நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
புதன், ஏப்ரல் 03, 2024
வருத்தம் தெரிவிப்பதும் இஸ்லாமியக் கலாச்சாரமே,
இஸ்லாம்,
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ
இறைநம்பிக்கையாளர்களே! நிச்சயமாக உஙகளிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகிவிட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கிறது. அன்றி உங்(கள் நன்மைக)ளையே பெரிதும் விரும்புகிறார். இன்னும் இறைநம்பிக்கையாளார்கள் மீது மிக்க அன்பும், இரக்கமும் உடையோராகவும் இருக்கிறார். திருக்குர்ஆன்:- 9:128
நம்மைப் படைத்த ஏகனான அல்லாஹுத்தஆலா நம் மீது எல்லையில்லா அருளாளனாக நிகரில்லா கிருபையாளனாக எண்ணிலடங்கா அன்பாளனாக இருக்கிறான். தாயைவிட மேலான பாசம் கொண்ட பேரருளாளன் அல்லாஹ், நரகத்தின் வாசல்களை ஏழாகவும், சொர்க்கத்தின் வாயில்களை எட்டாகவும் அமைத்து தன் அருள் விசாலத்தை காட்டியுள்ளான். அல்லாஹ் நமக்கு செய்திருக்க அருள்கொடைகளை சொல்லி முடிக்க நாவுகளில்லை. எழுதி முடிக்க வார்த்தைகளில்லை.
இறைவனின் பேரருள் மற்ற படைப்புகளை விட மனிதர்கள் மீது குறிப்பாக, நம் சமூகத்தின் மீது நிறைவாக சூழ்ந்திருக்கிறது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று காருண்ய நபிகள் (ஸல்) அவர்கள் தான் என்று கூறினால் மிகையாகாது. பிற சமுதாயத்தினரைவிட நம்முடைய சமுதாயத்தினர் இறைவனாம் அல்லாஹ்விடம் மிக சிறப்பும் உயர்வும் பெற்றது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த சமுதாயம் உயர்வடைய வேண்டுமென்பதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்துள்ளார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை செய்தியாகும்.
தன் வாழ்வின் முழு நேரமும் தன்னை நினைத்தும் தன் குடும்பத்தை நினைத்தும் கவலைப்பட்டதைவிட தன் சமூகத்தை நினைத்து கவலைப்பட்டது தான் அதிகம்.
தன் சமூகத்தார் அனைவரும் இறைநம்பிக்கை கொள்ளவேண்டும். அவர்கள் அனைவரும் நரகில் இருந்து காப்பாற்றப்பட்டு சொர்க்கம் நுழைய வேண்டும் என்பது தான் நபியவர்களின் மிக உயர்வான ஆசையாக இருந்தது.
உம்மை திருப்தியடையச் செய்வோம்
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் சில வசனங்களை ஓதிய பிறகு, தன் இரு கைகளையும் உயர்த்தியவாறு ( اَللَّهُمَّ أُمَّتِي أُمَّتِي ) "இறைவா! என் சமுதாயம் என் சமுதாயம் (இவர்களை காப்பாற்றுவாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். அழுதார்கள். அதற்கு அல்லாஹ், ( يَا جِبْرِيلُ اذْهَبْ إِلَى مُحَمَّدٍ فَقُلْ إِنَّا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ وَلاَ نَسُوءُكَ ) "ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று நாமும் சமுதாயத்தார் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம். உம்மை கவலையடையச் செய்ய மாட்டோம் என்று கூறுக" என்றான். நூல்:- முஸ்லிம்-346
இறுதி நேரத்திற்கு முன்னர்
அல்லாஹ்வின் தூதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வானவத்தூதர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒருநாள் வருகை தந்து, "நாயகமே உங்களுடைய சமுதாயத்தில் எவர், தான் மரணிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு பாவமன்னிப்பு கோருகிறாரோ அவரின் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடுவதாக தங்களிடம் அறிவிக்கும்படி எனக்கு கட்டளையிட்டுள்ளான்" என்றார்கள். இதை செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஜிப்ரயீல்! எனது சமுதாயத்தினர் மறதியில் மிகைத்தவர்கள். மேலெண்ணத்தில் மாறி திளைப்பவர்கள். ஆதலால் ஒரு ஆண்டு என்பது அவர்களது விசயத்தில் மிக பாரதூரமான கால கட்டம்" என்றார்கள். மீண்டும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து மரணமடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒருவர் பாவமன்னிப்பு கோருகிறாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அல்லாஹ் சொன்னதாக அறிவித்தார்கள். இதிலும் அண்ணலார் திருப்தியடையவில்லை. அல்லாஹ் மீண்டும் ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக மரணமடைவதற்கு ஒரு தினத்திற்கு முன்பு எவர் பாவமன்னிப்பு கோருகின்றாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அறிவித்தான். இதிலும் அண்ணலார் திருப்தியடையவில்லை.
அல்லாஹ் மீண்டும் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக மரணமடைவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு எவர் பாவமன்னிப்பு கோருகின்றாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அறிவித்தான் இதிலும் அண்ணலாருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அல்லாஹ் மீண்டும் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக "நாயகமே! உங்களது சமுதாயத்தினர் வாழ்நாள் முழுவதும் பாவமிழைத்து அதற்காக பாவமன்னிப்பு கோராமல் இருந்துவிட்டு இறுதி மூச்சு தொண்டையை அடைவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, தான் செய்த அனைத்து பாவங்களையும் நினைத்து அதற்காக மனம்வருந்தி பேசுவதற்கு சக்தியற்ற அந்த நேரத்தில் ஜாடையால் மனவேதனையால் மன்னிப்புக்கோரினால் அதனையும் ஏற்றுக்கொண்டு அத்தகையவர்களை மன்னித்துவிடுவேன்" என்று அறிவித்தான் என்றார்கள். அப்போது தான் கருணையே உருவான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருப்தியடைந்தார்கள். நூல். ஜுப்ததுல் வாயிலீன்.
தமது குடும்பத்தினரைவிட
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فِي أُمَّتِهِ وَخَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ) ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் விஷேச பிரார்த்தனை உண்டு. எனக்கு வழங்கப்பட்ட அந்த விஷேசப் பிரார்த்தனையை மறுமையில் என் சமூகத்திற்கு பரிந்துரை செய்ய பத்திரப்படுத்திவிட்டேன். நூல்:- முஸ்லிம்-345
ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது பேரர் ஹசன் (ரலி) அவர்களுக்கு உதட்டிலும் இன்னொரு பேரர் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு கழுத்திலும் முத்தமிட்டார்கள். ஹசன் (ரலி) அவர்கள் இந்த விசயத்தை தன் தாயார் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்து தெரிவித்தார்கள். உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் தனது தந்தையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! பேரர்களை முத்தமிட்ட விசயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அண்ணலார், "அருமை மகளே! இவர்கள் பெரியவர்களான பின்பு ஹஸன் (ரலி) அவர்கள் நஞ்சு ஊட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் உதட்டில் முத்தமிட்டேன். இளையவர் ஹுசைன் (ரலி) அவர்கள் கழுத்து வெட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் கழுத்தில் முத்தமிட்டேன்" என்று விளக்கமளித்தார்கள்.
இச்செய்தியை கேட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் கண்கலங்கினார்கள். பிறகு, "நாயகமே! ஒவ்வொரு இறைதூதருக்கும் ஒரு விசேசமான ஒரு பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளான். உங்களுக்கும் அந்த விசேச பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளானே அதை பயன்படுத்தி உங்கள் பேரக்குழந்தைகளை இக்கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடாதா?" என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார், "எனக்கு வழங்கப்பட்ட அந்த விஷேசப் பிரார்த்தனையை மறுமையில் என் சமுதாயத்தினரின் நலனுக்காக பயன்படுத்துவேன். அதை எனது பேரக் குழந்தைக்காக இங்கு பயன்படுத்த முடியாது" என்று கூறினார்கள்.
தன் குடும்பத்தினர் ஏதேனும் துன்பத்திலோ ஆபத்திலோ சிக்கிக்கொண்டால் உடனே தன்னிடமுள்ள பணபலம், படைபலம், ஆட்சி அதிகாரபலம் போன்றவற்றை பயன்படுத்தி அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு வழி தேடுவோரை தான் இவ்வுலகம் கண்டிருக்கிறது. ஆனால், தமக்கு கொடுக்கப்பட்ட விசேச உரிமையைக்கூட தனது சமுதாயத்தினரின் நலனுக்காக மட்டும்தான் பயன்படுத்துவேன். தனது குடும்பத்தினரின் நலனுக்காககூட இம்மையில் பயன்படுத்தமாட்டேன் என்றுரைத்த அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் போன்று சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட தலைவரை இவ்வுலகம் இதுவரை கண்டதில்லை. இன்மேல் காணப்போவதுமில்லை. சிறந்த தலைவருக்கு இது மிகப்பெரும் முன் மாதிரியாகும்,
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் "நாயகமே! உங்களுக்கு கஷ்டங்கள் தருகிற இணைவைப்பாளர்களுக்கு எதிராக சாபமிட்டு பிரார்த்தியுங்கள்" என கூறப்பட்டது. அதற்கு அண்ணலார், ( إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً ) “நான் சாபமிடுபவராக அனுப்பப் படவில்லை. அருளாகவே அனுப்பபட்டுள்ளேன்” என்று கூறினார்கள். முஸ்லிம்-5065
அன்றைய மக்கள் நபியவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் அதிகமதிகம் கஷ்டங்களும் சிரமங்களும் செய்து வந்ததின் காரணமாகத் தான் அவ்வாறு சொல்லப்பட்டது. முன்சென்ற இறைதூதர்களில் சிலர் அவ்விதம் சபித்ததின் காரணமாக அவர்களின் சமூகத்தினர் அழிக்கப்பட்டனர். ஆனால், நபியவர்கள் அவ்விதம் சபிக்க எண்ணவில்லை. மாறாக, அவர்கள் எல்லோரும் இறைநம்பிக்கையாளர்களாக ஆக வேண்டும் என்ற கவலையில் பல நாட்கள் இரவு பகலாக அழுது தொழுது அவர்களுக்காக பிரார்த்தித்துள்ளார்கள்..
فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آَثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا
நபியே! குர்ஆனாகிய இந்த வார்த்தையை அவர்கள் நம்பிக்கை கொள்ளாததினால் துக்கத்தால் உம்மையே நீர் அழித்து கொள்வீர் போலும். (18:16)
மண்ணறையில்
பக்ர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( حَيَاتِي خَيْرٌ لَكُمْ ، تُحْدِثُونَ وَيَحْدُثُ لَكُمْ ، وَوَفَاتِي خَيْرٌ لَكُمُ ، تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ فَمَا كَانَ مِنْ حَسَنٍ حَمِدْتُ اللَّهَ ، وَمَا كَانَ مِنْ سَيِّءٍ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ ) நான் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உங்களுக்கு நன்மையாகத்தான் இருப்பேன். என்னுடன் நீங்கள் பேசுகிறீர்கள்; உங்களுடன் நான் பேசுகிறேன். நான் உங்களைவிட்டு மறைந்து விட்டாலும் உங்களுக்கு நன்மையாகத்தான் இருப்பேன். (நான் மறைந்த பின்பு) உங்களின் செயல்கள் சொல், செயல், உறுதியான எண்ணங்கள் எல்லாம் எனக்கு எடுத்து காட்டப்படும். உங்களின் அந்த செயல் நன்மையாக இருந்தால் அல்லாஹ்வுக்கு நான் நன்றி பாராட்டி கொள்வேன். தீமையாக இருந்தால் உங்களுக்காக (எனது சமுதாயத்தினர் என்பதற்காக) அல்லாஹ்விடம் பிழை பொறுத்து மன்னித்தருளும்படி மன்றாடுவேன். என்று கூறினார்கள். நூல்:- பஸ்ஸார், மிஷ்காத்
ஆக, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு மட்டுமல்ல, அவர்களின் மரணம்கூட நமக்கு மிகப்பெரும் அருள் என்பதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.
மரண வேதனை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகிலிருந்து மறைந்த இரவில் மரணத்தின் வலியை உணர்ந்தபோது, ( اللَّهُمَّ ثَقِّلْ فِي سَكَرَاتِي وَخَفِّفْ عَنْ سَكَرَاتِ أُمَّتِي ) "என் இறைவா! என் உயிர் பிரியும் (ஸகராத்) நிலையைக் கடினமாக்கிவிடு; என் சமுதாயத்தினருக்கு இலகுவாக்கிவிடு!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.
கருணை உள்ளம் கொண்ட காருண்ய நபிகள் (ஸல்) அவர்கள் தங்கள் சமூகத்தின் மீது எந்தளவு பரிவும் கரிசனமும் காட்டியுள்ளார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு தெளிவான சான்றாகும்.
மறுமையில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ مَنْ وَرَدَ شَرِبَ وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا ) நான் மறுமையில் உங்களுக்கு முன்பே அல்கவ்ஸர் எனும் தடாகத்திற்கு சென்று உங்களுக்கு நீர்புகட்ட காத்திருப்பேன். எவர் என்னிடம் வருகிறாரோ அவர் அத்தடாகத்தின் நீரை அருந்துவார். எவர் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. முஸ்லிம்-4598
மறுமைநாளில் தன் சமுதாயத்தினரின் கடுமையான தாகத்தை போக்குபவராகவும் அவர்களில் பாவிகள் சொர்க்கம் செல்வதற்காகவும் சொர்க்கத்தில் அவர்களின் தகுதி உயர்வதற்காகவும் பரிந்துரை செய்பவராக இருக்கிறார்கள். எனவே, இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் நமக்காக பாடுபட உள்ளார்கள். இதுவெல்லாம் அண்ணலார் சமுதாயத்தினரின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை காட்டுகிறது.
நன்றி செலுத்துவோம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ )
பாங்கு சொல்வதை செவியுற்ற பின்பு, "பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்கு உரியவனே! முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!" என்ற இந்தப் பிரார்த்தனையை எவர் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமைநாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்துவிடுகிறது. அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-614, திர்மிதீ-195
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِيَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لاَ تَنْبَغِي إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِيَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ ) தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் கூறுங்கள். ஏனெனில் எவர் ஒருமுறை ஸலவாத் கூறுகிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்துமுறை அல்லாஹ் அருள்புரிகிறான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் 'வஸீவா'லை கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை அல்லாஹ்விடம் கேட்பவருக்கு மறுமைநாளில் எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-628
நம் அனைவரின் மீதும் கரிசனம் கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு பாடுபட்டு உள்ளார்கள் என்பதை இதுவரை பார்த்தோம். நமக்காக பாடுபட்ட அண்ணலார் நம்மிடமிருந்து இதை மட்டும் எதிர்பார்க்கிறார்கள். அதாவது மறுமைநாளில் மக்கள் "மகாமே மஹமூத்" என்ற புகழுக்குரிய இடத்திலிருந்து அவர்கள் எழுப்பப்படுவதற்கும், சொர்க்கத்தில் உயர்பதவி அவர்களுக்கு கிடைப்பதற்கும், பாங்கு கூறிய பின்பு இறைவனிடம் நாம் பிராத்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்காக நாம் இப்படி பிரார்த்திக்காவிட்டாலும் இறைவன் அண்ணலாருக்கு அந்த சிறப்புகள் வழங்குவது உறுதியாகும்.
உம்முடைய இறைவன் உம்மை (மகாமே மஹ்மூத் எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம். திருக்குர்ஆன்:- 17:79
இத்தகைய அண்ணல் நபிகளாரை நமக்கு அருளிய அருளாளன் அல்லாஹ்விற்கு அனுதினமும் நன்றி செலுத்துவோம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அந்தப் பிரார்த்தனையை எவ்வாறு அமைய வேண்டும் என்று கற்றுத்தந்து, அதை தொடர்ந்து பிரார்த்தித்தால் அதுவும் நமக்கு இலாபமாக அமையும் என்று உணர்த்தியுள்ளார்கள். ஆகவே இந்தப் பிரார்த்தனையை முறையாகக் கற்றுக் கொண்டு செயல்படுத்தி இதன் மூலம் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம். மறுமையில் அண்ணலாரின் சிபாரிசுக்கு உரியவர்களாக ஆகுவோமாக! ஆமீன்
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...