நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், மார்ச் 25, 2021

ரமலான் மாதத்தின் சிறப்புகள்,

ரமலான்
 சட்டமாக்கப்பட்ட கால கட்டங்கள்:

இரண்டு கட்டங்களாக நோன்பு சட்டமாக்கப்பட்டது. முதலாவது கட்டம் – முகல்லபின் தெரிவுக்குரிய காலகட்டம். அதாவது இரண்டிலொன்றை தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்த காலகட்டத்தைக் குறிக்கும். முகல்லப் சக்தியுள்ளவராயின் நோன்பு நோற்பதே மிகவும் சிறந்தது. இல்லாவிட்டால் பித்யாவுடன் நோன்பை விடமுடியும். பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். அதற்கு மேற்பட்டோருக்கு உணவளித்தாலும் அது அவருக்கு நன்மையாகவே அமையும்.

இது பற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் தக்வாவைப் பெறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்னால் இருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் ஒரு குறிப்பிட்ட காலம் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாக இருப்பவர் அல்லது பிரயாணத்திலிருப்பவர் அதனை வேறுநாட்களில் நோற்றுக் கொள்ளட்டும். நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும். மேலதிகமாக உணவளிப்பவருக்கு அது நன்மையாகவே அமையும். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது” (அல்பகரா 183-184) அதாவது விரும்பியவர் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு பித்யா கொடுக்கலாம் என்பதே இவ்வசனம் உணர்த்தும் கருத்தாகும்.

கட்டாயமாக்கப்பட்ட காலப்பிரிவு:

இரண்டாவது கட்டம் – முன்னைய வசனம் வழங்கிய தெரிவுரிமை மாற்றப்பட்டு, நோன்பு கட்டாயமாக்கப்பட்ட காலத்தை இது குறிக்கும். இது தொடர்பாக பின்வரும் வசனம் இறங்கியது.

“அல்குர்ஆன் இறக்கப்பட்ட றமழான் மாதம், அது மனிதர்களுக்கு நேர்வழியாகவும் ஹுதாவையும் புர்கானையும் தெளிவுபடுத்தும் ஆதாரமாகவும் இருக்கின்றது. உங்களில் அத்தகைய மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாக அல்லது பிரயாணத்திலிருப்பவர் அதை வேறு நாட்களில் நோற்கலாம். அல்லாஹ் உங்களுக்கு இலேசையே விரும்புகின்றான். அவன் உங்களுக்கு கஷ்டத்தை விரும்பவில்லை. குறிப்பிட்ட கால நோன்பை நீங்கள் பூரணப்படுத்தவும் உங்களுக்கு வழிகாட்டிய அல்லாஹ்வை உயர்த்துவதற்குமே இவ்வாறு கூறுகின்றான். இதனால் நீங்கள் நன்றியுடையவர்களாக மாறலாம்.” (அல்பகரா 185)

ஸலமத் இப்னு அக்வஃ (றழி) அறிவிக்கும் புஹாரி முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஹதீஸ் பின்வருமாறு “நோன்பு நோற்க சக்தியற்றவர்கள் பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற வசனம் இறங்கிய போது விரும்பியவர்கள் நோன்பை விட்டுவிட்டு பித்யா கொடுத்துக் கொண்டிருந்தனர். இறுதியாக இதை அடுத்துள்ள ஆயத் இறங்கியதும் முன்னைய சலுகையை மாற்றிவிட்டது” (ஆதாரம் முத்தபக் அலைஹி – அல்லுஃலுஃவல் மர்ஜான் 702)


நோன்பின் வகைகள்

நோன்பு அதன் சட்ட அமைப்பைப் பொறுத்து பலவகைப்படும் அவற்றில் பர்ளான நோன்புகளும் உள்ளன. மேலதிக நோன்புகளும் உள்ளன. இன்னொரு வகையில் கூறுவதாயின் நோன்பில் வாஜிபானவை, முஸ்தஹப்பானவை, ஹராமானவை, மக்ரூஹானவை எனப்பல வகை உள்ளன.

வாஜிப் அல்லது பர்ளு என்பது பர்ளுஐனயே குறிக்கின்றது. அதாவது குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றுமாறு விதியாக்கப்பட்டதே வாஜிபாகும். அதுதான் றமழான் மாத நோன்பாகும். அவற்றில் அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய உரிமை என்ற வகையில் குறிப்பிட்ட காலத்துக்கு நோற்கப்படும் வாஜிபான நோன்பும் உண்டு. அவை குற்றப் பரிகாரங்களுக்கான நோன்பாகும். உதாரணமாக சத்தியத்தை முறித்தால், மனைவியை ளிஹார் செய்தால், தவறுதலாக கொலை செய்தால் குற்றப் பரிகார நோன்பு நோற்கப்பட வேண்டும். மேலும் ஒருவர் தானே தன்மீது விதித்துக் கொள்ளும் நோன்பும் வாஜிபில் அடங்கும். அது நேர்ச்சை நோன்பு எனப்படும்.

நாம் முதற் பிரிவாகிய ரமலான் மாத நோன்பை அதற்கு இஸ்லாத்திலும் முஸ்லிம்களின் வாழ்விலும் ஒரு மகத்தான முக்கியத்துவம் இருப்பதால் அதனை முதலில் விளக்குகின்றேன்.

ரமலான் நோன்பு இஸ்லாத்தின் தூன்

ரமலான்மாத நோன்பு ஒரு புனிதக் கடமை. இஸ்லாத்தின் மிகப்பெரிய வணக்க வழிபாடுகளில் ஒன்று. இந்த மார்க்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஐந்து இயங்கும் தூண்களில் ஒன்று.

இது வாஜிப் என்பதும் பர்ளு என்பதும் குர்ஆன், சுன்னா, இஜ்மா ஆகிய மூன்று மூலாதாரங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். “ஈமான் கொண்டவர்களே நீங்கள் தக்வாவைப் பெறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கியது போன்று உங்கள் மீதும் குறிப்பிட்ட காலம் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.” (அல்பகரா 183, 184)

அடுத்த வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான். “றமழான் மாதம் அதிலேதான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் கொண்டதாக அல்குர்ஆன் இறக்கப்பட்டது.” (அல்பகரா 185)

புகழ்பெற்ற ஹதீஸ் ஒன்றை உமர் (றழி) பின்வருமாறு அறிவிக்கின்றார். “இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்வதும் தொழுகையை நிலைநாட்டுவதும் சகாத்தை வழங்குவதும் றமழானில் நோன்பு நோற்பதும் சக்திபெற்றிருப்பின் அல்லாஹ்வின் ஆலயத்தில் ஹஜ் செய்வதுமாகும்.” (முஸ்லிம், அபுதாவூத், திர்மிதி, நஸாஈ)

இப்னு உமர் அறிவிக்கும் முஸ்லிம்கள் எல்லோரும் மனனமிட்டுள்ள இன்னொரு புகழ்பெற்ற ஹதீஸும் நோன்பு பற்றிக் கூறுகின்றது. இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது கட்டியெழுப்பப் பட்டுள்ளது என்று வரும் ஹதீஸில் அதில் ஒன்று றமழானில் நோன்பு நோற்றலாகும் (ஆதாரம் முத்தபக் அலைஹி)

அபூஹுறைரா (றழி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் “ஒரு நாட்டுப்புற அறபி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் செய்தால் சுவர்க்கம் செல்லக்கூடிய ஒரு சொல்லை எனக்குக் காட்டித்தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபிகளார் ‘அல்லாஹ்வுக்கு வழிப்படு, அவனுக்கு எதனையும் இணைவைக்காதே ….றமழானில் நோன்புவை” (ஆதாரம் முத்தபக் அலைஹி)

றமழான் நோன்பு குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளது. ஸஹீஹுல் ஸித்தாவும் ஏனைய ஹதீஸ் கிரந்தங்களும் அவற்றைப் பதிவு செய்துள்ளன. அவையனைத்தும் முதவாதிரான ஆதாரமாகவும் காணப்படுகின்றன. எல்லா சட்ட சிந்தனைப் பிரிவுகளையும் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் நுபுவத்திலிருந்து இன்று வரை எல்லாக் காலப்பிரிவுகளிலும் றமழான் நோன்பு வாஜிப் என்பதிலும் பொறுப்பேற்கும் தகுதிபடைத்த எல்லா முஸ்லிம்கள் மீதும் அது பர்ளுஐன் என்பதிலும் ஏகோபித்த கருத்துக் கொண்டுள்ளனர். அன்றும் இன்றும் இதுவிடயத்தில் யாரும் தனித்த கருத்துக் கொண்டிருக்கவில்லை.

இது முதவாதிரான ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்ட பர்ளான கடமைகளில் ஒன்றாகும். இது தனியானதா பொதுவானதா என்று ஆராய வேண்டிய, ஆதாரம் தேடவேண்டிய அவசியமில்லாத மார்க்கத்தில் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய கடமைகளில் ஒன்றாகும்.

எனவேதான் றமழான நோன்பு கடமையில்லை என்றோ அல்லது அதில் சந்தேகம் கொள்ளவோ அல்லது அதை அற்பமாக நினைப்பதோ அனைவரையும் காபிர், அல்லது முர்தத் என்பதில் அனைத்து இஸ்லாமிய சட்ட அறிஞர்களும் தீர்ப்பளித்துள்ளனர். நோன்பை மறுப்பது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பொய்ப்படுத்திவிட்டார் என்பதைத் தவிர அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருள் கிடையாது.

இந்த விடயத்தில் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் காரணம் கற்பிக்க முடியாது. அப்படியானவர்கள் இருந்தால் அவர் மார்க்கத்தில் விளக்கம் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அறியாதிருந்தவற்றை அவர் அறிந்து கொள்ள வேண்டும். அது அவர் மீது கடமையாகும். அவ்வாறே அவருக்கு அறிய வைப்பதும் முஸ்லிம் சமூகத்தின் மீது குறிப்பாக அவருக்கு நெருங்கிய உறவினர் மீதும் கடமையாகும்.

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

1. ரமலான் மாதத்தின் சிறப்புகள் யாவை?

1. ரமலான் மாதம்- மனித சமுதாயத்திற்கு அருட்கொடையாகவும் மாபெரும் வழிகாட்டியாகவும் அமைந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

ரமலான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, நேர்வழியைத் தெளிவாகக் எடுத்துச் சொல்லக்கூடிய, (பொய்யை விட்டும் உண்மையைப்) பிரித்துக் காட்டக்கூடிய குர்ஆன் அருளப்பட்டது. எனவே அம்மாதத்தை யார் அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

2. இம்மாதத்தில்தான் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலதுல் கத்ரு எனும் மகத்துவ மிக்க இரவு உள்ளது.

'மகத்துவமி;க்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.' (அல்குர்ஆன் 97:1-3)

3. ரமலானின் ஒவ்வொரு இரவிலும் நரகத்திலிருந்து பலரை அல்லாஹ் விடுதலை செய்கிறான்.

4. இம்மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ரமலான் மாதத்தின் முதல் இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும் மூர்க்கத் தனமான ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டுவிடுகின்றன. அவற்றில் ஒரு வாசலும் திறக்கப்படுவதில்லை. சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் எந்த வாசலும் மூடப்படுவதில்லை. 'நன்மையைத் தேடுபவனே முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே நிறுத்திக் கொள்!' என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார். அல்லாஹ்வால் நரகத்திலிருந்து பலர் விடுவிக்கப்படுகின்றர். இவ்வாறு விடுவக்கப்படுவது (ரமலானின்) ஒவ்வொரு இரவிலுமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதி 682, இப்னுமாஜா 1642

5. ரமலான் மாதம் பாவங்களைப் போக்குகின்ற மாதம்.

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 38, முஸ்லிம் 760

6. ரமலானில் செய்கின்ற உம்ரா ஹஜ்ஜுக்குச் நிகரானது.

(புகாரி; 1782)

2. ரமலான் நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது?

ரமலான் நோன்பு ஹிஜ்ரி 2- ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. (பார்க்க: பத்ஹுல்பாரி ஹதீஸ் எண்: 2001)

3. நோன்பு யார் மீது கடமை?

நோன்பு மட்டுமல்ல எல்லா இறைக்கடமைகளும் பருவமடைந்த, புத்தி சீர்நிலையில் உள்ள, முஸ்லிமான, ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்.

'நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் சென்றோர் மீது (நோன்பு) கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட் டுள்ளது. நீங்கள் (இறைவனை) அஞ்ச வேண்டும் என்பதற்காக.' (2:183)

'மூன்று பேர்களை விட்டும் எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது. அதாவது விழிக்கும் வரை தூங்குபவனை விட்டும், பருவமடையும் வரை குழந்தையை விட்டும், புத்தி சீராகும் வரை பைத்தியக்காரனை விட்டும் எழுது கோல் உயர்த்தப்பட்டு விட்டது' என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ(ரலி), நூல்: அபூதாவூத் 4402

4. நோன்பின் நோக்கம் என்ன?

அல்லாஹ்வுக்குப் பயந்து நடப்பதற்கும், நன்மைகளைச் செய்வதற்கும், தீமைகளை விட்டும் விலகி வாழ்வ தற்கும் நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வதே நோன்பின் நோக்கமாகும்.

'நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் சென்றோர் மீது (நோன்பு) கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட் டுள்ளது. நீங்கள் (இறைவனை) அஞ்ச வேண்டும் என்பதற்காக.' (2:183)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணாமல் பருகாமல் இருப்பது அல்லாஹ்வுக்குத் தேவையில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 1903

'நோன்பு (நரகத்திலிருந்தும் தீமைகளிலிருந்தும் காக்கும்) கேடயமாகும். எனவே அவர் (பகல் நேரங்களில்) உடலுறவில் ஈடுபட வேண்டாம், முட்டாள் தனமாகவும் நடந்து கொள்ள வேண்டாம். யாரேனும் நோன்பாளியிடம் சண் டைக்கு வந்தால் அல்லது திட்டினால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி என்று அவர் கூறிவிடட்டும்' எனவும் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 1894

5. நோன்பின் சிறப்புகள் யாவை?

1. நோன்பாளிக்கு கணக்கின்றி மகத்தான கூலி வழங்கப்படும்.

2. நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள். நோன்பு திறக்கும்போதும், தம் இறைவனை

சந்திக்கும்போதும்.

3. நோன்பாளியின் வாயில் ஏற்படும் மாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட மணமிக்கது.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: மனிதனின் ஒவ்வொரு நற்செயலுக்கும் பன்மடங்கு கூலி வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்கு அது போன்று பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலியாகும். ஆனால் அல்லாஹ் கூறுகிறான் நோன்பைத் தவிர! ஏனெனில் நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். நோன்பாளி தனது ஆசையையும் உணவையும் எனக்காகவே விட்டுவிடுகிறான் என்று! நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று அவர் நோன்பு துறக்கும் போது, மற்றொன்று அவருடைய இறைவனை சந்திக்கும்போது. நோன்பாளியின் வாயில் ஏற்படும் மாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விடச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1151

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்