நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, டிசம்பர் 14, 2019

வலிமார்கள். அவ்லியாக்கள்.யார்?

சூஃபித்துவத்தில் குருவின் இடம்

��நம் உடலுக்கு ஒருவரை தந்தை என்று அறிகிறோம். அவருடையை பெயரின் முதல் எழுத்தையே முதலெழுத்தாகவும் (இனிஷியலாக) போட்டுக் கொள்கிறோம். அதை யாராவது மாற்றிப் போட்டுவிட்டால் கோபம் கொள்ளவும் செய்கிறோம். இந்த உடலுக்கான தந்தை ஒரு குறிப்பிட்ட நபர் என்பதைப்போல, நம்முடைய ஆன்மாவுக்கு ஒரு தந்தை தேவைப்படுகிறார். ஆன்மிக உலகின் அவையத்து நம்மை முந்தியிருக்கச் செய்ய அவரால் மட்டுமே உதவ முடியும். அவர்தான் ஆன்மிகப் பாதையின் குரு. ஞானாசிரியர். ஷெய்கு. முர்ஷித். பீர். இன்னும் எத்தனையோ பெயர்களால் அழைக்கப்படுபவர். அவரை ‘ரூஹின் தந்தை’ என்றும் சொல்கிறார்கள். ‘ரூஹ்’ என்ற அரபிச் சொல்லுக்கு ஆன்மா என்று பொருள்.

��ஒரு ஞானகுரு என்பவர் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான பாலமாக அல்லது ஏணியாக இருக்கிறார். ஞானப்பாதையில் இருக்கும் நிலைகளையும் அவைகளை எப்படிக் கடப்பது என்பதையும், அதில் உள்ள அபாயங்களையும் அருள்களையும் எடுத்துக்காட்டக் கூடியவர் அவரே. ஏனெனில் அனுபவ அறிவை உணர்த்த அந்த அனுபவம் பெற்ற இன்னொருவரால் மட்டுமே முடியும்.

��சொல்லத் தகுமல்ல இப்பொருளைச்

சுருட்டி மறைக்கிறேன் ஷரகுக்காக (ஞானப்புகழ்ச்சி, பாடல் எண் 17)

��என்று பீரப்பா சொல்வதன் காரணமும் இதுதான். வெளிப்படையாகப் புட்டுப்புட்டு வைக்க முடியாத ரகசிய அறிவாகும் இது.

��நூல்களில் வழியாக நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. தண்ணீருக்குள் இறங்கித்தான் ஆகவேண்டும். நீச்சல் தெரியாமல் இறங்கும் சமயத்தில் ஒரு நீச்சல் நிபுணரின் உதவி தேவைப்படுகிறது. நம்மை நீரின் மேலே போட்டுவிடுகின்ற அதே சமயத்தில் நாம் நீரினுள் மூழ்கி செத்துவிடாமல் காக்க அவராலேயே முடியும். குருவானவர் நம்மை ஆக்குபவராகவும் காப்பவராகவும் இருக்கிறார். அதனால்தான் ஃபனா பிர்ரஸூல், ஃபனா ஃபில்லாஹ் எல்லாம் துவங்கும் இடம் ஃபான ஃபிஷ் ஷைஹ் ஆக உள்ளது

��யாருக்கு ஆன்மிக ஞானகுரு வாய்க்கவில்லையோ அவனுடைய குரு ஷைத்தானாகவே இருப்பான் என்றார். ஞானி
பாயஸீத் பிஸ்தாமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

��ஒரு ஞானாசிரியரிடத்தில் உதவி தேடுவதென்பது நபிகள் நாயகத்திடமே உதவி தேடுவதைப் போன்றதாகும். ஏனெனில் ஒரு சிஷ்யர் ஒரு ஞானகுருவிடம் தீட்சை பெற்றிருப்பார். அந்த ஞானகுரு இன்னொருவரிடம் தீட்சை பெற்றிருப்பார். அப்படியே அது நபிகள் நாயகம் அவர்களைப்போய்ச் சேரும். இந்த ஞானகுருக்களின் வரிசை சூஃபி ஞான பாதையில் சில்சிலா எனப்படுகிறது. ஆன்மிகப் பாதைகளின் தொடக்கமும் முடிவும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்தான்.

��குருவுக்கு தரும் மரியாதை இறைவனுக்கே தரும் மரியாதை என ஞானி இப்னு அரபி அவர்களின் ஃபுதூஹாத்துல் மக்கிய்யா எனும் ஞான நூல் குறிப்பிடுகிறது. ஞானவழியில் செல்வதற்கு ஒரு தோழரைத் தேடிக்கொள் என்று ஹதீஸ் ஒன்றும் உள்ளது.

��”ஒரு குருவைக் கண்டுகொண்டால் நீங்கள் அருள் பாலிக்கப்பட்டவராவீர்கள். அவருடைய அருளாசியினால் கற்பனைக்கும் கனவுகளுக்கும் எட்டாததையெல்லாம் நீங்கள் பெறுவீர்கள்” என்று கூறுகிறார் ஞானி பரமஹம்சர்.

♥இறைவனே குருவாக

♥வல்லதீன ஜாஹதூ ஃபீனா ல நஹ்தியன்னஹும், எவரொருவர் இறைவனை அடையும் பொருட்டு, தன் முழு சக்தியையும் பயன்படுத்தி முயல்கின்றாரோ அவரை நேரான பாதையில் தானே செலுத்துவதாக அல்லாஹ் சூரா அன் கபூத்-தில் [26:69] அறிவிக்கிறான்.

��மெய்ஞ்ஞானப் பாதையில் செல்பவர்களுக்கு இறைவனே குருவாக இருக்கிறான் என்பது இந்த வசனத்தின் மூலமும் இன்னும் இதுபோன்ற பல வசனங்களின் மூலமாகவும் தெளிவாகிறது.

��“கருவே குருவே என் கண்ணே ரஹ்மானே” என்று இறைவனை குருவாக்கி ஞானகவி மஸ்தான் சாஹிபு  பாடினார்கள். பீரப்பாவின் ஞானப்பூட்டின் ஒரு பாடலும் இறைவனை இவ்விதவே விளிக்கிறது:

��”எல்லாரும் குருவாகிவிட முடியாது. நீரில் மிதக்கும் பெரிய மரக்கட்டையின் மீதேறி மிருகங்களும் செல்லலாம். ஆனால் மதிப்பற்ற மரத்துண்டின் மீது மனிதன் ஏறினால் மூழ்கிப்போவான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவனே குருவாகி வருகின்றான். சச்சிதானந்தன் மட்டுமே குருவாவான்” என்று பரமஹம்சர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

��பிறப்புடனிறப்புமில்லை பிசகது தானுமில்லை .

நிறப்புகழனைத்து மொன்றாய் நின்றது நிறைந்த சோதி

சிறப்புளவமுதமூட்டித் திருப்பதஞ் சேர்க்கும் ஞானத்

திறப்புகளறிந்த பேர்க்குத் திறவுகோல் குருவதாமே ! என்று குருவின் புகழைப் பாடுகிறார் பீராப்பா.

��வணக்க வழிபாடுகள், ஆன்மிகப் பயிற்சிகளின் அவசியம்
சூஃபிப் பாதையில் பயணிக்கும் ஒருவர் குருவின் வழிகாட்டுதலின் பேரில் சில அல்லது பல ஆன்மிகப் பயிற்சிகளை தினமும் செய்யவேண்டியிருக்கும். இதனை  முராகபா, முஹாசபா,  ரியாளத், சாதனா என்றும் இன்னும் பல பெயர்களாலும் குறிப்பிடுகின்றனர். பெருமானார் ஹிராக் குகையில் தனித்திருந்து இறைவனை தியானித்தது நமக்கு முக்கியக் குறிப்பாகும். பயிற்சிகள் மேற்கொள்ளாமல் எந்த சூஃபியும் உருவாகவில்லை.

��கௌது நாயகம் அவர்கள் முதலில் 11 ஆண்டுகளும் பிறகு 11 ஆண்டுகளும் தனிமையில் பயிற்சிகளை மேற்கொண்டார்கள். இமாம் கஸ்ஸாலி பல ஆண்டுகள் சூஃபிகளோடு தனித்திருந்து பயிற்சிகள் மேற்கொண்டார்கள். நாகூர் நாயகம் அவர்கள் தம் வாழ்நாள் பூராவும் பயிற்சியிலேயே கழித்தார்கள் என்றே சொல்லலாம். அவர்களது குருவான முஹம்மது கௌது குவாலியரி அவர்கள் காடுகளில் 12 ஆண்டுகள் தனித்திருந்து பயிற்சிகள் மேற்கொண்டார்கள்.

��இந்தப் பயிற்சிகளெல்லாம் ஏன்❓பரமஹம்சர்  இந்தக் கேள்விக்கு விடை கொடுக்கிறார்:

��”பித்தளைப் பாத்திரத்தை தினமும் கழுவ வேண்டும். ஆனால் தங்கப் பாத்திரத்தை அப்படிச் செய்யவேண்டியதில்லை. ஆன்மிக சாதகன் தினமும் தியானம் செய்து மனதைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். இறைவனை அடைந்தவருக்கு எதுவும் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்