நீதி மன்றமே:
திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் எனவும்; அச்சமயம் எல்லோரும் எழுந்து நிற்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதி மன்றம்.
இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
காரணம் எக்காலத்திலும் நான் தியேட்டரில் கால்வைக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல;
ஆடை அவிழும் தியேட்டரில் ஆபாசம் வழியும் பாடல் ஒலித்தால் என்ன பிரச்னை?
தேசிய கீதத்தை ஆபாசப்பாடல் என்றுகூறி அவமதிப்பு செய்துவிட்டதாக என்மீது பாய வேண்டாம்.
நாட்டின் மீதும் நாட்டின் சின்னங்கள் மீதும் எனக்கு நிரம்ப மரியாதை இருக்கிறது.
இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் என்முன்னோர்கள்.
அவர்களின் குருதியைக் கொடுத்துதான் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள். இது என் நாடு. எனவே நேசமும் பாசமும் இயல்பாகவே எனக்குள் இருக்கிறது.
ஆனால் அந்தப்பாடல் இழிவானது.
எந்த வெள்ளையனை என் முன்னோர் எதிர்த்தார்களோ அதே வெள்ளை அரசனைப் புகழ்ந்து இயற்றிய பாடலை எப்படி நான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ள முடியும்?
ஆகவே அந்த இழிவான பாடலை திரையரங்கில் ஒலிப்பதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. தியேட்டர் என்றால் குத்துப்பாடலும், முக்கல் முனகலும் ஒலிப்பது இயல்பு தானே!
ஆனால் இந்த நாட்டின் உயர்ந்த பீடங்களில் ஒன்றான உச்சநீதி மன்றத்திடம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.
நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கையில் தியேட்டரின் டிடிஎஸ் சிஸ்டத்தை சீரமைப்பதுதான் நீதி மன்றத்தின் பணியா?
இருபது நாட்களாக மக்கள் வங்கி வாசலில் படுத்துறங்குகிறார்கள்; வியாபாரமும் படுத்து விட்டதால் வியாபாரிகள் உறக்கமில்லாமல் தவிக்கிறார்கள்.
இதெல்லாம் நீதிமன்றத்தின் கண்ணுக்குத் தெரியவில்லையா?
மணிப்பூரின் இரோம் ஷர்மிளா பதினாறாண்டுகளாக உயிரைப் பணயம் வைத்து அகிம்சா போராட்டம் நடத்தினாரே! நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதா நீதி மன்றம்?
காந்தியின் தேசத்தில் ஒரு அகிம்சா போராட்டம் தோற்றுப்போனது இந்த நாட்டுக்கு அவமானமில்லையா?
வடகிழக்கிலும், கஷ்மீரிலும் ராணுவம் தன் சொந்த குடிமக்களை குதறுகிறதே; அவர்களின் ஓலங்களை ஏன் செவிமடுக்கவில்லை இந்த நீதிபீடம்?
தண்டோரா காடுகளில் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதை தடுக்க நீதியரசர்களால் முடிந்ததா?
ராணுவமும், போலீசும், மண்ணை காக்க போராடும் பழங்குடி மக்களின் பச்சை ரத்தத்தை பசுமை வேட்டை என்ற பெயரில்
குடித்ததை தட்டிக் கேட்டதா இந்த நீதி மன்றம்?
எளியமக்களை சுடும் சல்வா ஜுடும் குண்டர்களை என்ன செய்தது இந்த மன்றம்?
ஆறுகளை மலடாக்கும் மணற் கொள்ளையர்களை நீதிமன்றத்தின் கண்களிலிருந்து மறைப்பது மணலா? புழுதியா? அல்லது கரன்சியா?
குடிதண்ணீருக்கே தவிக்கும் தேசத்தில் நதி தண்ணீரை கோக்கும் பெப்சிக்கும் தாரைவார்ப்பதை தானாக முன் வந்து தடுத்ததா நீதிமன்றம்?
கொள்ளளவை எட்ட முடியாமல் முல்லைப்பெரியாறு அணை கொதிப்பதை தணித்தார்களா இவர்கள்?
நாடு முழுக்க கொள்ளளவையும் தாண்டி சிறைச்சாலைகள் எல்லாம் நிரபராதிகளால் நிரம்பி வழிவதை இந்த நீதிமன்றம் கண்டுகொண்டதா?
அடிப்படை உரிமைகளை பறிக்கும், அரசியல் சாசனத்துக்கே எதிரான தடா, பொடா, யுஏபிஏ சட்டங்களை எதிர்த்ததா நீதிமன்றம்?
மண்ணை பொன்னாக்கும் விவசாயிகளின் வாழ்வை பாழாக்குகிறது அரசு. பொங்கியதா நீதிமன்றம்?
மீத்தேன், பெட்ரோல் என விவசாயிகளின் வாழ்வில் மண்ணள்ளிப் போடுகிறது பன்னாட்டு நிறுவனங்கள். என்ன செய்தது நீதிமன்றம்?
நாட்டின் பல ரயில் நிலையங்களில்
வட்டிக்கு வாங்கி, உயிரும் உதிரமும் கொடுத்து விளைவித்த நெல் மூட்டைகள் ஒரு குடோன் இல்லாமல் மழையில் நனைந்து வெயிலில் வெந்துபோகிறது.
இரண்டாயிரம் கோடிக்கு தனிமனுதனுக்கு விமானம் வாங்கும் நாட்டில் ஒரு குடோன் கட்டவழியில்லையா? அல்லது நிதி இல்லையா? இதெல்லாம் நீதி மன்றத்துக்கு தெரியவில்லையா?
எவனுக்கும் வேண்டாத அணுஉலைகளை கூடங்குளத்தில் வைத்து கொளுத்துகிறார்கள்.
எத்தனை முறை தட்டியாயிற்று நீதிமன்றத்தின் கதவுகளை!
என்ன பலன்?
தனி மனிதனின் உரிமையையோ, தேசத்தின் இறையான்மையை பாதுகாக்கவோ எத்தனை முறை ஏறி இறங்கினாலும் கிடைக்காத தீர்ப்புகள்,
கார்ப்பரேட் நலன்களுக்கு மட்டும் என்றால் ஜெட் வேகத்தில் கிடைப்பது எப்படி?
இந்தியாவில் மட்டும் நீதி என்ன உலோகத்தால் செய்யப்பட்டிருக்கிறது?
அரசின் கொடூரமான திட்டங்களுக்கு எதிராக நீதி வேண்டி நீதிமன்றம் சென்றால்
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்றுகூறி தள்ளுபடி செய்கிறார்கள்.
ஆனால் தள்ளுபடி செய்யவேண்டிய வழக்குகளில் தீர்ப்பு என்ற பெயரில் மக்கள் தலையில் மண்ணள்ளிப்போடுவது எந்த வகையில் நியாயம்?
தியேட்டர் விசயத்துக்கே வருவோம்.
டெல்லி தியேட்டர் தீ விபத்துக்குப்பின் பல விதிமுறைகளை சொன்னது நீதிமன்றம். இன்றைய மல்டி ப்ளெக்சு தியேட்டர்கள் எல்லாம் அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளனவா?
உயிருக்கே உத்திரவாதம் இல்லாத போது பாட்டு சீனுக்கெல்லாம் உட்கார்ந்தால் என்ன? எழுந்து நின்றால் என்ன?
தியேட்டர்களில் நடக்கும் வரி ஏய்ப்பு, கட்டணக்கொள்ளை, குடி தண்ணீருக்கும் கூடுதல்விலை விவகாரங்களை எல்லாம் எந்த நாட்டு நீதிமன்றம் சீர் செய்யும்?
அதெல்லாம் அரசின் பணி என்றால் மைக் செட் கட்டுவதற்கு மட்டும் நீதிமன்றம் முன் வருகிறது?
மக்கள் ஊழியம் செய்ய ஓட்டு போடுகிறார்கள். அரசுகள் அட்டூழியம் செய்கின்றன.
நிவாரணம் தேடி நீதி மன்றம் வருகிறார்கள் மக்கள்.
நீதிபதிகள் உதட்டைப் பிதுக்கி, தோள்களை குலுக்கி, கையை விரித்தால் மக்கள் என்னதான் செய்வார்கள்?
அய்யா நீதியரசர்களே! நானும் நாட்டில் சிலகோடி மக்களும் இன்னும் இந்திய நீதிமன்றங்களை நம்புகிறோம்.
எங்கள் நம்பிக்கையை காற்றில் பறக்கவிடுவீர்களா? காப்பாற்றுவீர்களா?
இப்படிக்கு
தேசத்தை நேசிக்கும் எளிய குடிமகன்களில் ஒருவன்
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ