இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது.
மனிதர்களுக்கு உதவுவதும் மனிதநேயம், மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருத்தலும் மனிதநேயம்.
இஸ்லாம் மனித உரிமைகள் பற்றி விரிவாக பேசுகிறது. மனித உரிமைகளும் இறைவனால் விதிக்கப்பட்டவையே. வழிபாடுகளை வகுத்த அதே இறைவன்தான் மனித உரிமைகளையும் வகுத்துள்ளான். மனித உரிமைகளை மீறுவது இறைக்கட்டளைகளை மீறுவதற்கு சமமாகும்.
ஒருவர் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடைமைகளில் தவறிழைத்தால் இறைவனிடத்தில் மட்டும் மன்னிப்பு கோரினால் போதும். மனித உரிமைகளை பறித்தால் இறைவனிடமும் மனிதர்களிடமும் அவர் மன்னிப்பு கோர வேண்டும்.
லஞ்சம், ஊழல், மோசடி, நாட்டின் வளங்களை சுரண்டுதல், நிலங்களை அபகரித்தால், ஊதியத்திற்கேற்றபடி உழைக்காதிருத்தல், மக்களின் ஒற்றுமையை குலைத்து துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை உண்டு பண்ணுதல் போன்றவை நாட்டிற்கு சமூகத்திற்கும் எதிரான குற்றங்களாகும். இக்குற்றங்களை நாட்டு மக்கள் மன்னிக்காதவரை அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகாது.
ஒருபுறம் தொழுகை நோன்பு போன்ற வழிபாடுகள், இன்னொரு புறம் மனிதர்களுக்கு எதிரான பாவங்கள், இவ்வாறு செய்வோரை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நயவஞ்சகர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நயவஞ்சகர்களின் பண்புகள் மூன்று ஆகும். அவை
1. பேசினால் பொய்யே பேசுவான்.
2. வாக்குறுதி கொடுத்தால் மீறுவான்.
3. நம்பி ஒப்படைத்த பொருள்களில் மோசடி செய்வான்.
அப்படிப்பட்ட மனிதன் நோன்பு நோற்று தொழுது உம்ராவை (புனிதபயணம்) நிறைவேற்றினாலும், இறைவனுக்குரிய கடமைகளை செய்து கொண்டே மனிதர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் நயவஞ்சகர்களாக கருதப்படுவார்கள்.
இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது. மறுமையில் திவாலாகிப்போன நிலையில் அவன் இருப்பான் என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஏழை என்பவன் யார்? என்று வினவினார்கள். எவரிடம் பணமோ வேறு எந்தப்பொருளோ இல்லையோ அவரே எங்களில் ஏழை எனத்தோழர்கள் பதிலளித்தனர்.
நபிகள் (ஸல்) கூறினார்கள்: ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகை, நோன்பு, ஜகாத் (தானதர்மம்) ஆகியவற்றுடன் இறைவனிடம் வருவான். இவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான். எவர் மீதாவது அவதூறு கூறியிருப்பான் எவரையேனும் கொலை செய்திருப்பான் எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே அவனது நன்மைகள் அவனால் அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களிடையே பங்கிடப்படும். அவனது நன்மைகள் தீர்ந்து போய் அநீதிக்குள்ளானவர்களின் பாவங்கள் அவன் கணக்கில் எழுதப்படும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையான ஏழை ஆவார். ( நூல்: முஸ்லிம்)
எனவே இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டேன். எனவே எப்படியும் சுவனத்தில் நுழைந்து விடுவேன் என்று கனவு காண வேண்டாம்.
இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம். இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம். 'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்'. (குர்ஆன் 6 : 151) சிசுக்கொலை, கருக்கொலை இதன் மூலம் தடைசெய்யப்படுகிறது. 'அல்லாஹ் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்'. (6 : 151) கொலை, கலவரங்கள், வன்முறை, பயங்கரவாதம் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துவது வரம்பு மீறிய செயலாகும். 'உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக, அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும், அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்'. (2 : 188) 'உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள்'. (17 : 26) 'இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்'. (49 : 11) 'இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்'. (49 : 12) 'இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும், அவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறாத வரையிலும் நுழையாதீர்கள்'. (24 : 27) ஒருவர் தாம் விரும்பும் மதத்தை, கொள்கைகளை பின்பற்ற உரிமை உடையவர் ஆவார். கொள்கைத் திணிப்பு உரிமை மீறலாகும். தமது கொள்கையை எடுத்துரைக்க மட்டுமே ஒருவருக்கு உரிமை உண்டு. 'இது (குர்ஆன்) உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்'. (18 : 29) உயிர், உடைமை, கண்ணியம், அந்தரங்கம், நம்பிக்கை ஆகியவை மனிதனின் அடிப்படை உரிமைகளாகும். இவற்றைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை. பறிப்பது வரம்பு மீறிய செயலாகும். மறுமையில் இவற்றிற்கும் தண்டனைகள் கிட்டும். |