கடவுளுக்கு வழிபாட்டுத்தலம் கட்டுவதில்... கீழ்க்கண்ட இஸ்லாமிய வரலாற்று உத்தரவுகள்... உலக மக்கள் அனைவருக்கும் சிறப்பான முன்னுதாரணங்களாக வழிகாட்டும் அறிவுரைகளாக உள்ளன.
எங்கள் ஊர் பள்ளிவாசலில்... இன்றைய ஜூம்மா குத்பா பயானில் கூறப்பட்டவை :-
1.
ஹிஜ்ரி 17 –ஆம் ஆண்டு,
இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து நான்காண்டுகள் உருண்டோடி விட்டது. மெல்ல, மெல்ல இஸ்லாம் அருகே இருக்கும் நாடுகளுக்கு பரவிக்கொண்டிருந்த இனிமையான தருணம் அது.
தலைநகர் மதீனாவில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜித் அந் நபவீ... உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்களின் கூட்ட நெரிசலால் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த... ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலை விஸ்தரிக்க முடிவெடுத்தார்கள்.
அதற்காக, பள்ளியைச் சுற்றி இருக்கிற நபித்தோழர்களின் வீட்டை இடித்து, அந்த இடத்தையும் சேர்த்து கட்டினால் தான் பள்ளியை விரிவாக்கம் செய்ய முடியும் என்ற நிலையையும் உணர்ந்தார்கள்.
பள்ளியைச் சுற்றிலும் ”உஸாமா (ரலி), ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), மற்றும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர்ர்ஹ்மான் இப்னு அபூபக்ர் (ரலி), முஹம்மத் இப்னு அபூபக்ர் (ரலி), முஃமின்களின் அன்னையர் நபி {ஸல்} அவர்களின் மனைவியர் ஆகியோரின் வீடுகள் எல்லாம் இருந்தன.
உமர் (ரலி) அவர்கள், முஃமின்களின் அன்னையர் வீட்டை மட்டும் விட்டு விட்டு மற்றெல்லாவரின் வீடுகளையும், இடங்களையும் வாங்கிட முடிவெடுத்தார்கள்.
வீட்டின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து “ நீங்கள் உங்கள் வீட்டை விலைக்கு கொடுத்தீர்கள் என்றால் அதற்குப் பகரமாக மதீனாவின் இன்னொரு இடத்தில் ஒரு வீட்டையோ, அல்லது அதற்கான கிரயத்தையோ முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்கள் விரும்பினால் அரசுக்கு அன்பளிப்பாகவும் தரலாம். அரசும் உங்களை நன்றியுணர்வுடன் நடத்தும். அல்லது நீங்கள் விரும்பினால் அல்லாஹ்விற்காக தருமமாகவும் தந்திடுங்கள். அதற்கான கூலி வழங்குவதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும், அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும் தங்களின் வீடுகளையும், நிலங்களையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விட்டார்கள்.
மற்ற நபித்தோழர்களில் சிலர் கிரயத்தையும், இன்னும் சிலர் மதீனாவின் பிற பகுதியில் நிலத்தையும் பெற்றுக் கொண்டு அவர்கள் வசித்த வீட்டையும், நிலத்தையும் அரசிடம் மனமுவந்து ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வு நடைபெறுகிற போது, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மட்டும் மதீனா நகரில் இல்லை. வெளியூர் சென்று இருந்தார்கள்.
வெளியூரில் இருந்து வந்த உடன்... இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து... மற்ற வீட்டின் உரிமையாளர்களிடம் பேசியது போன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமும்.. கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பேசினார்கள்.
ஆனால், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ தம் வீட்டை மஸ்ஜித் விரிவாக்கத்துக்கு தர மறுத்து விட்டார்கள். மற்றவர்கள் எல்லாம் தம் இடங்களை தந்து விட்டது பற்றியும், இந்த ஒரு இடம் மட்டும் நடுவே இருந்தால்... மஸ்ஜிதை விரிவாக்கம் செய்வது இயலாமல் போய்விடும் என்றும்... எவ்வளவோ விளக்கி சொல்லியும்... இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தர மறுத்து விட்டார்கள்.
இறுதியாக... ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள்... ”நீர் இடம் தரவில்லையானால் அரசு உம்முடைய நிலத்தை தம் அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்றிக் கொள்ளும்!” என்று உறுதியாக கூறினார்கள்.
இருவருக்கும் பேச்சு முற்றவே, நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக... கலீஃபா உமர் (ரலி) அவர்களின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள்... இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
அப்போது... நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர்... உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள்..!
இங்கே●●●●●●●
உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் யார்... எப்பேர்ப்பட்டவர் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். மேலேயுள்ள வாதி பிரதிவாதி ஆகிய இருவர் பற்றியும் பலரும் அறிந்திருப்போம். நீதிபதி பற்றி அறிய வேண்டும். மதீனாவின் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே அவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுவிட்டார். நபியவர்களின் புனிதக்கரம் பற்றிப் பிரமாணம் அளித்தவர் என்று இஸ்லாமுடனான உறவு அவருக்கு நபி(ஸல்) அவர்களிடமிருந்தே துவங்கியது.
பின்னர்... அகபா உடன்படிக்கையில் பங்கேற்றவர்களுள் அவரும் ஒருவர் ஆக இருந்தார். இஸ்லாமிய வரலாற்றில் முதல் யுத்தமான பத்ரு யுத்தத்தில் பங்கு பெற்ற 313 நபித்தோழர்களில் ஒருவர். உபை இப்னு கஅப். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த யுத்தங்களிலெல்லாம் நபியவர்களின் படையணியில் உபை ஒரு முக்கிய வீரர்.
இறங்க... இறங்க... அப் டு டேட் ஆக.... குர்ஆன் முழுவதும் மனனம் செய்தவர். செவியுறுவோர் மகிழ்வுறும் குரல் வளத்தில் இனிமையாக ஓதக்கூடியவர் என்று உருவானார் உபை. அழகுற ஓதுவது என்பதுடன் நின்று போகாமல் குர்ஆனைப் பற்றிய அவரது ஞானம்தான் அவருக்கு இறைவன் அளித்த தனிச் சிறப்பு.
‘குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த நால்வரிடம் செல்லுங்கள்’ என்று நபியவர்கள் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்கள்.
அவர்கள் பரிந்துரைத்த அந்த நால்வருள் ஒருவர்...
உபை இப்னு கஅப். மற்ற மூவர், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். அபூஹுதைஃபாவினால் விடுவிக்கப்பட்ட அடிமை ஸாலிம், முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹும்.
அத்தகு பரிந்துரைக்கு உரிய தகுதிகள் அவருக்கு அமைந்திருந்தன என்பதற்குச் சிலநிகழ்வுகளும் சாட்சி. ஒருநாள் நபியவர்கள் உபையிடம் “ஓ அபூமுன்திர்!அல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானது?” என்று கேட்டார்கள்.
“அல்லாஹ்வும்அவனுடைய தூதரும் அதைச் சிறப்பாக அறிந்தவர்கள்” என்று பதில் வந்தது.மீண்டும் அதே கேள்வியைக்கேட்டார்கள் நபியவர்கள்.
சூராஅல் பகராவின் 255ஆம் வசனமான ஆயத்துல் குர்ஸீயை நபியவர்களிடம் ஓதிக்காட்டி தெரிவித்தார் உபை. அதைக்கேட்டு நபியவர்களின் முகம் மகிழ்வால் மிளிர்ந்தது. உபையின் மார்பைத் தமது வலக் கரத்தால் தட்டித் தந்தார்கள். ‘சரியான பதிலைச் சொன்னாய் உபை’ என்ற அங்கீகாரம் அது.
”உபை! நான் உமக்காக குர்ஆனை விரித்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்” என்றார்கள் நபியவர்கள்.
‘குப்’பெனஅவரைக் குதூகலம் தாக்கியது. தம்முடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தவில்லை. கேட்டுவிட்டார்.
“அல்லாஹ்வின் தூதரே. தங்களிடம் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டதா?”
“ஆம்” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். “உம்முடைய பெயர், வம்சாவளி ஆகியவற்றுடன் விண்ணிலிருந்து குறிப்பிடப்பட்டீர் உபை.”
நபியவர்களின் தோழர்களுள் மிக முக்கியமான ஒருவராகப் பரிணமித்தார் உபை இப்னு கஅப்.அவருடைய எழுத்தறிவு நபியவர்களுக்குச் சேவகம் புரிந்தது.
குர்ஆன் வசனங்கள்அருளப்படும்போது அதை எழுதப் பணிக்கப்பட்ட தோழர்கள் சிலர் இருந்தனர். அந்தச்சிலருள் உபையும் ஒருவர். அது மட்டுமின்றி நபியவர்களின் கடிதப்பரிமாற்றங்களில் உதவுவதும் உபையின் பணியாக இருந்தது.
●●●●●இனி,
நீதிபதி உபை இப்னு கஅப் ( ரலி) அவர்கள்....
இருவரின் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டு விட்டு, உமர் (ரலி) அவர்களை நோக்கி “உமர் (ரலி) அவர்களே! நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் “அல்லாஹ் நபி தாவூத் (அலை) அவர்களிடம் பைத்துல் முகத்தஸ்ஸை கட்ட ஆணை பிறப்பித்தான்.
முதற்கட்டமாக அதற்கான இடத்தை தெரிவு செய்யும் பணியை மேற்கொண்டார்கள் தாவூத் (அலை) அவர்கள்.
அங்கே, இஸ்ரவேலர்களில் ஒருவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதைக் கண்டு அதை இறையில்லம் கட்ட இடம் தேவைப்படுவதால் தம்மிடம் விலைக்கு தந்து விடுமாறு விலைபேசினார்கள்.
ஆனால், அவரோ தரமுடியாது என்று மறுத்து விட்டார். அதற்கு தாவூத் (அலை) அவர்கள் “மனதிற்குள் இப்படிச் சொல்லிக்கொண்டார்களாம் “ நீ தராவிட்டால் என்ன? நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று.
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தை அறியும் வல்லமை மிக்க இறைவனாகிய அல்லாஹ்... உடனடியாக... தாவூத் (அலை) அவர்களிடம் வஹீ மூலம் “என்னை வணங்குவதற்காகக் கட்டப்படுகிற ஆலயம் என்பது ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, மோசடி ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய் இருக்க வேண்டும்” என்று கட்டளை அறிவித்தான்.
பின்னர், அந்த இஸ்ரவேலரிடம் நல்லவிதமாக பேசி பல பேரங்கள் நடத்தி... இடத்துக்கு அவர் கேட்ட விலை மற்றும் இடமாற்றத்துக்கான இழப்பீடைக் கொடுத்து அந்த இடத்தை அதிக விலைக்கு வாங்கி பைத்துல் முகத்தஸின் கட்டுமானப்பணியை துவக்கினார்கள் நபி தாவூத் (அலை) அவர்கள்” ஆகவே, உமர் அவர்களே! சற்று நிதானித்து முடிவெடுங்கள்” என்றார்கள்.
தாவூத் நபி (அலை) ,அவர்களுக்கு வந்த அல்லாஹ்வின் தெளிவான உத்தரவை... இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலமாக... கேட்டறிந்த நீதிபதி கூறக்கேட்டதும், உமர் (ரலி) அவர்கள்... "இப்னு அப்பாஸ் அவர்களே! உம்முடைய வீடும் வேண்டாம், உம்முடைய நிலமும் வேண்டாம். இரண்டையும் அதிகாரத்தைக் கொண்டு நான் ஒரு போதும் அபகரிக்க மாட்டேன். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் “உமர் (ரலி) அவர்களே! ஒரு சாமானிய குடிமகனுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கிற உரிமையை அவர் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்தேன். மேலும், உங்களை விட மஸ்ஜிதுன் நபவீயின் விரிவாக்கத்தில் அதிக நாட்டமுடையவன் நான். எனவே, எந்தப் பிரதி பலனையும் நாடாமல் இதோ என் வீட்டையும், நிலத்தையும் உங்களிடம் தருகின்றேன்” என்றார்கள். ( நூல்: வஃபாவுல் வஃபா )
2.
இதே போன்ற தொரு சம்பவம்,
இதே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில்... “ஒரு கிறிஸ்தவப் பெண்மனி உமர் (ரலி) அவர்களிடம் எகிப்தின் ஆட்சியாளர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள், எகிப்தில் ஓர் இறையில்லம் கட்ட தம்முடைய வீட்டையும், இடத்தையும் ஆக்கிரமித்ததாக வழக்கு தொடுத்து எகிப்து கவர்னர் மீது குற்றம் சுமத்திய போது, பள்ளியின் அந்தப் பகுதியை மட்டும் இடித்து விட்டு, முன்பு இருந்தது போன்று அப்பெண்மனியின் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு... ஆட்சியாளர் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் எகிப்தின் ஆளுநர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டார்கள்.
( நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்) லி இமாமி காலித் முஹம்மத் காலித் (ரஹ்).. )
3.
//
உங்களிடம் ஆயுதமேந்தி போர்செய்ய வருபவர்களிடம் மட்டுமே நீங்கள் போர்செய்ய வேண்டும்.
பெண்களை-குழந்தைகளை-சிறுவர்களை-வயோதிகர்களை தாக்கக்கூடாது.
மதகுருமார்களை-வியாபாரிகளை-விவசாயிகளை தாக்கக்கூடாது.
#பிறமத_ஆலயங்களை, #மடாலயங்களை #சேதப்படுத்தக்கூடாது.
தேவையின்றி மரங்களை வெட்டவோ,கட்டிடங்களை இடிக்கவோ கூடாது. பொருட்களை எரிக்கவோ கூடாது.
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற உயிரினங்களை கொல்லக் கூடாது.
அங்கே யாரையும் மோசடி செய்யக் கூடாது, ஏமாற்றக் கூடாது. வரம்பு மீறக் கூடாது.
//
மேலே கண்ட அறிவுரைகள் யாவும்... போர்க்களத்திலும், வென்ற பின்னர் எதிரி நாட்டுக்குள்ளும் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... என தான் அனுப்பிய முதல் படைப்பிரிவின் தளபதியான உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களிடம் முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்டிப்புடன் இட்ட கட்டளையாகும்.
எனவே, தொடர்ந்து முஸ்லிம் மன்னர்கள் மீது கோயிலை இடித்து அந்த இடத்தில் பள்ளிவாசலை கட்டி வைத்தார்கள் என்று குற்றம் சுமத்துவது வரலாற்றுத் திரிபும், அவதூறும் ஆகும். இஸ்லாமை அறிந்த எவரும் இந்த கட்டுக்கதைகளை நம்ப மாட்டார்கள்