நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஜனவரி 15, 2021

கணவன் மனைவி,

கணவன் மனைவி காதல்,

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً


நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். திருக்குர்ஆன்:- 30:21


வாழ்க்கைக்கு கணவன்–மனைவி உறவு முக்கியமானது. குடும்பத்திற்கு அடித்தளமாக இருந்து தாங்குபவர்கள் கணவன்–மனைவி தான் என்று கூறலாம். ‘கணவன் மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் இருக்கின்றனர்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. 

ஆடைகள் மனிதனின் வெட்கத்தலங்களை மறைத்து அவர்களை பாதுகாக்கின்றது. அதுபோல ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

ஒருவருக்கொருவர் 


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கணவனுடன் அன்பால் கட்டிப்புரண்டு அவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றிக் கிடப்பவளை அல்லாஹ் நேசிக்கின்றான். நூல்:  தைலமீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்புடன் பார்த்துக் கொண்டால் இறைவன் இவர்கள் மீது தன் அருளான பார்வையை செலுத்துகிறான். கணவன் மனைவியின் கையை அன்புடன் பிடித்தால் இருவரின் விரல்களுக்களிடையே அவர்களின் பாவங்கள் கொட்டிவிடுகிறது. அறிவிப்பாளர்:- அபூசயீது அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனைவிக்கு சிறந்தவனே, மனிதனில் சிறந்தவன். நான் என் மனைவிக்கு சிறந்தவனாக இருக்கிறேன். கண்ணியத்திற்குரியவனே, பெண்களை கண்ணியமாக நடத்துவான். இழிவானவன் பெண்களை இழிவாக நடத்துவான். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அசாகிர்

மனைவியை கண்ணியப்படுத்துபவன். கண்ணியத்திற்குரியவன். அவளை  இழிவுப்படுத்துபவன். இழிவுக்குரியவன் என்பதே இதன் பொருள்.                                                                                                                                      

அண்ணல் நபி (ஸல்)அவர்கள் அவர்கள் கூறினார்கள்.                                ( لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ ) இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறைநம்பிக்கையுள்ள பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்பிகொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2915                                   


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்புடன் பார்த்துக் கொண்டால் இறைவன் இவர்கள் மீது தன் அருளான பார்வையைச் செலுத்துகிறான். கணவன், அவள் கையை அன்புடன் பற்றினால் இருவரின் விரல்களிடையே அவர்களின் பாவங்கள் உதிர்ந்துவிடுகிறது. அறிவிப்பாளர்:-  அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ                                   


மனைவியின் சில குணங்கள் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவளின் சில குணங்கள் நமது இதயத்தைக் கவரக் கூடியதாக இருந்து விடலாம். எனவே நமக்கு பிடிக்காத அவளின் சில குணங்களைக் கண்டு நமது உள்ளத்தில் அவளைப் பற்றி நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.                                               


அவளிடம் உள்ள மற்றொரு நல்ல அம்சத்தைக் கொண்டு கணவன் திருப்தி அடைய வேண்டும். எடுத்துக் காட்டாக, மனைவியிடம் முன் கோபம் இருக்கலாம். அதே நேரத்தில், அவள் பத்தினியாக இருப்பதில் தீவிரமாக இருப்பாள்; அல்லது கணவனின் நலனில் அக்கறை உள்ள நல்ல தோழியாக இருப்பாள்; அல்லது நல்ல அழகியாக இருப்பாள். 


வழங்கப்பெற்ற வரம்  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنِّي قَدْ رُزِقْتُ حُبَّهَا ) (தமது ஆருயிர் மனைவி) "கதீஜா (ரலி) அவர்களின் அன்பு எனக்கு  வழங்கப்பெற்ற வரம் ஆகும்" என்று கூறினார்கள். நூல் முஸ்லிம்-4821


இதுதான் இந்த நபிமொழியின் கருத்து என நபிமொழி விரிவுரையாளர் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 


இருபத்தைந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை  நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்திவந்தார்கள்.


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் தோழிகளுக்கு  அதிலிருந்து ஒரு பங்கை அன்பளிப்பாக அனுப்பத் தவறியதில்லை. நூல்:- புகாரீ-3816, முஸ்லிம்-4820, திர்மிதீ-3800



அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا) உங்களில் தம் துணைவியரிடம் நற்பண்புகளுடன் நடந்துகொள்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1082, முஸ்னது அஹ்மது


அண்மையில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனைவியுடன் அதிகமாகப் பேசுவது மனிதனின் இயத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனைவியுடன் பேசுவதால் 80% பேருக்கு மன உளைச்சல் குறைவதாகவும், 90% பேருக்கு மாரடைப்பு குறைவதாகவும், அதனால் ஆயுள் கூடுவதாகவும் அந்த ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவியின் அன்பு                                                                                


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நாட்களில் நோயுற்று மரண  வேதனையை அனுபவித்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்து சகித்து கொள்ள முடியாத அண்ணலாரின் அன்பு மனைவி அன்னை சஃபியா (ரலி) அவர்கள் "யா அல்லாஹ்! நீ அண்ணலாரை என்ன வேதனையளிக்க நினைக்கிறாயோ அதனை நீ எனக்கு கொடுத்து விடு! அண்ணலாரின் புனித ஆன்மாவை நீ இலேசாக கைப்பற்றிக் கொள்!" என்று பிரார்த்தித்தார்கள். 


இதனை அல்லாஹ் அண்ணலாருக்கு அறிவித்தவுடன், அண்ணலார் சஃபியா (ரலி) அவர்களை அழைத்து, "ஓ சஃபியா! எனக்கு சொர்க்கத்தின் நாற்பது ஆண்களின் சக்தி வழங்கப்படிருக்கிறது. வேதனையும் கூட நாற்பது ஆண்கள் தாங்கும் அளவுக்குத்தான் வழங்கப்படும் என்பதை விளங்கிக் கொள்! எனவே நீ எனக்காக பிரார்த்திப்பதாக இருந்தால் இறைவா! இவர்களுடைய வேதனையைக் குறைப்பாயாக! என்று பிரார்த்திருக்கலாமே" என்று கேட்டுக் கொண்டார்கள்.


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெண்களில் சொர்க்கத்திற்குரியவள் யாரென்றால், கணவனிடம் அன்பாக இருப்பாள். அவனுக்காக அதிகமான குழந்தைகளை பெற்றெடுப்பாள். அவனை நன்றாக கவனித்து கொள்வாள். அவன் கோபமடைகின்றபோது அவள் அவனிடம் வந்து தன் கையை அவனுடைய கையொடு வைத்து நீங்கள் மகிழ்ச்சியாகும் வரை என் கண்கள் தூங்காது என்று கூறி அவனை சாந்தப்படுத்துவாள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அசாகிர் 


ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது. எனது அத்தைகளுள் (குப்பி) ஒருவர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தார். அண்ணலார் அவரிடம் "பெண்ணே! உனக்குக் கணவன் இருக்கின்றாரா? என்று வினவினார்கள். அவர் "ஆம்!" என்று பதிலளித்தார். அண்ணலார் நீ எவ்வாறு அவரை நடத்துகிறாய்? என்று வினவினார்கள். "என்னால் இயன்ற வரை நன்றாக நடத்துகிறேன். (ஹலாலான) அவருடைய எந்த வேண்டுதலையும் நான் மறுக்கமாட்டேன்" என்று பதிலளித்தார். 


பிறகு அண்ணலார் "அவருடன் உன் நிலை எந்தளவு இருக்கிறது என்று நீ சோதித்துக் கொள்! ஏனென்றால் அவரே உன்னுடைய சொர்க்கத்திற்கு(ச் செல்லும்)  வழியாகலாம். அல்லது  நரகத்திற்கு(ச் செல்லும்) வழியாகலாம்". நூல்:- முஸ்னது அஹ்மது, ஹாகிம்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الْجَنَّةَ ) எந்தப் பெண் தன் கணவர் தன்மீது மனநிறைவு கொண்டிருக்கும் நிலையில் இறக்கிறாளோ அந்த பெண் சொர்க்கம் செல்வாள். அறிவிப்பாளர்:- உம்மு சல்மா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1081


விட்டுக் கொடுக்கமுடியாது 


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியர்களில் சிலர் (நான் உட்பட) குடும்பம் நடத்துவதற்கு தரப்படும் தொகை போதவில்லை. அதைவிட கொஞ்சம் கூடுதலான தொகை வேண்டும் என்று கூறி அண்ணலாரை தொந்தரவு செய்தனர். அதனால் அண்ணலார் தம் துணைவியர்களை விட்டும் ஒரு மாத காலம் பிரிந்திருந்து விட்டு அம்மாத இறுதியில் என்னிடம் வந்தார்கள். 


பிறகு என்னிடம் ( يَا عَائِشَةُ إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلاَ عَلَيْكِ أَنْ لاَ تَسْتَعْجِلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ ) "ஆயிஷா! உன்னிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைப்பற்றி நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து) விடாதே!" என்று கூறிவிட்டு, 


"நபியே! உங்களுடைய மனைவிகளிடம் நீங்கள் கூறுங்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தை மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன். 


அன்றி நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நன்மையைக் கருதுபவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார் செய்து வைத்திருக்கிறான். (திருக்குர்ஆன்:- 33:28,29) ஆகிய வசனங்களை எனக்கு ஓதிக் காட்டினார்கள். 


( فَقُلْتُ فِي أَيِّ هَذَا أَسْتَأْمِرُ أَبَوَيَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ ) “நான் (அண்ணலாரிடம் "உங்கள் உறவை முறித்துக்கொள்ளும்) இந்த விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்கப்போகிறேன்? நான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறு உலகத்தையுமே விரும்புகிறேன்" என்று கூறினேன்.  நூல்:- முஸ்லிம்-2952, திர்மிதீ-3118 


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை பாத்திமா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! ஆயிஷா விஷயத்தில் (தாங்கள் அன்பு காட்டுவதைப் போன்று உங்களின் பிற மனைவியரிடமும் அன்பு காட்டி) நீதத்தோடு நடந்துகொள்ளும் வேண்டும் என உங்களின் பிற மனைவியர்கள் விரும்புகிறார்கள்" என்று கூறினார்.
 

அப்போது அண்ணலார், ( أَيْ بُنَيَّةُ أَلَسْتِ تُحِبِّينَ مَنْ أُحِبُّ ) "என் அன்பு மகளே! நான் நேசிப்போரை நீயும் நேசிப்பாய் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம் (தாங்கள் நேசிப்போரை நானும் நேசிக்கிறேன்)" என்று கூறினார். அண்ணலார், (என்னைக் காட்டி) ( فَأَحِبِّي هَذِهِ ) "அப்படியானால், இவரை நேசிப்பாயாக!" என்று கூறினார்கள். அண்ணலார் இவ்வாறு கூறியதைக் கேட்டு  பாத்திமா (ரலி) அவர்கள் (அமைதியாக) அங்கிருந்து சென்று விட்டார்கள்.   நூல்:- நஸாயீ-3883

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களைப் பற்றி பிறர் குறை கூறுவதையும், தன்னுடைய மனைவியர்களில் ஒருவருக்கொருவர் குறை கூறி கொள்வதையும் விரும்ப மாட்டார்கள். காரணம் அண்ணலார் தனது மனைவியர்களில் அனைவரையும் மிகவும் நேசித்தார்கள்.


மறக்க முடியவில்லை 


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (இல்லத்துக்குள்) வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே அண்ணலார் (கதீஜா -ரலி அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, "இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்" என்று கூறினார்கள். 


உடனே நான் ரோஷமடைந்து, "எப்போதோ மரணமடைந்துவிட்ட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷி மூதாட்டியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக அவரைவிட சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்") என்று கேட்டேன்.                    
                                                                                            

இதைக் கேட்டதும், அண்ணலாரின் முகத்தில் தெரிந்த கடும் கோபத்தைக் கண்டு நான் வருந்தி, அல்லாஹ்வே உன் தூதரின் கோபத்தை நீ நீக்கிவிட்டால் நான் இனி கதீஜா குறித்து நல்லதை மட்டுமே கூறுவேன் என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன். அண்ணலார் என் வருத்தத்தைக் கண்ட போது சொன்னார்கள். எப்படி அதை சொன்னாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களெல்லாம் என்னைப் பொய்ப்படுத்தி மறுத்துவிட்டபோது, அவர் என்னை நம்பினார். மக்களெல்லாம் என்னைத் துரத்திவிட்டபோது, அவர் எனக்கு புகலிடம் தந்தார். அவர் மூலமாக மட்டுமே நான் சந்ததி கொடுக்கப்பட்டேன்.


மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மாதமாக காலையும், மாலையும் என்னிடம் இதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ- 3821, முஸ்னது அஹ்மது, உம்தத்துல் காரீ, அத்துலாபீ- அத்துர்ரியத்துத் தாஹிரா
 

கதீஜா (ரலி) அவர்கள் இறந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைகிறார்கள். அங்கு குழுமியிருக்கிற அனைவரும் அண்ணலாரை தங்கள் வீட்டில் விருந்தினராக தங்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தனர். அண்ணலாரோ தனது அன்பு மனைவி கதீஜா (ரலி) அவர்களின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மண்ணறைக்கு அருகே எனக்குக் கூடாரம் அடியுங்கள்’ என்று கூறினார்கள். 


பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தனது அன்பு மனைவி கதீஜா (ரலி) அவர்களின் மீது அண்ணலார் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது இந்நிகழ்வு. 

அலீ (ரலி) அவர்களிடம்  ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரின் மகளுடன் உங்கள் தொடர்பு எப்படி இருந்தது? விவரியுங்கள்" என்று கேட்டார். அலீ (ரலி) அவர்கள், "எனது மணப்பெண்ணும் மன அமைதியும் முஹம்மத் (ஸல்) அவர்களின் மகளே. அவளே எனது வாழ்வு. அவளே எனது மனைவி. அவளின் சதைத் துண்டு என் சதையுடனும் இரத்தத்துடனும் கலந்து விட்டது" என்று கூறினார்கள்.

ஒருமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து மருதாணி வைப்பதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன? என்று வினவினார். அன்னையவர்கள் "நான் நேசித்த ஆன்மாவிற்கு (நபிகள் நாயகம் - ஸல் அவர்களுக்கு) அதன் நிறம் மிகவும் பிடிக்கும். ஆனால் அதன் வாடை ஒத்துக்கொள்ளாது. இருப்பினும் அது தடுக்கப்பட்டதல்ல. (ஹராமல்ல) நீங்கள் பயன்படுத்தலாம்" என்று பதிலளித்தார்கள்.

அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம் குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கணவன்–மனைவி இடையே நெருக்கத்தையும், மன பிணைப்பையும் ஏற்படுத்தும்.

கால மாற்றத்தினூடே இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகள், கருத்து மாறுபாடுகள் காலப்போக்கில் பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. 

இதில் கோபம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எதற்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்று வரையறை இல்லாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட கோபத்தில் வார்த்தைகளை விட்டு மீண்டும் அதை அள்ள முடியாமல் பிரிந்து வாழ்கிறார்கள் பலர். 

நமக்கு தூரமானவர்களிடமிருந்து எளிதில் நாம் நல்ல பெயர் வாங்கி விடுகிறோம். அவர்கள் நமது திறமை, ஆற்றல், செல்வம், பதவி ஆகியவற்றை வைத்து நம்மை எடை போடுகிறார்கள். எனவே அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. 

ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் தான் நம்மைப் பற்றி நன்கு அறிவார்கள். நமது நிறைகளையும், குறைகளையும் தெளிவாக அறிவார்கள். நமது கணவன், மனைவி, பிள்ளை, பெற்றோர், உறவினர், அண்டை வீட்டினர், நண்பர்கள் தரும் சான்றிதழ்களே உண்மையானது. ஊர் மக்கள் மெச்சும்படியாக வாழ்வது இருக்கட்டும்; உன் மனைவி மெச்சும்படியாக வாழ்ந்து காட்டுவதே சிறப்பு மிக்கதாகும் என்கிறது இஸ்லாம்.

ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தாம். ஆணும் பெண்ணும் இதில் விதிவிலக்கல்ல. மனைவி தன் கணவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் எத்தனையோ நன்மைகளை, தியாகங்களை செய்திருந்தாலும், அவள் அறிந்தோ, அறியாமலோ செய்த சிறு தவறுகளால் கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து இறுதியில் பிரிவை நோக்குகிறார்கள். கணவன் அல்லது மனைவி இத்தனை நாள் தனக்கு செய்த உபகாரங்களை கொஞ்சம்கூட நினைத்து பார்ப்பதில்லை.

அன்பும், கருணையும் இருக்கும் இடத்தில் பகைமைக்கும், பிரிவினைக்கும் வேலையில்லை. மனைவி என்பவள் குடும்பத்தை தாங்கும் அஸ்திவாரம். அவள் மீது காட்டப்படும் அன்பும், பரிவும், கண்ணியமும் மனைவி எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். அது கட்டிடம் எனும் குடும்பத்தை மகிழ்ச்சியிலும், அமைதியிலும் நிலைத்திருக்கச் செய்யும்.                        

விருப்பத்திற்கேற்ப 

சிகப்பு ஆடை அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் தன் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களுக்கு பிடித்துவிட்டது என்ற ஒரே காரணத்தால் அதை அடிக்கடி அணிவார்கள். 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தனது இறுதிகாலத்தில் ஒன்றை விரும்பினார்கள். அதாவது தனது நேசத்திற்குரியவர்களான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த இடத்திலேயே தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை ஆயிஷா (ரலி)  அவர்களிடம் தெரிவித்தார்கள். காரணம் அந்த இரண்டு புனிதமான நபர்களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடம், ஆயிஷா (ரலி) அவர்களின் வீடாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் “அந்த இடத்தை நான் எனக்காக ஒதுக்கியிருந்தேன். தற்போது உமர் (ரலி) அவர்கள் கேட்கிறார் எனும்போது மனமகிழ்வோடு விட்டுக் கொடுக்கிறேன்” என்றார்கள்

ஏனெனில், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "நானும், அபூபக்ரும், உமரும் இங்கே போனோம்; இங்கே இருந்தோம்; இப்படி இப்படியெல்லாம் நம்பிக்கை கொண்டோம்" என்று அடிக்கடி சொல்வதை நான் கேட்டுள்ளேன் அதனால் நபியவர்களின் அருகில் நான் அடக்கம் செய்யப்படுவதை விட அண்ணலார் மிகவும் விரும்பிய உமர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்படுவது தான் முறையானது. அண்ணலாரும் இதைத்தான் விரும்புவார்கள் என்று விவரித்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பிறகும் அவர்களின் விருப்பமே தனது விருப்பம் என்று எண்ணி வாழ்ந்தவர்கள்தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

அன்புள்ள மனைவி என்பவள் கணவர் உயிரோடு இருக்கும்போதும் அவருக்கு கட்டுப்பட்டு வாழ்வாள். அவர் இறந்த பிறகும் அவரது சொற்களுக்கு மதிப்புக் கொடுத்து அதையே பின்பற்றி வாழ்வாள். 

இந்த நற்குணம் தான் கணவன் மீது அதிகம் பிரியம் உள்ளவள் என்பதற்கு அடையாளமாகும். 

இந்த நற்குணம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்கள் அனைவரிடமும் நிரப்பமாக காணப்பட்டது. 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவியர்கள் ஒட்டகத்தில் ஏறுவதற்காக தனது பாதத்தை கொடுத்து உதவி செய்து அவர்களை ஒட்டகத்தில் ஏற்றி விட்டிருக்கிறார்கள். 

எனவே மனைவியின் விருப்பத்திற்கேற்ப மார்க்கத்தின் வரம்பை மீறாமல், கணவன் இசைந்து போவதின் மூலம் இல்லறத்தில் இன்பம் காணலாம்.  

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "நான் மனைவியிடம் தோற்பதை  விரும்புகிறேன்" என்று கூறினார்கள். 
எனவே மனைவியை அன்பால் ஆள வேண்டுமே தவிர, அதிகாரத்தால் அல்ல என்று விளங்க வேண்டும்.

மரணம் 


அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஹம்னா பின்து ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் "உம்முடைய சகோதரர் இப்போரில் கொல்லப்பட்டு விட்டார்" என்று சொல்லப்பட்டது. அதற்கு அப்பெண் அல்லாஹ் அவருக்கு கருணை புரியட்டும்! "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்" என்று கூறினார். 


பிறகு "உம்முடைய கணவர் இப்போரில் கொல்லப்பட்டு விட்டார்" என்று அப்பெண்ணிடம் சொல்லப்பட்டதும், அதற்கு அப்பெண் "அல்லாஹ்...." என்று மட்டும் சொல்லி விட்டு அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் வாடிய முகத்தோடு அமர்ந்து விட்டார். இக்காட்சியைக் கண்ட கருணை நாயகம் (ஸல்) அவர்கள் "கணவன் மனைவிக்கிடையே ஒருவகையான பாசப்பிணைப்பு உண்டு. அது எதையும் எதிர்பார்த்து வருவதில்லை" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா, பைஹகீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவனொருவன் தன் மனைவியின் அன்பான அரவணைப்பில் வாழ்ந்து இறந்தானோ, அவன் அவள் கையால் குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட்டால் அவனுக்கு அல்லாஹ் அருள்புரிந்து விட்டான் என்று பொருளாகும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ


மனைவியின் மரணத்தின் போது உமர் முக்தார் (ரஹ்) அவர்கள் அழுதார்கள். எதை நினைத்து அழுகிறீர்கள்? என்று மக்கள் வினவினார்கள். என் மனைவி, நான் நுழைவதற்காக கூடாரத்தின் வாயிலை உயர்த்திப் பிடிப்பாள். “ஏன் இப்படி செய்கிறாய்? ” என்று நான் கேட்பேன். அதற்கு “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் நீங்கள் தலை குனியாதிருக்கத்தான்”  என்று பதிலளிப்பாள் என்றார்கள்.   

அபூபக்ர் (ரலி) அவர்கள் தன் மரணப் படுக்கையில் கூறினார்கள். “என் மரணத்திற்கு பிறகு என் (ஜனாஸாவை) உடலை என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் குளிப்பாட்ட வேண்டும்” அப்போது  தோழர்கள்,  “ஏன்?” என்று வினவினர். அபூபக்ர் (ரலி) அவர்கள், ”என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்”  என்று பதிலளித்தார்கள். 

அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஜனாஸாவை) உடலை அவர்களின் மனைவியார் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் தான் குளிப்பாட்டினார்கள். நூல்:- மாலிக் முவத்தா-782

தனது மனைவியை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது. தனது இறுதி சடங்கைக் கூட தனது மனைவி செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தனது மனைவியை நேசித்தார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

பாத்திமா (ரலி) அவர்கள் தனது இறுதி நேரத்தில் “அஸ்மா பின் உமைஸ் (ரலி) அவர்கள் தனது அன்பு கணவர் அலீ (ரலி) அவர்களின் உதவியுடன் தன்னை குளிப்பாட்ட வேண்டும்” என்று (வஸிய்யத் எனும்) இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவ்விருவரும் தான் குளிப்பாட்டினர். நூல்:- தாரகுத்னீ-1851, பைஹகீ

இறந்த பின்பும் தன் வாழ்க்கைத் துணையின் மீது இத்தனை நேசம் செலுத்தும் ஒருவர், அவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு நேசித்திருப்பார்?
கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின்மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை....

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான் எனும் உண்மையை அல்-குர்ஆன் எடுத்தியம்புவதை.....இக்கட்டுரைக்குள் தேடுங்கள்.

அல்லாஹ் தன்னந்தனியாக இருந்தான். தன்னுடைய சக்திகளை வெளிப்படுத்த வேண்டுமென நாடினான். தன்னைத்தான் அறிவதற்காக ஓர் அற்புதமான சிருஷ்டியை படைக்க நாடினான். தன் கற்பனையில் உருவானபடி மனிதனைப் படைத்தான். படைத்துத் தன் பிரதிநிதியாக, கலீஃபாவாக பூமியில் ஆக்கினான். ஆணைப் படைத்த இறைவன் ஆணுக்குத் துணையாகப் பெண்ணையும் படைத்தான். அதுவும் ஆணின் விலா எலும்பிலிருந்தே பெண்ணைப் படைத்தான். படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்ப வேண்டுமென நாடினான். எனவே, பெண்ணிடத்தில் ஒரு கவர்ச்சியை வைத்தான். ஆணிடத்தில் கம்பீரத்தை வைத்தான்.ஆகையால் ஆண் பெண்ணை விரும்புகிறான். பெண்ணும் ஆண்மையை விரும்புகிறாள்.

விரும்பி ஆண்-பெண் இருவரும் இணைய வேண்டும் என்ற காரணத்தினால், ‘அல்லாஹ் உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவிகளைப் படைத்திருக்கிறான். அன்றி உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும் பேரன். பேத்திகளையும் உற்பத்தி செய்து, உங்களுக்கு நல்ல ஆகாரங்களையும் புகட்டுகிறான்’ (ஸூரத்துன் நஹ்ல்: 72) என்று கூறுகிறான்.

உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைத்துள்ளான். நீங்கள் அவர்களிடம் மன அமைதியுறுவதற்காக உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டு பண்ணியுள்ளான்.’ (ஸூரத்துர் ரூம்: 21)

‘எவர் இறைவனுக்காக (அவனின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு) திருமணம் முடித்தாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் அரசாங்கத்தின் கிரீடத்தை சூட்டுகிறான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவிக்கின்றார்கள். கிரீடம் சூட்டப்படும் இடம் எதுவாக இருக்கும் சுவனத்தைத்தவிர!

ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ

''நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).'' (அல்குர்ஆன்: ஸூரா அல்-ஜுக்ருஃப் 43:70)

திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவதில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .

அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும், சுகத்தையும், சுவையையும், துக்கத்தையும், கனவையும், நனவையும மகிழ்வையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் முக்கிய மந்திரி.

உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!

هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن

‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (ஸூரா அல்-பகரா 2:187).

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது

وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا

மேலும், அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (ஸூரா அல்-நஹ்ல் 16:72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (ஸூரா: அல்-ரூம் 30:21).

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.

நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.

திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.

மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.

நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.

ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?

அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.

எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விஷயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.

''உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்''.

இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.

விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.

நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.

ஸூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ

நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).

இந்த வசனத்தை உண்மையாக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:

இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.

தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலாவாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் நிச்சயம் அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு. இந்த அறிய படிப்பினைகளை கடைப்பிடித்து வாழ்வோமானால் ஒவ்வொருவரும் தத்தம் பிரிய மனைவியோடு; கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத இன்பங்கள் கொட்டிக்கிடக்கும் சுவர்க்கத்திற்குள் நுழைய இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான். மறவாதீர்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.

ஆகவே இவ்வுலகில் உங்கள் மனைவியுடன் இஸ்லாம் வகுத்துத்தந்த முறைப்படி இல்லறத்தை நல்லறமாக்கி வாழுங்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ''மனிதர்களில் சிறந்தவர் தன் மனைவியிடம் சிறந்தவரே'' எனும் அருள் மொழியை நினைவு கூறுங்கள். மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா? கஷ்டப்படாமல் சுவர்க்கம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறீர்களா? சிறந்தவர்களாகத்தானே சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்! ஆகவே, கஷ்டப்பட்டேனும் நல்ல பெயர் எடுத்துவிடுங்கள், உங்கள் மனைவியிடம்! ஜோடியாக சுவர்க்கம் செல்ல அதுதான் சிறந்த வழி. அல்லாஹ் நல்லருள் புரிவானாக

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்