ஜனவரி 12*
*-ம் தேதி தேசிய இளைஞர்
வாலிபச் சமூகத்தை பாதிகாத்திடுவோம்!*
*🌲உட்தலைப்புகள்:*
*1)சமூகத்தில் வாலிபர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுவது ஏன்?*
*2)அல்குர்ஆன் இயம்பும் வாலிபர்கள்!*
*3)நபிகளார் வளர்த்தெடுத்த வாலிபச் சமூகம்!*
*4)வரலாற்றில் சாதனை நிகழ்த்திய வாலிபர்கள்!*
*5)தற்காலத்தில் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்ப்பது எப்படி?*
*6)இஸ்லாமிய வாலிபச் சமூகம் மாற்று மதத்தாரோடு திருமணம் செய்யும் அவலம்!..தீர்வு என்ன?*
*📚துணை நின்ற நூற்கள்:*
*📚المصادر:*
*1)تربية الشباب المسلم للآباء والدعاة للدكتور خالد أحمد الشنتوت,ص:4,5*
*2)الاساليب النبوية لتنمية القيم الإجماعية لدي الشباب المسلم في ضوء التحديات المعاصرة*
*3)إسهام الأسرة في تنمية القيم الإجتماية لدي الشباب,ص:54,55*
*வாலிபச் சமூகத்தை பாதுகாத்திடுவோம்!*
*ஹஜ்ரத் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவார்கள்:*
*لا إسلام إلا بجماعة ولا جماعة إلا بإمارة ولا إمارة إلا بطاعة*
*"சமூகமின்றி இஸ்லாம் என்பது இல்லை; தலைமையின்றி சமூகம் என்பதுமில்லை;வழிபடுதலின்றி தலைமை என்பதுமில்லை."*
*உம்மத்தை வழிநடத்தி செல்லும், ஒரு தலைமைக்குப் பின்னால் இஸ்லாமிய சமூகம் ஒன்றிணைந்து அந்த தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதின் மூலமே இஸ்லாம் இவ்வுலகில் செழிக்கும்; நிலைத்து நிற்கும் என்பது ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றின் விளக்கமாகும்.*
*டாக்டர் முஹம்மது சயீத் ரமழான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவார்கள்:"இஸ்லாமிய சட்டதிட்டங்களை மூன்றாக பிரித்தால் அதில் மூன்றில் ஒரு பங்கு கூட்டு வாழ்க்கையைச் சார்ந்ததாகவே இருக்கும்.நான்கில் ஒரு பங்குதான் தனிமனித வாழ்க்கையைச் சார்ந்ததாக இருக்கும். வாலிபப் பருவம் என்பது சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கக் கூடியதாகும்.வருங்கால இஸ்லாமிய சமூகம் வாலிபர்களின் கையிலேயே உள்ளது."*
*எனவே தான் இஸ்லாமிய அழைப்பாளர்கள் வயோதிகர்களை விட குழந்தைகளையும், வாலிபர்களையும் சீர்திருத்தம் செய்ய அதிக முன்னெடுப்புகளை எடுக்கிறார்கள்.*
*)சமூகத்தில் வாலிபர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுவது ஏன்?*
*1️⃣முதற்காரணம்:வாலிபம் என்பது ஃபித்ரத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது.*
*ஃபித்ரத் என்றால் இயற்கை மார்க்கமான இஸ்லாம் ஆகும். அல்லாஹ் இந்த ஃபித்ரத்தின் படி தான் மனிதர்களை படைத்துள்ளான்.*
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا فِطْرَتَ اللّٰهِ الَّتِىْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيْلَ لِخَـلْقِ اللّٰهِ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ۙ
ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 30:30)
*இந்த இஸ்லாம் எனும் ஃபித்ரத்தை விட்டும் வாலிபர்கள் அவ்வளவு சீக்கிரம் திரும்பி விட மாட்டார்கள்.ஆனால் அதே சமயம் வயது கடந்தவர்களின் சிந்தனைகளை இஸ்லாமிய எதிரிகள் இலகுவாக மாற்றி விடுகிறார்கள். அவர்களை ஃபித்ரத்தை விட்டும் திருப்பி விடுகிறார்கள்.*
*வாலிபர்களின் உள்ளங்கள் மிருதுவாக இருக்கும்;கடின உள்ளம் கொண்டவர்களாக அவர்கள் இருக்கமாட்டார்கள்;உபதேசங்களை எளிதாக ஏற்றுக் கொள்வார்கள். அல்லாஹுதஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பினான்;அச்சமயம் வாலிபர்கள் நபியை ஏற்றுக் கொண்டனர்;வயோதிகர்கள் அவர்களுக்கு மாறு செய்தார்கள்.*
*வாலிபர்களின் வயது ஃபித்ரத்திற்கு (இஸ்லாம் எனும் இயற்கை மார்க்கத்திற்கு) மிக நெருக்கமாக உள்ளது. இஸ்லாமிய சட்டங்களை கடைபிடித்து நடக்கும் குடும்பத்தில் வளரும் வாலிபர் நிச்சயம் இஸ்லாம் எனும் ஃபித்ரத்தில் நிலைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை,மேலும் அவ்வாலிபர் வழிதவறுதலை விட்டும் பாதுகாப்பாக இருப்பார்.*
*இஸ்லாமிய கூட்டு வாழ்க்கையில், கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அழைப்பு பணி செய்பவர்கள் இஸ்லாமிய சமூகத்திலுள்ள குழந்தைகள் மற்றும் வாலிபர்களின் மீது அதீத கவனம் செலுத்த வேண்டும். முதியவர்ளையும் பொடுபோக்காக விட்டு விடக் கூடாது.*
*2⃣இரண்டாம் காரணம்:வாலிபம் பலமான பருவம்*
*சமூகத்தில் வாலிபர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுவதற்கு இரண்டாம் காரணம்,*
*வாலிபப் பருவம் என்பது சக்தி வாய்ந்த பருவமாகும்.வாலிபப் பருவத்தை அல்குர்ஆன் சக்தி வாய்ந்த பருவம் எனக் குறிப்பிடுகிறது.*
*உடல் பலம்*
اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً ؕ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ
*அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.*
(அல்குர்ஆன் : 30:54)
*சிறுபிராயமும்,வயோதிக பருவமும் பலஹீனமான பருவம் எனக் குறிப்பிடும் அல்குர்ஆன் வாலிபப் பருவத்தை பலமான பருவம் என இயம்புகிறது.*
*காரணம்,அவ்விரு பருவங்களில் மனிதன் தன்னிச்சையாக செயலாற்ற முடியாது.சிறுபிராயத்தில் பெற்றோர்களின் துணை தேவைப்படுகிறது.வயோதிகத்தில் பிள்ளைகளின் பரிவு பெற்றோர்களுக்கு தேவைப்படுகிறது.ஆனால் வாலிபப் பருவம் என்பது தன்னிச்சையாக செயல்பட முடியுமான பருவமாகும்.*
*இங்கு அல்குர்ஆன் குறிப்பிடும் சக்தி,பலம் என்பதின் பொருள் உடல் ரீதியாக ஆணும்,பெண்ணும் வாலிபத்தில் பல மாற்றங்களை பெறுகிறார்கள்.இரு சாராரின் உள்ரங்க,வெளிரங்க உறுப்புக்கள் வளர்ச்சி பெறுகின்றன.திருமணம் முடிக்க தகுதியான அளவு உடலில் வலு ஏற்படுகிறது.*
*அறிவு பலம்*
*வாலிபப் பருவத்தில் ஏற்படும் இந்த பலம் என்பது உடல் ரீதியான பலம் மட்டுமல்ல.மாறாக அறிவும் பலம் பெறுகிறது.இதை அல்குர்ஆன் "ருஷ்த்" என்கிற வார்த்தையால் மேற்கோள் காட்டுகிறது.*
وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىۤ اِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَيْهِمْ اَمْوَالَهُمْۚ
*அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;*
(அல்குர்ஆன் : 4:6)
*இந்த வசனத்தின் அடிப்படையில் வாலிபத்தில் தங்கள் உடைமைகளை நிர்வகிக்கும் ஆற்றல் கிடைத்து விடுகிறது.இது அறிவு ரீதியான பலமாகும்.*
*மனபலம்*
*அடுத்து,மனபலமும் வாலிபத்தில் கிடைத்து விடுகிறது.வாலிபர்கள்,வாலிப பெண்கள் ஒரு விஷயத்தை இலட்சியமாக ஆக்கிக் கொண்டால் அதை அடைவதில் முழு மூச்சாக செயல்படுவார்கள்.அந்த இலட்சியத்தை அடைய அவர்களிடம் பூரணமான மனபலம் இருக்கும்.*
*இன்றைய இஸ்லாமிய வாலிபர்கள்,வாலிபப் பெண்கள் மறுமை வாழ்க்கையை தங்களின் இலட்சியமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.*
*பொருளாதார பலம்*
*அடுத்து,பொருளாதார ஆற்றலை வாலிபர்கள் பெற்று விடுகிறார்கள்.வேலைக்கு சென்று குடும்ப செலவுகளை சமாளிக்கும் பொறுப்பும் வாலிபர்களுக்கு உண்டாகி விடுகிறது.இது பொருளாதார ஆற்றலாகும்.*
*நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடல் ரீதியான பலம் மற்றும் பொருளாதார ஆற்றலை பெறாத வாலிபர்களை மணம் முடிக்க வேண்டாம் எனக் கூறுகிறார்கள்.*
'வாலிபர்களே! உங்களில் வசதி வாய்ப்பினைப் பெற்றவர், திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் திருமணமாகிறது (பிற பெண்களை சிற்றின்ப நோக்கோடு பார்ப்பதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும், மர்மஸ்தானத்தை (விபச்சாரத்தை விட்டும்) பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. வசதி வாய்ப்பினைப் பெறாதவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும். ஏனெனில் நோன்பு சிற்றின்ப வேட்கையைத் தணிக்கக் கூடியதாக இருக்கிறது.'
(புகாரி,முஸ்லிம்)
*திருமத்திற்கு சக்தி பெறுவது உடல் ரீதியான சக்தியையும் குறிக்கும்.பொருளாதார ரீதியான சக்தியையும் குறிக்கும்.உடல் ரீதியான தகுதியை இழந்தவர் திருமணம் முடிக்க இயலாதவராக கருதப்படுவார்.அதேபோன்று மஹரையும்,திருமணத்திற்கு பின்பு கொடுக்க வேண்டிய நஃபகாவிற்கும் சக்தி பெறாதவரும் திருமணம் முடிக்க இயலாதவராக கருதப்படுவார்.*
*இந்த ஹதீஸின் மூலம் வாலிபப் பருவம் என்பது என்பது உடல் வலிமையையும்,பொருளாதார வலிமையையும் பெறும் பருவமென விளங்க முடிகிறது.*
*3️⃣மூன்றாவது காரணம்*
*இன்றைய வாலிபர்கள் நாளைய தலைவர்களாக திகழ்கிறார்கள்.வருங்காலத்தில் இந்த சமூகத்தை வழிநடத்திச் செல்பவர்களாக இருக்கிறார்கள்.*
*ஒரு சமூகத்தின் ஆற்றலை,அதன் உண்மை நிலையை அறிய விரும்பினால் அந்த சமூகத்திடம் செல்லத் தேவையில்லை.மாறாக, அச்சமூகத்தின் வாலிபர்களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.ஒரு சமூகம் சிறந்த வாலிபர்களை பெற்றிருந்தால் அச்சமூகம் கண்ணியமுள்ள,சிறந்த கட்டமைப்புள்ள சமூகமாக கருதப்படும்.ஒரு சமூகத்திலுள்ள வாலிபர்கள் பலவீனமானவர்களாக, தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தால் அச்சமூகம் பலவீனமான சமூகமாக இருக்கும்.*
*எவ்வாறு ஒரு சமூகத்தின் வாலிபர்கள் முக்கியமானவர்களோ அதேபோன்று அச்சமூகத்தின் வாலிபப் பெண்களும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.ஏனெனில் அந்த வாலிபப் பெண்கள்தான் வருங்கால சமூகத்தை கட்டமைக்கிறார்கள்.வாலிபர்கள் நாளைய தலைவர்கள் என்றால் அந்த தலைவர்களை உருவாக்கும் திறன்பெற்றவர்களாக வாலிபப் பெண்கள் உள்ளனர்.*
*வாலிபர்களின் மீதுள்ள சமூகத்தின் பொறுப்பு யாதெனில், அவர்களின் உணர்வுகளையும், உடலையும்,அறிவையும் பாதுகாக்க வேண்டும்.தொழிற்சாலைகள்,விவசாய பூமிகளை பாதுகாப்பதை விட அதிக முக்கியத்துவத்துடன் வாலிபர்களை பாதுகாக்க வேண்டும்.ஏனெனில் மனிதன் தான் சமூகத்தின் சிறந்த செல்வமாக இருக்கிறான்.*
*2)அல்குர்ஆன் இயம்பும் வாலிபர்கள்!*
*கடந்த காலம்,நிகழ் காலம்,வருங்காலம் என முக்காலங்களிலும் வாலிபச் சமூகம் தான் இஸ்லாமிய உம்மத்தின்,இந்நாட்டின் தூண்களாக,சக்தியாக திகழ்கிறார்கள். எனவேதான் இஸ்லாத்தில் வாலிபச் சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.அல்குர்ஆனும் உண்மையான, ஈமானில் உறுதியான சில வாலிபர்களை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.*
*உதாரணமாக:* *இப்ராஹீம் நபியவர்கள் தங்களின் வாலிபத்தில் இணைவைப்பாளர்களின் சிலைகளை உடைத்தார்கள் என்பதை குர்ஆன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது.*
قَالُوْا سَمِعْنَا فَتًى يَّذْكُرُهُمْ يُقَالُ لَهٗۤ اِبْرٰهِيْمُ ؕ
அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 21:60)
*அதேபோன்று வாலிபரான ஹஜ்ரத் யூசுஃப் நபியவர்கள் தங்களின் ஈமானைக் கொண்டு பெண்களின் ஃபித்னாவை விட்டும் தப்பித்துக் கொண்டார்கள்.*
قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَىَّ مِمَّا يَدْعُوْنَنِىْۤ اِلَيْهِۚ وَاِلَّا تَصْرِفْ عَنِّىْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ
(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
(அல்குர்ஆன் : 12:33)
*அதேபோன்று குகை வாசிகளான வாலிபர்கள் தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்ள குகையில் அடைக்கலமானார்கள்.*
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّؕ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًىۖ
(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.
(அல்குர்ஆன் : 18:13)
*இவ்வாறு வாலிபர்களின் சம்பவங்களை கூறி வாலிபப் பருவத்தின் முக்கியத்துவத்தை அல்குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது.*
*இன்றைய வாலிபர்கள் இப்ராஹீம் நபியைப் போன்று அசத்தியத்திற்கு எதிராக களமாட வேண்டும்.*
*யூஸுஃப் நபியைப் போன்று கற்பொழுக்கத்தையும் பேண வேண்டும்.மேலும் இன்று நடைபெறும் தஜ்ஜாலிய ஃபித்னாக்களை விட்டும் தப்பிக்க இன்றைய வாலிபர்கள் குகை வாசிகளைப் போன்று தங்களின் ஈமானை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.*
*3)நபிகளார் வளர்த்தெடுத்த வாலிபச் சமூகம்!*
*நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தங்களின் வாழ்நாளில் வாலிபர்களுக்கு பல வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்கள்.அல்லாஹ்விடம் வாலிபர்களின் அந்தஸ்தை உயர்த்தக் கூடிய பல நல்அமல்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.*
*அல்லாஹ்வை வணங்கும் வாலிபர் நாளை மறுமை நாளில் அர்ஷுடைய நிழலில் வீற்றிருப்பார் எனக் கூறி வாலிபர்களை வணக்கத்தின் பால் தூண்டினாகள்.(புகாரி)*
*இரண்டாவதாக, வாலிபச் சமூகத்திற்கு கற்பொழுக்கத்தையும் நபிகளார் கற்றுத் தந்தார்கள்.*
*விபச்சாரத்திற்கு அனுமதி கேட்டு வந்த வாலிபரிடம் நளினமான முறையில் பேசி கற்பொழுக்கத்தை நபியவர்கள் கற்றுத் தந்தார்கள்.*
அபூ உமாமா அல் பாஹிலீ {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ நாங்கள் அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார்.
வந்தவர் நேராக அண்ணலாரின் முன் வந்து நின்று “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீங்கள் விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்” என்றார்.
அங்கிருந்த நபித்தோழர்கள் அவரை தாக்கிட முனைந்தனர். நபித்தோழர்களில் ஒருவர் இப்படிக் கேட்டார் “அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள்! அவரின் கழுத்தை கொய்து விடுகின்றேன். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”அவரை ஒன்றும் செய்து விட வேண்டாம்” என்பது போன்று சைகை செய்தார்கள். பின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள். அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் “உன் தாய் விபச்சாரம் செய்திட நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.
”இல்லை, அல்லாஹ்வின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.” என்றார் அவ்வாலிபர்.
மீண்டும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா?” என்று கேட்டார்கள். பதறித்துடித்தவராக, அவ்வாலிபர் “ஒரு போதும் எனது மனம் விரும்பிடாது” என்றார் அவ்வாலிபர். அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் ”அப்படித்தான் நீ மட்டுமல்ல! உலகில் வேறெவரும் இதற்கு விரும்ப மாட்டார்கள்”. என்றார்கள். மீண்டும், அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் “உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா? உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள். அண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே ”தாம் எத்தகைய பார தூரமான கேள்வியை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் கேட்டு விட்டோம்” என்பதை உணர்த்தியிருக்க வேண்டும். அவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, இல்லை, இல்லை, அல்லாஹ்வின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்” என்றார். அதன் பின்னர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவரை நோக்கி சீர் திருத்தும் தொணியில் “உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக!” என்று கூறினார்கள்.
இதைக் கேட்டதும், அந்த வாலிபர் மிகவும் பணிவுடன் “அல்லாஹ்வின் தூதரே! எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா?” என ஏக்கத்துடன் கேட்டார்.
அவரை அருகில் அழைத்த மாநபி {ஸல்} அவர்கள், தமதருகே அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, யாஅல்லாஹ்! இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக! யாஅல்லாஹ்! இவரின் பிழைகளை பொறுத்தருள்வாயாக! யாஅல்லாஹ்! இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக!” என்று துஆ செய்தார்கள். இறுதியாக அந்த வாலிபர் பெருமானார் {ஸல்} அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்கிற போது….
“இந்தச் சபையில் நான் நுழைகிற போது, விபச்சாரம் தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டது” என்று சொல்லியவாறே சென்றார்.
இந்த சம்பவத்தை அறிவிக்கும் அபூ உமாமா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்பு அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.”
(நூல்:ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அஸ் ஸஹீஹா லில் அல்பானீ, பாகம்:1, பக்கம்:370, முஸ்னத் அஹ்மத், பாகம்:5, பக்கம்:256,257.)
*நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒழுக்கமான வாழ்விற்கும், வாலிபத்தை பாதுகாப்பதற்கும் திருமணம் மூலம் வழிகாட்டினார்கள்.*
ஓ வாலிபர்களே! உங்களில் யார் திருமணம் முடிக்க (உடலால், பொருளாதாரத்தால்) சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் முடிக்கட்டும். அது தான் அவர் பார்வையை தாழ்த்திக் கொள்வதற்கும், மர்மஸ்தானத்தை (முறை தவறிடாமல்) பாதுகாத்துக் கொள்வதற்கும் ஏற்றமானது.
யாருக்கு திருமணம் முடிக்க சக்தி இல்லையோ அவர் நோன்பு நோற்பதை கடைபிடிக்கவும் அது அவருக்கு காயடிப்பாகும். (உணர்வுகளை கட்டுப் படுத்தும் ஆயுதமாகும்) (நூல் : புகாரி, முஸ்லிம்)
*மூன்றாவதாக,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஈமானிய பயிற்சியை மக்காவில் வாழ்ந்த பதிமூன்று ஆண்டுகளில் கொடுத்தார்கள்.அந்த ஸஹாபாக்களில் உள்ள வாலிபர்கள்தான் பெரும் பொறுப்புகளை சுமந்துகொண்டார்கள்.இஸ்லாத்தின் கொடியை தங்களின் கரங்களில் ஏந்தினார்கள்.வரலாற்று நெடுகிலும் வாலிபர்களின் ஈமானிய உறுதியையும் இஸ்லாத்திற்கான அவர்களின் தியாகத்தையும் நாம் பட்டியிலிட முடியும்.*
*ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:"நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எங்களின் வாலிபப் பருவத்தில் உடனிருந்தோம்.அப்பொழுது நாங்கள் குர்ஆனை கற்றுக் கொள்வதற்கு முன்பாக ஈமானை கற்றுக் கொண்டோம்.பிறகு குர்ஆனை கற்றுக் கொண்டோம்.அதன் மூலம் எங்களுடைய ஈமானில் வளர்ச்சியை கண்டோம்.*
(இப்னு மாஜா)
*நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹதுடைய போரில் வாலிபக் கூட்டத்தாரிடம் ஆலோசனை செய்தார்கள்.*
*ரோமர்களை எதிர்த்து போரிட உஸாமா இப்னு ஜைது ரலியல்லாஹு அன்ஹு என்ற வாலிபரின் தலைமையில் இஸ்லாமிய படையை அனுப்பி வைத்தார்கள்.*
*யமன் தேசத்திற்கு முஆத் இப்னு ஜபல் என்ற வாலிபரை அவர்களுக்கு கல்வி கற்றுத் தரவும்,தஃவா செய்யவும்,நீதி பரிபாலனம் செய்யவும் அனுப்பி வைத்தார்கள்.*
*ஜைது இப்னு ஸாபித் என்ற வாலிபரிடம் குர்ஆனை ஒன்று திரட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.*
*அதேபோன்று வாலிபர்கள் கல்வியை கற்று பிறருக்கு கற்றுக்கொடுக்கவும் நபியவர்கள் ஆர்வமூட்டினார்கள்.*
மாலிக் இப்னு ஹுவைரிஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வாலிபர்களாக வந்தோம்.நாங்கள் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கியிருந்தோம்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் இரக்கத்துடன் எங்களிடம நடந்து கொண்டார்கள்.மேலும் எங்களிடம் இவ்வாறு கூறினார்கள்:
நீங்கள் உங்களின் நாட்டிற்கு திரும்பி சென்றவுடன் இங்கு கற்றுக் கொண்டதை மக்களுக்கு கற்றுக் கொடுங்கள். தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுங்கள். தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும் உங்களின் பெரியவர் இமாமத் செய்யட்டும்.
(புகாரி)
*இவ்வாறு நபியவர்கள் தங்கள் வாழ்நாளில் வாலிப சமூகத்திற்கு பல வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்கள்.*
*4)வரலாற்றில் சாதனை நிகழ்த்திய வாலிபர்கள்!*
*ஹஜ்ரத் அலி இப்னு அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரத்துடைய இரவில் நபியின் படுக்கையில் வீற்றிருந்தார்கள்.அந்நேரத்தில் அவர்களின் வயது பதினாறு ஆகும்.*
*உஸாமா இப்னு ஜைது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு படைக்கு தலைமையேற்றார்கள்.அப்பொழுது அவர்களின் வயது பதினேழு ஆகும்.*
*அர்கம் இப்னு அர்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு தங்களின் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.அப்பொழுது அவர்களின் வயது பதினேழு ஆகும்.*
*அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்வியைத் தேட ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் வயது பதினாறு ஆகும்.*
*அப்துல்லாஹ் இப்னு உமர்,ஜைது இப்னு சாபித்,பர்ரா இப்னு ஆஜிப்,அம்ரு இப்னு ஹஜம் ரலியல்லாஹு அன்ஹும் ஆகிய ஸஹாபாக்கள் ஹன்தக் போரில் பங்கேற்ற பொழுது பதினைந்து வயதுடையவர்களாக இருந்தார்கள்.*
*சமுரா இப்னு ஜுன்துப், ராஃபிஃ இப்னு ஹதீஜ் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு ஸஹாபாக்கள் உஹதுப் போரில் கலந்து கொண்ட சமயம் அவர்களின் வயது பதினைந்து ஆகும்.*
*குஸ்துன்துனியாவை வெற்றிக் கொண்ட பொழுது முஹம்மதுல் ஃபாதிஹ் அவர்களின் வயது பதினேழு ஆகும்.*
*இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் பதினெட்டாம் வயதில் அதிகமான ஹதீஸ்களை மனனம் செய்து விட்டார்கள்.*
*இமாம் ஷாஃபியி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதினெட்டு வயதுக்கு முன்பாகவே மார்க்கக் கல்வியிலும், சுய ஆய்விலும் மிக உயர்ந்த அந்தஸ்தை பெற்று விட்டார்கள்.*
*தாமஸ் ஆல்வாய் எடிசன் தன்னுடைய பதினெட்டாம் வயதில் மின்விளக்கை கண்டுபிடித்தார்.*
*இங்கு கூறப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே ஆகும்.இஸ்லாமிய வரலாற்றிலும்,இந்திய வரலாற்றிலும்,உலக வரலாற்றிலும் இதுபோன்ற ஏராளமான சாதனை வாலிபர்களை நாம் பட்டியிலட முடியும்.*
*5)பெண் பிள்ளைகளை தற்காலத்தில் பாதுகாப்பாக வளர்ப்பது எப்படி?*
*1️⃣ஆண்,பெண் கலந்து கற்கும் கல்விக் கூடங்களில் தங்களின் பெண் பிள்ளைகளை முடிந்தளவு சேர்க்காதீர்கள்.எந்தப் பெண்பிள்ளைகள் ஸ்கூல்களிலும், காலேஜ்களிலும் படிக்கிறார்களோ அவர்களுக்கு மார்க்க கல்வியையும், தர்பியத்தையும் பரிபூரணமாக ஏற்பாடு செய்யுங்கள். அவர்களின் பழக்க வழக்கங்களிலும், ஒழுக்கங்களிலும் முழுமையாக கவனம் செலுத்துங்கள்.*
*2⃣டியூசன் என்ற பெயரில் அந்நிய ஆண்களுடன் தங்களின் பெண் பிள்ளைகளை கலக்க விடாதீர்கள். படிப்பதற்காக வேண்டி பிற வீடுகளுக்கு செல்ல பிள்ளைகளை அனுமதிக்காதீர்கள். காலேஜிற்கு தாங்களே கூட்டிச் சென்று தாங்களே காலேஜிலிருந்து அழைத்து வாருங்கள்.*
*3️⃣ஆன்ட்ராய்ட் மொபைலும், பைக்கையும் கண்டிப்பாக வாங்கித் தர வேண்டாம். இவ்விரண்டும் வெட்கக் கேடான செயலின் வாசலை திறந்து விடுகிறது;மேலும் இவ்விரண்டும் கற்பை பறித்து விடுமளவு மிக மோசமானதாகும்.*
*4️⃣மொபைலை ரீஜார்ஜ் செய்ய மாற்றார்களின் கடைகளுக்கு செல்ல அனுமதி தர வேண்டாம். அதேபோன்று காலேஜிற்குள்ளும், காலேஜிற்கும் வெளியே உள்ள மாற்றார்களின் கேன்டினிற்கு செல்ல வேண்டாமென பிள்ளைகளுக்கு வழிகாட்டுங்கள்.*
*5️⃣மாற்றார்களின் பெண் பிள்ளைகளுடன் நட்பு கொள்வதை விட்டும் தங்களின் பெண் பிள்ளைகளை தடுத்து விடுங்கள்.இது பிற்காலத்தில் வேறு விதமான குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும்.*
*6️⃣பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள், கஷ்டங்கள் போன்றவற்றில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். வீட்டிலுள்ளவர்கள் சரியாக கவனம் செலுத்த தவறினால் அதற்கான தீர்வை பெண் பிள்ளைகள் வெளியே தேட ஆரம்பித்து விடுவார்கள்.*
*7️⃣பெண் பிள்ளைகள் கல்வியல்லாமல் பிற விஷயத்திற்காக இன்டர்நெட்டை பயன்படுத்தினால் அதை முழுமையாக கண்காணியுங்கள். ஏனெனில் அதிகமான பேர் இதன் காரணமாகவே வழிகெட்டு போகிறார்கள்.*
*8️⃣பிள்ளைகளுக்கு தவறான சமூக சூழலைப் பற்றியும்,தீய நட்பைப் பற்றியும் வழிகாட்டிக் கொண்டே இருங்கள்*
*9️⃣பிள்ளைகள் ஷோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதையும், தவறான வெப்சைட்டுகளைப் பயன்படுத்துவதையும் கண்காணிப்பு செய்யுங்கள்.*
*1️⃣0️⃣வீட்டில் குர்ஆன் ஹதீஸ் மற்றும் இஸ்லாஹுடைய விஷயங்களை பிள்ளைகளுடன் முதாகரா செய்யுங்கள்.*
*1️⃣1️⃣பெற்றோர்கள் ஒவ்வொரு மூச்சிலும் பிள்ளைகளின் இஸ்லாஹை கவனத்தில் கொள்ள வேண்டும்.*
*1️⃣2⃣வீட்டிலுள்ள அனைவரையும் ஒன்று சேர்த்து சிறந்த இஸ்லாமிய நூற்களை கூட்டாக படியுங்கள்.எந்த நூலில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாறு மற்றும் ஹலால் ஹராம் மற்றும் ஃபர்ளுகள், வாஜிபுகள் பொதிந்து இருக்குமோ அவ்வாறான நூற்களை கூட்டாக அமர்ந்து படியுங்கள்.*
*1️⃣3️⃣நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய முன்மாதி மற்றும் நம் முன்னோர்களின் தூய்மையான வாழ்வை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.*
*1️⃣4️⃣மிக முக்கியமான விஷயம் யாதெனில், பருவ வயதை எய்திய பின் ஆண் அல்லது பெண் பிள்ளையிடம் அவர்களின் ஒப்புதலுக்கு இணங்க சரியான பொருத்தம் கிடைத்து விட்டால் திருமணம் முடித்து வைப்பது பெற்றோர்கள் மீது முதற்கண் கடமையாகும்.*
*1️⃣5️⃣இஸ்லாமியப் பெண் பிள்ளைகள் மதமாற்றத்தின் விளிம்பில் உள்ளார்கள்.உம்மத்திலுள்ள ஒவ்வொருவரும் இதன் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்நேரத்தில் நாம் பொடுபோக்காக இருந்தால் நாளை நம் வீட்டிலும் இந்த ஃபித்னா ஏற்படுவது பாரதூரமான விஷயமல்ல.*
*6)இஸ்லாமிய வாலிபச் சமூகம் மாற்று மதத்தாரோடு திருமணம் செய்யும் அவலம்!..தீர்வு என்ன?*
*இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மாற்றுமதத்தாரோடு திருமணம் செய்யும் அவலத்திற்கு தீர்வு காணும் வகையில்*
*மவ்லானா காலித் சைஃபுல்லாஹ் ரஹ்மானி அவர்கள்*
*உலமாக்கள்,உம்மத்தின் பொறுப்பாளர்கள்,மஸ்ஜித் நிர்வாகிகள், பெற்றோர்களுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.*
இஸ்லாம் நிகாஹ்வுடைய விஷயத்தில் "ஒரு முஸ்லிமான பெண்ணுடைய திருமணம், முஸ்லிமான ஆணுடன் மட்டுமே அமைய வேண்டுமென" அவசியமாக்கியுள்ளது.
அதேபோன்றுதான் எந்த முஸ்லிமான வாலிபரும் முஷ்ரிகான பெண்ணை திருமணம் செய்ய முடியாது.வெளிரங்களமாக அவ்வாறு திருமணம் என்ற பெயரில் சடங்கு நடைபெற்றாலும் ஷரீஅத் ரீதியாக அது திருமணமாக கருதப்படாது.எனினும் கைசேதம் என்னவெனில்,காலேஜ்கள் போன்ற கற்கும் இடங்களின் மூலம் மற்றும் வேலை செய்யும் இடங்களிலும் ஆண் பெண் இருசாராரும் கலப்பதின் காரணமாக மேலும் சரியான மார்க்க அறிவு இல்லாததின் காரணமாகவும் மற்றும் பெற்றோர்களின் தர்பியத் முறையாக இல்லாதிருப்பதின் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள்
அதிகமாக நடைபெற்று வருகின்றன.பல நேரங்களில் இஸ்லாமிய வாலிபப் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் சென்று விடுகின்றனர்.பிறகு சிமத்துடன் வாழ்க்கையை கழிக்கின்றனர்.எந்தளவெனில் தாங்களாகவே தங்களின் வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள்.
*இதற்கு தீர்வு என்ன?*
*1️⃣உலமாக்கள் பொதுமக்களின் சபைகளில் இந்த தலைப்பைப்பற்றி அதிகமாக பேச வேண்டும்.மேலும் மக்களுக்கு இதனுடைய இம்மை மறுமையின் நஷ்டங்களை உணர்த்த வேண்டும்.*
*2⃣பெண்களுக்கான பயான் கூட்டங்கள் அதிகமாக நடத்தப்பட வேண்டும்.அதில் மற்ற தலைப்புகளுடன் இந்த தலைப்பை பற்றியும் குறிப்பாக பேச வேண்டும்.*
*3️⃣பள்ளிவாசல் இமாம்கள் ஜுமுஆ உரைகளிலும்,குர்ஆன் ஹதீஸ் பாடங்களிலும் இத்தலைப்பை பற்றி பேச வேண்டும்.மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க பெண்பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென மக்களுக்கு சொல்லித்தர வேண்டும்.*
*4️⃣பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வி கற்க சரியான முறையான ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டும்.தங்களின் பெண்பிள்ளைகளின் மொபைல் போன் போன்றவைகளை நோட்டமிட வேண்டும்.முடிந்தளவு பெண்பிள்ளைகளை பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும்.ஸ்கூலைத் தவிர பிற நேரங்களின் பெண்பிள்ளைகளின் நேரங்கள் வெளியில் செலவழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் முஸ்லிமான பெண்பிள்ளைக்கு முஸ்லிமான பையனே துணையாக இருக்க முடியும் என்பதை பெண்பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.*
*5️⃣பொதுவாக எந்த வாலிபர்கள் வாலிபப் பெண்கள் ரஜிஸ்டர் ஆஃபிஸில் திருமணம் செய்கிறார்களோ அவர்களின் பெயர்கள் முனனதாகவே ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.பள்ளிவாசல் இமாம்கள்,மார்க்க சேவையில் உள்ளவர்கள்,பொறுப்பாளர்கள்,முக்கியஸ்தர்கள் அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.அதாவது,இந்த சடங்காக நடைபெற்ற திருமணத்தால் நீ உன் முழு வாழ்க்கையையும் ஹராமில் கழிக்கப் போகிறாய் என்று விளங்கப்படுத்த வேண்டும்.மேலும் அனுபவம் என்னவெனில்,சிறிது நேர சுகத்திற்காக முடிக்கப்படும் இவ்வாறான திருமணங்கள் உலகிலேயே தோல்வியில்தான் முடிகிறது என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும்.*
*6️⃣வாலிபர்கள் குறிப்பாக வாலிபப் பெண்களின் பெற்றோர்கள், பொறுப்பாளர்கள் திருமணத்தை தயவுசெய்து தள்ளிப் போட வேண்டாம்.ஏனெனில் திருமணத்தை பிற்படுத்துவதும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பெரிதும் காரணமாக உள்ளன.*
*7️⃣திருமணத்தை சாதாரணமாக முடித்துக் கொள்ள வேண்டும்.அதன்மூலம் பரகத் உள்ளது.அதில் சந்ததிகளின் பாதுகாப்பும், செல்வத்தை அழிப்பதை விட்டும் பாதுகாப்பும் உள்ளது.*