வருத்தம் தெரிவிப்பதும் இஸ்லாமியக் கலாச்சாரமே.*
=========================
பிலால் (ரலி) அவர்களைப் பார்த்து அபூதர் (ரலி), “கறுப்பியின் மகனே! நீயுமா என்னைக் குறை சொல்கிறாய்?” என்று கேட்டபோது;
பிலால் (ரலி) திகைப்புடனும் கோபத்துடனும் எழுந்து சொன்னார்: “அல்லாஹ் மீதாணை! அல்லாஹ்வின் தூதரிடத்தில் இதை நான் சொல்வேன்”.
செய்தி அறிந்த நபிகளாரின் முகம் சிவந்தது. கேட்டார்கள்: “அபூதர்! அவருடைய தாயாரை இணைத்து அவரைக் குறை கூறினீரா? அறியாமைக் கால பழக்கம் இன்னும் உம்மிடம் இருக்கிறது”.
அதைக் கேட்ட அபூதர் (ரலி) அழுதார். தான் இன்னும் முழுமையாக இஸ்லாத்தில் நுழையவில்லையோ என்று நடுங்கினார். “அல்லாஹ்வின் தூதரே! என்னை மன்னியுங்கள்” என்று கூறியவர், அழுதவண்ணமே அங்கிருந்து வெளியேறி பிலால் (ரலி) அவர்களைத் தேடினார்.
நடந்து சென்றுகொண்டிருந்த பிலாலுக்கு முன்பாக வந்து தரையில் கன்னத்தை வைத்து பிலாலுடைய காலைப் பிடித்தவாறு, “பிலால்! உமது காலால் என் கன்னத்தை மிதிக்காதவரை என் கன்னத்தை நான் உயர்த்த மாட்டேன். நீர்தான் உயர்ந்தவர், நான் இழிவானவன்” என்றார்.
தாங்க முடியாமல் அழுதுவிட்டார் பிலால் (ரலி). தரையில் கிடந்த அபூதர்ரை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். கூறினார்: “ஒருமுறையேனும் அல்லாஹ்வுக்கு ஸுஜூத் செய்த இந்த முகத்தையா நான் மிதிப்பேன்? ஒருபோதும் இல்லை” என்றார்.
இருவரும் அழுதனர். கட்டியணைத்தனர்.
இன்று சிலர்... ஒருதடவையல்ல.. பலமுறை தவறாக நடக்கின்றனர். ஆயினும் ஒருமுறைகூட வருத்தம் தெரிவிப்பதில்லை. குறைந்த பட்சம் ஒரு “ஸாரி” கூட கேட்பதில்லை.
வருத்தம் தெரிவிப்பதும் இஸ்லாமியக் கலாச்சாரமே. உயரிய பண்பாடு. வருத்தம் தெரிவிப்பதன் மூலம் இரு தரப்பிலும் பொறாமையும் கோபமும் அகன்றுவிடும். வருத்தம் தெரிவிப்பதற்குக் காலமோ பெரு முயற்சியோ தேவையுமில்லை.
அனைவருக்கும் ஒருநாள் இறுதிப் பயணம் உண்டு. நமது கட்டுச்சாதமோ குறைவாக உள்ளது. வருத்தம் தெரிவிப்பதன் மூலம் மறுமை வெற்றியைப் பெற முயற்சி செய்ய வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக