இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது இருபது வயதான பில்கீஸ் பானு கர்ப்பமாக இருந்தார்;பில்கீஸின் மூன்று வயது மகள்,பில்கீஸ் பானுவின் கண்முன்னே கொல்லப்பட்டார்;பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கீஸ் பானு அருகாமையில் உள்ள இடத்திற்கு சென்று உயிர்ப்பிழைத்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறையைச் சேர்ந்த சிலர் பில்கீஸ் பானுவை அச்சுறுத்தி ஆதாரங்களை அழித்தனர்;பில்கீஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர்;பில்கீஸ் பானுவிற்கு கொலை மிரட்டல்களும் வந்தன.
பில்கீஸ் பானுவின் குடும்பத்தினரின் உடல்கள் எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் எரியூட்டப்பட்டன.
இருப்பினும் பில்கீஸ் பானு தொடர்ந்து போராடினார்;தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டார்;இதுகுறித்த முதல் கைது கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது;உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியோடு,பில்கீஸ் பானுவின் வழக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
குஜராத் நீதிமன்றம் நீதியை வழங்க இயலாது என்ற பில்கீஸ் பானுவின் மனுவை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்ட நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றம்,2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று,பில்கீஸ் பானு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இப்படிப்பட்ட சட்டப் போராட்டத்தில் கடந்த 17 ஆண்டுகால வாழ்க்கையில் பில்கீஸ் பானுவும் அவரின் கணவரும் தங்களது குழந்தைகளுடன் இதுவரை பத்து வீடுகள் மாற வேண்டியிருந்தது.
இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்;அவர்களுக்கான தண்டனைக் குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து 11 ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது.
நாடெங்கிலும் இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும் முஸ்லிம்களின் மனங்களை இச்செய்தி ரணமாக்கிக் கொண்டிருக்கிறது.
குஜராத் கலவரத்தின் போது பல்கீஸ் பானுவிற்கு ஏற்பட்ட கொடூரம் என்பது நாட்டையே உலுக்கியது;தான் ஈன்றெடுத்த குழந்தையை கலவரத்தின் போது பறிகொடுத்துவிட்டாலும் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பறிக்கப்பட்ட உரிமைகளை எப்படியேனும் திரும்ப பெற்றிட வேண்டும்?என்கின்ற இலக்கோடு நீதியைத் தேடி வேதனைகளுடனும்,வலிகளுடனும் வெகு தூரம் பயணித்துச் சென்ற பில்கீஸ் பானுவிற்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்தான் தற்போது குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்கின்ற தீர்ப்பு.
இப்படிப்பட்ட நீதிக்கு எதிரான தீர்ப்புகள் தினம் தினம்,நித்தம் நித்தம் நம் தேசத்தில் எழுதப்பட்டு கொண்டிருக்கும் போது, எதுவும் பேச மௌனிகளாக இருப்பது ஒன்றே நம்மால் முடிந்தது என்கின்ற மிக மோசமான நிலையில்,வெகுஜன மக்களும்,முஸ்லிம் சமூகமும் இருந்து கொண்டிருப்பது மேலும் வேதனையை அதிகப்படுத்துகிறது.
பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை பரவாயில்லை என்று கடந்து சென்று விட்டோம்;காசி,மதுரா விஷயத்தில் பிரச்சனைகளை கிளப்ப சங்பரிவார கயவர்களின் கால்கள் நீதிமன்றங்களை நோக்கி சென்றுவிட்டன;நீதிக்காக கால் கடுக்க பயணித்து பரிபோன தன் மானத்திற்கு தீர்வு காணலாம் என்றிருந்த எம் சகோதரி பில்கீஸ் பானு அடைந்த ஏமாற்றம் வரை எத்தனை அநீதங்கள் நீதி விஷயத்தில் நடந்தேறியுள்ளன.
இதுகுறித்து இனி நாம் என்ன கடமையாற்றப் போகிறோம்?என்பதை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும்.
*நீதி சார் அனைத்தும் கட்டாயக் கடமை*
நீதி குறித்து நிறையவே பேசுகிறது இஸ்லாம்;நீதியுடன் நடந்து கொள்வதும், நீதம் நிலைபெற பாடுபடுவதும்,நீதிக்காக துணை நிற்பதும்,நீதி மறுக்கப்பட்டு அநீதம் தலை தூக்கும் போதும்,இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒருவன் நீதியின் பக்கம் நின்று செயலாற்ற வேண்டியது கட்டாயக் கடமை என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படையான போதனையாகும்.
பின்வரும் இறைவசனத்தில் இறைவன் நீதியை ஏவுகிறான் என்பது கொண்டுள்ள அர்த்தம் மேற்கூறிய எல்லா கருத்துக்களையும் உள்ளடக்கியதாகும்.
اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
(அல்குர்ஆன் : 16:90)
*நீதி மறுக்கப்படும் போது நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?*
*நீதி வழங்குமிடத்தில் நாமிருக்க வேண்டும்*
நீதி வழங்குபவர்களை குறித்து நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்;
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்;ஒரு வகையினர் சுவனம் செல்வார்கள்;மீதமுள்ள இருவகையினர் நரகம்தான் செல்வார்கள்;சுவனம் செல்லும் மனிதர் சத்தியத்தை அறிந்து அதற்கேற்ப தீர்க்க வழங்குபவர்;
சத்தியத்தை தெரிந்திருந்தும் அநீதியான தீர்ப்பை அளித்த மனிதர் நரகம் செல்வார்; அதேபோன்று எவர் அறியாமையில் இருந்து கொண்டு மக்களுக்கு தீர்ப்பு வழங்கினாரோ அவரும் நரகம்தான் செல்வார்.
அபூதாவூது - இப்னுமாஜா
ஒருவர் நீதி வழங்குகின்றார் எனில் அவரிடம் இரண்டு அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும் என்று இந்த நபிமொழி உணர்த்துகின்றது;
ஒன்று சத்தியம் எது என்பதை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்;
இரண்டு ஒவ்வொரு விவகாரத்திலும் நீதி நேர்மையின் நிலைகளை கவனிக்க வேண்டும்.
இந்த இரு பண்புகளும் ஒருவரிடம் இல்லாத போது அவர் நீதி வழங்குவதற்கு தகுதியற்றவனாகிவிடுகிறார்.
மற்றொரு முறை நீதிபதிகளுக்கான பொறுப்பை பெருமானார்(ஸல்)அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்;
எவர் மனிதர்களுடைய நீதிபதியாக நியமிக்கப்பட்டாரோ அவர் கத்தியின்றியே அறுக்கப்பட்டவரை போன்றவராவார்.
எனவே நீதி வழங்கும் பொறுப்பு மிகவும் உன்னதமானதாகும்;நீதிபதியாக உள்ளவர் நியாயமற்ற போக்கை மேற்கொள்வாரேயானால் அல்லாஹ்விடத்தில் தண்டிக்கப்படுகிறார்; நீதியின் பாதையில் செல்வாரானால் சமூகத்தில் செல்வாக்கு பெற்றுள்ள சமூக விரோதிகளின் விரோதத்திற்கு இலக்காகின்றார்;
எனவே நீதிபதி உறுதியான மனப்பான்மையுடன் சத்தியத்திற்கு துணை நிற்பவராக இருக்க வேண்டும்.
*அநீதம் இறை கோபத்தை இழுத்து வரும் என்ற அச்சம் வேண்டும்.*
அந்நிஸா அத்தியாயம் தொடக்கத்திலிருந்தே நீதி குறித்து விவரிக்கும் ஓர் அத்தியாயமாகும்;அது சமூகத்தில் வாழும் பெண்கள்,அனாதைகள்,பலவீனர்கள், வாரிசுரிமைக்காரர்கள்,ஏழைகள், முஸ்லிமல்லாதவர்கள் ஆகியோருடன் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.
மதினாவில் வாழ்ந்த யூதர்கள் எப்போதும் இஸ்லாத்துக்கும்,முஸ்லிம் சமூகத்துக்கும் எதிராக இரவும்,பகலும் தாக்குதல்களை நடத்தி வந்தனர்;சூழ்ச்சிகள் செய்தனர்; இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் திருடியதாக பொய் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு யூதருக்கு ஆதரவாக நீதி செலுத்துவதை உறுதி செய்து கொள்வதற்காக இந்த அத்தியாயத்தின் 15 முதல் 113 வரையான வசனங்களை இறைவன் இறக்கியருளினான்.
இந்த வசனங்கள் இறங்குவதற்கான பின்னணி இது தான்;
ரிஃபாஆ(ரலி)எனும் நபித்தோழர் மதினத்து அன்சாரிகளுடன் ஒரு போருக்காக சென்ற வேலையில், இவருக்கு சொந்தமான ஒரு கேடயம் திருடப்பட்டுவிட்டது;முஸ்லிம்களில் அன்சாரி கோத்திரத்தைச் சார்ந்த இப்னு உபைரிக் என்பவர்தான் திருடியவர் என்ற சந்தேகம் வலுத்தது;ஆகவே கேடயத்தின் உரிமையாளர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார்;
இந்த திருட்டு குறித்து விசாரிக்கப்படுவதை அறிந்த இப்னு உபைரிக் அந்த கேடயத்தை இப்னு அல்ஸமீன் என்ற யூதரின் வீட்டு தோட்டத்தில் வீசிவிட்டார்;பின்னர் தனது கோத்திரத்தாரிடம் தான் செய்ததை கூறிவிட்டு தேடுதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் கேடயம் அந்த யூதரின் வீட்டில் கண்டெடுக்கப்படும் என்று உறுதிப்படுத்தினார்.
அந்த கோத்திரத்தை சார்ந்தவர்கள் அனைவரும் இறைத்தூதர்(ஸல்)அவர்களிடம் சென்று இறைவனின் தூதரே !
எங்கள் கோத்திரத்தைச் சார்ந்தவர் குற்றமற்றவர்;கேடயத்தை திருடியது நாங்கள் அல்ல இன்ன பேருடைய யூதர்தான் திருடினார்;எமது கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள் என்று தங்களை மக்களிடம் அறிவிக்க வேண்டும் என்று முறையிட்டனர்;திருடப்பட்ட பொருள் யூதரின் வீட்டில் இருப்பதை கண்டறிந்த நபி(ஸல்)அவர்கள் இப்னு உபைரிக் குற்றமற்றவர் என்று மக்கள் மத்தியில் பிரகடனம் செய்து தமது அனுதாபத்தையும் தெரிவித்தார்கள்;
அந்நிஸா அத்தியாயத்தின் 15 முதல் 109 வரையுள்ள வசனங்களில் அப்பாவி மீது அநீதி இழைக்கப்பட்டதற்கான அல்லாஹ்வுடைய கோபப்பார்வை தெறிப்பதையும்,நீதிக்கான சேவை உணரப்படுவதையும் அவ்வசனங்களை படிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஏனெனில் யூதராக இருந்தாலும் அவருக்கு இங்கே அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது;அல்லாஹ் இறக்கியருளிய சத்திய மார்க்கத்தின் படியே நீர் தீர்ப்பு வழங்க வேண்டும் என அல்லாஹ்வின் தூதருக்கு இங்கே நினைவூட்டப்படுகின்றது;அவ்வசனங்கள் இவ்வாறு நீதிக்காக வாதாடுகின்றன;
اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَاۤ اَرٰٮكَ اللّٰهُ وَلَا تَكُنْ لِّـلْخَآٮِٕنِيْنَ خَصِيْمًا ۙ
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
(அல்குர்ஆன் : 4:105)
நம்பிக்கை துரோகம் செய்பவருக்காக நீர் வாதாட வேண்டாம்;அவர் இறை நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் சரியே;இந்த விளக்கம் மீண்டும் ஒருமுறை அடுத்த வசனத்தில் இவ்வாறு மீட்டப்படுகின்றது;
وَلَا تُجَادِلْ عَنِ الَّذِيْنَ يَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِيْمًا ۙ
(நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 4:107)
(உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளாத வரை என்ற நூலிலிருந்து)
*அநீதமான தீர்ப்புகளுக்கு எதிராக உரத்து முழங்க வேண்டும்*
அசத்தியங்களுக்கு எதிராக மௌனம் காப்பது உண்மை முஃமினுக்கு ஒருபோதும் உகந்ததல்ல.
நபி(ஸல்)கூறினார்கள்;
ஒருவன் சத்தியத்தை அறிந்திருக்கும் நிலையில் மக்கள் மீதுள்ள பயம் அவனை சத்தியத்தை விட்டும் தடுத்து விட வேண்டாம்.
அசத்தியங்கள் கண்ணெதிரே நடைபெறும்போது வாய்மூடி இருந்தால்..
ஆன்மா பலவீனமடையும்
மரணத்தின் மீது வெறுப்பு உண்டாகும்
உலக ஆசை அதிகரிக்கும்
அடியார்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் குறைவு ஏற்படும்.
அசத்தியங்களை தடுத்து நிறுத்திட முழுமையாக குரலெழுப்ப வேண்டுமென்பதற்கு கலீஃபா அபூபக்கர்(ரலி)அவர்களின் பின்வரும் கருத்து படிப்பினைக்குரியதாகும்.
நான் உங்களுக்கு பொறுப்பாளியாவேன்;
நான் உங்களை விடச் சிறந்தவன் என்று கருத வேண்டாம்;
எனவே என்னிடம் நலவை கண்டால் எனக்கு உதவுங்கள்;
என்னிடம் தீயதைக் கண்டால் அதிலிருந்து என்னை தடுத்து நிறுத்துங்கள்.
உங்களில் உடலால் பலவீனமானவரும் சத்தியத்தை நிலைநிறுத்த முன்வந்தால் பலசாலிதான்!
உங்களில் ஒருவர் பலசாலி என்றாலும் சத்தியத்தை விட்டும் நீங்கிச் சென்றால் அவர் பலவீனமானவர்தான்!
ஃபாசிசத்தை எதிர்க்கக்கூடிய களத்தில் இந்திய முஸ்லிம்கள் அபூபக்கர்(ரலி)அவர்களின் சக்திவாய்ந்த இந்த வரிகளை இதயங்களில் நீங்காமல் இடம்பெறச் செய்ய வேண்டும்.
இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் இப்படியிருக்க இன்றைக்கு இந்தியாவில் நடப்பதோ இதைத் தாண்டிய மிக மோசமான நிலைகளாகும்;அநீதமிழைக்கப்பட்ட நபர்களுக்கு நீதம் கிடைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க,அநீதம் இழைக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக மாற்றப்படுகிற மிக மோசமான சூழலைத்தான் முஸ்லிம்கள் இந்தியாவில் சந்தித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் மிகப்பெரிய உரத்த குரலை நாம் இந்த அநீதியான ஆட்சியாளர்கள்,நீதிபதிகளுக்கு எதிராக எழுப்பாவிட்டால் மாற்றங்களை ஒருபோதும் காண முடியாது.
*இறுதியாக..*
படைத்தவனை சிரம்பணிந்து வணங்குவதற்கான வணக்கஸ்தலம் பாபரியை இழந்துவிட்டோம்;பள்ளி இருந்த இடத்தில் மாபாதகச் செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பச்சிளம் குழந்தை ஆஷிஃபா ஆராத ரணங்களின் அடையாளம்;அந்தக் குழந்தையை சிதைத்த வெறிபிடித்த ஓநாய்கள் சுகபோக ஓலங்களை இட்டுக்கொண்டு இன்றைக்கும் இந்திய தேசத்தில் இன்பச் சுற்றுலா வந்து கொண்டிருக்கிறார்கள்;இதற்கான நீதி எப்போது?
அந்த வரிசையில் இருபது வருடங்கள் ஆகிறது என்றாலும் ஆறாத ரணங்களாய், வடுக்களாய்,வற்றாத கண்ணீராய்,காவிக் கயவர்கள் ஏற்படுத்திய குஜராத் கலவரத்தின் கடினமான காட்சிகள் கண்முன்னே நம் எல்லோருக்கும் நிழலாடிக் கொண்டிருக்கிற போது,கடும் வேதனையோடு அந்த கலவரப் பொழுதை,அங்கு நடத்தப்பட்ட கொடூரங்களை நேரடியாகவே அனுபவித்த சகோதரி பல்கீஸ் பானு இன்றைக்கும் உயிரோடு இருந்து கொண்டு,நீதிக்காக நிலைத்து நின்று, ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறாள் என்றால் எத்தனை பெரிய வேதனையும், கொடுமையும் அது?
இதற்கான நிரந்தர மாற்றங்களை இந்தியாவில் வாழும் மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட அத்தனை பேரும் சேர்ந்து ஏற்படுத்த வேண்டும்; இது அதி முக்கியக் கடமை என்ற போதிலும் முஸ்லிம் சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு அடியானும் இதற்கான மாற்றத்தை கண்டே ஆக வேண்டும்;அநீத தீர்ப்புகள் இனி ஒருபோதும் எழுதப்படாது என்கின்ற ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும்.
நீதிமன்றங்களளே தவறு செய்தாலும் தட்டிக் கேட்கின்ற தூய அரசாங்கத்தை நிறுவ வேண்டிய உயரிய கடமை எல்லோரையும் விட இஸ்லாமியர்களுக்கு உண்டு.
இந்த எண்ணத்தை நம் ஆள் மனதில் விதைத்து கொண்டு வருங்காலத்திலாவது,வற்றாத போராட்டங்களோடு,பரிசுத்த மாற்றத்திற்கான பங்காளர்களாக நாம் மாற வேண்டும்;இதை உணராவிட்டால் காலம் கைசேதமான பதில்களையே தரும்; அல்லாஹ் பாதுகாப்பானாக!