எகிப்தில் கிப்திகள், பனூ இஸ்ரவேலர்கள் என்ற இரு சமூகத்தார் வசித்து வந்தனர். இவர்களில் கிப்திகள் நன்றாக வசதியாக வாழ்ந்தனர். ஏழ்மையாக இருந்த பனூ இஸ்ரவேலர்களை அவர்கள் அடக்கி ஆண்டு வந்தனர். இந்த கிப்திகளின் வம்சத்தைச் சார்ந்தவன்தான் அந்நாட்டின் அரசன் பிர்அவ்ன். பிர்அவ்ன் என்றால் சூரிய புத்திரன் என்றும் பொருள் கொள்ளலாம். எகிப்தை ஆண்ட அரசர்களுக்கு பிர்அவ்ன் என்று பெயர் சொல்லப்படுவது உண்டு.
மூஸா நபி காலத்திலிருந்த பிர்அவ்னின் இயற்பெயர் காபூஸ் இப்னு வலீத் இப்னு முஸ்அப் இப்னு ரியான் என்பதாகும். இவன் 600 வருடங்கள் வாழ்ந்திருந்தான். இதில் 400 வருடங்கள் அரசாட்சி செய்வதில் காலம் கழித்தான்.
இந்த பிர்அவ்ன் தன்னைப் போல் ஒரு சிலையை வடித்து அதனையே மக்களை வணங்கி வருமாறு உத்திரவு பிறப்பித்தான். எப்போது தன்னை இறைவன் என்று இவன் வாதித்தானோ அப்போதெ இவனது முகம் விகாரமாகிவிட்டது. நைல் நதி வற்றி விட்டது. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவனிடம் வந்து நீதான் இறைவன் என்று சொல்கிறாயே! நதியில் தண்ணீர் ஓடச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முறையிட்டார்கள். பிர்அவன் முதலில் திகைத்து> பின்பு சமாளித்துக் கொண்டு அவசியம் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மக்களை சமாளித்துவிட்டு ஒரு மலைக்குச் சென்று இறைவனிடம், ‘இறைவனே! நீதான் உண்மையாக வணங்கத் தகுதியுடையவன். நான் பொய்மையிலிருக்கிறேன். மறுமையில் எனக்கு எந்த நலவும் வேண்டாம். இம்மையிலேயே எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விடு. வற்றிவிட்ட நைல்நதி மீது மீண்டும் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடச் செய்’ என்று கேட்டு பிரார்த்தித்தான்.
அச்சமயத்தில் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிர்அவ்ன் முன் மனித உருவில் தோன்றி, தன் எஜமானின் அருட்கொடைகளை மறந்து நன்றி கெட்டத்தனமாக நடக்கும் மனிதருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு பிர்அவ்ன், அவனை கடலில் மூழ்கடித்துச் சாகச் செய்ய வேண்டும்’ என்று ஆத்திரம் பொங்க கூறினான். பிர்அவ்னிடமிருந்து அதை எழுத்து மூலமாக வாங்கிக் கொண்டார்கள். பிர்அவ்ன் இவ்வாறு எழுதிக் கொடுத்த சமயத்தில் ‘ஓ! பிர்அவ்னே! உனக்கு நைல்நதி மீது ஆதிக்கம் செலுத்தி வரும் ஆற்றலைத் தந்தோம்’ என்று அசரீரி கேட்டது. இந்த சப்தத்தை எகிப்து வாசிகள் அனைவரும் கேட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது.
பனூ இஸ்ரவேலர்களில் இம்ரான் இப்னு எங்கா என்பவரின் அறிவுத்திறமையைக் கண்டு வியந்த பிர்அவ்ன் அவரை தம் அவையில் ஒரு பெரும் பதவி தந்து அமர்த்திக் கொண்டான். அவருக்கு முராஹூம் என்ற ஒரு சகோதரர் இருந்தார். அவரின் மகள்தான் ஆசியா அம்மையார். இந்த அம்மையார் மிகவும் அழகானவர்கள். இறைதியானத்தில் சிறந்து விளங்கினார். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு (அத்தை) மாமி முறையாக இருந்தார்கள். இவரது பேரழகைக் கேள்விப்பட்ட பிர்அவ்ன் இவரை தம் மனைவியாக்க விருப்பப்பட்டான். ஆனால் ஆசியா அம்மையாருக்கு அவனை பிடிக்கவில்லை. ஆனாலும் அவரது விருப்பத்திற்கு மாறாக பிர்அவ்னுடன் திருமணம் நடந்தேறியது.
பிர்அவ்னுக்கும், ஆசியா அம்மையாருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையும் நோயாளியாகவே இருந்து பெரியவளானதும் குஷ்டரோகியாக மாறிவிட்டது.
ஆசியா அம்மையார் பிர்அவ்னின் உறவிலிருந்து விலகியிருக்க விரும்பி ஆண்டவிடம் துஆ கேட்டார்கள். அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்றுக் கொண்டான். அவன் ஆசியா அம்மையாரை உறவு கொள்ள நினைக்கும்போது அவனுக்கு ஆண்மை இழந்து விடும். எனவே அந்த அம்மையாரை கண்களால் பார்த்து ரசித்தவாறே காலம் கடத்தி வந்தான்.
பிர்அவ்னுக்கு கெட்ட கெட்ட கனவுகள் வந்து கொண்டிருந்தன. தம் நாட்டிலுள்ள ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும் கலந்து இதற்கு விளக்கம் கேட்டான். அவர்கள் தங்கள் தேவதைகளிடம் கேட்டதில் இன்ன தேதியில், இன்ன நேரத்தில் பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் ஓர்ஆண் குழந்தை தரிக்கப் போகிறது. அந்தக் குழந்தை பெரியவனாகி பிர்அவ்னையும், அவனது ஆட்சியையும், கிப்தி சமுதாயத்தையும் பூண்டோடு அழித்து விடும். கர்ப்பம் தரிக்கப்படும் இரவு வெள்ளி இரவாகும் என்று சொன்னார்கள்.
இதைக் கேட்ட பிர்அவன் நிலை குலைந்து போனான். இறுதியாக பனீ இஸ்ராயீல்களுக்கு பிறக்கு ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்று தீர்க்கும் முடிவுக்கு வந்தான். இதன் காரணமாக 12000 நிறைமாத கர்ப்பிணிகள் கொல்லப்பட்டனரென்றும்> சுமார் 90000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. இச்சமயத்தில் பிளேக் நோய் ஏற்பட்டு பனீ இஸ்ராயீல்கள் அழிந்து போயினர். இவ்வாறு அவர்கள் அழிந்து பட்டால் தங்களுக்கு ஊழியம் செய்ய யாருமில்லாமல் போய் விடுவார்கள் என்று எண்ணி கிப்தியர்கள், பிர்அவ்னிடம் முறையிட்டார்கள். அவனும் ஜோசியர்களை கலந்து ஆலோசித்து குழந்தை எப்போது பிறக்கும் என்று கேட்டான். அவர்களும் கணக்குப் போட்டு பார்த்து விட்டு சுமார் 3 ஆண்டுகளுக்குள் குழந்தை பிறக்கலாம் என்றனர். இதனால் 6 மாத காலத்;தில் ;பிறக்கும் ஆண் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்றும்> அடுத்த 6 ஆறுமாத காலத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளை விட்டு வைக்க வேண்டும் என்று பிர்அவ்ன் உத்தரவிட்டான்.
இவ்வாறு விட்டு வைக்கப்பட்ட ஆறு மாத காலக் கெடுவில்தான் இம்ரானுக்கு ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. இம்ரானுக்கு மர்யம் எள்ற பெயருடன் ஒரு பெண் மகவும் இருந்தார். பிர்அவ்னுடைய விசேச பணியாளர்களில் இம்ரானும் ஒருவராக இருந்தார். இம்ரான் பனீஇஸ்ராயீலைச் சார்ந்தவர் என்பது பிர்அவ்னுக்குத் தெரியாது.
இம்ரான் ஹழ்ரத் யகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குமாரர் லாவாவின் வழிவந்தவர் என்றும், ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது ஏழாவது தலைமுறையில் வந்தவர்கள் என்றும் தெரிகிறது.
ஃபிர்அவ்னையும், அவனது ஆட்சியையும் ஒழித்துக் கட்டப்போகும் குழந்தை இன்று இரவு தரிக்கப் போகிறது என்ற செய்தி குறிகாரர்கள் மூலம் பிர்அவ்னுக்குத் தெரியவந்தபோது, அன்றிரவு நகரிலுள்ள அத்தனை ஆண்களையும் நகரை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும், யாராவது ஒரு ஆண் வீட்டில் தங்கினாலும் கூட சிரச் சேதம் செய்யப்படுவார் என்றும் நகரெங்கும் பறைசாற்றி அறிவிக்க கட்டளையிட்டான். இம்ரானை அழைத்து> அவரை அரண்மனையின் பிரதான வாயில்படி முன் காவல் காக்க கட்டளையிட்டான் பிர்அவ்ன்.
தம் கணவரிடம் முக்கியமான விசயத்தை தெரிவிக்க இம்ரானின் மனைவி யூகானிதா அவரைத் தேடிக் கொண்டு அரண்மனைக்கு வந்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையால் இருவருக்கும் விரகதாபம் ஏற்பட்டு உறவு வைத்தனர் அல்லாஹ்வின் நாட்டப்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாயின் கர்ப்பத்தில் வந்து விட்டார்கள்.
குறிகாரர்களுக்கும், ஜோதிடர்களுக்கும் தாயின் வயிற்றில் மூஸா அலைஹிஸ்ஸலாம் வந்தது தெரியவந்தது. அதை பிர்அவ்னிடம் சொன்னார்கள். கோபத்தின் உச்சிக்கே சென்ற அவன் அன்றிலிருந்து ஒருவருடம் பிறக்கும் குழந்தைகளை கொல்ல உத்தரவிட்டான். வீடு வீடாக சென்று பரிசோதிக்கவும் கட்டளையிட்டான். இம்ரான் பிர்அவ்னின் ஊழியராக இருந்ததால் யாரும் அவரை சந்தேகிக்கவில்லை. அவர் வீட்டை சோதிக்கவும் இல்லை.
இறுதியாக யூகானிதா ரமலான் பிறை 22 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். யூகானிதாவின் சகோதரியே அருகிலிருந்து அவருக்கு உதவி செய்தார். குழந்தையின் அழகு காண்போரை சொக்க வைத்தது. அது பிறந்ததேதி பிர்அவ்னுக்கு தெரிந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைக்கும்போது அவருக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.
இம்ரானுடைய மனைவிக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது என்ற செய்தி எப்படியோ பிர்அவ்னுடைய சிப்பாய்களுக்கு தெரிந்து அவர் வீட்டை சோதனையிட உள்ளே நுழைந்தனர்.
இதற்கிடையில் தம் வீட்டை சோதனையிடப் போகிறார்கள் என்றதும்> அந்த குழந்தையை ஒரு பானைக்குள் போட்டு வைத்தார்கள். அப்பானை தீப்பற்றி எரியும் அடுப்பில் இருந்தது. சிப்பாய்கள் பல இடங்களிலும் தேடிப்பார்த்து விட்டு குழந்தை இல்லை என்றதும் போய் விட்டார்கள். பின்னர் குழந்தை இருந்த பானையை பார்த்தபோது குழந்தை கை, கால்கைள ஆட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்து கண்டு மிகவும் சந்தோசமுற்றார்கள். ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்து 40 நாட்கள் ஆயின. யூகானிதாவுக்கு வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது. ‘குழந்தையை பாலூட்டி நல்லவிதமாக வளர்த்து வரவும். அதன் உயிருக்கு யாராலும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது. அவ்வாறு குழந்தையை பாதுகாப்பதில் அச்சம் ஏற்பட்டால் அக்குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நைல்நதியில் விட்டுவிடவும். சில நாட்களுக்குப் பின் அக்குழந்தை உம்மிடமே வந்து சேரும்’ என்று.
யூகானிதா கிஜ்பீலு என்ற தச்சரை அணுகி ஒரு பெட்டி தயார் செய்து அதில் குழந்தையை வைத்து நைல்நதியில் விட்டாள். இந்த கிஜ்பீலு மூஸா நபியை விசுவாசித்த முதல் முஸ்லிம் ஆவார். அந்த பெட்டி போகும் திசையை தம் மகள் மர்யம் மூலம் அறிய ஏற்பாடு செய்தாள். அப்பெட்டி மிதந்து கொண்டு சென்று பிர்அவ்னின் அரண்மனைக்கு அருகிலிருந்த கரையில் ஒதுங்கியது. அச்சமயம் பிர்அவ்ன், ஆசியா அம்மையார், அவள் மகள் ஆகியோர் அங்கிருந்தனர். மரப்பெட்டியைக் கண்ட அவள் மகள் அதிலிருந்த குழந்தையை எடுத்து தம் மார்போடு அணைத்துக் கொண்டாள். அதனால் அவளைப் பீடித்துக் கொண்டிருந்த குஷ்ட நோய் முற்றிலும் குணமானது.
இந்த அற்புதத்தைக் கண்ட பிர்அவ்னும், ஆசியாவும் மிகவும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். குழந்தை பிர்அவ்னிடம் சேர்ந்ததும் அதை யூகானிதாவின் மகள் மர்யம் தம் தாயிடம் சொன்னாள். அதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
அல்லாஹ் இதைத் தன் திருமறையில்…
28:8. (நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும்,ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.
28:9. இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது – இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
28:10. மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால்> அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
28:11. இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.
28:12. நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: “உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.”
என்று அல்-குர்ஆன் 28: 8-12 ல் குறிப்பிட்டுள்ளான்.
குழந்தை மரப்பெட்டியில் வைத்து வந்ததால் மூஷா என்று பெயர் வைத்தார்கள் ஆசியா அம்மையார். ஹீப்ரு மொழியில் ‘மூ’ என்றால், தண்ணீர் என்று பொருள். ‘ஷா’ என்றால் மரம் என்று பொருள். அறபி மொழியில் மூஷா என்ற பெயர் மருவி மூஸா என்று ஆகிவிட்டதாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது.
குழந்தைக்குப் பாலூட்ட செவிலித்தாயை ஏற்பாடு செய்ய நினைத்தான் பிர்அவ்ன். இறுதியில் மூஸா நபியின் தாயாரே அந்த செவிலித்தாயாக வந்து சேர்ந்தார்கள்.
20:38. “உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!
20:39. அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.
20:40. (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.
இதை அல்லாஹ் அல்குர்ஆன் 20:38-40 ல் கூறுகிறான்.
இரண்டு வருடங்கள் போனபின், பிர்அவ்னின் மடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிர்அவ்னின் தாடியைப் பிடித்து இழுத்ததோடு, அவனது கன்னத்தில் அறைந்தும் விட்டது. இதனால் கடும் கோபம் கொண்டான். குழந்தையை கொல்ல நினைத்தான். ஆனால் குழந்தைதானே. அதற்கு என்ன தெரியப் போகிறது என்று சொல்லி மின்னும் மாணிக்கத்தையும், ஜொலிக்கும் நெருப்புக் கங்குகளையும் அருகருகே குழந்தை முன் வைத்தாள். அக்குழந்தை தவழ்ந்து சென்று தனது கையை மாணிக்கம் வைக்கப்பட்டிருந்த பக்கம் கொண்டு சென்றது. ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தக் கையை நெருப்புக் கங்கின் மீது திருப்பிவிட்டார்கள். குழந்தை அதை எடுத்து தம் வாயில் போட்டு விட்டது. கையும் வெந்து, நாக்கும் வெந்து போனது. அதனால்தான் மூஸா நபி அவர்களுக்கு கொன்னல் ஏற்பட்டது. பிர்அவ்ன் எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அவனால் அந்த நோயைக் குணமாக்க முடியவில்லை.
இருபது வயது கொண்ட வாலிபராக மூஸா நபி இருக்கும்போது ஒரு வீதி வழியே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கிப்தி இனத்தைச் சார்ந்த கலான் என்பவனுக்கும், பனீ இஸ்ராயீல் இனத்தைச் சார்ந்த ஸாமிரிக்கும் வாய்ச்சண்டை ஆரம்பமாகி கைச் சண்டையாக மாறிக் கொண்டிருந்தது.
இருவரின் சண்டடை அவ்வழியே சென்று கொண்டிருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் வந்தது. கலான் பனீ இஸ்ராயீலுக்காக பரிந்து பேச வந்துவிட்டதாக சொல்லி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தள்ளி விட்டான். ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. அந்தக் கலானை நோக்கி ஒரு குத்து விட்டார்கள். அவ்வளவுதான். அந்தக் குத்தை தாங்கமாட்டாது அவன் அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போனான். இதை சற்றும் எதிர்பாராத மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டார்கள். இவ்விஷயம் யாருக்கும் தெரியாது.
மறுநாள் வேறொரு வழியாக மூஸா நபி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்படிப் போகும்போது ஸாமிரி மற்றொரு கிப்தியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அதை விலக்கப் போன மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயந்து ஸாமிரி அலறி அடித்துக் கொண்டு நேற்று நடந்த விபரீதம் யாரால் நடந்தது என்பதை சப்தமிட்டுக் கொண்டே தெரியப்படுத்திக் கொண்டு ஓடஆரம்பித்தான். இது பிர்அவ்னுக்கும் தெரியவந்தது.
இதனைக் குறித்து அல்லாஹ் தனது திருமறையில்…
28:15. (ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் – மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.
28:16. “என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் – நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
28:17. “என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
28:18. மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.
28:19. பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.
28:20. பின்னர்> நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
28:21. ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.
-அல்குர்ஆன் 28:15-21
பிர்அவ்ன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தைப் பருவம் முதல் என்னென்ன செய்தார்கள் என்பதை தொகுத்துப் பார்த்து> மற்ற பிரதானிகளையும் கலந்து ஆலோசித்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சிரச்சேதம் செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்தான். இதை கிஜ்பீலுதான் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முதன்முதலில் தகவல் அறிவித்தார்.
ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி அவர்கள் முன் தோன்றி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து மத்யன் செல்லுமாறு சொன்னார்கள். உடனே எகிப்து நாட்டிலிருந்து மத்யனுக்கு கால்நடைப் பயணமாக புறப்பட்டார்கள். ஒன்பதாம் நாள் மத்யன் நகரின் எல்லையை அவர்கள் தொட்டார்கள். அங்கு ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, இரு பெண்களுக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்தார்கள்.
அந்த இருப் பெண்களின் பெயர்கள் ஸயா, ஸபூரா ஆகும். அவர்கள் இருவர்களும் ஹழ்ரத் ஷுஹைப் நபி அவர்களின் மக்களாவார்கள். சுஹைப் நபி அவர்கள் கண் பார்வையை இழந்திருந்தார்கள். தம் மக்கள் வழக்கத்திற்கு மாறாக முற்கூட்டியே வீடு வந்து சேர்ந்ததற்கு காரணம் கேட்டார்கள். அங்கு நடைபெற்றதை தம் தந்தையிடம் அவ்விருவரும் சொன்னார்கள். உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வரும்படி தம் மக்களிடம் சுஐப் நபி அவர்கள் சொன்னார்கள்.
மக்கள் மூஸா நபி அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்று அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். ஷுஹைப் நபி அவர்கள் மூஸா நபியை விசாரித்தார்கள். மூஸா நபி அவர்கள் தங்களுடைய விசயங்களை ஆரம்பம் முதல் விவரித்து சொன்னார்கள்.
தங்களுடைய ஆடுகளை மேய்ப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸாம் அவர்களை நியமித்து, தம் மகளில் ஒருவரை திருமணம் முடித்துக் கொடுப்பதாகவும் அதற்கு மகராக எட்டாண்டுகள் ஆடுகளை மேய்க்கும்படி சொன்னார்கள். இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில்…
28:22. பின்னர்> அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்” என்று கூறினார்.
28:23. இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர,பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது – மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
28:24. ஆகையால்> அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
28:25. (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.
28:26. அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”
28:27. (அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் – ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”
28:28. (அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை – நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.
-அல்-குர்ஆன் 28:22-28
தப்ஸீர் ஐனுல் மஆனி யில், கஸஸ் அத்தியாயத்தின் விளக்கவுரையில், ‘ஆடுகளை மேய்ப்பதற்காக ஹழ்ரத் ஷுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு கைத்தடியைக் கொடுத்தார்கள். இந்தக் கைத்தடி ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயரத்திற்குச் சமமாகப் பத்தடி நீட்டமிருந்தது. அதன் மேல் பாகத்தின் நுனியில் இரு கிளையாகப் பிரிந்திருந்தது. இக்கைத்தடிக்கு 18 விசேச சிறப்புகளிருந்தன. இதை ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். ஒவ்வொரு நபியின் கைக்கும் மாறிமாறி இறுதியாக இது ஹழ்ரத் ஷுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து, இப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வசம் வந்து விட்டது.’
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இக்கைத்தடி மிகவும் உதவி புரிந்ததாக வரலாற்றில் காணக்கிடக்கிறது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மத்யன் வந்து 8 வருடங்கள் கழித்து ஷுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூத்த மகளான ஹழ்ரத் ஸபூராவுடன் ஒரு வெள்ளிக்கிமை திருமணம் நடைபெற்றது.
தங்கள் குடும்பத்தாரை எகிப்து சென்று பார்க்கும் ஆசை மூஸா நபி அவர்களுக்கு ஏற்பட்டது. ஹழ்ரத் சுஐபு நபி அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். சுகைப் நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதை அறிந்து தம்முடைய கண் பார்வைக்காக துஆ செய்யும்படி கேட்டார்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள் நீங்கள் துஆ செய்யுங்கள். நான் ஆமீன் கூறுகிறேன் என்று சொன்னார்கள். அவ்வாறு ஷுஹைப் நபி அவர்கள் துஆ கேட்க மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆமீன் கூற ஷுஹைப் நபி அவர்களுக்கு பார்வை கிடைத்து விட்டது. அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திக் கொண்டார்கள் நபி சுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸபூரா அம்மையாருடன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்து புறப்பட்டார்கள். துவா என்ற பள்ளத்தாக்கை கடந்து கொண்டிருக்கும்போது ஸஃபூரா அம்மையாருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. அன்று துல்கஃதா பிறை 18 வெள்ளிக்கிழமை இரவு எங்கும் ஒரே இருட்டு. மழையும் பெய்து கொண்டிருந்தது. ஸபூரா அம்மையார் குளிரில் நடுங்க ஆரம்பித்தார்கள். சக்கிமுக்கி கல்லை எடுத்து நெருப்பை மூட்ட முயற்சித்தார்கள். அதிலிருந்து தீ வரவில்லை. வேறெங்கும் வெளிச்சம் தெரிகிறதா?என்று பார்து வர சென்றார்கள். தூர்ஸீனாய் மலைப்பக்கம் அவர்களுக்கு நெருப்பு காணப்பட்டது. மனைவியையும், பணியாட்களையும் அங்கேயே வைத்துவிட்டு தாம் மட்டும் விரைந்து சென்றார்கள்.
அங்கு அல்லாஹ்வுடன் மூஸா அலைஹிஸ்ஸலாம்; அவர்கள் வசனித்தார்கள். இதைப் பற்றி அல்லாஹ் கூறும்போது…
20:10. அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).
20:11. அவர் (நெருப்பின்) அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.
20:12. “நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
20:13. இன்னும் “நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.
20:14. “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
20:15. “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.
20:16. “ஆகவே> அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
20:17. “மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
20:18. (அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.
20:19. அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.
20:20. அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.
20:21. (இறைவன்) கூறினான்: “அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.”
20:22. “இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும்; அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இது மற்றோர் அத்தாட்சியாகும்.
20:23. “(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.
20:24. “ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்” (என்றும் அல்லாஹ் கூறினான்).
20:25. (அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
20:26. “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
20:27. “என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
20:28. “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
20:29. “என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!
20:30. “என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!
20:31. “அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!
20:32. “என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!
அல்-குர்ஆன் 20:10-32
எகிப்து சென்று பிர்அவ்னுக்கு இஸ்லாத்தைப் போதிக்கும் படி சொன்னான். அதேபோல் அவர்கள் வைத்திருந்த கைத்தடியை கொண்டு அற்புதம் நிகழ்த்தும் சக்தியை அல்லாஹ் கொடுத்தான். மலையிலிருந்து திரும்பி வந்தபோது மலையில் நடந்த விசயத்தை தம் மனைவியிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னபோது, ‘என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து உடனே எகிப்து செல்ல ஆயத்தமாகுங்கள்’ என்று விடைகொடுத்து அனுப்பினார்கள்.
மிகவும் சிரமப்பட்டு தங்கள் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை இம்ரான் காலமாகிவிட்டிருந்தார்கள். சில நேரம் கழித்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து வந்தவர் தமது மகன் மூஸாதான் என்று அவரது தாயார் யூகானிதா அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்களது சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தம் சகோதரரை அறிந்து கொண்டார்கள். அவர்களிடம் நடந்த அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொன்னார்கள்.
அல்லாஹ் தமக்கு நபித்துவம் அளித்து பிர்அவ்னை சந்தித்து உபதேசிக்க சொன்னதையும் விபரமாக சொன்னார்கள். இதைக் கேட்ட தாயாருக்கு சந்தோஷம் ஏற்பட்டு அல்லாஹ்வுக்கு பலமுறை சஜ்தா செய்தார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வுக்கு சிரம் தாழ்த்தி நன்றி செலுத்திக் கொண்டார்கள்.
தற்போதைய பிர்அவ்னின் கொடுங்கோன்மையை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொன்னார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்> மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பிர்அவ்னுடைய அரண்மனையைச் சென்றடையும் போது, இரவு நேரமாயிருந்தது. தாங்கள் வந்திருப்பதை வாயிற்காவலனிடம் சொல்லி அனுப்பினார்கள். நீண்ட நேரம் கழித்தபின் ஒரு சேவகன் வந்து அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான்.
அங்கு அவர்களிருவரும் ‘நாங்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள். உமக்கு புத்திக் கூறி நேர்வழிப்படுத்துமாறு அல்லாஹ் எங்களிருவரையும் ஏவியுள்ளான். நீர் உம்மை இறைவன் என்று கூறுவதைவிட்டு> அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி> உம்மையும் எங்களையும்> அண்டசாரங்களையும் அத்தனையும் படைத்துப் பாதுகாத்து வரும் அந்தச் சர்வலோக இரட்சகன்பால் உமது முகத்தை திருப்பிக் கொள்ளும். எங்களுடைய இந்த நல்லுபதேசத்தை செயல்படுத்தவில்லையானால் இம்மை> மறுமையில் கடுமையான தண்டனையை அல்லாஹ் கொடுத்து விடுவான்’ என்று கூறினார்கள்.
இங்கு படத்தில் காண்பது நபி மூஸா அலை அவர்களின் வாழ்க்கையில் சம்பவங்கள் நடந்த சில இடங்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே♥️☝️