நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், அக்டோபர் 04, 2022

குழந்தைகளின் மனம் புண்படாமல் இருக்க,

*குழந்தைகளின் மனம் புண்படாமல் எவ்வாறு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது..?* 💚❤️

குழந்தை வளர்ப்பிலேயே மிகவும் கடினமான காரியம் நம் குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவது தான். அதிலும் குழந்தைகள் எப்போதும் ஆர்வமுடன் அனைத்து விஷயங்களிலும் துருதுருவென செயல்பட விரும்புவார்கள். எனக்கு இந்த விளையாட்டு விளையாட வேண்டும், இந்த பொருள் வேண்டும், நான் இங்கே செல்ல போகிறேன் என்பது போன்ற பல கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்து அதில் சிலவற்றிற்கு முடியாது என்று நேரடியாக சொல்லும்போது அவர்கள் மனம் கண்டிப்பாக புண்படும். நாம் என்ன செய்தாலும் நம்மை நம் அம்மா அப்பா தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று உங்கள் மீது ஒரு வித கோபம் உண்டாகக்கூடும்.

முடியாது என்பதை மென்மையாக எப்படி கூறலாம்:

உங்கள் குழந்தை உங்களிடம் ஏதேனும் கோரிக்கை அல்லது இது செய்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து கூறும்போது அவற்றை சில மென்மையான வார்த்தைகளின் மூலம் அவர்கள் சமாதானமாகும் எடுத்துக் கூற முடியும். உதாரணத்திற்கு உங்களிடம் உங்கள் குழந்தை எதாவது ஒரு கோரிக்கை வைத்து இதை செய்தே ஆக வேண்டும் என்று கூறும் போது

“கண்டிப்பாக செய்யலாம் ஆனால் இப்போது அதற்கான நேரம் சரியில்லை”

“இதை செய்யலாம் ஆனால் இப்போது வேண்டாம்”

“நன்றாக இருக்கிறது, கண்டிப்பாக ஒருநாள் இதை முயற்சி செய்யலாம்”

“நீ சொல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் அதற்கு பதிலாக நான் சொல்வதையும் பரிசீலித்து பாரேன்”

“உனக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது அதை நீ கேட்க விரும்புகிறாயா”

“உன்னுடைய திட்டம் சிறந்ததாக இருக்கிறது, கண்டிப்பாக நேரம் வரும்போது நாம் இதை செய்து முடிப்போம்”

என்பது போன்ற வார்த்தை பிரயோகங்களை உபயோகப்படுத்தலாம்

அவர்களிடம் சொல்லக்கூடாதவை என்ன?

குழந்தைகள் ஒரு கோரிக்கை வைக்கும்போது நேரடியாக முகத்தில் அடித்தார் போல் இல்லை என்று சொல்லக்கூடாது.

உதாரணத்திற்கு

“இல்லை நீ இதை செய்யக்கூடாது”

“என்ன தைரியம் இருந்தால் இதை செய்வாய்”

“நான் செத்த பிறகு இதை செய்து கொள்”

“நம் குடும்பப் பெயரை கெடுத்து விடாதே”

“அவள் நல்ல பெண் அல்ல அவளோடு நட்பாக இருக்காதே”

“நான் பேசும்போது குறுக்கே பேசாதே”

என்பது போன்ற வார்த்தைகளை அறவே தவிர்க்க வேண்டும்.

கடினமான வார்த்தைகளை விட மென்மையாக மறுப்பது நல்லது:

குழந்தைகளை எப்போதும் கவனமாக கையாள வேண்டும். ஒரு நல்ல விஷயத்தைப் பற்றியும் கெட்ட விஷயத்தை பற்றியும் குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது மென்மையான முறையில் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்தால் மட்டுமே அவர்கள் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் வேகத்திற்கு ஏற்ப குழந்தைகள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

சில விஷயங்களை செய்து முடிப்பதற்கு குழந்தைகளுக்கு போதுமான நேரம் கொடுங்கள். மேலும் குழந்தைகளால் அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ள இயலாது. எனவே அவர்கள் அதை புரிந்து கொண்டு செயல்படுத்த சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என தேவையற்ற வார்த்தைகளை கொண்டு அவர்களை திட்டி தீர்க்காதீர்கள்.

உங்கள் வார்த்தைகளின் அதிர்வுகளை புரிந்து கொண்டு பேசுங்கள்:

முடியாது அல்லது அவர்களை கண்டிக்கும் வகையான வார்த்தைகளை மிக மிகக் குறைந்த அளவில்தான் பயன்படுத்த வேண்டும். நீங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தாலும் அல்லது அவர்கள் என்ன கூறினாலும் இல்லை முடியாது என்று மறுப்புக் கூறிக் கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த வார்த்தைகளின் மீது அவர்களுக்கு பிடிப்பு குறைந்து விடும். நாம் என்ன சொன்னாலும் திட்டத்தான் போகிறார்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் முடியாது என்று தான் சொல்லப் போகிறார்கள் என்று அசட்டு தைரியத்தில் அவர்களே உங்களிடம் சொல்லாமல் சில விஷயங்களை செய்து கொள்வார்கள்.

எனவே சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்களை கண்டித்து மறுப்பு சொல்லாமல் மிக ஆபத்தான செயல்கள் அல்லது விரும்பத் தகாத செயல்களை செய்யும் போது அவர்களை கண்டிக்கும் உச்சகட்ட நிலையில் மட்டுமே இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள்.

பெற்றோரது ஒழுக்கமும் மிக முக்கியம்:

குழந்தைகள் பல பழக்க வழக்கங்களை தங்கள் பெற்றோரிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். உங்களது நடை உடை பாவனை மற்றும் நீங்கள் எவ்வாறு மற்றவரிடம் நடந்து கொள்கிறீர்கள், உங்களது வார்த்தை பிரயோகங்கள் உங்களது செயல்பாடுகள் என அனைத்தையும் அவர்கள் கவனித்துக் கொண்டு அதன்படியே நடக்க முற்படுவார்கள். எனவே உங்களது ஒழுக்கத்தை நீங்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும்.

அதுபோல உங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விதிக்கும் போது அவற்றை முதலில் நீங்கள் பின்பற்றுகிறீர்களா என்று பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு அதிகமாக மொபைல் போன் உபயோகிக்க கூடாது என்று உங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்து விட்டு எப்போது பார்த்தாலும் போனும் கையுமாகவே நீங்கள் தெரிந்து கொண்டிருந்தால் குழந்தைக்கு அது உங்கள் மீது கோபத்தையும் மரியாதை குறைவையும் தான் ஏற்படுத்தும்.

பொறுமையே பெருமை:

குழந்தைக்கும் பெற்றோருக்கும் ஆன உறவு என்பது தலைமுறைகள் தாண்டிய இடைவெளியில் உள்ளது. எனவே உங்களது வாழ்க்கை மற்றும் பழக்கம் பழக்கங்களுக்கும் அவர்களது மாடர்ன் வாழ்க்கைக்கும்மிகபெரிய வேறுபாடுகள் இருக்கலாம். இந்த இடைவெளியால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி பெருமளவில் அதிகரிக்கிறது. எனவே குழந்தைகளை பொறுமையாக கையாள வேண்டியது அவசியம் சில நேரங்களில் நீங்கள் கூறும் கருத்துக்களை விட அவர்கள் சொல்லும் கருத்துக்கள் சிறந்ததாக இருக்கலாம். அவற்றை பொறுமையோடு கேட்டு இருவரின் கருத்துக்களையும் தூக்கி சீர்பார்த்து சிறந்ததை தேர்வு செய்யலாம். ஒருவேளை அவரது கருத்து தவறாக இருப்பின், அது எந்த வகையில் தவறு அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பது போன்ற திட்டங்களையும் பொறுமையாக அவருக்கு எடுத்துக் கூறலாம்..

பிரபல்யமான பதிவுகள்