நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, செப்டம்பர் 30, 2022

நபி நாயகம் வாழ்வில் சில வழி முறைகள்,

கருணையாளரே!



حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

அவர் உங்கள்மேல் அதிக அக்கறை கொண்டவர்; இறை நம்பிக்கையாளர்களிடம் மிகுந்த பரிவும் கருணையும் உள்ளவர் ஆவார். திருக்குர்ஆன்:- 9:128



இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இருக்கிறது. அவர்களின் நடைமுறைகள் அனைத்தும் மார்க்க ரீதியாக கட்டாயக் கடமை அல்ல. என்றாலும், அதுவும் மார்க்கத்தில் ஏவப்பட்டிருக்கிறது. தனது சமுதாயத்தினரின் சிரமத்தை குறைக்க தனக்கு விருப்பமான சில செயல்களையும் கூட அவ்வபோது அவர்கள் விட்டு விடுவதுண்டு. எனவே அண்ணலாரின் இந்த நடைமுறை சமுதாயத்தினர் மீது அக்கறையுள்ள தலைவருக்கான அடையாளமாகும்.



தராவீஹ் தொழுகை



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ரமளானில் ஒரு நாள்) நள்ளிரவில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்கள் சிலரும் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றிப்) பேசிக் கொண்டனர். (மறுநாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டுவிட்டனர். அண்ணலார் தொழ, அவர்களுடன் மக்களும் தொழுதனர். காலையில் (இதுகுறித்து) மக்கள் பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவு பள்ளிவாசலில் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அண்ணலார் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர்.



நான்காம் இரவில் பள்ளிவாசல் கொள்ளாத அளவிற்கு மக்கள் திரண்டனர் ஆனால் அண்ணலார் (இரவுத் தொழுகைக்கு வராமல்) சுப்ஹு தொழுகைக்கு தான் வந்தார்கள். சுப்ஹு தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, ஏகத்துவ உறுதி மொழிந்து, ( فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، وَلَكِنِّي خَشِيتُ أَنْ تُفْتَرَضَ عَلَيْكُمْ فَتَعْجِزُوا عَنْهَا ) "நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின் கூறுகிறேன். நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன்" எனக் கூறினார்கள். நூல்:- புகாரீ-2012, முஸ்லிம்-1431, அபூதாவூத்-1166



அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்ற வேண்டுமென்று விரும்பினார்கள். மூன்று நாட்கள் பள்ளிவாசலுக்கு வந்து அவர்கள் மக்களுக்கு இத்தொழுகையை நடத்தியது இதையே காட்டுகிறது. இருப்பினும் இது சமுதாயத்தின் மீது கட்டாயக் கடமை ஆகி விடுமோ என்ற அச்சத்தின் காரணத்தாலேயே ஜமாத்தைச் தொடராமல் விட்டார்கள். நபியவர்களின் இறப்புக்குப் பின்னால் இந்த அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது. எனவே, உமர் (ரலி) அவர்கள் (குர்ஆன் ஓதுவதில் சிறந்து விளங்கிய) உபை பின் கஅப் (ரலி) அவர்களின் தலைமையில் கூட்டாக மக்கள் தராவீஹை நிறைவேற்ற ஏற்பாடு செய்தார்கள். இது ஒரு நல்ல ஏற்பாடாக அமைந்தது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ



பல் துலக்குதல்



அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى الْمُؤْمِنِينَ- وَفِي حَدِيثِ زُهَيْرٍ عَلَى أُمَّتِي- لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ ) எனது சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்கும் அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-422, அபூதாவூத்-43, திர்மிதீ-22, நஸாயீ-7, இப்னுமாஜா-283



தம்மாம் பின் அல்அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சிலர் வந்தனர். அப்போது அண்ணலார் (வந்தவர்களிடம்), "என்ன பற்களில் மஞ்சள் கறை படிந்த நிலையில் நீங்கள் வந்திருப்பதை காணுகின்றேனே?" என வினவினார்கள்.



பின்னர் அண்ணலார், "(நன்கு) பல் துலக்குங்கள். என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (தொழுகைக்காக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டுமென்பதை அவர்களுக்கு நான் கடமையாக்கியதைப் போன்றே, பல் துலக்குவதையும் அவர்களுக்கு நான் நிச்சயம் கடமையாக்கியிருப்பேன்" என்று அவர்களிடம் கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1738



1. அங்கத்தூய்மை செய்யும் போது 2. தொழுகைக்காக நிற்கும் போது 3. குர்ஆன் ஓதும்போது 4. தூங்கி எழும்போது 5. நீண்டநேரம் சாப்பிடாததால், அல்லது துர்வாடை உள்ள பொருட்களை உட்கொண்டதால், அல்லது நீண்ட நேரம் வாய் மூடி இருந்ததால், அல்லது அதிகமாகப் பேசியதால் வாயில் வாடை வரும். ஆகிய ஐந்து சமயங்களில் பல் துலக்குவது மிகவும் விரும்பத்தக்க செயல் என அறிஞர்கள் கூறுகிறார்கள். நூல்:- அல்மின்ஹாஜ்




காலை எழுந்ததும் பல் துலக்கும் பழக்கம் எல்லா மக்களிடமும் உண்டு. காலைக் கடன் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஐந்து நேரத் தொழுகைக்காக உளூ செய்யும் போதெல்லாம் பல்துலக்கிட கட்டாயமாக்க விரும்பினார்கள். ஆனால் அது தன் சமுதாயத்தினர் மீது சிரமம் ஏற்பட்டு விடும் என்று அஞ்சி அதை தவிர்ந்து கொண்டார்கள். உடல் நலத்தை கருத்தில் கொண்டு தான் அண்ணலார் பல் துலக்குதலை வலியுறுத்த விரும்பினார்கள். 



எதையும் சாப்பிட்டதும் சாப்பிட்ட உணவின் துகள், இடுக்கினுள் இருந்து கொண்டு கிருமியாக மாறி விடுகிறது. இந்த கிருமி அப்படியே வயிற்றினுள் சென்று பல வியாதிகள் உருவாகக் காரணமாக அமைகிறது. நோய் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள 'பல்துலக்குதல்' பெரும் துணையாக அமையும் எனவேதான் பல் துலக்குவதை அண்ணலார் போதித்தார்கள். எனவே, உளூச் செய்யும்போது பல் துலக்குவது சுன்னத்தாகும்.



கஅபாவுக்குள்...



இறைநம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கு உமது (அன்பெனும்) சிறகைத் தாழ்த்துவீராக! திருக்குர்ஆன்:- 26:215



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கண் குளிர்ச்சியுடனும் மன மகிழ்வுடனும் என்னிடம் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டு, கவலையோடு என்னிடம் திரும்பி வந்தார்கள். அவர்களிடம் நான் (இதற்கான காரணத்தைக்) கேட்டேன். அப்போது அவர்கள், ( إِنِّي دَخَلْتُ الْكَعْبَةَ وَوَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ فَعَلْتُ إِنِّي أَخَافُ أَنْ أَكُونَ أَتْعَبْتُ أُمَّتِي مِنْ بَعْدِي ) "நான் கஅபாவுக்குள் சென்றேன். அவ்வாறு செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது விரும்புகிறேன். எனக்குப்பின் என் சமுதாயத்தாருக்கு நான் சிரமத்தை ஏற்படுத்தி விட்டேனோ என நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-799



அதாவது, நாம் கஅபாவுக்குள் சென்றதை அறிந்து, மக்கள் அனைவரும் அவ்வாறு செல்ல முனைந்தால் நெரிசல் காரணமாக பெரும் பிரச்சனை தோன்றிவிடுமோ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அஞ்சி இருக்கலாம் என்று தோன்றுகிறது.



இஷாத் தொழுகை



நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ أَنْ يُؤَخِّرُوا الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ نِصْفِهِ ) என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால் இஷாத் தொழுகையை இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை, அல்லது பாதி இரவு வரை தாமதப்படுத்தித்தான் தொழ வேண்டும் என நான் உத்தரவிட்டிருப்பேன். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல் புகாரீ-571, முஸ்லிம்-1122, அபூதாவூத்-42, திர்மிதீ-152



உங்களில் இறைநம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கின்றார். திருக்குர்ஆன்:- 9:61



இஷாத் தொழுகையின் நேரம் இரவின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் இத் தொழுகையை ஆரம்ப நேரத்திலும் தொழுதிருக்கிறார்கள். அதன் இறுதி நேரத்திலும் தொழுதிருக்கிறார்கள். ஆனால், அண்ணலார் இத்தொழுகையை பிந்திய நேரத்தில் தொழுவதைத்தான் விரும்பியுள்ளார்கள். ஆனாலும் தனது சமுதாயத்தினருக்கு சிரமம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் விரும்பிய நேரத்தில் தொழ வேண்டுமென்று உத்திரவிடவில்லை.



பாதி இரவு கழிந்த பின்னர் அல்லது இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்து பின்னர் தான் இஷாத் தொழ வேண்டும் என்று ஏவப்பட்டிருந்தால் நம்மில் பலருக்கும் இஷாத் தொழுகை தவறிவிடும் என்பது உறுதி.



சிறுநீர் கழிக்கும்போதெல்லாம்



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூஜாவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அண்ணலாருக்குப் பின்னால் நின்று கொண்டார்கள். அப்போது அண்ணலார், ( مَا هَذَا يَا عُمَرُ ) "உமரே என்ன (விஷயம்)?" என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "தாங்கள் (சிறுநீர் கழித்தபின்) தூய்மையை செய்து கொள்வதற்காக தண்ணீர் கொண்டு வந்துள்ளேன்" என்று கூறினார்கள்.



அதற்கு அண்ணலார், ( مَا أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً ) "சிறுநீர் கழிக்கும்போதெல்லாம் தண்ணீரால் தூய்மை செய்ய வேண்டும் என்று நான் கட்டளையிடப்படவில்லை. (மண்கட்டி மூலம் தூய்மை செய்து கொள்ள அனுமதி உள்ளது), ஒவ்வொரு முறையும் தண்ணீர் மூலம் நான் தூய்மை செய்தால் (என் சமுதாயத்தினருக்கு) அது கட்டாயமாகி விடும். (மண்கட்டி மூலம் தூய்மை செய்ய அனுமதி உள்ளது என்பது தெரியாமல் போய்விடும்)" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூது-38



சிறுநீர் கழித்த பின் அவசியம் சுத்தம் செய்ய வேண்டும். அதற்காக தண்ணீரைக் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல. தண்ணீரால் தூய்மை செய்வது நல்லது. இருந்தாலும், சுத்தமான மண் கட்டியைக் கொண்டும் சுத்தம் செய்யலாம் என்பதையே இந்த நபிமொழி விவரிக்கிறது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல் அனைத்தையும் நாம் முறையாக கடைப்பிடித்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெறுவோமாக! ஆமீன்!

பிரபல்யமான பதிவுகள்