நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
சனி, அக்டோபர் 12, 2024
ஜனாஸா தொழுகை,
வியாழன், அக்டோபர் 03, 2024
நாயகத்தின் கடைசி பேச்சு,
மறைத்துப் பழகுவோம்,
قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلَى إِخْوَتِكَ فَيَكِيدُوا لَكَ كَيْدًا
(யஅகூப் நபி யூசுஃப்பை நோக்கி!) என் அருமை மகனே! நீ கண்ட கனவைப் பற்றி உன் சகோதரர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம்; (அவ்வாறு கூறினால்) அவர்கள் உனக்கு (எதிராக) சதி செய்வார்கள். திருக்குர்ஆன்:- 12:5
இஸ்லாம் மனிதனுக்கு ஏராளமான நற்பண்புகளைக் கற்றுத் தந்துள்ளது. அதில் ஒன்று மனிதன் பிற மனிதனிடம் சில விஷயங்களை மறைத்துப் பழகவேண்டும். அவற்றில் சிலவற்றை பார்த்துவிடுவோம் வாருங்கள்.
பிறரின் குறைகள்
குறை கூறி, புறம் பேசுகின்ற ஒவ்வொருவருக்கும் கேடுதான். திருக்குர்ஆன்:- 104:1
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ) யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2442 முஸ்லிம்-5036, அபூதாவூத்-4248, திர்மிதீ-1346, முஸ்னது அஹ்மத்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ رَأَى عَوْرَةً فَسَتَرَهَا كَانَ كَمَنْ أَحْيَا مَوْءُودَةً ) யார் பிறரின் குறைகளை கண்டு அவற்றை மறைத்துவிடுகிறாரோ அவர் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையை உயிர்ப்பித்தவரைப் போன்றவர் ஆவார். அறிவிப்பாளர்:- உக்பா பின் ஆமீர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4247, முஸ்னது அஹ்மத்
பெண் குழந்தையை உயிருடன் புதைக்க நாடும் ஒருவரிடம் சூழ்ச்சி செய்தாவது அச்செயலைச் செய்யவிடாமல் தடுப்பதற்கான நற்கூலி, பிறரது குற்றங்குறைகளை மறைத்தவருக்குக் கிடைக்கும் என்பது இதன் கருத்தாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ غَسَّلَ مَيِّتًا وَكَفَّنَهُ وَحَنَّطَهُ وَحَمَلَهُ وَصَلَّى عَلَيْهِ وَلَمْ يُفْشِ عَلَيْهِ مَا رَأَى خَرَجَ مِنْ خَطِيئَتِهِ مِثْلَ يَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ ) யார் மரணித்தவரை குளிப்பாட்டி, அவருக்கு (கஃபன் எனும்) சவக்கோடி அணிவித்து, நறுமணம் பூசிவிட்டு, அவரைச் சுமந்து சென்று, அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுது, அவர் உடலில் கண்ட குறைபாடுகளை அம்பலப்படுத்தாமல் மறைத்துவிட்டாரோ அவர் பாவங்கள் நீங்கி, அன்று பிறந்த பாலகரைப் போன்று ஆகிவிடுகிறார். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1451
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِي بَيْتِهِ ) யார் மக்களின் குற்றங்குறைகளைத் துருவித்துருவி ஆராய்கின்றாரோ அவரின் குற்றங்குறைகளை அல்லாஹ் துருவித்துருவி ஆராய்வான். எவரின் குற்றங்குறைகளை அல்லாஹ் ஆராய்வானோ அவர் தமது வீட்டிலேயே இருந்தாலும் (அவரின் தீங்குகளை அம்பலப்படுத்தி) அவரை இழிவுபடுத்திவிடுவான். அறிவிப்பாளர்:- அபூ பர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4236, முஸ்னது அஹ்மத்
பிறர் குறைகளை அம்பலப்படுத்துவதின் மூலம் நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கிறோம். இதைத்தான் கிராமத்தில் "சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது" என்று கூறுவார்கள்.
உக்பா பின் ஆமீர் ரலி அவர்களின் எழுத்தர் துகைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எங்களுடைய அண்டை வீட்டார்கள் மதுபானத்தைப் பருகுகிறார்கள். நான் அவர்களைத் தடுத்துப் பார்த்தேன். எனினும் அப்பழக்கத்தை அவர்கள் கைவிடவில்லை. எனவே, நான் “இது குறித்து உக்பா பின் ஆமீர் ரலி அவர்களிடம் எடுத்துரைத்துவிட்டு, அவர்களை தண்டிக்க அரசு காவலர்களை அழைக்கப்போகிறேன்” என்று கூறினேன் அதற்கு அன்னார், ( دَعْهُمْ ) “அவர்களை விட்டு விடும்” என்று கூறினார்கள் பிறகு மீண்டும் மற்றொரு முறை நான் அன்னாரிடம் வந்து, "எங்கள் பக்கத்து வீட்டார்கள் மது அருந்துவதை கைவிட மறுக்கிறார்கள். எனவே, அவர்களுக்காக அரசு காவலர்களை அழைக்கப்போகிறேன்" என்று கூறினேன்.
அதற்கு அன்னார், ( وَيْحَكَ دَعْهُمْ لاَ تَفْعَلْ وَلَكِنْ عِظْهُمْ وَتَهَدَّدْهُمْ ) "உமக்கு கேடுவிளைக! அவர்களை விட்டு விடும். அவ்விதம் செய்ய வேண்டாம். மாறாக, அவர்களுக்கு அறிவுரை கூறி பயமுறுத்திவையும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4247
சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஹஸ்ஸால் (ரலி) அவர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று, "இன்ன மனிதர் விபச்சாரம் செய்துவிட்டார்" என்று புகார் அளித்தார்.
"எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு 80 சாட்டையடிகள் கொடுங்கள்" (திருக்குர்ஆன்:- 24:4) என்ற வசனம் இறங்குவதற்கு முன்பு இந்நிகழ்வு நடைபெற்றது.
நபியவர்கள், "ஹஸ்ஸால்! நீர் அவரை உமது ஆடையால் மறைத்து வைத்திருந்தால், அதுவல்லவா உமக்குச் சிறந்ததாக இருந்திருக்கும்" என்று கூறினார்கள். நூல்:- முஅத்தா மாலிக்
ஒருவரின் குறையை மக்களுக்கு மத்தியில் பகிரங்கப்படுத்துவது நல்லதல்ல. அதன் மூலம் பகைமை ஏற்படக்கூடும். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் தவறில் மூர்க்கத்தனமாக ஈடுபடக்கூடும். மாறாக, அவற்றை நாம் மறைத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த பாவத்தின் கனத்தை குறித்து எச்சரித்து, அவர்கள் மனம் நோகாதவாறு நளினமாக உபதேசிக்க வேண்டும் வேண்டும். சுருங்கக் கூறின்: நம் குறைகளை நாம் மறைப்பதைப் போன்றே பிறரின் குறைகளையும் மறைத்து பழகவேண்டும்.
நண்பர்களாக இருக்கும்போது செய்த தவறுகளை மறைப்பதும், அவர்களே ஒருவருக்கொருவர் எதிரிகளாக ஆகிவிட்ட பிறகு அன்று செய்த தவறுகளை இன்று அம்பலப்படுத்துவதும் ஒரு முஸ்லிமுக்குரிய நற்பண்பல்ல. இயக்கவாதிகளில் சிலர் இன்று இதை சர்வ சாதாரணமாக செய்துக் கொண்டியிருக்கின்றனர். இது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.
நோய்நொடிகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (இவ்வாறு) கூறுகிறான்: இறைநம்பிக்கையுள்ள என்னுடைய அடியானை ஏதேனும் ஒரு நோயைக் கொண்டு நான் சோதிக்கும்போது அவர் நோய் விசாரிக்க வருபவர்களிடம் என்னைப்பற்றி முறையிடாமல் இருந்தால் என்னுடைய கைதிகளில் இருந்து அவரை விடுதலை செய்துவிடுவேன். அவரது பாவத்தை மன்னித்துவிடுவேன். பிறகு அவரது உடலில் இருக்கும் மாமிசத்தைவிட சிறந்த மாமிசத்தை அவருக்கு நான் கொடுப்பேன். அவருடைய இரத்தத்தைவிட சிறந்த இரத்தத்தை அவருக்கு நான் கொடுப்பேன். அவருக்கு ஆரோக்கியத்தை வழங்குவேன். இனி அவர் வியாதியில் இருந்து ஆரோக்கியம் பெற்ற பின் புதிதாக நற்செயல் செய்ய தொடங்குவார். (அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன.) அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- ஹாக்கிம்
ஒருநாள் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! அல்லாஹ் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு விசேஷமாக சலாம் சொல்லி அனுப்பி உள்ளான். மேலும், அவர் குறித்து சந்தோசமாக இருக்கிறான். இந்தத் தகவலை அவரிடம் தெரிவித்துவிடுங்கள்" என்று கூறினார். நபியவர்கள் இந்தத் தகவலை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
நபியவர்கள், "அபூபக்ர்! உங்கள் செயல் குறித்து அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளான் என்றால், அப்படிப்பட்ட நற்செயல் எது?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "நாயகமே! நான் ஏழு ஆண்டுகளாக பல் வலியால் அவதிப்படுகிறேன். அதை யாரிடமும் எடுத்துத்துரைத்ததில்லை" என்று கூறினார். நபியவர்கள், "நீங்கள் என்னுடனே இருந்துகொண்டு ஏழு ஆண்டுகளாக பல் வலியில் அவதிப்படுவது குறித்து என்னிடம்கூட எடுத்துரைக்கவில்லையே!" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "ஒரு நேசன் (தருவதைப்) பற்றி மற்றொரு நேசரிடம் முறையிட முடியுமா?" (அல்லாஹ் கொடுத்த நோயைப்பற்றி உங்களிடம் முறையிடுவது முறையாகுமா?) என்றார்.
நமக்கு ஏற்படும் நோய்களை பொறுத்துக்கொண்டு, அதைப் பற்றி பிறரிடம் எடுத்துரைக்காமல் மறைத்துக்கொள்வது அல்லாஹ்வின் (களா கத்ர் எனும்) தலைவிதியை ஏற்றுக்கொள்வதாகும். எனவே, இதுகுறித்து அல்லாஹ் நம் மீது மகிழ்ச்சியடையக் கூடும்.
அறச்செயல்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் தனது (அர்ஷ் எனும்) அரியணையின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில், தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான். ( وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ ) (அதில் ஒருவர்) தமது இடக் கரத்திற்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாகத் தர்மம் செய்தவர். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1423, முஸ்லிம்-1869
அருமை நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( صدقةُ السرِّ تطْفِئُ غضبَ الرَّبِّ ) இரகசியமான தர்மம் இறைவனின் கோபத்தை போக்கிவிடும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ ரலி அவர்கள் நூல்:- மஜ்மஉஸ் ஸவாயித், ஜாமிஉஸ் ஸஙீர்-4978, ஸஹீஹ் ஜாமிஉ-3760
முஹம்மது பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மதீனாவில் ஏழைகள், விதவைகள் என சிலர் வாழ்ந்து கொண்டிருந்தனர். எங்கிருந்து தங்களின் வாழ்க்கைத் தேவைகளை பெற்று வாழ்கின்றனர் என்பதையும் அவர்களுக்கு யார் வழங்குகின்றார்கள் என்பதையும் அவர்களில் எவரும் அறியமாட்டார். (ஸைனுல்ஆபிதீன் எனும்) அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் மரணமடைந்ததும் அக்கூட்டத்தார் தங்களுக்குக் கிடைத்து வந்தது கிடைக்காமல் தவிப்புக்குள்ளாயினர். அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் தாம், இரவு நேரங்களில் தங்களிடம் வந்து உதவிகளைக் கொடுத்து விட்டு சென்றுள்ளார்கள் என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டனர். அன்னார் இறந்த பின்னர், (ஜனாஸா குளிப்பாட்டும்போது) முதுகு மற்றும் புஜங்களில் ஏழைகள், விதவைகளின் வீடுகளுக்கு தோல் பைகளை சுமந்துகொண்டு வந்து கொடுத்ததால் ஏற்பட்ட தழும்புகள், வடுக்கள் இருப்பதைக் கண்டனர். நூல்:- இஷ்திராகிய்யதுல் இஸ்லாம் - முஸ்தஃபா ஸபாஈ
இறைநேசர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் எப்போதும் பிரபல்யத்தை விரும்பாதவர்கள். பெரும்பாலான வணக்கங்களை மறைவாகவே செய்து வந்தார்கள்.
ஒருமுறை "ஒருமனிதர் பள்ளியில் (நஃபில் எனும்) உபரியான தொழுகை தொழுதுகொண்டிருந்தார். அன்னார், “நீர் வீட்டில் தொழுதால் என்ன? அல்லாஹ் மட்டும் பார்க்கவேண்டிய நற்செயலை மக்கள் பார்க்க செய்கிறீரே! உமக்கு என்ன தைரியம்?" என்று கண்டித்தார்கள்.
பிறர் பார்க்க நற்செயல் செய்பவர்களை பார்த்தால் கடுமையாகக் கண்டிப்பார்கள்.
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பிறர் பார்க்க பிறர் புகழ நற்செயல் செய்கிற மோசமான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்களிடம் தன்னைக்காட்டி வாழ்பவரைவிட மக்களிடம் தன்னை மறைத்து வாழ்பவரே சிறந்தவர். மேலும், மறைவாக செய்யும் நற்செயல் ஷைத்தானுக்கு பிடிக்காது. எனவே, ஒரு மனிதன் மறைவாக ஒரு நற்செயல் செய்தால் அதை அந்த மனிதன் தன் வாயால் வெளியே சொல்லும்வரை ஷைத்தான் விடமாட்டான். மறைவாக செய்த நன்மையின் ஏட்டிலிருந்து பகிரங்கமான நன்மையின் ஏட்டுக்கு மாற்றும்வரை ஓயமாட்டான். பிரபல்யத்தை எதிர்ப்பார்த்து நற்செயல் செய்கிற மனிதர்களைப் பார்த்து வருத்தப்படுகிறேன். பிறர் பார்க்க நற்செயல் செய்து பாவத்தை சம்பாதிப்பதைவிட படுத்து தூங்குவதே ஏற்றமாகும்.
இறைநேசர் காஜா முயீனுத்தீன் (ரஹ்) அவர்களின் தலைமை கலீஃபா காஜா குத்புதீன் பக்தியாரி காக்கி (ரஹ்) அவர்களின் மரணவேளை, “நான்கு நற்செயல்களை கடைப்பிடித்து வாழ்ந்தவர் மட்டுமே என் ஜனாஸாவை தொழ வைக்க வேண்டும்” என சொல்லிவிட்டு மரணித்து விடுகிறார்கள்.
1. தக்பீர் தஹ்ரீமா தவறிவிடாமல் ஐந்து வேளை தொழுதவர்.
2. அஸர் முன் சுன்னத் தொழுகையை விடாமல் தொழுதவர்.
3. தஹஜ்ஜத் தொழுகையை விடாமல் தொழுதவர்.
4. அந்நியப் பெண்ணை காமத்தோடு பார்க்காதவர்.
"இது போன்றவரை எங்கே போய் தேடுவது? உலகம் முழுதும் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்" என மக்கள் பேசிக்கொண்டனர்
முகத்தை மூடியபடி மக்கள் கூட்டத்தை மெதுவாக நகர்த்தி கொண்டு ஒருவர் வருகிறார். ஜனாஸா அருகே சென்று தனது ஷைஃகின் முகத்தை பார்த்து, "ஆசிரியரே! என் நற்செயலை வெளிபடுத்திவிட்டீர்களே" என சொல்லிவிட்டு தன் முகத்தை மூடிய துணியை அகற்றுகிறார்.
மக்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்தனர். அவர் தான், டெல்லியை ஆண்ட முதல் மன்னர் இறைநேசர் சுல்தான் ஷம்சுத்தீன் அல்தமிஷ் (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.
நாம் செய்கின்ற தொழுகை, நோன்பு, தானம் தர்மங்கள், உதவி ஒத்தாசைகள், குர்ஆன் மற்றும் திக்ர் ஓதுதல், போன்ற இன்ன பிற நற்செயல்களை மறைத்துப் பழகும்போது தான், நாம் முகஸ்துதியில் இருந்து பாதுகாப்புப் பெறுவோம்.
மக்களின் பார்வைகளில் படாமல் படைத்தவனுக்கு வழிபடும்போது தான் ஷைத்தான் நம்முடைய நன்மைகளைத் திருடிக்கொண்டு செல்வதை தடுக்க முடியும்.
சுருங்கக்கூறின்: நாம் செய்யும் அறச்செயல்களை யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொள்ளும்போது நம்மிடம் தற்பெருமை எழ வாய்ப்பில்லை.
இரகசியங்கள்
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம், "நீங்கள் விரும்பினால் (விதவையான என் மகள்) ஹஃப்ஸாவை உங்களுக்கு மணமுடித்து தருகிறேன்" என்று கூறினேன். அவர், "இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை" என்று கூறிவிட்டார். பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்கு மணமுடித்து தருகிறேன்" என்று கூறினேன். அப்போது அவர் ஏதும் கூறாது அமைதியாக இருந்தார்.
இதனால் உஸ்மான் (ரலி) அவர்களைவிட அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது எனக்கு அதிகமான வருத்தம் இருந்தது. பிறகு அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என் மகள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள். அவர்களுக்கு ஹஃப்ஸாவை மணம் முடித்துக்கொடுத்தேன்.
பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை சந்தித்தபோது, நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவை குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதில் ஏதும் கூறாததால் உங்களுக்கு என் மீது வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு காரணம் என்னவெனில், ( أَنِّي قَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ ذَكَرَهَا، فَلَمْ أَكُنْ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَوْ تَرَكَهَا لَقَبِلْتُهَا ) “நபியவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களை (தாம் மணம் முடித்துக்கொள்வது) பற்றிப் பேசுவதை நான் அறிந்திருந்தேன். நபியவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவே தான், அப்போது நான் உங்களுக்கு பதில் ஏதும் கூறவில்லை.) நபியவர்கள் ஹஃப்ஸாவை (மணமுடிக்காமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மணமுடித்து மனைவியாக) ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-4005
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நகரில் யார் யார் நயவஞ்சகர்கள் என நயவஞ்சகர்களின் பட்டியலை ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கூறி, இது இரகசியம். யாரிடமும் இதைச் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் வாழ்நாள் முழுக்க அப்பட்டியலை இரகசியமாகவே வைத்திருந்தார்கள். ஒருவரிடம் கூட சொல்லியதில்லை.
ஒருமுறை அரசாங்க அதிகாரிகள் விஷயமாக ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் பேச்செழுந்தபோது, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், "நான் நியமித்த அதிகாரிகளில் யாரேனும் நயவஞ்சகர் இருக்கின்றாரா?" என்று விசாரித்தார்கள். அதற்கு ஹுதைஃபா அவர்கள் (ரலி) அவர்கள் "ஆம்! ஒருவர் இருக்கிறார். ஆனால், என்னால் பெயர் கூற முடியாது" என்று அழுத்தமாகக் கூறி விட்டார்கள்.
இந்நிகழ்வுக்குப் பிறகு சில நாள்களுக்குள் அம்மனிதரை உமர் (ரலி) அவர்கள் பதவி நீக்கம் செய்துவிட்டார்கள். நயவஞ்சகர்களை கண்டறியும் கலை உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிந்திருந்தது என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்கிறார் ஹுதைஃபா (ரலி) அவர்கள். நூல்:- உஸுதுல் ஙாபா
நயவஞ்சகர்கள் குறித்து நாட்டின் ஜனாதிபதி விசாரித்தபோதும் கூட ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொல்ல மறுத்துவிட்டார்கள். ஆனால், "இவர்களில் நயவஞ்சகர் இருக்கிறாரா?" என்ற கேள்விக்கு, "ஆம்" என்று மட்டும் சொன்னார்கள். காரணம், "இல்லை" என்று சொல்லிவிட்டால் பொய் சொன்னதாக ஆகிவிடுமல்லவா? அதற்காகத்தான். அப்போதும் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய இரகசியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவரின் பெயரைக் குறிப்பிட்டு சொல்ல மறுத்துவிட்டார்கள்.
நமக்கு நெருக்கமானவர்கள் நம் மீது நம்பிக்கை வைத்துதான், தன் உள்ளத்தில் இருக்கும் இரகசியங்களை கூறுகிறார்கள். எனவே, அதை பாதுகாப்பது நம் மீது கடமையாகும். அவற்றை அம்பலப்படுத்துவது நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருள்களை அபகரிப்பதற்கு ஈடாகும்.
உன்னை நம்பிச் சொன்னேனே அதை போட்டு உடைத்து விட்டாயே! உன்னை நம்பினேனே நீ ஏமாற்றி விட்டாயே! என்றெல்லாம் பாதிக்கப்பட்டவன் நம்மை முகத்துக்கு நேராக கேட்க நேர்ந்தால், நாம் நம் முகத்தை எங்கு வைத்துக் கொள்வோம்? நம் மீது பிறர் வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதறடித்து விடக்கூடாது. இரகசியங்களை காப்பாற்ற முடியாதவர்களால் மக்களிடம் மதிப்பையும், பிரியத்தையும், உயர்வையும் பெற முடியாது. எனவே, பிறரின் இரகசியங்களை மறைத்து பாதுகாத்து வைப்பது நல்லதொரு பண்பாகும்.
தாம் செய்த பாவங்கள்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ أُمَّتِي مُعَافًى إِلاَّ الْمُجَاهِرِينَ، وَإِنَّ مِنَ الْمَجَانَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً، ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ، فَيَقُولَ يَا فُلاَنُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ ) என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர். (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துபவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையில் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, "இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதச் செய்தேன்" என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (யாருக்கும் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அவன் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கிவிடுகிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6069, முஸ்லிம்
பாவம் செய்வது ஒரு குற்றம் என்றால், செய்த பாவத்தை நான்கு பேரிடம் சொல்லிப் பெருமைப்படுவது அதைவிடப் பெரிய குற்றமாகும். இவ்வாறு பகிரங்கப்படுத்துகின்ற ஒருவன், தான் பாவம் செய்ததற்காக வருத்தப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறான். இந்த அசட்டுத் துணிச்சல், பாவங்களைப் பற்றி அவன் அக்கறைப்படவில்லை என்பதையும் பாவங்களுக்கு இறைவன் வழங்கும் தண்டனையை ஒரு பொருட்டாகவே அவன் கருதவில்லை என்பதையும் புலப்படுத்துகிறது. ஆகவே, மனம் வருந்தி திருந்தும்வரை அவனுக்குப் பாவமன்னிப்பே கிடையாது என்று இந்த நபிமொழியின் தெளிப்படுத்துகிறது.
ஒரு காலத்தில் “நான் பார்க்காத படங்களா? நான் பருகாத மது வகைகளா? நான் அனுபவிக்காத பெண்களா? நான் விளையாடாதா சூதாட்டங்களா?” என்று தமது பழங்கதைகளை பெருமையாக பேசித் திரிவது மிகப்பெரிய பாவக் காரியமாகும். தமது பாவங்களை அல்லாஹ் மறைத்துவிட்டப் பிறகு, தாமே அதைப்பற்றி பகிரங்கப்படுத்துவது கைசேதத்திற்குரிய செயலாகும்.
அருள்வளங்கள்
யூசுப் (அலை) அவர்கள் தமது சிறுபிராயத்தில் ஒருமுறை தமது தந்தை யஅகூப் (அலை) அவர்களிடம், "என் அருமை தந்தையே! பதினொன்று நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம்பணிவதாக நான் கனவில் கண்டேன்" என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்கள் அந்த கனவிற்கான விளக்கத்தை அறிந்திருந்தார்கள். அந்த கனவிற்குரிய விளக்கமாவது: பிற்காலத்தில் அவருடைய சகோதரர்கள் அவருக்குப் பணிந்து நடப்பார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவருக்கு சிரம்பணிவார்கள்; பெரிய அளவில் அவருக்கு மரியாதை செய்வார்கள்.
எனவே, இக்கனவை அவர் தம் சகோதரர்களில் யாரிடமேனும் சொன்னால், அவர்கள் பொறாமையால் அவருக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்று அவருடைய தந்தை யஅகூப் (அலை) அவர்கள் பயந்தார்கள்.
இதனால் தான் அவரிடம், "நீ கண்ட கனவைப்பற்றி உன் சகோதரர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம்; அவ்வாறு செய்தால் அவர்கள் உனக்கு எதிராக சதி செய்வார்கள்" என்று தந்தை யஅகூப் (அலை) அவர்கள் தமது மகன் மீதுள்ள அக்கறையில் அவ்வாறு கூறினார்கள். இதைப்பற்றியே தலைப்பில் காணும் வசனம் தெளிவுப்படுத்துகிறது.
ஆம்! இந்த கனவு 40 ஆண்டுகளுக்குப் பிறகு நனவானது. யூசுப் (அலை) அவர்களுடைய தாய், தந்தை, 11 சகோதரர்கள் ஆகியோர் பிற்காலத்தில் உயர் பதவியில் இருந்த யூசுப் (அலை) அவர்களை சந்தித்தபோது நடந்தது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اسْتَعِينُوا عَلَى إِنْجَاحِ حَوَائِجِكُمْ بِالْكِتْمَانِ؛ فَإِنَّ كُلَّ ذِي نِعْمَةٍ مَحْسُودٌ ) உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கு விஷயத்தை வெளியிடாமல் மறைப்பதன் மூலம் உதவிபெறுங்கள். ஏனெனில், அருள்வளம் பெற்ற ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் பொறாமை கொள்ளப்படுகின்றது. அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் ரலி அவர்கள் நூல்:- அல்முஅஜமுஸ் ஸஙீர் இமாம் தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, ஹில்யா இமாம் அபூநயீம்
மனிதன் தன்னுடைய முன்னேற்றத்திற்குரிய காரியங்களை உரிய நேரத்திற்கு முன்பே எல்லோரிடமும் சொல்லக்கூடாது. அதாவது, நான் அதை இதை செய்யப் போகிறேன் என்று முன்பே சொல்லக்கூடாது. அவ்வாறு சொல்லிவிட்டால் தீயோர்களின் பொறாமைக்கும், சூழ்ச்சிக்கும் ஆளாகி நமது காரியங்கள் துவங்கப்படாமலேயே சிதைந்து போகக்கூடும். எனவேதான், அதை மறைக்க வேண்டும். செய்து முடித்துவிட்டுச் சொன்னால் பரவாயில்லை.
எண்ணம் சரியில்லாத தீயவர்களிடம் அல்லாஹ் நமக்கு வழங்கிய உயர்வுகளையும் அருள்வளங்களையும் பற்றி எடுத்துரைக்கக்கூடாது. அதை அவர்களிடம் மறைத்து பழகவேண்டும். மாறாக, அவர்களிடம் நமக்கு கிடைக்கப்பெற்ற அருள்வளங்களைப் பற்றி பெருமையாகப் பேசினால் அவர்கள் நமக்கு எதிராக சதி செய்யக்கூடும். அதாவது, நம் மீது அவர்கள் பொறாமைப்படக்கூடும்; அவர்களின் கண்ணேறு நம் மீது ஏற்படக்கூடும்.
மேலும், அவர்களிடம் நம்முடைய சிரமங்களையும் எடுத்துரைக்கக்கூடாது. ஏனெனில், அவர்கள் நம் சிரமங்களைப்பற்றி தெரிந்துகொண்டால் (இவனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று) அவர்கள் நம்மை கேலி செய்யக்கூடும். நம்மை மட்டமாக எண்ணக்கூடும்.
அவர்கள், அப்படியே நம்முடைய வளங்களைப்பற்றி விசாரித்தாலும், நாம், "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறிவிட்டு, பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். அல்லது வேறு பேச்சுக்கு மாறிவிட வேண்டும். இது தான் நமக்குச் சிறந்தது.
மேலும், முன் பின் தெரியாதவர்களிடம் நம்முடைய வளங்களைப்பற்றியும், சிரமங்களைப்பற்றியும் எடுத்துரைக்கக்கூடாது.
அந்தஸ்தை
உஸ்மானிய்யா பேரரசின் ஆட்சி காலத்தில் மக்கா மற்றும் மதீனாவிற்கு வருகைத் தரும் ஹாஜிகளுக்கு வழிகாட்டியாக ஒருவர் பணி புரிந்து வந்தார். அவரது வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை கூறுகிறார்:
வழக்கமாக, உலகின் பல திசைகளிலிருந்து மக்காவை நோக்கி படையெடுக்கும் ஹாஜிகளுக்கு வழிகாட்டியாக பணி புரிவதற்காக சென்றிருந்தேன். இந்த முறை சற்றுத் தாமதமாக சென்றுவிட்டேன். ஆதலால் எனக்கு எந்த ஹாஜிகளும் கிடைக்கவில்லை.
மனம்வருந்தி நின்றுக் கொண்டிருந்தபோது ஒரு துருக்கி நாட்டு மனிதர் என்னை அழைத்தார். பார்ப்பதற்கு சாதாரணமான மனிதராக இருந்தார். அவர் அணிந்திருந்த தொப்பியை வைத்தே அவர் செல்வந்தர் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். அந்த மனிதர் என்னிடம் “எனக்கு ஹஜ் புரிவதற்கு வழிகாட்டியாக தங்களால் பணி புரிய இயலுமா?” என்று கேட்டார். எனக்கு இந்த சாதாரண மனிதரிடமிருந்து என்ன கூலி கிடைத்துவிடும் என்று எண்ணிக்கொண்டு எனக்கு இப்போது பிழைப்பதற்கு வேறு வழி இல்லை என்பதால் இப்படிப்பட்ட மனிதருக்கு வழிகாட்டியாக பணிப்புரிய ஒப்புக்கொண்டேன்.
அவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை அவருக்கான வழிகாட்டியாக இருந்தேன். கடைசியாக ஹஜ் நிறைவடைந்தது. இருவரும் பிரியக்கூடிய நேரமும் வந்தது. ஹஜ் முழுக்க என்னிடம் அதிகமாக பேசாத நன்நடத்தையுள்ள அந்த மனிதர் என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டிக் கூறினார் "இந்தக் கடிதத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, நான் உங்கள் பார்வையிலிருந்து மறைந்தப் பிறகு மக்காவின் ஆளுநரிடம் சென்று, அவர் முன்னிலையில் மட்டுமே இதனை திறக்கவேண்டும்" என்று கூறினார்.
அவர் என்னை விட்டு மறைந்ததும், நான் மக்காவின் ஆளுநரிடம் விரைந்தேன். சந்திப்பதற்கு அனுமதி கோரினேன். பிறகு சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. நான் நிகழ்ந்ததைக் கூறி இந்த கடிதத்தைக் குறித்தும் கூறினேன். அதற்கு அவர் அந்த கடிதத்தை திறக்குமாறு கூறினார். நான் திறந்த கடிதத்தை ஆளுநர் பார்த்தவுடன் அமர்ந்திருந்தவர் தீடீரென்று எழுந்து “இது கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ அவர்களது முத்திரை” என்று கூறினார். இந்த வார்த்தையை கேட்டதும், ஹஜ் செய்வதற்காக நான் வழிகாட்டிய அந்த மனிதர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலீஃபாவா? என்று திகைத்து போய் நின்றேன்.
அந்த கடிதத்தின் உள்ளே "எனக்கு ஒரு பெரிய வீட்டை வழங்குமாறும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் வாழ்கை முழுக்க தேவையான அனைத்தையும் அரசாங்கத்திலிருந்து வழங்கிக்கொண்டே இருக்குமாறும்" ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.
கலீஃபா அப்துல் ஹமீது அவர்களிடம், “தாங்கள் இப்படித் தனியாகவும், இரகசியமாகவும் ஹஜ் செய்ததற்கு காரணம் என்ன?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "நான் இறைவனது இல்லமான கஅபாவின் முன் நிற்கும்போது சாதாரண ஒரு அடிமையாக நிற்கவேண்டும். நான் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி என்ற எண்ணமில்லாமல், பயத்தோடும், பணிவோடும் எதற்கும் சக்தியற்ற ஒரு அடிமை என்ற உணர்வோடும் அவனுக்காக ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்” என்று கூறினார். நூல்:- முத்கராத்து சுல்தான் அப்துல் ஹமீத் ஸானீ (சுல்தான் அப்துல் ஹமீதின் நினைவுகள்)
சில சமயங்களில் பொதுவெளியில் நமது அந்தஸ்தை நாம் வெளிப்படுத்தாமல் எளிமையை கடைப்பிடிப்பதே சிறந்தது. அது, நமது மனதில் தற்பெருமை உண்டாகாமல் இருக்க உதவும். மேலும், நமக்கு போதிய நிம்மதி கிடைக்கப்பெறும். அதுவே நமக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.
நாட்டில் பிரபலமானவர்களில் சிலர் ஓய்வெடுக்க, நிம்மதிப் பெற, (மறைத்துக்கொள்ளும் விதமாக) தம்மைப் பற்றி அறியாத இடங்களுக்கு தான் செல்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் சில சமயங்களில் சில விஷயங்களை மறைத்து வாழ்வதே புத்திசாலித்தனமாகும். எனவே, அல்லாஹுத்தஆலா நம்மை புத்திசாலிகளாக வாழச் செய்வானாக! ஆமீன்
செவ்வாய், அக்டோபர் 01, 2024
இஸ்லாத்தில் பெண்,
ஆணும் பெண்ணும் ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள். இருவருமே ஒரே இறைவனின் அடிமைகள். ஆணும் பெண்ணும் பிறப்பில் தூய்மையானவர்கள். இறைவனின் பிரதிநிதிகள் எனும் சிறப்பை இஸ்லாம் வழங்குகிறது.
இஸ்லாம் சிந்தனையின் மார்க்கம். உலகில் பல்வேறு சிந்தனையோட்டங்கள், சித்தாந்தங்கள், வாழ்க்கை நெறிகள் இருந்தாலும் அத்தனையும் மனிதர்களால் இயற்றப்பட்ட அல்லது மனிதர்களால் மாற்றப்பட்ட, புகுத்தப்பட்ட நெறிகளாகத்தான் உள்ளன. இஸ்லாம் மட்டுமே இறைவனால் அருளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தீர்க்கமான, தெளிவான, துல்லியமான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இதில் மாற்றங்கள், திருத்தங்களுக்கான எவ்விதத் தேவையுமின்றி இருக்கிறது. ஏனென்றால் இந்த வாழ்வியல் நெறி இறைவனால் அருளப்பட்டது.
இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல் மட்டுமே பெண் விடுதலை, பெண்களுக்கான நீதி சாத்தியம் என்பதை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் போதித்ததோடு மட்டுமின்றி அத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்கள். பெண்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்ததோடல்லாமல் அத்தகைய வாழ்வை வாழ்ந்துகாட்டி ’உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே, உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியரிடத்தில் சிறந்தவன்' என்று பிரகடனப்படுத்தினார்கள்.
உயிர் வாழும் உரிமை
பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறப்பட்டால், அவர்கள் முகத்தில் கருமை கவ்வி உயிரோடு புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அன்றைய அரபகச் சூழலில் பெண் குழந்தை பிறப்பது நற்செய்தி என்று இஸ்லாம் பறைசாற்றியது.
’பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு, இறைவன் புறத்திலிருந்து வாழ்த்தும், நற்செய்தியும் உண்டு' என்று எடுத்தியம்பினார்கள் நபி(ஸல்) அவர்கள்.
’வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்' (திருக்குர்ஆன் 17:31) என்ற இறைக்கட்டளையின் மூலமாகச் சிசுக்கொலைக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. பெண்சிசுக் கொலை பெரும்பாவம் என்கிறது இஸ்லாம்.
’எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி, கருணை காட்டி வருவாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அருகிலிருந்த நபித்தோழர் ’இரு பெண் மக்கள் இருந்தாலுமா?' என்று கேட்டார். அதற்கு நபிகளார் ’ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்' என்று பதில் கூறினார்கள்.
’ஒரு பெண் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார்' என்ற செய்தியை அன்னை ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியதும் ’இவ்வாறு பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக இருப்பார்கள்' எனக் கூறினார்கள்.(புகாரி)
கல்வி உரிமை
’அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' எனும் நிலையை 1450 ஆண்டுகளுக்கு முன்னரே தகர்த்தெறிந்து கல்வியில் பெண்களுக்கான முன்னுரிமையைக் கொடுத்தது இஸ்லாம். நபிகளாரின் மனைவி இறைநம்பிக்கையாளரின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் மாணவரான உர்வா(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களைக் குறித்து ’திருக்குர்ஆன் விரிவுரை, வாரிசுரிமைச் சட்டங்கள், ஹலால் ஹராம், அரபி இலக்கியம், மரபுக் கவிதைகள், வரலாறு போன்ற துறைகளில் ஆயிஷா(ரலி) அவர்களை விடப் புலமை பெற்றவராக யாரையும் நான் கண்டதில்லை' என்கிறார். நபித்தோழர்களும், கலீஃபாக்களும் ஆயிஷா(ரலி) அவர்களை அணுகி வழிகாட்டுதலைப் பெற்றனர். 2210 நபிமொழிகளை அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்துள்ளார்கள்.
’ஒருவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவருக்கு, அல்லாஹ்விடம் இரண்டு விதமான கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
’நபித்தோழர்களில் ஏதேனும் ஒரு பிரச்னைக்குச் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் ஆயிஷா(ரலி)விடம் சென்று ஆலோசனை கேட்போம். அவர் எங்களுக்குச் சரியான விஷயத்தைச் சுட்டிக்காட்டுவார்' என்று கூறியுள்ளார் அபூமூஸா அல் அஷ்அரி(ரலி).
88 மார்க்க அறிஞர்களை அன்னை ஆயிஷா(ரலி) உருவாக்கியுள்ளார். அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் 32 மார்க்க அறிஞர்கள் கல்வி பயின்றுள்ளனர். தாயின் மடிதான் முதல் பாடசாலை என இஸ்லாம் பெண்மையைப் போற்றுகிறது. உம்மு தர்தா என்ற ஸஹாபியப் பெண்மணியிடம் கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் கல்வி பயின்றிருக்கிறார்.
ஆடை அணியும் உரிமை
பெண்களுக்குரிய ஆன்மிக, சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளோடு இவை அனைத்தையும் விட ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கும் மானத்திற்கும் பாதுகாப்பளிப்பது ஒரு நாகரிக சமூகத்தின் மிகப் பெரிய பொறுப்பு என்பதை ஆடை விஷயத்தில் இஸ்லாம் ஓர் அழகிய முன்மாதிரியை வழங்குகிறது.
பெண் விடுதலை என்பது பெண், பெண்ணாக வாழ்வதுதான். பெண்கள் ஆண்களைப் போல உடையை அணிந்து கொண்டு வாழ்வது சுதந்திரமாகாது.
’ஆண்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரையிலும், பெண்கள் முகம், மணிக்கட்டுகள், பாதம் ஆகியவற்றைத் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும்' என இஸ்லாம் கட்டளையிடுகிறது.
இறுக்கமான உடை, மெலிதான உடை ஆகியவற்றை ஆண், பெண் இருவருக்கும் இஸ்லாம் தடை செய்துள்ளது. ’ஆதத்தின் மக்களே உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும் தங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும், அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளி இருக்கின்றோம்'. (திருக்குர்ஆன் 7:26)
மண உரிமை
முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என இறைநினைவையும் அவற்றில் இறைக்கட்டளைகளைப் பேணுவதுபோல திருமணம், பெண் உரிமை விஷயத்திலும் இறைக்கட்டளைகளைப் பேண வேண்டும். இன்னும் அதைப் பற்றி அறிவும், தெளிவும் உடையவர்களாகத் திகழ வேண்டும். அது ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்விலும் பிரதிபலிக்க வேண்டும் என்கிறது இஸ்லாம்.
பெண்களுக்கு இஸ்லாம் பல்வேறு உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெண்ணின் விருப்பமே முக்கியமானது. ’நம்பிக்கை கொண்டோரே பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை' (திருக்குர்ஆன் 4:19) என்று திருமறையில் இறைவன் கூறுகிறான். திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம் அவசியம் என வலியுறுத்துகிறது இஸ்லாம்.
மணமகன் தான் மணக்கப்போகும் பெண்ணுக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை(மஹர்) கொடுக்க வேண்டும். மணப்பெண் மஹர் எனும் மணக்கொடையைப் பெறுவதை இஸ்லாம் பெண்ணிற்கான உரிமையாக ஆக்கியுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது ’நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்'. (திருக்குர்ஆன் 4:4)
பலதாரமணத்தை இஸ்லாம் ஆணையிடவும் இல்லை; கட்டாயப்படுத்தவும் இல்லை. ஒரு சலுகையாகவே பலதார மணத்தை அறிவிக்கிறது. இதில் மிகப் பெரும் இறைக்கருணை அடங்கியுள்ளது. ஏனெனில் இஸ்லாம் வைப்பாட்டி முறையையும் விபச்சாரத்தையும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் அது மனித அழிவிற்குக் காரணமாகிவிடுகிறது. ஆனால் பலதார மணத்தின் மூலம் விதவைகளும், முதிர்கன்னிகளும் நன்மை அடைகின்றனர். இதில் பெண்ணின் விருப்பமே முக்கிய பங்கு வகிக்கிறது.
மணவிலக்குரிமை
’மனைவியுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக்கூடும்'. (திருக்குர்ஆன் 4:19) என பெண்மையைப் போற்றுகிறது. விவாகரத்துப் பெறும் உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கி உள்ளது. ஆண்கள் கூறும் விவாகரத்திற்கு ’தலாக்' என்றும் பெண் கூறும் விவாகரத்திற்கு ’குல்உ' என்றும் பெயர்.
’அல்லாஹ்வின் வரம்புகளை அவர்கள் இருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் கணவனுக்கு ஏதேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவதில் அவர்கள் இருவரும் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகவும்’ (திருக்குர்ஆன் 2:229) என்ற வசனத்தின் மூலம் கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமை மனைவிக்கு உண்டு என்பதை அறியலாம்.
இன்னும் விவாகரத்துச் செய்த கணவனின் வீட்டில் ’இத்தா' எனும் காத்திருப்புக் காலத்தில் மனைவி வசிப்பது பெண்களுக்கு இஸ்லாம் அளித்த உரிமை என்பதை அறியலாம்.
குடும்பத்தில் பெண்
’உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளராவார். ஆண்(குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாம் இல்லத்தை அமைதி அளிக்கும் இடமாகக் கூறுகிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதிலும், குடும்ப உறவுகளைப் பேணுவதிலும் கணவனுக்கும் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்கிறது இஸ்லாம்.
பொருளீட்டுரிமை
சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்த கட்டளையாகும். கணவரின் அனுமதியோடு பெண்கள் பொருள் ஈட்டுவதில் தவறில்லை எனக் குறிப்பிடுகிறது இஸ்லாம்.
’பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. அவ்வாறே பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு'. (திருக்குர்ஆன் 4:7)
அன்னை கதீஜா(ரலி) அவர்கள் சிறப்புக்குரிய பெரும் வணிகராகத் திகழ்ந்தார். தோலை பதனிட்டு அவற்றில் வண்ணங்களை ஏற்றித் தரும் தொழில் செய்தார். கிடைத்த வருவாயில் இறைவனின் பாதையில் செலவிட்டார். பெண்களும் பொருளாதாரத்தை ஈட்டவும் செலவழிக்கவும் உரிமை படைத்தவர்கள் என இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டியது.
கலந்தாலோசித்தல்
இஸ்லாம் வழங்கிய பெண் உரிமைகள் அவர்கள் போராடிப் பெற்றதல்ல. இஸ்லாம் இயல்பாகவே இந்த உரிமைகளைச் சலுகைகளாக வழங்காமல் கடமையாகவே வழங்கியுள்ளது. ஆண்களும், பெண்களும் சிறிய பெரிய பிரச்னைகளுக்குக் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. மதீனாவில் இருந்து மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் சென்றபோது அப்போது குறைஷிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் ’இந்த ஆண்டு உம்ரா செய்ய அனுமதி இல்லை' என்று மறுக்கப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் உடன்படிக்கையைப் பேணும் விதத்தில் உம்ரா செய்யாமலேயே திரும்பிவிட முடிவு செய்தார்கள்.
தோழர்கள் உம்ரா செல்லாமல் மதீனா திரும்பிச் செல்லத் தயங்கினார்கள். இந்தச் சூழலில் நபி(ஸல்) அவர்கள், தம் மனைவி உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஆலோசித்தார்கள். அவர்கள் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் தமது பலிப்பிராணியை முதலில் அறுத்துவிட்டு தலை முடியை மழித்தபோது அதுவரை தயங்கி நின்ற தோழர்கள் மறு விநாடியே தாங்களும் அவ்வாறே செய்துவிட்டு மதீனா திரும்பினார்கள். பெண்களின் ஆலோசனைக்கும், அறிவுக்கும், கருத்துக்கும் இஸ்லாம் வழங்கிய முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
பெண் பாதுகாப்பு
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு 80 சாட்டையடி கொடுங்கள். இனி அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் அவர்களே தீயவர்கள் என்கிறது இஸ்லாம். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால் கடுமையான சட்டங்கள் வேண்டும். தண்டனைகள் கடுமையானால், ஒரு தவறை மீண்டும் செய்வதிலிருந்தும், அதைப் பற்றிய எண்ணத்திலிருந்தும் ஒரு மனிதனை தூரப்படுத்தும். ஆதலால் பாலியல் வன்புணர்வுக்கு இஸ்லாம் மரண தண்டனையைக் குறிப்பிடுகிறது. கடுமையான தண்டனை வழங்காவிட்டால் அவற்றை என்றுமே ஒழிக்க முடியாது.
இஸ்லாம் பெண்களுடைய மானம், மரியாதைக்கு மிக முக்கியத்துவம் வழங்குகிறது. ’இன்னும் திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவருடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்கள் சம்பாதித்தவைக்கான கூலியாக மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவுள்ளோனும் ஆவான்'. (திருக்குர்ஆன் 5:38 )
இஸ்லாம் அருளிய பெண் உரிமைகளை இந்த மகளிர் தினம் அலங்கரிக்கட்டும்
ஞாயிறு, செப்டம்பர் 08, 2024
நயவஞ்சகன்,
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا
நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்ப்பாகத்தில் தான் இருப்பார்கள். (நபியே! அங்கு) அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் ஒருபோதும் நீர் காணமாட்டீர். திருக்குர்ஆன்:- 4:145
அண்ணல் நபி (ஸல்) அவர்களது காலத்தில் மதீனா புறநகர்ப் பகுதியில் யூதர்கள் வசித்து வந்தனர். அவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது தெரிவிப்பதும் அவர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதும் சிலரது வாடிக்கையாக இருந்தது. இவர்கள் மதீனாவில் முஸ்லிம்களுடன் முஸ்லிம்களாக வாழ்ந்து வந்த அன்றைய காலத்தின் (முனாஃபிக் எனும்) நயவஞ்சகர்கள் ஆவார்கள்.
அல்லாஹ், திருக்குர்ஆனின் பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள், இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்கள் ஆகிய மூன்று பிரிவினரான மனிதர்கள் இருப்பதை குறிப்பிடுகிறான். அவர்களில் முஸ்லிம்களைப் பற்றி 4 வசனங்களிலும், இறைமறுப்பாளர்களைப் பற்றி 2 வசனங்களிலும், நயவஞ்சகர்களைப் பற்றி 13 வசனங்களிலும் சுட்டிக்காட்டுகின்றான். நயவஞ்சகர்கள் இறைமறுப்பாளர்களை விடவும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் ஆபத்தானவர்கள். எதிரானவர்கள் என்பதை அல்லாஹ் இதன்மூலம் தெளிவுப்படுத்துகிறான்.
நயவஞ்சத்தனம் என்பது இறைமறுப்பைவிட படுமோசமானது. எனவேதான் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் இந்த நயவஞ்கர்களின் முகத்திரையை கிழித்து அவர்களை தோழுரித்துக் காட்டுவதன் மூலம் அவர்களது பண்பு மற்றும் குணாதிசயங்கள் முஸ்லிம்களிடம் வந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றான்.
இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “நிபாக்” என்ற அரபுப் பதத்திற்குரிய பொருள்: ஏமாற்றுதல் மற்றும் சதிசெய்தல் மேலும், நன்மைகளை வெளிக்காட்டி நன்மைக்கு எதிரானதை மறைத்தல். நூல்:- ஜாமிஉல் உலூம்
எனவே, “நிபாக்” என்ற நயவஞ்சகத்திற்கு இவ்வாறு வரைவிலக்கணம் வழங்கலாம் இறைநம்பிக்கையை (ஈமான்) நாவின் மூலமாக வெளிப்படுத்துதல், நிராகரிப்பை (குப்ர்) உள்ளத்தில் மறைத்தல்.
அடையாளக் குணங்கள்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْ نِفَاقٍ حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا خَاصَمَ فَجَرَ ) பேசினால் பொய் சொல்வது, ஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை மோசடி செய்வது, வாக்களித்தால் மாறு செய்வது, வழக்காடினால் நேர்மை தவறுவது ஆகிய இந்த நான்கு குணங்கள் எவரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார். எவரிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டு விடும் வரை அவருள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடிகொண்டிருக்கும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-34, முஸ்லிம்-106
உண்மையான இறைநம்பிக்கையாளர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறைவனை நம்பிக்கைக்கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார். ஆனால், நயவஞ்சகன் (முனாஃபிக்) உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவான்.
நயவஞ்சகத்தில் பெரியது சிறியது என்று இரு வகைகள் உள்ளன. பெரிய நயவஞ்சகம் என்பது உள்ளத்தளவில் இறைநிராகரிப்பை வைத்துக்கொண்டு, வெளியில் தன்னை இறைநம்பிக்கையாளனாகக் காட்டிக்கொள்வது. இந்நிலை இஸ்லாத்திலிருந்து மனிதனை வெளியேற்றிவிடும் என்பது வெளிப்படை. சிறிய நயவஞ்சகம் என்பது செயல் ரீதியானது. இதுபற்றி இந்த நபிமொழியில் கூறப்பட்டது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சிலர் உள்ளத்தில் இறைமறுப்பையும் உதட்டில் இறைநம்பிக்கையையும் வைத்துக்கொண்டு நயவஞ்சகர்களாக இருந்துவந்தனர். இவர்கள்தாம் அடிப்படை நயவஞ்சகர்கள் ஆவர். தாங்கள் இறைநம்பிக்கை கொண்டிருப்பதாக இவர்கள் கூறினார்கள்; ஆனால், அது உண்மை அல்ல. தாங்களும் முஸ்லிம்களே என்று மற்றவர்களை நம்பவைத்து மோசடி செய்தார்கள். மார்க்கத்திற்கு உதவுவோம் என்று வாக்களித்துவிட்டு வாக்கு மீறினார்கள். வழக்கு என்று வந்துவிட்டால் நேர்மை தவறி நடந்துகொண்டார்கள். நயவஞ்சகத்தின் இந்த அடிப்படைக் குணங்கள் இன்றைக்கும் யாரிடமாவது இருந்தால், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் நயவஞ்சகர்களை போன்றவர்கள்தான் என இந்த நபிமொழி எச்சரிக்கிறது.
இக்குணங்கள் அனைத்தும் யாரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் முழு நயவஞ்சகனைப் போன்றும், ஒரு சில குணங்கள் உள்ளவர் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியை பெற்றவரைப் போன்றும் கருதப்படுவார். இந்த நபிமொழிக்கு இதுதான் பொருளே தவிர, இக்குணங்கள் உள்ளவர் அடிப்படையிலேயே நயவஞ்சகர் ஆகிவிட்டார் என்று பொருளாகாது. ஏனெனில், நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்கள் உண்மையில் இறைமறுப்பாளர்கள் ஆவர். இன்று ஒரு முஸ்லிமிடம் இக்குணங்கள் இருப்பதால் அவர் இறைமறுப்பாளராகிவிட மாட்டார். அது நம்பிக்கை நயவஞ்சகம்; இது செயல் நயவஞ்சகம் என்பது குறிப்பிடத்தக்கது. நூல்:- அல்மின்ஹாஜ்
தொழுகைகளில்
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்று(வதாக எண்ணு)கிறார்கள். (உண்மையில்) அவனே அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். அவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்று சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். அவர்கள் மக்களுக்குக் காட்டு(வதற்காகவே தொழு)கிறார்கள். அவர்கள் குறைவாகவே அல்லாஹ்வை நினைவு கூறுகிறார்கள். திருக்குர்ஆன்:- 4:142
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَثْقَلَ صَلاَةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلاَةُ الْعِشَاءِ وَصَلاَةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ) நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது வந்து சேர்ந்துவிடுவார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1154
அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَرَكَ اَلْجُمُعَةَ ثَلاَثاً مُتَتَابِعَةً لِغَيْرِ عِلَّةٍ كُتِبَ مُنَافِقاً ) யாரொருவர் எவ்வித காரணமுமின்றி மூன்று ஜும்ஆ தொழுகைகளைத் தொடர்ச்சியாக விட்டு விடுகின்றாரோ அவர் நயவஞ்சகர் என்று எழுதப்படும். நூல்:- முஸ்தத்ரகுல் வஸாயில் பாகம்-6, பக்கம்-9
அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் அனஸ் (ரலி) அவர்கள் வீட்டில் இருந்தபோது அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது அன்னார் எங்களிடம், ( أَصَلَّيْتُمُ الْعَصْرَ ) “அஸ்ர் தொழுதுவிட்டீர்களா?” என்றார்கள். அதற்கு நாங்கள், “(இல்லை) நாங்கள் இப்போதுதான் (அதன் இறுதி நேரத்தில்) லுஹர் தொழுதுவிட்டு வருகிறோம்” என்று அவர்களிடம் கூறினோம். அன்னார், ( فَصَلُّوا الْعَصْرَ ) “அவ்வாறாயின், நீங்கள் அஸ்ர் தொழுங்கள்” என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து அஸர் தொழுதோம்.
நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி) அவர்கள், ( تِلْكَ صَلاَةُ الْمُنَافِقِ يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَىِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَهَا أَرْبَعًا لاَ يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلاَّ قَلِيلاً ) "இதுதான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி அல்லது மறைந்து) வரும் போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்துகள் கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவு கூறுவான்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்றார்கள். நூல்:- முஸ்லிம்-1097
தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்துவதையும், நிதானமின்றி அவசர அவசரமாகத் தொழுது முடிப்பதையும் நயவஞ்சகத்தனம் என்பதாக இந்த நபிமொழி கண்டிக்கிறது. ஆகவே, எப்போதாவது இவ்வாறு தொழுதால் பரவாயில்லை. (உ.தா ஒருவர் அயர்ந்து தூங்கிவிட்டார். அவர் திடீரென சூரிய உதயத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் விழித்தார். சூரிய உதயத்திற்கு முன் ஃப்ஜ்ரு தொழுதாக வேண்டும் என்பதற்காக அவர் தொழுகையில் அவசரம் காட்டலாம்.) எப்போதும் இவ்வாறே தொழுதால் தான் அது நயவஞ்சகத்தனம் என்பதாக விளங்க வேண்டும்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் சோம்பல் பட்டுக்கொண்டே தொழுகைக்காக எழுந்து நிற்பது வெறுக்கத்தக்கதாகும். மாறாக, முகமலர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பேரானந்தத்துடனும் தொழுகைக்காக நிற்க வேண்டும். ஏனெனில், தொழுபவர் அல்லாஹ்வுடன் உரையாடுகிறார். அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான். அவரை மன்னிக்கின்றான். அவர் அவனிடம் பிரார்த்தனை புரிந்தால் அதற்குப் பதிலளிக்கின்றான். இவ்வாறு குறிப்பிட்ட அன்னார் அதைத் தொடர்ந்து மேற்காணும் வசனத்தை ஓதினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
தொழுகையில் என்ன ஓதுகிறோம் அல்லது என்ன ஓதப்படுகிறது என்று கவனிக்காமல் மன ஓர்மையின்றி அலட்சியமாக தொழுவதை வழமையாக்கிக் கொள்வதும் நயவஞ்சகத்தன்மையை உண்டாக்கிவிடக்கூடும்.
நபியவர்களது காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்கள் உடற்பலம், பணப்பலம், குழந்தை மற்றும் ஏனைய செல்வங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் உலக சுகத்தில் தமது காலத்தை கழித்ததுடன் அல்லாஹ்வைப்பற்றி எந்த சிந்தனையும் இல்லாதவர்களாக வாழ்ந்தனர்.
தீய பேச்சாளன்
தங்கள் மனதில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். திருக்குர்ஆன்:- 3:167
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّمَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ كُلَّ مُنَافِقٍ، يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ، وَيَعْمَلُ بِالْجَوْرِ ) இந்தச் சமுதாயத்தினர் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் இத்தகைய நயவஞ்சகன் குறித்துதான்: அவன் பேசும்போது தத்துவமாகப் பேசுவான். ஆனால், அநீதியான செயல்களைச் செய்வான். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, மிஷ்காத் பாபு ரியாஉ
சிலர் எதற்கெடுத்தாலும் "இஸ்லாம்! இஸ்லாம்!" என்றும் முழங்குவார்கள். ஆனால், செயல்படக்கூடிய நிலை வரும்போது இஸ்லாத்தின் வரம்புகளை அதிகமாக மீறுபவர்கள் இவர்களைவிட வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
இதைத்தான் கிராமத்து சொல் வழக்கில் "சொல்லு சுல்தான் செயல் ஷைத்தான்" என்று சொல்லப்படும்.
புகழை விரும்புவார்கள்
தாம் செய்த (தீய)வற்றைக் குறித்து மகிழ்ந்துகொண்டும், தாம் செய்யாத (நல்ல)வற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என்றும் விரும்பிகொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று (நபியே!) நீர் எண்ணவேண்டாம். வதைக்கும் வேதனைதான் அவர்களுக்கு உண்டு. திருக்குர்ஆன்:- 3:188
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், நபியவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) நபியவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப்பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். நபியவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப்போக்குகளைக் கூறி (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்)செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள். இவர்கள் குறித்து தான் மேற்காணும் அருளப்பெற்றது. நூல்:- புகாரீ-4567
நபிமொழிகளை மறுப்பது
அபூசயீத் அலஹிம்யரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் செவியுறாத பல நபிமொழிகளை அறிவித்துக் கொண்டும் அவர்கள் செவியுற்று பலவற்றை அறிவிக்காமல் இருந்து வந்தார்கள்.
முஆத் (ரலி) அவர்கள் அறிவித்த ஒரு நபிமொழி நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், ( وَاللَّهِ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ هَذَا وَأَوْشَكَ مُعَاذٌ أَنْ يَفْتِنَكُمْ فِي الْخَلاَءِ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்கள் (இவ்வாறு கூறியதை) நான் செவியுறவில்லை. மலம் ஜலம் கழித்தல் தொடர்பான இந்த விஷயத்தில் முஆத் உங்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறார்" என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறிய செய்தி முஆத் (ரலி) அவர்களை அடைந்தது.
ஆகவே, முஆத் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களை சந்தித்து, ( يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو إِنَّ التَّكْذِيبَ بِحَدِيثٍ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نِفَاقٌ وَإِنَّمَا إِثْمُهُ عَلَى مَنْ قَالَهُ ) "அப்துல்லாஹ்! நபியவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட நபிமொழியை பொய்யெனக் கூறுவது நயவஞ்சகமாகும். அதற்குரிய பாவம் அவ்வாறு (பொய்) சொன்னவரையே சாரும்” என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-323
இந்த நபிமொழியை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. இந்த நபிமொழி குர்ஆனோடு முரண்படுகிறது. அல்லது என்னுடைய அறிவுக்கு ஒத்துப்போகவில்லை. அறிவியலுக்கு மாற்றமாக இருக்கிறது என்றெல்லாம் கூறி நபிமொழிகளை மறுத்துரைக்கும் பழக்கம் நயவஞ்சகத்தன்மையை உண்டாக்கும் என்பதை மேற்காணும் நபிமொழி தெளிவுப்படுத்துகிறது.
உலக அறிவு மற்றும் மார்க்க அறிவை முழுமையாக கற்றிந்தவர்கள் யாருமில்லை. "நபிமொழிகள் அனைத்தையும் நான் அறிவேன்" என்று சொல்பவர் யாராவது உண்டா? அவ்வாறு சொல்லத்தான் முடியுமா? நான் இதுவரை இந்த நபிமொழியை கேட்டதில்லை. படித்ததில்லை. எனவே, இதை இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது அறிவார்ந்த செயலாகாது.
(ஸஹீஹ் எனும்) ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும், பல அறிவிப்பாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டு, பல நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள (ளயீஃப் எனும்) பலவீனமான நபிமொழிகளையெல்லாம் "இது நபிமொழியே அல்ல" என்று மறுத்துரைப்பது தவறாகும்.
(பலவீனமான ஒரு நபிமொழி, பல அறிவிப்பாளர்கள் மூலம் வரும்போது அது, பலமான நபிமொழியைப் போன்று ஆகிவிடும் என்பதே நபிமொழித்துறை நிபுணர்களின் முடிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.)
அறப்போராட்டங்கள்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ ) அறப்போரில் கலந்துகொள்ளாமலும் அது குறித்து மனதில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் இறந்து போனவர் நயவஞ்சகத்தின் ஓர் அம்சத்திலேயே இறந்துபோகிறார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3871
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்துக்கு மட்டுமே இது பொருந்தும். இஸ்லாமிய வளர்ச்சி அடைந்துவிட்ட காலத்துக்கு இது பொருந்தாது என்பது அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களின் கருத்தாகும். ஆனால், எல்லாக் காலத்துக்கும் இது பொருந்தும் என்று கூறுவோரும் உள்ளனர். நயவஞ்சகர்கள்தாம் அறப்போரில் கலந்து கொள்ளாமல் பின்வாங்குவர். எனவே, இது நயவஞ்சர்களின் குணங்களில் ஒன்றாகும். நூல்:- அல்மின்ஹாஜ்
இஸ்லாமிய வளர்ச்சிக்காக அல்லது இஸ்லாம் வழங்கிய உரிமைகளை பாதுகாக்க மக்களெல்லாம் போராடிக் கொண்டிருக்க, ஒருவன் மட்டும் அல்லது ஓரிரு பேர் மட்டும் இந்த அறப்போராட்டங்களில் கலந்து கொள்ளாமல், அதாவது இந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படலாம்; அல்லது உயிர் இழப்பு ஏற்படலாம்; அல்லது ஆட்சியாளர்களிடம் தமக்கு கெட்டப் பெயர் ஏற்படலாம் என்றெண்ணி இது போன்ற அறப்போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி கொள்பவருக்கும் இந்த நபிமொழி பொருந்தும் என்றே தோன்றுகிறது.
இரு குணங்களும் இணையாது
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ حُسْنُ سَمْتٍ وَلاَ فِقْهٌ فِي الدِّينِ ) இரு குணங்கள் ஒரு நயவஞ்சகனிடம் ஒரு சேர அமைந்திருக்காது. (அவை:) 1. நன்னடத்தை 2. மார்க்க கல்வி. நூல்:- திர்மிதீ-2605
நயவஞ்சகம் எத்தகைய துன்பத்திற்குரியதெனில் அதற்கு ஆளாகிறவர்களுக்கு நற்குணம் மற்றும் இறைநெறியின் மூலம் நல்லறிவு பெறுதல் ஆகிய அருட்கொடைகள் வழங்கப்படமாட்டாது.
மார்க்கக் (கல்வியை) விளக்கங்களை உள்ளத்தில் தக்கவைத்துப் பிறருக்குப் போதித்து, தன்னையும் (அமல் செய்ய தூண்டும்) செயலாற்ற வைக்கும் அல்லாஹ்வின் மீதுண்டான அச்சத்தை நிரந்தரமாக தரும் உன்னத நிலைக்கு மார்க்கத்தில் விளக்கம் (மார்க்கக் கல்வி) பெறுதல் என்று பொருளாகும்.
தாம் கற்ற மார்க்கக் கல்வியை பிறருக்குப் போதிப்பதால் மட்டும் தமக்கு கண்ணியம் கிடைத்துவிடும் என்ற எண்ணம் மார்க்கத்தில் உயர்வு பெறுவதை தடுத்துவிடும். மார்க்க கல்வி என்பது உள்ளத்தை அல்லாஹ்வின் அச்சத்தால் நிரப்ப வேண்டும். நாவோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்துவதுதான் மார்க்கக் கல்வியாகும் இதுவே இந்த நபிமொழியின் கருத்து.
விடுதலை பெற்றவர்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ ) யார் அல்லாஹ்வுக்காக கூட்டுத் தொழுகையில் ஆரம்பத் தக்பீரிலேயே சேர்ந்து நாற்பது நாள்கள் தொழுகிறாரோ அவருக்கு இரண்டு விடுதலைகள் எழுதப்படுகின்றன. 1) நரக விடுதலை 2) நயவஞ்சகத்திலிருந்து விடுதலை. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-224
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَلَّى فِي مَسْجِدِيْ أَرْبَعِينَ صَلَاةً لَا تَفُوتُهُ صَلَاةٌ، كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ الْعَذَابِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ ) ஒருவர் என்னுடைய பள்ளிவாசலில் (மஸ்ஜிதுந் நபவியில்) ஒரு வேளை தொழுகைக்கூட தவறாமல் தொடர்ந்து நாற்பது வேளை தொழுகைகளை (பேணுதலுடன்) தொழுவாரோ அவருக்கு நரக வேதனையைவிட்டு விடுதலை பெற்றவர் என்று எழுதப்படுவதுடன் அவர் (நிஃபாக் எனும்) நயவஞ்சகத் தன்மையை விட்டும் நீங்கியவராகி விடுவார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், அத்தர்ஙீபு வத்தர்ஹுபு, இர்ஷாதுஸ் ஸாரீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் என் மீது ஒருமுறை சலவாத்து ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்து மடங்கு அருள்புரிகிறான். அவர் என் மீது பத்துமுறை சலவாத்து ஓதினால் அல்லாஹ் அவர் மீது நூறு மடங்கு அருள்புரிகிறான். அவர் என் மீது நூறுமுறை சலவாத்து ஓதினால் அவரின் நெற்றியில் நயவஞ்கத்திலிருந்தும், நரகத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர் என்ற வாசகத்தை எழுதி, மறுமையில் உயிர்த் தியாகிகளுடன் அவரை அல்லாஹ் தங்க வைப்பான். நூல்:- தப்ரானீ
பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் ளஹ்ஹாக் பின் முஸாஹிம் (ரஹ்) அவர்கள், ( بَلَغَنِي أنَّ التَّضَلُّعَ مِن ماءِ زَمْزَمَ بَراءَةٌ مِنِ النِّفاقِ ) "ஸம்ஸம் தண்ணீரை வயிறு நிரம்ப பருகுவதன் மூலம் நயவஞ்சகத்திலிருந்து விடுதலை பெறலாம்" என்ற செய்தி தமக்கு கிடைத்ததாகக் கூறுகிறார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அத்தவ்பா வசனம்-19
பிரார்த்திப்பது
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشِّقَاقِ وَالنِّفَاقِ وَسُوءِ الأَخْلاَقِ ) "இறைவா! பகைமையிலிருந்தும் நயவஞ்சகத்திலிருந்தும் தீய குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். நூல்:- அபூதாவூத்-1322, நஸாயீ-5376
உம்மு மஅபத் ( ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( اللَّهُمَّ طَهِّرْ قَلْبِي مِنَ النِّفَاقِ ، وَعَمَلِي مِنَ الرِّيَاءِ ، وَلِسَانِي مِنَ الْكَذِبِ ، وَعَيْنِي مِنَ الْخِيَانَةِ ، فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ ) "இறைவா! என் உள்ளத்தை நயவஞ்சகத்திலிருந்தும் என் செயலை முகஸ்துதியிலிருந்தும் என் நாவை பொய்யிலிருந்தும் என் பார்வையை மோசடியிலிருந்தும் தூய்மைப்படுத்துவாயாக! நிச்சயமாக நீ பார்வையின் மோசடியையும் இதயங்களின் இரகசியங்களையும் அறிகின்றாய்" என்று பிரார்த்தித்தை நான் செவியுற்றுள்ளேன். நூல்:- பைஹகீ, மிஷ்காத் பாபு ஜாமிஉத் துஆ
தாபியீன்களில் ஒருவரான ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் ஒரு முறை நபித்தோழர் அபூதர்தா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள். தொழுகை முடிந்தவுடன் தங்களுடைய பிரார்த்தனையில் நயவஞ்சகத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடினார்கள். அப்போது நான் அவர்களிடம் “நயவஞ்சகத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான அவசியம் உங்களுக்கு என்ன வந்தது?” என்று வினவினேன்.
அப்போது அபூதர்தா (ரலி) அவர்கள் சோதனையிலிருந்து யார் தான் அச்சமற்று இருக்க முடியும்? சோதனையிலிருந்து யார் தான் அச்சமற்று இருக்க முடியும்? என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதன் திடீரென ஒரு நேரத்தில் சோதிக்கப்படுகிறான்; ஆனால் அந்த சோதனையால் அவன் மார்க்கத்தை விட்டே வழி தவறிவிடுகிறான் என்று பதிலளித்தார்கள்.
நபித்தோழர்களில் சிலர் "இறைவா! நயவஞ்சகத்தனமாக பணிவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" பிரார்த்தனை செய்வார்கள்.
மாமேதை இமாம் ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்களிடம், "நயவஞ்சகமாக பணிவது என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இமாமவர்களிடம், "உடல் இறைவனுக்குப் பணிந்து உள்ளம் பணியாத நிலைதான் அது" என்று பதிலளித்தார்கள். நூல்:- மதாரிஜுஸ்ஸாலிகீன் 3/358, ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத் யூசுஃப் அல்கர்ளாவீ
நன்றியுடன் தியானித்தல்
நன்றியுடன் அல்லாஹ்வை (திக்ர் எனும்) நினைவுகூர்வது, உள்ளத்தை நயவஞ்சகத்திலிருந்து பாதுகாக்கும். அதனால் தான், நயவஞ்சகர்கள் குறித்து அல்லாஹ் கூறும்போது,
"இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் (நயவஞ்சகர்கள்) அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை." (திருக்குர்ஆன்:- 4:142) என்றும், இறைநம்பிக்கையாளர்கள் குறித்து, "இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான (தொழுகை, திக்ரு தஸ்பீஹ் போன்றவற்றின் மூலம்) நினைவு கூறுங்கள்." (திருக்குர்ஆன்:- 33:41) என்றும் கூறியுள்ளான்.
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَكْثَرَ ذِكْرَ اللهِ فَقَدْ بَرِئئَ مِنَ النِّفَاقِ ) எவர் அல்லாஹ்வை அதிகமாக(த் திக்ர் தஸ்பீஹ் மூலம்) நினைவுகொள்கிறாரோ அவர் நயவஞ்சகத் தன்மையை விட்டும் நீங்கிவிட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, ஜாமிஉஸ்ஸஙீர்
அச்சநிலை
ஹன்ழலா பின் அர்ரபீஆ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து ( كَيْفَ أَنْتَ يَا حَنْظَلَةُ ) "ஹன்ழலா! எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நான், ( نَافَقَ حَنْظَلَةُ ) "ஹன்ழலா நயவஞ்சகன் ஆகிவிட்டான்" என்று சொன்னேன். அதற்கு, "அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நான், ( نَكُونُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ حَتَّى كَأَنَّا رَأْىَ عَيْنٍ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَافَسْنَا الأَزْوَاجَ وَالأَوْلاَدَ وَالضَّيْعَاتِ فَنَسِينَا كَثِيرًا ) "நாம் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பது போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் மனைவி மக்களுடன் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். (அண்ணலார் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்" என்று கூறினேன்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அண்ணலாரிடம் சென்றோம்.
நான், "நாயகமே! ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்" என்று கூறினேன். அதற்கு அண்ணலார், ( وَمَا ذَاكَ ) "என்ன ஆனது?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "நாயகமே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாக பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் மனைவி மக்களுடன் கலந்துறவாடுகிறோம். பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்" என்று சொன்னேன்.
அதற்கு அண்ணலார், ( وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنْ لَوْ تَدُومُونَ عَلَى مَا تَكُونُونَ عِنْدِي وَفِي الذِّكْرِ لَصَافَحَتْكُمُ الْمَلاَئِكَةُ عَلَى فُرُشِكُمْ وَفِي طُرُقِكُمْ وَلَكِنْ يَا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً ) "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் என்னிடம் இருக்கும் போதுள்ள நிலையிலும் எண்ணத்திலும் எப்போதும் இருந்தால் உங்கள் படுகைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் வந்து உங்களுடன் கைகுலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்" என்று மூன்று முறை கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5305, திர்மிதீ-2438
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இரகசிய காப்பாளரான ஹுதைபா (ரலி) அவர்களிடம், "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மிடம் கூறியுள்ள நயவஞ்சகர்களின் பட்டியலில் என் பெயர் உள்ளதா? என்று கேட்டார்கள். நூல்:- ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத் யூசுஃப் அல்கர்ளாவீ
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ( إِنِّي أَخَافُ أَنْ أَكُونَ مُنَافِقًا ) "நான் நயவஞ்சகனாக ஆகிவிடுவேனோ என்று பயப்படுகிறேன்" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ( لَوْ كُنْتَ مُنَافِقًا مَا خِفْتَ ذَلِكَ ) "நீ நயவஞ்சகனாக இருந்திருந்தால் அதைப்பற்றி பயந்திருக்கவே மாட்டாய். (எனவே, நீ நயவஞ்சகன் அல்லர்.)" என்று கூறினார்கள். நூல்:- ஹில்யத்துல் அவ்லியா 4/251
இப்னு அபீமுலைக்கா (அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ்-ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( أَدْرَكْتُ ثَلَاثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَى نَفْسِهِ مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ إِنَّهُ عَلَى إِيمَانِ جِبْرِيلَ وَمِيكَائِيلَ ) நான் நபித்தோழர்களில் முப்பது பேரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் நயவஞ்சகத்தனம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர்களாகவே இருந்தனர். அவர்களில் யாரும் தமக்கு (வானவர்களான) ஜிப்ரீல், மீக்காயீல் (அலை) ஆகியோரின் இறைநம்பிக்கை இருப்பதாக சொல்லிக்கொண்டதில்லை. நூல்:- புகாரீ இறைநம்பிக்கை பாடம் -36
ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( مَا خَافَهُ إِلَّا مُؤْمِنٌ وَلَا أَمِنَهُ إِلَّا مُنَافِقٌ ) “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் நயவஞ்சகத்தனத்தை அஞ்சுவதில்லை. நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அது விஷயத்தில் அச்சமற்று (அலட்சியமாக) இருப்பதில்லை. நூல்:- புகாரீ இறைநம்பிக்கை பாடம் -36
ஹன்ழலா (ரலி) அவர்கள் அதீத கவனம் செலுத்தக்கூடிய (சீரியஸான) ஒரு மனிதர். அதன் காரணமாக தமது நிலை பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்தார். நபியவர்களுடன் இருக்கின்ற நேரத்தில் நல்லதோர் ஆன்மீக நிலையில் தாம் இருப்பதாகவும் நபியவர்களைவிட்டும் பிரிந்த பிறகு மனைவி மக்களோடு இருக்கின்ற நேரத்தில் அந்த ஆன்மீக நிலை இல்லாமல் போவதையும் உணர்ந்தார். இது ஒரு நயவஞ்சகம் என அவர் கருதினார். எனவே, நபியவர்களிடம் இதை முறையிடவும் செய்தார். அதற்கு நபியவர்கள், "ஆம்! மனித உள்ளத்துக்கு அதீத கவனமும் (சீரியஸ்னஸ்) தேவைப்படுகிறது. மனைவி, மக்களோடு உல்லாசமும் தேவைப்படுகிறது" என்பதை சுட்டிக் காட்டினார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அவையில் நபித்தோழர்கள் இருக்கும் வரை, அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனையிலும் மறுமை பற்றிய ஆர்வத்திலும் மூழ்கிப் போய்விடுவார்கள். ஆனால், அங்கிருந்து வெளியேறி வீடுகளுக்கும் கடைகளுக்கும் சென்றுவிட்டால், இந்த சிந்தனைகள் மறைந்துபோய் மனைவி மக்களுடன் உறவாடுவதும் தொழிலைக் கவனிப்பதுமாக இருப்பார்கள். இவ்வாறு அங்கொரு நிலையிலும் இங்கொரு நிலையிலும் இருப்பது, ஒரு நயவஞ்சகத்தனம் என்று ஹன்ழலா (ரலி) அவர்கள் எண்ணிவிட்டார்கள்.
அண்ணலாரிடம் இதைப் பற்றிக் கூறும்போது, இது நயவஞ்சகம் ஆகாது என்று விளக்கினார்கள். 24 மணி நேரமும் இறை சிந்தனையிலேயே இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் மறுமைக்கென சிறிது நேரம்; இம்மைக்கென என சிறிது நேரம் என்று வாழ வேண்டும் என்றும் அண்ணலார் விவரித்தார்கள். இதுதான் நடைமுறைக்கு ஏற்ற வாழ்க்கை முறையாகும். எனவேதான், இஸ்லாம் பின்பற்றுவதற்கு ஏற்ற எளிய மார்க்கம் என்கிறோம்.
மாமேதை இமாம் ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இறைநம்பிக்கையாளர் நயவஞ்சக குணங்கள் தம்மிடம் இருக்குமோ என்று அஞ்சுவார். ஆனால், நயவஞ்சகன் அவை தம்மிடம் இருக்கவே இருக்காது என்று தைரியமாக இருப்பான். நூல்:- மதாரிஜுஸ்ஸாலிகீன் 3/358, ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத் யூசுஃப் அல்கர்ளாவீ
சுயப்பரிசோதனை
நபித்தோழர் ஹுதைபா (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, ( هَلْ أَنَا مِنَ الْمُنَافِقِينَ؟ ) "நான் நயவஞ்சகர்களில் ஒருவனாக இருப்பேனா?" என்று கேட்டார். ஹுதைபா (ரலி) அவர்கள், ( هَلْ تُصَلِّي إِذَا خَلَوْتَ وَتَسْتَغْفِرُ إِذَا أَذْنَبْتَ؟ ) "நீர் தனிமையில் அல்லாஹ்வை தொழுகிறீரா? பாவம் செய்தால், அதற்குரிய (தவ்பா எனும்) மன்னிப்பு கோருகிறீரா?" என்று கேட்டார்கள். அம்மனிதர் “ஆம்” என்றார். ஹுதைபா (ரலி) அவர்கள், ( اذْهَبْ فَمَا جَعَلَكَ اللَّهُ مُنَافِقًا ) “(அப்படியானால்) நீர் போகலாம். அல்லாஹ் உம்மை நயவஞ்சகனாக ஆக்கமாட்டான்" என்றார்கள்
நயவஞ்சகர்கள் தங்களை முஸ்லிம்கள் எனக் காட்டிக் கொள்வதற்காக மற்ற முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுவார்கள், தனியே இருந்தால் தொழமாட்டார்கள். இதுவே அவர்களின் யதார்த்தம். ஒருவன் தனிமையில் தான் செய்த பாவத்தை எண்ணி வருந்தி, பாவமன்னிப்பு கேட்கிறான், தொழுகிறான் என்றால் அது அவனுக்கும் அல்லாஹ்விற்கும் மட்டுமே தெரியும். எனவே, அவன் நயவஞ்சகன் எனும் பட்டியலில் வரமாட்டான் என நபித்தோழர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இன்று பள்ளிவாசலுக்குச் சென்று தொழ இயலாத நிலையில் ஒருவர் வீட்டில் தனியே அமர்ந்து தனது பாவங்களை நினைத்து வருந்தி அழுது, தொழுகையையும் நிறைவேற்றினால் அவருக்கு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுத நன்மை கிடைக்கும். நம்மால் மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் வீட்டில் தொழுவதால் அவரின் எண்ணத்திற்கேற்ப நற்கூலி கிடைக்கும்.
அறிஞர் யூசுஃப் அல்கர்ளாவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைநம்பிக்கையாளருக்கும் நயவஞ்சகருக்கும் இடையிலான வேறுபாடு: இறைநம்பிக்கையாளர், நற்செயல்கள் செய்துவிட்டு, (அதன் மூலம் கர்வம் கொள்ளாமல்) "என்னிடமிருந்து அவை ஏற்கப்படாமல் போவதை அஞ்சுகிறேன்" என்பார். நயவஞ்சகன், பாவச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு (அது குறித்த உறுத்தல் இல்லாமல்) "எனக்கு மன்னிப்பு வழங்கப்படுவதை ஆசைப்படுகிறேன்." என்பான்.
நாம் நயவஞ்சகன் இல்லை என்பதை நமக்கு நாம் அறிந்துக்கொள்ள நாம் முறையாக தொழுகும் தொழுகையாளியாகவும் நிகழ்ந்துவிட்ட பாவங்களை எண்ணி முறையாக பாவமன்னிப்புக் கோருபவராகவும் ஆகவேண்டும்.
திருக்குர்ஆனில் காபிரூன் (நிராகரிப்பாளர்கள்) எனும் அத்தியாயத்தைவிட முனாபிக்கூன் (நயவஞ்சகர்கள்) எனும் அத்தியாயம் பெரியதாக இருக்கிறது. நிராகரிப்பாளர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதைவிட நயவஞ்சகர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள் என்கிறார் ஒரு அறிஞர்.
அல்லாஹுத்தஆலா நம்மை நயவஞ்சகக் குணம் மற்றும் செயல்களில் இருந்து பாதுகாப்பானாக! ஆமீன்!
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...