முன்னுரை

وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ‏
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
(அல்குர்ஆன் : 104:1)


அவன் சரியில்லை..
இவன் சரியில்லை..
இவுங்க சரியில்லை..
அவர் சரியில்லை.. என்று ஏராளமான குறைகளை சொல்லி  நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சுருக்கிக் கொண்டு வாழ்கிறோம்

முழுக்கமுழுக்கதங்கத்தால் செய்யப்பட்டதங்கதேசத்தில் வாழநேர்ந்தால்கூட, “சே… எங்கேபாத்தாலும்மஞ்சளாஇருக்கே” எனகுறைசொல்லும்மக்கள்இருக்கிறார்கள்

கவிதை ஒன்று சொல்வார்கள்

மனிதன் குறையுடையவன் மட்டுமல்ல
குறை காண்பவனும் கூட…
மனிதன் தன் வாழ்க்கையில்
மற்றவர்களின் குறையை காண்பவன்
அறை மனிதனாவன்…
தன் குறையை காண்பவன்
முழு மனிதனாவன்‌.

புறம் பேசுபவன் என்பதைக் குறிக்க ஹுமஸா எனும் சொல் மூலத்தில் ஆளப்படுகிறது .

ஹமஸ – யஹ்மு(மி)ஸு – ஹம்ஸன் எனும் வரிசையில் வரும் வினையாலணையும் பெயர்.ஹம்மாஸ் அல்லது ‘ ஹுமஸா’ ஆகும் .

‘ ஹமஸ எனும் வினைச்சொல்லுக்கு கண்சாடை காட்டினான் . குத்தினான் : கொட்டினான் . தள்ளினான் ; அடித்தான் . கடித்தான் புறம் பேசினான் முதலான பொருள்கள் உண்டு . இங்கு ஹுமஸா எனும் பெயர்ச்சொல்லுக்கு புறம் பேசுபவன் என்பதே பொருள் , ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குற்றம் குறை சொல்வதே புறம் , அல்லது புறணி எனப்படுகிறது . ஹுமஸா எனும் சொல்லே ஆண்பால் , பெண்பால் இருபாலுக்கும் பயன்படுத்தப்படுகிறது . மிகையைக் காட்டும் ஃபுஅலா ‘ வாய்பாட்டில் அமைந்து , அதிகமாகப் புறம் பேசுபவன் ‘ என்றும் இதற்குப் பொருள் கூறலாம்.

ஹுமஸா ,லுமஸா

ஹுமஸா ,லுமஸா

புறம் பேசி திரிபவர் என்பதற்கு அரபியில் ஹுமஸா என்றும் குறைகூறி திரிபவர் என்பதற்கு ‘லுமஸா’ என்றும் குர்ஆன் குறிப்பிடுகிறது.

அதாவது சொல் வாய்மொழியால் தூற்றுபவருக்கு ஹுமஸா என்றும் சொல் செய்கையால் தூற்றுபவருக்கு லுமஜா என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

பல்வேறு விளக்கங்கள்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் சொல்லும் போது குறை கூறிக்கொண்டும் தூற்றிக் கொண்டும் இருப்பவர் என்று குறிப்பிடுகிறார்கள்.

ரபீஉ பின் அனஸ் (ரலி) அவர்கள் ஹுமஸா என்பது முகத்துக்கு நேராக குறை கூறுபவர் என்றும், லுமஸா என்பது முதுகுக்குப் பின்னால் குறை கூறுவதையும் குறிக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.



கத்தாதா (ரஹ்) அவர்களின் விளக்கம் மக்களை நாவாலும் கையாலும் தூற்றுபவர்கள் என்று குறிப்பிடுவார்கள்.

(தப்ஸீர் தப்ரீ)

முஜாஹித் (ரஹ்) அவர்களின் விளக்கம் ஹுமஸா என்றால் கை மற்றும் கண் ஜாடையால் தூற்றுபவரைக் குறிக்கும் என்றும் லுமஸா என்றால் நாவால் குறை கூறுபவரை குறிக்கும்.

நபியவர்களை அவதூறு சொன்ன குறைசிகள்

நபி (ஸல் ) அவர்கள் மக்காவில் இருந்தபோது , அவர்கள்மீது கடும் விரோதம் கொண்ட சிலர் , நபிகளாரைப் பற்றி  கவிஞர் , சூனியக்காரர் , சோதிடர் என்று அவதூறு பரப்புவதும் அவர்களைப் பற்றி இல்லாத பொல்லாத குறைகளைச் சொல்வதுமே வேலையாக அலைந்தனர் .

அவர்களில் அக்னஸ் பின் ஷரீக் , ஆஸ் பின் வாயில் , ஜமீல் பின் மஅமர் , வலித் பின் அல்முஃகீரா , உமய்யா பின் கலஃப் முதலானோர் இந்தக் கீழ்த்தரமான வேலையைச் செய்துவந்தவர்கள் . இவர்கள் அனைவர் குறித்து சிலர்  அத்தியாயம் அருளப்பட்டது என்பர் . இத்தகையவர்களுக்குக் கேடு ஏற்படட்டும் என அல்லாஹ்வே சபிக்கின்றான்.

இருப்பினும் , குறிப்பிட்ட மனிதர்கள் இங்கு கருத்தில் கொள்ளப்படாமல் , இந்தக் குணமுள்ள அனைவருக்கும் – இந்த அத்தியாயம் பொருந்தும் என்பதே பொருத்தமாகும் . (தஃப்சீர் அல்பஹ்ருல் முஹீத்)

யதார்த்த வாழ்க்கையில் நாம்

குறை சொல்தல் இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறிவிட்டது. ஒரு வகையில் மிகவும் எளிதான ஒரு வேலை குறை சொல்லுதல். எந்த விதமான தார்மீகப் பொறுப்பும் ஏற்க மறுப்பவர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு விஷயம் குறை சொல்லுதல்.

சின்ன வயதிலேயே அது நமது இரத்தத்தோடு கலந்து விட்டது. ஓடிப் போவோம், கல்லில் இடித்துக் கொள்வோம், திட்டுவது என்னவோ அந்தக் கல்லைத் தான் இல்லையா ? குழந்தைகள் சொன்ன பேச்சைக் கேட்கலேன்னா இப்போ கூட தொலைக்காட்சியைத் தானே திட்டுகிறோம் !



ஒரு நிறுவனத்துக்கு ஒரு புது மேலதிகாரி வந்தார். அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போது பழைய அதிகாரி மூன்று மூடப்பட்ட கவர்களைக் கொடுத்துச் சென்றார். “எப்போதாவது பெரிய பிரச்சினை வந்தால் மட்டும் பிரியுங்கள்” எனும் விண்ணப்பத்தோடு.

புதிய அதிகாரி பதவியேற்றார். ஒரு வருடம் சிக்கல் ஏதும் இல்லாமல் போனது ! போதாத காலம் முதல் சிக்கல் வந்தது. பணத் தட்டுப்பாடு. என்ன செய்யலாம் என யோசித்தபோது அவருக்கு மூடப்பட்ட கவர்களின் ஞாபகம் வந்தது. முதலாவது கவரைப் பிரித்தார். “பழைய மேலதிகாரி மேல் பழியைப் போடு” என்றிருந்தது ! அப்படியே செய்தார். தப்பித்தார். அடுத்த ஆண்டும் அதே போல ஒரு பிரச்சினை. இப்போதும் கவரைப் பிரித்தார். “கமிட்டி மீது பழியைப் போடு” என்றிருந்தது ! அப்படியே செய்தார். அப்போதும் தப்பித்தார். மூன்றாவது ஆண்டும் பிரச்சினை வந்தது. பூதாகரமானது. மூன்றாவது கவரை எடுத்தார். பிரித்து வாசித்தார். “மூன்று கவர்களை நீ உருவாக்கும் நேரம் வந்து விட்டது” என்று எழுதப்பட்டிருந்தது !

நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இதில் இருக்கும் உண்மை நிதர்சனமானது.

அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.

பிடிக்காதவர்கள் மீது தான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப்படுகிறது.  “உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்” என்று யாரும் சொல்வதில்லை. அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள் தான் பெரும்பாலும் குறைகளாய் முளைக்கும்.

ஒரு கதை உண்டு

ஒரு மாணவர் ஓவியக்கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

அவருக்கு ஓர் ஆசை ஏற்பட்டது. நாம் ஒரு அற்புதமான ஓவியம் ஒன்றை வரைந்து அதை பொதுமக்கள் அனைவரின் பார்வையும் படுகின்ற இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அதில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோளும் வைக்க வேண்டும் அதன் மூலம் தனது ஓவியத் திறமை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினார்.

அதை தனது ஆசிரியரிடமும் தெரிவித்தார். அவரும் தனது மாணவரை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு அனுமதியும் வழங்வி விட்டார்.

அந்த மாணவர் மிகவும் உற்சாகத்துடன் ஓர் அழகான ஓவியத்தை வரைந்து பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வைத்து அதில் உள்ள குறைபாடுகளை அடையாளம் இட்டு காட்டவும் என எழுதி அதனருகில் ஒரு எழுதுகோலையும் வைத்து விட்டார்.

ஒரு சில நாட்கள் கழித்து அந்த ஓவியத்தை எடுக்க வந்த மாணவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம்… அந்த ஓவியத்தின் அனைத்து பகுதிகளும் குறையுடையதாக அடையாளம் இடப் பட்டிருந்தன. அம்மாணவர் மிகவும் வருத்தத்துடன் தனது ஆசிரியரிடம் வந்து முறையிட்டார்.

அதைக் கேட்ட ஆசிரியர் புன்சிரிப்புடன் தனது மாணவரை நோக்கி கவலைப்படாதே இன்னொரு ஓவியம் அதே போன்று வரைந்து அந்த இடத்தில் வைத்து விட்டு இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும் என பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் எழுதி வைத்து விடு. என ஆலோசனை கூறினார். மாணவரும் தனது ஆசிரியர் சொன்னதைப் போன்றே செய்துவிட்டு வந்துவிட்டார்.

ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த ஓவியத்தை எடுக்க வந்த போது மிகவு‌ம் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த ஓவியத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. இதை கண்ட மாணவர் தனது ஆசிரியரிடத்தில் நடந்ததை கூறி விபரம் கேட்ட போது…

ஆசிரியர் சொன்னார்.. மக்களுக்கு பிறரின் குறைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்த மட்டுமே தெரியும். பெரும்பாலான மக்களுக்கு அதை சீர்திருத்தம் செய்வதற்கான வழி தெரியாது என விளக்கம் கூறினார்.

ஆக நாம் பிறர் குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றை விமர்சித்து சம்மந்தப்பட்டவர்களை அவமதிப்பதை தவிர்த்து அவர்களின் குறைகளை அவர்களிடமே பக்குவமாக எடுத்துச் சொல்லி சீர்திருத்தம் செய்வதே சரியான வழிமுறையும், சமூக அக்கறையும் ஆகும்.

சமூக அமைதிக்கான 3 கட்டளைகளை உயர்ந்தோன் அல்லாஹ் பிறப்பிக்கிறான்.

1.சமூகத்தில் ஆண்களோ பெண்களோ யாரும் யாரையும் அவமானப்படுத்தவோ ஏளனம் செய்யவும் கூடாது ஒருவர் தம்மை உயர்வாக மதித்து பிறரை மதிக்கும் போது அங்கு சௌஜன்யம் குலையும்.

2. பரஸ்பரம் குறை சொல்லி திரியக்கூடாது இது துவேஷத்தை வளர்க்கும்.

3. காயப்படுத்தும் வகையில் பட்டப்பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

யாரையும் சிறுமை படுத்தாதீர்.

உயர்ந்தோன் அல்லாஹ் சிறுமை படுத்துவதற்கு தடை விதிக்கிறான். எள்ளி நகையாடுவதும் கேவலப்படுத்துவதும் தான் சிறுமை படுத்துதல் (சுக்ரிய்யத்) என்று சொல்லப்படும்.

நபி ஸல் அவர்கள் குறிப்பிடுவார்கள்

கர்வம் என்பது உண்மையை ஏற்க மறுப்பதும் மக்களை கேவலமாக மதிப்பதும் தான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி அவர்கள்
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 147.
திர்மிதீ 1922

மக்களை அற்பமான வர்களாகவும் மதிப்பற்ற வர்களாகவும் கருதுவது என்பது ஹராம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட செயல்.

ஏனென்றால் சில வேளை சிறுமைப்படுத்தி கேவலப்படுத்துகின்றவரை விட பாதிப்படைகின்றனர் அல்லாஹ்விடம் மகத்தான தகுதி உடைய வராகவும் அவனுக்கு மிகவும் விருப்பமானவர் ஆகவும் இருக்கக் கூடும்.

இதனால்தான் அல்லாஹ் தன் திருமறையில் சொல்கின்றான்

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌…

நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்…

(அல்குர்ஆன் : 49:11)

குறை சொல்ல வேண்டாம்

.وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ..

..உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். என்று அல்லாஹ் கட்டளையிட்டான்..
(அல்குர்ஆன் : 49:11)

மக்களைக் குறை பேசி இழிவு படுத்துகின்ற ஒவ்வொருவரும் சாபத்திற்கும் பழிப்பிற்கும் உரியவர் ஆவார்.
وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ‏
(மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும், (முதுகுக்குப் பின்) குறை கூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.
(அல்குர்ஆன் : 104:1)

கண்ணாடி தத்துவம்

ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.

பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…!

‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ‘ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை…

பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?”

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”

“ஆமாம்!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார்.

“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!”

“பாடமா…??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”

“அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்”

“எனக்கு ஒன்றும் புரியவில்லை!”

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இது தெளிவுபடுத்துகிறது.”

“எப்படி?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?”

“ஆமாம்”

“அதே போல் *உன் சகோதரனிடம் – நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”*

“அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் *மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”*

“அப்புறம்?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். அதே போல் *நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”*

“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா! யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!” என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு அவரை வணங்கி சென்றான்..

ஆம். நண்பர்களே.., இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம் இந்த அறிவுரைகளை மறந்துவிடாதீர்கள்.. இவை உங்களின் மனத்தை அலங்கரிக்கும்’’.

கண்ணாடி தத்துவம்

பட்டப் பெயர்களால் புண்படுத்தாதீர்

وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌
உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம்.

இந்தப் பெயர்கள் ஒருவருக்கு இம்சிக்குமோ கோபப்படுத்துமோ அத்தகைய அடைமொழி பெயர்களை பயன்படுத்துவது கூடாது.

நபித்தோழர் அபூஜபீரா பின் அள்ளஹ்ஹாக் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்

இந்த வசன தொடர் பனூ சலீமா குலத்தார் குறித்து அருளப்பட்டது நபி ஸல் அவர்கள் மதீனாவிற்கு வந்த போது எங்களில் யாருக்கும் இரண்டு அல்லது மூன்று பெயர்கள் இல்லாமல் இருந்ததில்லை. அந்தப் பெயர்களில் ஒன்றை கொண்டு அவர்களில் யாரையேனும் அழைத்தால் அல்லாஹ்வின் தூதரே இந்தப் பெயரால் அவர் கோபப்படுவார் என்று மக்கள் கூறுவர் அப்போதுதான் இந்த வசனம் அருளப்பட்டது.

நூல் : முஸ்னத் அஹ்மத் திர்மிதி 3191 அபூதாவூத் இப்னுமாஜா

பாவப் பெயர் மிகவும் கெட்டது

بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌

நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும்.

அதாவது பாவத்தைக் குறிக்கும் பெயரும் வர்ணனையும் மிகவும் கெட்டது அதுதான் மோசமான பட்டப்பெயர் என்று சொல்லப்படுகிறது.

وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள்.

அண்டை வீட்டார் பற்றிய புகார்

உக்பா பின் ஆமிர் ( ரலி ) அவர்களின் எழுத்தாளர் துகைன் பின் ஆமிர் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது.

நான் உக்பா ( ரலி ) அவர்களிடம் , ” எங்களுக்குச் சில அண்டை வீட்டார் உள்ளனர் .அவர்கள் மது அருந்துகின்றனர் எனவே அவர்களைப் பிடித்துக் கொண்டு செல்வதற்காக காவலர்களை நான் அழைக்கப் போகிறேன் என்று கூறினேன்.

அதற்கு உக்பா ( ரலி ) அவர்கள் , அப்படிச் செய்யாதே ! மாறாக , அவர்களுக்கு அறிவுரை கூறு ; எச்சரிக்கை செய் ‘ ‘ என்று கூறினார்கள்.

நான் அப்படியே செய்தேன் . ஆனாலும் அவர்கள் ( மதுவிலிருந்து ) விலகவில்லை . எனவே , நான் உக்பா ( ரலி ) அவர்களிடம் ( மறுபடியும் வந்து , ” நிச்சயமாக நான் அவர்களை மது அருந்த வேண்டாமெனத் தடுத்தேன் ; இருந்தும் அவர்கள் விலக வில்லை ; எனவே , அவர்களைப் பிடித்துச் செல்வதற்காகக் காவலர்களை நான் அழைக்கப்போகிறேன் ” என்று கூறினேன் .

அப்போது உக்பா ( ரலி ) அவர்கள் , – ” உனக்குக் கேடுதான் ; அப்படிச் செய்யாதே ; ஏனெனில் , ‘ யார் இறைநம்பிக்கையாளர் ஒருவரின் மானத்தை மறைக்கின்றாரோ அவர் , உயிருடன் புதைக்கப்பட்ட பெண் சிசுவை அதன் அடக்கத்தலத்திலிருந்து உயிரோடு மீட்டியவரைப் போன்றவர் ஆவார் ‘ என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறி யதை நான் செவியுற்றுள்ளேன் ” என்று என்னிடம் கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் , முஸ்னத் அஹ்மத்.

வேவு பார்க்காதீர்கள்

وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌

(எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம்.

இந்த வசனத்தில் “லாஜஸஸ்ஸூ’ என்ற வார்த்தைக்கு வேவு பார்க்காதீர்கள் என்று பொருள்.

இறைதூதர் யஅகூப் (அலை) அவர்கள் கூரியதாக அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

يٰبَنِىَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ يُّوْسُفَ وَاَخِيْهِ وَلَا تَايْــٴَــسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ‌ اِنَّهٗ لَا يَايْــٴَــسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ‏
“என்னுடைய மக்களே! நீங்கள் செல்லுங்கள், பின்னர், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் துருவித்தேடுங்கள்; அல்லாஹ்வின் அருளிலிருந்து நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்!

(அல்குர்ஆன் : 12:87)

இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள்

தஜஸ்ஸூஸ் என்பது ஒன்றைத் தேடி ஆராய்வதை குறிக்கும்.
மக்கள் பேசுவதை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்பதை அல்லது அவர்களின் வாசல்களில் நின்று ஒட்டுக் கேட்பதை குறிக்கும்

இமாம் தபரி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விரிவுரை வளங்கும் போது ‘ ‘பிறருடைய குறைகள்’ எனப்படுவது அவர்களின் அந்தரங்க இரகசியங்களும் அவர்களின் கண்ணியமுமாகும்’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திர்கு விரிவுறை வளங்கும் போது ‘ துருவித் துருவி ஆராய்வது என்பது அதிகமாக கெட்ட விடயங்களில் தான் காணப்படும்’ என விளக்கமளிக்கின்றார்கள்.

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது ‘வெளிப்படையாக தெரிகின்ற வெற்றை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் உங்களுடைய சகோதரனின் குறைகளை வெளியில் தெறியாமால் இறைவன் மறைத்த பிறகு அதனை வெளிக் கொண்டுவரும் நோக்கில் ஆராய வேண்டாம்’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.

“தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (7042), திர்மிதீ (1673)

எனவே வேவு பார்க்காதீர்கள் அதுவும் கெட்ட எண்ணத்தில் வேவு பார்ப்பது பாவமான காரியம்.

புறம் பேசி திரியாதீர்கள்

وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌

உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம். என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இந்த வசனம் (அல்பஃகீத்) புறம் பேசுவதற்குத் தடை விதித்துள்ளது

புறம் பேசுவது என்றால் என்ன என்று நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டது

அப்போது அவர்கள் நீர் உம்முடைய சகோதரர் குறித்து அவருக்கு பிடிக்காத ஒன்றை கூறுவது என்று சொன்னார்கள்.

அப்போது ஒருவர் நான் சொல்லும் குறை என் சகோதரனிடம் இருந்தாலும் புறம் பேசுவதாக ஆகுமா என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் சொல்லும் குறை உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் தான் நீர் அவரைப் பற்றி புறம் பேசி நீர் என்றாகும் நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ நீர் அவர் மீது அவதூறு சுமத்தியவர் ஆவீர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5048
திர்மிதீ : 1857

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

நான் நபி (ஸல்) அவர்களிடம் நபியே தங்கள் துணைவியார் சபியாவிடம் என்னென்ன குறைகள் இருக்கிறது அதாவது அவர் குள்ளமாக இருப்பது உங்களுக்கு போதும் என்று குறை கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ சொன்ன வார்த்தைகளை கடல் நீரில் கலக்கப்பட்டால் கடலையே கலங்கடித்து விடும் என்று கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் குறித்து ஒப்பனை காட்டி பேசினேன் அப்போது நபியவர்கள். ஒரு மனிதரை ஒப்பனை காட்டி பேசுவதை நான் விரும்ப மாட்டேன் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் ,திர்மிதீ 2426

பிணத்தின் மாமிசத்தை தின்பவர்கள்

اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌ وَاتَّقُوا اللّٰهَ‌

உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள்.

அதாவது அந்தப் பிணத்தை தின்பதை எப்படி இயல்பிலேயே நாம் விருப்பமும் அது போன்று புறம் பேசுவதை மார்க்கத்தின் அடிப்படையில் வெறுத்திட வேண்டும் என்றால் புறம் பேசுவதற்கான தண்டனை இதை விடக் கடுமையானதாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதா வில் குறிப்பிட்டார்கள் உங்களது இந்த நகரத்தில் புனிதமான இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்கு புனிதமானதோ அதே அளவுக்கு நிச்சயமாக உங்கள் உயிர்களும் உடைமைகளும் உங்களின் மானமும் உங்களுக்கு புனிதமானவை.

அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள்

நூல்: ஸஹீஹ் முஸ்லிம், ஸஹீஹ் புகாரி, திர்மிதீ 2085, இப்னுமாஜா,முஸ்னத் அஹ்மத்,தாரமீ.


ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் பொருள் மானம் உயிர் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும் ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவது அவரின் தீமைக்கு போதுமான சான்றாகும்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா ரலி அவர்கள்
ஸஹீஹ் முஸ்லிம் 5010, திர்மிதீ 1859.

மற்றொரு ஹதீஸில் பராஉ பின் ஆசிப் ரலி அவர்கள் கூறுகிறார்கள்

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் அப்போதுதான் வீடுகளுக்குள் இருக்கும் கன்னிப் பெண்களுக்கும் கேட்கும் வகையில் உரத்த குரலில் சொன்னார்கள்.

நம் நாவல் மட்டுமே இறை நம்பிக்கை கொண்ட சமுதாயம் நீங்கள் முஸ்லிம்கள் தொடர்பாக புறம் பேசாதீர்கள் அவர்களின் அந்தரங்களை துருவி ஆராயாதீர்கள் சகோதரனின் அந்தரங்கத்தை துருவி ஆராய்வானோ அவனது அந்தரங்கத்தை அல்லாஹ் துருவி ஆராய்வான்.

யாருடைய அந்தரங்கத்தை அல்லாஹ் ஒரு ஆரம்பித்து விட்டாலும் அப்போது அவர் வீட்டுக்குள்ளே மறைந்து இருந்தாலும் அவரை அல்லாஹ் கேவலப்படுத்திய தீருவான்.

நூல் : ஷுஅபுல் ஈமான் பைஹகி, முஸ்னத் அர்ரவ்யானீ, முஸ்னத் அபீயஃலா,

குறை பேசுபவனின் தண்டனை

இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நான் விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு சமூகத்தாரை கடந்து சென்றேன் அங்கே செம்பால் ஆன அவர்களது நகங்களை கொண்டு முகங்களையும் நெஞ்சங்களையும் கீறிக் கொண்டு இருந்தார்கள்.

யார் இவர்கள் இன்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் கேட்டேன் .

இவர்கள் தான் மனிதர்களின் சதைகளை தின்னும் புறம் பேசியவர்கள் மற்றவர்களின் மானங்களில் தலையிட்டு கொண்டும் இருந்தவர்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் அபூதாவூத், அஹ்மத்.

மற்றொரு ஹதீஸில் அபூ ஸயீத் அல் குத்ரி ரலி அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் விண்ணுலக பயணத்தின் போது அல்லாஹ் ஒரு சமூகத்தின் பக்கத்தில் அழைத்துச் சென்றார் அங்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் இருந்தார்கள் அவர்கள் விஷயத்தில் சிலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

அந்தப் பொறுப்பாளர்கள் ஒருவருடைய விழா பகுதியின் பக்கம் வந்து செருப்பின் அளவிற்கு ஒரு சதைத் துண்டை வெட்டி எடுத்தார் பிறகு அவர்களில் ஒருவருடைய வாயில் சாப்பிடு என்றுநீ ஏற்கனவே சாப்பிட்ட தைப் போன்று இதையும் சாப்பிடு என்று வற்புறுத்துவார் இதனால் அவர் மரண வலியை உணர்வார்.

இவர்கள் குறித்து நபியவர்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள் இவர்கள்தான் இழித்தும் ,பழித்தும் ,புறம் பேசி ,கோள் சொல்லி திரிந்தவர்கள்.

(தப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம்)

எனவே தான் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது ஒருவர் இறந்து போன தன் சகோதரனின் உடலை சதையை தின்ன விரும்புவாரா அதை நீங்கள் வெறுப்பீர்கள் அல்லவா என்று.

விபச்சாரம் செய்தாலும் குறை சொல்லாதீர்கள்

பொதுவாக இன்று ஒருவரின் முன்னேற்றத்தை வழிகெடுக்க அவர்களின் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த அவதூறை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்லாம் துருவித்துருவி ஆராய்வதை நிறுத்த வேண்டும் என்று ஒருவர் விபச்சாரம் செய்தாலும் அதை வழியே சென்று ஆராயக் கூடாது என்று சொல்கிறது

நபி(ஸல்) அவர்களிடம் மாயிஸ் இப்னு மாலிக் அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் செய்துவிட்டேன் எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ அவளை முத்தமிட்டிருக்கலாம் அல்லது கை விரலால் தொட்டிருக்கலாம் அல்லது அவளை பார்திருக்கலாம் எனக் கூறினார்கள். அதற்கு மாயிஸ் (ரழி) அவர்கள் இல்லை நான் விபசாரம் செய்தேன் எனக் கூறினார்கள். அதன் பிறகு அவருக்கு கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றப்பட்டது’ என இப்னு அப்பாஸ்; (ரழி) அறிவித்தார்கள். ஆதாரம் : புஹாரி (6824)

இவ்வரலாற்று சம்பவத்தில் நபி(ஸல்) அவர்களோ அல்லது ஸஹாபாக்களோ மாயிஸ் (ரழி) இடம் நீ எந்த பெண்ணுடன் விபசாரம் செய்தாய் என கேட்கவுமில்லை அதனை துருவித் துருவி ஆராயவும் இல்லை. இவ்வாரான ஒரு சம்பவம் நம் மத்தியில் நடை பெற்றால், நம் சாமூகத்தின் நிலை என்னவாக காணப்படும் என்பது நாம் அறிந்த விடயமே. நமது கற்பனைக்கு அப்பாற்பட்டதுமல்ல.

‘நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, அல்லாஹ்வுடைய தூதரே! நான் தண்டனை நிரைவேற்றப்பட வேண்டிய பெண்ணாகிவிட்டேன், என்னை தூய்மைப் படுத்துங்கள் என்றால். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாவமண்ணிப்பு தேடிக் கொள் என்றார்கள், உடனே அப்பெண், அல்லாஹ்வுடைய தூதரே! எனது வயிற்றில் விபசாரத்தின் மூலம் சிசு உண்டாகியுள்ளது எனக் கூறினால். நபி (ஸல்) அவர்கள் குழந்தை பெற்றவுடன் வா என்று சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அப்பெண் குழந்தையுடன் வந்தபோது குழந்தைக்கு பால்குடி மறந்த பின் வா எனத்திருப்பி அனுப்பினார்கள், குழந்தை பால் குடி மறந்த பின் மீண்டும் அப் பெண் வந்தால். அதன் பின்னர் தண்டனை நிறைவேற்றப் பட்டது.’ ஆதாரம்: முஸ்லிம் (1695).

இப்பெண்னிடம் எத்தவொரு ஸஹாபிப் பொண்களோ அல்லது ஸஹாபாக்களே நீ யாருடன் விபசாரம் செய்தாய் எனக் கேட்கவுமில்லை, அதனை துருவித் துருவி ஆராயவுமில்லை. ஆனால் இப்படியான ஒரு சம்பவம் நம் சமூகத்தின் மத்தியில் நடைபெற்றால். அப்பெண்ணை மாத்திரமல்ல அப்பெண்ணின் குடும்பத்தாறையும் நம் சமூகம் விட்டு வைக்க மறவாது.

கண்ணியமாக குறைகளை எடுத்துச் செல்லுங்கள்

குறை கூறுதல், புறம் பேசுதல் போன்ற செயல்கள் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே சமயம், ஒருவரைப் பற்றிய குறையை எடுத்துச் சொல்லும் போது கேட்பவர்களுக்கு அதனால் பயன் ஏற்படும் என்றால் அது புறம் ஆகாது.

இன்னும் சொல்வதென்றால், இது போன்ற கட்டத்தில் எது உண்மையோ அதை உள்ளபடி கூற வேண்டும் என்பது தான் மார்க்கத்தின் நிலைபாடு.

பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.

நான் “இத்தா’வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்” என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ உசாமாவை மணந்து கொள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2953

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் இரண்டு நபித் தோழர்களைப் பற்றிக் கேட்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த இரு நபித்தோழர்களின் குறைகளையும் மறைக்காமல் எடுத்துக் கூறுகின்றார்கள். இது புறம் என்றிருந்தால் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்” என்று (என்னிடம்) சொன்னார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்துகொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கெண்டீர்களே!’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரது தீங்கை அஞ்சி மக்கள் விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6032

ஒரு மனிதர் வீட்டிற்குள் வர அனுமதி கேட்கும் போது, அவர் கெட்டவர் என்பதை நபி (ஸல்) அவர்கள் அங்கிருப்பவர்களிடம் தெளிவுபடுத்துகிறார்கள். மற்றவர்கள் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.

எனவே கேட்பவரின் நலனுக்காக ஒருவரின் குறையைத் தெளிவு படுத்துவது தவறில்லை என்பதை இந்ந ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது,பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்