நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற ஒரு சில தினங்களில் சாசனம் ஒன்றை வெளியிட்டார்கள். அது மதீனாச் சாசனம் என்று அழைக்கப்படுகிறது. அதில் கூறப்பட்டிருக்கும் பல செய்திகளில் ஒரு செய்தி என்னவென்றால் “யாரெல்லாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கவில்லையோ அவர்களும் முஸ்லிம்களும் ஒரே சமூகமாகும்”.
இதன் அடிப்படையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களிடம் பகைமை கொள்ளாத மக்களுடன் முஸ்லிம்கள் சகோதரப் பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டால் இவர்களும் இவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களும் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து அநீதியைத் தடுக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கும் இதர மக்களுக்குமிடையில் இப்படியொரு ஐக்கியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆதிக்க சக்திகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. இவர்களுக்கிடையே பகைமையையும் மோதல்களையும் ஏற்படுத்தி நீதியை நிலைநாட்டும் சக்தி உலகில் உருவாகிவிடாமல் பார்த்துக் கொள்கின்றன.
இந்தக் கோணத்திலேயே உலகில் நடக்கும் பல பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக பர்மாவில் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலையையும் இந்தக் கோணத்திலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பர்மா என்றழைக்கப்படும் தேசம் இந்தியா, வங்தேசம், சீனா, தாய்லாந்து, லாவொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கரைகளில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய நாடு. மருத்துவம், சுகாதாரத்தில் ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில் உள்ள நாடு. மனித உரிமை மீறல்கள், குழந்தை தொழிலாளர்கள், ஆள்கடத்தல், பேச்சுரிமை மறுப்பு ஆகியவற்றில் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நாடு.
அங்கு சுமார் 130 இன மக்கள் வாழ்கின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையினராக பௌத்தர்களும். சிறுபான்மையினராக முஸ்லிம்களும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மற்றும் பழங்குடியினரும் வாழ்கின்றனர். பர்மாவில் வாழும் 6 கோடி மக்களில் முஸ்லிம்கள் 10 சதவீதம் உள்ளனர். இதில் ராக்கினே என்றும் அராகான் என்றும் அழைக்கப்படுகிற மாகாணத்தில்தான் முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்கள் ரோஹிங்க்ய முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களே இன்றைக்கு பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
1300 ஆண்டுகளுக்கு முன்பே பர்மா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. நபி (ஸல்) அவர்களின் மார்க்கத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு நபித் தோழர்கள் பல கண்டங்கள், பல கடல்கள் தாண்டிச் சென்றனர். அதனடிப்படையில் பர்மா மக்களிடையே இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக வந்திறங்கியவர் முஹம்மது இப்னு அல் ஹனஃபிய்யா. இவர் ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டு (கி.பி.680) பர்மாவின் முதல் முஸ்லிமாக தனது காலடியை எடுத்து வைத்தார். இவரைத் தொடர்ந்து துருக்கி, பாரசீகம், அரேபிய தீபகற்பம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் பர்மாவுக்கு வரத் தொடங்கினர்.
முஸ்லிம்களின் வருகையாலும் அவர்களின் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொண்டதாலும் பல பூர்வீக பர்மா மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
அங்குள்ள பூர்வீக மக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலமாக முஸ்லிம்கள் பர்மாவோடும் அதன் மக்களோடும் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்டனர்.
பர்மாவின் முதல் புத்த சாம்ராஜ்ஜியம் 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதில் முதலில் உருவானது பாகன் சாம்ராஜ்ஜியம். புத்த சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்திற்குப் பிறகு தான் புத்த பிட்சுகளின் மதவெறியாட்டமும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடங்கின. மன்னான் யசாவின் (Hmannan Yazawin) எனப்படும் பர்மாவின் அரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேட்டில் புத்த சாம்ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் வருகையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்குறிப்பேட்டின்படி கி.பி. 1055ஆம் ஆண்டு பயாத் குடும்பத்தைச் சார்ந்த பயாத் வி, பயாத் தா எனப்படும் இரு அரேபிய முஸ்லிம் சகோதர மாலுமிகளின் கப்பல் நடுக்கடலில் சேதமாகி தண்ணீரில் மூழ்கியதால் அருகில் உள்ள தாடன் எனும் கடற்கரை நகருக்கு தப்பிச் சென்றனர். அந்த ஊரைச் சார்ந்தவர்கள் அவர்களை யானை பலம் உடையவர்கள் என்று கூறினர். இதைக் கேட்ட தாடனின் மன்னன் இவர்களால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி இரு சகோதரர்களில் ஒருவரை தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கொன்று விட்டான். இவரே புத்த சாம்ராஜ்ஜியத்தால் கொல்லப்பட்ட முதல் முஸ்லிம் ஆவார். மற்றொரு சகோதரர் பயத் தா தப்பி ஓடி பாகன் சாம்ராஜ்ஜியத்தின் அரசன் அனவ்ரஹ்தாவிடம் தஞ்சம் புகுந்து அரசனிடமே வேலை செய்தார். அவர் பொபா என்ற இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஷ்வே, பியின் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இரு மகன்களைப் பெற்றெடுத்தார்.