காஷ்மீர் காணாமலாக்கப்பட்டவர்களின் தினம் ஆகஸ்ட் 30, 31
காஷ்மீர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம், பாதி விதவைகள்
உலகில் திட்டமிட்டு காணாமாலக்கப் பட்ட நபர்களுக்காக ஒரு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் அது காஷ்மீர் மக்களுக்காக மட்டும் தான். தன் நாட்டு குடிமக்கள் ஆயிரக்கணக்கில் காணாமற் செய்யப்பட்டார்கள் என்று இந்த அரசாங்கத்திடம் அழுவதா! அல்லது எங்கள் பிள்ளைகளை, கணவர்களை கடத்தி வைத்திருக்கிறீர்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா என இந்திய அரசை நோக்கி கேள்வி எழுப்புவதா! என்று அத்தனையும் முயற்சித்து தோற்று ஒவ்வொரு வருடமும் காஷ்மீரில் தங்கள் வலியை ஆகத்து மாதம் 30ம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதுவரை 10,000க்கும் மேற்பட்ட நபர்கள் இவ்வாறு காணாமற் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். உன் மகனை, உன் கணவரை இராணுவத்தினர் அழைத்து சென்றார்கள் என்று கூறுவதை மட்டும் தான் அந்த தாய்மார்களால் கேட்க முடிந்தது. அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்ற எந்த தகவலும் அவர்களுக்கு தெரியாது.
1990ல் காஷ்மீரை சேர்ந்த பர்வீனாவின் மகன் யாசீரை இராணுவத்தினர் அழைத்து சென்றார்கள். தன் 16 வயது மகன் தவறாக அழைத்து செல்லப்பட்டிருப்பான் மீட்டுவிடலாம் என்று கருதிய பர்வீனா ஒவ்வொரு காவல்நிலையங்களாக அழைந்தார். இராணுவ சித்ரவதை முகாம்களுக்காக சென்றார். ஆனால், சென்ற இடத்தில் பதில் அனைத்தும், உன் மகன் திரும்ப வந்து விடுவான் நீ செல் என்பதாகவே இருந்தது.
அதன் பிறகு தான் பர்வீனாவுக்கு தெரிய வந்தது. இது காஷ்மீருக்கு புதிதல்ல. தன் துணைக்கு இதுபோல் பிள்ளைகளை இழந்த, கணவர்களை இழந்த காஷ்மீர் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டார். அதன் பிறகே அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி “ காணாமல் போனோர்கான பெற்றோர்களின் சங்கம்(APDP) ஒன்றை உருவாக்கினார்.
இவர்கள் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி கூடி தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஆகத்து மாதம் 30ம் தேதி மொத்தமாக ஒன்று கூடி அரசாங்கத்திடம் முறையீட்டும் மக்களுக்கு முன் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பற்றியும் எடுத்துரைப்பார்கள்.
காஷ்மீர் முழுச்சிறைச்சாலை
APDP அமைப்பின் தலைவராக இருக்கக்கூடிய 66 வயதான பர்வீனா கடந்த வருடம் (2019) Gaurdian பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும் போது, 1990ல் எனது மகன் கொண்டு செல்லப்பட்ட போது எப்படி ஒரு நிலை காஷ்மீரில் நிலவியதோ அதே போலொரு நிலை தான் இன்று இருக்கிறது.
இந்திய அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. காஷ்மீர் தினம் தினம் அடக்குமுறைகளுக்குள் தான் இருக்கிறது. எங்களுக்கு ஒரு நீதியும் கிடைத்ததில்லை.
1997 முதல் இன்று வரை ஆயிரக்கணக்கில் இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்ட பிள்ளைகளும், கணவர்களும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை!.. அவர்கள் எங்கே?.. அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அவர்களது உடல்களையாவது எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று தான் கேட்கிறோம். அவர்களுக்கு என்ன ஆனது என்று கூட எங்களுக்கு தெரியவில்லை.
எங்கள் அமைப்பில் இருக்கும் பலர் ஏழ்மையானவர்கள். இந்தியா எங்களை முழுமையாக சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. யாருக்கு என்ன உதவி வேண்டும்?.. ஒருவர் இறந்து விட்டால் கூட மற்றவர்களுக்கு தெரியாத அளவில் நாங்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
நான் இந்த அமைப்பின் தலைவர் எல்லாம் கிடையாது. நான் பாதிப்பட்டவள். நாங்கள் புரட்சிக்காக அமைப்பை உருவாக்கவில்லை. எங்கள் வலிகளையும், துயரங்களையும் வெளிப்படுத்துக்கிறோம். (Guardian 12.09.2019)
காஷ்மீரின் பாதி விதவைகள்
பாதி விதவைகள்(HALF WIDOWS) உலகில் எங்குமே அறியப்படாத வார்த்தை காஷ்மீரில் இருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சொந்தமானது. ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரை விதவை என்று கூறலாம். ஆனால், தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாத காஷ்மீர் பெண்களை தான் பாதி விதவைகள் என்று அழைக்கிறார்கள்.
பாதி விதவைகளில் ஒருவரான ஆசியா சொல்கிறார், “ என் கணவர் வீட்டில் சிகரெட் குடித்து கொண்டிருக்கும் போது இழுத்து சென்றார்கள். பாதி எரிந்து கிடந்த சிகரெட் போல் என் வாழ்க்கை மாறும் என்று நான் நினைக்கவில்லை. என் கணவர் காணாமற் போய் 20 வருடங்கள் கடந்து விட்டது. இன்றும் ஒவ்வொரு முறை வீட்டின் கதவு தட்டப்படும் போதெல்லாம் என் கணவராக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருக்கிறேன்.
நான் போகாத காவல்நிலையங்கள் இல்லை. நான் போகாத இராணுவ முகாம்கள் இல்லை. நான் செய்யாத சட்ட போராட்டங்கள் இல்லை. ஆனால், அனைத்திலும் தோல்வியடைந்து நிற்கிறேன்.
இன்றும் என் கணவருக்காக அவர் விட்டு சென்ற பாதி சிகரெட்டுடனும், அவரது துணிகளுடனும் காத்திருக்கிறேன்.” (Aljazeera 27.01.2019)
காலண்டர்களில் காணாமற் போனவர்கள்
காணாமற் போனவர்களுக்கான பெற்றோர்கள் சங்கம் (APDP) சார்பாக வருட காலண்டர்கள் அச்சிடப்பட்டது. அந்த காலண்டர்களில் 12 மாதத்திற்கு ஒருவர் என காணாமற் போனவர்களின் விவரங்களை பதிவிட்டு அரசிடம் நீதி கேட்கும் முறையில் போராட்டங்களை தொடங்கினர்.
காஷ்மீர் மக்கள் கேலண்டர்களில் கூட அவர்கள் தங்கள் துயரங்களை மட்டும் தான் தினம் தினம் பார்த்து வாழ்கிறார்கள்.
இந்த வருட கேலண்டர்களை இந்தியாவில் இருக்கும் முக்கிய பல்கலைக்கழங்களுக்கும், நீதிக்காக போராடும் சமூக ஆர்வலர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த வருடம் (2020) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதால் செயல்படுத்தப்படவில்லை.
(Aljazeera 27.01.2019)
கொத்துக்கொத்தாக பிணக்குவியல்கள்
காஷ்மீரில் கொத்துக்கொத்தாக பிணங்கள் கண்டறியப்பட்ட புதைக்குழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு புதைக்குழியிலும் மூன்று முதல் 17 பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை எதும் அடையாளமற்ற பிணங்களாகவே இருந்தது. இதுவரை இப்படி புதைகுழிகளில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை 7000.
இந்த 7000 பிணங்களும் காஷ்மீரிகள் உடையது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது யாருடையது என்ற கேள்விக்கு தான் விடையில்லை.
தன் தந்தை காணாமல் ஆக்கப்பட்ட பிறகு அவரை தேட தொடங்கிய ராசியா என்ற காஷ்மீரக பெண் இப்படியான நிறைய புதைகுழிகளை கண்டெடுப்பதற்கு காரணமாக அமைந்தவர். 2005ல் காஷ்மீரில் நிலநடுக்கம் உருவான காரணத்தால் அதன் மூலம் நிறைய புதைகுழிகள் வெளியே தெரிந்தன. இப்படி கண்டெடுக்கப்பட்ட பிணங்கள் அனைத்தையும் DNA சோதனை செய்து அடையாளம் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. இதனை செய்வதாக கூறி ஆட்சியில் அமர்ந்த காஷ்மீர் அரசியல்வாதிகளும் ஏமாற்றத்தையே காஷ்மீர் மக்களுக்கு கொடுத்தனர்.
ராசியா தன் தந்தை இதுபோல் ஒரு புதைக்குழிக்குள் தான் தனது தந்தையும் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார். அவரின் இறுதிச்சடங்கையாவது நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த பிணங்களுக்கு DNA சோதனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்.
2020ல் காஷ்மீர்
காஷ்மீர் மக்களின் நிலை வருடங்கள் கடக்க கடக்க இயல்பானதாக மாறுவதற்கு பதிலாக மிக மோசமான சூழலுக்குள் தான் சென்றிருக்கிறது. 2020ல் அந்த நிலை மிகவும் தீவிரமான அடக்குமுறைக்குள் காஷ்மீரை ஆழ்த்தியிருக்கிறது.
இன்று ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் தங்கள் வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய அரசை நம்பி அதன் வழி தேர்தலில் நின்று வென்ற காஷ்மீரக ஆட்சியாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் காஷ்மீரில் அப்பாவிகள் கொலை செய்யப்படும் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கொடுக்கப்பட்டிருந்த அத்துனை அதிகாரமும் 2020ல் பிடுங்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அம்மக்கள் தங்கள் உரிமைக்காக் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.
தீர்வு
காஷ்மீரிகளுக்கு இதுவரை நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நியாயத்தை வழங்கிட வேண்டும். இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை காஷ்மீரகத்திற்கும் உறுதிப் படுத்த வேண்டும். காஷ்மீருக்கென்று இருக்கும் சிறப்பு அந்தஸ்து பிரிவுகள் மீண்டும் அமலாக்கப்பட வேண்டும்.
இது அனைத்தையும் மீறி நாம் காஷ்மீர் மக்களை மதித்து அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து நம்மோடு இணைத்துக்கொள்ள முயல வேண்டும்.அவர்களை சிறைப்படுத்தி அவர்களின் நிலங்களை மட்டும் இந்தியாவுக்கு உரியதாக ஆக்கிக்கொள்வது தீர்வாக என்றும் அமையாது.
By..
VaigaraiVelichamonline
https://m.facebook.com/story.php?story_fbid=2368805276599376&id=100004097796380&sfnsn=wiwspwa&extid=ejY9AIf3A1pM8qyq