நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஜூலை 26, 2024

சோதனையில் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ்.ஆலிம்கள் முன்மாதிரி,

காலம் காலமாக
மார்க்கப் பணி செய்பவர்களுக்கு 
செய்யப்படும் அநீதிகள்.

இமாம் புஹாரி(ரஹிமஹுல்லாஹ்) 
எப்படி மரணித்தார்கள்?
<><><><><><><><><><><><><><><><>

நபிமொழித்துறையில் எல்லையில்லா புகழ்பெற்றவர் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ்

கீழ்திசை இஸ்லாமிய உலகில் இருந்த இஸ்லாமிய நகரங்களின் - குறிப்பாக நைசாப்பூர், புஹாரா, சமர்கந்து- ஆட்சியாளர்களால் இமாம் அவர்கள் தம் இறுதிக்காலத்தில் கடும் தொல்லைகளை சந்தித்தார்கள். 

இதற்கு பல காரணங்கள் உண்டு.

1) ஆட்சியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க அரச மாளிகைக்கு வரவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை இமாம் இவர்கள் நிராகரித்தார்கள். “கல்வியைத் தேடி வரவேண்டும். கல்வி எந்த வீட்டு வாசலையும் தேடிப்போகாது” என்பது இமாம் புஹாரியின் நிலைப்பாடு.

2) இமாம் அவர்களின் புகழ், செல்வாக்கு, நன்நடத்தையைப் பார்த்து சிலர் பொறாமை கொண்டனர். இன்னும் சில காரணங்களும் உண்டு.

இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் 62 ஆவது வயதில் நைசாப்பூர் ஆட்சியாளர் ஓர் உத்தரவு போட்டார். ‘இமாம் புஹாரியை எனக்குப் பிடிக்கவில்லை எனவே அவர் உடனே ஊரைக் காலிசெய்துவிட்டு வெளியேறிவிட வேண்டும்’ என்றார்.

உடனே அங்கிருந்து வெளியேறி தான் பிறந்த ஊரான புஹாராவுக்கு வந்தார்கள்.

நகரின் நுழைவாசல்களில் மக்கள் திரண்டு வந்து இமாம் புஹாரி மீது இனிப்பு பண்டங்களையும் இதரப் பண்டங்களையும் தூவி வரவேற்றனர்.

ஆனால் வெகுவிரைவாகவே புஹாராவின் ஆட்சியாளருக்கு இமாம் மீது கோபம் வந்துவிட்டது. காரணம் என்ன? அதே தான். ஆம் இமாமுக்கு மக்களிடையே நிலவிய செல்வாக்கும் புகழும் தான். 

ஆட்சியாளரிடமிருந்து கடிதம் வந்தது. ‘ஊரை காலி செய்துவிட்டு உடனே வெளியேற வேண்டும்’ என்று.

உடனே தனது நூல்களைத் திரட்டி அடுக்க ஆரம்பித்தார்கள். தாமதமின்றி வெளியேறி ஊருக்கு வெளியே ஒரு மேட்டுப்பகுதியில் கூடாரம் போட்டு மூன்று நாட்கள் தங்கினார்கள். மூன்று நாட்களாக தங்களிடமுள்ள நூல்களை அடுக்கி மூட்டைகட்டிக் கொண்டார்கள். அடுத்து எங்கே செல்வதென்று தெரியவில்லை.

பிறகு சமர்கந்து பக்கமாக செல்லக் கிளம்பினார்கள். எனினும் ஊருக்குள்ளே செல்லாமல் அருகிலுள்ள ‘ஹர்த்னக்’ என்ற கிராமத்திற்கு சென்றார்கள்.

இப்றாஹீம் பின் மஅகல் என்ற தன் உறவுக்காரரிடம் விருந்தினராகச் சென்று தங்கினார்கள். கொஞ்ச நாள்கூட ஆகவில்லை. சமர்கந்து ஆட்சியாளரின் காவலர் ஒருவர் ஒரு கடிதத்தோடு இமாம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தார். அது ரமழான் முடிந்த இரவு. மறுநாள் ஈதுல் ஃபித்ர்.

ஆனால் என்ன செய்வது கடிதத்தில் “இப்போதே வெளியேற வேண்டும். சமர்கந்தைச் சுற்றியுள்ள எந்த கிராமத்திலும் இமாம் இருக்க கூடாது” என்றிருந்தது.

ஈத்-க்கு பிறகு கிளம்பலாம் என்றால் அதற்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்று இமாமுக்கு தெரியும். ‘என்னை விருந்தாளியாக ஏற்று உபசரித்து வருகின்ற என் உறவினர்களுக்கு என்னால் எந்த இடையூறும் வரக்கூடாது’ எனக்கருதி உடனே வெளியேறத் தயாரானார்கள்.

முதலில் நூல்களையெல்லாம் அடுக்கி வாகனத்தில் ஏற்றுவோம் பிறகு இமாமை அமர வைப்போம் என்று நினைத்து இப்றாஹீம் பின் மஅகல் நூல்களை ஏற்றிவைத்துவிட்டு இமாமை வீட்டுக்கு வெளியே கூட்டிக்கொண்டு வந்தார்.

இமாம் அவர்கள் இப்றாஹீம் மீது சாய்ந்துகொண்டே வந்தார்கள். இருவரும் ஒன்றாக வாகனத்தை நோக்கி வந்தனர். இருபது எட்டுக்கள் எடுத்து வைத்தபின் வெகுவாக களைப்படைந்தார்கள் இமாம் புஹாரி. ‘சில மணித்துளிகள் நின்று ஆசுவாசம் பெற்று கிளம்பலாம்’ என்று இப்றாஹீமிடம் கூறியபடியே வழியில் அயர்ந்து உட்கார்ந்து பின் சற்று உறங்கினார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து எழுப்பிய போது இமாம் அவர்களின் உயிர் பிரிந்திருந்தது. ஆம். வழியிலேயே இமாம் மரணமடைந்தார்கள். 62 ஆவது வயதில் ஊர்ஊராக துரத்தப்பட்ட இமாம் ஹிஜ்ரி 256 ஆம் ஆண்டு, ஷவ்வால் பிறை-1, பெருநாளில் வஃபாத் ஆனார்கள்.

வரலாற்றில் யாரும் நைசாப்பூர், புஹாரா, சமர்கந்து ஆகியவற்றின் ஆட்சியாளர்களின் பெயர்களை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இமாம் புஹாரி என்றால் தெரியாதவர்களே இல்லை.

நூல்: சியரு அஃலாமின் நுபலா.

எனவே மார்க்க பணி செய்பவர்கள் (குறிப்பாக இமாம்கள்) இது போன்ற அநீதி, அக்கிரமங்களை சந்தித்தே ஆக வேண்டியதிருக்கிறது.
இதுவும் நபி வழியில் சுன்னத்தாக இருக்கிறது

பிரபல்யமான பதிவுகள்