நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், அக்டோபர் 01, 2024

இஸ்லாத்தில் பெண்,

இஸ்லாத்தில் பெண்

ஆணும் பெண்ணும் ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள். இருவருமே ஒரே இறைவனின் அடிமைகள். ஆணும் பெண்ணும் பிறப்பில் தூய்மையானவர்கள். இறைவனின் பிரதிநிதிகள் எனும் சிறப்பை இஸ்லாம் வழங்குகிறது.

இஸ்லாம் சிந்தனையின் மார்க்கம். உலகில் பல்வேறு சிந்தனையோட்டங்கள், சித்தாந்தங்கள், வாழ்க்கை நெறிகள் இருந்தாலும் அத்தனையும் மனிதர்களால் இயற்றப்பட்ட அல்லது மனிதர்களால் மாற்றப்பட்ட, புகுத்தப்பட்ட நெறிகளாகத்தான் உள்ளன. இஸ்லாம் மட்டுமே இறைவனால் அருளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தீர்க்கமான, தெளிவான, துல்லியமான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இதில் மாற்றங்கள், திருத்தங்களுக்கான எவ்விதத் தேவையுமின்றி இருக்கிறது. ஏனென்றால் இந்த வாழ்வியல் நெறி இறைவனால் அருளப்பட்டது.

இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல் மட்டுமே பெண் விடுதலை, பெண்களுக்கான நீதி சாத்தியம் என்பதை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் போதித்ததோடு மட்டுமின்றி அத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்கள். பெண்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்ததோடல்லாமல் அத்தகைய வாழ்வை வாழ்ந்துகாட்டி ’உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே, உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியரிடத்தில் சிறந்தவன்' என்று பிரகடனப்படுத்தினார்கள்.

உயிர் வாழும் உரிமை

பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறப்பட்டால், அவர்கள் முகத்தில் கருமை கவ்வி உயிரோடு புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அன்றைய அரபகச் சூழலில் பெண் குழந்தை பிறப்பது நற்செய்தி என்று இஸ்லாம் பறைசாற்றியது.

’பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு, இறைவன் புறத்திலிருந்து வாழ்த்தும், நற்செய்தியும் உண்டு' என்று எடுத்தியம்பினார்கள் நபி(ஸல்) அவர்கள்.

’வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்' (திருக்குர்ஆன் 17:31) என்ற இறைக்கட்டளையின் மூலமாகச் சிசுக்கொலைக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. பெண்சிசுக் கொலை பெரும்பாவம் என்கிறது இஸ்லாம்.

’எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி, கருணை காட்டி வருவாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அருகிலிருந்த நபித்தோழர் ’இரு பெண் மக்கள் இருந்தாலுமா?' என்று கேட்டார். அதற்கு நபிகளார் ’ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்' என்று பதில் கூறினார்கள்.

’ஒரு பெண் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார்' என்ற செய்தியை அன்னை ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியதும் ’இவ்வாறு பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக இருப்பார்கள்' எனக் கூறினார்கள்.(புகாரி)

கல்வி உரிமை

’அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' எனும் நிலையை 1450 ஆண்டுகளுக்கு முன்னரே தகர்த்தெறிந்து கல்வியில் பெண்களுக்கான முன்னுரிமையைக் கொடுத்தது இஸ்லாம். நபிகளாரின் மனைவி இறைநம்பிக்கையாளரின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் மாணவரான உர்வா(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களைக் குறித்து ’திருக்குர்ஆன் விரிவுரை, வாரிசுரிமைச் சட்டங்கள், ஹலால் ஹராம், அரபி இலக்கியம், மரபுக் கவிதைகள், வரலாறு போன்ற துறைகளில் ஆயிஷா(ரலி) அவர்களை விடப் புலமை பெற்றவராக யாரையும் நான் கண்டதில்லை' என்கிறார். நபித்தோழர்களும், கலீஃபாக்களும் ஆயிஷா(ரலி) அவர்களை அணுகி வழிகாட்டுதலைப் பெற்றனர். 2210 நபிமொழிகளை அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்துள்ளார்கள்.

’ஒருவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவருக்கு, அல்லாஹ்விடம் இரண்டு விதமான கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

’நபித்தோழர்களில் ஏதேனும் ஒரு பிரச்னைக்குச் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் ஆயிஷா(ரலி)விடம் சென்று ஆலோசனை கேட்போம். அவர் எங்களுக்குச் சரியான விஷயத்தைச் சுட்டிக்காட்டுவார்' என்று கூறியுள்ளார் அபூமூஸா அல் அஷ்அரி(ரலி).

88 மார்க்க அறிஞர்களை அன்னை ஆயிஷா(ரலி) உருவாக்கியுள்ளார். அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் 32 மார்க்க அறிஞர்கள் கல்வி பயின்றுள்ளனர். தாயின் மடிதான் முதல் பாடசாலை என இஸ்லாம் பெண்மையைப் போற்றுகிறது. உம்மு தர்தா என்ற ஸஹாபியப் பெண்மணியிடம் கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் கல்வி பயின்றிருக்கிறார்.

ஆடை அணியும் உரிமை

பெண்களுக்குரிய ஆன்மிக, சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளோடு இவை அனைத்தையும் விட ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கும் மானத்திற்கும் பாதுகாப்பளிப்பது ஒரு நாகரிக சமூகத்தின் மிகப் பெரிய பொறுப்பு என்பதை ஆடை விஷயத்தில் இஸ்லாம் ஓர் அழகிய முன்மாதிரியை வழங்குகிறது.

பெண் விடுதலை என்பது பெண், பெண்ணாக வாழ்வதுதான். பெண்கள் ஆண்களைப் போல உடையை அணிந்து கொண்டு வாழ்வது சுதந்திரமாகாது.

’ஆண்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரையிலும், பெண்கள் முகம், மணிக்கட்டுகள், பாதம் ஆகியவற்றைத் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும்' என இஸ்லாம் கட்டளையிடுகிறது.

இறுக்கமான உடை, மெலிதான உடை ஆகியவற்றை ஆண், பெண் இருவருக்கும் இஸ்லாம் தடை செய்துள்ளது. ’ஆதத்தின் மக்களே உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும் தங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும், அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளி இருக்கின்றோம்'. (திருக்குர்ஆன் 7:26)

மண உரிமை

முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என இறைநினைவையும் அவற்றில் இறைக்கட்டளைகளைப் பேணுவதுபோல திருமணம், பெண் உரிமை விஷயத்திலும் இறைக்கட்டளைகளைப் பேண வேண்டும். இன்னும் அதைப் பற்றி அறிவும், தெளிவும் உடையவர்களாகத் திகழ வேண்டும். அது ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்விலும் பிரதிபலிக்க வேண்டும் என்கிறது இஸ்லாம்.

பெண்களுக்கு இஸ்லாம் பல்வேறு உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெண்ணின் விருப்பமே முக்கியமானது. ’நம்பிக்கை கொண்டோரே பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை' (திருக்குர்ஆன் 4:19) என்று திருமறையில் இறைவன் கூறுகிறான். திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம் அவசியம் என வலியுறுத்துகிறது இஸ்லாம்.

மணமகன் தான் மணக்கப்போகும் பெண்ணுக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை(மஹர்) கொடுக்க வேண்டும். மணப்பெண் மஹர் எனும் மணக்கொடையைப் பெறுவதை இஸ்லாம் பெண்ணிற்கான உரிமையாக ஆக்கியுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது ’நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்'. (திருக்குர்ஆன் 4:4)

பலதாரமணத்தை இஸ்லாம் ஆணையிடவும் இல்லை; கட்டாயப்படுத்தவும் இல்லை. ஒரு சலுகையாகவே பலதார மணத்தை அறிவிக்கிறது. இதில் மிகப் பெரும் இறைக்கருணை அடங்கியுள்ளது. ஏனெனில் இஸ்லாம் வைப்பாட்டி முறையையும் விபச்சாரத்தையும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் அது மனித அழிவிற்குக் காரணமாகிவிடுகிறது. ஆனால் பலதார மணத்தின் மூலம் விதவைகளும், முதிர்கன்னிகளும் நன்மை அடைகின்றனர். இதில் பெண்ணின் விருப்பமே முக்கிய பங்கு வகிக்கிறது.

மணவிலக்குரிமை

’மனைவியுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக்கூடும்'. (திருக்குர்ஆன் 4:19) என பெண்மையைப் போற்றுகிறது. விவாகரத்துப் பெறும் உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கி உள்ளது. ஆண்கள் கூறும் விவாகரத்திற்கு ’தலாக்' என்றும் பெண் கூறும் விவாகரத்திற்கு ’குல்உ' என்றும் பெயர்.

’அல்லாஹ்வின் வரம்புகளை அவர்கள் இருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் கணவனுக்கு ஏதேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவதில் அவர்கள் இருவரும் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகவும்’ (திருக்குர்ஆன் 2:229) என்ற வசனத்தின் மூலம் கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமை மனைவிக்கு உண்டு என்பதை அறியலாம்.

இன்னும் விவாகரத்துச் செய்த கணவனின் வீட்டில் ’இத்தா' எனும் காத்திருப்புக் காலத்தில் மனைவி வசிப்பது பெண்களுக்கு இஸ்லாம் அளித்த உரிமை என்பதை அறியலாம்.

குடும்பத்தில் பெண்

’உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளராவார். ஆண்(குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாம் இல்லத்தை அமைதி அளிக்கும் இடமாகக் கூறுகிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதிலும், குடும்ப உறவுகளைப் பேணுவதிலும் கணவனுக்கும் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்கிறது இஸ்லாம்.

பொருளீட்டுரிமை

சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்த கட்டளையாகும். கணவரின் அனுமதியோடு பெண்கள் பொருள் ஈட்டுவதில் தவறில்லை எனக் குறிப்பிடுகிறது இஸ்லாம்.

’பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. அவ்வாறே பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு'. (திருக்குர்ஆன் 4:7)

அன்னை கதீஜா(ரலி) அவர்கள் சிறப்புக்குரிய பெரும் வணிகராகத் திகழ்ந்தார். தோலை பதனிட்டு அவற்றில் வண்ணங்களை ஏற்றித் தரும் தொழில் செய்தார். கிடைத்த வருவாயில் இறைவனின் பாதையில் செலவிட்டார். பெண்களும் பொருளாதாரத்தை ஈட்டவும் செலவழிக்கவும் உரிமை படைத்தவர்கள் என இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டியது.

கலந்தாலோசித்தல்

இஸ்லாம் வழங்கிய பெண் உரிமைகள் அவர்கள் போராடிப் பெற்றதல்ல. இஸ்லாம் இயல்பாகவே இந்த உரிமைகளைச் சலுகைகளாக வழங்காமல் கடமையாகவே வழங்கியுள்ளது. ஆண்களும், பெண்களும் சிறிய பெரிய பிரச்னைகளுக்குக் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. மதீனாவில் இருந்து மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் சென்றபோது அப்போது குறைஷிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் ’இந்த ஆண்டு உம்ரா செய்ய அனுமதி இல்லை' என்று மறுக்கப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் உடன்படிக்கையைப் பேணும் விதத்தில் உம்ரா செய்யாமலேயே திரும்பிவிட முடிவு செய்தார்கள்.

தோழர்கள் உம்ரா செல்லாமல் மதீனா திரும்பிச் செல்லத் தயங்கினார்கள். இந்தச் சூழலில் நபி(ஸல்) அவர்கள், தம் மனைவி உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஆலோசித்தார்கள். அவர்கள் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் தமது பலிப்பிராணியை முதலில் அறுத்துவிட்டு தலை முடியை மழித்தபோது அதுவரை தயங்கி நின்ற தோழர்கள் மறு விநாடியே தாங்களும் அவ்வாறே செய்துவிட்டு மதீனா திரும்பினார்கள். பெண்களின் ஆலோசனைக்கும், அறிவுக்கும், கருத்துக்கும் இஸ்லாம் வழங்கிய முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

பெண் பாதுகாப்பு

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு 80 சாட்டையடி கொடுங்கள். இனி அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் அவர்களே தீயவர்கள் என்கிறது இஸ்லாம். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால் கடுமையான சட்டங்கள் வேண்டும். தண்டனைகள் கடுமையானால், ஒரு தவறை மீண்டும் செய்வதிலிருந்தும், அதைப் பற்றிய எண்ணத்திலிருந்தும் ஒரு மனிதனை தூரப்படுத்தும். ஆதலால் பாலியல் வன்புணர்வுக்கு இஸ்லாம் மரண தண்டனையைக் குறிப்பிடுகிறது. கடுமையான தண்டனை வழங்காவிட்டால் அவற்றை என்றுமே ஒழிக்க முடியாது.

இஸ்லாம் பெண்களுடைய மானம், மரியாதைக்கு மிக முக்கியத்துவம் வழங்குகிறது. ’இன்னும் திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவருடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்கள் சம்பாதித்தவைக்கான கூலியாக மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவுள்ளோனும் ஆவான்'. (திருக்குர்ஆன் 5:38 )

இஸ்லாம் அருளிய பெண் உரிமைகளை இந்த மகளிர் தினம் அலங்கரிக்கட்டும்

பிரபல்யமான பதிவுகள்