சொர்க்கத்தில் நமக்கென ஒரு சொந்தவீடு
1. பள்ளிவாசல் கட்டுதல்:
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் “ யார் ஒருவர் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியைக்கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்” (புஹாரி – முஸ்லிம்)
2. சூரத்துல் இஹ்லாஸ் ஓதுதல்:
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள், “எவர் ஒருவர் குல்ஹுவல்லாஹுஅஹத் (சூரத்துல் இஹ்லாஸ்) சூராவை தினமும் தொடரந்து பத்து முறை ஓதுவாரோ அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக்கட்டுகிறான்.” இதை முஆத் பின் அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-6472)
3. தனது குழந்தையை இழந்துவிட்டால் பொறுமையோடு அல்லாஹ்வை புகழ்தல்:
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள், “ஒருவர் தனது குழந்தை மரணித்துவிட்டால், உடனே மலக்குகளிடம் அல்லாஹ்: “எனது அடியானின் இதயக்கனியை நீங்கள் பறித்து வந்து விட்டீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் “ஆம், பறித்து வந்துவிட்டோம்” என சொல்வார்கள். மீண்டும் அவர்களிடம் அல்லாஹ்: எனது அடினானின் இதயக்கனியை நீங்கள் பறித்தபோது, எனது அடியான் என்ன சொன்னான்? என கேட்பான். அதற்கு அவர்கள் “இறைவா ! அந்த அடியான் “ அல்ஹம்துலில்லாஹ், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்று சொன்னான் என மலக்குகள் கூறுவார்கள். உடனே அல்லாஹ் மலக்குகளிடம், “அந்த அடியானுக்காக சொர்க்கத்தில் ஒருவீட்டைக்கட்டுங்கள், அந்த வீட்டிற்கு “புகழுக்குரிய வீடு” என்று பெயரிடுங்கள்” என சொல்வான். இதை அபுமூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ரியாலுஸ்ஸாலிஹீன்-362-1)
4. கடைவீதியில் ஓதவேண்டிய திக்ரை ஓதுதல்:
எவர் ஒருவர் கடைவீதியில் நுழைந்தவுடன் “ லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல்முல்கு, வலஹுல்ஹம்து, யுஹ்யீ, வ யுமீது, வஹுவ ஹய்யுன் லா யமூத்து, பி யதிகல் ஹைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” என்று சொல்கிராறோ அவருக்கு, அல்லாஹ் பத்து லட்சம் நன்மைகளை வழங்குகிறான், பத்து லட்சம் தீங்குகளைவிட்டும் அவரை விலக்குகிறான், பத்து லட்சம் அந்தஸ்துகளை உயர்த்துகிறான், மேலும் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-1113-1)
5. ஜமாஅத் தொழுகையில் வரிசையில் ஏற்படும் இடைவெளியை நிரப்புதல்:
எவர் ஒருவர் ஜமாஅத் தொழுகையின்போது, வரிசைகளில் ஏற்படும் இடைவெளியை நிரப்புகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்ர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான், என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-1843)
6. ஃபர்ளான தொழுகையில் முன்-பின் சுன்னத் 12 ரக்கஅத்-களை தொடர்ந்து தொழுதல்:
எவர் ஒருவர் ஃபர்ளான தொழுகையின் முன்-பின் சுன்னத் தொழுகைகளை 12 ரக்கஅத் (ளுஹருக்கு முன் இரண்டு இரண்டாக நான்கும், ளுஹருக்கு பின் இரண்டும், மஃரிபுக்குப்பின் இரண்டும், இஷாவுக்குப்பின் இரண்டும், ஃபஜ்ருக்கு முன் இரண்டும், மொத்தம் 12 ரக்கஅத்)தை தொடர்ந்து தொழுது வருபவர்களுக்கு, அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான். என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னுமாஜா – திர்மிதி)
7. அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்தல்:
எவர் அல்லாஹ்வை ஈமான்கொண்டு, என்னைப்பின்பற்றி அல்லாஹ்வுக்காக நாடு துறந்து ஹிஜ்ரத் செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான், என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை ஃபளாழத் பின் அபீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-235-1)
8. நற்பண்புகள்:
எவர் ஒருவர் தன்பக்கம் உரிமையிருந்தும், பிறருக்கு விட்டுக்கொடுக்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் கீழ்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கும், எவர் ஒருவர் நகைச்சுவைக்காகக்கூட பொய் பேசாமல் தன்னை பேணிக்கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் நடுத்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கும், அழகிய நற்பண்புகளை தனதாக்கிக்கொள்பவருக்கு சொர்க்கத்தின் மேல் தளத்தில் ஒருவீடு கிடைப்பதற்கும் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அபீ அமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (صحيح الترغيب وترهيب 6-3)
சொர்க்கத்தில் நமக்கென ஒரு தோட்டம்
வீடு மட்டுமிருந்தால் போதுமா? அதைச்சுற்றி தோட்டம், தோப்பு, பூங்கா போன்றவை வேண்டாமா? மனிதன் எதை விரும்புவான் என்பதை அவனைப்படைத்த இறைவனுக்குத் தெரியாதா?. இதோ, இறைவன் தனது அடியானுக்கு பரிசளிக்கும் அரண்மணையைச்சுற்றி தோட்டம் அமைத்துத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.
இவ்வுலகில் நாம் அமைக்கும் தோட்டம் போன்றதல்ல, இறைவன் ஏற்படுத்தும் தோட்டம். அது என்றும் பலன்தரக்கூடிய நிலையான சொர்க்கப் பூஞ்சோலைகளாகும். அத்தகைய தோட்டங்களைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகளையும் அண்ணல் (நபி) ஸல் அவர்கள் நமக்கு அறிவித்துத்தருகிறார்கள்.
இறைவனை நினைவுகூர்வதன் வழியாக அதனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான நபிவழியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள திக்ருகளை தொடர்ந்து ஓதிவருவோமானால் அரண்மணைகள் மட்டுமல்லாது, அத்துடன் அழகிய தோட்டங்களையும் நமக்கு பரிசளிப்பதற்கு இறைவன் காத்திருக்கிறான்.
இவ்வுலகில் பொருளைத்தேடுவதற்காக எந்தளவிற்கு போராடுகிறோமோ, அதைவிட பன்மடங்கு ஆர்வத்தோடு எல்லையில்லா இன்பங்களை தன்னகத்தே கொண்ட அரண்மனைகளையும் தோட்டங்களையும் நாம் ஒவ்வொருவரும் பெறுவதற்கு மிகுந்த ஆர்வத்தோடும் இறைவன் தருவான் என்ற நம்பிககையோடும் நமது வாழ்வில் எல்லா நிலையிலும் முயற்சி செய்யவேண்டும் அதற்கு ஏக இறைவனாகிய அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!!!.
திக்ரு செய்வது:
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அபுஹுரைரா (ரழி) அவர்களின் இல்லத்தின் வழியாக சென்றபொழுது, அபுஹுரைரா (ரழி) அவர்கள் தோட்டவேலை செய்துகொண்டிருந்தார்கள். அதைக்கண்ட ரஸூ{ல் (ஸல்) அவர்கள்,
அபுஹுரைராவே ! நீர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்? என கேட்டார்கள். அதற்கு நான் மரங்களை நட்டுக்கொண்டிருக்கிறேன், என சொன்னபொழுது, அபுஹுரைராவே! மரம் நடுவதைவிட சிறந்த ஒன்றை நான் அறிவித்துத் தரட்டுமா? என கேட்டார்கள். அறிவித்துத்தாருங்கள், யா ரஸூலுல்லாஹ் என அபுஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹுவல்லாஹுஅக்பர்” என நீர் ஒவ்வொருமுறை சொல்லும்போதும் அல்லாஹ் உமக்காக சொர்க்கத்தில் ஒரு மரத்தை நடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அபுஹ{ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கறார்கள் (ஸஹீஹுல் ஜாமிஃ)
எவர் ஒருவர் தினமும் ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி என கூறுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு ஈச்சமரத்தை நடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-6429)