நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, செப்டம்பர் 30, 2022

நபி நாயகம் வாழ்வில் சில வழி முறைகள்,

கருணையாளரே!



حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

அவர் உங்கள்மேல் அதிக அக்கறை கொண்டவர்; இறை நம்பிக்கையாளர்களிடம் மிகுந்த பரிவும் கருணையும் உள்ளவர் ஆவார். திருக்குர்ஆன்:- 9:128



இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இருக்கிறது. அவர்களின் நடைமுறைகள் அனைத்தும் மார்க்க ரீதியாக கட்டாயக் கடமை அல்ல. என்றாலும், அதுவும் மார்க்கத்தில் ஏவப்பட்டிருக்கிறது. தனது சமுதாயத்தினரின் சிரமத்தை குறைக்க தனக்கு விருப்பமான சில செயல்களையும் கூட அவ்வபோது அவர்கள் விட்டு விடுவதுண்டு. எனவே அண்ணலாரின் இந்த நடைமுறை சமுதாயத்தினர் மீது அக்கறையுள்ள தலைவருக்கான அடையாளமாகும்.



தராவீஹ் தொழுகை



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ரமளானில் ஒரு நாள்) நள்ளிரவில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்கள் சிலரும் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றிப்) பேசிக் கொண்டனர். (மறுநாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டுவிட்டனர். அண்ணலார் தொழ, அவர்களுடன் மக்களும் தொழுதனர். காலையில் (இதுகுறித்து) மக்கள் பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவு பள்ளிவாசலில் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அண்ணலார் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர்.



நான்காம் இரவில் பள்ளிவாசல் கொள்ளாத அளவிற்கு மக்கள் திரண்டனர் ஆனால் அண்ணலார் (இரவுத் தொழுகைக்கு வராமல்) சுப்ஹு தொழுகைக்கு தான் வந்தார்கள். சுப்ஹு தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, ஏகத்துவ உறுதி மொழிந்து, ( فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، وَلَكِنِّي خَشِيتُ أَنْ تُفْتَرَضَ عَلَيْكُمْ فَتَعْجِزُوا عَنْهَا ) "நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின் கூறுகிறேன். நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன்" எனக் கூறினார்கள். நூல்:- புகாரீ-2012, முஸ்லிம்-1431, அபூதாவூத்-1166



அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்ற வேண்டுமென்று விரும்பினார்கள். மூன்று நாட்கள் பள்ளிவாசலுக்கு வந்து அவர்கள் மக்களுக்கு இத்தொழுகையை நடத்தியது இதையே காட்டுகிறது. இருப்பினும் இது சமுதாயத்தின் மீது கட்டாயக் கடமை ஆகி விடுமோ என்ற அச்சத்தின் காரணத்தாலேயே ஜமாத்தைச் தொடராமல் விட்டார்கள். நபியவர்களின் இறப்புக்குப் பின்னால் இந்த அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது. எனவே, உமர் (ரலி) அவர்கள் (குர்ஆன் ஓதுவதில் சிறந்து விளங்கிய) உபை பின் கஅப் (ரலி) அவர்களின் தலைமையில் கூட்டாக மக்கள் தராவீஹை நிறைவேற்ற ஏற்பாடு செய்தார்கள். இது ஒரு நல்ல ஏற்பாடாக அமைந்தது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ



பல் துலக்குதல்



அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى الْمُؤْمِنِينَ- وَفِي حَدِيثِ زُهَيْرٍ عَلَى أُمَّتِي- لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ ) எனது சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்கும் அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-422, அபூதாவூத்-43, திர்மிதீ-22, நஸாயீ-7, இப்னுமாஜா-283



தம்மாம் பின் அல்அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சிலர் வந்தனர். அப்போது அண்ணலார் (வந்தவர்களிடம்), "என்ன பற்களில் மஞ்சள் கறை படிந்த நிலையில் நீங்கள் வந்திருப்பதை காணுகின்றேனே?" என வினவினார்கள்.



பின்னர் அண்ணலார், "(நன்கு) பல் துலக்குங்கள். என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (தொழுகைக்காக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டுமென்பதை அவர்களுக்கு நான் கடமையாக்கியதைப் போன்றே, பல் துலக்குவதையும் அவர்களுக்கு நான் நிச்சயம் கடமையாக்கியிருப்பேன்" என்று அவர்களிடம் கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1738



1. அங்கத்தூய்மை செய்யும் போது 2. தொழுகைக்காக நிற்கும் போது 3. குர்ஆன் ஓதும்போது 4. தூங்கி எழும்போது 5. நீண்டநேரம் சாப்பிடாததால், அல்லது துர்வாடை உள்ள பொருட்களை உட்கொண்டதால், அல்லது நீண்ட நேரம் வாய் மூடி இருந்ததால், அல்லது அதிகமாகப் பேசியதால் வாயில் வாடை வரும். ஆகிய ஐந்து சமயங்களில் பல் துலக்குவது மிகவும் விரும்பத்தக்க செயல் என அறிஞர்கள் கூறுகிறார்கள். நூல்:- அல்மின்ஹாஜ்




காலை எழுந்ததும் பல் துலக்கும் பழக்கம் எல்லா மக்களிடமும் உண்டு. காலைக் கடன் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஐந்து நேரத் தொழுகைக்காக உளூ செய்யும் போதெல்லாம் பல்துலக்கிட கட்டாயமாக்க விரும்பினார்கள். ஆனால் அது தன் சமுதாயத்தினர் மீது சிரமம் ஏற்பட்டு விடும் என்று அஞ்சி அதை தவிர்ந்து கொண்டார்கள். உடல் நலத்தை கருத்தில் கொண்டு தான் அண்ணலார் பல் துலக்குதலை வலியுறுத்த விரும்பினார்கள். 



எதையும் சாப்பிட்டதும் சாப்பிட்ட உணவின் துகள், இடுக்கினுள் இருந்து கொண்டு கிருமியாக மாறி விடுகிறது. இந்த கிருமி அப்படியே வயிற்றினுள் சென்று பல வியாதிகள் உருவாகக் காரணமாக அமைகிறது. நோய் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள 'பல்துலக்குதல்' பெரும் துணையாக அமையும் எனவேதான் பல் துலக்குவதை அண்ணலார் போதித்தார்கள். எனவே, உளூச் செய்யும்போது பல் துலக்குவது சுன்னத்தாகும்.



கஅபாவுக்குள்...



இறைநம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கு உமது (அன்பெனும்) சிறகைத் தாழ்த்துவீராக! திருக்குர்ஆன்:- 26:215



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கண் குளிர்ச்சியுடனும் மன மகிழ்வுடனும் என்னிடம் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டு, கவலையோடு என்னிடம் திரும்பி வந்தார்கள். அவர்களிடம் நான் (இதற்கான காரணத்தைக்) கேட்டேன். அப்போது அவர்கள், ( إِنِّي دَخَلْتُ الْكَعْبَةَ وَوَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ فَعَلْتُ إِنِّي أَخَافُ أَنْ أَكُونَ أَتْعَبْتُ أُمَّتِي مِنْ بَعْدِي ) "நான் கஅபாவுக்குள் சென்றேன். அவ்வாறு செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது விரும்புகிறேன். எனக்குப்பின் என் சமுதாயத்தாருக்கு நான் சிரமத்தை ஏற்படுத்தி விட்டேனோ என நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-799



அதாவது, நாம் கஅபாவுக்குள் சென்றதை அறிந்து, மக்கள் அனைவரும் அவ்வாறு செல்ல முனைந்தால் நெரிசல் காரணமாக பெரும் பிரச்சனை தோன்றிவிடுமோ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அஞ்சி இருக்கலாம் என்று தோன்றுகிறது.



இஷாத் தொழுகை



நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ أَنْ يُؤَخِّرُوا الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ نِصْفِهِ ) என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால் இஷாத் தொழுகையை இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை, அல்லது பாதி இரவு வரை தாமதப்படுத்தித்தான் தொழ வேண்டும் என நான் உத்தரவிட்டிருப்பேன். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல் புகாரீ-571, முஸ்லிம்-1122, அபூதாவூத்-42, திர்மிதீ-152



உங்களில் இறைநம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கின்றார். திருக்குர்ஆன்:- 9:61



இஷாத் தொழுகையின் நேரம் இரவின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் இத் தொழுகையை ஆரம்ப நேரத்திலும் தொழுதிருக்கிறார்கள். அதன் இறுதி நேரத்திலும் தொழுதிருக்கிறார்கள். ஆனால், அண்ணலார் இத்தொழுகையை பிந்திய நேரத்தில் தொழுவதைத்தான் விரும்பியுள்ளார்கள். ஆனாலும் தனது சமுதாயத்தினருக்கு சிரமம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் விரும்பிய நேரத்தில் தொழ வேண்டுமென்று உத்திரவிடவில்லை.



பாதி இரவு கழிந்த பின்னர் அல்லது இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்து பின்னர் தான் இஷாத் தொழ வேண்டும் என்று ஏவப்பட்டிருந்தால் நம்மில் பலருக்கும் இஷாத் தொழுகை தவறிவிடும் என்பது உறுதி.



சிறுநீர் கழிக்கும்போதெல்லாம்



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூஜாவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அண்ணலாருக்குப் பின்னால் நின்று கொண்டார்கள். அப்போது அண்ணலார், ( مَا هَذَا يَا عُمَرُ ) "உமரே என்ன (விஷயம்)?" என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "தாங்கள் (சிறுநீர் கழித்தபின்) தூய்மையை செய்து கொள்வதற்காக தண்ணீர் கொண்டு வந்துள்ளேன்" என்று கூறினார்கள்.



அதற்கு அண்ணலார், ( مَا أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً ) "சிறுநீர் கழிக்கும்போதெல்லாம் தண்ணீரால் தூய்மை செய்ய வேண்டும் என்று நான் கட்டளையிடப்படவில்லை. (மண்கட்டி மூலம் தூய்மை செய்து கொள்ள அனுமதி உள்ளது), ஒவ்வொரு முறையும் தண்ணீர் மூலம் நான் தூய்மை செய்தால் (என் சமுதாயத்தினருக்கு) அது கட்டாயமாகி விடும். (மண்கட்டி மூலம் தூய்மை செய்ய அனுமதி உள்ளது என்பது தெரியாமல் போய்விடும்)" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூது-38



சிறுநீர் கழித்த பின் அவசியம் சுத்தம் செய்ய வேண்டும். அதற்காக தண்ணீரைக் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல. தண்ணீரால் தூய்மை செய்வது நல்லது. இருந்தாலும், சுத்தமான மண் கட்டியைக் கொண்டும் சுத்தம் செய்யலாம் என்பதையே இந்த நபிமொழி விவரிக்கிறது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல் அனைத்தையும் நாம் முறையாக கடைப்பிடித்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெறுவோமாக! ஆமீன்!

வெள்ளி, செப்டம்பர் 23, 2022

மக்கா

#மக்கா கஃபா

1) முதல் மனிதர் ஆதம் அவரது மனைவி ஹவ்வா அவர்கள் பூமியில் இறக்கபட்ட இடம் மக்காவாகும்.

2) தங்கள் இறைவனை வணங்க தாங்கள் வாழ்ந்த இடத்தில் எழுப்பிய முதல் இறையில்லம் கஃபா இருக்குமிடமாகும்.
 
3) அவர்கள் அந்த பூமியில் வெறும் 40 வருடமே வசித்ததாகவும் பின் அல்லாஹ்வின் அருளை தேடி வேறு இடம் சென்றதாக ஹதீஸ் உள்ளது.
 
4) அதற்கு பின் அவர்கள் மூலம் மக்கள் பெருகினர்.. உலகம் முழுவதும் பல திசைகளில் பரவினர்.. ஆனால் இந்த மக்கா மனிதர்கள் வசிக்க அடிப்படை தேவையற்ற பாலைவனமாகவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது.

5) நூஹ் நபி காலத்தில் உலகம் முழுதும் ஏற்பட்ட வெள்ளத்தில் மண்ணுள் புதைந்தும் போனது.

6) ஆதம் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் தோன்றிய இப்ராகிம் நபி மூலம் இறைவன் இந்த மக்காவை முஸ்லிம்களின் தலமையகமாக ஆக்க நாடுகிறான்.

7) இப்ராகிம் நபியுடைய மனைவி ஹாஜரா அவர்களையும் அவர்களது மகன் கைகுழந்தையாக இருந்த இஸ்மாயில் அவர்களையும் இறைவன் மக்காவில் விட்டுவிட்டு சென்றுவிடுமாறு கட்டளையிடுகிறான்.

8) ஆள் நடமாட்டம் இன்றி இருக்கும் மக்கா பாலைவனத்தில் இறைவனின் கட்டளைக்கிணங்கி மனைவி, பிள்ளையை விட்டுவிட்டு செல்கிறார் மனைவியும் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து ஒத்துழைக்கிறார்.

9) இபுராகிம் நபி கொடுத்து சென்ற உணவும் தீர்ந்து தொண்டை வரண்டு கைக்குழந்தை இஸ்மாயில் கதறி அழ தண்ணீர் தேடி அருகில் இருந்த இரு குன்றுகளுக்கிடையே மாறி மாறி ஓடுகிறார் அவரது தாய் ஹாஜரா அவர்கள்.

10) உதவிகிட்ட வில்லை, குழந்தையின் அழுகுரலும் அடங்கியது பதறிய திரும்பிய தாய்க்கு அங்கு இறைவனின் அற்புத அதிசயம் காட்சி அளித்தது.. குழந்தைக்கு அருகில் நீரூற்று உருவாகி குழந்தையின் வாயை தொட்டிருந்தது.
 
11) தண்ணீரையும், அங்கு கிடைத்த பேரீச்சைகளையும் கொண்டு போதுமாக்கி கொண்டனர் அந்த தாயும், மகனும்.

12) அப்பொழுது அவ்வழியாக வந்த அரபி மொழி பேசும் நாடோடி கூட்டம் தண்ணீர் இருப்பதை அறிந்து அங்கயே இருப்பிடம் அமைக்க அந்த தாயிடம் அனுமதி கேட்கிறது.

13) அண்ணை ஹாஜரா அவர்களும் சில நிபந்தனை அளிக்க அவர்கள் ஏற்று கட்டுப்பட்டு அங்கு இருப்பிடங்களை அமைத்து அது இறைவன் நாட்டபடி ஊராகிறது…( அல்லாஹ்_அக்பர்).

14) பின் இறைவன் முதல் மனிதரால் கட்டபட்ட முதல் இறையில்லம் இருந்த இடத்தில் அந்த ஆலயத்தை மீண்டும் எழுப்ப நாடிகிறான்.

15) இப்ராகிம் நபிக்கு கட்டளையிட அவர் மீண்டும் மக்கா திரும்பி தன் மகன் இஸ்மாயில் அவர்களுடன் இணைந்து அல்லாஹ் அறிவித்த இடத்தில் பழைய ஆலயத்தை அதன் அடிதளத்தில் இருந்து மீண்டும் எழுப்பிகிறார்கள்.

16) இப்ராகிம் நபிக்கு இறைவன் சோதனையாக தன் மகனை அறுத்து பலியிட கனவை கொடுக்க… அதுவே இறை ஆணை என்று தன் மகனை அறுத்து பழியிட முனைகிறார் மகனும் உடன்படுகிறார்..

 (சுப்ஹானல்லாஹ்) மகனை அறுக்க கத்தியுடன் செல்லும் தந்தையை திசை திருப்ப சைத்தான் நாடுகிறான் அவரது மனசை மாற்ற முயற்சிகிக்கிறான் ஆனால் அந்த இடத்தில் கல்லை எறிந்து தன் மனசை ஒரு நிலைபடுத்தி மகனை அறுக்க ஆயத்தமாகிவிட்டார்.

ஆனால் நரபலி விரும்பாத கருணை இறைவன் அதை சோதனை என தெளிவுபடுத்தி தனக்காக ஆட்டை அறுத்து இறைவழியில் செலவிட கட்டளையிடுகிறான்.

17) தந்தைக்கு பின் மகனும் இறைவனின் தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கபட்டு அங்கே இஸ்லாம் நிலைநாட்டபட்டது.

18) அவர்களது காலத்துக்கு பின் அங்குள்ள மக்கள் அவர்களது போதனையின் படி அங்கு இஸ்லாத்துடன் வாழ்ந்தனர்.

19) பல நூற்றாண்டுகள் கடந்தன பல நபிமார்கள் கடந்தனர்… மக்காவில் மனித இனம் பல்கி பெறுகியது கூடவே குழப்பமும், பெருகியது.

20) அங்கு அறியாமை காலத்து பழக்கம் மெல்ல மெல்ல நூதனமாக நுழைய தொடங்கியது.
 
21) சிலை வணக்கம் ஆரம்பமானது, விபச்சாரம், குடி, கொலை அநாகரீகமான செயல் பல்கி பெறுகியது.

22) உலகில் முதல் மனிதர், முதல் இறை தூதர், ஆதம் அவர்கள் ஆரம்பித்த பிரச்சாரம் அதே இடத்தில் இறுதி தூதரை கொண்டு இறைவன் இஸ்லாத்தை நிறைவாக்க நாடிகிறான்.. ஆம் முகமது நபி(ஸல்) பிறக்கிறார்கள்.

23) அவரது 40 வது வயதில் இறைவன் தனது தூதராக தேர்ந்தெடுகிறான்.

24) 63 வயதில் மரணித்த முகமது நபி (ஸல்) இறைவன் நாடிய மிகப்பெரிய வேலைகளை செய்து முடிக்க எடுத்து கொண்ட காலம் வெறும் 23 ஆண்டுகள்… அதிலும் 10 ஆண்டுகள் ஒடுக்கபட்டே கழி்ந்தது… மீதம் உள்ள 13 ஆண்டுகள் போதிய தூக்கம், ஒய்வு, உணவு, இன்றி ஓயாது உழைத்து இறைவன் கொடுத்த வேலைகளை செவ்வனே செய்து முடித்தார்கள்… ஆம் உலகம் முழுவதும் இஸ்லாத்தை எத்தி வைத்தார்கள்.

25) இஸ்லாம் ஆரம்பம் ஆன இடத்திலயே முற்று பெற்றது… ஆம் மக்காவில் ஆரம்பம் ஆகி அங்கயே முற்றும் பெற்றது… அங்கு இப்றாகிம் நபி போதனைக்கு பிறகு தோண்றிய சிலை வணக்கம், தீய பழக்கவழக்கம் முகமது நபி ஸல் அவர்களால் அழித்து இஸ்லாம் இறுதியாக மறுசீரமைக்கபட்டது.

26) இப்ராகிம் நபியின் தியாகங்கள் இறைவனால் ஹஜ் கிரிகளாக்கபட்டது..
அங்கு இறைவனின் மன்னிப்பையும், நன் மரணத்தையும் மட்டுமே நாடி வெள்ளை உடையணிந்து வருபவர்களுக்கு பெரும் நன்மாரயம் இறைவனால் கிடைக்க பெறுகிறது.

27) அங்கு இப்ராகிம் நபியின் மனைவி அண்ணை ஹாஜரா அவர்கள் இரு குன்றுகளுக்கிடையே ஓடியது போன்று அந்த கஷ்டத்தை நினைவு கூற அதே குன்றுகளுகிடைய ஓட ஹாஜிகளுக்கு கடமையாக்க பட்டது…. தன் மகனையும் இறைவனுக்காக பலி கொடுக்க நாடிய மாபெரும் இறை விசுவாசத்தை நினைவு கூறும் பொருட்டு குர்பானி கடமையாக்கபட்டது…

சைத்தானின் எண்ணங்களை கற்களை கொண்டு எறிந்து மனசை கட்டுபடுத்திய அந்த கனத்த இதயத்தை நினைவு கூற கல் எறிந்த அதே இடத்தில் கல் எறிய முஸ்லிம்களுக்கு கடமையாக்கபட்டுள்ளது. சுப்ஹானல்லாஹ்............................................

28) மக்கா உலகம் அழியும் வரை இறைவனால் பாதுகாக்கபடும் நகரமாக இறைவனாலயே அறிவிக்கபட்ட இடம்..
அங்கு நன்மை செய்தாலும் கூலி பன் மடங்கு, தீமை புரிந்தால் அதற்க்கு கேடான கூலியும் பன்மடங்காகும்.

29) மேலும் உலக முடிவு நாளின் அடையாளமாக வர இருக்கும் கொடியவன் தஜ்ஜால் மக்காவினுல் நுழைய சக்தி பெறமாட்டான் என்பது இறைவனின் வாக்கு.

30) உலகின் முதல் ஆலயம் மக்கா ஹரம். இரண்டாவது ஆலயம் பாலஸ்தீனில் உள்ள மஸ்ஜித் அக்ஸாவாகும்….
இவையே மக்கா வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அடிபடை விசயங்களாகும்…

வெள்ளி, செப்டம்பர் 09, 2022

தற்கொலையும், இஸ்லாமும்,

வாழ்ந்து காட்டுவோம்!

 

قال الله تعالي : وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا

 

قال رسول الله صلي الله عليه وسلم : مَنَ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

 

2003 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதியை (World Suicide Prevention Day) உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization) கடைபிடித்து வருகிறது. தற்கொலை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும், தற்கொலையைத் தடுக்க உதவுவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் தேசிய தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

 

உலகளாவிய ரீதியில் 40 விநாடிகளுக்கு ஒரு முறை என்ற ரீதியில் 3000 பேர்கள் தினமும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. பெண்களைவிட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

 

உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 8 லட்சம் மக்கள் தற்கொலை செய்து மடிகின்றனர். (40 விநாடிகளுக்கு ஒரு மரணம்).

 

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேரும், தமிழ்நாட்டில் சுமார் 10,000 பேரும், சென்னையில் 1300 பேரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். ஆண்டு தோறும் சுமார் 2 கோடி பேர் தற்கொலை முயற்சியிலிருந்து தப்புகிறார்கள்.

 

எனவே, உலக அளவில் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, கடன் தொல்லை, தீராத நோய், வியாபாரத்தில் நஷ்டம், மாமியார் மருமகள் சண்டை, பெற்றோர்களுடன் மனஸ்தாபங்கள் என்று தற்கொலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து எதிர்நீச்சல் போட்டு முன்னேற தெரியாத கோழைகளுக்கு தற்கொலை மிகச் சிறந்த ஆயுதமாக சித்தரித்து காட்டப்படுகிறது.

 

தற்கொலை என்பது தாங்க முடியாத துன்பத்திலிருந்து தப்பிக்க எடுக்கின்ற ஒரு தீவிர முயற்சியாகும்.

 

கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு தான் தற்கொலை. சாவதற்கு எடுக்கும் முயற்சியை, துணிச்சலாய் வாழ்வதில் காட்ட வேண்டும்.

 

தற்கொலை விஷயத்தில் படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் கிடையாது. எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தான் தீர்வு என்றால் உலகம் இந்நேரம் பூண்டற்று போயிருக்கும்.

 

கடுமையான குற்றம்

 

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا

நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (மறுமை நாளில்) நரகில் நுழையச் செய்வோம். அல்லாஹ்வுக்கு இது சுலபமானதே ஆகும். திருக்குர்ஆன்:- 4:29,30

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَنَ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ شَرِبَ سَمًّا فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَرَدَّى فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا )

எவர் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூரான ஆயுதத்தை வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார். எவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக்கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டேயிருப்பார். எவர் மலையின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் தள்ளப்பட்டு மேலிருந்து கீழே என்றென்றும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1365, முஸ்லிம்-175, திர்மிதீ-2044

 

தற்கொலை செய்தவர் என்றென்றும் நிரந்தரமாக வேதனை செய்யப்படுவார் என்ற மேற்கண்ட நபிமொழி கூறுவதின் விளக்கம்: "நீண்ட காலம் நரகத்தில் வேதனை செய்யப்படுவார் என்பதேயாகும். அல்லது இந்த குற்றத்திற்கு நிரந்தரமாக நரகமே தண்டனையாகும். இருப்பினும் இறை நம்பிக்கை (ஈமான்) இருப்பதால் இறுதியில் சொர்க்கம் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என்று விளக்கம் அளித்திட வேண்டும். தற்கொலை செய்தவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர் அல்லர். நிரந்தர நரகம் இறைமறுப்பாளர்களுக்கு மட்டுமே ஆகும். நூல்:- அல்மின்ஹாஜ்

 

விபச்சாரம் செய்தல், திருடுதல், கொலை செய்தல், கொள்ளையடித்தல் போன்ற பெரும் பாவப்பட்டியலில் தற்கொலை செய்தலையும் சேர்க்கப்படும் என்கிறது இஸ்லாம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களில் எவர் இறந்தாலும் இறுதிக் கடமை எனும் ஜனாஸா தொழுகையை தானே இமாமாக நின்று நடத்த விரும்புவார்கள். ஆனால், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த முன் வராமல் வெறுத்து ஒதுங்கி கொள்வார்கள். காரணம், அது பெரும் பாவச்செயல் என்பதை உணர்த்துவதற்காக.

 

அல்லாஹ் தடை செய்த ஒன்றை அது தடுக்கப்பட்டது என்று அறிந்து கொண்டே தடையை மதிக்காமல் துணிவோடு எவர் அதனை செய்கிறாரோ அவரை இறைவன் நரகத்தில் நுழைக்கிறான். இஸ்லாத்தின் தற்கொலை என்ன? மரணம் வரவேண்டும் என ஆவல் கொள்வதும் ஆகுமானதல்ல. ஏனெனில், அல்லாஹ்வின் எண்ணற்ற அருட்கொடைகளில் வாழ்க்கையும் மிகப் பெரியதோர் அருட்கொடையாகும். எனவே, இந்த அருட்கொடை முடிந்து விட வேண்டும் என்றோ அல்லது பறிக்கப்பட வேண்டும் என்றோ நாடுவது உண்மையில் இறைவனின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தாமல் அதனை அவமதிப்பது போன்றதாகும். எனவே, இதுவும் ஒரு பாவச் செயல் என்பது வெளிப்படை.

 

நபியவர்களின் முன்னறிவிப்பு

 

சஹல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களோடு போரிட்டு முடிந்த பின்பு தம் படையினரிடம் திரும்பியபோது நபியவர்களின் தோழர்களிடையே (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் எதிரிகளில் அதிகமானோரை கடுமையாக வெட்டி வீழ்த்தினார். ( مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلاَنٌ ) "இன்று இவரைப் போன்று நம்மில் வேறு எவரும் தேவையான அளவுக்கு நிறைவாக போரிடவில்லை" என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

 

அப்போது நபியவர்கள், ( أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ ) "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று அந்த வீரரைப் பற்றி கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் அவ்வீரர் (போரில்) கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால், (வேதனை தாங்க இயலாமல்) அவசரமாக இறந்து போக விரும்பி தனது வாளின் முனையை தன் மார்புகளுக்கிடையே சொருகிக் கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டார். இதனை கண்காணித்த ஒருவர் (அக்ஸம் பின் அபில் ஜவ்ன்) நபியவர்களிடம் வந்து, ( أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ ) "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன்" என்றார். பிறகு அவ்வீரரைப் பற்றி தாங்கள் கூறியதின்படி ஆகிவிட்டது என்று கூறிவிட்டு அந்த வீரர் நடந்து கொண்ட விதத்தை விவரித்தார். நூல்:- புகாரீ4203, முஸ்லிம்-179

 

போரில் கடுமையான காயம் ஏற்பட்டு வேதனை தாங்காமல் அவர் துடித்தபோது இஸ்லாமிய நம்பிக்கையின் மீது அவருக்கு விரக்தி ஏற்பட்டுவிட்டது. இவரது முடிவு இவ்வாறு அமையும் என்பதே அல்லாஹ்வின் மூலம் அறிந்ததனாலேயே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "அவர் நரகவாசி" என முன்னறிவிப்பு செய்தார்கள்.

 

தற்கொலை செய்பவர் நற்செயல்களை செய்திருந்தாலும் நரகம் செல்வது உறுதியென இந்நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். மனிதனின் உயிர் அமானிதம்; அது மனிதனுக்குச் சொந்தம் அல்ல. அது இறைவனுக்கே சொந்தம் என்பதை அவர் மறந்துவிட்டார். அல்லது மறுத்து விட்டார் என்றே பொருளாகும். இந்த குற்றத்திற்கு தண்டனை நரகம் தான் என்பதில் ஐயமில்லை. அவசர புத்தியால்தான் அதிகமான தற்கொலைகள் நிகழ்கின்றன.

 

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். திருக்குர்ஆன்:- 21:37

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ ‏ ) நிதானம் அல்லாஹ்வின் அருட்பண்புகளில் ஒன்றாகும். அவசரம் ஷைத்தானின் குணங்களில் ஒன்றாகும். நூல்:- திர்மிதீ-2012

 

மனிதன் பற்றி பிடிக்க வேண்டியது அல்லாஹ்வின் பண்பையா? அல்லது சபிக்கப்பட்ட ஷைத்தானின் குணத்தையா? என்று சற்று யோசிக்க வேண்டும்.

 

இறை தீர்ப்பு வரட்டும்

 

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தபூக் போருக்கு சென்றனர். நானும் செல்ல தான் எண்ணினேன். ஆனால், (என்னுடைய பொடுபோக்குத் தனத்தால்) தாமதமாகியது. அதனால் நான் செல்ல முடியவில்லை. சில நாள்களுக்குப் பிறகு போர் முடிந்து நபியவர்கள் மதீனா மாநகர் வந்து சேர்ந்தார்கள். பிறகு நான் நபியவர்களை சந்தித்து சலாம் கூறினேன். நபியவர்கள், "என்ன விஷயம் போருக்கு வராமல் உம்மை பிற்படுத்திவிட்டது?" என்று வினவினார்கள். "எனக்கு எந்த தங்கடமும் இல்லை" என்று என்னுடைய உண்மை நிலையை கூறினேன்.

 

நபியவர்கள், ( أَمَّا هَذَا فَقَدْ صَدَقَ فَقُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيكَ ) "இவர் உண்மை உரைத்துவிட்டார்" (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) “சரி, எழுவீராக! அல்லாஹ் உமது விஷயத்தில் தீர்ப்பளிப்பான்" என்று கூறினார்கள். என்னுடன் எவரும் பேசக்கூடாது என்றும் நபியவர்கள் தடை விதித்தார்கள். அதனால் என்னுடன் எவரும் பேசாமல் என்னை விட்டு ஒதுங்கி செல்ல ஆரம்பித்தனர். இந்த உலகம் மாறிவிட்டது போன்ற நிலை எனக்கு ஏற்பட்டது. பூமி எவ்வளவு விசாலமாய் இருந்தும் என்னை பொருத்தவரையில் அது குறுகியது போன்று (வீடு வாசல்களெல்லாம் எனக்கு வெறுப்பாகி) நான் உயிர் வாழ்வதே மிக்க கஷ்டமாயிருந்தது.

 

நான் கடைவீதியில் சுற்றி வருவேன். ஆனால், என்னிடம் எவரும் பேச மாட்டார்கள். நான் பள்ளிவாசலுக்குச் சென்று நபியவர்கள் அருகிலேயே தொழுவேன். அவர்களை நான் கடைக் கண்ணால் பார்ப்பேன். நான் தொழும்போது என்னை அவர்கள் கவனிப்பார்கள். நான் அவர்களின் பக்கம் திரும்பினால் அவர்கள் (என்னை புறக்கணித்து) வேறு பக்கம் திரும்பி கொள்வார்கள். இவ்வாறே தொடர்ந்தது. இதனிடையே நாற்பது நாள்கள் ஓடி விட்டன. அப்போது என் மனைவியை விட்டு (நிரந்தரமாக அல்லாமல்) தற்போது நான் விலகி இருக்க வேண்டுமென நபியவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்படி நான் என் மனைவியை விட்டு பிரிந்து விட்டேன்.

 

இதே நிலையில் ஐம்பது நாள்கள் கழிந்தன. பிறகு அல்லாஹுத்தஆலா எங்களை மன்னித்து திருவசனங்களை (9:118,119) எங்கள் விஷயத்தில் இறக்கியருளினான். பிறகு நபியவர்களை சந்தித்தேன் அவர்கள் முகம் மலர்ந்தது. எனக்கு வாழ்த்து கூறினார்கள். நூல்:- புகாரீ4418, முஸ்லிம்-5346

 

நபித்தோழர்கள், அருமை நாயகம் (ஸல்) அவர்களின் நேசத்தைப் பெற மனைவி, மக்கள், செல்வம் இன்னும் உயிரைக்கூட இழக்க தயாரானார்கள். மாறாக, உலகச் செல்வங்களுக்காக நபியவர்களின் நேசத்தை இழக்க தயாராக இல்லை. அதனால் தான் நபியவர்களுடன் பேச முடியாமல் ஐம்பது நாள்கள் கழிந்ததை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஒரு பேரிழப்பாக கருதி உலகத்தை வெறுத்தார்கள்.

 

ஆனாலும், போருக்கு செல்லாமல் தங்கிவிட்ட தன்னுடைய தவறை எண்ணி மனம் வருந்தி பிரார்த்தித்தால் இறைவன் மன்னிப்பான் என்று உறுதியாக நம்பினார்கள். தாம் அதிகம் நேசித்த நபியவர்களும், தன் இனத்தவர்களும் தன்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்றெண்ணி வாழ்க்கையே வெறுத்து விட்டது என்பதற்காக வாழ்வியலில் விரக்தி அடைந்து தற்கொலையை சரியான தீர்வு என்ற மோசமான முடிவுக்கு வரவில்லை.

 

நீங்கள் தைரியத்தை இழந்து விட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே மேலானவர்கள். திருக்குர்ஆன்:- 3:139

 

இவ்வுலக வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டும் கிடைக்கும் அரிதான வாய்ப்பாகும். அதில் கொலை, விபச்சாரம், திருட்டு போன்ற பாவங்கள் செய்துவிட்டால் பின்னர் மனம் வருந்தி பாவமன்னிப்பு தேடிக்கொள்ள நேரம், காலம் இருக்கிறது. ஆனால், தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட பின்னர் அதற்குண்டான பாவமன்னிப்பை கேட்பதற்கு நேரம், காலம் இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டு விடும்.

 

திருமறை கூறும் உத்தமி

 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நயவஞ்சகர்கள் என் கற்பு நெறி மீதான அவதூறை கட்டவிழ்த்து விட்டனர். இச்செய்தியை நான் செவியேற்றதும் அன்றிலிருந்து பகல் முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். ஒரு நாள் (எனது கணவர்) நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து அமர்ந்தார்கள். இந்த வதந்தி கிளம்பியதில் இருந்து அவர்கள் என்னிடம் வந்து இவ்வாறு அமர்ந்ததில்லை.

 

அவர்கள் சற்று நேரம் இறைவனின் நினைவு கூர்ந்தார்கள். அதன்பின் ( يَا عَائِشَةُ فَإِنَّهُ بَلَغَنِي عَنْكِ كَذَا وَكَذَا، فَإِنْ كُنْتِ بَرِيئَةً فَسَيُبَرِّئُكِ اللَّهُ، وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ، فَإِنَّ الْعَبْدَ إِذَا اعْتَرَفَ بِذَنْبِهِ ثُمَّ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ ) “ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்கு செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் பாவமீட்பு பெற்றுக்கொள். ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக்கொண்டு மனம் திருந்தி பாவமன்னிப்பு கூறினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்" என்று கூறினார்கள்.

 

இது நாள் வரை அழுது கொண்டிருந்த நான் நபியவர்களின் இவ்வறிவுரைக்குப் பிறகு அழுவதை நிறுத்திவிட்டேன். அந்நேரம் நபியவர்களிடம் துணிந்து பேச ஆரம்பித்தேன். இந்த செய்தியை உண்மையான நீங்கள் நம்புகிறீர்கள். இந்நிலையில் நான் உத்தமி என்று கூறினாலும் நீங்கள் என்னை நம்பப்போவதில்லை. ஆனால், எனது இறைவனுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். என்று கூறிவிட்டு திருமறை (12:18) வசனத்தை ஓதினேன். பிறகு நான் எழுந்து சென்று விட்டேன். தவறேதும் செய்யாத என்னை என் இறைவன் நிச்சயம் குற்றமற்றவள் என்று நிரூபிப்பான் என நம்பினேன். சற்று நேரத்தில் இறை வசனம் இறக்கப்படுவதற்கான அறிகுறி நபியவர்களின் திருமுகத்தில் தென்பட்டது.

 

"ஆதாரமற்ற செய்திகளை பரப்பியவர்கள் உங்களில் ஒரு பிரிவினரே" என்று துவங்கும் (24:11) பத்து திரு வசனங்கள் அருளப்பெற்றது. நூல்:- புகாரீ-2661, முஸ்லிம்-5349

 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கும் தீர்வு காண்பதற்கு எவ்வித பதட்டமும் அவசரமும் கொள்ளாமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவன் மீதே பொறுப்பு சாட்டிவிட்டு பொறுமையோடு இருந்தார்கள். அதன் பரிசாகத்தான் இறைவன் திருவசனங்களில் மூலம் அவர்களை உத்தமி என்று சான்று பகிர்ந்தான்.

 

"வாழ்க்கையின் சோதனைகளைத் தாண்டும் மனமில்லாத கோழைகள் தான் கௌரவமான மரணத்தை சந்திக்காது தற்கொலை செய்து கொள்கிறார்கள்" என்கிறார் அரிஸ்டாட்டில்.



தொழவைக்க வேண்டும்

 

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதரை கொண்டுவரப்பட்ட போது அவருக்காக நபியவர்கள் தொழ வைக்கவில்லை. நூல்:- முஸ்லிம்-1779, திர்மிதீ-988

 

இந்த நபி மொழியை ஆதாரம் காட்டி தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக்கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர் அது தவறாகும். தற்கொலை என்பது இறைவன் இரவலாக கொடுத்த உடலை தன் இஷ்டத்திற்கு அழித்துக் கொண்டதுடன் துன்பத்தில் சிக்கி இருக்கும் மற்றவர்களையும் இவ்வாறு செய்ய தூண்டுகிறது என்பதால் இது கொடிய பாவமென்று பிறருக்கு உணர்த்துவதற்காகவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழ வைக்கவில்லை.

 

மற்றபடி தற்கொலை செய்தவருக்கு தொழ வைக்கலாமா? என்றால் அவசியம் தொழ வைக்க வேண்டும். நபித்தோழர்கள் தொழுதுள்ளார்கள். மற்றவர்களும் தொழக்கூடாது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை. ஏனென்றால், மார்க்கத்தில் இதற்கு தடையில்லை என்பதாகும்.

 


கிப்லாவை நோக்கி தொழும் அனைவர் மீதும், தற்கொலை செய்தவர் மீதும் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று மாமேதைகளான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) போன்றவர்கள் கூறுகிறார்கள். தற்கொலை செய்தவருக்கு இமாம் தொழ வைக்கக்கூடாது இமாம் அல்லாத மற்றவர்கள் தொழ வைப்பார்கள் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் நூல்:- திர்மிதீ-988

 

பிரார்த்திக்கலாம் 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்றபோது நபியவர்களுடன் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் மற்றும் அவருடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதனும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றனர். (அவர்கள் மதீனாவுக்கு சென்றபோது) மதீனாவின் தட்பவெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துவரவில்லை. அதனால் அந்த மனிதருக்கு நோய் ஏற்பட்டது. நோயின் வேதனை பொறுக்க முடியாமல் பதறிப் போனவர் தம்முடைய ஒரு பெரிய அம்பை எடுத்து தமது கைநாடியை அறுத்துக் கொண்டார். கையிலிருந்து இரத்தம் கொட்டியது இறுதியில் அவர் இறந்து விட்டார்.

 

அவரை துஃபைல் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள். அவர் நல்ல நிலையில் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதை கண்டார்கள். அவரிடம், ( مَا صَنَعَ بِكَ رَبُّكَ ) "உம்முடைய இறைவன் எவ்வாறு உம்மிடம் நடந்து கொண்டான்?" என்று வினவினார்கள். அதற்கு அவர், ( غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صلى الله عليه وسلم ) "நான் நபியவர்களுடன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு வழங்கினான்" என்று பதிலளித்தார்.

 

துஃபைல் (ரலி) அவர்கள், ( مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ ) "ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருக்கின்றன?" என்ற வினவினார்கள். ( قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ ) "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்க மாட்டோம்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவைப் பற்றி நபியவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது நபியவர்கள், ( اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ ) "இறைவா! அவருடைய இரு கைகளுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-184

 

தற்கொலை செய்து கொண்டவருக்காக அவரின் நலன் கருதி இறைவனிடம் பாவமன்னிப்புக்கோரி பிரார்த்திக்கலாம். அந்தப் பிரார்த்தனை சம்பந்தப்பட்டவருக்கு பலன் தரக்கூடும். அதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.



வாழ்க்கையில் ஏற்படும் நோய் நொடி, வறுமை, எதிரியால் விளையும் தொல்லை ஆகிய சோதனைகளைக் கண்டு கலங்கி, உயிரோடு இருப்பதை விட செத்துப் போவதே மேல் என்று மரணத்தை எவரும் வழிய வேண்டுவது கூடாது. அதை இறைவன் விரும்பாத செயலாகும். மாறாக, சோதனைகளில் பொறுமை காக்க வேண்டும்.

 

நமது வீட்டாருக்கும், பிற மக்களுக்கும் தொழுகை, நோன்பு போன்ற நற்காரியங்களைப் பற்றி நாம் ஆர்வமூட்டுவது போல், தற்கொலை பற்றியும் அவர்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நமது கடமை என்று ஒவ்வொருவரும் எண்ணி செயல்பட வேண்டும். வாழத் தெரிந்தவர்கள் தான் தற்கொலை என்ற கோர முடிவுக்கு செல்வார்கள்.

 

எந்த கஷ்டம் வந்தாலும், எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும் இறைவன் விரும்பாத தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவை எடுக்காமல் தோல்விகளையே வெற்றியின் படிக்கட்டுக்களாக எண்ணி இறைநம்பிக்கையை ஆழமாக வைத்து முயற்சித்தால் வெற்றி உண்டு. இறைவன் நம் அனைவரையும் இறைநம்பிக்கையாளர்களாகவே மரணம் அடைய செய்வானாக! ஆமீன்

வெள்ளி, செப்டம்பர் 02, 2022

போதும் என்ற மனமே,

போதும் என்ற மனமே
பொன் மனம்

 

 : أَلْهَاكُمُ التَّكَاثُرُ حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَقال الله تعالي   

             لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ  :  قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم




போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று சொல்வதுண்டு. ஆம்! பெரிய வசதி ஒன்றும் இல்லாவிட்டாலும் உள்ளதைக் கொண்டு நிறைவு செய்யும் மனம் படைத்தவர் சிறந்தவராவார். பணம் அதிகமாக இருப்பதைக் கொண்டு ஒருவரின் செல்வ நிலையை தீர்மானிக்கலாகாது. ஏனெனில், எத்தனையோ பணக்காரர்கள் நிறையப் பணம் இருந்தும் மனக்குறை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். போதுமென்ற மனம் இல்லாமல் மென்மேலும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இவர்களின் பேராசையைப் பார்க்கும்போது இவர்களை ஏழைகள் என்றே சொல்லத் தோன்றும். 

                                                               

أَلْهَاكُمُ التَّكَاثُرُ حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ

(செல்வமும் மக்களும்) அதிகமாக வேண்டுமென்ற பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களை திசை திருப்பிவிட்டது. (எதுவரை எனில்) நீங்கள் மண்ணறைகளை சந்திக்கும் வரை. திருக்குர்ஆன் :- 102:1-2

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ ) (வாழ்க்கையில்) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6446, முஸ்லிம்-1898, திர்மிதீ-2295, அல்அதபுல் முஃப்ரத்-276

 

உண்மையில் செல்வம் என்பது போதுமென்ற மனமே ஆகும். இருப்பதைக் கொண்டு நிறைவுசெய்து, இல்லாததன் மீது பேராசை கொள்ளாமல் இருப்பவனே செல்வந்தன் ஆவான். ஏனெனில், இவனிடத்தில்தான் செல்வந்தனின் தன்னிறைவு நிலை காணப்படுகிறது. ஆக,  மனவறட்சியே உண்மையான ஏழ்மையாகும். மனதிருப்தியே உண்மையான செல்வமாகும்.

 

வயிறு நிரம்பாதவர்

 

மேலும் செல்வத்தின் மீது அளவுகடந்து ஆசை கொள்கிறீர்கள். திருக்குர்ஆன்:- 89:20

 

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு, என்னிடம் நபியவர்கள், ( يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى ) "ஹகீமே! இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறாரோ அவருக்கு அதில் அருள்வளம் செய்யப்படும். யார் மனதை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் அருள்வளம் செய்யப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேல் கைதான கீழ் கையை விடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.

 

நான், "நாயகமே! தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! தங்களுக்குப்பின், நான் இந்த உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் எதையும் கேட்டு (அவரது செல்வத்தை)க் குறைக்க மாட்டேன்" என்று கூறினேன்.

 

(இந்த நபிமொழியின் இரண்டாம் அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சி காலத்தில்) பெற்றுக்கொள்ளுமாறு ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களை (பலமுறை) அழைத்தார்கள். ஆனால், ஹகீம் (ரலி) அவர்கள் அதை ஏற்க மறுத்து வந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஹகீம் (ரலி) அவர்களுக்குக் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்தும் எதையும் வாங்க மறுத்துவிட்டார்கள்.

 

ஆகவே, உமர் (ரலி) அவர்கள், ( إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ عَلَى حَكِيمٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ ) "முஸ்லிம் சமுதாயமே! (ஃபைஉ எனும்) இந்தப் பொது நிதியிலிருந்து தமது பங்கைப் பெற்றுக் கொள்ளுமாறு ஹகீமை நான் அழைக்கிறேன். அதை அவர் ஏற்க மறுக்கிறார். என்பதற்கு நீங்களே சாட்சி" என்று கூறினார்கள். இவ்வாறு ஹகீம் (ரலி) அவர்கள் நபியவர்களுக்குப் பிறகு தாம் இறக்கும்வரை மக்கள் யாரிடத்திலும் எதையும் கேட்டுப் பெறவில்லை. நூல்:- புகாரீ-6441, முஸ்லிம்-1874, திர்மிதீ-2387

 

வெற்றி பெற்றுவிட்டார்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ ) யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1903, திர்மிதீ-2271

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَتِ الآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ ) ஒருவரது (வாழ்க்கையின்) இலட்சியம் மறுமையாக இருப்பின், அவரது உள்ளத்தில் (போதுமெனக் கருதும்) தன்னிறைவை அல்லாஹ் ஏற்படுத்துவான். அவருடைய (பிரச்சினைகளின்) சிதறல்களை அவருக்காக அவன் ஒருங்கிணைப்பான். இந்த உலகம் அவரைத் தேடிப் பணிந்து வரும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2389

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ ) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: ஆதமின் மகனே! (மனிதா!) என் வழிபாட்டிற்காக நீ நேரத்தை ஒதுக்கு! நான் உனது நெஞ்சத்தை (போதுமெனக் கருதும்) தன்னிறைவால் நிரப்புவேன்; உனது வறுமையை அடைத்தும் விடுவேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2390

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا أَرْضَاهُ بِمَا قَسَمَ لَهُ ، وَبَارَكَ لَهُ فِيهِ ، وَإِذَا لَمْ يُرِدْ بِهِ خَيْرًا لَمْ يُرْضِهِ بِمَا قَسَمَ لَهُ ، وَلَمْ يُبَارِكْ لَهُ فِيهِ ) அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ, அவருக்கு வழங்கப்பட்டதில் போதுமென்ற தன்மையை உண்டாக்கி, அதில் அவருக்கு (பரக்கத் எனும்) அருள்வளம் செய்து விடுகிறான். எவருக்கு அல்லாஹ் நலவை நாடவில்லையோ அவருக்கு போதுமென்ற தன்மையை இல்லாமலாக்கி அவருக்கு அருள்வளமும் செய்யாமல் விட்டு விடுகிறான். அறிவிப்பாளர்:- அபீல்அலாஇ பின் ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னு அபீதுன்யா

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( اللَّهُمَّ ارْزُقْ آلَ مُحَمَّدٍ قُوتًا ) "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்குப் பசியைத் தனிக்க தேவையான உணவை வழங்குவாயாக!" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். நூல்:- புகாரீ-6460, முஸ்லிம்-1904

 

வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதுமான வசதியை பெற்றிருப்பவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவராவார். பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தம்மையும் தம் குடும்பத்தாரையும் ஆளாக்கிவிடாமல் குடும்பத்தாரின் உணவுத் தேவையை நிறைவேறுகின்ற அளவிற்கு செல்வம் வழங்கிடுமாறு இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். ஆகவே, தன்னிறைவோடும் உள்ளதை வைத்துப் போதுக்கிக்கொண்டும் வாழ்வதுதான் மேலானது.

 

பரவாயில்லை

 

உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  (ஒருமுறை பசியோடு இருந்த நிலையில்) எனது வீட்டுக்கு வந்து, ( هَلْ عِنْدَكُمْ شَيْءٌ ) "உங்களிடம் உண்பதற்கு ஏதாவது (உணவு) இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், ( لاَ إِلاَّ كِسَرٌ يَابِسَةٌ وَخَلٌّ ) "காய்ந்த ரொட்டித் துண்டுகள் சிலவற்றையும் சமையல் காடியையும் (வினிகர்) தவிர வேறெதுவுமில்லை (ஆனால், அதை உங்களுக்கு கொடுப்பதற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது)" என்றேன். நபியவர்கள், ( قَرِّبِيهِ فَمَا أَقْفَرَ بَيْتٌ مِنْ أُدْمٍ فِيهِ خَلٌّ ) "(பரவாயில்லை) அதைக் கொண்டு வாருங்கள்; (சமையல்) காடி இருக்கும் வீடு எதுவும் குழம்பற்ற வெற்று வீடாக இருக்காது" என்றார்கள்.

 

அந்த ரொட்டியின்மீது சிறிதளவு புளிக்காடியை ஊற்றி அதை சாப்பிட்டார்கள். அதன் பிறகு அல்லாஹ்விற்கு நன்றி சொன்னார்கள். மேலும், "ரொட்டியுடன் புளிக்காடி எவ்வளவு நன்றாக இருந்தது" என்று கூறினார்கள். திர்மிதீ-1765, இஸ்தம்திஃ பிஹயாதிக்க

 

ஆம்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்க்கையில் எது கிடைத்ததோ அதைக்கொண்டு திருப்தியோடு வாழ்ந்தார்கள். மேலும் உண்மை நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். வீண் விரயம் செய்யாமலும் கஞ்சத்தனம் செய்யாமலும் இருப்பதைக்கொண்டு திருப்தியுடன் வாழ்ந்த நபியவர்களின் நடுத்தரமான வாழ்க்கையை இது எடுத்துக்காட்டுகிறது

 

பழங்கள், தானியங்கள், சர்க்கரை போன்றவற்றைப் புளிக்க வைத்து தயாரிக்கப்படும் அமிலத்தன்மை கொண்ட திரவப் பொருளே காடி (Vinegar) ஆகும். இதனை உணவுக்கு குழம்பாகப் பயன்படுத்துவர். அரபியில் "கல்லு" என்றும் உருதுவில் "சிர்கா" என்றும் கூறுவர். இதில் அதிகமான மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளது. செரிமானம், கபத்தை அகற்றல், ரத்த ஓட்டத்தைச் சீராக்குதல் ஆகியவை அவற்றில் அடங்கும். நூல்:- அல்மின்ஹாஜ்

 

இப்னுல் கைய்யிம் (ரஹ்)  அவர்கள் கூறினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக ரொட்டி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள், "வேறு குழம்பு அல்லது தொடு கறி உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "புளிக்காடி தான் உள்ளது. வேறு எதுவும் இல்லையே" என்றனர். அப்போது உணவு வைத்தவரின் மனதை நோகடிக்காதிருக்கவும் தம்மைத் திருப்திப்படுத்திக் கொள்ளவும் அவ்விதம் கூறினார்கள். “சிறந்த குழம்பு” என்ற சொல் அந்த நேரத்தில் புகழ்ந்து கூறப்பட்ட வார்த்தையானது, மற்ற உணவைவிட இதைச் சிறப்பிக்கும் நோக்கில் இவ்விதம் கூறவில்லை. அப்போது இறைச்சி, தேன் அல்லது பால் போன்ற பொருட்களில் இருந்து அவ்விதம் கூறியிருந்தால் புகழத்தக்கதாக இருந்திருக்கும். நூல்:-  அல்மவாஹிப்

 

விருந்தாளி

 

சவூதி நாட்டைச் சேர்ந்த அறிஞர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதன் ஒருமுறை தன்னுடைய நண்பர் வீட்டிற்குச் சென்றான். அவனுடைய நண்பர் அவனுக்கு உண்பதற்கு ரொட்டியுடன் எண்ணைய்யையும் கொடுத்து விருந்தளித்தார். விருந்தாளியாக உள்ள அந்த நண்பன், "ரொட்டியுடன் வாசனை இலைகள் இருந்தால் நன்றாக இருக்குமே" என்று கூறினான். விருந்தளிப்பவர் தம்முடைய குடும்பத்தாரிடம் சென்று, "சிறிதளவு வாசனை இலைகள் இருக்கின்றனவா?" என்று கேட்டார். ஆனால், அவர்களிடம் எதுவும் இல்லை என்பதை அறிந்த அவர், அதன்பின் அதை வாங்குவதற்காக வெளியே சென்றார்.

 

ஆனால், அவரிடம் தேவையான பணம் இல்லை. கடைக்காரர் அதை அவருக்குக் கடனாகத் தர மறுத்துவிட்டார். எனவே, அவர் தம் வீட்டிற்குத் திரும்பி வந்து, அவர் (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்வதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை எடுத்துச் சென்று கடைக்காரரிடம் அடமானமாக வைத்து வாசனை இலைகளை வாங்கி வந்து, அந்த விருந்தாளிக்குக் கொடுத்தார்.

 

அந்த விருந்தாளி சாப்பிட்டு முடித்த பிறகு, "எங்களுக்கு உணவளித்து, எங்களுடைய தாகத்தைத் தணித்து, எங்களுக்கு அளித்ததைக் கொண்டு எங்களைத் திருப்தியடையச் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்" என்று கூறினார்.

 

விருந்தளித்தவர் அதைக் கேட்டபோது வேதனையில் வெட்கப்பட்டு, உண்மையில் அல்லாஹ் உமக்கு அளித்ததைக் கொண்டு உன்னைத் திருப்தியடையச் செய்திருந்தால் என்னுடைய அங்கத்தூய்மை செய்யும் பத்திரத்தை அடமானம் வைத்திருக்க வேண்டியதில்லை" என்று கூறினார்.  நூல்:- இஸ்தம்திஃ பிஹயாதிக்க

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் வாழ்வே வாழ்வு என்பார்கள்.

 

தம்மைவிட கீழானவர்களைப் பார்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْمَالِ وَالْخَلْقِ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ ) செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிட கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6490, முஸ்லிம்-5670

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ وَلاَ تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ فَهُوَ أَجْدَرُ أَنْ لاَ تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ )  உங்களுக்குக் கீழே இருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5671, இப்னுமாஜா

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நோய் அல்லது சோதனைகளால்) பாதிப்புக்குள்ளானவரைப் பார்த்தவர், ( الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً ) (பொருள்: உனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து எனக்கு நிவாரணம் தந்த, அவனுடைய படைப்புகளில் அதிகமானோரைவிட என்னைச் சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக!) என்று கூறினால், அவர் வாழும் காலமெல்லாம் அந்த பாதிப்பிலிருந்து அவர் பாதுகாப்புப் பெறுவார். அறிவிப்பாளர்:-  உமர் (ரலி) அவர்கள்

 

இந்த நபிமொழி அறிவிப்பாளர்கள் தொடரில் வரக்கூடிய அபூ ஜஅஃபர் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பாதிப்புக்குள்ளானவரைப் பார்த்து பாதுகாப்புக் கோருபவர் அதனைத் தன் மனதிற்குள் கூறிக் கொள்வார். பாதிப்புக்குள்ளானவர் கேட்கும் விதத்தில் (உரத்து அவருக்கு முன்பாக) கூறமாட்டார். நூல்:- திர்மிதீ-3343

 

நிம்மதி என்பது இருப்பதில் திருப்திபடுவது தானே தவிர, இல்லாததிலும் இழந்ததிலும் தேடுவதல்ல.

 

அல்லாஹ்,  நம் ஒவ்வொருவருக்கும் நிறையவே தந்திருக்கின்றான். அவன் நமக்கு எதையெல்லாம் தரவில்லை என்று எண்ணிப்பார்த்து கவலைப்படுவதைவிட, எதையெல்லாம் தந்திருக்கின்றான் என்பதை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்தி சந்தோஷமாக வாழும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வதே நிறைவான வாழ்வு வாழ வழி.

 

போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர். இருப்பதை வைத்து நிறைவாக வாழக் கற்றுக்கொண்டவர். இவர்தான் உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுகிறார்.

 

செல்வம், அழகு, குழந்தைகள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட வாழ்க்கை ஆதாரங்களில் நம்மை விட மேலானவர்களைக் காணும்போது மனம் சஞ்சலப்படும். ஏக்கம் உண்டாகும். சில வேளைகளில் பொறாமைகூட ஏற்படலாம். இதைத் தவிர்க்க நல்ல வழி என்னவென்றால், நம்மைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்களை நினைப்பதுதான். அப்போது மனதுக்கு ஆறுதலும் தெம்பும் ஏற்படும். போதுமென்ற மனநிலை உருவாகும். மேலும், கொந்தளிப்பு இல்லாத வாழ்க்கைக்கு இந்த அறிவுரை துணை நிற்கும். அதே நேரத்தில், தொழுகை, தர்மம் போன்ற நற்செயல்கள் புரிவதில் நம்மைவிட மேலானவர்களையே கவனிக்க வேண்டும். இது மென்மேலும் நற்பணிகள் ஆற்ற தூண்டுகோலாக அமையும்.

 

பணம் இல்லாதவர் ஆரோக்கியம் இருக்கிறதே என்று ஆறுதல் அடையலாம். ஆரோக்கியத்தை இழந்தவர் அறிவு இருக்கிறதே என்று ஆறுதல் அடையலாம். அடுத்தவரிடம் இருப்பதைப் பார்த்து, அதை நினைத்துக் கவலைப் படுபவர்களாக ஒருபோதும் இருக்கக்கூடாது.

 

ஒன்றைப் பெறவேண்டுமென்றால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். கிடைக்கவில்லையா? கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்; இல்லாததை நினைத்துக் கவலைப்படாமல், இருப்பதை வைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும். தன்னைவிட கீழ் நிலையில் இருப்பவரைப் பார்த்து தன்னிடம் இருப்பதை வைத்து திருப்தியடைய வேண்டும்.

 

அழகில் குறைந்தவர் தன்னைவிட அழகில் குறைந்தவரைப் பார்க்க வேண்டும்; உடல் ஊனமுற்றவர்களை காணும்போது இந்த “அழகு குறைவு” என்பதெல்லாம் ஒரு குறையாகவே தெரியாது. அப்போது இப்படி ஊனமில்லாத உடல் உறுப்புகளை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றானே என்று மனநிறைவோடு அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக நாம் மாறுவோம்.

 

மேலும், உடல் ஊனமுற்றவர்கள்  தங்களுக்குக் கீழுள்ளவர்களைப் பார்க்கும் போது மன நிம்மதி அடையலாம். ஒரு கண்ணை இழந்தவர் இரு கண்களை இழந்தவரைப் பார்த்தும், இரு கண்களை இழந்தவர் கை, கால்களை இழந்தவரைப் பார்த்தும், ஒரு கையை இழந்தவர் இரு கைகளை இழந்தவரைப் பார்த்தும் ஆறுதல் பெற முடியும்.

 

நோயுள்ளவர்கள் தங்களை விட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டோரைப் பார்க்க முடியும். இவர்களை ஒரு நோயாளி பார்க்கும் போது, நமக்கு அல்லாஹ் அளித்திருக்கும் இந்த நோய் அவர்களுக்கு வந்திருக்கும் நோயை விட எவ்வளவோ குறைவானது  என்பதை உணர்வார். இதை நினைத்து "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறி, கவலையை மறந்து, தன் வாழ்வை இனிதே அமைத்துக் கொள்வார்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒருவர் தன்னிடமுள்ளதைக் கொண்டு தன்னிறைவு அடைவதோடு தனக்குக் கீழுள்ளவர்களைப் பார்த்து ஆறுதல் அடைகின்றபோது  அவரிடம் குடிபுகுந்த பொறாமை, ஆற்றாமை, பேராசை, காழ்ப்புணர்ச்சி, கவலை, அதிருப்தி, விரக்தி முதலானவை அகன்று உள்ளத்தில் அமைதி குடியேறும்; மனம் நிறைவு பெறும். அவர் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார். இந்த அற்புதமான, நடைமுறைக்கேற்ற உளவியல் வழிக்காட்டலை கற்றுத் தந்துள்ளார்கள்.

 

இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளும் மனோநிலையை வளர்த்துக்கொள்ள துணைபுரியும் மற்றும் சில வழிகாட்டல்களையும் இங்கே பார்க்கலாம்.

 

அல்லாஹ் தான் (ரஸ்ஸாக்) ஆகாரம் அளிப்பவன் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் ஆழமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

உலக வாழ்வு நிலையற்றது; அது முடியக்கூடியது, அழியக்கூடியது என்ற உண்மையை அடிக்கடி நினவு கூர வேண்டும்.

 

வீண்விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

கையேந்த வெட்கம்

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி)  அவர்கள் கூறியதாவது. என்னுடைய தந்தை உஹுது யுத்தத்தில் உயிர்த்தியாகியாக இறந்துவிட்டார். அவர் எங்களையெல்லாம் வறுமையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். நாங்கள் ஏழை குடும்பமாக இருந்தோம். மிகவும் வறுமையில் இருந்தோம். ஒருமுறை என் தாயார் என்னை அழைத்து, "நீ அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று நம் நிலையை எடுத்துச் சொல். அவர்கள் நமக்காக ஏதாவது கொடுப்பார்கள்" என்று கூறினார்கள். எவரிடமும் கையேந்தி பழக்கப்படாத நான் இப்போது கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். நேராக பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழுகைக்காக வந்தேன்.

 

அங்கு நபியவர்கள் சொற்பொழிவு மேடையில் நின்று, "மக்களே! இனி நீங்கள் யாரிடத்திலும் யாசகம் கேட்காமல் இருப்பதற்கான நேரம் வந்துவிட்டது. உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள நேரம் வந்து விட்டது. யார் பிறரிடம் கையேந்தாமல் சுயமரியாதையோடு இருந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழ வைப்பான். யார் தம்மைத் தாமே நிறைவாக்கி கொடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு அல்லாஹ் நிச்சயமாக செல்வத்தைக் கொடுத்து நிறைவாக்குவான். அல்லாஹ்வின் மீதாணையாக! உலகத்தில் அல்லாஹ் எல்லோருக்கும் கொடுக்கின்ற (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தில் பொறுமையைவிட சிறந்த ரிஸ்க் வேறு எதுவுமில்லை. நீங்கள் யாசகம் கேட்டுத்தான் ஆகவேண்டுமென்றால் என்னிடம் உள்ளதை கேளுங்கள் நான் உங்களுக்குத் தருகிறேன்" என்று உரையாற்றி கொண்டிருந்தார்கள்.

 

ஏற்கனவே கேட்கலாமா? வேண்டாமா? என்று தடுமாற்றத்தில் இருந்த நான் நபியவர்களின் அறிவுரையைக் கேட்டபின், நபியவர்களின் எதையும் கேட்காமல் தொழுதுவிட்டு அப்படியே வீட்டிற்கு வந்துவிட்டேன்.  வீட்டிற்குச் சென்று விஷயத்தை கூறினேன். “நபியவர்கள் சொற்பொழிவைச் செவியுற்ற பின்னர் என்னால் கேட்க முடியவில்லை” என்று கூறினார்கள்.

 

இரண்டாவது தடவை ஒருநாள் நபியவர்களிடம் கேட்கச் சென்றேன். அப்போதும் நபியவர்கள் யாசிப்பதை இகழ்ந்து கூறிக் கொண்டிருந்தார்கள். "மனதுக்குள் போதுமென்ற தன்மை இருக்கிறது. ஒவ்வொருவரின் மனதுக்குள் செல்வம் இருக்கிறது. மனது செல்வந்தனாக ஆகிவிட்டால் போதும். மனிதன் யாரிடமும் கையேந்த மாட்டான்" என்று நபியவர்கள் கூறியதை கேட்டதும் நபியவர்களிடம் உதவி கேட்க எனக்கு தோன்றவில்லை. நூல்:- முஅஜமுஸ் ஸஹாபா

 

நபித்தோழர்களில் பலரும் கடுமையான வறுமை வாட்டிய போதும்கூட பிறரிடம் கையேந்த வெட்கப்பட்டுள்ளார்கள்.

 

நற்பேறற்றவன்

 

ஆகவே, மனிதனின் நிலை என்னவெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடி அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை கண்ணியப்படுத்திவிட்டான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான். மேலும், (இறைவன்) அவனைச் சோதிக்க நாடி அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகின்றான். திருக்குர்ஆன்:- 89:15,16

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ وَالْقَطِيفَةِ وَالْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ ) பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் நற்பேறற்றவன் ஆவான். அவனுக்கு செல்வம் வழங்கப்பட்டால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6435

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( تَعِسَ وَانْتَكَسَ، وَإِذَا شِيكَ فَلاَ انْتَقَشَ )  (செல்வத்தின்மீது பேராசையுள்ள) அவன் இழப்புக்குரியவனாகட்டும்! அவன் அழியட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும்! நூல்:- புகாரீ- 2887

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ كَانَ لاِبْنِ آدَمَ وَادٍ مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنَّ لَهُ وَادِيًا آخَرَ وَلَنْ يَمْلأَ فَاهُ إِلاَّ التُّرَابُ وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ )  மனிதனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும் அதைப் போன்று மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனது வாயை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இதுபோன்ற பேராசையிலிருந்து) திருந்திப் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1895

 

செல்வத்தையும் ஏனைய வளங்களையும் அவனது ஞானத்தின் அடிப்படையில் மனிதர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக பகிர்ந்தளிக்கின்றான்; அந்த வகையில் எனக்கென்று அவன் நிர்ணயித்தைத்தான் நான் பெற்றுக்கொள்வேன் என்ற உண்மையை புரிந்து வைக்க வேண்டும்.

 

உலக வாழ்க்கையில் வறுமையும், பிற கஷ்ட, நஷ்டங்கள் மட்டுமன்றி செல்வமும் ஏனைய அருள்களும்கூட சோதனைகளே என்ற உண்மையை அறிய வேண்டும்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள், அவர்களின் குடும்பத்தார், நபித்தோழர்கள், நமது நல்லோர்களான முன்னோர்கள் எல்லாம் எப்படி, எவ்வாறு இருப்பதைக் கொண்டு பூரண திருப்தியுடன் வாழ்ந்தார்கள் என்பது தொடர்பில் பார்க்க வேண்டும்;படிக்க வேண்டும்.

 

இருப்பதைக் கொண்டு திருப்திகொள்ள இந்த நம்பிக்கைகளும் பார்வைகளும் நிச்சயம்  உதவும்.

 

“வெளுத்துக் கட்டிய வேட்டியில் திருப்தி கண்டவனும் உண்டு. சலவை வேட்டியில் (புத்தாடை) சரியில்லை என்று சலித்துக்கொண்டவனும் உண்டு” என்பது கிராமத்துச் சொல்வழக்கு.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا ) உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் விஷயத்தில் அச்சமற்றவராக, தம் உடல் விஷயத்தில் ஆரோக்கியம் பெற்றவராக இருந்து, அவரிடம் அன்றைய தினத்துக்குத் தேவையான உணவும் இருந்துவிட்டால், அவருக்கு இவ்வுலகமே முழுவதாக வழங்கப்பட்டுவிட்டதைப் போன்றுதான். அறிவிப்பாளர்:- உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் அல்கத்மீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2268

 

போதுமென்ற மனதோடும் மனநிறைவோடும் வாழ்வதற்குப் மேற்காணும் ஒரு நபிமொழியே போதுமானதாகும்.

 

கல்வியைத் தேடுவதில்  

 

"என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்துவாயாக!" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 20:114

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( وَبَعْدَ أَنْ تُسَوَّدُوا وَقَدْ تَعَلَّمَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كِبَرِ سِنِّهِمْ ) நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் (சட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்). ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் முதுமைப் பருவத்திலும்கூடக் கல்வி கற்றுள்ளனர். நூல்:- புகாரீ பாடம்-15 கல்வியிலும் ஞானத்திலும் பொறாமை கொள்வது

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு நபிமொழியைத் தெரிந்துக்கொள்வதற்காக அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களைத் தேடி ஒரு மாதத் தொலை தூரத்திற்கு (சிரியா நாட்டுக்கு)ப் பயணமானார்கள். நூல்:-  புகாரீ பாடம்-19 கல்வியைத் தேடி புறப்படுவது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அன்சாரி நண்பர்களில் ஒருவரிடம், "இன்றைக்கு நபித்தோழர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். வாருங்கள்! அவர்களைத் தேடிப்போய் நபிமொழிகளை கற்போம்" என்று அழைத்தார்கள். அவரோ, "என்ன ஆச்சரியம்! (உம்மை மதித்து) உம்மிடம் மக்கள் ஓடி வந்து நமக்குச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று கருதுகிறீரா?" என்று சொல்லிவிட்டார்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தாமே அன்சாரித் தோழர் ஒருவரைத் தேடி சென்றபோது, அந்த அன்சாரித் தோழர் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உடனே அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் துண்டை தலைக்கு வைத்து அவரது வாசலிலேயே படுத்துவிட்டார்கள். காற்றடித்து மண்ணை வாரி அன்னார் மீது இறைத்தது.

 

பின்னர் அந்த அன்சாரித் தோழர் வெளியே வந்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை பார்த்துவிட்டு, "நபியவர்களுடைய தந்தையின் சகோதரர் மகனே! இங்கு நீங்கள் வரக் காரணம் என்ன? என்னை கூப்பிட்டு இருந்தால் நானே உங்களிடம் வந்திருப்பேனே!" என்று கூறினார். அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை! நான் உங்களைத் தேடி வந்து நபிமொழிகளை கேட்டு அறிவது தான் முறையாகும்" என்று கூறினார்கள்.

 

அந்த அன்சாரி  நபித்தோழர் பிற்காலத்தில் ஒரு தடவை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைக் கண்டார். அப்போது அன்னாரைச் சுற்றி மக்கள் குழுமியிருந்து நபிமொழிகளை கேட்டு அறிந்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அவர் "இந்த இளைஞர் என்னைவிடப் பெரிய புத்திசாலி" எனப் பாராட்டினார். நூல்:-  முஸ்னது தாரமீ

 

கல்வியைத் தேடுவதில் போதுமென்ற மனநிலை வந்துவிட்டால், அல்லாஹ் அவருக்கு கல்வியின் வாசலை மூடிவிடுவான் என்கின்றனர் அறிஞர்கள். அதனால் தான், நமது முன்னோர்களான மார்க்க அறிஞர்கள் பலரும் மரணமாகும் தருணம் வரை கல்வியைத் தேடிக்கொண்டேயிருந்தார்கள்.

 

வணக்க வழிபாட்டில்

 

உமக்கு  உறுதி ( எனும் மரணம்) வரும்வரை உம்முடைய இறைவனை வழிபடுவீராக! திருக்குர்ஆன் :- 15:99

 

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள். கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம், ( يَا عَبْدَ اللَّهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ ) "அப்துல்லாஹ், நீ பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குக் கூறப்படுகிறதே!" என்று கேட்டார்கள். நான், ஆம்! நாயகமே!" என்றேன். நபியவர்கள், ( فَلاَ تَفْعَلْ، صُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ ) "(இனி) அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள்) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக (சிறிது நேரம்) உறங்குவீராக!" என்றார்கள். நூல்:- புகாரீ-1975

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக பேராசான் நபித்தோழர்களில் சிலர் பெருமானார் (ஸல்) அவர்களின் துணைவியரிடம் (சென்று) நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். (அவர்கள் கூறிய மறுமொழியை கேட்ட) அவர்களில் ஒருவர், ( لاَ أَتَزَوَّجُ النِّسَاءَ ) "(வழிபாடு புரிவதில் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக) நான் பெண்களை மணமுடிக்க மாட்டேன்" என்று கூறினார். மற்றொருவர், ( لاَ آكُلُ اللَّحْمَ ) "(வழிபாடு புரிவதில் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக) நான் புலால் உண்ண மாட்டேன்" என்றார். மற்றொருவர், ( لاَ أَنَامُ عَلَى فِرَاشٍ ) "(இரவில் வழிபாடு புரியவேண்டும் என்பதற்காக) நான் படுக்கையில் உறங்க மாட்டேன்" என்றார்.

 

(இதை அறிந்த) நபியவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றிவிட்டு, ( مَا بَالُ أَقْوَامٍ قَالُوا كَذَا وَكَذَا لَكِنِّي أُصَلِّي وَأَنَامُ وَأَصُومُ وَأُفْطِرُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي  ) "சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படி எல்லாம் கூறுகின்றனர். ஆனால், நான் (இரவில்) தொழுகிறேன்; உறங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன்; நோன்பை விட்டுவிடவும் செய்கிறேன். பெண்களை மணந்தும் கொள்கிறேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-2714

 

நபித்தோழர்கள் இறைவழிபாட்டில் மனநிறைவு கொள்ளாதவர்கள். அதில் அதிக ஆசையும் ஆர்வமும் உள்ளவர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள்  தமது தோழர்கள் இறைவழிபாட்டில் கொண்ட ஆர்வத்தை கண்டு பெருமிதம் கொண்டாலும், தமது உடலுக்குரிய, தமது மனைவிக்குரிய கடமைகளை மீறியவர்களாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் ஆர்வத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தினார்கள்.

 

தொழுகை, நோன்பு, ஸகாத், தர்மம், குர்ஆன் ஓதுதல், இறைதியானம் (திக்ர் தஸ்பீஹ்) போன்ற இறைவழிபாட்டில் போதுமென்ற மனநிலை வரக்கூடாது. அப்பாடா, நாம் ஓரளவு வழிபாடுகள் புரிந்துவிட்டோம். நமக்கு இது போதும் என்ற மனநிலை வரக்கூடாது. மாறாக, நாம் எவ்வளவு அதிகமாக வழிபாடு புரிந்தாலும், நாம் என்ன பெரிதாக வழிபாடு புரிந்து விட்டோம்? இது போதாது. இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்ற பேராசையின் மனநிலை வரவேண்டும்.

 

சுருங்கக்கூறின், பயனளிக்கும் கல்வியைத் தேடுவதிலும் வணக்க வழிபாட்டிலும் போதுமென்ற மனம் வரக்கூடாது. மற்ற உலக காரியங்களில், கிடைத்ததைக்கொண்டு போதுமென்ற மனம் நிறைவோடு வாழ்ந்துப் பழகவேண்டும்.

 

மோதுமென்ற மனநிறைவோடும்,  நமக்கு கிடைக்கப்பெற்றவைகளை எண்ணி, அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டக்கூடிய நற்பண்பாளர்களாகவும் அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்

பிரபல்யமான பதிவுகள்