நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஏப்ரல் 20, 2022

அலிக்கு நபி கூறிய உபதேசம்,

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

“அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல்
உறங்கவேண்டாம்.

1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே. 

2. தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல்
உறங்காதே.

3. கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே.

4. சுவர்க்கத்தில் உனது இடத்தை பாதுகாக்காமல்
உறங்காதே.

5. உனது எதிரியைக் (இச்சை) கொல்லாமல் உறங்காதே.

அதற்கு ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு,
“நாயகமே! அனைத்தும் ஒரு இரவில் எப்படி சாத்தியம்
என கேட்க..

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

1. குல்ஹூவல்லாஹூ சூராவை 3 முறை ஓதினால் குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை பெறுவீர்.

2. சூரத்துல் பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000
தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்.

3. நான்காம் கலிமாவை 10 முறை ஓதினால் கஃபாவை
தவாபு செய்த நன்மை பெறுவீர்.

4. லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் என்று 10 முறை ஓதினால்
சுவனத்தில் உமது இடத்தை பாதுகாத்த நன்மையை
பெறுவீர்.

5. அஸ்தக்பிருல்லாஹில் அளீம் வ அதூபு இலைஹி
என 10 முறை ஓதினால் உமது எதிரியை
கொன்றதற்கு சமம் என கூறினார்கள். 

313 பத்ரு வீரர்கள்,

313 பத்ரு வீரர்கள்



لَوْلَا كِتَابٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ



(பத்ருப் போரில் கலந்து கொண்ட முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்று) அல்லாஹ் எழுதிய (தீர்ப்பான)து முந்தியிராவிட்டால், நீங்கள் (பத்ருப் போரில் பிடிபட்ட கைதிகளிடமிருந்து பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காக, உங்களை பெரும் வேதனை தாக்கியிருக்கும். திருக்குர்ஆன்:- 8:68



இஸ்லாமியப் பார்வையில் ஒவ்வொன்றுக்கும் தர வரிசை உண்டு. அதுபோல் இறைத்தூதர்களுக்கு மத்தியிலும் நபித்தோழர்களுக்கு மத்தியிலும் தர வரிசை உண்டு. அதனடிப்படையில், நபித்தோழர்களில் முதல் தர வரிசையில் இருப்பவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் ஆகும்.



பத்ருப் போர் நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( اللَّهُمَّ إِنْ تَهْلِكْ هَذِهِ الْعِصَابَةُ مِنْ أَهْلِ الإِسْلاَمِ لاَ تُعْبَدْ فِي الأَرْضِ ) "இறைவா! இஸ்லாமியரின் இக்குழுவினரை நீ அழித்து விட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்" (அதனால் இப்போரில் எங்களை வெற்றிப் பெறச் செய்வாயாக!) என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி உரத்த குரலில் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3621



அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் இந்த சிறு குழுவினர் தான் இஸ்லாம் விருட்சமாக வளர்ந்தோங்க முதன்முதலில் வித்திட்டவர்கள். அன்று இவர்கள் அழிக்கப்பட்டிருந்தால், இஸ்லாம் காணாமல் போயிருக்கும். அல்லாஹுதஆலா பாதுகாத்தான். எனவே இவர்களின் அந்தஸ்து மற்ற அனைவரையும்விட மேலானதாகும்.



போருக்கான காரணம்



பத்ரு என்பது மக்கா மதீனா இடையே உள்ள ஓர் இடத்திற்குப் பெயராகும். மதீனாவுக்கு தென்மேற்கே 146.16 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் ஒரு கிணறு இருந்தது. பத்ரு பின் நாரீன் என்பவர் அந்தக் கிணற்றை வெட்டினார். எனவே அக்கிணற்றுக்கும் அதை சுற்றியுள்ள இடத்திற்கும் அவருடைய பெயரே நிலைத்துவிட்டது. ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு (கிபி 624) ரமளான் 17 ஆம் நாள் வெள்ளியன்று இந்த இடத்தில் நடைபெற்ற போர் பத்ருப் போர் என்று அழைக்கப்படுகிறது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மக்காவில் இருந்தவரை அவர்களுக்கு மக்கா இறைமறுப்பாளர்கள் சொல்ல முடியாத துயரங்களை கொடுத்துவந்தனர். தொல்லை தாங்காமல் மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறிய பிறகும் முஸ்லிம்களை எதிரிகள் வம்புக்கு இழுத்தனர்.



மதீனாவில் அங்குள்ள மக்களின் நல்லாதரவுடன் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதைக் கண்டு பொறுக்க இயலாத மக்கா இறைமறுப்பாளர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்காக போர் நிதி திரட்ட விரும்பினர். வசதி படைத்தவர்கள் தங்களின் பொருள்களைத் தலைவர் அபூ சுஃப்யானிடம் கொடுத்து அவற்றை ஷாம் நாட்டில் விற்று அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தை போருக்குச் செலவிடுவதென முடிவு செய்தனர். அதற்கேற்ப அபூசுஃப்யான் தலைமையில் சுமார் 40 பேர் கொண்ட வணிகக் குழு ஷாம் நாட்டுக்கு சென்று வணிகம் செய்து பெரும் பொருளாதாரத்துடன் திரும்பி வந்துக்கொண்டிருந்தது.



இவர்களை தடுக்கும் விதமாகவே அண்ணலார் அல்அப்வா, புவாத், அல்உஷைரா ஆகிய இடங்களில் முகாமிட்டார்கள். வணிகக்குழு தப்பிவிட்டது. இறுதியில் 'பத்ரு' வழியாக இக்குழு செல்லவிருக்கின்ற செய்தி அறிந்து அண்ணலார் அங்கு சென்று முகாமிட்டார்கள். இப்போதும் அபூ சுஃப்யான் குழு வேறு வழியாகத் தப்பிச் சென்றுவிட்டது.



மதீனா திரும்பிவிடலாம் என்று முஸ்லிம்கள் இருந்த வேளையில், சுமார் ஆயிரம் பேர் கொண்ட ஒரு பெரும் படையே மக்காவிலிருந்து வந்து முஸ்லிம்களை தாக்கத் தயாராக இருந்தது. தாம் தப்பிவிட்டதால் திரும்பி விடுங்கள் என்று மக்காவாசிகளுக்கு அபூ சுஃப்யான் செய்தி அனுப்பியும் அபூஜஹ்ல் போன்ற குறைஷிகளின் தலைவர்கள் இப்போரை நடத்தியே ஆகவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களும் போரை சந்திக்க வேண்டியதாயிற்று. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் மஆரிஃபுல் குர்ஆன்

 

முழுமையாக கட்டுப்படுவோம்



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்கு செல்வதைப் பற்றி தன் தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களும் தத்தமது கருத்துக்களை சொன்னார்கள்.



அன்சாரிகளின் தலைவராக விளங்கிய, சஅது பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து, "நாயகமே நாங்கள் உங்களை கொண்டு இறைநம்பிக்கை கொண்டுள்ளோம். உங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவோம். நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்தில் எதை கட்டளையிடுகிறீர்களோ, அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக்கிணங்க தான் இருக்கும். எனவே நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம். எங்களில் இருந்து ஒருவரும் பின்தங்கி விடமாட்டார். நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை. நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம். அல்லாஹ் உங்களுக்கு கண் குளிர்ச்சியை எங்கள் மூலம் வழங்கலாம். அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்." என்று கூறினார். நூல்:- அர்ரஹீகுல் மக்தூம்



சஅது (ரலி) அவர்களின் உற்சாகத்தை கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள்.



மிக்தாத் பின் அல்அஸ்வது (ரலி) அவர்கள் கூறியதாவது. (பத்ருப் போர் நாளில்) நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், 

( لاَ نَقُولُ كَمَا قَالَ قَوْمُ مُوسَى ‏{‏اذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلاَ‏}‏ وَلَكِنَّا نُقَاتِلُ عَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ وَبَيْنَ يَدَيْكَ وَخَلْفَكَ‏.‏ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَشْرَقَ وَجْهُهُ وَسَرَّهُ‏.‏ يَعْنِي قَوْلَ )


"(இறைத்தூதர்) மூசாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்கள் இறைவனும் போய்ப் போர் செய்யுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போல் (திருக்குர்ஆன்:- 5:24) நாங்கள் கூறமாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளுடன்) போரிடுவோம்" என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்), அண்ணலாரின் முகம் ஒளிர்ந்ததை நான் கண்டேன். (எனது சொல்) அவர்களை மகிழச் செய்தது. நூல்:- புகாரீ-3952



அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பத்ரு என்ற இடத்திற்கு போர் புரியும் எண்ணத்துடன் செல்லவில்லை; வணிகக் குழுவை வழி மறைக்கவே சென்றார்கள். ஆனால் எதிரிகள் போருக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் என்ன செய்யலாம் என்று அண்ணலார் தம் தோழர்களிடம் ஆலோசனை கலந்தார்கள். அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்ற முஹாஜிர்கள் எதிரிகளைச் சந்திப்போம் என்று யோசனை கூறிய போதிலும், அன்சாரிகளின் நிலையை அறிந்துகொள்ள அண்ணலார் விரும்பினார்கள். அப்போதுதான் அன்சாரிகளின் தலைவரான சஅது (ரலி) அவர்களும், அவர்களில் ஒருவரான மிக்தாது (ரலி) அவர்கள் இக்கருத்தை தெரிவித்தார்கள்.



அவர்களின் எண்ணிக்கை



நீங்கள் சொற்பமானவர்களாக இருந்தபோது 'பத்ரி'ல் உங்களுக்கு அல்லாஹ் உதவி புரிந்திருக்கிறான். எனவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம். திருக்குர்ஆன்:- 3:123



பத்ருப் போரில் முஸ்லிம்கள் தரப்பில் 313 பேர் இருந்தனர். அவர்களிடம் இரு குதிரைகளும் 70 ஒட்டகங்கள் இருந்தன. எஞ்சிய அனைவரும் காலாட்படையினர் ஆவார்கள். அவர்கள் அனைவருக்கும் தேவையான தளவாடங்கள் கூட அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் எதிரணியில் 900 முதல் 1000 பேர் இருந்ததுடன் எஃகு வாட்கள், தலைக்கவசங்கள், நிறைவான தளவாடங்கள், கண்கவர் குதிரைகள் மற்றும் அபரிமிதமான பொருட்கள் ஆகியவற்றுடன் அவர்கள் வந்திருந்தனர்.



இப்போரில் எதிரிகள் தரப்பில் இருந்து 70 பேர் உயிரிழந்தனர். 70 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். முஸ்லிம்களில் 14 பேர் வீரமரணம் அடைந்தனர். முஹாஜிர்கள் 6 பேர், அன்சாரிகள் 8 பேர். பத்ருப்போரில் முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. இதுவே இஸ்லாமிய வரலாற்றில் முதல் அறப்போராகவும், ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது இப்போரில் உயிரை பணயம் வைத்து போராடிய பத்ருப் போர் வீரர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று விட்டனர். அவர்களின் சிறப்பும் மேன்மையும் அளப்பரியது. அவர்களின் குற்றங்களை அல்லாஹ் மன்னித்தான். நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர், தஃப்சீர் மஆரிஃபுல் குர்ஆன்



தலைப்பில் காணும் திருவசனத்திலுள்ள "அல்லாஹ் எழுதிய தீர்ப்பு" என்ற வார்த்தைக்கு, இமாம் அஃமஷ் (ரஹ்) அவர்கள், "பத்ருப் போரில் கலந்து கொண்ட யாரையும் அல்லாஹ் வேதனை செய்வதில்லை" என்று விளக்கமளித்தார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்



இப்போரில் வீரமரணமடைந்தவர்களின் பெயர்கள்:



முஹாஜிர்கள்: ஆறு பேர்

1) உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் 2) உமைர் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் 3) துஷ்ஷிமாலைன் பின் அப்தி அம்ர் அல்குஸாஈ (ரலி) அவர்கள் 4) ஸஃப்வான் பின் பைளா (ரலி) அவர்கள் 5) ஆகில் பின் அல்புகைர் அல்லைஸீ (ரலி) அவர்கள் 6) மிஹ்ஜஉ (ரலி) அவர்கள்

அன்சார்கள்: எட்டு பேர்

7) ஹாரிஸா பின் சுராக்கா (ரலி) அவர்கள் 8) முஅவ்விது பின் அஃப்ரா (ரலி) அவர்கள் 9) அவ்ஃப் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் 10) யஸீத் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் 11) உமைர் பின் அல்ஹுமாம் (ரலி) அவர்கள் 12) ராஃபிஉ பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் 13) சஅத் பின் கைஸமா (ரலி) அவர்கள் 14) முபஷ்ஷிர் பின் அப்தில் முன்திர்(ரலி) அவர்கள் நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா



உறவுகள் எதையும் பாராமல்

பத்ருப் போரில் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தனது நெருங்கிய உறவினர் என்றும் பார்க்காமல் தனது தாய்மாமன் ஆஸ் பின் ஹிஷாம் பின் முகீரா' வைக் கொன்றுவிட்டார்கள். நூல்:- அர்ரஹீகுல் மக்தூம்



இப்னு ஷவ்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரில் அபூ உபைதா ஜர்ராஹ் (ரலி) அவர்களின் தந்தை ஜர்ராஹ் போர்க் களத்தில் அடிக்கடி அவர்களின் குறுக்கே வந்து சென்றார். எனவே இவ்வாறு பல தடவை குறுக்கிட்டதால் அவரை (அல்லாஹ்வுக்காக) கொன்றுவிட்டார்கள்.



அப்போதுதான் அல்லாஹுத்தஆலா (நபியே) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களிடம் நேசம் கொண்டு உறவாடுவதை நீர் காணமாட்டீர். அவர்கள், தங்கள் பெற்றோர்களாக அல்லது தங்கள் சந்ததிகளாக அல்லது தங்கள் சகோதரர்களாக அல்லது தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! (அவர்களை நம்பிக்கையாளர்கள் நேசிக்க மாட்டார்கள்.) இவர்களுடைய உள்ளங்களில் தான் அல்லாஹ் நம்பிக்கையைப் பதிய வைத்துத் தன் அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கிறான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் இவர்களை நுழையச் செய்து விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கி விடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைவார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தான் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன்:- 58:22) என்ற வசனத்தை அருளினான். நூல்:- ஹில்யா, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-397



முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் உடன் பிறந்த சகோதரர் அபூ அஸீஸ் பின் உமைர் என்பவர் பத்ருப்போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டு மதீனாவுக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் இவரை கைது செய்த (முஹ்ரிஜ் பின் நள்லா என்ற) நபித்தோழரிடம், ( شُدَّ یَدَیكَ بِهِ فَاِنَّ اُمَّهُ ذَاتُ مَتَاعٍ لَّعَلَّهَا تَفدِیهِ مِنكَ ) "இவரின் கையை நன்றாகக் கட்டு. இவரின் தாய் ஒரு செல்வச் சீமாட்டி. இவரை விடுவிப்பதற்கு ஏராளமான ஈட்டுத்தொகை தரக்கூடும்" என்றார்கள். இதைக் கேட்ட அபூஅஸீஸ், "என் அருமை சகோதரரே! என் விஷயத்திலா இவ்வாறு கூறுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு முஸ்அப் (ரலி) அவர்கள், ( اِنَّهُ اَخِی دُونَكَ ) "நீர் என்னுடைய சகோதரர் அல்லர். இந்த அன்சாரித் தோழர் தான் என்னுடைய (கொள்கை) சகோதரர் ஆவார்" என்று உறுதியாகக் கூறினார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-402



முஆது பின் அம்ரு பின் அல்ஜமூஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரில் அபூ ஜஹ்லை நானே கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். போர் மைதானத்தில் நான் அவனைப் பார்த்து விட்ட போது ஓடிச்சென்று அவனது கரண்டைக் கால்களைத் துண்டித்தேன். திருகையிலிருந்து அரைபடாத கொட்டை நசுங்கினால் பறக்குமே... அதுபோன்று அவனது கால்கள் பறந்து விழுந்தன. இதைப் பார்த்த அவனது மகன் இக்ரிமா எனது தோள் மீது பாய்ந்து வெட்டினார். அதனால் எனது கை வெட்டப்பட்டு உடம்பில் தோலுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அன்றைய தினம் முழுக்க அதை என் முதுகுக்குப் பின்னால் போட்டுக் கொண்டு போர் புரிந்தேன். அது எனக்கு மிகவும் நோவினை அளித்த போது, அதை என் பாதத்தின் கீழ் வைத்து பிய்த்துத் தூக்கி எறிந்து விட்டேன். நூல்:- அர்ரஹுகுல் மக்தூம்



இஸ்லாமிய வரலாற்றில் பத்ருப் போர் நெருக்கடியான சமயத்தில் நடந்த அறப்போராகும். நபித்தோழர்கள் இப்போரில் காட்டிய வீரமும், தியாகமும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பத்ருப் போரில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றி சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடந்த போராட்டத்தில் சத்தியத்தைத் தலைநிமிரச் செய்த மகத்தான வெற்றியாகும்.



வாய்மை வெல்ல காரணமான இப்போரில் கலந்துகொண்ட நபித்தோழர்கள் சொந்தம், பந்தம் எதையும் கண்டுகொள்ளாமல் இறைவனின் அன்பு ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு போராடினார்கள். இதனால் வேறு எவருக்கும் கிடைக்காத பெரும் பேறு பத்ரு வீரர்களுக்குக் கிடைத்தது. எந்த அளவுக்கென்றால் அவர்களை நோக்கி அல்லாஹ், "நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களை நான் மன்னித்து விட்டேன்" என்று கூட சொல்லி இருக்கலாம் என்கிறது நபிமொழி.



சிறந்தவர்கள்



(நபியே) நீர் இறை நம்பிக்கையாளர்களிடம் "(வானிலிருந்து) இறக்கப்படும் மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி புரிவது உங்களுக்குப் போதாதா? என்று கேட்டதை எண்ணிப் பார்ப்பீராக. திருக்குர்ஆன்:- 3:124



ஆம் நீங்கள் (மட்டும்) பொறுமை காத்து (இறைவனை) அஞ்சி நடப்பீர்களாயின், அவர்கள் (எதிரிகள்) இந்தக் கணமே உங்களிடம் வந்தாலும், அடையாளமிடப்பட்ட ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான். திருக்குர்ஆன்:- 3:125



இதை உங்களுக்கு அல்லாஹ் ஒரு நற்செய்தியாகவே ஆக்கினான். இதன் மூலம் உங்கள் உள்ளங்கள் அமைதி அடைவதற்காகவும் தான். திருக்குர்ஆன்:- 3:126



ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அல்லது வேறொரு வானவர் வந்து, "உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அண்ணலார், ( مِنْ أَفْضَلِ الْمُسْلِمِينَ ) "எங்களில் சிறந்தவர்கள் (என்று கருதுகிறோம்)" என்றார்கள்.



உடனே அந்த வானவர், ( وَكَذَلِكَ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمَلاَئِكَةِ ) "இவ்வாறுதான் (வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டோரை) வானவர்களில் சிறந்தவர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்" என்றார்கள். நூல்:- புகாரீ-3992, இப்னுமாஜா-156, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், தப்ரானீ



பத்ரு போரில் முதன் முதலாக வீர மரணமடைந்தவர் உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான மிஹ்ஜஉ இப்னு சாலிஹ் (ரலி) என்ற கறுப்பு நிற அடிமையாகும். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா



உமர் (ரலி) அவர்கள், “கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில் நான்கு கறுப்பு நிற மனிதர்கள் சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள். 1. எத்தியோப்பியா நாட்டு அதிபரான கருப்பின மக்களின் மன்னர் நஜ்ஜாஷி 2. லுக்மானுல் ஹகீம் (அலை). 3. பிலால் (ரலி) 4. பத்ருப் போரில் முதலில் ஷஹீதான மிஹ்ஜஉ (ரலி) ஆகியோர்” எனக் கூறினார்கள். நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்



ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை உமர் (ரலி) அவர்களின் வீட்டு வாசலில் சிலர் கூடியிருந்தனர். அவர்களில் சுஹைல் பின் அம்ர் (ரலி) அவர்களும், அபூசுப்யான் (ரலி) அவர்களும், இன்னும் குறைஷித் தலைவர்களில் சிலரும் இருந்தனர்.



அப்போது உமர் (ரலி) அவர்களின் பணியாள் மக்களின் முன்னால் வந்து, ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) அவர்கள் போன்ற பத்ருப் போரில் கலந்து கொண்ட நபித்தோழர்களை முதலில் உள்ளே செல்ல அனுமதி வழங்கிக்கொண்டிருந்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் ஆவார்கள். பத்ருப் போரில் கலந்து கொண்ட நபித்தோழர்களை அதிகம் நேசிப்பவர்களாகவும், அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று பிறருக்கு உபதேசம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா



அபூஹசீன் அல்அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். சிலரிடம் எதைக் கேட்டாலும் வேகமாக மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றனர். இதே விஷயத்தை உமர் (ரலி) அவர்களிடம் கேட்டிருந்தால் பத்ருப் போரில் கலந்து கொண்ட நபித்தோழர்களை ஒன்றுகூட்டி கலந்து ஆலோசித்த பின்பே அவர் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள். நூல்:-பிக்ஹுல் அவ்வலிய்யாத்



அப்துல்லாஹ் பின் மஅகில் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி- இறந்தபோது) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழவித்த) அலீ (ரலி) அவர்கள் (வழக்கமாகக் கூறும் தக்பீரைவிடக் கூடுதலாக ஒருமுறை) தக்பீர் கூறினார்கள்.



(இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட போது) ( إِنَّهُ شَهِدَ بَدْرًا‏ ) "சஹ்ல் (பின் ஹுனைஃப் - ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டார்கள். (பத்ருப் போரில் கலந்து கொண்டவருக்குப் பிறரைவிட தனிச் சிறப்பு உண்டு. அதனால் கூடுதல் தக்பீர் கூறினேன்)" என்று அலீ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-4004



அன்சார்களில் ஒருவரான சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 38-ம் ஆண்டு (கி.பி.658) இறந்தார்கள். இவரது ஜனாஸாவுக்கு தொழுவித்த அலீ (ரலி) அவர்கள் மொத்தம் ஐந்து தக்பீர்கள் சொன்னார்கள் என்றும், ஆறு தக்பீர்கள் சொன்னார்கள் என்றும் இரு தகவல்கள் காணப்படுகிறது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ



அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களைப்பற்றி முறையிட்டார்கள். அப்போது அண்ணலார், ( يَاخَالِد لَا تُٶذِ رَجُلً مِّن اَھلِ البَدرٍ فَلَو اَنفَقتَ مِثلَ اُحُدٍ ذَهَبًا لَم تُدرِك عَمَلَهُ ) ) "காலிதே! பத்ருப் போரில் கலந்து கொண்ட வரை துன்புறுத்தாதீர். ஏனெனில், நீர் உஹது மலையளவு தங்கம் செலவு செய்தாலும் அவரின் நன்மையை அடைந்து விட முடியாது. என்று கூறினார்கள். நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-488



அரசுப் பதவிகளில்



ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) அவர்களிடம் சில நபித்தோழர்கள் வந்து ஜனாதிபதி அவர்களே! பத்ருப் போரில் கலந்து கொண்ட அந்த நபித் தோழர்களை அரசுப் பதவிகளில் அமர்த்தவில்லையே" என்று வினவினர். ஜனாதிபதி அவர்கள், ( اِنِّي اَرَی مَكَانَهُم وَلَكِنِّي اَكرَهُ اَن اُدَنِّسَهُم بِالدُنيَا ) "அந்த நபித்தோழர்களின் அந்தஸ்தை நான் அறிவேன். எனினும் உலகப் பதவிகளைக் கொடுத்து அவர்களை கறைப்படுத்த விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள். நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-66 



பத்ருப் போரில் கலந்து கொண்ட உபை பின் கஅப் (ரலி) அவர்கள் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "எனக்கு அரசு அலுவலகப் பொறுப்பு தருவதில் தங்களுக்கு என்ன தயக்கம்? என்று கேட்டார். ஜனாதிபதி அவர்கள், "உமது மார்க்க தியாகத்தைக் கொச்சைப் படுத்த நான் விரும்பவில்லை" என்று கூறினார்கள். நூல்:- கன்ஸுல் உம்மால்



அரசுப் பணி புரிவோர் மக்களுக்கு சேவையாற்றும் போது பலரின் கேள்விகளுக்கும் பதில் சொல்வதும், பலரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவதுடன் எல்லோரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். மேலும் இது உலக தொடர்புடைய அரசுப் பதவிகளில் இஸ்லாமிய வளர்ச்சிக்கு வித்திட்ட, பத்ருப் போரில் கலந்து கொண்ட நபித்தோழர்களை அமர்த்த இருபெரும் ஜனாதிபதிகளும் தயக்கம் காட்டினர். அத்துடன் இஸ்லாத்தின் முதல் எழுச்சி போரான பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு தக்க வெகுமதியை வழங்க தகுதியானவன் அல்லாஹ் தான்! என கருதியதாலும் அழியும் உலகில் அலங்கார பதவியில் அமர்த்த அவர்கள் விரும்பவில்லை.



உதவி ஒத்தாசை



ஸுபைர் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களின் மகள்கள் இருவரில் உம்முல் ஹகம் (ரலி), அல்லது ளுபாஆ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சில கைதிகள் கொண்டு வரப்பட்டனர். அப்போது, நான் எனது சகோதரி மற்றும் அண்ணலாரின் அன்பு மகள் ஃபாத்திமா (ரலி) ஆகிய மூவரும் அண்ணலாரிடம் சென்று எங்களின் சிரமங்களைச் சொல்லி கைதிகளில் சிலரை பணிவிடைக்காக கேட்டோம். அதற்கு அண்ணலார், ( سَبَقَكُنَّ يَتَامَى بَدْرٍ ) "(அடிமைகளைப் பெறுவதற்கு) உங்களைவிட பத்ருடைய (போரில் வீர மரணமடைந்தவர்களின் குழந்தைகளான) அனாதைகள் முன்னுரிமை பெற்றவர்கள்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2987



கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் (வருடாந்தர உதவித்) தொகை (நபர் ஒருவருக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம் ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின்போது, "உதவித் தொகையை) மற்றவர்களை விட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4022



ஏதோ நாவு தடுமாறிவிட்டது  



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் உறவினரான) அபூருஹ்மின் மகள் உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் இயற்கைக் கடனை முடித்துக்கொண்டு எனது வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தமது ஆடையில் இடறிக் கொண்டார். உடனே அவர், "மிஸ்தஹ் நாசமாகட்டும்" என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான் அவரிடம், ( مَا قُلْتِ أَتَسُبِّينَ رَجُلاً قَدْ شَهِدَ بَدْرًا ) “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?” என்று கேட்டேன். நூல்:- முஸ்லிம்-5349



மிஸ்தஹ் பின் உஸாஸா என்பவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு பரப்பியவர்களில் ஒருவராக இருந்தார். அதனால் தான் அவரின் தாயாரே அவரை சபித்தார். ஆனால் அன்னையவர்கள் அந்த நேரம் வரை இந்த அவதூறைப் பற்றி அறிந்திருக்கவில்லை.



அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு பேசி அவர்களுடன் சேர்ந்துகொண்டு மிஸ்தஹ் பின் உஸாஸா (ரலி) அவர்களும் ஏதோ பேசி விட்டார். ஆயிஷாவின் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இது மன வேதனை அளித்தது.



தம் உறவினராக இருந்தும் மிஸ்தஹ் இப்படி செய்துவிட்டாரே என வருந்திய அபூபக்ர் (ரலி) அவர்கள் மிஸ்தஹுக்கு அதுவரை அளித்து வந்த உதவியை இனிமேல் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டார்கள். அவ்வாறு செய்யக் கூடாது என தடை விதித்து அல்லாஹுத்தஆலா கீழ்காணும் வசனத்தை அருளினான்.



உங்களில் தயாளமும் வசதியும் உடையோர், (தம்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் புலம்பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களை) மன்னித்து விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்கு வதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். திருக்குர்ஆன்:- 24:22



எனவே, இந்த வசனம் அருளப் பெற்றபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் ( بَلَى وَاَللَّه إِنَّا نُحِبّ أَنْ تَغْفِر لَنَا يَا رَبّنَا ) "ஆம்; எங்கள் இறைவா! நீ எங்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றே நாங்கள் விரும்புகின்றோம்" என்று கூறிவிட்டு, தாம் ஏற்கனவே மிஸ்தஹுக்குக் கொடுத்து வந்த உதவித் தொகையை மறுபடியும் கொடுக்கலானார்கள். இனிமேல் ஒருபோதும் இதைக் கைவிட மாட்டேன் என்றும் சொன்னார்கள். நூல்:- திர்மிதீ-3094, தஃப்ஸீர் இப்னு கசீர்



அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட நேரத்தில் உஸைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் "நீ நயவஞ்சகர்களுக்குச் சார்பாக பேசும் நயவஞ்சகன்" என்று கூறினார்கள். இரு அணிகளும் இவ்வாறு கற்பித்துக் கொண்டனர். அவர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமாதானம் செய்து வைத்தார்கள். "நீ நயவஞ்சகன்" என்று கூறிக் கொண்ட இவர்கள் அனைவரும் பத்ருப் போர் வீரர்கள் தான். இவர்களில் யாரையும் "இறைமறுப்பாளன்" என்று அண்ணலார் கூறவில்லை. மாறாக அனைவருமே "சொர்க்கவாசிகள்" என்று சான்று பகன்றார்கள்.



நயவஞ்சகனல்லர்



அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வது (ரலி) ஆகியோரையும், "நீங்கள் 'ரவ்ளத்து காக்' எனுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பினார்கள்.



அவ்வாறே நாங்கள் விரைந்து சென்றோம். இறுதியில் நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்) "கடிதத்தை வெளியே எடு" என்று கூறினோம். அவள், "என்னிடம் கடிதம் எதுவுமில்லை" என்று கூறினாள்.



நாங்கள், "ஒன்று நீயாக கடிதத்தை எடுத்துக் (கொடுத்து)விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி சோதனையிட வேண்டியதிருக்கும்" என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அண்ணலாரிடம் கொண்டு சென்றோம். அதில் ஹாத்திப் பின் பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போர் சிலருக்கு அண்ணலாரின் (போர்த்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்தார். அப்போது அண்ணலார் ( يَا حَاطِبُ، مَا هَذَا ) "ஹாத்திபே! என்ன இது?" என்று கேட்டார்கள்.



ஹாத்திப் (ரலி) அவர்கள், "நாயகமே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்பவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றனர். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவுகள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் பிரதியாக அவர்கள் என் உறவினர்களை காப்பாற்ற வேண்டுமென்று நான் விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் இறைமறுப்பாலோ, (இஸ்லாத்தை துறந்து) வேறு மதத்தை தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை" என்று கூறினார்கள்.



(இதைக்கேட்ட) அண்ணலார், "இவர் உங்களிடம் உண்மையை பேசினார்" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், "நாயகமே! என்னை விடுங்கள்! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்" என்று கூறினார்கள்.



அண்ணலார், ( أَلَيْسَ مِنْ أَهْلِ بَدْرٍ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ إِلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ وَجَبَتْ لَكُمُ الْجَنَّةُ، أَوْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ ) "இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் அல்லவா? பத்ரில் கலந்து கொண்டவர்களை நோக்கி அல்லாஹ், 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது' அல்லது 'உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா?" என்று கூறினார்கள்.



இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3007, 3983, முஸ்லிம்-4907, அபூதாவூது-2650, திர்மிதீ-3217, முஸ்னது அஹ்மது



ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களின் அடிமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஹாத்திபைப் பற்றி முறையிட்டார். "நாயகமே! ஹாத்திப் நிச்சயமாக நரகத்துக்குத்தான் செல்வார்" என்று கூறினார். அப்போது அண்ணலார், ( كَذَبْتَ لاَ يَدْخُلُهَا فَإِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ ) "நீர் பொய்யுரைத்தீர். அவர் நரகம் செல்ல மாட்டார். ஏனெனில் அவர் பத்ருப் போரிலும் ஹுதைபிய்யா உடன்படிக்கையிலும் கலந்து கொண்டுள்ளார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4908, திர்மிதீ-3789, முஸ்னது அஹ்மது



ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்கள் முஸ்லிம்களின் ராணுவ இரகசியத்தை (மக்கா வெற்றிப் போருக்காக அண்ணல் நபி - ஸல் அவர்கள் செல்லவிருந்ததை) எதிரிகளுக்கு காட்டிக் கொடுக்க அவர் எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், பத்ருப் போரில் கலந்து கொண்டவர் என்பதால் மன்னித்து விடப்பட்டார். இவர் யமன் நாட்டைச் சேர்ந்தவர். பின்னர் மக்காவுக்கு குடிபெயர்ந்து குறைஷியருடன் தங்கி, பெரும் வீரராகவும் கவிஞராகவும் விளங்கினார். அவர் ஹிஜ்ரீ 30 ஆம் ஆண்டு தனது 65 வது வயதில் இறந்தார். நூல்:- தக்மிலா



ஒரு நாள் ஜுபைர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோரிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது காலிது (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நாயகமே! "அப்துர் ரஹ்மானை திட்ட வேண்டாம்" என்று என்னைத் தடுத்தீர்கள். இப்போது ஸுபைர் திட்டுகிறாரே? என்று கேட்டார். அதற்கு அண்ணலார், ( اِنّهُم اَھلُ بَدرٍ وَّبَعضُهُم اَحَقُّ بِبَعضٍ ) "அவ்விருவரும் பத்ருப்போரில் கலந்து கொண்டவர்கள்தான். எனவே அவர்களில் ஒருவருக்கு ஒருவர் ஏசிக்கொண்டால் பரவாயில்லை. ஏனெனில், அதனால் அவர்களின் நன்மையில் குறைவு வரப்போவதில்லை" என்று கூறினார்கள். நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-489



நகைச்சுவையாளர்



அப்துல்லாஹ் பின் முஸ்அப் (ரலி) அவர்கள் கூறியதாவது. 115 வயதுடைய மக்ரமா பின் நவ்ஃபல் (ரலி) அவர்கள் கண்பார்வையற்றவர். அவர் ஒரு நாள் பள்ளிவாசல் இருக்கும் பகுதி என அறியாமல் சிறுநீர் கழிக்க முற்பட்டபோது, மக்கள் பள்ளிவாசல் பள்ளிவாசல் என சப்தமிட்டனர். எனவே அவர் சிறுநீர் கழிக்க வேறு பகுதிக்கு செல்ல நினைத்தார்.



அப்போது நுஅய்மான் பின் அம்ரு பின் ரிஃபாஆ (ரலி) அவர்கள் வந்து அவரைத் தனியாக பள்ளிவாசலின் ஓர் ஓரத்திற்கு அழைத்து சென்று இங்கே உட்காருங்கள் என்று கூறினார்கள். அவர் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க ஆரம்பித்ததும் அவரை விட்டுச் சென்றுவிட்டார்கள். மக்களெல்லாம் இந்த வயோதிகரை நோக்கி சப்தமிட்டனர்.



அப்போது அவர், என்னை இவ்விடத்தில் கொண்டு வந்து விட்டது யார்? என்று வினவினார். மக்கள், நுஅய்மான் (ரலி) அவர்கள் என்று கூறினர். அந்த வயோதிகர், "அல்லாஹ் அவரை நஷ்டப்படுத்துவானாக! என்று அவரை சபித்துவிட்டு, அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் என் கையில் கிடைத்தால் என்னிடம் உள்ள இந்த கைத்தடியால் அவரை நன்றாக அடிப்பேன். அதனால் அவருக்கு என்ன நேர்ந்தாலும் சரி" என்று கூறினார்.



பிறகு ஒரு நாள் அந்த வயோதிகர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்க, ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பள்ளியின் ஓரத்தில் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மிகவும் ஓர்மையாக தொழுகும் பழக்கமுள்ளதால் பள்ளிவாசலில் நடப்பவைகளை தெரிந்துகொள்ளவில்லை. அப்போது நுஅய்மான் (ரலி) அவர்கள் அங்கு வந்து அந்த பார்வையற்ற வயோதிகரிடம், "நான் உங்களுக்கு நுஅய்மானை காட்டித் தரவா? என்று கேட்டார்கள். வயோதிகர், "ஆம்! அவர் எங்கே எனக்கு காட்டிக்கொடு" என்று கூறினார்.



உடனே நுஅய்மான் (ரலி) அவர்கள் அவரை அழைத்து வந்து உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னால் நிற்க வைத்து, "இவர் தான் அவர் விட்டுவிடாதே!" என்று கூறிவிட்டார்கள். உடனே அந்த பெரியவர் தனது இரு கைகளாலும் கைத்தடியை பிடித்துக்கொண்டு (நுஅய்மான் தான் என்று தவறாக நினைத்து) உஸ்மான் (ரலி) அவர்களை பலமாக அடித்ததில் அவர்களின் தலை உடைந்து விட்டது. பிறகு மக்கள் அவரிடம் "நீர்! ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களை அடித்துவிட்டீர்" என்று கூறியதும் அவர் மிகவும் வருந்தினார். அப்போது மக்கள் நுஅய்மான் (ரலி) அவர்களை பழிவாங்க ஒன்றுகூடினர். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள், ( دَعُوا نُعمَانَ فَقَد شَهِدَ بَدرًا ) "நுஅய்மானை விட்டுவிடுங்கள் அவர் பத்ருப் போரில் கலந்து கொண்ட நபித்தோழர் (என்பதால் நான் அவரை மன்னித்து விட்டேன்)" என்று கூறினார்கள். நூல்:- அல்இஸாபா, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-767



அவர்களின் பரக்கத்             

 

பத்ருப் போரில் கலந்து கொண்ட நபித்தோழர்களின் பெயர்களை வாசித்து விட்டு நாம் பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனை உடனே ஒப்புக் கொள்ளப்படும். இது அனுபவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. நூல்:- தாரீகுல் கமீஸ்


 

சஅது பின் வக்காஸ் (ரலி) அவர்கள் நான் பத்ருப் போரில் கலந்து கொண்டபோது அணிந்த அந்த ஆடையைத்தான் நான் மரணமடைந்த பின்னர் எனது (ஜனாஸா துணி) சவத்துணியாக அணிவிக்க வேண்டும் என்று (வசிய்யத் எனும்) இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். காரணம் பத்ருப்போரில் கலந்து கொண்டபோது அணிந்திருந்த ஆடை அருள்வளமுள்ளது என்று எண்ணினார்கள். அவ்வாறே அன்னாருக்கு அந்த ஆடையையே சவத்துணியாக அணிவிக்கப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தியாகும்.

 

முஅவ்விது பின் அஃப்ராவு (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்ட உயிர்த்தியாகிகளில் ஒருவராவார். இவரின் மகள் ருபைய்யிஉ பின்த் முஅவ்விது (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஒரு நாள் லுஹரு தொழுகைக்கு முன்பு ‘கைலூலா’ எனும் சிறுதூக்கம் தூங்குவதற்காக தலையணையில் தலையை வைத்து படுத்திருந்தேன். அப்போது ஒரு கருத்த உருவம் திடீரென என் மேல் உட்கார்ந்து என்னை துன்புறுத்திக் கொண்டிருந்தது.

 

அப்போது வானிலிருந்து மஞ்சள் நிறத்திலான ஒரு காகிதத் துண்டு பறந்து வந்து அதன் அருகில் விழுந்தது. அதை அந்த கருத்த உருவம் படித்துப் பார்த்தது. அதில் “இது மேலான இறைவனிடமிருந்து இறை அடிமைக்கு எழுதப்பட்டதாகும். (பத்ரு போரில் வீரமரணமடைந்த) நல்லடியாரின் மகளான என் அடிமைப் பெண்ணை தீங்கு செய்ய உனக்கு எந்த உரிமையுமில்லை” என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

 

அது, இதைப் படித்துப் பார்த்ததும் கோபத்தில் என்னுடைய முட்டில் ஓங்கி அடித்து விட்டு ஓடி விட்டது. அதன் வேதனையை நான் (நீண்ட காலமாக) இது வரை அனுபவித்து வருகிறேன். நூல்: பைஹகீ

 

அல்லாஹுதஆலா இந்த பத்ருத் தோழருடைய பரக்கத்தால் அவருடைய மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது என இமாம் பைஹகீ அவர்கள் கூறுகிறார்கள்.

                                                              

எனவே, நாம் நபித்தோழர்களின் கண்ணியம் விளங்குவோமாக! அல்லாஹுதஆலா அவர்களின் பரக்கத்தால் நம்முடைய அனுமதிக்கப்பட்ட (ஹலாலானா) தேவைகளை நிறைவேற்றித் தருவானாக! ஆமீன்!

பிரபல்யமான பதிவுகள்