ஜகாத் சட்ட திட்டங்கள் ஆய்வுக் கட்டுரை*
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஜகாத்தும் ஒன்று. ஜகாத் மற்றும் ஸதகாக்களுக்கு மறுமையில் பலன்கள் கிடைப்பதுடன் உலகிலும் எண்ணற்ற பலன்கள் கிடைப்பதாக குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் காணமுடிகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: “ஸதகாக்களை விரைந்து நிறைவேற்றுங்கள். ஏனெனில் சோதனைகள் அதனைத் தாண்டி (உங்களிடம்) வராது”. (மிஷ்காத்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: “நிச்சயமாக ஸதகா அல்லாஹ்வின் கோபத்தை அணைத்துவிடுகிறது. (உங்களுக்கு) துர்மரணம் ஏற்படுவதைத் தடுக்கிறது”. (நூல் : திர்மிதீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “உங்களின் செல்வத்தை ஜகாத் கொடுப்பதின் மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களின் நோயாளிகளுக்கு ஸதகாவின் மூலம் சிகிச்சையளியுங்கள்.” (நூல் : பைஹகி)
இஃதன்றி மறுமைப் பலன்களோ ஏராளம்! ஏராளம்! முஃமின்களாகிய நாம் மறுமைப் பலன்களை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் 2:261)
அதாவது ஒரு ரூபாய்க்கு பகரமாக700 மடங்கு நன்மை கிடைக்கிறது.
இஃதன்றி அவரின் மனத்தூய்மையை கவனித்து இதனையும் காண அதிகம் கிடைக்கும்.
ஜகாத், ஸதகாவில் செலவழித்தல் அல்லாஹ்விடத்தில் வியாபாரம் செய்தது போன்று; அதில் நஷ்டமே ஏற்படாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “ஸதகா மறுமையில் நமக்காக வாதிடும் ஆதாரமாக இருக்கும்.” (முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹுதஆலா ஸதகா செய்யப்படும் ஒரு பேரீத்தம் பழத்தை தன் கரங்களால் வாங்கி - ஒருவர் தன் ஒட்டகக் குட்டியை பேணி வளர்ப்பது போல் - அப்பேரீத்தம் பழத்தை பேணி வளர்க்கிறான். அதன் மூலம் அப்பேரீத்தம் பழம் பெரும் பெரும் மலைகளளவு ஆகிவிடுகிறது”. (முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “ஜகாத், ஸதகா கொடுப்பவர் பாபுஸ்ஸதகா எனப்படும் பிரத்தியேக வாயில் வழியாக சுவனத்தில் நுழைவார்.” (புகாரி, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “ஏழுவகை மனிதர்கள் மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தன் வலக்கரம் செலவழித்ததை இடக்கரம் அறியாத முறையில் செய்தாரோ அவருமாவார்.” (புகாரி, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “ஸதகாக்கள் மறுமையில் நிழற்குடைகளாக ஆகும்.” (மிஷ்காத்)
பொதுவாக மக்கள் ஜகாத் மற்றும் தான தர்மங்கள் செய்வதால் பொருள் குறைந்து விடுமோ என அஞ்சுகின்றனர். ஆனால் குர்ஆன், ஹதீஸ்கள் மூலம் இவற்றினால் செல்வம் குறைவதில்லை; மாறாக பெருகுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக காணலாம்.
“ஓர் அடியானின் செல்வம் ஸதகாவினால் குறைவதில்லை. ஓர் அடியான் அநீதம் இழைக்கப்பட்டு அதனைப் பொறுத்துக்கொண்டால் அல்லாஹ் அவனுக்கு கண்ணியத்தை அதிகமாக்குகிறான். ஓர் அடியான் யாசகத்தின் வாயிலைத் திறந்தால் அல்லாஹுதஆலா அவன் மீது வறுமையின் வாயிலை திறந்து விடுகிறான்” என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (இப்னு மாஜா, திர்மிதீ)
இறைவன் நமக்குக் கொடுத்த பொருளிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்கிறான். ஜகாத் முறையாக, சரியாக, அமல் படுத்தப்பட்டால் முஸ்லிம்களில் யாசிப்போர் இருக்கமாட்டார்கள்.
ஜகாத்திற்கு சில சட்டங்கள் உள்ளன. அதை நாம் அறிந்து கொண்டு சரியான முறையில் ஜகாத்தை நிறைவேற்றிட வேண்டும். கீழே தரப்படும் மஸாயில்களில் ஹனஃபி, ஷாஃபீஈ மத்ஹப்களில் ஒருசில கருத்து வேற்றுமைகள் உள்ளன. கருத்து வேற்றுமையுள்ள இடங்களில் ஷாஃபிஈ சட்டங்களையும் தனியாக தரப்பட்டுள்ளன. கருத்து வேறுபாடில்லாத இடங்களில் ஹனஃபி சட்டங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன. இதே சட்டம் ஷாஃபிஈ மத்ஹபினருக்கும் பொருந்தும்.
கேள்வி : ஜகாத் யார் மீது கடமை?
பதில் : கீழ்காணும் தன்மைகள் உள்ளவர்கள் மீதுதான் ஜகாத் கடமையாகும்.
1. சுதந்திரமானவராக இருக்க வேண்டும் (அடிமை மீது ஜகாத் கடமையில்லை)
2. முஸ்லிமாக இருக்க வேண்டும்.
3. புத்தி சுவாதினமுள்ளவராக இருக்கவேண்டும்.
4. பருவ வயது வந்தவராக இருக்கவேண்டும்.
5. நிஸாப் அளவு சொந்தமாக்கியவராக இருக்க வேண்டும். (நூல் : ஆலம்கீர் 1:4)
(ஷாஃபிஈ : புத்தி சுவாதினமில்லாதவர்,வயது வராத சிறுவர்களுக்கும் ஜகாத் கடமையாகும். அவர்களின் வலி (பொறுப்பாளர்) அதை நிறைவேற்ற வே
ண்டும். (ஃபத்ஹுல் முஈன் மஅஷ்ஷரஹ் பக் -145)
கேள்வி : நிஸாப் என்றால் என்ன?
பதில் : ஒரு மனிதருக்கு ஜகாத் கடமையாகும் பொருளின் ‘அளவிற்கு’ நிஸாப் என்று கூறப்படும். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தினி நிஸாப் உண்டு.
கேள்வி : பொருள்களில் ஜகாத் கடமையாகும் நிபந்தனைகள் என்ன?
பதில் : 1. பொருள் நிஸாபுடைய அளவை எத்தியிருக்க வேண்டும்.
2. அந்த பொருள் தனக்குரியதாக இருக்க வேண்டும்.
3. தனது தேவைகள் போக நிஸாப் அதிகப்படியானதாக இருக்க வேண்டும்.
4. கடன் இருக்கக் கூடாது. (அப்படியே கடன் இருப்பினும் கடன் போக மிச்சமுள்ளது நிஸாப்-ஐ எத்தியிருக்க வேண்டும்.) (ஆலம்கீரி, 1:172-174)
(ஷாஃபிஈ : கடன் இருப்பினும் ஷகாத் கடமையாகும். (விளக்கம் பின்னால் தரப்படும்) (ஃபத்ஹுல் முஈன் மஅஷ் ஷரஹ், பக்: 151)
கேள்வி : எந்தெந்த பொருள்கள் மீது ஜகாத் கடமையாகும்?
பதில் : 1) ஆடு, மாடு, ஒட்டகம் (2) உணவு தானியங்கள் (3) தங்கம், வெள்ளி (4) பணம், (5) எப்பொருளாக இருப்பினும் அவற்றை வியாபாரத்தில் ஈடுபடுத்தினால் அதற்கும் ஜகாத் கடமையாகும். (ஃபதாவா மஹ்மூதிய்யா 9:346)
ஷாஃபிஈ : திராட்சை, பேரீச்சம் பழத்தின் மீதும் ஜகாத் கடமையாகும்.
கேள்வி : மேற்கூறப்பட்ட பொருள்களின் நிஸாப் என்ன? அதில் கடமையாகும் அளவு எவ்வளவு?
பதில் : 1) ஆடுகளில் 39 ஆடுகள் வரை வைத்திருப்பின் ஜகாத் கடமையில்லை. அதன்பிறகு கீழ்க்காணும் முறைப்படி ஜகாத் கொடுக்க வேண்டும்.
அதன் பிறகுள்ள ஒவ்வொரு 100 க்கும் ஒரு ஆடு சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டும். எனவே 500 லிருந்து 599 வரை5 ஆடுகளும் 600 லிருந்து 699 வரை 6ஆடுகளும்.... இப்படியாக கொடுக்க வேண்டும். (அல்முஹீதுல் புர்ஹானி, 3:174)
2) மாடுகளில் 29 மாடுகள் வரை வைத்திருப்பின் ஜகாத் கடமையில்லை. அதன் பிறகு கீழ்க்காணும் முறைப்படி ஜகாத் கொடுக்க வேண்டும்.
இதன் பிறகு ஒவ்வொரு 30 க்கும் 1 வயது மாடு ஒன்றும் ஒவ் வொரு 40க்கும்2வயது மாடு ஒன்றும் கொடுக்க வேண்டும். எனவே 90 மாடுகள் வைத்திருப்பவரிடம் மூன்று 30உள்ளதால் 1 வயது மாடு மூன்றும் 100மாடுகள் வைத்திருப்பவரிடம் இரண்டு30ம் ஒரு 40ம் உள்ளதால் 1 வயது மாடு இரண்டும், 2 வயது மாடு ஒன்றும்... இப்படியாக கணக்கிட்டு கொடுக்க வேண்டும்.(ஆலம்கீரி 1:178)
3) ஒட்டகங்களில் 4 ஒட்டகங்கள் வரை வைத்திருப்பின் ஜகாத் கடமையில்லை. பிறகு அட்டவணையின் படி ஜகாத் கொடுக்க வேண்டும். (அல்முஹீதுல் புர்ஹானி, 3:172-174)
தங்கத்தின் நிஸாப் : 87.480 கிராம் (20மிஸ்கால் அளவு)
வெள்ளியின் அளவு : 612.36 கிராம் (200திர்ஹம் அளவு)
வியாபாரப் பொருட்கள் மற்றும் பணத்தின் நிஸாப்:வெள்ளி யின் நிஸாபின் விலை மதிப்பாகும்.
கடமையாகும் அளவு : மேற்கூறப்பட்ட மூன்றிலும் 40ல் ஒரு பங்கு (2.5%) ஜகாத் கொடுப்பது கடமையாகும்.
கேள்வி : பொருள்கள் நம்மிடம் எவ்வளவு காலம் இருப்பின் ஜகாத் கடமையாகும்?
பதில் : மேற்கூறப்பட்ட பொருள்கள் நிஸாபுடைய அளவு நம்மிடம் ஒரு வருடம் முழுவதும் இருக்கவேண்டும். வருட ஆரம்பத்திலும் இறுதியிலும் நிஸாப் உடைய அளவு இருந்து இடைப்பட்ட காலத்தில் அளவு குறைந்திருந்தாலும் பரவாயில்லை. ஜகாத் கடமையாகும். மேலும் வருடத்தின் இறுதியில் பொருள் அதிகமானதாக இருந் தால் அதற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். (பதாயிவு ஸ்ஸனாயிஃ, 2:99)
(ஷாஃபிஈ : வியாபாரப் பொருள்களைத் தவிர மற்றவை நிஸாபுடைய அளவு நம்மிடம் முழுமையாக ஒரு வருடம் இருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் நிஸாப் குறைந்து விட்டால் மீண்டும் நிஸாப் எப்பொழுது பெற்றுக் கொள்ளப்படுகிறதோ அன்றிலிருந்துதான் வருடக் கணக்கு ஆரம்பமாகும். வியாபாரப் பொருட்களில் வருடக் கடைசியில் நிஸாப் பெற்றுக் கொள்ளப்பட்டால் போதுமாகும். ஜகாத் கடமையாகிவிடும். (ஃபத்ஹுல் முஈன் மஅஷ் ஷரஹ் 146)
கேள்வி : வருடம் என்பது சூரியக் கணக்கின் படியா? சந்திரக் கணக்கின் படியா?
பதில் : சந்திரக் கணக்கின் படிதான் ஜகாத் கடமையாகும். (சூரியக் கணக்கின் படி ஜகாத் கொடுப்பது சரியல்ல) (shaami, 2:259)
அதே போல் நேரம் வந்தவுடன் ஜக்காத்தை நிறைவேற்றுவதும் வாஜிபாகும். தேவையன்றி பிற்படுத்துவது குற்றமாகும். (ஆலம்கீரி, 1:17)
கேள்வி : எந்தெந்த பொருள்கள் மீது ஜகாத் கடமையாகாது?
பதில் : பின்வரும் பொருள்கள் மீது ஜகாத் கடமையாகாது. அதன் விலை மதிப்பு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி!
1. நமது தேவைக்காக வைத்துள்ள அசையாச் சொத்துக்கள், வசிக்கும் வீடுகள்,
2. நாம் உபயோகிக்கும் துணிமணிகள்,விரிப்புகள்
3. வீட்டு உபயோகப் பொருட்கள் (ஃபிரிட்ஜ், ஏர் கூலர், வாஜிங் மிஷின் போன்றவை)
.4. நாம் உபயோகப்படுத்தும் வாகனங்கள்,
5. பாதுகாப்பு ஆயுதங்கள்
6. சாப்பிட வைத்துள்ள உணவு தானியங்கள்
7. அலங்காரப் பாத்திரங்கள்
8. வைரம், பவளம், போன்ற உயர்தரக் கற்கள்
9. படிப்பதற்காக வைத்துள்ள நூல்கள்
10. தொழிற்சாலையின் மிஷின்கள்
11. வாடகைக்கு விடப்படும் வ
ாகனங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகாது. (ஆலம்கீரி 1:172)
(ஷாஃபிஈ: மேற்கூறப்பட்டவையன்றி பெண்கள்அணியக்கூடிய தங்கம், வெள்ளியிலும் ஜகாத் கிடையாது.) (ஃபத்ஹுல் முஈன் மஅஷ் ஷரஹ் பக்-146)
கேள்வி : ஜகாத் பெறுவதற்கு தகுதியானவர்கள் யார்? யார்?
பதில் : எட்டு வகையினர் ஜகாத் பெறுவதற்கு தகுதியானவர்கள்.
1. ஃபக்கீர் எனப்படும் பரம எழை,
2. மிஸ்கீன் எனப்படும் எழை,
3. ஜகாத் சேகரிக்க அரசரால் நியமிக்கப்பட்ட பணியாள்,
4. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள், (அவர்கள் இஸ்லாத்தில் ஆர்வப்பட்டு நிலைத்திருப்பதற்காக கொடுக்கப்படும். எனினும் இக்காலத்தில் இஸ்லாம் பரந்து விரிந்துவிட்டபடியால் இவ்வகையினரிடம் ஏழை போன்ற வேறு தகுதிகள் இருப்பின் கொடுக்கப்படும். ஆனால் ஷாஃபிஈ மத்ஹப்படி இந்த வகையினருக்கு அவர்கள் வசதி படைத்தவர்களாக இருப்பினும் கொடுக்கலாம்.)
5. முகாதப் - பணம் கொடுத்தால் உரிமை என்று எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமைகள்,
6. கடனாளிகள்,
7. இறைவழியில் போராடும் போராளிகள்,
8. வழிப்போக்கர்கள்.
இந்த எட்டு வகையினருக்கு கொடுத்தாலும் அல்லது ஏதேனும் ஒரு வகையினருக்கோ அல்லது ஒருவருக்கு மட்டுமோ ஜகாத்தை கொடுத்தாலும் ஜகாத் நிறை வேறிவிடும். (ஷாமி -3:586-388)
(ஷாபிஈ : 8 வகையினரில் ஒவ்வொரு வகையினரிலும் குறைந்தபட்சம் மும்மூன்று நபர்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு வகையினர் இல்லையெனில் மிச்சமுள்ள வகையினருக்கு மட்டும் கொடுக்கலாம்) (உம்தா, பக்கம்-57)
கேள்வி : ஜகாத் கொடுக்கப்படக் கூடாதவர்கள் யார்? யார்?
பதில் : 1. பெற்றோர்கள், பெற்றோர்கள் மேல் தலைமுறையினர்,
2. பிள்ளைகள், அவர்களின் கீழ் வாரிசுகள்,
\3. கணவன், மனைவி,
4. தமது பொறுப்பிலுள்ள அடிமைகள்,
5. வசதிபடைத்தவர்கள்,
6. வசதி படைத்தவர்களின் சிறு பிள்ளைகள், (வசதி படைத்தவரின் வயது வந்த பிள்ளைகள் ஏழைகளாக ஜகாத் பெறத் தகுதியானவர்களாக இருப்பின் அவர்களுக்கு கொடுக்கலாம்)
7. பனூ ஹாஷிம், கிளையினர்,
8. காஃபிர்கள் (துர்ருல் முக்தார், 3:294-299)
எனவே மாற்றாந்தாய், மருமகள், மருமகன் ஜகாத் பெற தகுதியானவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஜகாத் கொடுப்பது கூடும்.
(ஷாஃபிஈ : கணவன் தனது ஜகாத்தை மனைவிக்கு கொடுக்கக் கூடாது. ஆனால் மனைவி கணவனுக்கு (அவர் ஜகாத் பெறத் தகுதியிருந்தால்) கொடுப்பது கூடும்.மேலும் பனூ முத்தலிப் கிளையினருக்கும் கொடுக்கக்கூடாது.) (ஃபத்ஹுல் முஈன் மஅஷ் ஷரஹ் 155-156)
கேள்வி : ஒரு மனிதர் தங்கப் பல் கட்டியிருக்கிறார். அவரது நிஸாபில் அதையும் சேர்க்க வேண்டுமா?
பதில் : இலகுவாக கழற்ற முடியாத படி உறுப்புடன் இணைக்கப்பட்டு விட்டபடி யால் தங்கம், வெள்ளி பற்களுக்கு ஜகாத் கடமையில்லை. அதை நிஸாபில் சேர்க்கப் படாது. (இம்தாதுல் ஃபதாவா2:49)
கேள்வி : ஒருவரிடம் தங்கமும் வெள்ளியும் உள்ளது. ஆனால் இரண்டுமே நிஸாபை எத்தவில்லை. இவருக்கு ஜகாத் உண்டா?
பதில் : இரண்டையும் சேர்த்து கணக்கிட வேண்டும். இரண்டையும் சேர்த்து அவை நிஸாபை எத்திவிட்டால் ஜகாத் கடமையாகும். அதே போன்றுதான் நகைகளுடன் பணத்தை சேர்ப்பதால் அது நிஸாபை எத்திவிட்டாலும் ஜகாத் கடமையாகும்.
அதாவது வெள்ளியை விலை மதிப்பிட்டு அதனை தங்கத்துடன் இணைத்து மொத்த மதிப்பு தங்கத்தின் நிஸாபை எத்தினால் தங்கத்தின் ஜகாத்தும், தங்கத்தின் நிஸாபை எத்தவில்லையாயின் தங்கத்தை விலைமதிப்பிட்டு அதனை வெள்ளியுடன் இணைத்து, மொத்த மதிப்பு வெள்ளியின் நிஸாபை எத்தினால் வெள்ளியின் ஜகாதும் கொடுக்க வேண்டும். இரண்டு முறையிலும் எந்த நிஸாபையும் எத்த வில்லையானால் ஜகாத் இல்லை.
(ஷாஃபிஈ : ஒவ்வொரு பொருளும் அதனதன் நிஸாபை எத்தினால் மட்டுமே ஜகாத் கடமை. தங்கத்தை வெள்ளியுடனோ வெள்ளியை தங்கத்துடனோ சேர்க்கத் தேவையில்லை.) (அல் உம்மு)
கேள்வி : தங்கம், வெள்ளிக்கு பணமாக ஜகாத் கொடுக்கும் பட்சத்தில் எந்த நாளின் விலைப்படி கொடுக்கவேண்டும்?
பதில் : ஜகாத் கொடுக்கும் நாளில் தங்கம், வெள்ளியின் விலை என்னவோ அதைக் கணக்கிட்டு 40ல் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
(ஃபதாவா மஹ்மூதிய்யா 9:379)
கேள்வி : அடமானம் வைக்கப்பட்ட தங்கம், வெள்ளியின் மீது ஜகாத் கடமையாகுமா?,
பதில் : அடமானம் வைக்கப்பட்ட தங்கம், வெள்ளியின் மீது யாரும் ஜகாத் கொடுக்க தேவையில்லை. ஏனெனில் அது அடமானம் வைத்தவரின் கையிலில்லை. அடமானம் எடுத்தவரின் சொந்தப் பொருளுமில்லை. மேலும் அடமானம் வைத்தவர் அதனைத் திரும்பப் பெற்றதும் கழிந்த வருடங்களுக்கான ஜகாத்தும் கொடுக்கத் தேவையில்லை. (துர்ருல் முக்தார், 3:180)
(ஷாஃபிஈ : நகையல்லாத தங்கம், வெள்ளி அடமானம் வைத்தவர் ஜகாத் கொடுக்க வேண்டும். ஏனெனில் அது அவருக்குச் சொந்தமானதாகும்) (அல் உபாப், 2:467)
கேள்வி : ஷாஃபிஈ மத்ஹப் படி ஒருவர் தங்கக் கட்டி, தங்க பிஸ்கட் வைத்துள்ளார் எனில் அதற்கு ஜகாத் உண்டா?
பதில் : அணியக்கூடிய அணிகலன்களாக தங்கம், வெள்ளி இருந்தால் ஜகாத் கடமையில
்லை. மாறாக கட்டியாக வைத்திருந்தால் ஜகாத் கடமையாகும்.
கேள்வி : வங்கியில் தமது சேமிப்பு நிதி (Fixed Deposit)) க்கு ஜகாத் உண்டா?
பதில் : தமது பணத்தை பாதுகாக்க பலர் வங்கிகளில் சேமித்து வைக்கிறார்கள். இது அவர்களுக்கு சொந்தமான பணம் தான். எனவே வருடாவருடம் அதற்குரிய ஜகாத்தை கொடுக்க வேண்டும். (துர்ருல் முக்தார், 3:236)
(அதில் கிடைக்கும் வட்டிப்பணத்தை உரிய முறையில் ஏழைகளுக்கு நன்ம யை எதிர்பாராமல் கொடுத்திட வேண்டும்)
கேள்வி : PF பணத்தில் ஜகாத் கடமையாகுமா?
பதில் : PF பணம் 2 வகை உள்ளது.
(1) நிர்வாகம், ஊழியரின் அனுமதியின்றி தானாகவே அவ்வூழியரின் வருமானத்தி லிருந்து மாதா மாதம் ஒரு தொகையை பிடித்துக் கொள்ளும். இதற்கு ஜகாத் கிடையாது.
(2) ஊழியரே நிர்வாகத்திடம் தனது வருமானத்தில் மாதா மாதம் ஒரு தொகையை தனக்காக சேமிக்கச் சொல்வார் இதற்கு வருடா வருடம் ஜகாத் கொடுப்பது கடமையாகும். (ஆலம்கீரி :1,:174,)
(ஷாஃபிஈ : முதல் வகையில் பணம் கையில் வந்த பிறகு கழிந்த வருடங்களுக்கும் இரண்டாம் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும்) (மஹல்லீ 2:39)
கேள்வி : இன்சூரன்ஸ் கட்டிய பணத்தில் ஜகாத் கடமையாகுமா?
பதில் : கார், கடை, வியாபாரஸ்தலங்கள் போன்றதிற்காக கட்டப்பட்ட இன்சூரன்ஸ் தொகை திரும்ப கிடைப்பது உறுதியல்ல. எனவே அதில் ஜகாத் கடமையாகாது. ஆனால் லைஃப் இன்சூரன்ஸ் (Life Insurance) ல் நாம் கட்டியது திரும்ப கிடைப்பதற்கு நிரம்ப சாத்தியம் உள்ளதால் அதில் ஜகாத் கடமையாகும். அத்தொகை கையில் கிடைத்ததும் வாரிசுகள் கழிந்த வருடங்களுக்கான ஜகாத்தையும் சேர்த்து ஜகாத் நிறைவேற்றவேண்டும்.
கட்டிய தொகைய விட அதிகப்படியானது வட்டியாகும். அதில் ஜகாத் கடமையில்லை. அதை உரியமுறையில், செலவழிக்க வேண்டும். (துர்ருல் முக்தார்2:36)
(ஷாஃபிஈ : அனைத்து வகை இன்சூரன்ஸிலும் பணம் கைக்கு வந்த பின் ஜகாத் கொடுக்க வேண்டும்.) (மஹல்லீ 2:39)
குறிப்பு : இன்சூரன்ஸ் கட்டினால் அதற்குரிய ஜகாத் சட்டம் என்ன என்பதைத் தான் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் இன்சூரன்ஸ் திட்டத்தில் வட்டி,சூதாட்டம், இரண்டும் சேர்த்து காணப்படுவதால் அது அனுமதிக்கப்படவில்லை. எனினும் நாட்டில் கலவரங்கள், அசம்பாவிதங்கள் தொடர்கதையாகிவிட்டன. இச்சமயங்களில் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருந்தால் வெளிப்படையிலாவது பாதுகாப்பு கிடைப்பதால் ஆபத்தான கட்டங்களில் கடைகள், வாகனங்கள் ஆகியவற்றுக்காக இன்சூரன்ஸ் செய்து கொள்வது அனுமதிக்கப்படும். ஆனால் உடலுறுப்புகளுக்கு இன்சூரன்ஸ் செய்வது அறவே கூடாது. மேலும் ஆகுமாக்கப்பட்ட இன்சூரன்ஸி லும் சேமித்து வைத்த தொகையைவிடக் கூடுதலான தொகையை நன்மையை ஏதிர்பாராமல் ஏழை எளியோருக்குக் கொடுத்துவிட வேண்டும்.”(ஃபதாவா ரஹீமிய்யா)
கேள்வி : ஒருவர் தனக்கு ஜகாத் கடமையாகியிருந்தும் பல வருடங்களாக அவர் ஜகாத் கொடுக்கவில்லை. இப்பொழுது கடந்த வருடங்களுக்கும் அவர் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அதன் முறை என்ன?
பதில் : கண்டிப்பாக கழிந்த வருடங்களுக்கும் அவர் ஜகாத் கொடுக்க வேண்டும். கழிந்த வருடங்களின் ஜகாத் கடன் போன்று பொறுப்பில் ஆகிவிடும்.
கழிந்த ஆண்டுகளின் ஜகாத் நிறைவேற்றும் முறை : உதாரணமாக ஒருவர் தன்னிடம் 5,00,000 ரூபாய் உள்ள நிலையில் ஹிஜ்ரி 1426 ஆம் ஆண்டு முதல் ஹிஜ்ரி 1430 (இவ்வருடம்) வரை ஜகாத் நிறைவேற்றவில்லை. இப்பொழுது 1426 ஆம் வருட ஜகாத்12,500 ரூபாய் முதலில் நிறைவேற்ற வேண்டும். பிறகு 1427 ஆம் ஆண்டு1426ன் ஜகாத் போக மீதம் உள்ள 4,87,500ரூபாய்க்கு ஜகாத்தாக 12,187ரூபாய் ஐம்பது பைசா கொடுக்க வேண்டும்.1428ம் ஆண்டு கழிந்த ஆண்டின் ஜகாத் போக மீதமுள்ள பணத்திற்கும்... இப்படியாக இவ்வருடம் வரை அவர் நிறைவேற்ற வேண்டும். (துர்ருல் முக்தார் 3:176, ஃபதாவா ரமலி 2:302)
கேள்வி : தங்கம், வெள்ளிக்கு பல வருடங்களாக ஜகாத் கொடுக்காத நிலையில் கழிந்த வருடங்களுக்குரிய ஷகாத்தை நிறைவேற்றுவது எவ்வாறு?
பதில் : தங்கம், வெள்ளிக்கு இரண்டு விதமாக ஜகாத்தை நிறைவேற்றலாம்.
1) தங்கம், வெள்ளியையே ஜகாத்தாக கொடுப்பது. இம்முறையில் முந்தைய கேள்வியின் பதிலில் கூறப்பட்ட முறையைப் போன்றே ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்.
2) தங்கம், வெள்ளிக்கு பணத்தை ஜகாத்தாக கொடுப்பது. இம்முறையில் அடுத்த வருடமும் அவரிடம் தங்கம், வெள்ளி அளவு குறையாமல் அப்படியே இருக்கும். எனவே முதல் வருடம் கொடுத்த அளவு அடுத்த வருடமும் ஜகாத் கடமையாகும். (துர்ருல் முக்தார், ஃபதாவா ரமலி)
கேள்வி : காணமால் போன அல்லது அபகரிக்கப்பட்ட பொருளில் ஜகாத் உண்டா?
பதில் : காணாமல் போன அல்லது அபகரிக்கப்பட்ட பொருள் திரும்ப கிடைப்பதில் உறுதியில்லை. எனவே ஜகாத் கடமையில்லை. அப்படியே திரும்ப கிடைத்தாலும் கழிந்த வருடங்களுக்கான ஜகாத் கிடையாது! (துர்ருல் முக்தார் 3:184)
(ஷாஃபிஈ : திரும்ப கிடைத்தால் கழிந்த வருடங்களுக்கான ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டும். (மஹல்லி பாகம்2, பக்கம்-39)
கேள்வி
: கடன் கொடுத்தவருக்கு கடன் கொடுத்த பொருளின் மீது ஜகாத் கடமையாகுமா?
பதில் : கடன் கொடுத்தவரின் மீது கடன் தொகைக்கான ஜகாத் கடமையாகும். கடன் பெற்றவர் மீது அத்தொகைக்கான ஜகாத் கடமையாகாது.
ஷாஃபிஈ : அந்த கடன் பொருளின் மீது அந்தக் கடன் திரும்ப வருவது கடன் கொடுத்தவர் கடன் பெற்றவர் என தனித்தனியாக இருவருமே ஜகாத் கொடுக்க வேண்டும். கடன் கொடுத்தவர் தனக்கு வரவேண்டிய பணத்திற்கும் கடன் பெற்றவர் தன்னிடமுள்ள பணத்திற்கும் ஜகாத் கொடுப்பார். (அல் ஹாவில் கபீர், 31:31)
கேள்வி : வியாபாரப் பொருள்களில் எந்த நாளின் விலை மதிப்பின் படி ஜகாத் கணக்கிட வேண்டும்?
பதில் : வருட இறுதி நாளின் விலை மதிப்பின் படிதான் கணக்கிட வேண்டும். (ஷாமி, 3:29)
கேள்வி : ஜகாத்தை உரியவருக்கு ஒப்படைக்கும் முறை என்ன?
பதில் : ஜகாத்தை உரியவருக்கு சொந்தமாக்கிட (தம்லீக் செய்தல்) வேண்டும். அவர் கையில் நேரடியாகவோ அல்லது ஆள் மூலமாகவோ அல்லது அவர்கள் அக்கௌண்ட்-டிலோ சேர்த்துவிட வேண்டும். சொந்தமாக்குதல் என்பதில்லையெனில் ஜகாத் நிறைவேறாது. எனவே...
ஒருவர் ஜகாத் பணத்தில் ஏழைகளுக்கு விருந்தளிப்பது கூடாது. ஏழைகள் தனக்கு தேவையானதை சாப்பிடுவர். மிச்சத்தை விட்டுவிடுவர். ஆனால் உணவை பொட்டலமாக அவர் கையில் கொடுத்தல் ஜகாத் நிறைவேறிவிடும்.(துர்ருல் முக்தார் 3:171)
ஷாஃபிஈ : ஜகாத்தை உணவாக கொடுக்கக் கூடாது!
ஒருவர் தனது ஜகாத் பணத்திற்காக தனது வீட்டில் ஏழையை வாடகைக்கு அமர்த்தி ‘தர வேண்டிய வாடகையை என் ஜகாத்தாக நீயே எடுத்துக்கொள்’ என்று கூறினால் ஜகாத் நிறைவேறாது. அவர் கையில் பணத்தை ஒப்படைக்க வேண்டும். (துர்ருல் முக்தார் 3:172)
அல்லது ஜகாத் பணத்தை அவருக்கு சொந்தாமாக்கிவிட்டு அதே பணத்தை அவரின் வாடகையாக திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதே போன்று தனக்கு வரவேண்டிய கடனை ஜகாத்தாக தள்ளுபடி செய்வதும் கூடாது. அவர் கையில் பணத்தை சொந்தமாக்கிட வேண்டும்.
கேள்வி : ஜகாத்தை மஸ்ஜித், மதரஸாவிற்கு அளிக்கலாமா?
பதில் : பின்வரும் நிபந்தனைப்படி தாராளமாக கொடுக்கலாம்.
1. ஜகாத் கொடுக்கும் போது பெறத் தகுதியானவர்களை அதற்கு உரிமையாளராக ஆக்கிவிட வேண்டும்.
2. கட்டிட நிதியாக, ஊதிய பயன்பாட்டிற்காக ஜகாத்தை கொடுக்கக் கூடாது. ஜகாத் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையிட்டு அதற்கு பள்ளி, மதரஸாக்களின் நிர்வாகம் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் ஷகாத் நிதியை அம்மாதிரி நிறுவனங்களுக்கு அளிக்கலாம்.
கேள்வி : வீட்டை பராமரிப்பது, கட்டிட வரி, தண்ணீர் வரி போன்ற செலவுகள் இருக்க, வாடகை வீட்டிற்கான ஜகாத்தின் சட்டமென்ன?
பதில் : வாடகை வீட்டைப் பொறுத்த மட்டில் இரு நிலைகளை கவனிக்க வேண்டும்.
முதலாவது; அந்த வீட்டின் மதிப்பு;அதற்கு ஜகாத் கடமையில்லை.
இரண்டாவது; அவ்வீட்டிலிருந்து வாடகையாக வரும் தொகை. இந்தத் தொகையில் வீட்டுவரி, தண்ணீர் வரி, பராமரிப்புச் செலவு உட்பட அனைத்துச் செலவுகளும் போக மீதமிருக்கும் தொகையை கணக்கிட வேண்டும். அந்தப் பணம் ஜகாத் கடமையாகும் அளவிற்கு இருந்து ஒரு வருடம் முழுக்க அந்த அளவிற்கு குறையாமலும் இருந்தால் இப்போது அப்பணத்திற்காக ஜகாத் கொடுக்க வேண்டும்.
கேள்வி : ஜகாத் இரு விதமாக நிறைவேற்றப்படுகிறது.
1) ஜகாத் கடமையானவர் தனது ஜகாத் தொகையை ஓரிரண்டு ஏழைகளுக்கு மட்டும் மொத்தமாக வழங்குவது.
2) 100, 500, 1000 ரூபாயாக பிரித்துப் பலருக்கு வழங்குவது. முதல் முறையில் ஜகாத் வாங்கும் ஏழைக்கு அந்த தொகை மூலம் ஏதேனும் வியாபாரத்தை துவங்கவோ, கடனை அடைக்கவோ, குமர் காரியம் இலேசாகவோ வழி உள்ளது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் இவர் வாங்கும் நிலை நீங்கி கொடுப்பவராகக்கூட மாற வாய்ப் புண்டு. ஆனால், இரண்டாம் முறையில் இவ்வாறு ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக, வருடா, வருடம் இந்த ஏழைகள் ஏதேனும் செல்வந்தர்களை எதிர்பார்க்கும் நிலையே தொடர்கிறது. கேள்வி என்னவெனில் இவ்விரு முறைகளில் எது சிறந்தது? எம்முறை கூடும்? எம்முறை கூடாது?
பதில் : ஜகாத்தை கேள்வியில் கண்டபடி இரு விதமாக நிறைவேற்றுவது கூடும். எனினும், முதல் முறையே சிறந்தது. அதாவது ஜகாத் வழங்கப்படுபவருக்கு மேலும் கேட்கும் நிலை ஏற்படாமல் தன்னிறைவு அடையுமளவுக்கு கொடுக்க வேண்டும். ஆனால், வாங்குபவர், ஜகாத் கொடுப்பதற்குத் தகுதியான (நிஸாபுடைய)வராகும் அளவுக்கு கொடுப்பது மக்ரூஹ் ஆகும். அதாவது ஒரே நபருக்கு கொடுக்கும் போது 612.5கிராம் வெள்ளியின் பணத்தைவிட சற்று குறைவாகக் கொடுக்க வேண்டும். அதே சமயம் ஜகாத் வாங்குபவர் கடனாளியாக இருந்தால் அவரது கடனை நிறை வேற்றியபின் நிஸாபின் அளவைவிட குறைவாக கையில் மீதமிருக்கும் அளவு கொடுக்க வேண்டும். இது போல் தங்குமிடம் கூட இல்லாத அளவு பரம ஏழையாக இருந்தால் ஜகாத்துடைய பணத்தில் அவருக்கு வீடு வாங்கி கொடுப்பது கூடும்.
(நூல் : மராகில் ஃபலாஹ் - 419, ஃபதாவா மஹ்மூதிய்யா, 13:99)
கேள்வி :
தனது பொருளில் ஜகாத் இவ்வளவு தான் கடமையாகும் என்று ‘கணித்து’ ஜகாத் கொடுக்கலாமா?
பதில் : கூடாது. அதனால் குறைவு ஏற்பட்டால் ஜகாத்தை முழுமையாக நிறைவேற்றாத குற்றம் ஏற்பட்டுவிடும். எனவே தமது பொருளை முறையாகக் கணக்கிட்டு தான் கொடுக்க வேண்டும். நமது பொருளை கணக்கிடவே முடியாது என்றிருப்பின் ஜகாத் எவ்வளவு கடமையாகுமோ அதைவிட அதிகம் கணித்து ஜகாத் கொடுப்பதில் தவறில்லை. (ஆப் கே மஸாயில் அவ்ர் உன்கா ஹல் 3:363)
கேள்வி : ரமளான் மாதத்தில் செய்யும் நற்காரியங்களுக்கு நன்மை அதிகம் என கருதி தன் மீது ரமளானுக்கு முன்னரே கடமையான ஜகாத்தை ரமளான் வரை பிற்படுத்தலாமா?
பதில் : ஜகாத்தின் நிஸாபை அடைந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டால் ஜகாத்தை நிறைவேற்றுவது கடமையாகும். அங்கீகரிக்கப்பட்ட ஃபத்வாவின் படி ஜகாத்தை கடமையாகிய உடனே அளிப்பது வாஜிப் ஆகும். எனினும் ஷரீஅத்தில் சொல்லப்பட்ட சில அனுகூலங்களுக்காக சாதாரண தாமதத்தை சில மார்க்க சட்ட வல்லுநர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு வருடம் வரை பிற்படுத்தக் கூடாது. (தஹ்தாவீ, பக்கம்-388)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக