*மாநில சுயாட்சி
-ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு.
* இந்தியா என்பது தேசமல்ல.
பல தேசங்களின் ஒன்றியம் தான்.
* இந்தியா என்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள்.
1947 ஆகஸ்ட்-15 இந்தியா விடுதலையடையும் போது காஷ்மீரும், கன்னியாகுமரியும் இந்தியாவோடு இல்லை என்பதே வரலாறு.
* கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலும், காஷ்மீர் ஹரிசிங் மன்னனால் அங்குள்ள சமஸ்தானத்திலும் இருந்தது.
* வெள்ளையர்கள் வருகைக்கு முன்பு இந்தியா என்ற இன்றைய நிலப்பரப்பு முழுமையும் எவராலும் ஆளப்படவில்லை.
* கி.மு.5- 6 நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த மகதப் பேரரசு தொடங்கி,
மௌரியப் பேரரசு
குப்தப் பேரரசு
ஹர்சப் பேரரசு
சாளுக்கியப் பேரரசு
ராஷ்டிரக் கூடப் பேரரசு
டில்லி சுல்தான்கள்
முகலாயப் பேரரசு வரை
இந்தியா முழுமையும் ஆளவில்லை.
குறிப்பாக இன்றைய தமிழ்நாட்டை ஆளவில்லை.
இவர்களெல்லாம் ஆள முடியாத தமிழ்ப்பகுதியை, வடக்கே உள்ள அமித்ஷாவும், மோடியுமா ஆண்டு விட முடியும்?
* 1498 மே 20 வாஸ்கோடகாமா கோழிக்கோடு வந்து சேர்ந்தான். ஐரோப்பியர்களிடம் இம்மண் அடிமைப்படுவதற்கான ஆரம்ப முயற்சி அதுதான்.
*1498 முதல் 2022 வரையிலான 500 ஆண்டு அரசியல் வரலாற்றில், தமிழ்மண் காக்கும் பெரும் போராட்டம் குறித்தும் அறிந்திடல் வேண்டும்.
* எனது நிலத்தை எவனும் அடிமைப்படுத்த முடியாது என்ற குரல்கள் தமிழ் மண்ணிலிருந்தே தொடங்கியது. இதுதான் சுயாட்சியின் முதல் குரல்.
*பூலித்தேவன்
*ஒண்டிவீரன்
*வீரன் அழகுமுத்து
*வீரன் சுந்தரலிங்கம்
* மருதநாயகம்
*கட்டபொம்மன்
* ஊமைத்துரை
*வேலு நாச்சியார்
*மருது சகோதரர்கள்
*வீரன் வேலுத்தம்பி
* தீரன் சின்னமலை
*இராணி மங்கம்மாள்
* விருப்பாச்சி கோபால் நாயக்கர்
என பட்டியல் நீளமானது.
* இந்தியா விடுதலையடையும் போது 604 சமஸ்தானங்களும், 11 மாகாணங்களுமாக தனித்தனியே இருந்தது.
* வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த சமஸ்தானங்களே மாகாணங்களுக்குள் இணைக்கப்பட்டிருந்தது.
* வெள்ளையனுக்கு கப்பம் கட்டி வாழ்ந்தவர்கள் தனி சமஸ்தானங்களாக இருந்தனர்.
* இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது.
இந்தியாவோடு 552 சமஸ்தானங்கள் இணையவும், பாகிஸ்தானோடு 49 சமஸ்தானங்கள் இணையவும் ஒப்புக் கொண்டன. 3 சமஸ்தானங்கள் இணைய மறுத்தன.
* இணைய மறுத்த சமஸ்தானங்கள்
1.ஜூனாகட் சமஸ்தானம் (குஜராத்)
2. ஹைதராபாத் சமஸ்தானம்
3. காஷ்மீர் சமஸ்தானம்
* இந்திய ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை மூலம் ஜூனாகட், காஷ்மீர் சமஸ்தானத்தையும், இராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத் சமஸ்தானத்தையும் இந்தியாவோடு இணைத்தது.
* இதில் ஹைதராபாத் மன்னன் முஸ்லிம். மக்கள் பெரும்பான்மையோர் முஸ்லிம் அல்ல. காஷ்மீர் மன்னன் ஹரிசிங் முஸ்லிம் அல்ல. மக்கள் பெரும்பான்மையோர் முஸ்லிம் என்பது தான்.
* ஒரு புறம் 11 மாகாணங்கள். மறுபுறம் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள். பல மொழி, பல பண்பாடு. இவர்களை எப்படி இணைத்து இந்தியாவுக்கு சட்டமியற்றுவது என ஆலோசித்தனர். எனவே தான் அரசமைப்புச் சட்டத்தை எழுத அண்ணல் அம்பேத்கர் தலைமையில் குழு அமைத்தனர்.
* 11 மாகாணங்களை வெள்ளையன் ஆண்ட போது எப்படி சட்டம் இருந்தது? அப்போது மாநில சுயாட்சி குறித்த நடந்த விவாதம் என்ன என்பதை அறிய வேண்டும்?
* 1911 ல் வைஸ்ராயாக இருந்த ஆர்டிங்ஸ் என்பவர், மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் தர வேண்டும் என்று பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கு பரிந்துரை செய்தார்.
* அப்பரிந்துரையில் இந்தியாவை Union Of Autonomous Provinces என ஆக்க வேண்டும் அல்லது United States of India என்ற நிலையைக் கூட உருவாக்கலாம் என்றார்.
* 1915 ல் கோபால கிருஷ்ண கோகலே 'அரசியல் கட்டளைகள்' என்ற பெயரில் ஒரு அறிக்கை எழுதினார். அதில் " மாகாண அரசுகளை, முழு அதிகாரம் படைத்த ஒரு விடுதலை அரசாக ஆக்க வேண்டும்" எனக் கோரினார்.
* 1916 ல் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து லக்னோ ஒப்பந்தம் செய்தது. அதில் "மாகாணங்களில் தன்னாட்சி" அமைக்கப்பட வேண்டும் " என வலியுறுத்தின.
* 1919 ல் மாண்டேகு-ஜேம்ஸ் போர்டு சீர்திருத்தம் "மாகாண உரிமை தர மறுத்தது". இதை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்தது.
* 1924 ல் ஜின்னா தலைமையிலான முஸ்லிம்லீக் மாநாட்டில் " முழுமையான நிலங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி முறையையே ஏற்படுத்தியாக வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 1925 சிங்காரவேலர் தலைமையில் கான்பூரில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டில் " மாகாண சுயாட்சி தீர்மானம்" நிறைவேற்றப்பட்டது.
* 1930-31-32 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற வட்ட மேசை மாநாடுகளிலும், மொழி வழி மாநில உரிமைகள் பற்றியும், மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
* 1931 சுதேச மன்னர்கள் மற்றும் மாகாணப் பிரிதிநிதிகள் கூட்டத்தை சைமன் கமிசன் கூட்டியது. இதில் பாட்டியாலா மற்றும் காஷ்மீர் மன்னர்கள், சுயாட்சி உரிமையை வலியுறுத்தினர்.
* தமிழகத்தைப் பொறுத்தவரை 1921 லேயே மொழி வழி மாநிலம் சார்ந்த பேசத் தொடங்கினர்.
* சென்னை மாகாணமாக இருந்த போதே " தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி" என்றே காங்கிரசார் கட்சி தொடங்கினர்.
* மாகாண ஆட்சி உருவாக்கி, ஆளுநருக்கு அதிகாரம் வழங்கிய போது, காங்கிரஸ் தான் முதலில் எதிர்த்தனர்.
* 1937 டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் 11 மாகாண ஏற்பாட்டையும், ஆளுநர் அதிகாரத்தையும் காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தீர்மானம் போட்டனர்.
* 1939 பீஹார் மற்றும் ஒன்றிய மாகாண முதலமைச்சர்கள் ஆளுநர் தலையீட்டை எதிர்த்து ராஜினாமா செய்தனர்.
* ஆங்கில அரசுக்கு எதிராக, மாகாண சுயாட்சி என்பது மாநில சுயாட்சிக்கு மூலமாக அமைந்தது என்பதே வரலாறு.
* 1937 ராஜாஜியால் குலக்கல்வி திட்டம் மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக " தமிழ்நாடு தமிழருக்கே" என்று பெரியார் உச்சபட்சக் குரலில் பேசினார்.
* 1939-1945 இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, தேர்தல் முறைப்படியான ஆட்சி அமைப்பை தவிர்த்துவிட்டு, ஆளுநர்களை உருவாக்கியது வெள்ளை அரசு. அப்போது முதலமைச்சர்கள் இல்லாமல் ஆளுநர்களே ஆட்சி செய்தனர்.
* 1940-42 ல் சென்னை மாகாண ஆளுநராக ஆர்தர் ஹோப் இருந்த போது பெரியாரை முதலமைச்சராக பதவியேற்க அழைத்தார். பெரியார் மறுத்துவிட்டார்.
* 1940 தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு நடைபெற்றது. தனிநாடு உரிமைத் தீர்மானம் மற்றும் அதற்கான திட்டக்குழுவையும் அறிவித்தது.
* 1944 தென்னிந்திய நல உரிமைச் சங்கம் "திராவிடர் கழகம்" எனப் பெயர் மாற்றப்பட்டு, திராவிட நாடு விடுதலைப்படை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றியது.
* திராவிட நாடு கருத்து வலுவாக எழுந்த போது, காங்கிரசில் இருந்த தனது ஆதரவாளர்களைப் பெரியாருக்கு எதிராகத் தூண்டிவிட்டு, எதிர்வினையாற்றினார் ராஜாஜி.
* அதன்படி, காங்கிரசில் இருந்து கொண்டே 1946 ல் தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை, ம.பொ.சி தொடங்கினார். இந்திய ஒற்றுமை- மாநில சுயாட்சி என்று ஒப்புக்குப் பேசினார்.
*1963 பிரிவினை தடைச்சட்டம் கொண்டு வந்தபின்பு, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட அண்ணா,
விடுதலைக் கோரிக்கையைத் தான் கைவிட்டோம், விடுதலைக்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கிறது என்றார்.
* இந்நிலையில் தமிழக வரலாற்றில் திமுக தான் மாநில உரிமையை வலுவாகப் பேசியது.
* ராணுவம்
நாணயம் அச்சடிப்பு
வெளியுறவு
உள்நாட்டுத் தொடர்புகள் என்ற நான்கு தவிர, மற்ற அனைத்தும் மாநில உரிமை என்பதே, திமுகவின் மாநில சுயாட்சி உள்ளடக்கமாக இருந்தது.
* அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய போது ,ஒன்றிய அரசுக்கு 97 அதிகாரமும், மாநில அரசுகளுக்கு 66 அதிகாரமும், இரண்டு அரசுகளுக்கும் ஒத்திசைவாக 47 அதிகாரமும் உருவாக்கப்பட்டன.
* ஆனால் மாநில அரசின் 66 அதிகாரத்தில், 31 அதிகாரங்கள் மட்டுமே மாநில உரிமையாக இருந்தது. மற்ற 35 அதிகாரத்திலும் ஒன்றிய ஆட்சி அதிகாரம் செலுத்தும் வகையிலும் இருந்தது.
* 1969 அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர், முதன்முறையாக டெல்லி சென்றார். விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள், உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன என்று கேட்டனர். மத்தியில் அதிகாரங்கள் குவித்திருக்கிறது.அதை மீட்டெடுக்க வந்தேன் என்றார்.
* மத்திய-மாநில உறவுகளை ஆராய நிபுணர் குழு அமைப்பேன் என்றும் கூறினார்.
* 1969 ஆகஸ்ட் நீதிபதி ராஜமன்னார் தலைமையில், மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்வதற்காக, மூவர் குழு அமைப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.
*நீதிபதி ராஜமன்னார் குழு பரிந்துரைகளை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார் கலைஞர்.
* நீதிபதி ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளில் அரசியல் அமைப்புச் சட்டத்தில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மாநிலங்களில் அமுலாக்க, ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உண்டு எனக்கூறும் 256 பிரிவும், சில விசயங்களில் ஒன்றிய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை மாநில அரசுகள் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறும் 257 பிரிவும், முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான பரிந்துரையாகும்.
* 1970 பிப்ரவரி, திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் "மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்பட்டது.
பெரியார்- காயிதே மில்லத்- அஜய் முகர்ஜி (மே.வங்கம்),சோசலிஸ்ட் தலைவர் அரங்கில் ஸ்ரீதரன், பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
* மாநில சுயாட்சி என்ற நூலை திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருமிகு. முரசொலி மாறன் எழுதினார்.
மாநில சுயாட்சி குறித்த உலகளாவிய அறிஞர்களின் மேற்கோள்களுடன் அந்நூல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
* பேராசிரியர்.அன்பழகன் "ஒரு கடிகாரத்தின் மணி முள் முதன்மை உடையது தான். எனினும் நிமிட முள் பேரளவில் இயங்கினால் தான், மணி முள் சிறிதளவு இயங்கும். அதைப் போல, மக்களோடு நெருக்கமாக இருக்கும் மாநில அரசு பேரளவு இயங்க, மத்திய அரசு இணக்கமாக இருப்பதே மக்களாட்சி நெறி" என்றார்.
* தமிழகம் பெருமளவில் மதித்த தலைவரான வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது, திமுகவின் முயற்சியால், மாநிலங்களுக்கு இடையேயான Inter state council உருவாக்கினார். ஆனால் அவரது ஆட்சி பாஜகவால் கவிழ்க்கப்பட்டது.
* திமுக ஆட்சியில் 2007 ஆளுநர் உரையில்,மாநில சுயாட்சி கொண்டு வர முயற்சிப்போம் என்றது.
* 2009 அண்ணா நூற்றாண்டு நிகழ்வின் மையப் பொருளாக மாநில சுயாட்சி குரல் தான் எதிரொலித்தது.
* தற்போது 15 வது நிதிக்குழுவில் மாநிலங்கள் வளர்ச்சி அடைய விடாமல் நிதி ஆதாரத்தை முடக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, முதல்வர் ஸ்டாலின், மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார்.
*மாநில சுயாட்சியின் ஒரு அங்கமாக "இந்திய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
* மாநில சுயாட்சிக்கான குரல்
அன்றைய பூலித்தேவன் முதல் வீரன் வேலுத்தம்பியும், தீரன் சின்னமலையும் எழுப்பிய குரலின் நீட்சி தான்.
* மாநில சுயாட்சிக்கு எதிரானவர்கள்
பூலித்தேவன் முதல் தீரன் சின்னமலை வரையிலான குரலுக்கு எதிரானவர்கள் தான்.
* மாநில சுயாட்சி என்பது
தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல. இந்திய மாநிலங்கள் அனைத்துக்குமான கோரிக்கையே.
* சுருக்கமாகச் சொன்னால்
மாநில சுயாட்சி என்பது
மாநில நலன் சார்ந்தது மட்டுமல்ல.
இந்திய நலன் சார்ந்ததும் தான்.
சூர்யா சேவியர்
15-04-25