நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, ஏப்ரல் 01, 2023

இஸ்லாமிய ஒழுங்குமுறை..தும்மல்,

தும்மல் நல்லதா? கெட்டதா?

அல்லாஹ்வின் படைப்புக்களில் மிக அற்புதமான படைப்பு மனிதனாவான். நுட்பமாக மனித உறுப்புக்களை படைத்த அல்லாஹ் அவற்றை பாதுகாப்பதற்கான பல வழிமுறைகளையும் அமைத்துள்ளான். அவன் தூயவன்.

மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும் போது உடலிலுள்ள தும்மல் சுரப்பி என்ற “ஹிஸ்டமைன்” நுரையீரலுக்குள் இருக்கும் தூசுகளை தும்மலின் மூலம் வெளி யேற்றும். தும்மலுக்குத் தேவையான சக்தியை உடலிலிருந்து பெற்று காற்றை தேவையான அளவு உள் எடுத்து தும்மல் வேகமாக வெளிவரும்போது அதில் நீர்த்துளிகள் சிந்தும்.

தூசுகளை வேகமாக நுரையீரலிலிருந்து வெளியேற்றும் ஒரு அற்புதமான கழிவு நீக்கும் வேலைதான் தும்மல். இப்படி தும்மலினால் கிருமியின் பாதிப்பு குறைவதுடன் அதிக பாதிப்பும் தடுக்கப்படுகிறது.

தும்மல் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் நாம் போடும் ஒரு தும்மல் மூலம் மூன்று நொடிகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்டீரியா கிருமிகள் நீர்த்துளியாக காற்றில் கரைந்துவிடுகின்றன.

தும்மல் என்பது நமது கட்டுப்பாட்டில் கிடையாது. நம்மையும் மீறி திடீரென வருகிறது. எனவே தும்மல் என்பது ஒரு நோய் இல்லை. தும்மல் என்பது நம் உடல் பார்க்கும் வைத்தியம். தும்மல் வரும் போது நாம் அதை அடக்க நினைக்கின்றோம். தும்மலை அடக்கும் பொழுது அது நோயாக மாறுகிறது.

தும்முவதற்காக வேகத்துடன் மூக்கினூடாக உள்ளே சென்ற காற்று தும்மலின் மூலம் வெளியே வராவிட்டால், மனித உயிருக்கே பேராபத்தாகிவிடும். வேகமாக தும்மும் போது தூசுகள், கழிவுகள் வெளியேறி உடலுக்கும், நுரையீரலுக்கும் ஆரோக்கியமும், சுகமும் கிடைக்கிறது.

இந்நிலைமையை எனக்கு சுலபமாக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் “அல்ஹம்துலில்லாஹ்” என்று தும்மியவர் கூற வேண்டும். தும்மியவருக்காக “யர்ஹமுகல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக) என பிரார்த்திப்பது ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமுக்கு செய்யும் கடமையாகும்.

(நூல் : புகாரி)

யாரேனும் ஒருவர் தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” என கூறவில்லையெனில் அவருக்காக “யர்ஹமுகல்லாஹ்” எனக் கூறாதீர்கள் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார். (நூல் : முஸ்லிம்)

தும்மும் போது நாம் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் பற்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “நபியவர்கள் தும்மினால் தன் கையையோ, அல்லது கைக்குட்டையையோ தன் மூக்கின் மேல் வைத்துக் கொள்வார்கள்.

இதன் மூலம் தும்மலின் சப்தத்தைக் குறைத்துக் கொள்வார்கள். மூக்கிலிருந்து வெளியேறும் நீர், சளி போன்றவைகள் அருகிலிருப்பவர்கள் மீது சிந்தாமலும், சிதறாமலும் பாதுகாத்துக் கொள்வார்கள். (அபூதாவுத், திர்மிதி)

நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். ஏனெனில் கொட்டாவி ஷைத்தானின் செயல்களில் உள்ளதாகும். “அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் றஜீம்” (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டு, நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.) என கொட்டாவி விட்டவர் ஓதி அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.

உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால் தன் கையால் வாயை மூடி மறைத்துக் கொள்ளட்டும். நிச்சயமாக ஷைத்தான் வாயின் வழியாக உள்ளே நுழைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : முஸ்லிம்)

இவைகள் யாவும் அன்றாட வாழ்வில் நாம் செய்ய மறந்த நபிகளாரின் உயரிய ஸ¤ன்னாக்களாகும். வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் நபி (ஸல்) அவர்களின் அழகிய நற்குணங்களை எம் வாழ்வில் எடுத்து நடப்போமாக!

“நிச்சயமாக! யார் அல்லாஹ்வின் தூதருக்கு வழிப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டவராவார்” (அல் குர்ஆன்


 ”ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1240 அபூஹுரைரா (ரலி
தும்மல் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி மிருகங்களுக்குக் கூட ஏற்படக்கூடிய ஒரு செயலாகும். மிருகங்களைப் போன்று மனிதர்களும் தம் தும்மலை அமைத்துக் கொள்ளக் கூடாது என்பதால்தான் தும்மும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை இஸ்லாம் சொல்லிக் கொடுக்கின்றது.

நபி (ஸல்) அவர்களுக்கு தும்மல் வந்தால் தமது கைகளாலோ அல்லது ஆடையாலோ தம் முகத்தை மூடி சப்தத்தைக் குறைப்பார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் - திர்மிதி - ஹாக்கிம்)

நாம் தும்மும் போது அருகில் உள்ளவர்கள் மீது எச்சில்கள் பட வாய்ப்புள்ளது. இது அருவறுப்பையும், பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். அதே போன்று தும்மலால் ஏற்படும் சப்தம் அருகில் உள்ளவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம். இவைகளைத் தவிர்க்கவே நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட முறையை கடைபிடித்துள்ளார்கள்.

தும்மல் இறைவன் புறத்தில் நின்றும் உள்ளதாகும் என்பது நபி மொழி. அபஹுரைரா (ரலி) (நஸயீ, இப்னு ஹிப்பான், ஹாக்கிம்)

தும்மலை அல்லாஹ் விரும்புகிறான் என்பதும் நபி மொழி - அபூஹுரைரா (ரலி) திர்மிதி.

தும்மும் போது மனிதர்கள் எவ்வளவோ புத்துணர்வு பெறுகிறார்கள். சுவாசக் குழாய்களில் இருக்கும் அடைப்புகள் கூட வெளியேறுகின்றன. தும்மலினால் மனிதர்களுக்கு பல நன்மைகள் விளைவதை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கின்றது. இஸ்லாம் தும்மலை விரும்புவதற்கு இப்படி பல காரணங்களைக் கூறலாம்.

தும்மலால் ஏற்படும் இவ்வளவு நன்மைகளும் இறைவன் புறத்திலிருந்து வருவதால் தான் தும்மல் என்ற அந்த சுகத்தைப் பெற்றவர்கள் இறைவனைப் புகழ வேண்டும் என்கிறது இஸ்லாம்.

உங்களில் எவரேனும் தும்மினால் 'அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்' (எல்லா நிலைகளிலும் இறைவனுக்கே புகழனைத்தும்) என்று கூறட்டும். இவ்வாறு கூறியதை செவியேற்கக்கூடியவர்கள் 'யர்ஹமகல்லாஹ்' (இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) என்று பதில் கூறட்டும். பிறகு தும்மியவர் 'யஃபிருல்லாஹு லீ வலகும'; (இறைவன் உங்களையும் என்னையும் மன்னிப்பானாக!) என பதில் அறிவிக்கட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். (ஹிலால் பின் யஸார் (ரலி) திர்மிதி.)
'யஃபிருல்லாஹு லீ வலகும'; என்பதற்கு பதிலாக 'யஹ்தீகுமல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும்' (இறைவன் எங்களுக்கு நேர்வழி காட்டி உங்கள் நிலைமையை சீர்செய்வானாக) என்று கூறட்டும் என்று நபிமொழி அலி (ரலி), அபூஅய்யூப் (ரலி) வாயிலாக அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அருகில் ஒருவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் கூறினார். நபி (ஸல்) 'யர்ஹமகல்லாஹ்' என்றார்கள். அவர் மீண்டும் தும்மினார். உடனே நபி (ஸல்) இவருக்கு ஜலதோஷம் பிடித்துள்ளது என்றார்கள். ஸலாமா (ரலி) அறிவிக்கும் இந்த செய்தி முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றள்ளது

தும்மியவருக்கு மூன்று முறை பதில் கூறு. தொடர்ந்து தும்மினால் பதில் கூறுவதோ, கூறாமல் இருப்பதோ உன் விருப்பம் என்ற ஒரு நபி மொழி திர்மிதியில் இடம் பெறுகிறது. இதன் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் இஸ்ஹாக் என்ற அறிமுகமில்லாதவர் இடம் பெறுவதால் இது பலவீனமான ஹதீஸாகும்.

முஸ்லீம் அல்லாதவர்களுக்கு பதில் கூறலாமா?

நபி (ஸல்) அவர்கள் 'யர்ஹமகல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக) என்று கூற வேண்டும் என்பதை எதிர்பார்த்து யூதர்கள் வேண்டுமென்றே நபி (ஸல்) முன்னிலையில் தும்முவார்கள். யூதர்கள் எதிர்பார்ப்பது போன்று நபி (ஸல்) கூறாமல் 'யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும்' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி உங்களை சீர்படுத்துவானாக) என்று கூறி விடுவார்கள்.
(அபூமூஸா (ரலி) அபூதாவூத், திர்மிதி

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்