வக்பு திருத்தச் சட்டத்திற்கு தமிழ்நாட்டின் கண்டனம் வலிமை மிக்கது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் எதிர்ப்பு துணிச்சல் மிக்கது;
கொள்கை உறுதிப்பாட்டின் பிரகடனம் தேசத்தின் முதல் குரலாய் ஒலிக்கிறது.
வக்பு திருத்தச் சட்டம்-2024 என்கிற சதித்திட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று 02/04/2025 அன்று நடுநிசிப் பொழுதில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல் இது;
நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியான அவலம் நிகழ்த்தப்பட்ட நாள் இது;
அரசியல் வரலாற்றில் எழுதப்பட்ட கருப்பு அத்தியாயம் இது.
இந்த திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலேயே கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு ஏதோ பெயரளவில் அந்த மசோதா ஆய்வுக்காக அனுப்பப்பட்டு, கூட்டுக்குழுவின் அனைத்து நெறிமுறைகளும், அதன் தார்மீக மரபுகளும் சூறையாடப்பட்டன. சர்வாதிகாரப் போக்கில் எதிர்க்கட்சியின் கருத்துக்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இப்போது நாடாளுமன்ற மக்களவையில் 12 மணி நேர கடும் விவாதத்திற்குப் பிறகு 232 எதிர் வாக்குகளோடும், 288 ஆதரவு வாக்குகளோடும் இச்சட்டம் நிறைவேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவுகள் 14, 25, 26 மற்றும் 29 ஆகியன அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
தேசமே கொதித்தெழுந்த நிலையில், ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்டோர் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்திலும், திகைப்பிலும் இருந்தபோது, அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாகவே நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தச் சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியதை எதிர்த்து ஒரு வலிமையான கண்டனத்தை தமிழ்நாடு சட்டமன்ற அவையில் பதிவுசெய்த நிகழ்வு தேச வரலாற்றில் மிகவும் துணிச்சல் மிக்க அத்தியாயம் எனலாம். "இந்திய தேசத்தில் முதல் குரலாக தனது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்த மாநிலம் தமிழ்நாடு" என்கிற சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்டி இருக்கும் நமது முதலமைச்சரை சமூக நீதி பேசுகிற எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது.
03/04/2025 அன்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற நுழைவு வாயிலிலிருந்தே கருப்பு நிற பேட்ஜை அணிந்து வந்து, அவை நடவடிக்கைகளில் முதலாவதாகவே இதனை எதிர்த்து கண்டன உரை நிகழ்த்தியிருக்கிறார். அப்போது "இச்சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றம் செல்வோம்; தமிழ்நாடு போராடும்; அதில் வெற்றியும் பெறும்" என குறிப்பிட்டதும் யாரும் எதிர்பார்த்திராத இமாலயத் துணிவு என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து, முதலமைச்சர் அவர்களே இச்சட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பி கோஷமிட, அனைத்து உறுப்பினர்களும் அதே ஒலியில் கோஷமிட்ட நிகழ்வும் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒரு சிறப்பான நிகழ்வு என எண்ணுகிறேன். இத்திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் சென்ற 27/03/2025 அன்று தீர்மானம் முன்மொழிந்து, அதனை அனைத்துக் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவோடு நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பியதையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
நாடாளுமன்ற மக்களவையிலும், மேலவையிலும் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் E.T. முகம்மது பஷீர், P.V. அப்துல் வஹாப் ஆகியோரும், காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மிகக் கடுமையாக விமர்சித்து உரையாற்றியுள்ளனர். மிகக்குறிப்பாக, தமிழ்நாடு சார்பில் திரு. ஆ. ராசா, திரு. தயாநிதி மாறன், திரு. திருச்சி சிவா, திரு. திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் மிகத் தெளிவாகவும், மிகக் கடுமையாகவும் தங்கள் எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
மொத்தத்தில், வக்பு சொத்துக்களைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் ஒன்றிய அரசின் இந்த சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு சார்பாகக் காட்டப்பட்டுள்ள எதிர்ப்புக் குரல் மிக, மிக வலிமையானதாக இருந்ததை எவரும் மறுத்திடவியலாது. இந்த அதிதீவிர எதிர்ப்புக் குரலுக்கு எல்லா தலங்களிலும் தலைமை ஏற்ற தி.மு.க வுக்கும், அதன் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
எம். அப்துல் ரஹ்மான்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர்,
முதன்மை துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக