நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
புதன், ஜூன் 14, 2023
இஸ்லாத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் முறை,
இஸ்லாத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் முறை பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞
• சுபஹானல்லாஹ் இஸ்லாம் எவ்வளவு அழகிய மார்க்கம் ஒருவர் வாழும் காலங்களிலும் அவர் அசுத்தமாக இருந்தால் அவருக்கு குளிப்பு கடமை முறை சொல்லி கொடுக்கின்றது! அவர் மரணம் அடைந்தாலும் சுபஹானல்லாஹ் அந்த நேரத்திலும் அவரை குளிப்பாட்டி தூய்மையை அடைய செய்ய இஸ்லாம் நமக்கு ஜனாஸா குளிப்பாட்டும் முறை கூறி உள்ளது!
• ஜனாஸா குளிப்பாட்டும் முறை ஒவ்வொரு முஸ்லிமும் நன்கு அறிந்து வைத்து இருக்க வேண்டும்!
• ஆனால் இன்று அல்லாஹ் பாதுகாக்கணும் நம்மில் பலர் உலக கல்வியில் மிக சிறந்து விளங்குகிறோம்! பெயருக்கு பின்னால் பல பட்ட படிப்புகளை போட்டு கொள்ளுகிறோம் ஆனால் மார்க்கத்தை பற்றி ஒன்றும் அறியாமல் இருக்கின்றோம்!
• இன்றும் பல ஊர்களில் தாய் அல்லது வீட்டார் யாரேனும் மரணம் அடைந்து விட்டால் மையத்தை குளிப்பாட்ட நபரை தேடி அழைக்கின்றோம்! நம்மை சிறு வயதில் இருந்து நம்மை பார்த்து வளர்த்த தாய் அல்லது தந்தைக்கு கூட நம்மால் கடைசியில் குளிப்பாட்ட கூட தெரியாமல் அடுத்த நபரை நாடி நிற்கிறோம் எவ்வளவு ஊர்களில் இந்த அவலம் நடக்கின்றது 😥
• அழிந்து போக கூடிய உலக கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இன்று பலர் நிரந்தரமாக இருக்கும் மார்க்க கல்விக்கு கொடுப்பது கிடையாது! நவதுபில்லாஹ்!
• இதனாலேயே இஸ்லாம் என்ற பெயரில் மார்க்கத்தில் அதிகமான மூடநம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் உருவாகி விட்டன அல்லாஹ் பாதுகாக்கணும்!
💟 நல்ல மையத்தின் அடையாளங்கள் :
1) பிளேக் நோயால் இறந்தவர்!
2) வயிற்றுப் போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர்!
3) தண்ணீரில் மூழ்கி இறந்தவர்!
4) வீடு, கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர்!
5) இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்! மேலே குறிப்பிட்ட முதல் 5 நபர்கள் ஷஹீத் (உயிர்த் தியாகிகள்) ஆவார்கள்!
(நூல் : புகாரி : 2829)
6) தன் உயிர் மானம் பொருள் காக்க போராடி இறந்தவர்!
7) அசத்தித்திற்கு எதிராக போராடிவர்கள்!
8) மரண சமையத்தில் நெற்றியில் வியர்த்திற்கும்!
(நூல் : அபூதாவூத் | இப்னுமாஜா | நஸயீ | அஹ்மத்)
💟 எந்த வயதில் மரணம் அடைந்தால் அது நல்ல மரணம்?
• மௌத் பொறுத்த வரை இந்த வயதில் மரணம் அடைந்தால் அது நல்ல மரணம் அல்லது இந்த வயதில் மரணம் அடைந்தால் அது கெட்ட மரணம் என்று எதுவும் கிடையாது இதை பற்றி இஸ்லாம் எதுவும் நமக்கு கூற வில்லை!
ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்!
(அல்குர்ஆன் : 7 : 34)
• அல்லாஹ் மனிதனை படைக்கும் போதே அவர்களின் மரணத்தையும் குறித்து விடுகிறான்! அவர்களுக்கான நேரம் வந்து விட்டால் அது குழந்தை பருவமோ அல்லது தள்ளாடும் வயதோ நிச்சயமாக மரணம் அடைந்து விடுவார்கள்! நோய் உடல் பலகீனம் இவை எல்லாம் ஒரு காரணி மட்டுமே!
• பொதுவாக மரணம் மூன்று வகையான வயதினருக்கு ஏற்படும் அவை :
1) குழந்தை பருவம்
2) நடுத்தர இளம் வயது
3) தள்ளாடும் வயது
❤️ குழந்தை பருவம் :
• குழந்தை பருவத்தில் மரணம் ஏற்படுவதும் ஒரு சோதனையே!
இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
(நூல் : திர்மிதீ : 2323)
• சில ஊர்களில் இவ்வாறு கூறுவார்கள் பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை பாதிக்கும் என்று ஆனால் இது உண்மை கிடையாது அல்லாஹ் நாடினால் தவிர நமக்கு எந்த தீங்கும் ஏற்படாது!
• நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹிம் அவர்கள் கூட சிறு வயதில் தான் மரணம் அடைந்தார்கள்!
(நூல் : புகாரி : 1382)
• பெண் குழந்தை மூன்று அல்லது இரண்டு மரணம் அடைந்து விட்டால் அந்த குழந்தையின் தாயை நரகத்தில் இருந்து காக்கும் திரையாக அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
(நூல் : புகாரி : 101)
❤️ நடுத்தர இளம் வயது :
• இளம் வயதில் அல்லது நடுத்தர வயதில் ஒருவர் மரணித்தால் அதற்குக் காரணம் அவரது தீய செயல்கள் கிடையாது! அவர்களுக்கான நேரம் வந்து விட்டது அதனால் அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள்!
• நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண் பிள்ளைகளை கொடுத்தான்! அந்த 4 பேரும் மிகவும் இளம் வயதில் தான் மரணித்தார்கள்!
• மூன்று புதல்விகள் 1) ருகையா (ரலி) 2) ஸைனப் (ரலி) 3) உம்முகுல்தூம் (ரழி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே மரணித்து விட்டார்கள்! நபி (ஸல்) அவர்கள் மரணித்து 6 மாதங்கள் பின்பு பாத்திமா (ரழி) அவர்களும் மரணம் அடைந்து விட்டார்கள்!
(நூல் : புகாரி : 4241)
• நடுத்தர வயதைக் கூட அடையாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு புதல்விகளும் மரணம் அடைந்து உள்ளார்கள்! இளம் வயதில் மரணம் ஏற்படுவது துர்மரணம் கிடையாது! என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்!
❤️ தள்ளாத வயதில் மரணித்தல் :
• சிலர் தள்ளாத வயது வரை வாழ்ந்து பெரும் அவதிக்கு ஆளாகி மரணிப்பார்கள்! படுக்கையிலேயே மலஜலம் கழித்து, பெற்ற பிள்ளைகளாலேயே ஓரம் கட்டப்பட்டு மரணிப்பார்கள்! நவதுபில்லாஹ்!
• இன்னும் சிலர் சுய நினைவை இழந்த பின்னர் மரணிப்பார்கள்! இப்படியெல்லாம் ஒருவர் மரணிப்பதை வைத்து நாம் ஒருவரின் மரணத்தை தீயது என எண்ணி விட கூடாது!
• ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்தால் அதுவும் நன்மை தான் என்பதை கிழே உள்ள ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம்!
ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
(நூல் : திர்மிதீ : 2319)
கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தமது முதுமையில் பார்வையிழந்த நிலையில் தான் மரணித்தார்கள்!
(நூல் : புகாரி : 3889)
• நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயது வரை வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடி உள்ளார்கள்!
(நூல் : புகாரி : 6365)
• தள்ளாத வயது வரை வாழ்ந்து அதனால் மற்றவர்களுக்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயதை விட்டும் பாதுகாப்பு தேடி உள்ளார்கள்!
💜 திடீர் மரணம் :
• சிலர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று மரணித்து விடுவார்கள். வெள்ளம், மழை, சுனாமி, தீ விபத்து, வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள் இவ்வாறு மரணம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பட்டு உள்ளது ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதை கெட்ட மரணம் என்று எந்த இடத்திலும் கூற வில்லை!
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்' என்றனர்!
(நூல் : புகாரி : 1388)
💜 கடுமையான வேதனையுடன் மரணம் :
• சிலர் எவ்வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக மரணித்து விடுவார்கள்! ஆனால் இன்னும் சிலர் உயிர் போகும் போது கடுமையாக வேதனைப்பட்டு துடிதுடித்து மரணமடைவார்கள் இதை வைத்து நாம் இவர் கெட்டவர் அல்லது கெட்ட மையத் என்று முடிவு செய்ய கூடாது!
• ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் மரணம் அடையும் பொழுது கடுமையாக வேதனைக்கு உள்ளாகினார்கள்!
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :
என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந்திருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எவருடைய மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒருபோதும் நான் வருந்துவதில்லை!
(நூல் : புகாரி : 4446)
💟 மையத் அறிவிப்பு :
• முஸ்லீம் யாரேனும் மரணம் அடைந்து விட்டால் அதை நாம் பிறருக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்! ஊர் பள்ளிகளில் கூறினால் அவர்கள் mic யில் அறிவிப்பு செய்து விடுவார்கள்!
(நூல் : புகாரி : 1245)
💟 மையத்தை குளிப்பாட்ட தகுதியானவர்கள் :
❤️ வீட்டார் குளிப்பாட்டுதல் :
• ஜனாஸா குளிப்பாட்டும் முறை வீட்டார்களுக்கு நன்கு தெரிந்தால் அவர்கள் முன் வந்து குளிப்பாட்டலாம்! அல்லது வேறு நபரை வைத்தும் குளிப்பாட்டலாம்!
(நூல் : பைஹகீ : 6627)
• மரணமானவர் உயிர் உடன் இருந்த காலத்தில் தன்னை இன்ன நபர் தான் குளிப்பாட்ட வேண்டும் என்று வஸியத் செய்து இருந்தால் அந்த நபர் குளிப்பாட்டுவது தான் சிறந்தது ஆகும்!
• ஆண் மையத் என்றால் ஆணும் பெண் மையத் என்றால் பெண்ணும் குளிப்பாட்ட வேண்டும்! ஆணுக்கு பெண்ணோ அல்லது பெண்ணுக்கு ஆணோ குளிப்பாட்ட கூடாது!
❤️ கணவன் மனைவி :
• கணவன் அல்லது மனைவி ஜனாஸா பொறுத்த வரை இவர்களுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு! கணவனின் ஜனாஸாவை மனைவியும் அல்லது மனைவியின் ஜனாஸாவை கணவனும் குளிப்பாட்டலாம் இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு!
(நூல் : முஅத்தா : 304 | பைஹகி : 396 | அபூதாவூத் : 2733)
❤️ குளிப்பு கடமையில் உள்ளவர்கள் :
• மாதவிடாய் அல்லது நிபாஸ் அல்லது குளிப்பு கடமையில் உள்ள ஆண் போன்றவர்கள் முழுவதும் அசுத்தமானவர்கள் அல்ல! அவர்கள் தாராளமாக ஜனாஸா குளிப்பாட்டலாம்!
• மாதவிடாய் அல்லது நிபாஸ் அல்லது குளிப்பு கடமை என்பது உடலில் உள்ள ஒரு பகுதி மட்டுமே அசுத்தம் ஆகும் இதனால் அவர்கள் முழுமையாக அசுத்தம் அடைய மாட்டார்கள்!
• நூல் : முஸ்லிம் : 502 யில் வர கூடிய ஹதீஸை அடிப்படியாக வைத்து இமாம்கள் ஜனாஸாவை கூட மாதவிடாய் பெண்கள் அல்லது குளிப்பு கடமையில் உள்ளவர்கள் குளிப்பாட்டலாம் என்று கூறி உள்ளார்கள்!
💟 குளிப்பாட்டும் போது நாம் பேன வேண்டிய சில ஒழுக்கங்கள் :
• பொதுவாக ஆண் அல்லது பெண் மையத்தை குளிப்பாட்டும் முறை ஒன்று தான்! குளிப்பாட்டும் போது நாம் சில ஒழுக்கங்களை பேன வேண்டும் அவைகள் ;
1) ஆணை ஆணும் பெண்ணை பெண்ணும் தான் குளிப்பாட்ட வேண்டும்!
2) மையத் குளிப்பாட்டும் முன்பு தேவையான பொருட்களை அருகில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்!
3) மையத்தை குளிப்பாட்டும் போது மையத்திற்கு நெருக்கியவர்கள் யாரேனும் ஒருவர் அல்லது இருவரை உதவிக்கு உடன் வைத்து கொள்ள வேண்டும்!
4) ஜனாஸா குளிப்பாட்டுவதில் அனுபம் உள்ள நபரை வைத்து குளிப்பாட்ட வேண்டும் அல்லது நல்ல மார்க்கம் விளக்க உள்ளவரை வைத்து குளிப்பாட்ட வேண்டும்!
5) மையத்தை குளிப்பாட்ட ஏதேனும் மேசை பகுதி அல்லது கட்டில் போன்றவற்றில் வைத்து மையத்தை நாம் குளிப்பாட்ட வேண்டும்!
6) மையத்தை குளிப்பாட்ட கூடியவர்கள்! கைகளில் கை உறை அணிந்து கொள்ள வேண்டும்! நேரடியாக மர்மஸ்தான பகுதிகளை கைகளால் தொட கூடாது!
7) மையத்தின் ஆடைகளை களைத்து விட்டு மறைக்க வேண்டிய பகுதிகளை ஏதேனும் ஆடை வைத்து மறைத்து விட வேண்டும்! அதை ஒரு போதும் வெளிப்படுத்த கூடாது!
8) குளிப்பாட்டும் இடத்தில் சாம்பிராணி புகை போன்று ஏதேனும் வாசனைக்கு நற்மணம் அவசியம் ஏற்பட்டால் போட்டு கொள்ளலாம்! ஏன் என்றால் சில மையத் உடல் நீண்ட நேரம் உடல் தாங்காது சில மணி நேரத்திலேயே உடலில் இருந்து வாசனை வர ஆரம்பித்து விடும் அதனால் நாம் நற்மணம் ஏதேனும் பயன் படுத்தி கொள்ளலாம்!
9) குளிப்பாட்டும் போது முதல் வலது புறத்தில் ஒளு செய்யும் பகுதிகளில் இருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்!
(நூல் : புகாரி : 1255)
10) ஒற்றைப்படையாக நீர் ஊற்ற வேண்டும்! குறைந்தது 3 முறை நீர் ஊற்றி மையத்தை குளிப்பாட்ட வேண்டும்!
• மையத் தூய்மை ஆக வில்லை என்றால் நமக்கு வேண்டிய அளவு நீர் ஊற்றி கொள்ளலாம் ஆனால் ஒற்றைப்படையாக தான் குளிப்பாட்ட வேண்டும்! கடைசியாக நீர் ஊற்றும் போது வாசனைக்கு நீரில் சிறிது கற்பூரம் கலந்து ஊற்ற வேண்டும்!
(நூல் : புகாரி : 1254)
#மூடநம்பிக்கை : நீர் தன்மை எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் சில கட்டுக்கதைகள் உண்டு : மிகவும் குளிர்ச்சியும் இல்லாமல் சூடாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மையில் இருக்க வேண்டும் இல்லை என்றால் மையத் வேதனை படும் என்று ஆனால் இதற்கு இஸ்லாத்தில் எந்த விதமான ஆதாரமும் கிடையாது இது முழுவதும் அறியாமை ஆகும்!
• இன்னும் சில ஊர்களில் மையத்தை குளிப்பாட்டிய பின்பு ஒரு பாத்திரத்தில் நிறை கொடுத்து அனுப்பி வீட்டாரை அந்த நீரில் கை வைக்க சொல்லுவார்கள் பின்பு அந்த நிறைய மையத்தின் மீது ஊற்றுவார்கள் இதுவும் மூடநம்பிக்கை செயலாகும் இதற்கு எந்த விதமான ஆதாரமும் இஸ்லாத்தில் கிடையாது!
11) பெண் மையத் ஆக இருந்தால் குளிப்பாட்டும் போது மையத்தின் தலை முடியை பின்னி இருந்தால் அதை களைத்து விட்டு நன்கு கழுவிய பின்பு கடைசியாக மூன்று சடைகள் மட்டும் போட்டு முதுகுக்கு பின்னால் விட வேண்டும்!
(நூல் : புகாரி : 1263)
12) மிக முக்கியமானது : மையத்தை குளிப்பாட்ட கூடியவர்கள் அந்த மையத்தின் உடலில் உள்ள குறைகளை யாரிடமும் ஒரு போதும் கூற கூடாது!
13) மையத்தை குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டிய அவசியம் கிடையாது! கைகளை மட்டும் நன்கு கழுவி கொள்ள வேண்டும் விருப்பம் பட்டால் குளித்து கொள்ளலாம்!
(நூல் : பைஹகீ : 3 / 398 | தாரகுத்னீ : 2 / 72)
14) போரில் மரணம் (ஷஹீத்) ஆகி விட்டால் அவரை குளிப்பாட்ட கூடாது அவரின் காயம் மற்றும் அவர் அணிந்த ஆடைகள் உடன் அவரை கபன் இட்டு தொழுது அடக்கம் செய்ய வேண்டும்!
15) ஹஜ் அல்லது உம்ரா செய்யும் பொழுது இறந்து விட்டால் அவரை குளிப்பாட்டிய பின்பு அவர் அணிந்து இருந்த இஹ்ராம் ஆடையிலேயே கபன் செய்து பின்பு தொழுது அடக்கம் செய்ய வேண்டும்!
(நூல் : புகாரி : 1268)
💟 ஜனாஸா குளிப்பாட்டும் முறை :
❤️ தேவையான பொருட்கள் :
1) இரண்டு கை உறை (gloves)
2) இழந்தை இலை பொடி அல்லது சோப்பு அல்லது சீயக்காய் தூள்
3) கற்பூரம்
4) மையத்தின் மர்ம பகுதி (அவ்ரத்) மறைக்க தேவையான அளவு ஆடை
5) ஆடையை நீக்க கத்தரி கோல் அல்லது கத்தி
6) பஞ்சு
7) தேவையான அளவிற்கு நீர்
8) மையத்தை குளிப்பாட்டிய பின்பு துடைக்க நல்ல துணி
❤️ மையத் குளிப்பாட்டும் முறை :
• மையத்தை குளிப்பாட்டும் முறையில் இன்று மார்க்கம் கூறாத பல செயல்களை மக்கள் செய்கிறார்கள்! அதில் ஒன்று மையத் ஆன உடன் ‘ கசப் ’ மாற்றுவது என்ற பெயரில் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர்! இவ்வாறு செய்வதற்கு ஸஹீஹான ஒரு ஆதாரம் கிடையாது! இவ்வாறு நாம் செய்யவும் கூடாது!
• மையத்தை முழுமையாக இஸ்லாம் கூறிய முறையில் ஒரு முறை குளிப்பாட்டுவது தான் இஸ்லாம் நமக்கு கூறியது ஆகும்!
• தேவைபட்டால் மையத்தின் உடலில் இருந்து உடலிலிருந்து துர்வாடை வருவது போன்று இருந்தால் நாம் சாதாரணமாக ஒரு முறை குளிப்பாட்டி கொள்ளலாம்!
• ஜனாஸா குளிப்பாட்டும் போது நாம் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்ய கூடாதாவைகள் பற்றி பார்ப்போம்!
❤️ செய்ய வேண்டியவைகள் :
• ஜனாஸா குளிப்பாட்டும் போது ஓதும் துஆ என்று இஸ்லாம் எதுவும் கூற வில்லை! நாம் பொதுவாக பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பம் செய்யலாம்!
1) ஆடைகளை களைத்தல் :
• மரணித்தவர்கள் ஆடை அணித்து இருப்பார்கள் அந்த ஆடைக்கு மேல் ஏதேனும் ஒரு ஆடையை வைத்து மறைக்க வேண்டிய பகுதிகள் (அவ்ரத்) மறைத்து விட வேண்டும்! பின்பு,
• ஆண் ஆக இருந்தால் தொப்புள் முதல் முட்டி வரைyயும்! பெண்ணாக இருந்தால் கழுத்து பகுதி முதல் முட்டி கீழ் பகுதி வரை ஏதேனும் ஒரு ஆடையை வைத்து அவர்கள் அணிந்து இருக்கும் ஆடைகளை முழுமையாக கலைக்க வேண்டும்!
• கத்தரி கோல் அல்லது கத்தி போன்ற பகுதிகளை பக்குவமாக பயன்படுத்தி கவனமாக அவ்ராத் பகுதிகள் வெளிப்படாமல் மையத்தை வலது அல்லது இடது புறமாக பக்குவமாக திருப்பி ஆடைகளை கத்தரித்து அல்லது வெட்டி களைக்க வேண்டும் !
2) அவ்ரத் பகுதிகள் :
• ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மறைக்க வேண்டிய பகுதிகளை வெளிப்படாத அளவுக்கு கவனமாக பார்த்து குளிப்பாட்ட வேண்டும்! மையத் குளிப்பாட்டும் போதும் சரி காஃப்பன் அணியும் போதும் சரியே!
• மையத் அணிந்து இருக்கும் ஆடைகளை நீக்கி விட்டால் மேலே நாம் ஏதேனும் ஆடைகள் வைத்து மையத்தின் மர்ம பகுதிகளை முழுமையாக மறைக்க வேண்டும்! மர்ம பகுதிகள் ஒரு போதும் வெளிப்பட கூடாது!
3) அசுத்தங்களை சுத்தம் செய்தல் :
• மரணம் நெருக்கியவர்கள் அந்த நேரத்தில் ஏற்படும் பயத்தினால் உடலில் இருந்து மலம் ஜலம் வெளி ஆகி விடும்!
• நாம் குளிப்பாட்டுவதற்கு முன்பு இறந்தவரின் உடலை தலையின் பின் பகுதியை பிடித்து அமர்ந்த வாறு உயர்த்தி பின்பு மையத்தின் அடி வயிற்று பகுதியை லேசாக அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்ற வேண்டும் இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அனைத்து அசுத்தமும் வெளி ஆகி விடும்!
4) மர்ம பகுதிகளை கழுவதல் :
• அசுத்தம் வெளி ஆகி விட்டால் இதன் பின்பு நாம் ஒற்றைப்படையாக மூன்று அல்லது அதற்கு மேல் ஒற்றைப்படையாக நீர் ஊற்றி அசுத்தம் ஏதேனும் வெளி ஆகினால் அதை சுத்தம் செய்ய வேண்டும்!
• கைகளில் கை உறை அணிந்து கொண்டு மர்ம பகுதிகளுக்கு நீர் செலுத்தி அந்த பகுதிகளை தூய்மையாக சுத்தம் செய்ய வேண்டும் மேலே உள்ள ஆடைகள் விளக்காத வாறு செய்ய வேண்டும்!
• பின்பு மீண்டும் தலை முதல் கால் பகுதி வரை ஒற்றைப்படையாக நீர் ஊற்ற வேண்டும் பின்பு,
5) மையத்திற்கு ஒளு செய்து விடுதல் :
• பிஸ்மில்லாஹ் என்று கூறி மையித்தின் வலப் பக்கத்திலிருந்து ஒளு செய்யும் உறுப்புக்களிலிருந்து துவங்க வேண்டும்!
• நாம் எப்படி ஒளு செய்யும் பொழுது ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை (மஸக் தவிர) கழுவுகின்றோமோ அதே போன்று மையத்திற்கு செய்து விட வேண்டும்!
• மணிகட்டு மூன்று முறை கழுவிகின்றோமோ அதே போன்று மையத்திற்கு கழுவி விட வேண்டும்!
• நீரை கையில் நனைத்து கொண்டு வாய் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்!
• பின்பு கைகளில் தண்ணீரை நனைத்து கொண்டு மூக்கு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்!
• பின்பு முகத்தை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும் பின்பு முழக்கை வரை ஒளு செய்ய வேண்டும்! பின்பு
• தலைக்கு மஸஹ் செய்து விட வேண்டும் ஒரு முறை! பின்பு கடைசியாக கரண்டை கால் பகுதிகளை மூன்று முறை முழுமையாக கழுவி விட வேண்டும்!
6) வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடுதல் :
• குளிப்பாட்டும் போது இழந்த இலை அல்லது சோப்பு பயன் படுத்தும் போது அந்த மையத் உடலுக்குள்ளே சென்று விட கூடாது! அதனால் நாம் சிறிது பஞ்சு எடுத்து அதை மூக்கு பகுதியில் உள்ள துவாரதை அடைக்க வேண்டும்! பின்பு வாய் பகுதியை அடைக்க வேண்டும்!
7) உடலை இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்க்க வேண்டும் :
• தலை பகுதியில் சிறிது நீர் ஊற்றி பின்பு இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்க்க வேண்டும்! பின்பு முகத்தையும் இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்க்க வேண்டும்!
• ஆணுக்கு தாடி இருந்தால் அதை கோதி கழுவ வேண்டும்!
• பெண் மையத் ஆக இருந்தால் குளிப்பாட்டும் போது மையத்தின் தலை முடியை பின்னி இருந்தால் அதை களைத்து விட்டு நன்கு கழுவிய பின்பு கடைசியாக மூன்று சடைகள் மட்டும் போட்டு முதுகுக்கு பின்னால் விட வேண்டும்!
8) மையத்தை வலது புறம் சுத்தம் செய்ய வேண்டும் :
• மையத்தின் வலது கை பகுதி - மார்பு பகுதி - வலது தொடை பகுதி - வலது கால் பகுதி என வலது புறம் அனைத்து பகுதிகளையும் இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்! ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீர் ஊற்ற வேண்டும்!
• பின்பு மையத்தை மெதுவாக வலது புறம் திருப்பி வலது முதுகு பகுதி, வலது இடுப்பு பகுதி, வலது தொடை பகுதி வலது கால் பகுதி இவற்றை இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்! ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீர் ஊற்ற வேண்டும்!
9) மையத்தை இடது புறம் சுத்தம் செய்ய வேண்டும் :
• மையத்தின் இடது கை பகுதி - இடது மார்பு பகுதி - இடது தொடை பகுதி - இடது கால் பகுதி என இடது புறம் அனைத்து பகுதிகளையும் இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்! ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீர் ஊற்ற வேண்டும்!
• பின்பு மையத்தை மெதுவாக இடது புறம் திருப்பி இடது முதுகு பகுதி, இடது இடுப்பு பகுதி, இடது தொடை பகுதி இடது கால் பகுதி இவற்றை இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்! ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீர் ஊற்ற வேண்டும்! பின்பு மையத்தை பழைய நிலையிலேயே நேராக ஆக்க வேண்டும்!
10) மர்மஸ்தானம் பகுதியை கழுவுதல் :
• மையத்தின் கால்களை லேசாக விரித்து பின்பு மையத்தின் மர்மஸ்தான பகுதியில் உள்ள ஆடையை லேசாக உயர்த்தி பின்பு கையை உள்ளே விட்டு மையத்தின் முன் மற்றும் பின் மர்மஸ்தானம் பகுதியை சிறிது நீர் செலுத்தி பின்பு இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும்!
• இவ்வாறு நாம் குளிப்பாட்டியும் மையத் தூய்மை ஆக வில்லை என்றால் நாம் மீண்டும் சோப்பு அல்லது இழந்தை இலை அல்லது சீயக்காய் போட்டு குளிப்பாட்டலாம்! ஒற்றைப்படையில் நீர் ஊற்ற வேண்டும்!
11) கடைசியாக கற்பூரம் அல்லது சோப்பு அல்லது சீயக்காய் பயன் படுத்துதல் :
• கற்பூரம் இருந்தால் அதை தூள் ஆக ஆக்கி பின்பு அதை நீரில் கலந்து கொள்ள வேண்டும்! இவ்வாறு செய்வது சுன்னாஹ்! அல்லது மீண்டும் நாம் சோப்பு பயன் படுத்தி கொள்ளலாம்!
• நாம் மேலே செய்தது போன்று தலை பகுதி மற்றும் முகத்தை கழுவதல் பின்பு மையத்தின் வலது கை பகுதி மார்பு பகுதி தொடை பகுதி கால் பகுதி என வலது புறம் அனைத்து பகுதிகளையும் கற்பூரம் கலந்த நீரால் கழுவ வேண்டும்!
• பின்பு மையத்தை மெதுவாக வலது புறம் திருப்பி வலது முதுகு பகுதி, வலது இடுப்பு பகுதி, வலது தொடை பகுதி வலது கால் பகுதி என அனைத்து பகுதிகளையும் கற்பூரம் கலந்த நீரால் கழுவ வேண்டும்!
• பின்பு நாம் மேலே செய்தது போன்று மையத்தின் இடது கை பகுதி - இடது மார்பு பகுதி - இடது தொடை பகுதி - இடது கால் பகுதி என இடது புறம் என அனைத்து பகுதிகளையும் கற்பூரம் கலந்த நீரால் கழுவ வேண்டும்!
• பின்பு மையத்தை மெதுவாக இடது புறம் திருப்பி இடது முதுகு பகுதி, இடது இடுப்பு பகுதி, இடது தொடை பகுதி இடது கால் பகுதி என அனைத்து பகுதிகளையும் கற்பூரம் கலந்த நீரால் கழுவ வேண்டும்!
• பின்பு மையத்தை நேராக ஆக்கி மையத்தின் கால்களை லேசாக விரித்து பின்பு மையத்தின் மர்மஸ்தான பகுதியில் உள்ள ஆடையை லேசாக உயர்த்தி பின்பு கற்பூரம் கலந்த நீரை செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்!
12) மையத்தை துடைக்க வேண்டும் :
• மையத்தின் உடலில் உள்ள அனைத்து நீரையும் துடைக்க ஏதேனும் ஆடை பயன் படுத்தி நீரை நீக்க வேண்டும்!
• முழுமையாக தலை பகுதி கை கால் பகுதி உடல் பகுதி முதுகு பகுதி என அனைத்து பகுதிகளையும் துடைக்க வேண்டும்!
• பின்பு ஏதேனும் நல்ல ஆடை கொண்டு மையத்தின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்து விட்டு நாம் முன்பே மறைக்க பயன் படுத்திய ஆடையை நீக்கி விட வேண்டும் !
• அல்ஹம்துலில்லாஹ் ஜனாஸா குளிப்பாட்டும் முறை இத்துடன் முடிந்து விட்டது! இதன் பின்பு நாம் கஃப்பன் இட வேண்டும்!
💟 குளிப்பாட்டுபவர் இரகசியம் பேண வேண்டும் :
• இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டும் போது அந்த உடலில் பல குறைபாடுகள் இருக்கலாம்! அந்த மனிதர் வாழும் காலங்களில் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வாழ்ந்து இருக்கலாம்!
• ஜனாஸாவை குளிப்பாட்ட கூடியவர்கள் அந்த உடலில் உள்ள குறைகளை காண வேண்டிய சூழ்நிலை ஏற்படும்! இவ்வாறு மையத் உடலில் உள்ள குறைகளை காண கூடியவர் ஒரு போதும் யாரிடமும் எதுவும் கூற கூடாது!
ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
(நூல் : பைஹகீ : 6655)
💜 செய்ய கூடாதாவைகள் :
1) கசப் என்று மரணம் அடைந்த உடன் குளிப்பாட்டுவார்கள் இவ்வாறு செய்வதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் கிடையாது!
2) மையத் ஆன பின்பு அவர்களின் உடலில் உள்ள மர்மஸ்தானம் முடி அக்குள் முடி மற்றும் நகங்களை வெட்டுவார்கள் சில ஊர்களில் ஆனால் இவ்வாறு செய்ய கூடாது இதற்கு மார்க்கத்தில் எந்த வித ஆதாரமும் கிடையாது! ஆனால் மர்மஸ்தானம் முடி அக்குள் முடி மற்றும் நகங்கள் பார்க்க மோசமான நிலையில் இருந்தால் மட்டும் நாம் நீக்கலாம்!
3) ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுவார்கள் ஆனால் இஸ்லாம் நமக்கு இவ்வாறு எந்த திக்ரையும் கற்று தரவில்லை!
• அல்லாஹ் நம்மை நம்முடைய அமல்களையும் பொருந்தி கொள்ளுவனாக ஆமின்....!
@அல்லாஹ் போதுமானவன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...