நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், அக்டோபர் 22, 2020

நபியை காதல் கொள்வோம்,

காதல் கொள்வோம்

اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ‌

இறை நம்பிகையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர்.                                                                                    திருக்குர்ஆன் :-33:6 

அன்பின் வெளிப்பாடு என்பது மூன்று விதம். முதலாவது உள்ளத்தளவில் உணர்வது. இரண்டாவது சொல்லால் உணர்த்துவது. மூன்றாவது செயலால் உணர்த்துவது. நாம் பெரும்பாலும் முதலாவதை 6௦ சதவிகிதமாகவும், இரண்டாவதை 3௦ சதவிகிதமாகவும், மூன்றாவதை 1௦ சதவிகிதமாகவும் வைத்துக் கொண்டிருக்கின்றோம். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விஷயத்தில் இந்த அளவீடுகள் கண்டிப்பாக மாறியாக வேண்டும். இல்லையெனில் நமது இறை நம்பிக்கையில் வீரியம்  இல்லை என்று பொருளாகிவிடும். 

நம்முடைய உயிரைவிடவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலானவர்கள். என்று தலைப்பில் காணும் திருவசனம் பேசுகிறது. இதன்படி அண்ணலாரை நேசிப்பது இறை நம்பிக்கையில் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது. 

நமக்காக....

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்ட நான் “நாயகமே! அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்” என வேண்டினேன். உடனே அண்ணலார் “யா அல்லாஹ்! ஆயிஷா செய்த முன் பின் அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக! மேலும் அவர் மறைமுகமாக பகிரங்கமாகச் செய்த அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக!”  என்று என்று பிரார்த்தித்தார்கள். 

இதனை செவியுற்றபோது எனது தலை எனது மடியில் போய் முட்டும் அளவுக்கு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இதனைக் கண்ட அண்ணலார் ஓ ஆயிஷா! என்னுடைய இந்த பிரார்த்தனை உனக்கு இவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டதா? என்று வினவினார்கள். நாயகமே! தங்களின் இந்த பிரார்த்தனையால் நான் எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்? என்று கூறினேன். 

அப்போது அண்ணலார் ஆயிஷாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த பிரார்த்தனையை எனது சமுதாயத்தினருக்காக ஒவ்வொரு தொழுகையிலும் நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்றுக் கூறினார்கள்.                                                                            நூல்:- அல்பஸ்ஸார், மஜ்மவுஸ்ஸவாயித்

தீர்ப்பு நாளின்போது

குற்றவாளி அந்நாளில் தன்னுடைய வேதனைக்குப் பகரமாகத் தன்னுடைய பிள்ளைகளையும், தன்னுடைய மனைவிகளையும், தன்னுடைய சகோதரனையும், தன்னை ஆதரித்து வந்த சொந்தக்காரர்களையும், இன்னும் பூமியிலுள்ள அனைத்தையையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்.) திருக்குர்ஆன்:- 70:11,12,13,14

அந்நாளில் மனிதன் (திடுக்கிட்டுத்) தன் சகோதரனை விட்டும், தன்  தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,  தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் விருண்டோடுவான்.    திருக்குர்ஆன்:- 80:34, 35, 36

அன்றைய தினத்தில் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிட்டு அவர்களுடைய கைகளை பேசும்படி  செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.                                                                                                                                                        திருக்குர்ஆன்:-36:65

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹுஆலா மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அமளித்துமளிகள் நிறைந்த அந்நாளில் மக்கள் அதிபயங்கரமான இந்த நிலையிலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே! என்று கூறியவாறு ஆதி மனிதர் ஆதம் (அலை), நபி நூஹ் (அலை), நபி இப்ராஹீம் (அலை), நபி மூசா (அலை), நபி ஈசா (அலை) ஆகிய ஒவ்வொரு நபிமார்களிடமும் சென்று இறைவனிடம் எங்களுக்காக பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவார்கள். அதற்கு அந்த நபிமார்கள் ஒவ்வொருவரும் வந்த மக்களிடம் தமது நிலைமைகளைக் கூறி என்னால் உங்களுக்கு பரிந்துரைக்க இயலாது அதற்கு இன்னாரிடம் செல்லுங்கள் என்று கூறிவிடுவார்கள்.

 இறுதியாக மக்கள் என்னிடம் வருவார்கள். இறைவனிடம் நாட்டப்படி நான் அவர்களுக்காக பரிந்துரை  செய்வேன். அதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியை நல்குவான்.                      அறிவிப்பாளர் :- அனஸ் (ரலி) அவர்கள்                       நூல்:- புகாரீ-4476, முஸ்லிம்-322, திர்மிதீ-2358

மறுமை நாளின் சோதனையின்போது தன் குடும்பத்தினர் தன்னிடம் ஏதேனும் கேட்டு விடுவார்களோ என்றெண்ணி தான் தப்பித்தாலே போதும் என்ற சுயநலத்தோடு தன் குடும்பத்தினரைப் பற்றி கவலை கொள்ளாமல் அவர்களைவிட்டும் மனிதன்  விருண்டோடுவான் என்றும்,  தன்னுடைய பாவத்திற்கு தன்னைச் சேர்ந்தவர்களை பகரமாக்கிவிட்டு தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள எண்ணுவான் என்றும், மனிதனின் உடல் உறுப்புக்களே அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும் என்றும் திருக்குர்ஆன் மறுமை நாளின் சோதனைகளை பலவாறாக விவரிக்கிறது.

தீர்ப்பு நாளின்போது இறைத்தூதர்கள் உட்பட அனைவரும் அவரவர் நிலைமைப் பற்றியே கவலைப்படும்போது அந்த இக்கட்டான நேரத்தில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள்  மட்டும் நமது  நலனில் அக்கறை கொண்டு  அவர்களாக முன் வந்து மனதார அல்லாஹ்விடம் நமக்காக சிபாரிசு செய்வார்கள் என்கிறது நபிமொழி. அதனால் தான் ஒரு இறை நம்பிக்கையாளன் தன் உயிர், தன் குடும்பத்தினர், தன் நண்பர்கள், தன் சொத்து சுகங்கள் அனைத்தையும்விட அண்ணலாரை அதிகம் நேசித்து அவர்களின் நல்வழியை மட்டும் பின்பற்ற  வேண்டும் என்கிறது இஸ்லாம். ஆகவே நாம் அண்ணலார் மீது அளவு கடந்து நேசம் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் நமக்காக புரிந்த தியாகங்கள், பொழிந்த கருணைகள், பாசங்களுக்கு கைம்மாறு செய்வது யாருக்கும் சாத்தியமற்ற ஒன்று தான்!  

பிற மனிதர்களுக்கு நாம் பட்டிருக்கும் நன்றிக் கடனைவிட அதிகமாகவே அண்ணலாருக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த வகையில் அனைவரின் மீது காட்டும் அன்பைவிட அண்ணலாரின் மீது நாம் அதிக அன்புக் காட்டாதவரை உண்மையான இறை நம்பிக்கையாளனாக நாம் ஆக முடியாது. 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடு அண்ணலாரின் வழியைப் பின்பற்றி நடப்பதும் அவர்களின் மார்க்கத்தை காப்பதும், அதற்காக உழைப்பதுமேயாகும்.  

இக்கட்டான நிலையிலும்.... 

(நபியே! இறை நம்பிக்கையாளர்களிடம்) நீங்கள் கூறுங்கள் உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருட்களும் நஷ்டமாகிவிடுமோ என பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும் உங்களுக்கு மிக விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதியில் போர் புரிவதை விடவும் உங்களுக்கு விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள் இறை நம்பிக்கையாளர்களல்ல நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.                                                     திருக்குர்ஆன்:- 9 :24

இஸ்லாத்தை எடுத்துரைத்த ஒரே காரணத்திற்காக மக்கா இணைவைப்பாளர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களது முகத்திலும், மேனியிலுமிருந்து இரத்தம் ஆறாய் ஓடும் அளவுக்கு ஒருமுறை கடுமையாக தாக்கினார்கள். அன்றைய பகல் முழுவதும் அவர் பேச முடியாமல் மயக்கத்தில் இருந்தார். அந்நிலையிலும் அவர் பேசிய முதல் வார்த்தை “முஹம்மத் (ஸல்) அவர்கள் எப்படி இருக்கிறார்கள்” என்பதுதான். குற்றுயிரும் குழையுயிறுமாக இருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் தம் தாயாரை அழைத்து அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி நலம் விசாரித்து வருமாறு கூறினார். பிறகு தம்மை அண்ணலாரிடம் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தினார். அபூபக்கர் (ரலி) அவர்கள் நடக்க முடியாத நிலையிலும் கால்களை தரையில் இழுத்தவராகவும், தன் தாயின் தோள் மீது சாய்ந்தவராகவும் தள்ளாடிக் கொண்டு அண்ணலார் இருக்கும் இடமான “தாருல் அர்கம்” என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார். அண்ணலாரைப் பார்த்து நலம் விசாரித்தப் பிறகு தான் அபூபக்கர் (ரலி) அவர்கள் மனம் அமைதியுற்றது.       நூல்:- சீரத்துன் நபவிய்யா இப்னு கஸீர்  

குபைப் பின் அதிய்யி  (ரலி) அவர்கள் மக்கா இணைவைப்பாளர்களிடம் கைதியாக பிடிக்கப்பட்டபோது அவரை பகிரங்கமாக கழு மரம் ஏற்றி கொலை செய்ய அவர்கள் நாள் குறித்தனர். குறித்த இடத்துக்கு குபைப் (ரலி) அவர்கள் கொண்டு வரப்பட்டார். அக்கோரக் காட்சியைக் காண அவ்விடத்தில் ஊரே ஒன்று கூடிவிட்டது. அவர் கழு மரத்தில் ஏற்றப்பட்டார்  இணைவைப்பாளர்களின் அம்புகள் அவரது உடலை சல்லடையாக்க தயார் நிலையில் இருந்தன. 

குபைபே! நீ உன் குடும்பத்துடன் சகல வசதிகளோடு வாழ, இந்த இடத்தில் (உமக்கு பகரமாக உமது தலைவரான) முஹம்மத் இருப்பதை நீ விரும்புவாயா? என்று வினவினர். அதற்கு குபைப் (ரலி) அவர்கள் தான் உயிர் போகும் நிலையிலும் “நான் தப்பிட இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலில் ஒரு முள் தைப்பதைகூட நான் விரும்ப மாட்டேன்” என்றார். பிறகு சிறிது நேரத்தில் அவரது உடல் அம்புகளால் சல்லடையாக்கப்பட்டது.                                                                                              நூல்:- ரிஜாலு ஹவ்லுர்ரசூல்   

தன் கும்பத்தினர் பிறகுதான் 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. உஹது யுத்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது நபித்தோழர்கள் திகைத்துப் போனார்கள். அப்போது தீனார் குடும்பத்தைச் சேர்ந்த நபித்தோழி ஹம்னா (ரலி) அவர்கள் திகைத்துப் போன நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக உஹதுப் போர் களத்திற்கு வந்தபோது தன்னுடைய மகன், தந்தை, கணவன் இன்னும் சகோதரர் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்படுகின்றார். அவர்களில் யாரை முதலில் பார்த்தார் என்பது எனக்குத் தெரியாது 

அந்த நபித்தோழி கொல்லப்பட்டவர்களை கடந்து செல்லும் போதெல்லாம் இவர் யார் என வினவிய போது இது உமது தந்தை, உமது சகோதரர், உமது கணவர், உமது மகன் என்று சொல்லப்பட்டது. அப்படி சொல்லப்படும்போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே? என்று தான் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் கொஞ்சம் முன்னால் நிற்கின்றார்கள் என நபித் தோழர்கள் கூறினார்கள். 

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களைப் பார்த்த அவர் அண்ணலாரின் ஆடையின் ஓரத்தைப் பிடித்தவாறு, பின்பு கூறினார். அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தாயும், தந்தையும் அர்ப்பணமாகட்டும். நீங்கள் நலமுடன் இருந்தால் போதும் நான் எந்த அழிவைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன் எனக் கூறினார்.                                       நூல்:- தப்ரானி

மற்றொரு அறிவிப்பில்: உங்களின் நலத்திற்குப் பின் எல்லா கஷ்டங்களும் எனக்கு மிக இலேசானதே என்றார்.                                                                                  நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்

இந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்களான அவரது கணவர், மகன், தந்தை, சகோதரர் ஆகியோர் கொல்லப்பட்டு கிடக்கிறார்கள். இதைப் பார்த்தும் கூட இப்பெண் கண்ணீர் சிந்தவில்லை. அதற்காக இப்பெண்ணுக்கு இவர்கள் மீது பாசம் இல்லை என்று அர்த்தமல்ல. இப்பெண்ணை பொறுத்தவரை இந்த நான்கு பேரின் இழப்பு தாங்கக் கூடியது தான். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழப்பது என்பது இப்பெண்ணுக்கு தாங்கக் கூடியதாக இல்லை. அதனால் தான் அண்ணலார் எங்கே? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன ஆயிற்று? எனக்கு காட்டுங்கள்! என்று அப்பெண் கேட்டுக்கொண்டே வந்தார் என்பதை அறிய முடிகிறது

ஒருமுறை தல்ஹா பின் பர்ராஹ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களை சந்தித்து நாயகமே! நீங்கள் எனக்கு எதை கட்டளையிட்டாலும் அதை உடனே செய்வேன் அதற்கு மாற்றம் செய்யமாட்டேன். (உங்கள் மீது நான் வைத்துள்ள அன்பே அதற்கு காரணம்) என்று கூறினார். அவருடைய அன்பின் அளவை சோதிப்பதற்காக அண்ணலார் அவரிடம் ( اِذهَب فَاقتُل اَبَاكَ ) “நீர் உம்முடைய தந்தையை கொலை செய்துவிட்டு வா!” என்றார்கள். இதனை செவியுற்றதும் சிறிதும் தாமதிக்காமல் உடனே தனது தந்தையை கொலை செய்யப் புறப்பட்டார். உடனே அண்ணலார் அவரை அழைத்து ( اِنِّی لَم اُبعَث بِقَطِیعَةِرَحَم )  “(நீர் உமது தந்தையை கொலை செய்ய வேண்டாம்) நான் உறவை துண்டிப்பதற்காக அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.                                                                                                                       நூல்:- உசுதுல் ஙாபா


அருமை நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கண்பார்வையற்ற ஒருவர் இருந்தார். அவருக்கு ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அப்பெண் மூலம் அவருக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தனர். அவள் எப்போதும் அண்ணலாரை திட்டிக்கொண்டும் வசைபாடிக்கொண்டும் இருந்தாள். அவர் சொல்கிறார், அதாவது அவள் என்னுடைய குழந்தைக்கு தாயாவாகவும், எனக்கு அடிமையாகவும் இருந்தாள். மேலும் அவள் அன்பானவளாகவும், மென்மையானவளாகவும் இருந்தாள். ஒரு நாள் நான் (அவளிடம்) அண்ணலாரைப் பற்றி நினைவுகூர்ந்தேன். அவள் வழக்கம்போல் அண்ணலாரை திட்டத் தொடங்கினாள் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் அவளை கண்டித்தும் அவள் திருந்தவில்லை. நான் அவளைத் தடுத்தேன் அவள் அதைத் தவிர்த்துக் கொள்ளவில்லை. எனவே நான் குத்து வாளை எடுத்து, அவளுடைய வயிற்றில் குத்தி அவளைக் கொன்று விட்டேன். 

அவர் மறுநாள் காலையில் அண்ணலாரின் சபைக்கு நடுநடுங்கியவராக வந்து நடந்தவற்றை விவரித்தார். அப்போது அண்ணலார் ( أَلَا اشهَدُوا اَنَّ دَمَهَا هَدَرٌ ) “(மக்களைப் பார்த்து) அவர் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டார். அவளுடைய இரத்தம் (உயிர் கொல்லப்பட) தகுதியானது தான் (அதற்குப் பதிலாக அவரை கொல்ல வேண்டியதில்லை) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள்.                                                                                         அறிவிப்பாளர்:- உஸ்மான் பின் ஷஹ்ஹாம் (ரஹ்) அவர்கள்  நூல்:- அபூதாவூத்-3795, நஸாயீ-4002

கண்ணொளியைப் போக்கிவிடு!

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் (தற்போது நடைமுறையில் இருக்கும் அதான் எனும் பாங்கு உடைய அமைப்பு முதன்முறையாக இவரது கனவில் தான் காட்டப்பட்டது.) அருமை நாயகம் (ஸல்) அவர்களின் (ஜனாஸாவை) பூத உடலை பார்த்துவிட்டு "யா அல்லாஹ்! எனது இந்த கண்களால் இனிமேல் அண்ணலாரை காணமுடியாதே! அண்ணலாரை காணாத இந்த கண்களால் இனிமேல் வேறு எவரையும், எந்த  காட்சியையும் நான் பார்க்க விரும்பவில்லை. இனிமேல் இந்த கண்களால் பிறரைப் பார்ப்பதாக இருந்தால் என் மரணத்திற்கு பிறகு மீண்டும் அண்ணலாரைப் பார்ப்பதாகத் தான் இருக்க வேண்டும். அதனால் ( اَللّٰهُمَّ کُفِّ بَصَرِی حَتّٰی لاَ اَرٰی بَعدَ حَبِیبِی اَحَدًا ) “இறைவா! எனது நேசத்திற்குரியவர் சென்றதற்கு பிறகு வேறு எவரையும் என்னால் பார்க்க முடியாது. அதனால் எனது கண்ணொளியைப் போக்கிவிடு!" என்று பிரார்த்தித்தார். அவரது பிரார்த்தணை ஏற்றுக் கொள்ளப் பட்டு உடனே அவரது கண்ணொளி பறிக்கப்பட்டது.

மனித உள்ளங்களை அறிபவன் அல்லாஹ். அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட நேசத்தின் காரணமாக அண்ணலாரின் மறைவை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனதார செய்த அந்த பிரார்த்தனையை அல்லாஹ் அறிந்து கொண்டான்.  அதனால் அவரது விருப்பத்திற்கிணங்க அவரின் கண்ணொளி பறிக்கப்பட்டது. அதன் பிறகு தான் குருடனாய் இருப்பதைப் பற்றி அவர்  எந்த கவலையுமின்றி மரணமடையும் வரை கண்ணொளியற்றவராகவே இருந்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும்விட அதிக நேசத்திற்குரியோராக ஆகிவிட்டால் அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவர் ஆவார்.                                                            அறிவிப்பாளர் :- அனஸ்(ரலி) அவர்கள்       நூல்:- புகாரீ-21                                           

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு பிரியமான அனைத்தையும் விட அல்லாஹ்வும், அவனது தூதரும் மிக பிரியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவன் இறைவனின் தண்டனையை எதிர்பார்க்கட்டும். காரணம் அவன் பாவிகளில் உள்ள ஒருவன் என மேற்காணும் (9 :24) திருவசனம் குறிப்பிடுகின்றது. 

தன் உயிரைவிடவும் நேசத்திற்குரியவர்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ) “உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தையையும், அவருடைய பிள்ளையையும், மக்கள் அனைவரையும்விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான்) இறை நம்பிக்கை உள்ளவர் ஆக மாட்டார்”.                                       அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்                             நூல்:- புகாரீ-15, முஸ்லிம், நசாயீ- 5016, தாரமீ-2797

ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! என்னைத் தவிர மற்ற  அனைவரையும்விட உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று கூறினார். அதற்கு அண்ணலார் அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னைவிட நான் மிகவும் நேசமுள்ளவராக ஆகும்வரை நீர் உண்மையான இறை நம்பிக்கை உள்ளவராக ஆக முடியாது என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! இப்போது நீங்கள் என் உயிரைவிடவும் என்னிடத்தில் மிக நேசத்திற்குரியவர்கள் என்று கூறினார். அதற்கு அண்ணலார் இப்போது தான் நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் என்று கூறினார்கள்.                                                                                                                          நூல்:- புகாரீ

நம்முடைய பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் ஆகிய அனைவரையும்விட இன்னும் நம் உயிரையும் விடவும் படைப்புகளில் நம்மால் அதிகமாக நேசிக்கப்பட வேண்டியவர்  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மட்டும் தான். அண்ணலார் மூலமாகத்தான் அல்லாஹ் நமக்கு நேரான பாதையைக் காட்டினான். இந்த உலகில் அண்ணலார் மட்டும் தான் நம்மீது அதிக அக்கறைக் கொண்டவர்கள். இறை நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இரு உலகிலும் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக கவலை கொண்டு அதற்காக பலமுறை அல்லாஹ்விடம் அழுது தொழுது பிரார்த்தித்துள்ளார்கள்     

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது நாம் கொள்ளும் நேசம் மறுமையில் சொர்க்கத்தில் அண்ணலாருடன் நம்மை சேர்ந்திருக்கச் செய்கின்றது.

நற்குணமே சான்று 

ஒருநாள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உளு எனும் அங்கத்தூய்மை செய்து கொண்டிருந்தபோது அவர்களின் தோழர்களில் சிலர் உளூவுக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீரை எடுத்து தம்முடைய முகங்களில் தேய்க்கலானார்கள். அப்போது அண்ணலார் ( مَایَحمِلُکُم عَلَی هٰذَا ) "உங்களை இவ்வாறு செய்யத் தூண்டியது எது?" என்று வினவினார்கள். "அல்லாஹ் மற்றும் அவனது தூதர் மீது கொண்டுள்ள நேசம் தான்" என்று கூறினர். 

அதற்கு அண்ணலார் ( فَلیَصدُق حَدِیثَهُ اِذَا حَدَّثَ وَلیُٶَدِّ اَمَانَتَهُ اِذَاأتُمِنَ وَلیُحسِن جَوَارَ مَن جَاوَرَهُ )  “(அல்லாஹ் மற்றும் அவனது தூதர் மீதும் நேசம் கொள்பவர்) எதனைப் பேசினாலும் உண்மையை பேச வேண்டும். அவர்களிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி  எதுவும் ஒப்படைக்கப்பட்டால் அதனை (பாதுகாப்புடன் வைத்திருந்து) உரியவரிடம் கொடுத்திடல் வேண்டும். அண்டை வீட்டாருடன் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும்." என்று கூறினார்கள்.                                                                                                                 அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் அபீகுராத்(ரலி) அவர்கள்                நூல்:-மிஷ்காத்

பெருமானார் (ஸல்) அவர்கள் உளூ செய்த தண்ணீரை பாக்கியமாகக் கருதி முகத்திலும், கைகளிலும் தேய்த்துக் கொள்வது அண்ணலாரின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்தான். அண்ணலார் கண்டிக்குமளவுக்கு இது ஒரு தவறான செயலுமல்ல. ஆயினும் ஒருவரை அளவு கடந்து நேசிப்பதின் பொருள் என்ன? அவரது விருப்பம் தனது விருப்பமாகவும், அவரது வெறுப்பு தனது வெறுப்பாகவும் கருதுவதே அதன் பொருளாகும்.

தனது வாழ்க்கைப் பயணம் நபிவழியில் செல்ல ஆசைப்படுபவன் தனது ஆசாபாசம், விருப்பம், மனப்பான்மை ஆகியவற்றை அருமை நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்குள் கட்டுப்படுத்திக் கொள்வான். அவ்வாறு செய்யாவிடின் தனக்கு அண்ணலாரின் மீது பாச நேசம் உண்டு என்று கூறுவதில் அரத்தமே இல்லை.

இந்த உலகத்தில் தன்னுடைய கொள்கை தலைவர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிக நடிகர்கள்,  போன்றோர்கள் மீது நேசம் கொண்டு கால நேரங்களையும், செல்வங்களையும், உயிரையும்கூட அர்ப்பணம் செய்பவர்கள் ஏராளம் உண்டு. இந்த அர்ப்பணிக்கு மறுமையில் எந்த மதிப்பும் இருக்கப்போவதில்லை. ஆனால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மீது அழுத்தமான நேசம் கொண்டு அண்ணலாருக்காக செய்யக் கூடிய சின்னஞ்சிறிய அர்ப்பணிப்புக்கூட மறுமையில் மிகப்பெரிய பலனைத் தரும்.

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن اَحَبَّ سُنَّتِی فَقَد اَحَبَّنِی کَانَ مَعِیَ فِی الجَنَّةِ )  “எவர் எனது வழிமுறையை நேசிக்கின்றாரோ அவர் என்னையே நேசித்தவராவார். என்னை நேசித்தவர் என்னுடன் சொர்க்கத்தில் இருப்பார்”.                                                                                                                                          நூல்:- முஸ்லிம்

 நமது நேசத்திற்குரியவர் எந்த பாதையில் நடைபோடுகின்றாரோ அந்தப் பாதையை நமது வாழ்க்கையின் பாதையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவரின் ஒவ்வொரு அடிச்சுவட்டையும், ஒவ்வொரு வழித்தடங்களையும் அறிந்து அதன்படி நடந்திட வேண்டும். அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.

சுருங்கக் கூறின் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் மீது அளவு கடந்து நேசம் கொள்வது ஒரு வணக்கமாகும். அந்த வணக்கத்தின் சுவை அறியாவிட்டால் நமது இறை நம்பிக்கை பரிபூரணமடையாது. ஆகவே நாம் அண்ணலாரை அளவு கடந்து நேசித்து அவர்களின் வழிமுறையை முறையாக கடைபிடித்து உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக ஆக அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலி இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. 

2018 ஆண்டு குர்ஆனின் குரல் மாத இதழில் பிரசுரமான எனது கட்டுரை

பிரபல்யமான பதிவுகள்