நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, மே 15, 2016

இந்தியா/திப்பு சுல்தான

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து, கர்ஜனையோடு “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணத்தைத் தழுவியவர். இத்தகைய வீரமிக்க மாவீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆட்சிமுறைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 20, 1750

இடம்:  தேவனஹள்ளி, கர்நாடக மாநிலம், இந்தியா

பணி: மன்னர்

இறப்பு: மே 04, 1799

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘மைசூரின் புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சாதாரண குதிரைவீரனாக இருந்து, பிறகு ஒரு அரசை ஆளும் மன்னனாக உயர்ந்து, இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கண்டவர்.

ஆரம்ப வாழ்க்கை

கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பல போர்க்களம் கண்டார், இதனால் தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780ல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார். பின்னர்,  1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியானை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான் அவர்கள், ‘புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை’ தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர் 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.

மூன்றாம் மைசூர் போர்

1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டிய பேரரசும், ஐதராபாத் நிஜாமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார்ன் வாலிசுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். ஆனால், சற்றும் கலங்காத திப்புசுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார். 1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தார். இறுதியில் சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நான்காம் மைசூர் போரும், திப்புவின் மரணமும்

‘போரில் திப்புசுல்தானை வீழ்த்தமுடியாது’ என அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து, திப்புவின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைப்பேசி, லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, திப்புவை அழிக்கத் திட்டம் தீட்டினர். இந்த சூழ்ச்சிக்கு இடையில் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படைத் தொடர்ந்து முன்னேறித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் குண்டடிப்பட்டு கிடந்த திப்புசுல்தானிடம், ‘தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து கூறிய அவர், “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே 1799 ஆம் ஆண்டு மே 4  ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.

ஆட்சிமுறையும், சீர்திருத்தங்களும்

திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசாரணையும், தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்புசுல்தான் அவர்கள், சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் வாழ்ந்தவர். தன்னுடைய கொள்கை அறிவிப்பால் மட்டுமல்லாமல், நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் மக்கள் சார்ந்த கொள்கைகளை இறுதிவரை பின்பற்றியவர். போர் வ்யூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும், இராணுவ தொழில்நுட்பத்திலும் ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தவர் திப்புசுல்தான் என்றால் அது மிகையாகது.

காலவரிசை

1750 – நவம்பர் 20 ஆம்தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் பிறந்தார்.

1776 – காதிகோட்டையை கைப்பற்றினார்.

1782 – டிசம்பர் 26 நாள் மைசூர் பேரரசராக அரியானை ஏறினார்.

1780-84 – பிரிட்டிஷாருடன் இரண்டாம் மைசூர் போர்.

1789-92 – பிரிட்டிஷாருடன் மூன்றாம் மைசூர் போர்.

1799 – பிரிட்டிஷாருடன் நான்காம் மைசூர் போர்.

1799 – மே 4 ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்

manbaiee.blogspot.com

1 கருத்து:

MOULAVI KADARBASHA MANBAYEE சொன்னது…

#வரலாற்றில்_இன்று

இந்திய விடுதலை போரின் விடிவெள்ளி, ஏவுகனை விஞ்ஞானி '#மைசூர்_புலி' மாவீரன் #திப்பு_சுல்தான் பிறந்த தினம் இன்று.!

பிறந்த தினம் இன்று #நவம்பர்20.!

திப்புவின் வரலாற்றிலிருந்து சில:-
பிறப்பு:- 20 : 11 : 1750
இறப்பு: - 4 : 5 : 1799

போா்களங்களில்: -
உலக வரலாற்றில் ஏவுகனையை முதன் முதலில், நான்காம் மைசூர் போாில் பயன்படுத்தினாா்,
அதன் உதிாிப்பாகங்கள் இன்றும் லண்டனில் ஹூல்விச் கிராமத்தில் ராக்கெட் ஏவுகனை பயிற்சியாளா்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

திப்புவின் ராணுவம் : -
3,20,000 போா்வீரா்களும், தனிப்பட்ட இராணுவமும், போலீசும், 9,00 யானைகளும், 6,000 ஒட்டகங்களும், 25,000அரபிக்குதிரைகளும், 4,00000 மாடுகளும், 3,00000 துப்பாக்கிகளும், 2,20,400 வாட்களும், 929 பீரங்கிகளும் ஏராளமான வெடிமருந்து குவியல்களும் இருந்தன.

திப்புவின் கப்பற்படை: -
60 பீரங்கிகள் ஏற்றககூடிய ஒருகப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒருகப்பல், 2 பீரங்கிகள் ஏற்றககூடிய 20 கப்பலகள், அணிவகுத்து போராடும் 72 கப்பல்கள், 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24ராத்தல் பீரங்கிகள் 30ம், 18ராத்தல் பீரங்கிகள் 30ம், 9ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன. 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரா்கள் இருந்தனா்.

"இன்றைய நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்புசுல்தான்."

"சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம்" என்று கொக்காித்த ஆங்கிலேயா்களை, கி.பி.1769ல் நிபந்தனையற்ற சரணாகதி அடையச்செய்து "மதராஸ் உடன்படிக்கையில்" கையெழுத்திடவைத்து முதன் முதல் வரலாற்று தோல்வியை ஆங்கிலேயா்களுக்கு கொடுத்தார்.
கி.பி. 1780 ல் ஆங்கிலேய படைத்தளபதி கா்னல் பெய்லியையும்,
கி.பி.1782 ல் பிரிட்டிஷ் தளபதி கா்னல் பிரெய்த் வெயிட்டையும் கைதிசெய்த முதல் இந்திய மன்னன் திப்பு சுல்தான்.
கி.பி. 1783 ல் "பேடனூா்" கோட்டைப்போாில் ஆங்கிலத் தளபதி ஜெனரல் மாத்யூஸ் கொல்லப்பட்டான்.

மதச்சார்பற்ற திப்பு : -
கி.பி. 1771-1772 க்கிடையில் "பரசுராம் பாகுவே" தலைமையில் மராட்டியா்கள் "அன்னை சாராதாதேவி சிலையை" கொள்ளையடித்துச் சென்றதை மீட்டு திரும்பவும் சிருங்கோியில் நிறுவச் செய்தார்.
*சிருங்கோிமடத்தில் ஹைதா் அலியின் சனதுகள் (Grand) மூன்றும் திப்புவின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சம நீதி மான்யம் : -
மைசூர் ராஜ்ஜியத்தில் 90% இந்துக்கள், 10% முஸ்லீம்கள்.ஒரே ஆண்டில் இந்து கோவில்களுக்கும், தேவஸ்தானங்களுககும் = 1,93,959 வராகன்களும், பிராமண மடங்களுக்கு = 20,000 வராகன்களும், ஆனால் முஸ்லீம்களுக்கு = 20,000 வராகன்கள் மட்டுமே. மொத்தம் 2,33,959 வராகன்கள் அரசு கஜானாவிலிருந்து சமசதவீத அடிப்படையில் வழங்கப்டுள்ளது. ஆதாரம் : -கி.பி.1798. mysore gezeter பக்கம் 38. vol. IV 1929.

=> கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோவிலுக்கு 12யானைகள், தங்க வெள்ளி ஆராதனை பாத்திரம், பாரசீக பட்டயம்.
=> நஞ்சான்கூடு நஞ்சுண்டடஸ்வரா் கோவிலுக்கு மரகதலிங்கம் , இன்றும் "பாஷா லிங்கம்" என்றழைக்கப்படுகின்றது.
=> குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சுற்றியுள்ள நிலங்களில் வாி வசூல் செய்யும் உரிமை
=>காஞ்சிபுரம் கோவிலுக்கு 10,000 வராகன் நன்கொடை.
=> மைசூர் தென்னூாில் இராமானுச குளம் தூா்வார
=> பாபாபுதன்கிாி தத்தாத்ாீய பீடம் 20 சிற்றூா்கள்.
=>புஷ்பகிாி மடத்திற்கு 2 கிராமங்கள்.
இவையாவும் மானியமாக கொடுகௌப்பட்டுள்ளது.

" மைசூர் நூலகத்தில் கோவில்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் அரசாணைகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது."

சீர்திருத்தம் : -
மலபாா் பகுதில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தையும்.
ஒரே பெண்ணை பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தையும் தடுத்தாா்,
நரபலியையும் தேவதாசி முறையும் ஒழித்தாா்.
மதஒற்றுமையையும், மதுவிலக்கையும் இருகண்ணாக பாவித்தார்.

"துரோகத்தால் வீழ்ந்த வீரமும் தேசபக்தியும்"
ஆஞ்சி சாமய்யா, திருமால் ராவ் இவர்களின் துரோகத்தால் "பெங்களூர்" கைநழுப்போனது.
கி.பி. 1799 மேமாதம் 4ல் நடுப்பகலில் சாதாரண சிப்பாய் உடையில் 50 வீரா்களுடன் சுட்டுக்கொண்டே முன்னோினாா் அந்நிலையிலேயே நெற்றிப்பொட்டில் குண்டுபாய்ந்து தன் வீரவாளை250 வருட ஆசிய வரலாற்றில் வாளேந்தி அப்போா்கலத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னன் "ஷஹித் திப்பு சுல்தான்".

பிரபல்யமான பதிவுகள்