நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், பிப்ரவரி 28, 2022

நம் வீட்டுத் திருமணம்.இஸ்லாம்.

நம் வீட்டுத் திருமணம் - ஏற்படுத்துவோம் சீர்திருத்தம்.*

கண்ணியத்துக்குரிய இஸ்லாமிய உறவுகளே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அல்லாஹ்வின் மார்க்கம் பரிபூரணமான மார்க்கமாகும். இந்த மார்க்கம் நமக்கு அனைத்து விஷயங்களுக்கும் வழி காட்டியிருக்கிறது. 
ஒரு முஸ்லிம் தம்முடைய வாழ்க்கையில் எந்தெந்த விஷயங்களைச் செய்ய வேண்டும், எவற்றை செய்யக் கூடாது என்பதை பிரித்து அறிவித்திருக்கிறது.
எவர்கள்  அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடியவர்களாக  இருக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வும்,  அவனது தூதரும் தந்த உபதேசங்களைக் கொண்டு போதுமாக்கிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். 
நம்முடைய கொள்கை சார்ந்த, வழிபாடுகள் சார்ந்த,  கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் இவை அனைத்துக்குமே  அல்லாவுடைய மார்க்கம் நமக்கு வழிகாட்டித் தந்திருக்கிறது. 
அவ்வாறு இருக்கும்போது யார் ஒருவர் இந்த வழிகாட்டுதலை விட்டுவிட்டு மற்ற வழிகாட்டல்களை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் வெறுப்பை சம்பாதித்து, அவனுடைய சாபத்தை அடையக்கூடியவர்களாக, மறுமையில் நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிடுவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் நம் சமுதாயத்தில் ஒரு சாரார் நம் மார்க்கத்தைப் பற்றி சரியாக அறியாததால், அல்லது அறிந்திருந்தாலும் தம் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் மார்க்கத்துக்கு முரணான அனாச்சாரங்களை இணைத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். 
அதில் பகிரங்கமாக தென்படும் விஷயங்களில் முதன்மையானதாக திருமணம் இருக்கிறது. 
*திருமணம் தொடர்பான விஷயங்களில் பல்வேறு விதமான அனாச்சாரங்களை அரங்கேற்றுகிறார்கள்.* 
இது நம் முஸ்லிம் சமுதாய திருமணங்களில் நடப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் எளிமையான முறையில் திருமணத்தைக் காட்டித்தந்து அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுகின்ற வழிமுறையை நமக்குச் சொல்லித் தந்திருக்கின்ற போது, அதை விட்டுவிட்டு பிற மதத்தவரின் கலாச்சாரங்களைக் கண்டு அதனால் கவரப்பட்டு அல்லாஹ்வின் மார்க்கம் காட்டித் தந்திருக்கின்ற வழிமுறைகளை புறக்கணித்து விட்டு பிற மதத்தவரின் நம்பிக்கையின் அடிப்படையில் பிள்ளைகளின் திருமணங்களை நடத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அத்தகைய திருமணங்களில் நடக்கின்ற அனாச்சாரங்களை கவனித்தோமானால், மணமகன், மணமகள் இருவரையும் *அலங்காரக் கோலத்தில்,* இஸ்லாம் வரையறுத்துத் தந்திருக்கும் *ஹிஜாப் அணியாமல்* அன்னிய ஆடவர்கள் காணும் வகையில் மேடையில் வைத்திருப்பதும், மணமகனின் நண்பர்கள் அவர்களைச் சுற்றி நின்று கேக் வெட்டி கரகோஷத்துடன் குதூகலிப்பதும், *ஸெல்ஃபீ எடுப்பதும்* , போட்டோவும், வீடியோவும் எடுக்கும் கேமரா மேன்  சொல்லுவதற்கிணங்க மணமகனும்,  மணமகளும் *போஸ்* கொடுப்பதும், கணவன் மட்டுமே காண வேண்டிய பெண்ணின் ஆடையலங்காரங்களை அந்நிய ஆண்கள் காணும்படி செய்யும் காட்சி வேதனையளிக்கிறது..இத்தகைய திருமண சபைகளில் *மலக்குகள்   பங்கெடுப்பார்களா ?* சற்றே சிந்தியுங்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களே !
இவை தவிர, மற்றுமொரு அனாச்சாரம் தற்சமயம் நம் சமுதாயத்தில் உருவெடுக்கத் துவங்கியிருக்கிறது; 
திருமணத்துக்கு ஒருசில தினங்களுக்கு முன் *மணப்பெண்ணுக்கு மஞ்சள் பூசும் சடங்கு* என்று, மணப்பெண்ணுக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற மலர்மாலை சூடி, அதில் பங்கு பெறும் குடும்பத்தினரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, அந்தப் பெண்ணுக்கு மஞ்சளைப் பூசி  அனைவரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
ஒரு சிலர் ஆரம்பித்து வைக்கும் இத்தகைய அனாச்சாரம்  ஏனைய மக்களும்  செய்யும்படி தூண்டப் படுவார்கள். 
ஆக மொத்தத்தில் சமுதாய சீர்கேட்டை உருவாக்கி, நல்லமல்களால் சேர்க்கும் நன்மைகளை பாழாக்கி அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களாக மாறுகிறார்கள். 
இந்த நிலையை மாற்றி,
எளிமையான அனாச்சாரமற்ற திருமணங்களை நடத்த நாம் முன் வர வேண்டும். 
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது,إِنَّ  أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً( குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் பறக்கத் நிறைந்தது )*  இஸ்லாமிய சொந்தங்களே ! சிந்திப்பீர்! அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற பாடுபடுவீர்! 
அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌஃபீக் செய்வானாக!!  ஆமீன்

பிரபல்யமான பதிவுகள்