பார்கள்.
உமது புகழை உயர்த்துவோம்
(நபியே!) உமது புகழை நாம் உயர்த்துவோம். திருக்குர்ஆன்:- 94:4
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, ( إِنَّ رَبِّي وَرَبَّكَ يَقُولُ: كَيْفَ رَفَعْتُ ذِكْرَكَ؟ ) "என்னுடைய இறைவனும் உம்முடைய இறைவனுமாகிய அல்லாஹுத்தஆலா (முஹம்மத் - ஸல் அவர்களே!), நான் உமது புகழை எவ்வாறு உயர்த்தியுள்ளேன் என்பதை அறிவீராக! என்று கேட்கிறான்" என்ற இறைசெய்தியை கூறினார். நான், "அல்லாஹ்வே அறிந்தவன்" என்று கூறினேன். அல்லாஹ், ( إِذَا ذُكِرتُ ذُكِرتَ مَعِي ) "(நபியே!) என்னுடைய பெயர் கூறப்பட்டால் என்னுடன் சேர்த்து உமது பெயரும் கூறப்படுகிறது" என்று கூறினான். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் அத்தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு மர்தவைஹீ, இப்னு ஹிப்பான், அபூயஅலா, தஃப்சீர் இப்னு கஸீர்
பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர்களான அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), முஜாஹித் (ரஹ்) ஆகிய இருவரும் கூறுகிறார்கள். இது, தொழுகையின் அழைப்பான பாங்கைக் குறிக்கும். அதாவது, பாங்கில் நபியவர்களின் பெயரும் கூறப்படுகிறது என்பதே கருத்து. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
உலகில் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொகையில் சொல்லப்படும் பாங்கின் வழியாக “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று சொல்லப்படுகிறது, நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஒரு பாங்கிற்கு இரண்டு தடவை என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு அவர்களின் பெயர் பத்து முறை உச்சரிக்கப்படுகிறது.
உலகத்திலே சுமார் நாற்பத்தி ஐந்து லட்சத்திற்கும் மேலாக பள்ளிவாசல்கள் இருக்கிறது என்றால் இவற்றில் அனைத்து நாற்பத்தி ஐந்தாயிரம் பள்ளிவாசல்களிலேயும் பகிரங்கமாக “அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று ஒரு நாளைக்கு ஐந்து முறை சொல்லப்படுகின்ற காரணத்தினால், ஒரு நாளில் நாலரைக்கோடி தடவை உச்சரிக்கப்படுகிறது.
உலகத்தில் ஒவ்வொரு நாளும் நாலரைக்கோடி முறை உச்சரிக்கப்படுகின்ற ஒரே பெயர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் மட்டுமே.
படைப்பினங்களில் இப்படி ஒரு திருநாமத்தை உலகத்தில் சொல்வதற்கு யாருடைய திருநாமத்தையும் இறைவன் ஆக்கவில்லை. இனிமேல் யாரும் அவர்களை புகழ்ந்து தான் புகழ் வரவேண்டும் என்று யாரும் சொல்ல முடியாத அளவிற்கு அல்லாஹுத்தஆலா அவர்களின் புகழை உயர்த்திவிட்டான்! அல்ஹம்துலில்லாஹ்!
ஸலவாத் சொல்கிறான்
நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் நபி (முஹம்மது-ஸல் அவர்கள்) மீது ஸலவாத்து சொல்கிறார்கள். ஆகவே இறைநம்பிக்கையாளர்களே! நீங்களும் (முஹம்மது-ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி சலாமும் கூறிக்கொண்டிருங்கள். திருக்குர்ஆன்:- 33:56
அல்லாஹ், தமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்கிறேன் என்று கூறுவதன் மூலம் அன்னார் மீதுள்ள தமது அன்பை வெளிப்படுத்துகிறான்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ ) எனது சமுதாயத்தில் எவரேனும் ஒருவர் (உளத்தூய்மையுடன்) என்மீது ஒருமுறை ஸலவாத்து ஓதினால் அதற்குப் பகரமாக அவருக்கு அல்லாஹ் பத்து மடங்கு அருள்புரிகிறான். மேலும் பத்து பாவங்களை அழித்து விடுகிறான். பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-1280, பைஹகீ, தப்ரானீ
அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள், கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், முகத்தில் மகிழ்ச்சி ததும்ப (எங்களிடம்) வந்தார்கள். (அது குறித்து நாங்கள் வினவினோம்.) அப்போது அவர்கள் கூறியதாவது: என்னிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ( أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لاَ يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلاَّ صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا ) "முஹம்மத் (ஸல்) அவர்களே! உங்கள்மீது உங்கள் சமுதாயத்தில் உள்ள ஒருவர் ஸலவாத் ஓதும்போது, அவரின் மீது நான் பத்து முறை அருள்வேண்டி பிரார்த்தனை புரியாமலிருப்பதில்லை என்பதை நீங்கள் பொருந்திக்கொள்ளவில்லையா?" என்று கூறினார். நூல்:- நசாயீ-1278
அல்லாஹ் தமது இறைத்தூதர் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதுமாறு கூறிவிட்டதால், ஒரு முஸ்லிம் தமது ஆயுளில் ஒருமுறையாவது ஸலவாத் ஓதுவது கட்டாயக் கடமையாகும் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.
மணமுடித்து வைத்தான்
(நபியே! உம்முடைய வளர்ப்பு மகனான) ஸைத் (மணவாழ்க்கை என்ற) தேவையை அந்தப் பெண்ணிடம் முடித்துக்கொண்டபோது, அப்பெண்ணை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் திருக்குர்ஆன்:- 33:37
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஸைத் பின் ஹாரிஸா - ரலி அவர்கள் மணவிலக்கு செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்பு காலம் (இத்தா) முடிந்ததும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், ( فَاذْكُرْهَا عَلَيَّ ) "நீ (ஸைனபிடம் சென்று) என்னை (மணந்து கொள்வது) பற்றி அவரிடம் பேசு" என்றார்கள்.
ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எனவே, "நான் சென்று, ஸைனபே! உமக்கு ஒரு நற்செய்தி; அண்ணலார் உன்னை (மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பி வைத்துள்ளார்கள்" என்று கூறினேன். அதற்கு அவர், ( مَا أَنَا بِصَانِعَةٍ شَيْئًا حَتَّى أُوَامِرَ رَبِّي ) "நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டி இஸ்திகாரா தொழுது பிரார்த்தனை செய்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை" என்று கூறிவிட்டு தமது தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார். அப்போதுதான், மேற்காணும் (33:37) வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- முஸ்லிம்-2798, நஸாயீ-3199
அல்லாஹ், மனிதர்களில் எவருக்கும் திருமணம் நடத்தி வைத்ததில்லை. ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை திருமணம் நடத்தி வைத்தேன் என்பதாக திருக்குர்ஆனில் சான்று பகிருகின்றான்.
சத்தியம் செய்கிறான்
(நபியே!) உமது வாழ்நாள்மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால், அதற்கு செவி சாய்க்கவில்லை.) திருக்குர்ஆன்:- 15:72
அல்லாஹ், இறைத்தூதர் லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தைப்பற்றி குர்ஆனில் சொல்லிக்கொண்டு வரும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது சத்தியம் செய்து சொல்கிறான்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி கூறியதாவது. ( مَا خَلَقَ اللَّهُ وَمَا ذَرَأَ وَمَا بَرَأَ نَفْسًا أَكْرَمَ عَلَيْهِ مِنْ مُحَمَّدٍ ﷺ، وَمَا سَمِعْتُ اللَّهَ أَقْسَمَ بِحَيَاةِ أَحَدٍ غَيْرِهِ ) முஹம்மத் (ஸல்) அவர்களைவிடச் சிறந்த எவரையும் அல்லாஹ் படைக்கவில்லை. அவர்களைத் தவிர வேறு யாருடைய வாழ்நாள்மீதும் அல்லாஹ் சத்தியம் செய்துள்ளதை நான் கேட்டதில்லை. நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்தம், தஃப்சீர் இப்னு கஸீர்
அல்லாஹுத்தஆலா தனது திருமறையில் பல இடங்களில் சூரியன், சந்திரன் போன்ற பல படைப்பினங்களின் மீது சத்தியம் செய்து பல விஷயங்களை சொல்கிறான். ஆனால் மனிதர்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைத்தவிர யாரும் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்து சொல்லவில்லை. இது நபி (ஸல்) அவர்களுக்குள்ள தனிச்சிறப்பையே காட்டுகிறது. ஆகையால் இதை வைத்து கொண்டு மனிதர்கள் மற்ற மனிதர்கள் மீது சத்தியம் செய்யலாம் என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. படைத்த இறைவன் யாரும் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்வான்.
எனவே, நாம் நபிநேசம் கொண்டு, இறைநேசம் பெறுவோமாக! ஆமீன