ஹிஜ்ரா என்பது உலக சரித்திரத்தில் அற்புதங்கள் நிறைந்த ஒரு நிகழ்வாகும்;ஹிஜ்ராவின் மகத்துவத்தை ஒற்றை ஹதீஸின் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும்;
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்;
لَوْلَا الْهِجْرَةُ؛ لَكُنْتُ امرَأً مِنَ الأَنْصَارِ
ஹிஜ்ரா இல்லையென்றால் நான் மதினாவாசிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்;
நான் மக்காவில் பிறந்ததே ஹிஜ்ரா என்றொரு நிகழ்வு இருக்கிறது என்ற காரணத்தினால் தான் என்கின்ற பொருள்பட அண்ணல் நபியவர்களின் மேற்கூறப்பட்ட அமுதமொழி அமைந்துள்ளது என்றால் ஹிஜ்ரா எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத்திற்கு நிகரான வேறாரு நிகழ்வில்லை;ஹிஜ்ரத் என்பது ஹஜர் என்ற வார்த்தையிலிருந்து வந்தது;ஹஜர் என்பதற்கு துறத்தல் என்று பொருள்; ஹிஜ்ரா நிகழ்வின் மூலம் பெரும் பெரும் செல்வந்தர்களும்கூட ஏழைகளாக மாறிப்போனார்கள்;ஏதேனும் பிரச்சனைகள் மற்றும் குழப்பங்களால் அவர்கள் ஏழைகளாக மாறிப் போகவில்லை; மாறாக ஒரு கணப்பொழுதில் ஈமானுக்காக எல்லாவற்றையும் துறந்து ஏழைகளாக ஆகிப் போனார்கள்;இதே நிலையில்தான் அவர்கள் மதினாவை நோக்கி வந்தார்கள்.
ஹிஜ்ரா நிகழ்வை மற்றொரு வார்த்தையில் சொல்வதானால் அது ஜுஹ்து எனப்படும் உலகப் பற்றற்ற பண்பாகும்;தக்வா எனும் பண்பிற்கு பிறகு அதிக சிறப்பு கொண்ட ஒரு பண்புதான் உலகப் பற்றற்றதன்மை. இப்படிப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் ஹிஜ்ரத் ஒரு தன்னிகரற்ற வரலாறாகும்.
ஹிஜ்ரா வரலாற்றில் பங்கெடுத்த இரண்டு பிரிவு ஸஹாபாக்களில் ஒரு சாரார் முஹாஜிரீன்கள்;மற்றொரு சாரார் அன்சாரிகள்;இந்த இரண்டு பிரிவினரும் தங்களிடம் இருப்பவற்றை முழுவதுமாக துறந்தார்கள்.
முஹாஜிர்கள் தங்களுடைய செல்வம் சம்பத்துக்கள் அனைத்தையும் குறைஷிக் காஃபிர்களின் முன்னிலையில் துறந்த வந்தார்கள்;அன்சாரிகள் ஹிஜ்ரத் செய்து வந்த தோழர்களுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாரானார்கள்.
அதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இந்த நபித்தோழர்களைப் பற்றி கூறும்போது...
" فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنْفَقَ أَحَدُكُمْ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ "
அல்லாஹ்வின் மீதாணையாக! பின்னால் வரும் மக்கள் உஹது மலையளவு தர்மம் செய்தாலும் ஆரம்பகால ஸஹாபாக்கள் கையளவு அல்லது அதில் பாதியளவு வழங்கிய கோதுமையின் நன்மைக்கு ஈடாகாது என்று மொழிந்தார்கள்.
உமர்(ரலி)அவர்களுடைய ஆட்சி காலத்தில்தான் ஹிஜ்ரா வருட கணக்கு துவங்கியது;நபி(ஸல்) அவர்களுடைய பிறப்பு உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பெற்றிருக்கு உமர்(ரலி)அவர்கள் வருடக்கணக்கிற்காக ஹிஜ்ரத் நிகழ்வை ஏன் தேர்வு செய்யவேண்டும்?
ஹிஜ்ரத்தின் வரலாறு பல்வேறு பாடங்களை இந்த சமூகத்திற்கு படித்துக் கொடுக்கின்றன;
அவற்றில் பிரதானமான மூன்று படிப்பினைகளை மட்டும் இஸ்லாமிய புத்தாண்டின் துவக்கத்தில் இருக்கும் நாம் நினைவுபடுத்திக் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
*01.அனைத்தையும் துறத்தல்*
தொழுவது,குர்ஆன் ஓதுவது,நோன்பு நோற்பது,திக்கு செய்வது இது போன்ற அமல்களை அறிந்து வைத்திருக்கும் இஸ்லாமிய சமூகம் துறத்தல் என்கிற அதிமுக்கிய பண்பை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதில்லை.
உத்தம நபித்தோழர்கள் அனைத்தையும் துறப்பதற்கு முன்வந்தார்கள்;
யாருக்காக?அல்லாஹ்விற்காக;அவனது பொருத்தத்திற்காக சொந்த ஆசாபாசங்களைகூட துறந்தார்கள்.
அல்லாஹ் எடுத்துரைக்கும் இரண்டு வகை மனிதர்கள்:
*முதல் வகையினரில் அக்னஸ் பின் ஷரீக்*
அல்பகரா அத்தியாயத்தின் 204 வசனம் முதல் 207 வசனங்கள் வரை இரண்டு வகை மனிதர்களைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான்;முதல் மூன்று வசனங்களில் முதல் வகையினரை பற்றி பேசுகிறான்;
وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِىْ قَلْبِهٖۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ
(நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்; அவன் கடுமையான விதண்டாவாதி ஆவான்
(அல்குர்ஆன் : 2:204)
وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللّٰهُ لَا يُحِبُّ الْفَسَادَ
அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
(அல்குர்ஆன் : 2:205)
وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ
“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
(அல்குர்ஆன் : 2:206)
இந்த இறை வசனங்கள் நயவஞ்சக பண்பு கொண்ட அக்னஸ் பின் ஷரீக் என்பவனது விஷயத்தில் இறங்கியது; நாவு கொண்டு இஸ்லாத்தை வெளிப்படுத்திய இவன்,உள்ளத்தளவில் முஸ்லிமாகவில்லை;இவனது உள்ளத்தில் இஸ்லாத்திற்கெதிரான கொள்கை மறைந்திருந்தது;பொய் சத்தியம் செய்து தன்னை உண்மையாளராக காட்டிக் கொள்ள முயற்சித்தான்;ஆணவப் பண்பினால் பாவங்களை நோக்கி நகர்ந்தான்; பூமியில் பல்வேறு குழப்பங்களை விளைவிக்க முற்பட்டான்; கால்நடைகளை அழித்தொழித்தான்.
இத்தகைய மோசமான பண்புகளை கொண்டிருந்த காரணத்தால் தங்குமிடங்களில் மிகக் கெட்ட நரகத்தின் வேதனைக்கு உரியவனாக மாறிப்போனான்.
இறைப் பொருத்தம் பெற்றவர்களின் வரிசையில் நபித்தோழியர் சுஹைப்(ரலி)
அடுத்த வசனத்தில் மனிதர்களின் மற்றொரு சாராரின் நற்பண்பை பற்றி அல்லாஹ் விவரிக்கிறான்;
وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِىْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَ اللّٰهُ رَءُوْفٌ بِالْعِبَادِ
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:207)
இந்த இறை வசனம் நபித்தோழர் ஸுஹைப்(ரலி)அவர்களது விஷயத்தில் இறங்கியது;இவர்கள் மக்காவில் இஸ்லாத்தை தழுவிய பிறகு மதினாவிற்கு நாடு துறந்து செல்ல எண்ணியபோது மக்காவில் தான் சம்பாதித்த செல்வத்தை எடுத்துச்செல்ல குறைஷிக் காபிர்கள் அனுமதி மறுத்தார்கள்.
அம்பு எய்வதில் திறமைவாய்ந்த வீரராக திகழ்ந்த ஸுஹைப்(ரலி) அவர்கள் நீங்கள் என்னை தடுத்தால் உங்களை நோக்கி அம்புகளை எய்திடுவேன் என்றார்கள்.
அப்போது குறைஷிக் காஃபிர்கள் உன்னுடைய செல்வம் முழுவதையும் துறந்துவிட்டு செல்வதற்கு தயார் என்றால் நாங்கள் அனுமதிக்கிறோம் என்று நிபந்தனை வைத்தார்கள்.
இந்த நிபந்தனையை செவியுற்ற ஸுஹைப்(ரலி)அவர்கள் கணப்பொழுதுகூட தாமதிக்காமல் அதுவரை அவர்கள் சம்பாதித்த அனைத்தையும் அல்லாஹ்வுக்காக துறந்துவிட்டு ஹிஜ்ரா எனும் உன்னத பயணத்தை மேற்கொண்டார்கள்.
பயணம் செய்து மதினாவை அடையும்போது அண்ணாரை வரவேற்க அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருமை தோழர்களுடன் அல்லாஹ்வின் இறை இல்லத்தில் அமர்ந்திருந்தார்கள்.
ஸுஹைப்(ரலி)அவர்களை கண்டவுடன் இதோ லாபம் பெற்றவர் வந்துவிட்டார் என்று சுபச்செய்தி கூறி வரவேற்றார்கள்.
ஆனால் சுஹைப்(ரலி)அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொள்ளும்போது பல நேரங்களில் பட்டினியாக இருந்திருக்கிறார்கள்;இப்படிப்பட்டவரை பார்த்துதான் புண்ணிய நபி(ஸல்)அவர்கள் லாபகாரர் என்று புகழாரம் சூட்டினார்கள்.
இவர்களது விஷயத்தில்தான் மேற்கூறப்பட்ட அல்பகரா அத்தியாயத்தின் 207 வது வசனம் இறங்கியது.
அல்லாஹ்வின் பொருத்தங்களைப் பெறுவதற்காக அனைத்தையும் துறந்தவர்கள் என்றும் அவர்களது இந்த அற்பணிப்பு அனைத்தும் லாபம் நிறைந்தது என்ற பெருமானார்(ஸல்)அவர்களது அழகிய நற்செய்திகளுக்கு சொந்தக்காரராக மாறினார்கள் ஸுஹைப்(ரலி)அவர்கள்.
அதுமட்டுமல்ல;இவர்களைப் பற்றி பேசப்படும் இறைவசனத்தின் தொடர்ச்சியில் நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள் என்ற பொருள் கொண்ட வசனத்தையும் இறைவன் இறக்கி வைத்து இவர்களைப் போல நீங்களும் இஸ்லாத்திற்குள் பூரணமாக நுழைந்து விடுங்கள் என்று வல்ல இறைவன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் வழிகாட்டினான்.
*இரண்டாவது படிப்பினை اخوة எனும் சகோதரத்துவம்.*
சத்திய மார்க்கத்திற்காக சகல சம்பத்துகளையும் துறந்துவிட்டு வந்த நபித்தோழர்களை ஆதரித்து, அரவணைத்து தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் பங்கிட்டு கொடுத்து,பரஸ்பர சகோதரத்துவத்தை அன்சாரி ஸஹாபாக்கள் பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஹிஜ்ரத் முக்கிய காரணியாக திகழ்ந்தது.
آية الإيمان حب الأنصار، و آية النفاق بغض الأنصار
இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பது; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளிடம் பகைமை பாராட்டுவது என்கின்ற எம்பெருமானாரின் அமுதமொழி அன்சாரிகளின் அளவிலா சிறப்பை எடுத்துரைக்கிறது.
இது மட்டுமல்ல;ஏராளமான இறை வசனங்களும்,இறைத்தூதரின் நபிமொழிகளும் அன்சாரிகளின் மகத்தவங்களை எடுத்துக் கூறுகின்றன.
தமது வீடுகளையும், சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட நாடு துறந்த (ஹிஜ்ரத் செய்த) ஏழைகளுக்கும் (அப்பொருளில் பங்குண்டு). அவர்கள் இறைவனிடமிருந்து அருளையும், திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள். அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (அப்பொருளில் பங்குண்டு). நாடு துறந்து (ஹிஜ்ரத் செய்து) தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ளமாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்’. (திருக்குர்ஆன் 59: 8,9)
அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ, ஒரு கணவாயிலோ நடந்து சென்றால், அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில்தான் நானும் நடந்து செல்வேன்;ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன் என நபி (ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
இப்படிப்பட்ட ஏராளமான சிறப்புகளுக்கு உரித்தானவர்களாக அன்சாரிகள் மாறியதற்கு அவர்கள் காட்டிய சகோதரத்துவ வாஞ்சை முக்கிய அடித்தளமாகும்.
*மூன்றாவது: மனப்பூர்வமான கீழ்படிதலாகும்*
இறைவனுக்கு கீழ்படியும்தன்மை முழுமை பெற்ற நிலையில்தான் ஹிஜ்ரத்திற்கான அர்ப்பணிப்புகளும்,தியாகங்களும் மேற்கொள்ளப்பட்டன.
மக்காவை பிரிந்து செல்லும்போது அண்ணலம் பெருமானார்(ஸல்)அவர்கள் மக்கமா நகரைப் பார்த்து மொழிந்த வரிகள் அதற்கான சான்றாகும்.
ஓ மக்காவே!
ஊர்களிலேயே எனக்குப் மிகப்பெரியமானது நீதான்!
இது அல்லாஹ்வின் கட்டளை என்ற அடிப்படையில்தான் உன்னை நான் பிரிகிறேன் என்ற பொருள்பட உத்தம நபி(ஸல்)அவர்கள் மக்காவைவிட்டு வெளியேறுகிறார்கள்.
ஹிஜ்ரா நிகழ்வு நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மற்றும் அவர்களது அருமை தோழர்களின் முழுமையான கீழ்படிதலின் வெளிப்பாடு என்பதை நாம் உணர வேண்டும்.
நபியவர்கள் மட்டுமல்ல;பயணத்தின் போது அவர்களுக்கு பக்கபலமாக நின்ற அவர்களது ஆருயிர் தோழர் அபூபக்கர் சித்தீக்(ரலி)அவர்களும் முழுமையான கீழ்ப்படிதலை வெளிப்படுத்தினார்கள்.
ஸவ்ர் குகையில் நபியவர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் பதறுகிறார்கள்;பயத்தினால் அல்ல,பெருமானாரை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.
அப்போதுதான் பின்வருமாறு ஆறுதல் சொன்னார்கள் அண்ணலம் பெருமானார்(ஸல்)அவர்கள்.
கவலைப்படாதீர்!
அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.
இதனைத் தொடர்ந்து அபூபக்கர்(ரலி) அவர்கள் பயணத்தின் வழிநெடுகிலும் பெருமானாரை பாதுகாக்கும் முயற்சியில் அவர்களுக்கு முன்னும்,பின்னும், வலப்பக்கமும்,இடப்பக்கமும் சுற்றி சுற்றி வந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.
அபூபக்கர் அவர்களே!
உங்களுக்கு என்ன நேர்ந்தது ஏன் இப்படி சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்று கேட்டபோது அல்லாஹ்வின் தூதரே!
எனக்கு ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் அது என்னோடு முடிந்து போகும்; நான் ஒற்றை மனிதன்;ஆனால் உங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் என்ற அடிப்படையில் தனது உணர்வை வெளிப்படுத்தினார்கள் கலீஃபா அபூபக்கர்(ரலி)அவர்கள்.
*கீழ்ப்படிதலுக்கு கிடைத்த கண்ணியங்கள்*
ஹிஜ்ரா பயணத்தில் மனப்பூர்வமான கீழ்படிதல் இருந்த காரணத்தால் முஸ்லிம்களுக்கு கிடைத்த பலன்களும்,கண்ணியங்களும் ஏராளம்.
இதனை உண்மைபடுத்தும் விதத்திலான செய்திகளை பின்வரும் இறை வசனம் தெளிவுபடுத்துகிறது;
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் : 9:40)
இந்த நிகழ்வை சமகால சூழல்களுடன் நாம் ஒப்பீடு செய்ய வேண்டும்
அண்ணலம் பெருமானார்(ஸல்) அவர்களும்,அவர்களது தோழர்களும் எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டார்களோ அதே எதிர்பார்ப்புகள் சமகால இந்திய முஸ்லிம்களுக்கும் இருக்கிறது.
இந்திய முஸ்லிம்கள் சமூக மாற்றம், சமூகத்தின் வளர்ச்சி,அமைதிக்கான அடித்தளம்,இறை உதவி ஆகிய எல்லாவற்றையும் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் அடைந்து கொள்வதற்கான முழுமையான கீழ்ப்படிதல் முஸ்லிம் சமூகத்திடம் உள்ளதா?என்பதுதான் சமூகத்தின் முன்னே உள்ள முக்கிய கேள்வியாகும்.
*இறுதியாக..*
இஸ்லாமிய வரலாறுகள் ஒவ்வொன்றிலும் கியாமத் வரை வரக்கூடிய மனித சமூகத்திற்கு பல பாடங்கள் உள்ளன;குறிப்பாக ஹிஜ்ரத் வரலாற்றை நினைவு கூறக்கூடிய இத்தருணத்தில் இந்த வரலாற்று நிகழ்வின் மூலம் அடைந்து கொள்ள வேண்டிய முப்பெரும் பாடங்களான அனைத்தையும் அல்லாஹ்விற்காக துறக்கும் மனப்பான்மையையும், சத்திய மார்க்கத்திற்காக தன்னிடமுள்ள சகல அருட்கொடைகளையும் பயன்படுத்தி மார்க்கத்தின் உதவியாளர்களாக நாம் மாறுவதையும், முழுமையான கீழ்படிகளுக்கு உரித்தானவர்களாக உருவாகிடும் பண்பினையும் பெற வேண்டும்.
சமகால சவாலான சூழலில் புதிய இஸ்லாமிய புத்தாண்டை அடைந்திருக்கும் நாம் ஹிஜ்ரா தரும் பாடங்களை நெஞ்சில் ஏந்தி பயணிப்போம்!
வளமான இஸ்லாமிய வரலாற்றை உருவாக்குவோம்!
அல்லாஹ் அருள் பாலிப்பானாக!!