சூயஸ் கால்வாய் கப்பல்: முடிவுக்கு வந்தது நடுக்கடல் நெருக்கடி
கெய்ரோ: எகிப்தின் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பலை, மிதக்கும் நிலைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்ற நிபுணர்கள், அதை கரை பகுதியில் இருந்து அப்புறப்படுத்திய மீட்புக் குழுவினர், அதை பாதுகாப்பான இடத்துக்கு இழுவை படகுகள் மூலம் கொண்டு சென்றனர்.
400 மீட்டர் நீளம் (1,300 அடி) கொண்ட அந்த கப்பல், மீட்புக்குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் கால்வாயின் மையப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டதாக சூயஸ் கால்வாய் ஆணைம் தெரிவித்துள்ளது.
அந்த கப்பலின் மீட்புப் பணியில் ஈடுபட்ட டச்சு நிறுவனமான போஸ்காலிஸின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் பெர்டோஸ்கி, திங்கட்கிழமை பிற்பகல் உள்ளூர் நேரப்படி மூன்று மணி ஐந்து நிமிடத்துக்கு எவர் கிவன் கப்பல், மீண்டும் முழுமையாக மிதக்கத் தொடங்கியது. இதன் மூலம் சூயஸ் கால்வாய் பகுதியில் மற்ற கப்பல்கள் செல்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தற்போது அந்த கப்பல், கால்வாயின் வெளிப்பகுதிக்கு இழுவை படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அந்த கப்பலின் அனைத்து பகுதிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இரண்டு லட்சத்து இருபத்து நான்காயிரம் டன் எடை கொண்ட இந்த கப்பலின் சீரான ஓட்டத்துக்காக சுமார் 10 லட்சத்து 60 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு மணல் தோண்டப்பட்டுள்ளது. இதறஅகாக மொத்தம் 11 துறைமுகங்களில் இருந்த இழுவை படகுகள் பயன்படுத்தப்பட்டுளன.
இந்த கப்பல் கால்வாயின் மையப்பகுதியில் நிற்கும் காட்சி, எகிப்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
எகிப்திய அதிபர் அப்துல் ஃபட்டா அல் சிஸி, இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர உழைத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வார நெருக்கடி
உலகின் அதிமுக்கிய கடல் வாணிப பாதைகளில் ஒன்று சூயஸ் கால்வாய். அதன் குறுக்கே தரை தட்டி நின்ற கப்பல் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அந்த வழியாக நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களில் சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்களின் சேவை தடைபட்டது. பல கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாக ஆசியா நாடுகளுக்கு செல்லும் வகையில் அவற்றின் பாதையை மாற்றிக் கொள்ளும் கட்டாயத்துக்கு ஆளாகின.
இந்த நிலையில், எவர் கிவன் கப்பல் பகுதியளவு மட்டுமே மீட்கப்பட்டிருப்பது, தடைபட்ட சூயல் கால்வாயில் சரக்குகளுடன் நிலைகொண்டிருந்த மற்ற கப்பல்களின் நடமாட்டத்துக்கு வழிவகுத்திருப்பது மீட்புக்குழுவினருக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது. ஆனாலும், தரை தட்டிய எவர் கிவன் கப்பலை அடுத்து அந்த இடத்தில் இருந்து நகர வைப்பது மீட்புக்குழுவினருக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது.
எவர் கிவன் கப்பலை மிதக்கும் நிலைக்கு கொண்டு வர சூயஸ் கால்வாய் ஆணையமும் ஸ்மித் சால்வேஜ் என்ற டச்சு நிறுவனம் இழுவை படகுகள் உதவியுடன் கப்பலின் பின்பகுதியை நீர்ப்பகுதிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற்றுள்ளன. இந்த இழுவை படகுகளுக்கு உதவியாக அகழ்வுக்கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டன. அவை அங்கிருந்த மணல், கப்பலின் நங்கூரம் சிக்கியிருந்த மணல் பகுதியை அகற்றும் பணியில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கின.
கரையில் இருந்து நான்கு மீட்டர் தூரத்தில் சிக்கியிருந்த கப்பலின் பின்புற பகுதி, இப்போது 102 மீட்டர் தூரத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதால், எவர் கிவன் கப்பல் முழுமையாக மிதக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.
எவர் கப்பல் மற்றும் இழுவை படகுகளின் நிலைமை

இந்த கப்பலை நிர்வகித்து வரும் பிஎஸ்எம் என்ற நிறுவனம்,கூடுதலாக பிரத்யேக மணல் அள்ளும் கப்பல் கொண்டு வரப்பட்டதாகவும் , இந்த கப்பலினால் ஒவ்வொரு மணி நேரமும் 2,000 கியூபிக் மீட்டர் மணலை வெளியேற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
20,000 கன்டெய்னர்களை கொண்டு செல்லும் திறன் கொண்ட எவர் கிவன் கப்பலில் தற்போது 18,000க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தனை கண்டெய்னர்களை இடம் மாற்றுவது என்பது சவால் மிகுந்த காரியம்.இது மட்டுமல்லாமல், மீட்பு பணிக்கு தேவையான சரியான கிரேன் எந்திரங்களை கப்பல்களுக்கு அருகே கொண்டு வந்து நிலை நிறுத்துவது அடுத்த சவால்.இதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால், கிரேன் மூலம் கப்பல் சேதமடையலாம். அல்லது கப்பலில் சமநிலையின்மையை ஏற்படலாம்.