நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், பிப்ரவரி 16, 2017

முதியோரை பற்றி இஸ்லாம்,

முதியோர் இல்லத்திற்கு

பணம் கொடு

பொருள் கொடு

உணவு கொடு

உடை கொடு

உன் பெற்றோரை

கொடுத்து விடாதே!

இந்த கவிதை படித்ததில் பிடித்தது உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை நோக்கிச் செல்கின்ற தன் பயணத்தின் இறுதியில் சந்திக்கின்ற காலகட்டம் தான் முதுமை! அதன் காரணமாகவே வயோதிகம் மரணத்தின் முன்னறிவிப்பு போன்றதாகும் என்றும் நரையும் மூப்பும் மரணத்தின் தூதுவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. எல்லா நாடுகளிலும் பன்னெடுங்காலமாக முதுமைக்கும், முதியவர்களுக்கும் கொடுத்து வந்த முக்கியத்துவம், கண்ணியம், மரியாதை ஆகியவை நாகரீக உலகம் என்று சொல்லப்படுகிற இன்றைய அவசர காலகட்டத்தில் பெயரளவுக்குக் கூட கொடுக்கப்படாமல் முதியவர்கள் தங்களுடைய பிள்ளைகளாலேயே ஓரங்கட்டப்பட்டு, இறைவா! எங்களை சீக்கிரமாக அழைத்துக் கொள்! என்று மரணத்தை வேண்டி துஆச் செய்பவர்களாக இருப்பதைக் காணமுடிகிறது. பிள்ளைகளும், உற்றார் உறவினர்களும் கவனிக்காத காரணத்தால் ஏராளமான முதியவர்கள் பிச்சை எடுப்பவர்களாக மாறி வருவதும் நாம் அறிந்திருக்கின்ற எதார்த்த உண்மையாகும்.  

 இன்றைய  இலவச முதியோர் இல்லங்களில் இடமே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த அளவுக்கு எல்லா இலவச முதியோர் இல்லங்களும் நிரம்பி வழிகின்றன. மதுரையில் அதிகபட்சம் 50 பேர் வரை தங்க முடியும் ஒரு இலவச முதியோர் இல்லத்துக்கு தினந்தோறும் குறைந்தது 50 பேர் வரை தங்களை சேர்த்துக்கொள்ளும்படி கோரி முதியவர்கள் வந்து திரும்பிச் செல்வதாக கூறுகிறார் அந்த இலவச முதியோர் இல்லத்தின் காப்பாளர் ஷர்மிளா.

இஸ்லாமும் முதியவர்களும்

       முதுமை அனைவருக்கும் சொந்தம்

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம் இந்த மூன்று பருவத்தையும் மனிதர்கள் அனைவரும் சந்தித்தாக வேண்டும்  

அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை படைத்தான். பிறகு பலவீனத்திற்குப் பின் (உங்களுக்குச்) சக்தியை (வாலிபத்தை) உண்டாக்கினான். அந்தப் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் (முதுமையின்) நரையையும் இறைவன் ஆக்கினான். திருக்குர்ஆன் (30:54)

அதிகாலையிலும், அந்தி மாலையிலும் ஒரு சில குறிப்பிட்ட பிரார்த்தனைகளை வழமையாக செய்பவர்களாக இருந்தார்கள். அதிலே ‘இறைவா, மோசமான முதுமையை விட்டு உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’எனவும் தினம் தினம் பிரார்த்தனை செய்துவந்தார்கள் செய்தார்கள்

 

முதியவர்களை கண்ணியப்படுத்துதல்

  وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏ 

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக

 

நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் சிலர் வந்திருந்தபோது அவர்களில் சிறிய வயதுடைய அப்துர் ரஹமான் இப்னு ஸஹல் (ரழி) பேச ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''பெரியவர்களுக்கு மரியாதை கொடு''என்றார்கள். அப்துர் ரஹமான் (ரழி) அவர்கள் மெªனமானார். பிறகு வயதில் மூத்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசினர்.

ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ''நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவர்களிடமிருந்து (ஹதீஸ்களை) மனனமிட்டிருந்தேன். அதை நான் வெளியே சொல்லத் தடையாக இருந்ததெல்லாம் அங்கு என்னைவிட வயதில் மூத்த பெரியவர்கள் இருந்தார்கள் என்பதுதான்''. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

 

யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் (மார்க்க) அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத்தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

நிகழ்வு-1 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தார்கள். அங்கு அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்திருந்தும் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக இப்னு உமர் (ரழி) மெªனமாக இருந்து விட்டார்கள்.

 

இது பற்றி இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ''எனக்கு ஒரு மரத்தைப்பற்றி அறிவியுங்கள். அது முஸ்லிமுக்கு உதாரணமாகும். இரட்சகனின் உத்தரவுப்படி எல்லா நேரங்களிலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் இலைகள் உதிர்வதில்லை (அது என்ன மரம்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். என் மனதில் அது 'பேரீச்ச மரம்' என்று தோன்றியது. அந்த இடத்தில் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்ததால் அதைக் கூறத் தயங்கினேன். அந்த இருவரும் பேசாமலிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ''அது பேரீச்ச மரம்'' என்று கூறினார்கள். என் தந்தையுடன் வெளியே வந்தபோது ''எனது தந்தையே என் மனதில் 'பேரீச்சமரம்' என்று தோன்றியது'' என்றேன். அவர்கள் ''அதைச் சொல்லாமல் உன்னைத் தடுத்தது எது?'' அதை நீ கூறியிருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே'' என்றார்கள். ''உங்களையும், அபூபக்கர் (ரழி) அவர்களையும் பேசாமலிருக்கக் கண்டேன். எனவே நான் அதைக் கூற விரும்பவில்லை என்று கூறினேன்'' என இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''முஸ்லிமான வயோதிகரையும், குர்ஆனை அறிந்து அதில் வரம்பு மீறாமலும்,அதைப் புறக்கணிக்காமலும் இருப்பவரையும், நீதம் செலுத்தும் அதிகாரியையும் கண்ணியப் படுத்துவது அல்லாஹவைக் கண்ணியப்படுத்துவதில் கட்டுப்பட்டதாகும்.'' (ஸுனன் அபூதாவூத்)

ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாக கஃப் இப்னு உஜ்ரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்; எங்களை நோக்கி அனைவரும் மிம்பருக்கருகில் வாருங்கள்! என்று கூறினார்கள். நாங்கள் அங்கு ஓடினோம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிம்பரின் முதல் படியில் கால்வைத்து ஏறியவுடன் ஆமீன் என்று கூறினார்கள். பிறகு இரண்டாவது படியில் எரிய பிறகும் ஆமீன் என்று கூறினார்கள். பின்னர் மூன்றாவது படியில் ஏறிய போதும் ஆமீன் என்று கூறினார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களுடைய உபதேசத்தை முடித்துக்கொண்டு கீழே இறங்கிய போது, யா ரஸுலுல்லாஹ்! இன்று நாங்கள் தங்களிடமிருந்து என்றும் செவியுறாத ஒரு விஷயத்தை செவியுற்றோமே! என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நான் முதற்படியில் கால்வைத்து ஏறியபோது ஹஸ்ரத் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் என் முன்தோற்றமளித்து, எந்த மனிதன் ரமழான் மாதத்தை அடைந்தும் தன் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறவில்லையோ, அவன் நாசமடைவானாக! என்று கூறினார்கள். நான் ஆமீன் என்று கூறினேன். பிறகு இரண்டாவது படியில் ஏறிய போது (நபியே!) தங்களின் திருநாமம் கூறப்பட்டு தங்களின் மீது ஸலவாத்துச் சொல்லாத மனிதன் நாசமடைவானாக! என்று கூறினார்கள். நான் ஆமீன் என்றேன். மூன்றாவது படியில் ஏறிய போது எந்த மனிதன் வயோதிகம் அடைந்த தன் தாய், தந்தை இருவரையோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்திருந்து அவர்கள் அவனை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யவில்லையோ அவன் நாசமடைவானாக! என்று கூறினார்கள். நான் ஆமீன் என்று கூறினேன் எனப் பதிலளித்தார்கள்.

‘ஒரு இளைஞன் ஒரு முதியவரின் வயதிற்கு கண்ணியம் செய்தால், அந்த இளைஞனுக்கு அவனின் வயோதிகத்தில் அவனை கண்ணியம் செய்யக் கூடிய ஒரு நபரை இறைவனே ஏற்படுத்துகிறான்’ என்றார்கள் நாயகம்.

நிகழ்வு-2

ஒரு நாள் ஹஸ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்த பொழுது அவருடைய முகம் சற்று மாறுதல் ஏற்பட்டுள்ளதே! என்ன காரணம்? என்று கேட்டார்கள். ஒன்றுமில்லையே இறைவனின் தூதரே! என்றார்கள் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். இல்லை! ஏதோ ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது போன்று தெரிகிறதே! என்ன அது? என்று மீண்டும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கேட்ட பொழுது அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்: நான் இங்கு வந்து கொண்டிருக்கும் பொழுது வழியில் எனக்கு முன்னாள் ஒரு யூதப் பெரியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். முஸ்லிமல்லாத இந்த யூதருக்குப் பின்னால் எவ்வளவு நேரம் சென்று கொண்டிருப்பது என்று நினைத்து அவரை முந்திக் கொண்டு வந்தேன். வழி குறுகலாக இருந்ததால் அவர் மீது என் உடல் மோதிவிட்டது. இதுதான் நடந்தது என்று கூறினார்கள்.இதனைக் கேட்ட அவர்கள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்; அலியே! நீர் பெரிய தவறு செய்து விட்டீர். உம்மை விட வயதில் மூத்தவருக்கு மரியாதை தராமல் அவரை உராய்ந்து கொண்டு முந்தி வந்திருக்கிறீர்கள். அந்த நேரத்தில் அவருடைய மனம் வருத்தமடைந்திருக்கும் எனவே, உடனே அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு வருவீராக! என்று பணித்தார்கள்.

 

முதியவர்களிடம் ஆலோசனை செய்தல்

 

மூத்தோர் சொல் அமிழ்தம்’ என்பது பழமொழி. உண்மை தான். ‘அறிவாளியிடம் கேட்பதை விட ஒரு அனுபவசாலியிடம் கேள்’ என அரபியிலே ஒரு பழமொழி உண்டு. இவ்வுலகத்தின் சகல காரியங்களிலும் முதிர்ச்சியை நல்ல அனுபவத்தைக் கொண்டவர்கள் முதியோர்கள் மட்டுமே. முதியோர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது உலகிற்கான உயிர் நாடியாகும்.

சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.3: 159

 

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். 42:38.

 

முதியவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் அவர்களை பாதுகாப்பதும்

 

ஒரு முறை அபூபக்கர் (ரலி) அவர்கள் வயது முதிர்ந்த தனது தந்தை அபூகுஹாபா அவர்களை இஸ்லாத்தைத் தழுவும் பொருட்டு பெருமானாரிடம் அழைத்து வருகிறார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் வயது முதிர்ந்த தந்தையைப் பார்த்த நாயகம் (ஸல்) அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் நம் ஆழ்மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.‘அபூபக்கரே, வயது முதிர்ந்த இவர்களை வீட்டிலே விட்டு விட்டு வந்திருக்கலாமே? நான் வந்து சந்தித்து இருப்பனே’ என்றார்கள் நாயகம்.‘யா ரசூலல்லாஹ், நீங்கள் என் தந்தையை வந்து சந்திப்பதை விட என் தந்தை உங்களை வந்து சந்திப்பது தான் ஏற்றமான செயலாகும்’ என அபூபக்கர் (ரலி) அவர்கள் பதிலுரைத்தார்கள்.

 

ஒரு நாள் வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் பெருமானாரை சந்திக்க வருகைத் தருகிறார். அங்கு கூட்டமாக அமர்ந்திருந்த நபர்களோ அம்முதியவருக்கு வழி விடாமல் தாமதப்படுத்தினார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த நாயகம் (ஸல்) அவர்கள் உடனே நபித்தோழர்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள்.

((مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا‘யார் சிறியோர்களுக்கு இரக்கமும், முதியோருக்கு மரியாதையும் செய்யவில்லையோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல’ என்றார்கள் நாயகம்.

 

பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.  4:75.

 

முதியவர்களுக்கு உதவி செய்தல்

 

தனது பெற்றோருக்கு - (முதியோராகிவிட்ட நிலையில்) நன்மை செய்து வருமாறு மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம். அவனது தாய் அவனை பலவீனத்தி்ன் மீது பலவீனமாகச் சுமந்திருந்தாள்.மேலும், அவனுக்கு பால்குடி மறத்தல் இரண்டு ஆண்டுகளில் உள்ளது. (ஆகவே) எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே மீளுதல் உள்ளது“.(அல்குர்ஆன் - 31 : 14)

 

மேலும் அறிய வாருங்கள

அல்சர் அவதியா,

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு! - 

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் tஇருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
கடைப்பிடிக்க வேண்டியவை:
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

அல்சர் கஷ்டமா..வாங்க!

பிரபல்யமான பதிவுகள்