நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், டிசம்பர் 16, 2021

இஸ்லாமும் நடு நிலையான தன்மையும்,

நடுநிலையாக செயல்படுவது.          என்றும் நன்றாகவே இருக்கும்


وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا


(நபியே) உங்களுடைய தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் இதற்கிடையே சமநிலையைக் கடைப்பிடிப்பீராக.       திருக்குர்ஆன்:- 17:110


இஸ்லாம் மனிதனுக்கு  ஆன்மீகமும், உலகியலும் அவசியம் என்கிறது. இஸ்லாமில் ஆன்மீகத்தை புறக்கணிக்கும் உலகியல் இல்லை; அதேபோல் ஆன்மீகத்தை அரவணைத்துக் கொண்டு உலகை உதறித் தள்ளும் கோமாளித்தனமும் இல்லை.


இந்த உலக வாழ்க்கையை மறுமை வாழ்க்கையின் நன்மைகளை அறுவடை செய்யும் விளைநிலமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது.


முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் ஆசைகளையும், தேவைகளையும் இரண்டு உலகத்திற்கும் (இம்மை - மறுமை) இடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.


"இந்த உலகம் பொய். இதில் உள்ளதெல்லாம் அழிந்து விடும். எனவே, இதை துறப்பதே விமோசனத்திற்கு வழி" என்று சில மதங்கள் உபதேசிக்கின்றன. "இந்த உலகம் மெய். இதில் இருப்பவை அழிவதற்கு முன் ஆசை தீர இன்பங்களை அனுபவித்துவிடு! பாவமாவது, புண்ணியமாவது" என சில தத்துவங்கள் கூறுகின்றன. இஸ்லாம் இந்த இரண்டுக்கும் மத்தியில் சமநிலையைப் பேணச் சொல்கிறது.


இம்மையில் அனுமதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவியுங்கள். ஆனால்,  இம்மை இன்பங்களைவிட மறுமை இன்பங்கள் உயர்ந்தவை. மறுமையில் இன்பங்களை அறுவடை செய்ய  இம்மை அதற்காக  விளைநிலம் என அறிவுறுத்துகிறது இஸ்லாம்.


எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் நல்லவற்றையே கொடுத்தருள்வாயாக! மறுவுலகிலும் நல்லவற்றையே கொடுத்தருள்வாயாக!                                                        திருக்குர்ஆன்:- 2:201


இந்த அழகான பிரார்த்தனையை குர்ஆன் கற்றுத்தருகிறது. இவ்வாறு இஸ்லாம் ஈருலகிலும் இன்பம் பெறும் வழியை எடுத்துரைக்கிறது.


மனித வாழ்க்கையில் உண்பது, உறங்குவது, உடுத்துவது, உறவு கொள்ளுவது,  பொருளீட்டுவது, பிறரிடம் நட்பு கொள்வது மற்றும் விரோதம் கொள்வது என அனைத்திலும் சமநிலைப் போக்கை  இஸ்லாம் கடைபிடிக்க வலியுறுத்துகிறது.


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَیرُ الاُمُورِ اَوسَاطُهَا ) காரியங்களில் சமநிலையை மேற்கொள்வதே நன்மையாகும். நூல் பைஹகீ


அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள்.   ( عَلَیکُم بِالقَصدِ فَاِنَّ القَصدَ اَبلَغُ ) நடுநிலையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக நடுநிலையை கடைப்பிடிப்பதனால் உங்கள் இலட்சியத்தை அடைந்து கொள்ள முடியும்.


 *உபரியான தொழுகைகள்* 


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள்) நுழைந்த போது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. ( مَا هَذَا الْحَبْلُ ) "இந்தக் கயிறு என்ன (ஏன்)?" என்று அண்ணலார் வினவினார்கள். இதற்கு மக்கள், "இது ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிறை பற்றிக்கொள்வார்" என்று கூறினார்கள்.


அதற்கு அண்ணலார், ( لاَ، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ ) "வேண்டாம். அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும் போது (கூடுதலான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.        நூல்:- புகாரீ-1150


அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம், ( يَا عَبْدَ اللَّهِ، لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ ) "அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வழிபாடு செய்து விட்டு, இறுதியில் இரவுத் தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.       நூல்:- புகாரீ-1152


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا ) (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைபிடியுங்கள்; இயன்றதைச் செய்யுங்கள்; நற்செய்தி பெறுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்    நூல்:- புகாரீ-39


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சுலைமான் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களை கடைத்தெருவின் மேற்பார்வையாளராக நியமித்திருந்தார்கள். ஒருநாள் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் காணப்படவில்லை. உமர் (ரலி) அவர்கள் தொழுகை முடிந்ததும் அவருடைய வீட்டுக்குச் சென்று அவர்களின் தாயாரிடம், ( لَمْ أَرَ سُلَيْمَانَ فِي الصُّبْحِ ) "(இன்று) சுலைமான் (ரலி) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகைக்கு காணவில்லையே காரணம் என்ன?" என்று கேட்டார்கள்.


அதற்கு அவ்வம்மையார், "சுலைமான் இன்று இரவு முழுவதும் நஃபில் தொழுவதில் ஈடுபட்டிருந்ததால் தூக்கம் மிகைத்து ஃபஜ்ரு தொழுகை நேரத்தில் கண்ணயர்ந்துவிட்டார்" என்று கூறினார். இதை கேட்ட உமர் (ரலி) அவர்கள், ( لأَنْ أَشْهَدَ صَلاَةَ الصُّبْحِ فِي الْجَمَاعَةِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً ) "இரவு முழுவதும் நஃபில் தொழுவதை விட ஜமாஅத்துடன் ஃபஜ்ரு தொழுவது அவசியமானதாகும்" என்று கூறினார்கள். நூல்:- முஅத்தா மாலிக்-296


பொதுவாக வழிபாடுக் குறைவாகச் செய்தாலும் நிறைவாகச் செய்ய வேண்டும். நிலையாகச் செய்ய வேண்டும். அதுவே இறைவனுக்கு உவப்பானதாக இருக்கும். ஆர்வ மிகுதியால், சிரமங்களை ஏற்படுத்திக்கொண்டு அதிக அளவில் வழிபாடு செய்யும்போது, ஒரு நாள் சடைந்து போய் அதைக் கைவிட வேண்டியது வரும். இது நல்லதன்று. இறுதியில் முற்றாக அந்த வழிபாட்டைக் கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, வழிபாடுகளில் நடுநிலையை பேணவேண்டும். மூழ்கிப் போய் விடக்கூடாது. உற்சாகத்தோடு தான் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்; சடைவு ஏற்பட இடமளித்து விடக்கூடாது.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( سَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا فَإِنَّهُ لَنْ يُدْخِلَ الْجَنَّةَ أَحَدًا عَمَلُهُ ) "நடுநிலையாக செயலாற்றுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாகச் செயலாற்றுங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் யாரையும் அவரது இறைவழிபாடு ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது என்று கூறினார்கள்.


மக்கள், "தங்களையுமா, நாயகமே? என்று கேட்டார்கள். அண்ணலார், ( وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ وَاعْلَمُوا أَنَّ أَحَبَّ الْعَمَلِ إِلَى اللَّهِ أَدْوَمُهُ وَإِنْ قَلَّ ) "என்னையும்தான்;  அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர. அறிந்து கொள்ளுங்கள்! வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான வழிபாடே ஆகும்" என்று கூறினார்கள். நூல்:-  புகாரீ-6464, முஸ்லிம்-5430


அதாவது ஒருவர் இறைவழிபாடு புரிவதனால் மட்டும் அவர் சொர்க்கம் சென்று விடுவார் என்று உறுதியாகக் கூற முடியாது. மாறாக, அவரது இறைவழிபாட்டை இறைவன் அங்கீகரிக்க வேண்டும். அதற்கும் மேலாக, அவர் மீது இறைவன் அன்பும் அருளும் புரிய வேண்டும். அப்போதுதான் அவர் சொர்க்கம் செல்ல முடியும். தவிரவும், இறைவழிபாடு புரிவதற்கும் இறைவனின் அருளும் உதவியும் தேவை. அதன்றி எவரும் இறைவழிபாடு புரிய இயலாது.


 *இல்லற வாழ்க்கையில்…* 


அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களையும் அபூதர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவைச் சந்திக்கச் சென்றபோது அவரின் மனைவி அழுக்கடைந்த ஆடை அணிந்து இருக்கக் கண்டார்.


சல்மான் (ரலி) அவர்கள் "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவரது மனைவி, ( أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا ) "உங்கள் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எந்த தேவையுமில்லை" (அதாவது அவர் என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை) என்று விடையளித்தார்.


சற்று நேரத்தில் அபூதர்தா (ரலி) வந்து சல்மானுக்கு உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, "நான் நோன்பு நோற்று இருக்கிறேன்" என்றார். சல்மான், "நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்" என்று கூறியதும் அபூதர்தா உண்டார். இரவு வந்ததும் அபூதர்தா (ரலி) அவர்கள் (தொழுவதற்கு) எழுந்திருக்கப் போனார். அப்போது சல்மான் (ரலி) அவர்கள் உறங்குவீராக! என்று கூறியதும் அபூதர்தா உறங்கினார்கள்.


பின்னர் (சிறிது நேரத்தில் மீண்டும் தொழுவதற்காக) அபூதர்தா எழுந்திருக்கப் போனார். அப்போதும் சல்மான் 'உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள் 'இப்போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.


பிறகு அபூ தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், ( إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ ) "நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு  நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவீராக!" என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு அண்ணலார், ( صَدَقَ سَلْمَانُ ) "சல்மான் உண்மையையே கூறினார்" என்றார்கள்.           நூல் புகாரீ-1968


அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியபோது சல்மான் (ரலி) அவர்கள் சொன்னது சரி தான் என்று ஆமோதித்தார்கள். ஆம்! இல்லற வாழ்க்கையில் ஈடுபடவும் வேண்டும் இறைவழிபாட்டில் ஈடுபடவும் வேண்டும் இவ்வாறு தான் இஸ்லாம் போதிக்கிறது.


 *அழகிய அறிவுரை* 

நடுநிலை தவறி விடவேண்டாம். எங்களுக்குச் சீரான வழியைக் காட்டுவீராக! என்றனர்.      திருக்குர்ஆன்:- 38:22


ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பல தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாக அமைந்திருந்தன.                                                              நூல்:- முஸ்லிம்-1572


அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. " அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்களுக்கு (ஹதீஸ் அறிவித்து) அறிவுரை வழங்கி வந்தார்கள். இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் அபூ அப்துர் ரஹ்மானே! தங்களின் ஹதீஸ் அறிவிப்பை நாங்கள் நேசிக்கிறோம்; ஆசிக்கிறோம். தாங்கள் ஒவ்வொரு தினமும் எங்களுக்கு ஹதீஸ் அறிவிப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம் என்று கூறினார்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ( مَا يَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ إِلاَّ كَرَاهِيَةُ أَنْ أُمِلَّكُمْ. إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ كَرَاهِيَةَ السَّآمَةِ عَلَيْنَا ) "நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்தி விடுவேனோ எனும் அச்சம்தான் உங்களுக்கு (நாள்தோறும்) ஹதீஸ் அறிவிக்கவிடாமல் என்னைத் தடுத்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைக் கவனித்து) விட்டு விட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்கள். (இதுவே உங்களுக்கிடையே அறிவுரை வழங்க வரவிடாமல் என்னைத் தடுக்கிறது") என்று கூறினார்கள்.   நூல்:- முஸ்லிம்-5435


அறிவுரை, உபதேசம் வழங்குவது ஒரு நல்லறம் தான். அடிக்கடி அறிவுரை கூறப்பட்டு வந்தால்தான், மக்களின் அலைபாயும் மனம் ஒருமுகப்பட்டு மறந்துபோன நன்மைகளைத் தொடரச் செய்யவும், இறைவனைப் பயந்து தீமைகளைக் கைவிடவும் வழி பிறக்கும். அதே நேரத்தில் மக்கள் சடைந்து போகும் அளவுக்குத் தொடர்ந்து அறிவுரை கூறுவது கூடாது. அதனால் பற்று ஏற்படுவதற்குப் பதிலாக வெறுப்பு ஏற்பட்டு விடலாம். இது சொல்பவருக்கும் சொல்லப்படும் கருத்துக்கும் மதிப்பில்லாமல் செய்துவிடலாம். எனவே, சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து தேவைக்கேற்பவே உபதேசம் செய்ய வேண்டும். இதில் எவரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.


மொகலாயச் சக்கரவர்த்தி  அவுரங்கசீப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய மகனுக்கு கூறிய அறிவுரை, "மகனே! நீ கல்கண்டு போல் இனிப்பாகவும் இருந்து விடாதே! அவ்வாறு இருந்து விட்டால், உன்னை எல்லோரும் தூக்கி விழுங்கி விடுவார்கள். மேலும், வேப்பங்காய் போன்று கசப்பாகவும் இருந்துவிடாதே! அவ்வாறு இருந்துவிட்டால், உன்னை எல்லோரும் 'தூதூ' என தூற்றி துப்பத் தொடங்கி விடுவார்கள் என்று கூறினார்கள்.


 *நபித்தோழர்கள்* 


உமது நடையில் மிதமான நிலையைக் கடைப்பிடி.      திருக்குர்ஆன்:-31:19


மரியாதைக்குரிய நபித்தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் கொண்டிருந்த நட்பின் பலனால் எந்தளவுக்கு நடுநிலையான இயல்புடையவர்களாக இருந்தார்கள் எனில், அவர்கள் துறவிகள் மற்றும் உலக பற்றற்றவர்கள் போன்றும் இருந்ததில்லை. உலகாதாயவாதிகளை போன்றும் கிண்டல் கேலியிலும், வீண்பேச்சிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்ததில்லை. மாறாக அவர்களது உள்ளங்களில் நகைச்சுவையுடன் தீனில் ரோசமும் உத்வேகமும் நிரம்பியிருந்தன.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالاِقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ) நன்னடத்தை, நிதானம், நடுநிலைப் போக்கு ஆகியவை நபித்துவத்தின் 24 பாகங்களில் ஒரு பாகமாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் அல்முஸனீ (ரலி) அவர்கள் நூல்:-  திர்மிதீ-1933


காரியங்களில் நடுநிலையை கடைபிடிக்கும் பண்பு அவ்வளவு சாதாரணமானதல்ல. அது நபித்துவ பண்புகளில் உள்ளவை என விளங்க வேண்டும். அது ஒப்பற்ற அழகிய பண்பாகும்.


காரியங்கள் அனைத்திலும் நாம் சக்திக்கும் வலிமைக்கும் ஏற்றவாறு செயல்பட வேண்டும். அதற்கு எதிரான எத்தகைய வழிமுறையை மேற்கொண்டாலும் அது நமக்கு மகிழ்வூட்டுகின்ற விஷயமாக இருக்காது.


 *குர்ஆன் ஓதும்போது...* 


அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் எவ்வாறு குர்ஆனை ஓதுவார்கள்? மெதுவாக ஓதுவார்களா? சப்தமாக ஓதுவார்களா?" என்று கேட்டேன்.


அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இரு விதமாகவும் ஓதி வந்தார்கள்; சில நேரங்களில் மெதுவாக ஓதுவார்கள்; சில நேரங்களில் சப்தமாக ஓதுவார்கள்" என்று விடையளித்தார்கள். அப்போது நான், ( اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً ) "நடைமுறைகளில் தாராளத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறினேன். நூல்:-  அபூதாவூத்-1132, திர்மிதீ-411


அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள் அபூபக்ர்-ரலி அவர்களும் உமர்-ரலி அவர்களும் ஒன்றாக இருந்த போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ( مَرَرْتُ بِكَ وَأَنْتَ تَقْرَأُ وَأَنْتَ تَخْفِضُ مِنْ صَوْتِكَ ) “நீங்கள் (இரவில்) குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது நான் உங்களைக் கடந்து சென்றேன். அப்போது நீங்கள் மெதுவாக ஓதிக் கொண்டிருந்தீர்களே (ஏன்)?" என்று கேட்டார்கள்.


அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் யாருடன் ரகசியமாக உரையாடுவேனோ அந்த இறைவனுக்கு கேட்கும் விதமாக அவ்வாறு ஓதினேன், என்றார்கள். அண்ணலார், ( اِرْفَعْ قَلِيلاً ) "இன்னும் சற்று (சப்தத்தை) உயர்த்திக் கொள்வீராக!" என்று கூறினார்கள்.


பிறகு உமர் (ரலி) அவர்களிடம், ( مَرَرْتُ بِكَ وَأَنْتَ تَقْرَأُ وَأَنْتَ تَرْفَعُ صَوْتَكَ ) "நீர் (இரவில்) குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த போது நான் உம்மைக் கடந்து சென்றேன். நீர் குரலுயர்த்தி ஓதுகிறீரே?" என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் நான் இவ்வாறு ஓதுவதன் மூலம் சிற்றுறக்கத்தில் இருப்போரை விழிக்கச் செய்கிறேன். ஷைத்தானை விரட்டுகிறேன்" என்று கூறினார்கள். அண்ணலார், ( اِخْفِضْ قَلِيلاً ) "சற்று (சப்தத்தைத்) தாழ்த்திக் கொள்வீராக!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1133, திர்மிதீ-409, 


 *செலவு  செய்வதில்* 


(நபியே! உங்களுடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உங்களுடைய கையைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டிக் கொள்ளாதீர். மேலும் (உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர். (அவ்வாறு செய்தால்)  தூற்றப்பட்டவராகவும் முடக்கப்பட்டவராகவும் நீர் அமர்ந்துவிடுவீர்.     திருக்குர்ஆன்:- 17:29


அதாவது பணத்தையும் பொருளையும் செலவிடும்போது நடுநிலையைப் பேண வேண்டும். அதிலேயே நினைத்திருக்க வேண்டும் என்கிறது இந்த திருவசனம்.


அவர்கள் செலவு செய்தால் விரயம் செய்ய மாட்டார்கள்; (கையை) இறுக்கவுமாட்டார்கள். அ(வர்களின் செலவான)து, அதற்கிடையே நடுநிலையானதாக இருக்கும்.          திருக்குர்ஆன்:- 25:67


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا عَالَ مَنْ اِقْتَصَدَ " لَمْ يُخَرِّجُوهُ ) சிக்கனத்தை மேற்கொள்பவர் (குடும்பத்தில் பொருளாதார) நெருக்கடியை சந்திக்க மாட்டார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஃபுர்கான் வசனம்-67


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.    ( مَا اَحسَنَ القَصدَ فِی الغِنٰی مَااَحسَنَ القَصدَ فِی الفَقرِ وَمَا اَحسَنَ القَصدَ فِی العِبَادَةِ ) செல்வ நிலையிலும், வறுமையிலும், இறைவழிபாட்டிலும் கடைபிடிக்கப்படும் நடுநிலைப் போக்கு (சிக்கனம்) எவ்வளவு எழிலானது! அறிவிப்பாளர்:- ஹுதைபா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது:- பஸ்ஸார், கன்ஸுல் உம்மால், தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஃபுர்கான் வசனம்-67


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நடுத்தரமான செலவாளியை இறைவன் யாசிப்பவராக்கமாட்டான். வீண் செலவு செய்பவரையே இறைவன் வறுமையில் ஆழ்த்துகிறான்.


தனி மனிதனோ, ஒரு குடும்பமோ, ஏன் ஓர் அரசோ தனது செலவீனங்களில் விரயமும் இல்லாமல், கஞ்சத்தனமும் இல்லாமல் நடுநிலையோடு - அதாவது சிக்கனத்தோடு செயல்பட்டால் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும். இது பொருளியலின் முக்கியப் பாடங்களில் ஒன்றாகும். உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று, விரயம் அங்கே ஆட்சி புரிந்திருக்கும். அல்லது அவசியமான செலவினங்கள் புறந்தள்ளப்பட்டிருக்கும். மொத்தத்தில் சிக்கனம் மறக்கப்பட்டிருக்கும்.


விரயம் என்பது பயனற்ற முறையில் செலவிடப்படுவதாலோ சரியான முறையில் பயன்படுத்தாததாலோ பொருள் வீணாவதைக் குறிக்கும். கஞ்சத்தனம் என்பது அவசியமான செலவைக்கூட தவிர்த்து விட்டு பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணமாகும். சிக்கனம் என்பது தேவையான அளவுக்கு மட்டும் கவனமாக செலவு செய்வதைக் குறிக்கும்.


ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு அரசும் விரயத்தையும் கஞ்சத் தனத்தையும் கைவிட்டு, சிக்கனமாகச் செலவிட்டு வந்தால் அங்கே பொருளாதார நெருக்கடிக்கோ பட்டினிக்கோ பெரும்பாலும் அவசியம் இராது.


 *நட்பு - பகைமை* 


உங்களுக்கும், அவர்களுள் உள்ள உங்களுடைய எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்திவிடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே!      திருக்குர்ஆன்:- 60:7


உபைதில் கின்தி ( ரஹ்) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) அவர்கள் இப்னுல்கவ்வாஃ (ரஹ்) அவர்களிடம், ( أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا، وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا مَا‏ ) "உன் நண்பனை அளவோடு நேசிப்பீராக. என்றாவது ஒருநாள் அவன் உன்னைக் கோபமூட்டுபவனாக ஆகலாம். உனது எதிரியை அளவோடு வெறுப்பீராக. என்றாவது ஒருநாள் அவன் உனது நேசனாக ஆகலாம்" என்று கூறினார்கள்.       நூல்:- அல்அதபுல் முஃப்ரத்- 1321


அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள், ( لاَ يَكُنْ حُبُّكَ كَلَفًا، وَلاَ بُغْضُكَ تَلَفًا ) "உனது நேசம் அளவு கடந்ததாகவும், உமது கோபம் நாசத்திற்குக் காரணமாகவும் இருக்க வேண்டாம்" என்று கூறினார்கள். அப்போது நான், "அது எப்படி?" என்று கேட்டேன். உமர் (ரலி) அவர்கள், ( إِذَا أَحْبَبْتَ كَلِفْتَ كَلَفَ الصَّبِيِّ، وَإِذَا أَبْغَضْتَ أَحْبَبْتَ لِصَاحِبِكَ التَّلَف‏ )"நீர் நேசித்தால் குழந்தையை நேசிப்பது போன்று அளவுகடந்து நேசிக்கிறாய். நீ கோபப்பட்டால் உனது தோழனுக்கு நாசம் ஏற்படுவதை விரும்புகிறாய்" என்று கூறினார்கள்.      நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-1322


ஆகவே, அனைத்து  காரியங்களிலும் சமநிலையைப் பேணி, இறையருளைப் பெறுவோமாக! அமீன்

பிரபல்யமான பதிவுகள்