தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தீர்மானம்!
==============
- மவ்லவி அல்ஹாஜ் T.J.M.ஸலாஹுத்தீன் ரியாஜி -
அல்குர்ஆன் ஓதப்படும்போது, மற்றவர்கள் காது கொடுத்து கண்ணியமாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது அல்குர்ஆனில் அல்லாஹ்வின் கட்டளையாகும்.
இந்த நிலையில், தொழுகையில் ஓதப்படுவதை மைக் மூலமாக ஒலிபரப்பும்போது, மக்கள் பல சூழ்நிலையில் இருப்பார்கள் என்பதால், இறைவனின் இந்த கட்டளைக்கு மதிப்பளிக்க முடியாமல் குற்றச் செயலைச் செய்தவர்களாகி விடுவார்கள்.
அல்குர்ஆன் ஓதப்படும்போது இறையச்சமுள்ளவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டும் என்று அல்லாஹ் சொல்கின்றான்.
இந்த நிலையில் பாத்ரூம் மற்றும் கழிவறைகளிலும் வேறு பல சூழ்நிலைகளிலும் இருப்பவர்களின் நிலைப்பாட்டை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தூங்கிக் கொண்டிருப்பவர்களின் பக்கத்திலிருந்து ஓதுவதின் மூலமாக அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கக்கூடாது என்பதும், தொழுது கொண்டிருப்பவர்களின் பக்கத்திலிருந்து ஓதிக்கொண்டிருப்பதால் அவர்களின் தொழுகையில் பாதிப்பு ஏற்படும் என்பதும் சன்மார்க்க சட்ட விளக்கமாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொழுகையில் ஓதப்படுவதை வெளிப்படுத்தும்போது, மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதையும், தேவையில்லாமல் குற்றவாளிகளாக ஆக்கப்படுவதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தொழுகையில் ஸஜ்தாவுடைய வசனம் வந்தால், இமாமும், தொழுது கொண்டிருப்பவர்களும் கடமையான ஸஜ்தாவைச் செய்யும்போது, பள்ளிக்கு வெளியே இருப்பவர்கள் இந்தக் கடமையை ஆற்ற முடியாமல் போவதால், குற்றம் செய்தவர்களாக ஆகிவிடுவதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும் என்பதை யோசிக்க வேண்டும்.
இஸ்லாமிய கடமைகளை செய்யாமல் விட்டவர்கள் காஃபிர்களாக மாட்டார்கள். ஆனால், அவைகளை அவமதிப்பவர்கள் காஃபிர்களாகி விடுவார்கள் என்ற விதிப்படி, பல வேலைகளிலும், பணிகளிலும் இருப்பவர்கள் வெளியில் கேட்கப்படும் ஓதுதலைக் கேட்டு ஆத்திரத்தோடு எதையும் பேசி அவமதித்துவிட்டால், எவ்வளவு பெரிய பாதிப்பெல்லாம் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும்.
தொழுகையின் நேரத்தை அறிவிப்பதற்கு பாங்கு சொல்லப்படுகிறது என்பதுடன் சில பள்ளிவாசல்களில் தொழுகை நேரம் வந்துவிட்டது என்ற அறிவிப்பையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தொழுகையின் ஓதுதலை மைக் மூலமாக கேட்டு மக்கள் தொழுகைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நாம் நினைத்தால், அது ஏற்புடையதாக ஆகாது. ஏனென்றால், மார்க்கத்தில் இல்லாத ஒரு குற்றமான செயலைச் செய்து, மக்களைத் தொழுகைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இமாம் தொழுகையில் ஓதுவதை பள்ளியில் உள்ளவர்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தாண்டி வெளியே ஒலிபரப்பிக் கொண்டிருக்கும்போது நம்மவர்களும், மற்றவர்களும் எரிச்சல்படுவதையும், அவமதிப்பதையும் பார்க்கும் நேரத்தில் பல வகையிலும் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
இந்த நிலை நீடித்தால் இன்றைய நாட்டுச் சூழ்நிலையில் காலப்போக்கில், மைக்கில் பாங்கு சொல்லப்படுவதும் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் நமக்கு அதிகமாகவே இருக்கிறது. மார்க்கம் சொல்லாததையும், விரும்பாததையும் நாம் செயல்படுத்தும்போது எதிர்காலத்தில் எதிர்பாராத விதமாக பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவேதான் ஆகஸ்ட் 11-ஆம் தேதி, புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா செயற்குழு கூட்டத்தில் தொழுகையில் ஓதப்படுவதை வெளி மைக் மூலமாக ஒலிபரப்ப வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, சங்கையான இமாம்களும், கண்ணியமான முத்தவல்லிகளும், நிர்வாகிகளும் சமுதாய நலன் கருதியும், நமக்குறிய கண்ணியம் பாதுகாக்கப்படவும் மாநில ஜமா அத்துல் உலமா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு தொழுகையில் ஓதப்படுவதை வெளிமைக் மூலம் ஒலிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அருளாலன் அல்லாஹ் எல்லா நலன்களையும் தருவானாக!
நன்றி: ''ஜமாஅத்துல் உலமா'' மாத இதழ், செப்டம்பர் 2015
http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7651
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ