நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
வியாழன், அக்டோபர் 03, 2024
நாயகத்தின் கடைசி பேச்சு,
மறைத்துப் பழகுவோம்,
قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلَى إِخْوَتِكَ فَيَكِيدُوا لَكَ كَيْدًا
(யஅகூப் நபி யூசுஃப்பை நோக்கி!) என் அருமை மகனே! நீ கண்ட கனவைப் பற்றி உன் சகோதரர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம்; (அவ்வாறு கூறினால்) அவர்கள் உனக்கு (எதிராக) சதி செய்வார்கள். திருக்குர்ஆன்:- 12:5
இஸ்லாம் மனிதனுக்கு ஏராளமான நற்பண்புகளைக் கற்றுத் தந்துள்ளது. அதில் ஒன்று மனிதன் பிற மனிதனிடம் சில விஷயங்களை மறைத்துப் பழகவேண்டும். அவற்றில் சிலவற்றை பார்த்துவிடுவோம் வாருங்கள்.
பிறரின் குறைகள்
குறை கூறி, புறம் பேசுகின்ற ஒவ்வொருவருக்கும் கேடுதான். திருக்குர்ஆன்:- 104:1
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ) யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2442 முஸ்லிம்-5036, அபூதாவூத்-4248, திர்மிதீ-1346, முஸ்னது அஹ்மத்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ رَأَى عَوْرَةً فَسَتَرَهَا كَانَ كَمَنْ أَحْيَا مَوْءُودَةً ) யார் பிறரின் குறைகளை கண்டு அவற்றை மறைத்துவிடுகிறாரோ அவர் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையை உயிர்ப்பித்தவரைப் போன்றவர் ஆவார். அறிவிப்பாளர்:- உக்பா பின் ஆமீர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4247, முஸ்னது அஹ்மத்
பெண் குழந்தையை உயிருடன் புதைக்க நாடும் ஒருவரிடம் சூழ்ச்சி செய்தாவது அச்செயலைச் செய்யவிடாமல் தடுப்பதற்கான நற்கூலி, பிறரது குற்றங்குறைகளை மறைத்தவருக்குக் கிடைக்கும் என்பது இதன் கருத்தாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ غَسَّلَ مَيِّتًا وَكَفَّنَهُ وَحَنَّطَهُ وَحَمَلَهُ وَصَلَّى عَلَيْهِ وَلَمْ يُفْشِ عَلَيْهِ مَا رَأَى خَرَجَ مِنْ خَطِيئَتِهِ مِثْلَ يَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ ) யார் மரணித்தவரை குளிப்பாட்டி, அவருக்கு (கஃபன் எனும்) சவக்கோடி அணிவித்து, நறுமணம் பூசிவிட்டு, அவரைச் சுமந்து சென்று, அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுது, அவர் உடலில் கண்ட குறைபாடுகளை அம்பலப்படுத்தாமல் மறைத்துவிட்டாரோ அவர் பாவங்கள் நீங்கி, அன்று பிறந்த பாலகரைப் போன்று ஆகிவிடுகிறார். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1451
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِي بَيْتِهِ ) யார் மக்களின் குற்றங்குறைகளைத் துருவித்துருவி ஆராய்கின்றாரோ அவரின் குற்றங்குறைகளை அல்லாஹ் துருவித்துருவி ஆராய்வான். எவரின் குற்றங்குறைகளை அல்லாஹ் ஆராய்வானோ அவர் தமது வீட்டிலேயே இருந்தாலும் (அவரின் தீங்குகளை அம்பலப்படுத்தி) அவரை இழிவுபடுத்திவிடுவான். அறிவிப்பாளர்:- அபூ பர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4236, முஸ்னது அஹ்மத்
பிறர் குறைகளை அம்பலப்படுத்துவதின் மூலம் நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கிறோம். இதைத்தான் கிராமத்தில் "சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது" என்று கூறுவார்கள்.
உக்பா பின் ஆமீர் ரலி அவர்களின் எழுத்தர் துகைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எங்களுடைய அண்டை வீட்டார்கள் மதுபானத்தைப் பருகுகிறார்கள். நான் அவர்களைத் தடுத்துப் பார்த்தேன். எனினும் அப்பழக்கத்தை அவர்கள் கைவிடவில்லை. எனவே, நான் “இது குறித்து உக்பா பின் ஆமீர் ரலி அவர்களிடம் எடுத்துரைத்துவிட்டு, அவர்களை தண்டிக்க அரசு காவலர்களை அழைக்கப்போகிறேன்” என்று கூறினேன் அதற்கு அன்னார், ( دَعْهُمْ ) “அவர்களை விட்டு விடும்” என்று கூறினார்கள் பிறகு மீண்டும் மற்றொரு முறை நான் அன்னாரிடம் வந்து, "எங்கள் பக்கத்து வீட்டார்கள் மது அருந்துவதை கைவிட மறுக்கிறார்கள். எனவே, அவர்களுக்காக அரசு காவலர்களை அழைக்கப்போகிறேன்" என்று கூறினேன்.
அதற்கு அன்னார், ( وَيْحَكَ دَعْهُمْ لاَ تَفْعَلْ وَلَكِنْ عِظْهُمْ وَتَهَدَّدْهُمْ ) "உமக்கு கேடுவிளைக! அவர்களை விட்டு விடும். அவ்விதம் செய்ய வேண்டாம். மாறாக, அவர்களுக்கு அறிவுரை கூறி பயமுறுத்திவையும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4247
சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஹஸ்ஸால் (ரலி) அவர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று, "இன்ன மனிதர் விபச்சாரம் செய்துவிட்டார்" என்று புகார் அளித்தார்.
"எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு 80 சாட்டையடிகள் கொடுங்கள்" (திருக்குர்ஆன்:- 24:4) என்ற வசனம் இறங்குவதற்கு முன்பு இந்நிகழ்வு நடைபெற்றது.
நபியவர்கள், "ஹஸ்ஸால்! நீர் அவரை உமது ஆடையால் மறைத்து வைத்திருந்தால், அதுவல்லவா உமக்குச் சிறந்ததாக இருந்திருக்கும்" என்று கூறினார்கள். நூல்:- முஅத்தா மாலிக்
ஒருவரின் குறையை மக்களுக்கு மத்தியில் பகிரங்கப்படுத்துவது நல்லதல்ல. அதன் மூலம் பகைமை ஏற்படக்கூடும். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் தவறில் மூர்க்கத்தனமாக ஈடுபடக்கூடும். மாறாக, அவற்றை நாம் மறைத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த பாவத்தின் கனத்தை குறித்து எச்சரித்து, அவர்கள் மனம் நோகாதவாறு நளினமாக உபதேசிக்க வேண்டும் வேண்டும். சுருங்கக் கூறின்: நம் குறைகளை நாம் மறைப்பதைப் போன்றே பிறரின் குறைகளையும் மறைத்து பழகவேண்டும்.
நண்பர்களாக இருக்கும்போது செய்த தவறுகளை மறைப்பதும், அவர்களே ஒருவருக்கொருவர் எதிரிகளாக ஆகிவிட்ட பிறகு அன்று செய்த தவறுகளை இன்று அம்பலப்படுத்துவதும் ஒரு முஸ்லிமுக்குரிய நற்பண்பல்ல. இயக்கவாதிகளில் சிலர் இன்று இதை சர்வ சாதாரணமாக செய்துக் கொண்டியிருக்கின்றனர். இது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.
நோய்நொடிகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (இவ்வாறு) கூறுகிறான்: இறைநம்பிக்கையுள்ள என்னுடைய அடியானை ஏதேனும் ஒரு நோயைக் கொண்டு நான் சோதிக்கும்போது அவர் நோய் விசாரிக்க வருபவர்களிடம் என்னைப்பற்றி முறையிடாமல் இருந்தால் என்னுடைய கைதிகளில் இருந்து அவரை விடுதலை செய்துவிடுவேன். அவரது பாவத்தை மன்னித்துவிடுவேன். பிறகு அவரது உடலில் இருக்கும் மாமிசத்தைவிட சிறந்த மாமிசத்தை அவருக்கு நான் கொடுப்பேன். அவருடைய இரத்தத்தைவிட சிறந்த இரத்தத்தை அவருக்கு நான் கொடுப்பேன். அவருக்கு ஆரோக்கியத்தை வழங்குவேன். இனி அவர் வியாதியில் இருந்து ஆரோக்கியம் பெற்ற பின் புதிதாக நற்செயல் செய்ய தொடங்குவார். (அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன.) அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- ஹாக்கிம்
ஒருநாள் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! அல்லாஹ் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு விசேஷமாக சலாம் சொல்லி அனுப்பி உள்ளான். மேலும், அவர் குறித்து சந்தோசமாக இருக்கிறான். இந்தத் தகவலை அவரிடம் தெரிவித்துவிடுங்கள்" என்று கூறினார். நபியவர்கள் இந்தத் தகவலை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
நபியவர்கள், "அபூபக்ர்! உங்கள் செயல் குறித்து அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளான் என்றால், அப்படிப்பட்ட நற்செயல் எது?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "நாயகமே! நான் ஏழு ஆண்டுகளாக பல் வலியால் அவதிப்படுகிறேன். அதை யாரிடமும் எடுத்துத்துரைத்ததில்லை" என்று கூறினார். நபியவர்கள், "நீங்கள் என்னுடனே இருந்துகொண்டு ஏழு ஆண்டுகளாக பல் வலியில் அவதிப்படுவது குறித்து என்னிடம்கூட எடுத்துரைக்கவில்லையே!" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "ஒரு நேசன் (தருவதைப்) பற்றி மற்றொரு நேசரிடம் முறையிட முடியுமா?" (அல்லாஹ் கொடுத்த நோயைப்பற்றி உங்களிடம் முறையிடுவது முறையாகுமா?) என்றார்.
நமக்கு ஏற்படும் நோய்களை பொறுத்துக்கொண்டு, அதைப் பற்றி பிறரிடம் எடுத்துரைக்காமல் மறைத்துக்கொள்வது அல்லாஹ்வின் (களா கத்ர் எனும்) தலைவிதியை ஏற்றுக்கொள்வதாகும். எனவே, இதுகுறித்து அல்லாஹ் நம் மீது மகிழ்ச்சியடையக் கூடும்.
அறச்செயல்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் தனது (அர்ஷ் எனும்) அரியணையின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில், தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான். ( وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ ) (அதில் ஒருவர்) தமது இடக் கரத்திற்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாகத் தர்மம் செய்தவர். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1423, முஸ்லிம்-1869
அருமை நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( صدقةُ السرِّ تطْفِئُ غضبَ الرَّبِّ ) இரகசியமான தர்மம் இறைவனின் கோபத்தை போக்கிவிடும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ ரலி அவர்கள் நூல்:- மஜ்மஉஸ் ஸவாயித், ஜாமிஉஸ் ஸஙீர்-4978, ஸஹீஹ் ஜாமிஉ-3760
முஹம்மது பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மதீனாவில் ஏழைகள், விதவைகள் என சிலர் வாழ்ந்து கொண்டிருந்தனர். எங்கிருந்து தங்களின் வாழ்க்கைத் தேவைகளை பெற்று வாழ்கின்றனர் என்பதையும் அவர்களுக்கு யார் வழங்குகின்றார்கள் என்பதையும் அவர்களில் எவரும் அறியமாட்டார். (ஸைனுல்ஆபிதீன் எனும்) அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் மரணமடைந்ததும் அக்கூட்டத்தார் தங்களுக்குக் கிடைத்து வந்தது கிடைக்காமல் தவிப்புக்குள்ளாயினர். அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் தாம், இரவு நேரங்களில் தங்களிடம் வந்து உதவிகளைக் கொடுத்து விட்டு சென்றுள்ளார்கள் என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டனர். அன்னார் இறந்த பின்னர், (ஜனாஸா குளிப்பாட்டும்போது) முதுகு மற்றும் புஜங்களில் ஏழைகள், விதவைகளின் வீடுகளுக்கு தோல் பைகளை சுமந்துகொண்டு வந்து கொடுத்ததால் ஏற்பட்ட தழும்புகள், வடுக்கள் இருப்பதைக் கண்டனர். நூல்:- இஷ்திராகிய்யதுல் இஸ்லாம் - முஸ்தஃபா ஸபாஈ
இறைநேசர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் எப்போதும் பிரபல்யத்தை விரும்பாதவர்கள். பெரும்பாலான வணக்கங்களை மறைவாகவே செய்து வந்தார்கள்.
ஒருமுறை "ஒருமனிதர் பள்ளியில் (நஃபில் எனும்) உபரியான தொழுகை தொழுதுகொண்டிருந்தார். அன்னார், “நீர் வீட்டில் தொழுதால் என்ன? அல்லாஹ் மட்டும் பார்க்கவேண்டிய நற்செயலை மக்கள் பார்க்க செய்கிறீரே! உமக்கு என்ன தைரியம்?" என்று கண்டித்தார்கள்.
பிறர் பார்க்க நற்செயல் செய்பவர்களை பார்த்தால் கடுமையாகக் கண்டிப்பார்கள்.
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பிறர் பார்க்க பிறர் புகழ நற்செயல் செய்கிற மோசமான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்களிடம் தன்னைக்காட்டி வாழ்பவரைவிட மக்களிடம் தன்னை மறைத்து வாழ்பவரே சிறந்தவர். மேலும், மறைவாக செய்யும் நற்செயல் ஷைத்தானுக்கு பிடிக்காது. எனவே, ஒரு மனிதன் மறைவாக ஒரு நற்செயல் செய்தால் அதை அந்த மனிதன் தன் வாயால் வெளியே சொல்லும்வரை ஷைத்தான் விடமாட்டான். மறைவாக செய்த நன்மையின் ஏட்டிலிருந்து பகிரங்கமான நன்மையின் ஏட்டுக்கு மாற்றும்வரை ஓயமாட்டான். பிரபல்யத்தை எதிர்ப்பார்த்து நற்செயல் செய்கிற மனிதர்களைப் பார்த்து வருத்தப்படுகிறேன். பிறர் பார்க்க நற்செயல் செய்து பாவத்தை சம்பாதிப்பதைவிட படுத்து தூங்குவதே ஏற்றமாகும்.
இறைநேசர் காஜா முயீனுத்தீன் (ரஹ்) அவர்களின் தலைமை கலீஃபா காஜா குத்புதீன் பக்தியாரி காக்கி (ரஹ்) அவர்களின் மரணவேளை, “நான்கு நற்செயல்களை கடைப்பிடித்து வாழ்ந்தவர் மட்டுமே என் ஜனாஸாவை தொழ வைக்க வேண்டும்” என சொல்லிவிட்டு மரணித்து விடுகிறார்கள்.
1. தக்பீர் தஹ்ரீமா தவறிவிடாமல் ஐந்து வேளை தொழுதவர்.
2. அஸர் முன் சுன்னத் தொழுகையை விடாமல் தொழுதவர்.
3. தஹஜ்ஜத் தொழுகையை விடாமல் தொழுதவர்.
4. அந்நியப் பெண்ணை காமத்தோடு பார்க்காதவர்.
"இது போன்றவரை எங்கே போய் தேடுவது? உலகம் முழுதும் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்" என மக்கள் பேசிக்கொண்டனர்
முகத்தை மூடியபடி மக்கள் கூட்டத்தை மெதுவாக நகர்த்தி கொண்டு ஒருவர் வருகிறார். ஜனாஸா அருகே சென்று தனது ஷைஃகின் முகத்தை பார்த்து, "ஆசிரியரே! என் நற்செயலை வெளிபடுத்திவிட்டீர்களே" என சொல்லிவிட்டு தன் முகத்தை மூடிய துணியை அகற்றுகிறார்.
மக்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்தனர். அவர் தான், டெல்லியை ஆண்ட முதல் மன்னர் இறைநேசர் சுல்தான் ஷம்சுத்தீன் அல்தமிஷ் (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.
நாம் செய்கின்ற தொழுகை, நோன்பு, தானம் தர்மங்கள், உதவி ஒத்தாசைகள், குர்ஆன் மற்றும் திக்ர் ஓதுதல், போன்ற இன்ன பிற நற்செயல்களை மறைத்துப் பழகும்போது தான், நாம் முகஸ்துதியில் இருந்து பாதுகாப்புப் பெறுவோம்.
மக்களின் பார்வைகளில் படாமல் படைத்தவனுக்கு வழிபடும்போது தான் ஷைத்தான் நம்முடைய நன்மைகளைத் திருடிக்கொண்டு செல்வதை தடுக்க முடியும்.
சுருங்கக்கூறின்: நாம் செய்யும் அறச்செயல்களை யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொள்ளும்போது நம்மிடம் தற்பெருமை எழ வாய்ப்பில்லை.
இரகசியங்கள்
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம், "நீங்கள் விரும்பினால் (விதவையான என் மகள்) ஹஃப்ஸாவை உங்களுக்கு மணமுடித்து தருகிறேன்" என்று கூறினேன். அவர், "இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை" என்று கூறிவிட்டார். பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்கு மணமுடித்து தருகிறேன்" என்று கூறினேன். அப்போது அவர் ஏதும் கூறாது அமைதியாக இருந்தார்.
இதனால் உஸ்மான் (ரலி) அவர்களைவிட அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது எனக்கு அதிகமான வருத்தம் இருந்தது. பிறகு அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என் மகள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள். அவர்களுக்கு ஹஃப்ஸாவை மணம் முடித்துக்கொடுத்தேன்.
பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை சந்தித்தபோது, நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவை குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதில் ஏதும் கூறாததால் உங்களுக்கு என் மீது வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு காரணம் என்னவெனில், ( أَنِّي قَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ ذَكَرَهَا، فَلَمْ أَكُنْ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَوْ تَرَكَهَا لَقَبِلْتُهَا ) “நபியவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களை (தாம் மணம் முடித்துக்கொள்வது) பற்றிப் பேசுவதை நான் அறிந்திருந்தேன். நபியவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவே தான், அப்போது நான் உங்களுக்கு பதில் ஏதும் கூறவில்லை.) நபியவர்கள் ஹஃப்ஸாவை (மணமுடிக்காமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மணமுடித்து மனைவியாக) ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-4005
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நகரில் யார் யார் நயவஞ்சகர்கள் என நயவஞ்சகர்களின் பட்டியலை ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கூறி, இது இரகசியம். யாரிடமும் இதைச் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் வாழ்நாள் முழுக்க அப்பட்டியலை இரகசியமாகவே வைத்திருந்தார்கள். ஒருவரிடம் கூட சொல்லியதில்லை.
ஒருமுறை அரசாங்க அதிகாரிகள் விஷயமாக ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் பேச்செழுந்தபோது, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், "நான் நியமித்த அதிகாரிகளில் யாரேனும் நயவஞ்சகர் இருக்கின்றாரா?" என்று விசாரித்தார்கள். அதற்கு ஹுதைஃபா அவர்கள் (ரலி) அவர்கள் "ஆம்! ஒருவர் இருக்கிறார். ஆனால், என்னால் பெயர் கூற முடியாது" என்று அழுத்தமாகக் கூறி விட்டார்கள்.
இந்நிகழ்வுக்குப் பிறகு சில நாள்களுக்குள் அம்மனிதரை உமர் (ரலி) அவர்கள் பதவி நீக்கம் செய்துவிட்டார்கள். நயவஞ்சகர்களை கண்டறியும் கலை உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிந்திருந்தது என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்கிறார் ஹுதைஃபா (ரலி) அவர்கள். நூல்:- உஸுதுல் ஙாபா
நயவஞ்சகர்கள் குறித்து நாட்டின் ஜனாதிபதி விசாரித்தபோதும் கூட ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொல்ல மறுத்துவிட்டார்கள். ஆனால், "இவர்களில் நயவஞ்சகர் இருக்கிறாரா?" என்ற கேள்விக்கு, "ஆம்" என்று மட்டும் சொன்னார்கள். காரணம், "இல்லை" என்று சொல்லிவிட்டால் பொய் சொன்னதாக ஆகிவிடுமல்லவா? அதற்காகத்தான். அப்போதும் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய இரகசியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவரின் பெயரைக் குறிப்பிட்டு சொல்ல மறுத்துவிட்டார்கள்.
நமக்கு நெருக்கமானவர்கள் நம் மீது நம்பிக்கை வைத்துதான், தன் உள்ளத்தில் இருக்கும் இரகசியங்களை கூறுகிறார்கள். எனவே, அதை பாதுகாப்பது நம் மீது கடமையாகும். அவற்றை அம்பலப்படுத்துவது நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருள்களை அபகரிப்பதற்கு ஈடாகும்.
உன்னை நம்பிச் சொன்னேனே அதை போட்டு உடைத்து விட்டாயே! உன்னை நம்பினேனே நீ ஏமாற்றி விட்டாயே! என்றெல்லாம் பாதிக்கப்பட்டவன் நம்மை முகத்துக்கு நேராக கேட்க நேர்ந்தால், நாம் நம் முகத்தை எங்கு வைத்துக் கொள்வோம்? நம் மீது பிறர் வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதறடித்து விடக்கூடாது. இரகசியங்களை காப்பாற்ற முடியாதவர்களால் மக்களிடம் மதிப்பையும், பிரியத்தையும், உயர்வையும் பெற முடியாது. எனவே, பிறரின் இரகசியங்களை மறைத்து பாதுகாத்து வைப்பது நல்லதொரு பண்பாகும்.
தாம் செய்த பாவங்கள்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ أُمَّتِي مُعَافًى إِلاَّ الْمُجَاهِرِينَ، وَإِنَّ مِنَ الْمَجَانَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً، ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ، فَيَقُولَ يَا فُلاَنُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ ) என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர். (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துபவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையில் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, "இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதச் செய்தேன்" என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (யாருக்கும் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அவன் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கிவிடுகிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6069, முஸ்லிம்
பாவம் செய்வது ஒரு குற்றம் என்றால், செய்த பாவத்தை நான்கு பேரிடம் சொல்லிப் பெருமைப்படுவது அதைவிடப் பெரிய குற்றமாகும். இவ்வாறு பகிரங்கப்படுத்துகின்ற ஒருவன், தான் பாவம் செய்ததற்காக வருத்தப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறான். இந்த அசட்டுத் துணிச்சல், பாவங்களைப் பற்றி அவன் அக்கறைப்படவில்லை என்பதையும் பாவங்களுக்கு இறைவன் வழங்கும் தண்டனையை ஒரு பொருட்டாகவே அவன் கருதவில்லை என்பதையும் புலப்படுத்துகிறது. ஆகவே, மனம் வருந்தி திருந்தும்வரை அவனுக்குப் பாவமன்னிப்பே கிடையாது என்று இந்த நபிமொழியின் தெளிப்படுத்துகிறது.
ஒரு காலத்தில் “நான் பார்க்காத படங்களா? நான் பருகாத மது வகைகளா? நான் அனுபவிக்காத பெண்களா? நான் விளையாடாதா சூதாட்டங்களா?” என்று தமது பழங்கதைகளை பெருமையாக பேசித் திரிவது மிகப்பெரிய பாவக் காரியமாகும். தமது பாவங்களை அல்லாஹ் மறைத்துவிட்டப் பிறகு, தாமே அதைப்பற்றி பகிரங்கப்படுத்துவது கைசேதத்திற்குரிய செயலாகும்.
அருள்வளங்கள்
யூசுப் (அலை) அவர்கள் தமது சிறுபிராயத்தில் ஒருமுறை தமது தந்தை யஅகூப் (அலை) அவர்களிடம், "என் அருமை தந்தையே! பதினொன்று நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம்பணிவதாக நான் கனவில் கண்டேன்" என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்கள் அந்த கனவிற்கான விளக்கத்தை அறிந்திருந்தார்கள். அந்த கனவிற்குரிய விளக்கமாவது: பிற்காலத்தில் அவருடைய சகோதரர்கள் அவருக்குப் பணிந்து நடப்பார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவருக்கு சிரம்பணிவார்கள்; பெரிய அளவில் அவருக்கு மரியாதை செய்வார்கள்.
எனவே, இக்கனவை அவர் தம் சகோதரர்களில் யாரிடமேனும் சொன்னால், அவர்கள் பொறாமையால் அவருக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்று அவருடைய தந்தை யஅகூப் (அலை) அவர்கள் பயந்தார்கள்.
இதனால் தான் அவரிடம், "நீ கண்ட கனவைப்பற்றி உன் சகோதரர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம்; அவ்வாறு செய்தால் அவர்கள் உனக்கு எதிராக சதி செய்வார்கள்" என்று தந்தை யஅகூப் (அலை) அவர்கள் தமது மகன் மீதுள்ள அக்கறையில் அவ்வாறு கூறினார்கள். இதைப்பற்றியே தலைப்பில் காணும் வசனம் தெளிவுப்படுத்துகிறது.
ஆம்! இந்த கனவு 40 ஆண்டுகளுக்குப் பிறகு நனவானது. யூசுப் (அலை) அவர்களுடைய தாய், தந்தை, 11 சகோதரர்கள் ஆகியோர் பிற்காலத்தில் உயர் பதவியில் இருந்த யூசுப் (அலை) அவர்களை சந்தித்தபோது நடந்தது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اسْتَعِينُوا عَلَى إِنْجَاحِ حَوَائِجِكُمْ بِالْكِتْمَانِ؛ فَإِنَّ كُلَّ ذِي نِعْمَةٍ مَحْسُودٌ ) உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கு விஷயத்தை வெளியிடாமல் மறைப்பதன் மூலம் உதவிபெறுங்கள். ஏனெனில், அருள்வளம் பெற்ற ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் பொறாமை கொள்ளப்படுகின்றது. அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் ரலி அவர்கள் நூல்:- அல்முஅஜமுஸ் ஸஙீர் இமாம் தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, ஹில்யா இமாம் அபூநயீம்
மனிதன் தன்னுடைய முன்னேற்றத்திற்குரிய காரியங்களை உரிய நேரத்திற்கு முன்பே எல்லோரிடமும் சொல்லக்கூடாது. அதாவது, நான் அதை இதை செய்யப் போகிறேன் என்று முன்பே சொல்லக்கூடாது. அவ்வாறு சொல்லிவிட்டால் தீயோர்களின் பொறாமைக்கும், சூழ்ச்சிக்கும் ஆளாகி நமது காரியங்கள் துவங்கப்படாமலேயே சிதைந்து போகக்கூடும். எனவேதான், அதை மறைக்க வேண்டும். செய்து முடித்துவிட்டுச் சொன்னால் பரவாயில்லை.
எண்ணம் சரியில்லாத தீயவர்களிடம் அல்லாஹ் நமக்கு வழங்கிய உயர்வுகளையும் அருள்வளங்களையும் பற்றி எடுத்துரைக்கக்கூடாது. அதை அவர்களிடம் மறைத்து பழகவேண்டும். மாறாக, அவர்களிடம் நமக்கு கிடைக்கப்பெற்ற அருள்வளங்களைப் பற்றி பெருமையாகப் பேசினால் அவர்கள் நமக்கு எதிராக சதி செய்யக்கூடும். அதாவது, நம் மீது அவர்கள் பொறாமைப்படக்கூடும்; அவர்களின் கண்ணேறு நம் மீது ஏற்படக்கூடும்.
மேலும், அவர்களிடம் நம்முடைய சிரமங்களையும் எடுத்துரைக்கக்கூடாது. ஏனெனில், அவர்கள் நம் சிரமங்களைப்பற்றி தெரிந்துகொண்டால் (இவனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று) அவர்கள் நம்மை கேலி செய்யக்கூடும். நம்மை மட்டமாக எண்ணக்கூடும்.
அவர்கள், அப்படியே நம்முடைய வளங்களைப்பற்றி விசாரித்தாலும், நாம், "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறிவிட்டு, பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். அல்லது வேறு பேச்சுக்கு மாறிவிட வேண்டும். இது தான் நமக்குச் சிறந்தது.
மேலும், முன் பின் தெரியாதவர்களிடம் நம்முடைய வளங்களைப்பற்றியும், சிரமங்களைப்பற்றியும் எடுத்துரைக்கக்கூடாது.
அந்தஸ்தை
உஸ்மானிய்யா பேரரசின் ஆட்சி காலத்தில் மக்கா மற்றும் மதீனாவிற்கு வருகைத் தரும் ஹாஜிகளுக்கு வழிகாட்டியாக ஒருவர் பணி புரிந்து வந்தார். அவரது வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை கூறுகிறார்:
வழக்கமாக, உலகின் பல திசைகளிலிருந்து மக்காவை நோக்கி படையெடுக்கும் ஹாஜிகளுக்கு வழிகாட்டியாக பணி புரிவதற்காக சென்றிருந்தேன். இந்த முறை சற்றுத் தாமதமாக சென்றுவிட்டேன். ஆதலால் எனக்கு எந்த ஹாஜிகளும் கிடைக்கவில்லை.
மனம்வருந்தி நின்றுக் கொண்டிருந்தபோது ஒரு துருக்கி நாட்டு மனிதர் என்னை அழைத்தார். பார்ப்பதற்கு சாதாரணமான மனிதராக இருந்தார். அவர் அணிந்திருந்த தொப்பியை வைத்தே அவர் செல்வந்தர் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். அந்த மனிதர் என்னிடம் “எனக்கு ஹஜ் புரிவதற்கு வழிகாட்டியாக தங்களால் பணி புரிய இயலுமா?” என்று கேட்டார். எனக்கு இந்த சாதாரண மனிதரிடமிருந்து என்ன கூலி கிடைத்துவிடும் என்று எண்ணிக்கொண்டு எனக்கு இப்போது பிழைப்பதற்கு வேறு வழி இல்லை என்பதால் இப்படிப்பட்ட மனிதருக்கு வழிகாட்டியாக பணிப்புரிய ஒப்புக்கொண்டேன்.
அவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை அவருக்கான வழிகாட்டியாக இருந்தேன். கடைசியாக ஹஜ் நிறைவடைந்தது. இருவரும் பிரியக்கூடிய நேரமும் வந்தது. ஹஜ் முழுக்க என்னிடம் அதிகமாக பேசாத நன்நடத்தையுள்ள அந்த மனிதர் என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டிக் கூறினார் "இந்தக் கடிதத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, நான் உங்கள் பார்வையிலிருந்து மறைந்தப் பிறகு மக்காவின் ஆளுநரிடம் சென்று, அவர் முன்னிலையில் மட்டுமே இதனை திறக்கவேண்டும்" என்று கூறினார்.
அவர் என்னை விட்டு மறைந்ததும், நான் மக்காவின் ஆளுநரிடம் விரைந்தேன். சந்திப்பதற்கு அனுமதி கோரினேன். பிறகு சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. நான் நிகழ்ந்ததைக் கூறி இந்த கடிதத்தைக் குறித்தும் கூறினேன். அதற்கு அவர் அந்த கடிதத்தை திறக்குமாறு கூறினார். நான் திறந்த கடிதத்தை ஆளுநர் பார்த்தவுடன் அமர்ந்திருந்தவர் தீடீரென்று எழுந்து “இது கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ அவர்களது முத்திரை” என்று கூறினார். இந்த வார்த்தையை கேட்டதும், ஹஜ் செய்வதற்காக நான் வழிகாட்டிய அந்த மனிதர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலீஃபாவா? என்று திகைத்து போய் நின்றேன்.
அந்த கடிதத்தின் உள்ளே "எனக்கு ஒரு பெரிய வீட்டை வழங்குமாறும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் வாழ்கை முழுக்க தேவையான அனைத்தையும் அரசாங்கத்திலிருந்து வழங்கிக்கொண்டே இருக்குமாறும்" ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.
கலீஃபா அப்துல் ஹமீது அவர்களிடம், “தாங்கள் இப்படித் தனியாகவும், இரகசியமாகவும் ஹஜ் செய்ததற்கு காரணம் என்ன?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "நான் இறைவனது இல்லமான கஅபாவின் முன் நிற்கும்போது சாதாரண ஒரு அடிமையாக நிற்கவேண்டும். நான் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி என்ற எண்ணமில்லாமல், பயத்தோடும், பணிவோடும் எதற்கும் சக்தியற்ற ஒரு அடிமை என்ற உணர்வோடும் அவனுக்காக ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்” என்று கூறினார். நூல்:- முத்கராத்து சுல்தான் அப்துல் ஹமீத் ஸானீ (சுல்தான் அப்துல் ஹமீதின் நினைவுகள்)
சில சமயங்களில் பொதுவெளியில் நமது அந்தஸ்தை நாம் வெளிப்படுத்தாமல் எளிமையை கடைப்பிடிப்பதே சிறந்தது. அது, நமது மனதில் தற்பெருமை உண்டாகாமல் இருக்க உதவும். மேலும், நமக்கு போதிய நிம்மதி கிடைக்கப்பெறும். அதுவே நமக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.
நாட்டில் பிரபலமானவர்களில் சிலர் ஓய்வெடுக்க, நிம்மதிப் பெற, (மறைத்துக்கொள்ளும் விதமாக) தம்மைப் பற்றி அறியாத இடங்களுக்கு தான் செல்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் சில சமயங்களில் சில விஷயங்களை மறைத்து வாழ்வதே புத்திசாலித்தனமாகும். எனவே, அல்லாஹுத்தஆலா நம்மை புத்திசாலிகளாக வாழச் செய்வானாக! ஆமீன்
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...